4 மணி நேர விமானப் பயணத்தின் தொலைவை, அன்று போய்ச் சேருவோமா இல்லையா? என்கிற சந்தேகத்தில் தனது கனவுகளை எல்லாம் தொலைத்துவிட்டு, குடும்ப வறுமைக்காக கப்பலில் மாத‌க்கணக்காய் பயணம் செய்து வளைகுடா செல்கின்றனர் நாராயணனும் முகைதீனும்.

செல்லும்பொழுது அம்மா- அப்பா- தங்கைகள் சூழ விடைபெற்றுக் கிளம்புகின்றான் நாராயணன். திரும்பி வரும்பொழுது குடும்பத்தில் ஒரு எண்ணிக்கை குறைந்து விடுகின்றது. வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு தற்காலிக மரணமே.....

pathemari 700அந்தந்த வயதுக்குண்டான குழந்தைகளின் நிகழ்வுகள், சுவாரசியங்கள் எல்லாம் தொலைத்து, திரும்பி வரும்பொழுது தலைமுறை இடைவெளிகள் அதிகரித்து, குழந்தைகளை குழந்தைகளாக ரசிக்க முடியாத சூழ்நிலை… இழந்த காலகட்டத்தை எதைக் கொண்டும் மீட்டெடுக்கவே முடியாது.

#######

மும்பையில் விசா எடுத்துக் கொடுக்கும் ஏஜென்ஸியால் ஏமாற்றப்பட்டு டீ விற்றுக் கொண்டிருக்கும் ஒருவன், தனது மகளுக்கு பொம்மை வாங்கி அனுப்புகின்றான், துபாயிலிருந்து அனுப்புவதுபோல. விமான நிலையத்துக்கு காரில் செல்ல வேண்டிய பணத்தைத் தவிர மீதியுள்ள பணத்தை நாராயணன் அந்த நபரிடம் கொடுக்கின்றான். அவன் நாராயணனைப் பார்த்துக் கேட்கின்றான்

"உங்க பேர் என்ன?"

"எதுக்கு?"

"நான் மதரஸாவில் படிக்கும்பொழுது படைத்தவனின் பல பெயர்களைப் பற்றி வாசித்திருக்கின்றேன். அதில் உங்கள் பெயர் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்."

"என்னுடைய பெயர் நாராயணன்."

#######

ஊரில் மாடி வீடுகள் கொண்டவர்கள் எல்லாம் துபாயில் அடுக்கடுக்கான கட்டிலில் தன்னை சுருக்கிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கின்ற காட்சிகள் -

துபாய் அறையில் க்ளீனிங் மற்றும் சமையலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர்கள். சிலர் கிளீனிங் செய்வதற்கு வெட்கப்படுவார்கள்.

"ஊர்ல நமக்கு பெரிய வீடிருக்கலாம், 3 4 டாய்லெட் இருக்கலாம். ஆனா இங்க வந்தா கியுல நின்னுதான் போகணும்" என்று முகைதீன் சொல்கின்ற காட்சி, அரபு நாட்டு வாழ்க்கையின் வலியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.

நீண்ட நாட்களாக ஊருக்குப் போகாமல் இருக்கும் மம்மாலிக்கா எப்பொழுதும் மனைவி குழந்தைகளின் கேசட் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்.

விசா பிரச்சனை - கஃபில் பிரச்சனை என்று நிறைய பேர் மொத்தமாக சம்பாதித்து விட்டுச் செல்லலாம் என்றே காலம் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மொத்தத்திற்காக முத்தங்களை இழந்தவர்கள்.

#######

துபாயிலிருந்து ஊருக்குச் சென்ற பொழுது, திரும்பி வருகின்ற அந்தக் கடைசி நாளில் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு

"அம்மா துபாய்ல இருக்கும்பொழுது நீ என் பக்கத்துலேயே படுத்திருக்கிற மாதிரி இருக்கும்" என்று தலைமுடி வருடிக் கொண்டிருக்கும் அம்மாவின் பக்கத்திலேயே தூங்குகின்றான்.

"அம்மா இந்த தடவை மட்டும் போய்ட்டு வந்துட்டேன்னா எல்லாக் கடனும் அடைந்துவிடும். இனிமே போகப் போறதில்லை"

"இதையே தான் சென்ற முறையும் சொன்னாய்.."

#######

துபாய் சென்ற சில நாட்களில் ஊரிலிருந்து செய்தி வருகின்றது அம்மா இறந்து விட்டதாக..... அவன் கதறி அழுதாலும் அலை சப்தத்தில் அடங்கிப் போய்விடும் என்று அரபிக் கடலின் கரைக்கு அவனை அழைத்துச் சென்று அந்தச் செய்தியை 3 நாட்களுக்குப் பிறகு தெரிவிக்கின்றனர் அவனது அறைத் தோழர்கள்....

இதே நிகழ்வுகள் அங்குள்ள நிறைய பேருக்கு நிகழ்ந்திருக்கலாம்....

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச் செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது! (தூக்கம் விற்ற காசுகள்)

"அடுத்த முறை வரும்பொழுது இதே வளையலோடு உன்னைப் பார்க்க வேண்டும்" என்றான். ஆனால் அவனால் பார்க்க முடிந்தது அம்மாவின் வளையலை மட்டும்தான். சம்பாதித்த தங்கமும் பணமும் அம்மாவை மீட்டுத் தருவதற்கான எந்த முயற்சியுமே எடுக்கவில்லை.

#######

சென்ற முறை ஊருக்கு வரும்பொழுது முதலில் ஓடி வந்து தழுவிக்கொண்டது அம்மாதான். மறுமுறை செல்லும் பொழுது இவன் ஓடிச் செல்கின்றான் அம்மாவின் கல்லறை நோக்கி... ஸ்பரிஸங்களை கரையான்கள் தின்று கொன்று இருக்கின்றது.....

ஊரில் வந்து செட்டிலாகிவிட வேண்டும் என்று திரும்பி வந்த நாராயணன் தனக்கென்று எதுவும் இல்லை என்பதை உணர்கின்றான். மறுபடியும் துபாய்க்குக் கிளம்புகின்றான்...

கடற்கரையில் தன்னை முதன் முதலில் கப்பலில் ஏற்றி அனுப்பியவரை 35 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"தான் உண்ண முடியாத பழத்தின் மரத்தை விதைப்பவன்தான் உன்னைப் போல் வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள். உன் வருகையைப் பற்றி யாருக்குமே கவலையில்லை. உன்னுடைய மணியார்டர் வரவில்லையென்றால்தான் பிரச்சனை... நீ ஓட்டைக் குடையாய் உன் வீட்டின் மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பாய்.. மழை வந்தால் பயன்படுவதைப் போல மணியார்டர் வரும்வரைதான் உனக்கு மதிப்பு....."

சொல்லிவிட்டு, அவன் அலையில் ஒதுங்கிய நுரைகளை உடைத்து கடற்கரையில் சென்று கொண்டிருக்கின்றான்…

#######

விசா முடிவதற்குள் துபாய்க்குக் கிளம்ப வேண்டும் என்பதால் அவனது வீட்டில் நடைபெறும் தங்கையின் மகள் திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியாமல் மறுபடியும் நாராயணன் துபாய்க்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றான்.

இடது பக்கம் ஓடிய தென்னை மரங்களும் சுத்தமான காற்றும், இப்பொழுது வலது பக்கத்திலிருந்து தெரிய, அந்த சுவாசம் அவனுக்கு நச்சு சுவாசமாக மாறிக்கொண்டிருப்பதை யாரிடமும் சொல்ல முடியாமல் கிளம்பிக் கொண்டிருக்கின்றான்...

நாராயணன் மறுபடியும் ஒரு கிளீனிங் வேலைக்குச் சேர்கின்றான். அவனுக்குப் பிறகு வந்திறங்கிய நிறைய பேர் தனியாக ரெஸ்ட்ராரெண்ட் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க, நாராயணன் இன்னமும் அப்படியே இருக்கின்றான்.

நம்முடைய வாழ்க்கை ஒரு தோற்றுப் போன வாழ்க்கையோ என்று முகைதீன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்....

வருடங்கள் கடந்து விட்டன. தள்ளாத வயதில் நாராயணன்.

#######

நாராயணனும் முகைதீனும் தாங்கள் முதன் முதலில் வந்திறங்கிய குர்பஃகான் என்ற இடத்திற்கு வந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

"முதன் முதலில் இந்த மண்ணில் வந்திறங்கிய மலையாளி யாராக இருக்கும்?"

"யாராக இருந்தாலும் சரி அவன் சுத்திப் பார்க்கிறதுக்காக வந்திருக்க மாட்டான். நம்மைப் போலவே அவனுக்கும் வறுமையும் திருமண வயதில் சில தங்கைகளும் இருந்திருக்கக் கூடும்...."

#######

புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் நினைவுகளைச் சுமந்தபடியே வீட்டை அலங்கரிக்க வாங்கிய ஓர் அலங்கார விளக்கை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு கட்டிலின் மேல் அவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான்.

வழக்கம் போலவே மறுநாள் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலையில் 5 மணிக்கு அலாரம் அடித்துக் கொண்டிருக்கின்றது. துபாயில் அந்த அறையில் அந்த அலாரத்தின் சப்தம் நாராயணனைத் தவிர மற்றவர்களை எல்லாம் எழுப்பியது.

அவனது மரணத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான அலாரம் அது...

#######

கொச்சின் விமான நிலையத்திலிருந்து அவனது பிணத்தைச் சுமந்தபடியே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கின்றது. இனி இருபுறமும் ஓடுவதற்கு எந்த தென்னை மரங்களும் அவனுக்கு இல்லை.

நாராயணனின் உடல் வருவதற்காக வீட்டில் எல்லாரும் காத்திருக்கின்றார்கள். அவன் ஒவ்வொரு முறையும் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பெட்டியை உடைத்தவர்கள், அவனே பொருளாக வந்திறங்கிய அந்தப் பெட்டியை அலட்சியப்படுத்துகின்றார்கள்...

"கல்ஃப் ல இருந்து வர்ற பெட்டியை திறக்கும்பொழுது உறவினர்கள் எல்லாரும் இருக்க வேண்டும்" என்று வெளியே சென்று கொண்டிருக்கும் உறவினர்களிடம் நக்கலாக, நாராயணனை முதன் முதலில் கப்பலில் ஏற்றிச் சென்ற வேலாயுதம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்...

அவனது புதிய வீட்டில் நாராயணனின் பாடியை ஒருமுறையாவது வைத்து விட்டாவது கொண்டு செல்லலாம் என்று முகைதீன் சொல்லும்பொழுது, நாராயணன் மகன் அதனைத் தடுத்து விடுகின்றான்.

"நாங்கள் வாழப்போற வீடு இது. பின்னால இந்த வீட்டை விற்கணும்னா கூட யாரும் வாங்க மாட்டாங்க…" - என்று பாடியை புதிய வீட்டில் வைக்க மறுத்து விடுகின்றான்...

மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிப்போன அந்த வீட்டைத்தான் இத்தனை நாள் நாராயணனன் கட்டியிருக்கின்றான்.

#######

கல்ஃப் -ல்:

நாராயணன் இறந்து போனதைக் கேள்விப்பட்ட ஒரு மலையாளி அவனது அறை தேடி வந்து கொண்டிருக்கின்றார். "நாராயணன் அறை எங்கிருக்கின்றது" என அந்த ஃபில்டிங்கில் உள்ள ஒருவரிடம் கேட்கின்றார் . நாராயணனின் அறைத் தோழரைக் கண்டுபிடித்து அந்த பில்டிங்கின் ஓனர் நம்பரை வாங்கிப் பேசுகின்றான்... நாராயணனின் கட்டிலில் தான் வந்து தங்குவதற்காக.......

யார் செத்துப் போனாலும் சரி, அவனுக்காக கவலைப்படுவதை விடவும் அவனது கட்டிலுக்காகத்தான் நிறைய துபாய் ரூம் ஓனர்கள் கவலைப்படுகின்றார்கள்....

அங்கே மனிதர்களின் அடையாள எண் கட்டில்.

###############

இறுதிக் காட்சியில், துபாயில் உள்ள ஒரு மலையாள சானலில் நாராயணனைப் பற்றிய ஒரு பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். நாராயணனின் அந்தப் பேட்டி வெளிநாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவரின் மனசாட்சி....

"நம்மைச் சுற்றி உள்ள பிரியமானவர்களுக்காகத்தான் இத்தனை கஷ்டங்களும் என்று உணர்ந்தால் அது ஒரு வலியாகவே தெரிவதில்லை. நாம அனுப்புற பணம் அங்குள்ள தேவைகளை நிறைவேத்துதுன்னு தெரிஞ்சாலே அது ஒரு சந்தோஷம்தான்...

நாம எல்லாருடைய உடல் மட்டும்தான் இங்க இருக்குது. நினைவுகள் எல்லாம் நாட்டைச் சுற்றிதான்…

நாம எவ்வளவு சம்பாதிக்கறம்னு அவங்களுக்குத் தெரியாது. சொல்லக் கூடாதுன்னுல்ல.. சொன்னா அவங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதான். இப்ப நாம் 10000 ரூ ஊருக்கு அனுப்புனோம்னா அங்க உள்ளவங்க என்ன நினைப்பாங்க? 20000 சம்பாதிச்சிட்டு 10000 ரூ அனுப்புறோம்னு. ஆனால் 7000 ரூ சம்பளத்தோட 3000 கடன் வாங்கி அனுப்பிக்கிட்டு இருக்கோம்னு அவங்களுக்குத் தெரியாது....

திரும்ப கிடைக்கும்னு எதிர்பார்த்து எதையும் செய்யக்கூடாது. அப்படி எதிர்பார்த்தா அது தியாகம் அல்ல கடன்.... நம்முடைய குழந்தைகள் நம்மை விருந்தாளியாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் கை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்து செல்கின்ற விருந்தாளியாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்..

ஏதாவது குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் எனக்கு என் குழந்தைகள்தான் ஞாபகம் வருவார்கள். அதுபோல குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களை நினைத்துப் பார்ப்பார்களா?

நான் நிறை தடவை சங்கடப்பட்டிருக்கின்றேன். சில நல்ல காரியங்கள் நடக்கும்பொழுது ஊரில் இருக்க முடியவில்லையே என்று. தம்பி பைக்கிலிருந்து விழுந்து அடிபட்டபோது - மனைவி தொண்டை வலியினால் சாப்பிடாமல் இருக்கும்போது - மகன் மஞ்சள் காமாலை நோயில் இருக்கும்போது - நான் பக்கத்தில் இல்லாமல் போய்விட்டேனே என்று அழுதிருக்கின்றேன்..

நான் வயசாயிடுச்சுன்னு கவலைப்படல....ஆனா இன்னமும் எனக்கு ஆரோக்கியம் இருந்திருந்தா என்னுடைய குடும்பத்திற்கு இன்னமும் சப்போர்ட்டா இருந்திருக்கலாம்னு நினைச்சுதான் வருத்தப்படுறேன்....

இன்னொரு ஜென்மம் இருந்தா இதே நாராயணனா இதே உறவினர்களோடு இதே மனைவியோடு இதே குழந்தைகளுக்கு அப்பாவாக இதே முகைதீனோடு நண்பனாக, மறுபடியும் வாழ வேண்டும்....."
..
#######

கடல் தாண்டிய பறவை சிறகின் சுமை தாங்காமல் விழுந்து விட்டது……

பத்தேமாரி… நிச்சயமாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று

Pin It