“நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இனபம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவர் புகழேந்தியின் பெயர் தமிழுலகில் ‘வெண்பாவிற்கு புகழேந்தி’என்று நிலைத்துவிட்டது போல், ஈழத்து இலக்கிய உலகில் ‘வெண்பாவிற்கு பெரியதம்பி’ எனப் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல், ‘சந்தக் கவிதைக்கு நீலாவணன்’ என்ற பெயரும் எழுத்துலகில் நின்று நிலைக்கும். மேலும் ‘வேளாண்மை’க் காவியத்தை நூறுநூறு ஆண்டுகளுக்கும் பின்னால் வரும் நம் சந்ததியினர் மட்டக்களப்பைத் தரிசிக்குமாறு படைத்து அளித்துள்ளார் கவிஞர் நீலாவணன்” என ஈழத்து இலக்கிய விமர்சகர் செங்கதிரோன் புகழாரம் சூட்டியுள்ளார்.

neelavananகவிஞர் நீலாவணன் இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையில் 31.06.1931 அன்று கேசகப்பிள்ளை - தங்கம்மா வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னதுரை. தமது ஆரம்பக் கல்வியை நீலாவணையின் தென்பகுதியில் அமைந்துள்ள மருதமுனை என்னும் இஸ்லாமிய கிராமத்தில் பயின்றார். அங்கு புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் ஹாஜியாரிடம் தமிழ் பயின்றார். தமது பள்ளிக் கல்வி முடிந்தவுடன் தமிழ் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். பின்னர் தமிழாசிரியராகப் பணிபுரிந்துhர்.
இவர் 1948ஆம் ஆடு முதல் எழுதத் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு இவரது ‘பிராயசித்தம்’ என்னும் சிறுகதை ‘சுதந்திரன்’ இதழில் முதன் முதலாக வெளிவந்தது.

அவர் தாம் பிறந்த ஊரின் மீது இருந்த பற்றின் காரணமாக நீலாவணன் என்னும் புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.

கே.சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர் , எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.

சிறுகதை, கவிதை, சிறுவர் கவிதைகள், உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம், நகைச்சுவை உரைநடைச் சித்திரம் முதலியவைகள் எழுதியிருந்தாலும், இவரைப் புகழ் பெற வைத்தது கவிதைகள் தான்.

கவிஞர் நீலாவணன் யாப்பின் திறம் குறையாமல் பேச்சோசையில் கவிதைகளை எழுதினார். பாடவும் செய்தார். யாப்பு அற்ற புதுக்கவிதையை கடுமையாகச் சாடினார். புறநானூற்றுச் செய்யுளுக்கு நிகர்த்த கவிதைகளை எழுதி அளித்தார்.

கவிஞர் நீலாவணன் தமிழின் சிறப்பு குறித்தும், அதன் பண்டைய வளம் குறித்தும் அதன் சமகாலத் தேய்வு குறித்தும், எதிர்காலத்தில் அதன் வளம் தொற்றிய கனவுகள் பெய்தும், அவர் ஏராளமான கவிதைகள் படைத்தளித்துள்ளார். தமிழையும், காதலையும் தமது கவிதைக்கான பொருள்களாகத் தமது துவக்கக் காலத்தில் வரித்துக் கொண்டவர்.

கவிஞர் நீலாவணன் படைத்தளித்துள்ள நூல்கள் : வழி, ஒத்திகை, ஒட்டுறவு முதலிய கவிதைத் தொகுதிகள், வேளாண்மை -காவியம், மனக்கண், பட்டமரம், சிலம்பு, மழைக்கை முதலிய பாநாடகங்கள், வடமீன் - குறுங்காவியம் ஆகிய படைப்புகளை வழங்கியுள்ளார்.
நீலாவணன் பற்றிய நூல்கள் : கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும், ஆசிரியர் கலாநிதி சி. மௌனகுரு, நீலாவணன் - எஸ்.பொ.நினைவுகள் , ஆசிரியர் எஸ்.பொ.

ஈழத்து இலக்கிய உலகில் ‘காதல் கவிதைக்கோர் அண்ணல்’ என்று புகழப்பட்டார். அவருடைய சிறுகதையும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

கவிஞர் நீலாவணனின் கவிதைகள் தீமைக்கு எதிராக குமுறுகின்ற அவரது சுபாவம் அழகான கவிதைப் பிழம்பாக சமூகத்தைப் பிரதிபலித்தது. மேலும், சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளுக்கு எதிராக, கஷ்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக குரல் கொடுத்தார். சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள், ஊழல்கள், வறுமை, சாதிப்பாகுபாடு, சீதனமுறை, நிறவெறி முதலியவற்றுக்கு எதிராக கவிதைகள் எழுதினார்.

‘மழைக்கை’ கவிதை நாடகம் மட்டக்களப்பில் 1963ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில் மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்தை நெறிப்படுத்தியதுடன், அதில் நடிக்கவும் செய்தார் கவிஞர் நீலாவணன். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிக்கால கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம், அறுசீர் விருத்தப்பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகமாகும். இந்நாடகம் 1964ஆம் ஆண்டு ‘வீரகேசரி’ இதழில் வெளிவந்தது. ‘சிலம்பு’ என்ற இவரது கவிதை நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.

மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், பழக்க வழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ள அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கைமுறை, சடங்குகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை என இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“வாழப் பழகுங்கள் வாத்தியார்! வையகத்தில்-
ஆள்வோர் சிலபேரும் ஆளப்படுவோர்
கோடிக் கணக்கும் குவிந்து, தமை இழந்து,
பேடிகளாய்ப்- பேயாய்ப் - பிணமாய்க்- குருடாகிச்
சாராயத் துள்ளிகளில் சத்தியத்தைப் பூசிப்பார்!
ஆராண்டால் என்ன? அந்த ஆள்வோர் திருப்புகழைப்
பாடி, நான் என்னுடைய பங்கைப் பெறுகின்றேன்.
கூடினால் நல்லகுடி - விருந்து கொண்டாட்டம்
எல்லாம் கிடைக்கும் எனக்கு! உமக்குமவர்
இல்லையென்றா சொன்னார்கள்?
ஏனிந்தப் பொல்லாப்போ! ”

கவிஞர் நீலாவணன் ‘பாவம் வாத்தியார்’ என்ற கவிதையில் சமூக நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

“பறையின் மகள் தூங்குகின்ற
அறைக்கதவை நள்ளிரவில்
பதுங்கிச் சென்று
குறைமதியால் மதுவெறியில்
தட்டுகின்ற கோமான்காள் !
கொஞ்சம் நில்லீர் !
நிறையுடையாள் பொன்றாத
கற்பென்னும் நிதியுடையார்
நெஞ்சை ஈரத்தால்
முறையாக மணப்பதிலே
வசையென்ன? ஏறிடுமோ
முதுகில் மேளம்”

கவிஞர் நீலாவணன் எழுதிய ‘பாய்விரித்து வையுங்கள்’ என்ற கவிதையில் சாதியக் கொடுமையைச் சாடுகிறார்.

‘எது வாழ்வு’ என்னும் கவிதையில்,

‘தாள்களிலே அச்சடிக்கும் தமிழெல்லாம் இலக்கியமா?
தனித்து வாழ,
ஆழமுள்ள பொருள் கண்டு
அழியாத பொருள் பாடல் எனக்கு வாழ்வு!
ஏலத்தால் மலியாத
கோல எழில் கவி படைத்தல் எனக்கு வாழ்வு!” என்று எழுத்தின் நோக்கை விளக்குகிறார்.

கலைமகள், தீபம் ஆகிய தமிழ்நாட்டு இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. கவியரங்க மேடைகளிலும், வானொலிக் கவியரங்குகளிலும் கவிதைகள் பாடியுள்ளார்.

கல்முனையில் 1962ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாயிற்று. சங்கத்தின் முதல் தலைவராகக் கவிஞர் நீலாவணனும், செயலாளராக மருதூர்க் கொத்தனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் கவியரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவுநாள் விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் சந்திப்புகள் முதலிய நிகழ்ச்சிகளை கவிஞர் நீலாவணன் மிகச் சிறப்பாக நடத்தினார்.

இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் போல் அதிக எண்ணிக்கையிலான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. அந்த இலக்கியவாதிகள் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணன். அகில இலங்கை ரீதியாக ‘தினகரன்’ இதழ் மூலம் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, ‘மழைக்கை’ கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும்.

‘பாடும் மீன்’ என்ற பெயரில் ஒரு இதழை வெளியிட்டார். இரண்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. இவரது ‘வழி’ என்ற கவிதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.

“சந்தச் சிறப்புக்குச் சமகாலக் கவிஞர்களுள் நீலாவணனே முதல் மகனாக நிமிர்ந்து நிற்கிறார்” என ஈழத்துக் கவிஞர் எம்.ஏ.ரஹ்மான் பதிவு செய்துள்ளார்.

‘பழமையிலே காலூன்றிக் கவிதை செய்த புதுமை வெறியனாகவே திகழ்ந்தார். யதார்த்தமான அணுகுமுறை, இயல்பான சொற்பிரயோகம். இவரது கவிதைகளில் சந்தம் நிமிர்ந்து நிற்கும். பிறருடைய ஆற்றல்களைப் பாராட்டுவதில் நீலாவணன் எல்லைப் பிராந்திய உணர்வுகளை ஊடாடவிட்ட கடுகுமனத்தினரல்லர். ‘அடுத்தவன் வீட்டு முற்றத்திலே பூக்கும் முல்லையிலும் பார்க்க என் வீட்டுக் கொல்லையிலுள்ள எருக்கம்பூ மணமுடையது’ என்று அவர் என்றும் வழக்காடியது இல்லை. மேலும்,

“மலட்டுக் கவியாய் மாளாமல்
மரபுக் கொடியும் தாழாமல்
இலக்கோ டெழுதும் ஓர் கவிஞன்
எங்கள் நீலாவணன் உளமும்
கலக்கிவிட்டீர்! சீச்சி!
கருத்தை எங்கு கற்றீரோ?
இலைக்குள் கனியை மறையாதீர்!
இவன்றன் பெருமை குறையாது”

- என நீலாவணன். எஸ்.பொ.நினைவுகள் என்னும் நூலில் எஸ்.பொ. பதிவு செய்துள்ளார்.

“கவிஞர் நீலாவணன் அவர்கள் ‘வழி’ என்ற கவிதையில், உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார், முறைதான்: தருமந்தான், அன்னாரின் நடுவு நிலைமையைப் பொன்னே போற் போற்றுவோமாக! போற்றிக்கொண்டு கவிதைக் கலையை வளர்ப்போமாக!!”- என மகாவித்துவான் எஃப்.எக்ஸ்.ஸி.நடராஜா தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

“ நீலாவணன். . .சிறுகதைகளில் கையாளப்படும் வகையில், ஆரம்ப காலத்தில் உவமைகளைக் கையாண்டார். சமீப காலத்தில் அவருடைய போக்கு மாறி, தத்துவங்களைக் கொண்ட கவிதைகளை எழுதி வேகமாக முன்னுக்கு வந்தார். வானொலிக் கவியரங்கு ஒன்றிலே, ஆலம்பழத்தை மேனாட்டுக் கவிஞர்களுடைய பாணியிலே உருவகப்படுத்திப் பாடிய கவிதை இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. ‘மரபு’ பரிசோதனைக் களத்தில் அவரது ‘வழி’ என்னும் கவிதை இடம் பெற்றது. இந்தக் கவிதை ஒன்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்”- என ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்னும் நூலில் இரசிகமணி கனக.செந்தில்நாதன் பதிவு செய்துள்ளார்.

“கவிதை என்பது இதயத்தால் உணரக்கூடியதாகவும், இன்பம் பயப்பதாகவும், அழகிய கற்பனைகள் நிறைந்ததாகவும் அமைய வேண்டும். அத்தோடு படிக்குந்தோறும், உணர்வலைகளைக் கிளறத்தக்கதாகவும் இருப்பதோடு சிந்தனையில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதே சிறந்த கவிதையாகும். இந்த வகையில் கவிஞர் நீலாவணனின் பல நூற்றுக் கணக்கான கவிதைகள் தமிழுக்கு அணி சேர்க்கும் நவீன கவிதைகள் ஆகும்”- என கவிஞர் மு. சடாட்சரன் ‘ஒத்திகை’ (கவிதைத் தொகுதி) நூல் வெளியீட்டு விழாவில் புகழ்ந்துரைத்துள்ளார்.

“நுண்ணுணர்வு படைத்த ஒரு கவிதா உள்ளம், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் கீழ்மைகளைக் கண்டு தாங்காது வெகுண்டெழுந்த ஓர் உள்ளம், தனது தனித்துவமான பார்வையையும், ஆற்றல்களையும் பூரணப்படுத்தும் முன் எம்மைவிட்டு, ‘காவியலை எள்ளிச்சிரி’ என்று பாடியவாறு பிரிந்துவிட்டது என்ற எண்ணமே இதயத்தில் கனந்து நிற்கின்றது. எனினும், அவர் எமக்கு விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள், ‘நீலாவணன் கவிதா உடம்பு வாழும்’ என்ற உறுதியை அளிக்கின்றன”- என ‘வழி’ எனும் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் ஏ.ஜே. கனகரத்தினா பதிவு செய்துள்ளார்.

கொழும்புத் தமிழ்ச்சங்கம் 06.07.1998 முதல் 12.07.1998 முடிய நடத்திய ‘ஈழத்துக் கவிஞர் வாரம்’ நிகழ்வின் ஆறாவது நாள் கவிஞர் நீலாவணனின் திருவுருவப்படம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், கொழும்புத் தமிழ்சங்க மாதாந்திர இதழான ‘ஓலை’ 2000 சனவரி மாதம் கவிஞர் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ் வெளியிட்டது.

‘மல்லிகை’ மே 1970 இதழ் கவிஞர் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டுச் சிறப்பித்தது.

கவிஞர் நீலாவணன் 11.01.1975 அன்று தமது நாற்பத்து நான்காவது வயதில் காலமானார். அவர் காலமானாலும் அவரது கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It