s nagarajanபிற தமிழ் தேசியர்களிலிருந்து மாறுபட்டு தேசியப் பிரச்சினையில் எஸ்.என் முன்வைத்தது இனவழித் தேசியம் அல்ல. மாறாக மொழிவழித் தேசியம்.

சூழலியல் மாசு என்பது இன்று உலகின் மிகப்பெரும் பிரச்சினை. இதனைத் தமிழ்ச் சூழலில் முதன் முதல் எழுப்பியவர் எஸ். என்.தான்.

இன்று மார்க்சியச் சூழலியல் குறித்து அதிகம் எழுதுகிற பெல்லாமி போஸ்ட்டர் இயற்கை-மனிதன் தொடர்பான, வளர்சிதை மாற்றத்தில் ஏற்பட்ட முறிவு குறித்த மார்க்சின் கருத்தாக்கத்தை நாம் மீள் கண்டுபிடிப்புச் செய்ய வேண்டும் என எழுதுகிறார்.

ரஸ்ய செர்னோபில் விபத்தின் பின், இடதுசாரிகளுக்கு வெளியில் உலகில் சூழலியல் ஒரு மாபெரும் இயக்கமாக எழுந்த சூழலில்தான் பெல்லாமி போஸ்ட்டரின் சூழலியல் மார்க்சிய நூல்கள் வருகின்றன.

இந்திய அளவில் முதன் முதலாக இதனை ஒரு அடிப்படைச் சிக்கலாக முன்வைத்தவர் எஸ்.என். நாகராசன்தான்.

எஸ்.என். ஒரு அசலான சிந்தனையாளர் என்றாலும், அவர் வேறுபட்ட உரையாடல்களில், ரஸ்ய, சீன அனுபவங்கள தவிர்ந்த பிற உலக மார்க்சிய அனுபவங்களை ஒப்பிட்டுப் பேசியதில்லை.

குறிப்பாக லத்தீனமெரிக்க, ஆப்ரிக்க, தேசிய விடுதலை சார் மார்க்சிய அனுபவங்கள். இதனை மட்டுமே அவர் மீதான விமர்சனமாக வைக்க முடியும்.

எஸ்.என். தன் வாழ்நாளெல்லாம் பேசியது அகந்தை களைந்த, மக்களை நேசிக்கும் மார்க்சிய அறம்தான். இறுதி வரை அதனைத் தனது சொந்த வாழ்வில் கடைப்பிடித்து மறைந்த மனிதன் எஸ். என். நாகராசன்..

ஜெயமோகனை மேற்கோள் காட்டி கிராம்சியைப் புரிந்து கொள்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் எஸ்.என். நாகராசனைப் புரிந்துகொள்ள ஜெயமோகனை மேற்கோள் காட்டுவது.

எஸ்.என். அந்தரத்தில் இருந்து ராமானுசர் பற்றிப் பேசத் துவங்கவில்லை. அவர் கிறித்தவ, இஸ்லாமிய இறையியல் பற்றி, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றிப் பேசியதோடு, பிஜேபி,ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனிய மேலாதிக்கம் என்றெல்லாம் பேசுவதன் பகுதியாகத்தான் ராமானுசரது செயல்பாடுகள் பற்றிப் பேசுகிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னான அவரது இறுதி நேர்காணலில் இஸ்லாமியர், தலித்துகள், பெண்கள் என இவர்களிடம் தான் எஸ்.என். விடுதலை ஆற்றலைக் காண்கிறார்.

மதம்சார் விஷயங்களை பரிசீலனைக்கு எடுத்ததாலேயே ஒருவரை மென் இந்துத்துவர் என வரையறுக்க முடியுமானால், தமிழ் மரபில் ஜீவா, குன்றக்குடி அடிகளார், தொ.பரமசிவன் என இவர்களோடு ராமானுசர் பற்றி நேர்மறைப் பனுவல்கள் எழுதிய இந்திரா பார்த்தசாரதி, கலைஞர் கருணாநிதி போன்றவர்களை எங்கு வைப்பது?

சுவாமி அக்னிவேஷை எப்படி மதிப்பிடுவது?

எஸ்.என்.னை மென் இந்துத்துவர் என்று பேசுபவர்கள் அவரது பனுவல்களைப் படிக்காமல் குத்தகையாகப் பேசுபவர்கள் என்று நான் சொல்வேன்..

- யமுனா இராசேந்திரன்

Pin It