கவிஞர், உரைநடையாசிரியர், துணிவு மிக்க பத்திரிகையாளர், இணையற்ற கண்டனக்காரர், சரித்திர ஆய்வாளர் எனப் பன்முகத்திறமை கொண்டு விளங்கியவர்; ‘ஆசுகவி’ கல்லடி க. வேலுப்பிள்ளை இவரை ‘கல்லடி வேலுப்பிள்ளை’ எனவும், ‘ஆசுகவி’ எனவும் ‘கண்டனப்புலி’ எனவும் அழைப்பதுண்டு.

               இவர், யாழ்ப்பாணத்தின் அருகிலுள்ள வசாவிளான் என்ற சிற்றூரில் கந்தப்பிள்ளை- வள்ளியம்மை வாழ்விணையருக்கு 07-03-1860 அன்று மகனாகப் பிறந்தார். இவரது இல்லத்தின் அருகில் பெரிய கல்லொன்று காணப்பட்ட காரணத்தால் ‘கல்லடி வேலுப்பிள்ளை’ என்று இவரை அழைத்தனர்.

              Asukavi kaladi velupillai தமது ஆரம்பக் கல்வியை அகஸ்டீன், வேலுப்பிள்ளை, புலவர் நமச்சிவாயம், அறிஞர் நெவின்; சிதம்பரம்பிள்ளை, வித்துவான் கதிர்காம ஐயர் ஆகியோரிடம் கற்றார்.

               சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையினை 1902ஆம் ஆண்டு தொடங்கி மிகச் சிறந்த முறையில் நடத்தினார். இங்கிலாந்தில் வெளிவந்த ‘பன்ஞ்ச்’ (Punch) என்னும் ஆங்கில நகைச்சுவைப் பத்திரிகையைப் போன்று சுதேச நாட்டியம் அக்காலத்தில் மிகுந்த மதிப்பு பெற்றிருந்தது.

               “எப்பிரபுக்களாயினும், எவ்வதிகாரிகளாயினும், எவ்வுத்தியோகத்தராயினும், எக்குருவாயினும், எந்நண்பராயினும், எக்கலாஞானிகளாயினும், நீதியற்ற கிரியைகளைச் செய்கிறவராய்க் காணப்படுவராயின், அவர் கீழ்நிலையையும் எடுத்து வெளிப்படுத்த எதற்காயேனுமஞ்சி எம்மனஞ் சிறிதாயினும் பின்னிற்கப் போகிறதில்லை. இதுவே நடுநிலையும் பொது நன்மையும் விரும்பும் பத்திரிகா லட்சணமாம். நான் பத்திரிகையை ஆரம்பித்து ஒருவரைத் தோலுரிக்;கும் நோக்கமல்ல. எமது நயத்துக்காகவும், அறிவுக்கு நோக்கமாகவும் தொடங்கினோம்”என ‘சுதேச நாட்டியம்’ என்னும் பத்திரிகை தொடங்கப்படுவதற்கான நோக்கத்தை அறிவித்தார்.

               அப்பத்திரிகை பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தது. அந்த பத்திரிகைக்கு இலங்கை மட்டுமல்லாமல் இந்தியா, மலேயா போன்ற நாடுகளிலும் வாசகர்களிருந்தனர்.

               அப்பத்திரிகையில் சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், பெரியோர் வரலாற்றுக் கட்டுரைகள் மட்டுமின்றி, புத்திலக்கிய வடிவங்களான நாவல்கள், நாடகங்கள், நூல் விமர்சனங்கள் என்பனவும் வெளிவந்தன.

               மகாகவி பாரதியார், கவிமணி போன்றோரின் கவிதைகளையும் சுதேச நாட்டியத்தில் மறுபிரசுரம் செய்தார். மேலும், மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய் போன்ற தியாகிகள் பற்றியும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

               ‘ஐக்கிய சங்காச மஞ்சசவைத் தர்க்கம்’ என்ற தலைப்பிலமைந்த கண்டனக் கட்டுரையில், “சன்மார்க்கமுடைய பெற்றோரால் பால பருவந்தொட்டு நல்ல வளர்ப்பையடைந்து கல்வி நாகரிகம், தேசாபிமானம், பாபஅபிமானம், குலாபிமானம், மதாபிமானம் குடிபுகுந்த வாலிபர் கூடும் கூட்டங்களையும் அவர் கொண்டாட்டங்களையும் கண்ணுறாது செவியுற்ற நம் அயல் வாலிபருள் கல்வி அறிவு, உலகறிவு, பெரியோர் மதிப்பு, நற்பழக்க வழக்கம், மன அடக்கம் இல்லாதாரும், பொய், பொறாமை, வஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், புறங்கூறல், குருநிந்தை, பெரியோர் நிந்தை உடையவரும் - பெற்றோர், உற்றார், குரு ஆகியோருக்குக் கீழ்ப்படிதலின்றி ஆணவமாய் நிகர்த்தலைந்து திரிபவருமான சிலர், ‘அவலை நினைத்து தலை இழந்தார் போலத் தாமுமோர் சங்கங் கூடக் கருதி அதற்கு ஐக்கிய சங்கம் என்றும் முகவுரையிட்டு ஓர் சங்கடச் சங்கந் தொடங்கினார். இச்சங்கத்தைத் தாபிக்க முயன்றது தம் நாட்டை எட்டிக் கனிபோல் வெறுத்துத் தம்மை மடுத்துக் கொண்டாடாது விடுத்த சன்மார்க்கமுள்ள சிலரைத் தூற்றவும் தம்முள் சிலரைப் போற்றவும், தம்மதிகாரத்தையேற்றவும், தம் பழஞ்சலிப்பை மாற்றவும், இனித்தாம் முதல்வராய் தோற்றவுமாம்....” இதன் மூலம் அவரது கண்டனத்திறனையும், உரைநடை சிறப்பையும் காண முடிகிறது.

               “என் சாணுடம்புக்குஞ் சிரசே பிரதானம்” என்பதால் தலை விசேடமென்பது இனிது விளங்குகிறது. ஒவ்வொரு காரியத்துக்கும் தலை போலொருவர் இருக்க வேண்டுமென்பதும் அங்ஙனமில்லாவிடில் அத்தொழில் இடையூறின்றிச் சித்தியுறாமென்பதும் யாவரும் அறிந்த விடயம்.

               பிரக்ஞைகளுக்கு அரசனும், சீடருக்குக் குருவும், பிள்ளைகளுக்குப் பெற்றோரும், மாணவருக்கு ஆசிரியனும், பொதுச்சபைக்கு அக்கிராசனப்பதியும், யுத்த சேனைக்குச் சேனாதிபதியும் தலையென மதிக்கப்படுவர். இவ்வாறான தலைவரைப் பெற்றுக் கீழ்ப்படிந்தொழுகாதவர், தம்நிலை தவறி அசைவடைந்து கெடுவரென்பது சத்தியமே” என்று தலைமையின் முக்கியத்துவத்தை ‘தலையற்றவர் நிலையற்றவர்’ என்ற தலைப்பில் எடுத்துரைத்துள்ளார்.

               யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் வந்து நிலையூன்றுவதற்கு முன் ஒரு சைவ வித்தியாசாலையும் இருந்ததில்லை. கத்தோலிக்க குருமார், பாதிரியார் ஆகியோர் மூலம் சைவப்பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் சைவசமயத்தினருக்கு ஏற்பட்டது. சூரியனிலிருந்து சந்திரன் ஒளியைப் பெறுதல் போல கிறிஸ்துவ பாதிரியார்களிடத்திலிருந்து ஒளியைப் பெற்ற நாம் அவர்களை எதிரிகளாக்கி அவர்களது மதத்தை நிந்தித்துக் கொடுக்குக் கட்டி மல்லாடத் துணிவது கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

               ‘சுதேச நாட்டியம்’ என்னும் பத்திரிகையை 1902ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற உயர்ந்த குறிக்கோளுடன் உதயமானது தமிழின் மாட்சிக்கும், தமிழ்ச் சமுதாயத்தின் மேன்மைக்கும் களம் அமைத்துக் கொடுப்பதை கருப்பொருளாகக் கொண்டிருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளையும், சமயக் குறைபாடுகளையும், இலக்கியத் தாழ்வுகளையும் தயவுதாட்சணியமின்றி அம்பலப்படுத்தியது. போலிகளைப் புறந்தள்ளித் தூயவழியில் பத்திரிகை தர்மத்தை பேணிக்காத்த பெருமை இப்பத்திரிகைக்கு உண்டு.” என ‘ஈழத்துத் தமிழ் அறிஞர்கள்” என்னும் நூலில் கவிஞர் த.துரைசிங்கம் பதிவு செய்துள்ளார்.

               “அச்சமென்ப திருப்பினு மில்லாமை சொல்லேன்

அதிகநிதி வழங்கினு மில்லாமை சொல்லேன்

பாகூடித்துக் காயும் நானில்லாமை சொல்லேன்

பரிகசிப்ப வரைத் துணிந்து பரிகசிப்பேன்”

என்று துணிச்சலுடன் பத்திரிகையை நடத்தினார்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை சுமார் இருபது நூல்களை எழுதியுள்ளார்.

               ‘மேலைத் தேய மதுபான வேடிக்கை கும்மி’        ‘உருப்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை’ முதலிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

               புலோலியைச் சேர்ந்த நா.கதிரைவேற்பிள்ளை மிகச் சிறந்த தமிழறிஞர்; ஆறுமுக நாவலரின் அப்பழுக்கற்ற சீடர்; ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வின் ஆசான். அவருடன் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தும்பளை என்னும் சிற்றூரில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதம் செய்து பாராட்டைப் பெற்றார்.

               தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைமலையடிகளுடன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை சிறந்த நட்பு பூண்டிருந்தார்.

               தமிழர்களின் மொழி, நாகரிகம், சமயம் என்பன ஆரியர் கலப்பில்லாததும் மிளிர வல்லன என்கிற கொள்கையினை உயிர் மூச்சாக்கி உழைத்த மறைமலையடிகளாரின் ஆய்வுகள் அவர் காலத்தின் பல அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை.    

               அவரது ஈழத்து வருகையை எதிர்பார்த்திருந்த அடிகளாரின் ‘ஈழத்து எதிர்ப்பாளர்கள் அடிகளார் மீது கோபாவேசத்தோடு கண்டனக் கணைகளைத் தொடுத்தார்கள்.

               அவர்களில் வித்துவ சிரோண்மணி கணேசையரும் ஒருவர். கணேசையர் மறைமலையடிகளார் மீது தொடுத்த கண்டனத்திற்கு மறுப்பாக கனல்கக்கும் ஒரு கண்டனத்தை ஐயர் மீது தொடுத்தார் ஆசுகவி.

               அக்கண்டனத்தில் “மறைமலையடிகளின் ஆராய்ச்சி தமிழின் தொன்மையையும், தமிழரின் தனித்துவத்தையும் உலகினுக்குக் காட்டிட வேண்டுமெனும் பேரவாவின் பாற்பட்டதென்றும், தொண்டரை – ஆய்வாளரைத் தாக்க முயல்வது ஆண்மையற்ற ஒரு செய்கை” என்றும் குறிப்பிட்டுள்ளார். பேரிடிபோற் தாக்கிய ஆசுகவியின் கண்டனங் கண்டு கணேசைய்யர் அமைதியானார்.

               சர்.பொன்.இராமநாதன், நீர்வேலி சங்.சிவப்பிரகாச பண்டிதர், சுவாமி ஞானப்பிரகாசர், நவநீதக் கிருஷ்ணபாரதியார் ஆகிய அறிஞர் பெருமக்கள் ஆசுகவியின் மீது மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தனர்.

               ‘சுதேச நாட்டியம்’ பத்திரிகையில் தமிழர்களை நோக்கி..... என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

               “சுயபாஷையாகிய நந்தமிழ்ப் பாஷையை, வழுவின்றிப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் அதிலுள்ள அரிய காரியங்களை வாசித்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ளவும் பழகிக் கொள்ளாது இங்கிலீஷ் பாஷையைக் கற்றுக்கொள்ள விரும்புவது போலும் வெட்கமான காரியம் வேறென்ன? என்பதோடு, அன்னிய தேசத்தையும், அன்னிய மதத்தையும் உடையவரான எல்லீஸ், போப், வீரமாமுனிவர் முதலிய மிகப்பலர் நம் தமிழ்ப் பாஷையாலும், சமஸ்கிருத பாஷையாலும் மிக்க பாண்டித்தியம் உடையவராய் சில நூல்களுக்குக் கர்த்தாவாயிருந்தாரெனில் நம் பாஷையைப் பேச வெட்கமுறும் நம்மவரை யார் சிறியார். இவர் நம் பாஷையிற் சபலம் இல்லை என்பதை அறியாது கற்றுவிட்டாரா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

               அமெரிக்காவிலிருந்து வந்த பாதிரிமார்களில் அனேகர் செந்தமிழில் தெவிட்டாத தௌ;ளமுதம் போல்; செய்யும் உபந்நியாசத்தை இவர் போலார் கண்டும் வெட்கமடையாதிருப்பது நூதனமான காரியமே” என்கிறார்.

                “நமது சுதேச (தமிழ்) பாஷையில் கைத்தொழில், விவசாயம், வர்த்தகம் ஆகியன விருத்தியடையத்தக்க சாஸ்திரங்கள் (சயின்ஸ்) விரிவாயில்லை. இங்கிலிஷ் பாஷையில் சுவை அநேகமுண்டு. அவற்றை நமது சுதேச பாஷையிற் கொண்டு வர வேண்டும்” என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

               தம் சுயபாஷையைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் அறிஞர்களால் மூடனாக மதிக்கப்படுவான். இப்படியுள்ளவர்கள் தம் புதல்வரை விட்டு அந்நியப் புதல்வரைத் தூக்கித் தோள்மேல் வைத்தவர்களுக்குச் சமானரல்லவா?” “சுதேச பாஷையிலேயே உயர்தரக் கல்வி கற்கும்படி நமது பிள்ளைகளை ஏவ வேண்டும்” என்று தமது கட்டுரைகளில் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               மங்கள நாயகம் என்ற பெண் நாவலாசிரியர் எழுதிய ‘நொறுங்குண்ட இதயம்’ ‘அரியமலர்’ முதலிய நாவல்களுக்கு ‘சுதேச நாட்டியம் பத்திரிகையில் விமர்சனம் எழுதி வெளியிட்டுள்ளார்.

               “தேசத்திருப்பணி செய்வோருக்கன்பும், அமைதியும் வேண்டும். இன்சொல் வழங்குதல் வேண்டும். புகழ் விருப்பம் இருக்கக்கூடாது. தைரிய சித்தம் வேண்டும். வாக்குச் சாதுர்யம் மிகுந்திருத்தல் நலம். விடாமுயற்சியும் வேண்டற்பாலது. சிறப்பாக ஏழை மக்களிடத்தே நாட்டம் செலுத்திவர வேண்டும்” - எனத் தேசத் தொண்டு புரிபவர்களுக்குரிய இலக்கணம் வகுத்து அளித்துள்ளார்.

               கதராடையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மகாத்மா காந்தியடிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். “நம்மவர் மகாத்மா காந்தியை உள்ளபடி மதிப்பவராயிருந்தால் கதராடையையே எப்பொழுதும் உடுத்த வேண்டும்” என்று 1927ஆம் ஆண்டு ‘சுதேச நாட்டியம்” இதழில் வேண்டுகோள் விடுத்தார்.

               ‘அழகம்மா கும்மி’ என்ற நூல் ஆசுகவி எழுதிய பிரச்சனைக்குரிய நூல்களுள் ஒன்று. “அந்த நூலில் உள்ள பாடல்களை யாரும் பாடக்கூடாது என அந்நாளில் தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை கண்டு பயந்து மக்கள் மௌனிகளாகி விடவில்லை. முன்னரைக் காட்டிலும் புதிய ஆர்வத்துடன் ஆசுகவியின் கும்மிப் பாடல்களைப் பாடினார்கள்.”

               தமிழர்கள் பலர் இன்னாள் போல் அந்நாளிலும் மேனாட்டு நாகரிகப் பித்தர்களாகவும், ஆங்கில தாசர்களாகவும் இருந்தனர். ஆசுகவி இத்தகைய மூடர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு மனம் நொந்து எழுதினார்.             “தங்கள் குழந்தைகளை அப்பு, ஆச்சி, அப்பா, அம்மான், அக்கா, அண்ணா என எம் பெற்றோர் எம்மை அழைக்கப் பழக்கினார்கள். ஆனால், இப்போதோ பப்பா, மம்மி, அங்கில், சிஸ்டர், பிரதர் எனப் பழக்கி வருகின்றனரே! என்னே இவர்களுடைய அடிமைப்புத்த்p? என தனது உள்ளக்குமுறுலை வெளிப்படுத்தியுள்ளார்.

               “கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே” என்று தமிழ்க் கவிதைத் துறையில் போலிப் புலவர்களின் பிரவேசங்கண்டு கொதிந்;தெழுந்து பாடினார் புதுமைப்பித்தன்.

               அவரைவிடக் கடுமையாக போலிப் புலவர்களை நோக்கி ஆசுகவி வீசிய எறிகுண்டு கவிதை இதோ,

               “முன்னே ஒரு கவிக்கு முன்னூறும் நானூறும்

பொன்னே கொடுப்பர் புலவர்க்கு - இந்நாளில்

வாசிக்க அறியாத வம்பர் வடிக்கின்றார்

காசுக்கஞ்சாறு கவி”

 ‘யாழ்ப்பாணத்துக்கு வேண்டிய அவசியங்கள்’ என்ற கட்டுரையினை ‘சுதேச நாட்டியம்’ இதழில் 1909 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். அக்கட்டுரையில், “கல்வி, தமிழ்க்கல்வி உச்சநிலைக்கு வரத்தக்க ஏதுக்களைச் செய்துவரல் வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

               ‘ஈழகேசரி’ இதழில் 1942ஆம் ஆண்டு ‘சிந்தையின் நிறைவே செல்வம்’ என்ற கட்டுரை ஆசுகவியின் உரைநடைத் திறனுக்குச் சான்றாகத் திகழ்கிறது.

               “பரந்து சுருண்ட மயிரும், கிழிந்த கரிந்த நடையும், நடந்து அயர்ந்த கால்களுமுடையவர்களாய், ஓடேந்தி, உணவற்றுத் திரியும் எத்தனையோ பேரை நாங்கள் காண்கிறோம். அவர்களுக்கு உண்பதற்கு உணவில்லை உடுப்பதற்கு உடையில்லை வசிப்பதற்கு மனையில்லை அவர்கள் வறுமைப் பிணியில் வருந்துபவர்களே” என்கிறார்.

               வானலாவிய மாடங்களும், ஏகமும் பரந்த வயல்களும் திக்கின் அந்தம் தெரியாத தோப்புகளும், கணக்கற்ற கறவைக் கூட்டங்களும், ஏவலாளர்களும் உடையவர்களான பலரை நாங்கள் காண்கிறோம்.

               அவர்களுக்கென்ன குறை? அலங்காரமான மாளிகை படுக்கைப் பஞ்சனை உடுக்கப் பீதாம்பரம்! அவர்கள் காலால் நடந்தேயறியார். அவர்களுடைய வயல்கள், தோட்டங்களின் வருமானங்கள் எவ்வளவு! அவர்கள் மகா செல்வர், - கோடி சீமான்கள்” என ஏழைகளின் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

               யாழ்ப்பாணத்தில் 1922ஆம் ஆண்டு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. உணவுப் பொருட்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு மறைமுகமாக விற்பனை செய்தனர். இதனால் ஏழை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். நிலச்சுவான்தாரர்கள் தங்களிடம் இருந்த நெல்லை பதுக்கிக் கொண்டார்கள். பசி, பட்டினி தலைவிரித்து ஆடியது. ஏழைமக்கள் உணவின்றி தவித்தனர். இந்தக் கொடுமைகளைக் கண்ட ஆசுகவியின் நெஞ்சம் கொதித்தது. தன் உணர்வுகளை,

               “அறுகுமுள் நெருஞ்சி கோரை கொட்டணையால்

                              அழிந்திடும் அலைதெரிந்தழியும்

               மறுகிடும் அறக்கொட்டி யான்புழு விழுந்து

                              மடிந்திடும் இரக்கம் இல்லாத

               குறுகிய மனத்தால் மக்களின் வயிற்றில்

கொடும்பசி நெருப்பினை மூட்டும்

               கறுமியுள் வயல் நெற்பயிர்;

வருடங்களில் திறை யெமக்கிலையே”

               என்று ஏழை மக்கள் வயிற்றில் பசி நெருப்பை மூட்டுகின்ற கருமிகளின் (நிலச்சுவான்தாரர்களின்) வயல்கள் எதிர்வரும் ஆண்டுகளில் விளைச்சல் கொட்டக்கூடாது எனச் சபிக்கிறார். அறுகு, முள்நெருஞ்சி, கோரை முதலிய களைகள் முளைத்துப் பயிரை அழிக்கும் அல்லது பயிரை வாடச்செய்து எரிக்கும் எனத் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

               ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ என்னும் நூல் யாழ்ப்பாணத்து வரலாற்றையும், யாழ்ப்பாணச் சாதிப் பின்னணிகளையும், யாழ்ப்பாணத்து ஊர்களின் பெயர்க் காரணங்களையும், யாழ்ப்பாணத்து மக்களின் பண்பாட்டையும் விளக்கும் ஒப்பற்ற நூலாகும்.

மாவைக் கந்தர் அஞ்சலி, மாவைச் சுப்பிரமணிய சுவாமி தோத்திரம், கதிர்காம சுவாமி பதிகம், கதிர்காம சுவாமி கீர்த்தனம். கதிரைமலைப் பேரின்பக் காதல் முதலிய பக்தி கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘ஆசுகவி’ கல்லடி க.வேலுப்பிள்ளை தனது எண்பத்து நான்காவது வயதில் 1944ஆம் ஆண்டு காலமானார்.

               ‘ஆசுகவி’ கல்லடி க.வேலுப்பிள்ளை இளமைக் காலத்தில் இருந்தே கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும், அநீதிகளுக்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுப்பவராகவும், கண்டனங்களைக் கவிதையாக்கிக் காட்டும் ஆசுகவியாகவும் விளங்கி என்றும் யாழ்ப்பாண மக்களிடேயெ நீங்கா இடம் பெற்றவராகத் திகழ்கின்றார்.           

- பி.தயாளன்

Pin It