புதுச்சேரி ஒரு அருள் உலகம் (புண்ணிய பூமி) என்று சொல்கிறார்களே அது உண்மையா? அது மட்டுமல்ல ஒரு முறையாவது புதுச்சேரிக்குச் சென்று வந்துவிட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்களே அதுவும் உண்மையா? என்ற வினாவை ஒரு நேர்காணலின்போது எழுத்துப் போராளி பிரபஞ்சனிடம் தென்றல் இணையத்தள இதழ் தொடுத்தது. அதற்குப் பிரபஞ்சன், ஆம், புதுச்சேரி புகழ்மிக்க ஊர்; சொன்னால் புரியாது; ஒருமுறை வந்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று விடையளித்தார்.

Kavi Ve Naraபுதுச்சேரி மண்ணைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கு வரத்தான் வேண்டும். அப்படி வந்த பாரதியார், அரவிந்தர், வ.வே.சு அய்யர், அன்னை மீராபாய் போன்றோர்கள் புரிந்துகொண்டார்கள். இந்த மண்ணிலேயே வாழ விரும்பினார்கள்.

பாஞ்சாலங்குறிச்சி மண்ணைத் தொட்டவுடன் "வீரம்" பிறக்கும் என்பார்கள். ஏன், எந்தப் பாளையத்துக்காரர்களின் மண்ணை மிதித்தாலும் வீரம் பிறக்கத்தான்செய்யும். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள் முதலானோர் இக்கூற்றுக்குச் சான்றாகக் கட்டியங்கூறுவதை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நாம் அறியமுடியும்.

ஆனால், புதுச்சேரி மண்ணைத் தொட வேண்டாம் வள்ளுவர் சொல்வதைப் போல் "நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும்; மண்ணில் கால்பதித்தால் அருள் சுரக்கும்".

ஆம், இங்கே பிழைக்கப் பொருள்தேடி வந்தவர்கள் அருள்கோடிக் கிடைக்கப் பெற்று இம்மண்ணை விட்டு அகலாது வாழ்ந்தார்கள் என்று வரலாறு கூறும்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்று எங்கள் வாழ்க்கையும், வாழ்க்கை வளங்களும் தமிழ் என்று பாடியவர்;
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று தாய்மொழித் தமிழை உயிராகப் போற்றியவர்;
நைந்தாயெ னில்நைந்து போகும்என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே

என்று தமிழ் வேறில்லை; நான் வேறில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று வாழ்ந்தவர் பாவேந்தர்.

அந்தப் புரட்சிக்குயில் பிறந்த ஊர் புதுச்சேரி. ஊர்க்குருவியாகச் சுப்பிரமணிய துதியமுது, கதர் இராட்டினப் பாட்டு எனப் பாடிக் கொண்டிருந்த பாவேந்தரை,

எங்கெங்குக் காணினும் சக்தியடா!
ஏழுகடல் அவள்வண்ணமடா
தங்கும் வெளியினில் கோடி அண்டம் - அவள்
கைப்பந்தென ஓடுமடா!

எனப் பாடவைத்து, ஊர்க்குருவியைப் போர்க்கருவியாக்கி, புரட்சிக் குயிலாய் திறன்மாற்றிய அறப்பாவலர் பாரதி வாழ்ந்த ஊர்.

இந்தப் பாரதியும் பாவேந்தரும் போட்டுச் சென்ற பாட்டுப் பாதையில் பயணித்தவர்தான் கவி.வெ. நாரா. ஏனோ தெரியவில்லை பாவேந்தர் பாட்டுத் தலைமுறையினரைத் தொகுத்தவர்கள், அவ்வரிசையில் கவி. நாராவைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். அரசியல் எழுத்தாளர்களையும் விட்டுவிடாது போலும்.

"ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி"

என்று பாடிய பாரதியைப் போன்று,

வருகுது பார் புரட்சி!
வானம் வரைக்கும் படர்ந்து திரிந்து
கானம் எரிக்கும் நெருப்பாய் எரிந்து
வருகுது பார் புரட்சி!
என்று பாடியவர்தான் கவி. நாரா.
உமையொன்று வேண்டுகிறேன்
உயர்தமிழை உயிர்எனக் கொள்வீர்
எனப் பாடிய பாவேந்தரைப் போல்,
தமிழுக்குத் தலைகொடுக்கத் தயங்காத
தன்மானம் உடையோரே தமிழ்தரங் கெட்டுச் சாய்கிறதே!
சொரணையை எங்கே போட்டுப் புதைத்து விட்டீர்!

என்று பாடியவர்தான் கவி. நாரா.

இப்படிப் பாடிய கவி.நாரா எப்படி பாரதி-பாவேந்தர் பாட்டுத் தலைமுறையினர் வரிசையில் சேர்க்காமல் விடப்பட்டார்.?

தமிழர்மேல் பகைவர் எறியும் பீரங்கிக் குண்டு
தமிழர்சமை யலைறையில் முள்ளங்கித் தண்டு!

என்று பாடிய பாவேந்தரின் பாடற்கொள்கைக்கு உயிர்கொடுத்த பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்டத் தளபதி, பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்டத் தந்தை, பிரெஞ்சிந்தியாவின் மண்டேலா என்றெல்லாம் போற்றப்படும் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் போர்ப்படைத் தளபதிகளில் மூன்று நாராயணசாமிகள் இருந்தனர்.

ஒருவர் கலிதீர்த்தாள்குப்பம் நாராயணசாமி. பிசெஞ்சிந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, திருபுவனைக் காவல்நிலையத்தைத் துமிக்கி போன்ற போர்க்கருவிகளுடன் படையினருடன் சென்று கைப்பற்றி அந்தப் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக அறிவித்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமை அமைச்சராக (பிரதமராக) அமர்த்தப்பட்டவர்தான் கலிதீர்த்தாள்குப்பம் நாராயணசாமி.

இரண்டாமவர் கருவடிக்குப்பம் நாராயணசாமி. இவர் உழவர்கரையின் நகரமன்றத் தலைவராகப் பொறுப்பாற்றியவர்.

மூன்றாமவர்தான் எல்லப்பிள்ளைச்சாவடி நாராயணசாமி. தொழிலாளர் போராட்டங்களில் தோழர் சீவாவைப்போல் பாட்டுப்பாடி எழுச்சியை ஏற்படுத்தியவர். உடுமலை நாராயணகவியைப் போல, தஞ்சை இராமையாதாசைப் போல மக்களுக்கான கலை-எழுச்சிப் பாடல்களைப் புனையக்கூடியவர்.

இந்த மூன்று போராளிகளுக்குள் அடையாளத்தைக் காட்டத்தான் நாராயணசாமியாக இருந்தவரை கவி. நாரா என்று அழைத்தனர்.

கவி.நாரா அவர்கள் நான்கு நூல்கள் இயற்றியுள்ளார். ஆணையேற்போம், திறந்தவெளி, வியர்வைத் துளிகள், எழுச்சிக் கவிதைகள் ஆகியவைதான் இவர் இயற்றிய நூல்கள். இவற்றுள் ஆணையேற்போம் அன்றைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புரட்சி நூல் என்பது குறிக்கத்தக்கது. வியர்வைத் துளிகள் என்னும் நூல் உருசிய நாட்டின் "நேரு" விருதினைப் பெற்றது என்ற புகழுக்குரியது.

இத்தகு சிறப்பு மிக்க போர்க்குணம் மிக்க பாட்டாளிப் பாவலர் கவி. நாராவின் பாடல்களில் தனித்தமிழ் குறித்துச் சிலவற்றை இக்கட்டுரை எடுத்துரைக்க விழைகிறது.

அதற்குமுன்,

காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே
பசையற்றுப் போனோமடா என்தோழனே
எனப் பாட்டாளிகளுக்காகப் பாடியவர்; பூதப்பாண்டியில் பிறந்து,
கோடிக்கால் பூதமடா - தொழிலாளி
கோபத்தின் ரூபமடா

எனப் பாடித் தொழிலாளர்களின் பேருருவைக் காட்டியவர் தோழர் ப.ஜீவானந்தம்.

மறைமலை அடிகள் தலைமையில் "தனித்தமிழ் இயக்கம்" வீறுகொண்டு எழுந்த காலம். அப்போதுதான் வேதாச்சலம் மறைமலை அடிகள் ஆனார்; சூரிய நாராயண சாசுதிரி பரிதிமாற் கலைஞர் ஆனார். இப்படிப் பலரும் தங்கள் பெயர்களைத் தனித்தமிழாக்கிக் கொண்டு தனித்தமிழ் இயக்கத்துக்கு எழுச்சி தந்த காலம் அது.

தோழர் சீவாவும் தம்பெயரை "உயிர் இன்பன்" என மாற்றிக் கொண்டார். பின்னர் ஒருமுறை, மறைமலை அடிகளைச் சந்திக்க அவர்தம் இல்லுக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை முகம்சுளிக்க வைத்தது. ஆம், அங்கே மறைமலை அடிகளும் அவர் மகளும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தனராம். கதவைத் தட்டிய இவரையும், "யாரு போஸ்ட் மேனா?" என்று உள்ளிருந்துகொண்டே கேட்டதும்தான் தோழர் சீவாவை முகம் சுளிக்க வைத்தது. "ஊருக்குத்தான் உபதேசம்" என்று உணர்ந்துகொண்ட உயிர்இன்பன் மீண்டும் தோழர் சீவாவாக அங்கிருந்து திரும்பினார் என்பது வரலாறு சுட்டும் செய்தி.

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்துகாட்டிச் சென்ற பாரதியைப் போன்றவர்கள் பொதுவுடைமையாளர்கள். அதனால்தான் பொதுவுடைமையாளர்கள் பெரும்பாலும் தனித்தமிழைப் போற்றுவதுமில்லை; தூற்றுவதுமில்லை போலும்.

எப்படித் தமிழ்நாட்டுத் தொழிலாளர் போராட்டங்களில்-மாநாடுகளில் தோழர் சீவா எழுச்சிமிக்க பாடல்களைப் பாடி வீறுணர்வைத் தூண்டுவாரோ அப்படியே புதுச்சேரித் தொழிலாளர் போராட்டங்களில்-மாநாடுகளில் கவி. நாராவும் உணர்ச்சி மிகுந்த பாடல்களைப் பாடி எழுச்சியை ஏற்படுத்துவார்.

தமிழகத்துக்குச் சீவா என்றால், புதுச்சேரிக்கு நாரா. தோழர் சீவாவைப் போலவே கவி.நாராவும் தம் படைப்புகளைத் தனித்தமிழ் பாடல்கள் எனத் தனியாக ஆக்கிக் கொள்ளவில்லை. ஆனால், இயற்கையாக அவர்தம் பாடல்களில் தனித்தமிழ்ச்சொற்கள் கோலோச்சுகின்றன.

அவர் 1988இல் வெளியிட்ட "திறந்தவெளி" எனும் "பா" நூலில் மொத்தம் அறுபது பாடல்கள் உள்ளன. அவற்றுள் 65% விழுக்காடு பாடல்கள் அதாவது, 40 பாடல்களின் தலைப்புகள் தனித்தமிழில் அமைந்துள்ளன. அதுபோல, 2008ஆம் ஆண்டு வெளியிட்ட வியர்வைத் துளிகள் நூலில் 112 பாக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 94 பாடல்களின் தலைப்புகள் அதாவது 81% விழுக்காட்டுப் பாடல்கள் தனித்தமிழில் அமைந்துள்ளன. இவை வலிந்து தனித்தமிழில்தான் அமைய வேண்டும் என்று அமைத்ததாகத் தெரியவில்லை. இயல்பாக அமைந்ததாகவே இருக்கின்றன. சான்றுக்குச் சில:

பெண்ணடிமைக்கு வழிகாட்டி, கன்னிப் பூக்கள், சிவப்பு விளக்கின் குமுறல், முடிசூடா மன்னர்கள், இளவரசர்களுக்கு எப்போது பட்டம், வறுமைக்கோட்டின் வாய்பாடல், தமிழ் காப்போம், ஒரு சொல் கேளீர், எழுத்தறிவு இயக்கம், உழைப்பே தெய்வம், மூச்சின் முழக்கம், வியர்வைத் துளிகள், கற்புக் கனலி, மெல்லிருள் பந்தலில், ஓர் நாள் விடியலாம், இயற்கைக் கூத்து, மாஞ்சோலை போன்றவை தனித்தமிழ் பெயரில் அமைந்த பாக்கள்.

மேலும், அவர்தம் நூல்கள் ஆணையேற்போம், திறந்தவெளி, வியர்வைத் துளிகள், எழுச்சிக் கவிதைகள் ஆகிய நான்கும் தனித்தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளன. இவற்றுள் "கவிதை" தமிழ் இல்லை எனச் சொல்வாரும் உளர்.

பாரதி - பாவேந்தர் - சீவா - நாரா முதலானோர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1960கள் வரை தனித்தமிழ் எழுத்து என்பது படைப்புகளில் மிகவும் குறைவாகவே இருந்தது. இதற்குச் சான்றாக பாரதி மற்றும் பாவேந்தரின் படைப்புகளைக் காட்டலாம். எனவே, கவி. நாரா அவர்களின் பாக்களும் பெரும்பாலும் அவர் எழுத்துக் காலத்திய நடையிலே அமைந்துள்ளன. மிகச் சில பாடல்களே தனித்தமிழில் அமைந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு பாடலிலும் 80 முதல் 90 விழுக்காடு தனித்தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளன. எஞ்சியுள்ள சொற்கள் இப்போதும் எழுத்தாளர்களால், பாவலர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இவ்விடத்துச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

கவி. நாராவின் தனித்தமிழ்ப் பாக்கள் சில:

பல்தேய்ப்பின் வெண்மை பளிச்சிடும், காமாலை
கொல்நோய் தன்னைக் குணப்படுத்தும் - நல்ல
கரிசலாங்கண்ணி கழனி விளையும்
சரியான மூலிகை தான்!

இப்பாடல் மஞ்சள் கரிலாங்கண்ணி என்ற தலைப்பில் அமைந்துள்ள வெண்பாப் பாடலாகும். இந்தப் பாடல் கவி. நாரா ஒரு தேர்ந்த மரபுப் பாவலர் என்பதையும், தேவையின்றி வலிந்து பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துபவர் அல்லர் என்பதையும் உணர்த்துவதை அறியலாம்.

அரைக்கீரை நற்குணத்தை ஆயுங்கால் கேளீர்
முறைக்கடையல் செய்துண்ண வெள்ளி மிகநன்று
கண்ணில் ஒளியேற்றும் காங்கை தணித்துவிடும்
திண்ணமாய் என்றே தெளி!
முலைப்பால் சுரப்பாக்கும், விந்துவைச் சேர்க்கும்
குலைவாக்கி வாயுவைக் கீழிறக்கும் உண்மை
முருங்கை சனியன்று வேண்டி புசிப்பர்
பெருபலம் பெற்றிடுவர் பேசு!
காரம், புளியின்றிக் காணும் மணித்தக்காளி
கீரை கடைந்துசெவ் வாய்க்கிழமை உண்டால்
மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்றுப் புண்போகும்;
கலகலப் பாகுமுடல் காண்!

போன்ற பாடல்கள் மருத்துவம் பேசும் மாந்த உடல்நலம் பேணும் தனித்தமிழ் வெண்பாக்கள்.

பெண்ணுக்கு ஞானமுண்டு பேசுந் திறனுண்டு
விண்ணைப் பிடிக்கின்ற வேகமுண்டே - மண்ணில்
இழித்துரைக்கும் புல்லர் இழிபிறப்பாம் பேடி
சுழிஎய்தி வாழ்குவர் செப்பு!

இப்பாடல் பேடி எனும் தலைப்பில், பாரதியின் கூற்றாகக் கவி. நாரா அவர்கள் எழுதிய தனித்தமிழ்ப் பாடல்.

சில சொற்கள் மட்டும் வேற்றுமொழிச் சொல்லாக அமைந்த பாடல்கள்:

அன்னை மொழிகற்க அகத்தில் நினையாமல்
அன்னியத்தைக் கற்கும் அகங்காரர் - பின்னால்
வரங்கிடந்து பார்க்கினும் வாய்க்கும் மறுபிறவி
குரங்கெனச் சொன்னார் குறித்து.

குரங்கு எனும் தலைப்பில் அமைந்த இப்பாடலில் "அன்னியத்தை, அகங்காரர்" ஆகிய சொற்கள் வேற்றுமொழிச் சொற்களாக அமைந்துள்ளன. அன்னியர் என்பதை அயலார் என்றும், அகங்காரர் என்பதை செருக்கர் என்றும் தனித்தமிழ் வழங்குகிறது.

தேசியச் சுதந்திரத் திருநாள் - நம்
சென்னி நிமிர்ந்த ஒருநாள்
மாசில்லாத தியாகச் சீலரின்
மாண்பு மணக்கும் பெருநாள்
அடல்மிகு புவியென எழுந்தார்
அன்னியர் மருவே துணிந்தார்
உடல்பொருள் உயிரை மறந்தார்
உதார குணத்தால் உரிமை அடைந்தோம்;

செம்புனல் நதியென விடுத்தார்
தேசியப் பயிர்மிக வளர்த்தார்
அம்புவி புகழ்ந்திட உழைத்தார்
ஆண்மைகள் விளைத்த அமுதை
பாரதத் தாயின் முடியினிலே - அவர்
பதித்த தியாக மரகதமே
சீரொளி கொடுத்திடச் சேர்ந்திடுவோம்!
தேசம் செழிக்கச் சூளுரை எடுப்போம்!

சுதந்திரத் திருநாள் என்னும் தலைப்பில் அமைந்த இப்பாடல், சுதந்திரம், தியாகம், புவி, அன்னியர், உதாரகுணம், தேசம் ஆகிய சொற்கள் வேற்றுமொழிச் சொற்களாக உள்ளன. ஆனால், இவற்றில் புவி, சுதந்திரம், தேசம் ஆகிய சொற்கள் இன்றுங்கூட எழுத்தாளர்கள் மற்றும் பாவலர்களால் தமிழ்ச் சொற்களாகவே ஆளப்படுகின்றன. இவற்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் 90 விழுக்காட்டுச் சொற்கள் தனித்தமிழ்ச் சொற்களாக உள்ளது தெரியும்.

எல்லா வசதிகளும்
ஏற்றவர் நாவில்
கூச்சத்திற்குச் சிறிதும்
கூனல் கிடையாது
சீழ்க்கையடித்து
"வாழ்க்கை வாழ்வதற்கே"
சித்தாந்த உரைகள்
சிறப்புடன் நிகழ்த்துவர்

அரிஸ்டாடில்
பேரறிஞன்
"வாழ்க்கையில்
உரிமை இணைந்த
உன்னதம் இருந்தால்
சீர்மை" என்று
செப்பிப் போனான்

சமுதாய மக்கள்
உரிமையற்ற
வாழ்க்கைதனை
ஒப்பாமல்
அன்றாடம்
ஆங்கரித்தெழுத்து
உரிமைகளுக்கான
போராட்டங்களை
வெடிக்கச் செய்கின்றனர்
அவற்றால்
புதுப்புதுப் பாதைகள்
திறக்கப்படுகின்றன
நியமன நியதிகாள
உருவகப்படுகின்றன
புன்மைப் புதையில்
சிக்கிய வாழ்க்கை
இணையிலா எழுச்சியால்
உரிமை பெற்று
உயர்ந்து நிற்கிறது.

உரிமைப்போர் என்ற தனித்தமிழ்த் தலைப்பில் அமைந்த இப்பாடல் திறந்தவெளி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில், வசதி, சித்தாந்தம், உன்னதம், சமுதாயம், நியமனம், நியதி ஆகிய சொற்கள் அயற்சொற்களாக உள்ளன. இச்சொற்கள் அனைத்தும் இன்றும் எழுத்தாளர்களால், பாவலர்களால் தமிழ்ச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வசதியை ஏந்து என்றும், சித்தாந்தம் என்பதைக் கொள்கை என்றும், உன்னதம் என்பதை உயர்வு என்றும் சமுதாயம் என்பதைக் குமுகாயம் என்றும் நியமனம் என்பதை அமர்த்தம் என்றும் என்றும் நியதி என்பதை காலக்கோலம் என்றும் தனித்தமிழ் குறிப்பிடுகிறது.

கவி.வெ.நாரா அவர்கள் இயல்பில் ஒரு மரபுப் பாவலராக இருப்பதால், அவர்தம் பாக்கள் அனைத்திலும் இயல்பாகவே தனித்தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

கவி.வெ.நாரா அவர்களின் பாடல்களில் சில அயற்சொற்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை இன்றைக்கும் பாவலர்களால் தமிழ்ச் சொற்களாகப் பயன்படுத்தும் சொற்களாவே இருக்கின்றன.

கவி.வெ.நாரா அவர்கள் வலிந்து தனித்தமிழ்ச் சொற்களையோ அல்லது அயற்சொற்களையோ அவர்தம் பாக்களில் பயன்படுத்தவில்லை என்பதை அவர்தம் பாக்கள் வெளிப்படுத்துகின்றன.

கவி.வெ.நாரா அவர்கள் ஒரு பொதுவுடைமைப் பாவலராக, பாட்டாளிப் பாவலராகப் போற்றப்படுகின்ற போதும், அவர் தம்மை ஒரு மரபுப் பாவலராக, தனித்தமிழ்ப் பாவலராக நிலைநிறுத்த விரும்பினார் என்பதும் அவர்தம் பாக்கள்வழி பெறப்படுகின்றன.

நூற்றாண்டு விழக் காணும் கவி.வெ.நாரா அவர்கள் ஒரு சிறந்த மாந்தநேயமிக்க, தூய தமிழ்ப் பாவலராகத் திகழ்கிறார். அவர்தம் புகழ் உலகெங்கும் ஓங்கவேண்டும். தமிழ் வாழ்க! கவி.நாரா. புகழ் ஓங்குக!

- புதுவை யுகபாரதி