நகரமயமாதல்:

கி.மு. 800வாக்கில் ஆரிய இனக்குழுக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கைப் பகுதியில் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கி வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில்தான் தொழில் பிரிவுகளும் வகுப்புகளும் உருவாகத் தொடங்குகின்றன. அதன்பின் கி.மு. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 சனபதங்கள் எனப்படும் இனக்குழு அரசுகள் உருவாகின்றன. வட இந்தியாவில் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் கூட இரு பெரு நகரங்களுக்கு மேல் உருவாக சாத்தியமில்லை எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1)160. வட இந்தியாவில் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நகரமயம் தொடங்கியது என்பதை, “வைசாலி, உச்சயினி, சிராசுவதி, இராஜ்காட், இராஜ்கார், இராசகிருகம் போன்ற இடங்களில் தோண்டிய அகழாய்வானது கி.மு. முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் (கி.மு.500) அவை நகரமாகிக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(Romila Thaper)(2). மேலும் ‘அவர் தொடக்க கால நகரமயமாதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் சில இடங்களில் கண்களில் படுகிறது. மற்றைய இடங்களில் பின்னர் தோன்றின’ எனக் கூறுகிறார்(3). தட்சசீலம்தான் இந்தோ ஆரியர்களின் முதல் குடியிருப்பு. ஆனால் “கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது” எனக் கூறுகிறார் கோசாம்பி(4).

A L Basham bookஏ.எல். பாசம் (A.L.Basham), “கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்திய வரலாறு பழங்கதைகள், ஐயப்பாட்டிற்குரிய மரபுகள் ஆகியவற்றினின்றும் வெளியேறுகிறது…… இந்தியாவின் உண்மை வரலாறு தோன்றுகின்ற காலமானது அறிவுத்துறையிலும், ஆன்மீகத் துறையிலும் பெருங்கிளர்ச்சி தோன்றியவொரு காலமாகவுள்ளது” எனக் குறிப்பிடுகிறார்(5). ஆகவே அவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த இந்திய வரலாறு என்பது பழங்கதைகளையும் ஐயப்பாட்டிற்குரிய மரபுகளையும் கொண்டதாக இருந்தது எனவும் உண்மை வரலாறு என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது எனவும் கருதுகிறார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி அகழாய்வின் 4ஆம் கட்ட அறிக்கை கூட கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் அங்கு நகரமயம் தொடங்கியது எனக் கூறியுள்ளது(6).

ஆகவே இத்தரவுகள் வட இந்திய நாகரிகம் என்பது கி.மு. 600 க்குப் பின்னர்தான் உருவாகிறது என்பதும் அதற்கு முன் அங்கு அநாகரிக காலம்தான் இருந்தது என்பதும் உறுதியாகிறது. அநாகரிக காலத்தின் இறுதியில் சொத்துடமையும், தொழில் பிரிவுகளும் வருணம் என்ற வகுப்பும் உருவாகத் தொடங்கியிருந்தன. அதன்பின் வந்த நகரமயம் என்ற நாகரிக காலத்தில்தான் தொழில் பிரிவும், வகுப்பும் உருவாகி அவை நிலைபெற்றனவாக ஆயின. இக்காலகட்டத்தில் கண அமைப்பும், அகமணமுறையும் இல்லாது போய் நவீன ஒருதார மணக்குடும்பங்கள் உருவாகியிருந்தன. அந்த நவீன ஒருதார மணக்குடும்பங்களில் அகமண முறை இருக்கவில்லை. ஆனால் கற்பு புனிதமாக ஆகியிருந்தது.

புதிய வகுப்பாக புரோகிதர்கள்:

இரிக் வேத காலத்தில் புரோகிதம் என்பது தனிப்பட்ட சாதியின்(வகுப்பின்) சிறப்புத்தொழிலாக உயர்வு பெறவில்லை எனவும் புரோகிதப்பணியை ஏகபோகமாகக் கொண்டபிராமண சாதி(வகுப்பு) அப்போது தோன்றவில்லை எனவும் கூறுகிறார் டி.டி. கோசாம்பி(7). அன்று எந்த தொழில் பிரிவும் இல்லை என்பதால் புரோகிதத் தொழிலும் அதில் தேர்ச்சி பெற்ற பலராலும் செய்யப்பட்டு வந்தது என்பதைத்தான் கோசாம்பியின் கூற்று உறுதி செய்கிறது. இந்த நிலை கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை தொடருகிறது எனலாம். ஆனால் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் வகுப்புகளும் தொழில் பிரிவுகளும் உருவாகி அவை ஓரளவு நிலைபெற்ற ஒன்றாக ஆகியிருந்தன. ஆதலால் புரோகிதத் தொழில் செய்பவர்கள் ஒரு தனி வகுப்பாக உருவாகியிருந்தனர்.

இந்தத் தனி வகுப்பு குறித்து, ‘ஆரியர்களுக்கும், பூர்வகுடி மக்களுக்கும் நிகழ்ந்த இனக்கலப்பால் வளர்ச்சியுற்ற நிபுணர்களின் ஒரு புதிய வர்க்கம் முடிவில் எல்லா ஆரியச் சடங்குகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டாடியது. அதுவே பிராமணச் சாதி (வகுப்பு). இன்று நம்மிடம் எஞ்சியுள்ள பழமையான புனித நூல்களை இந்தச் சாதியே (வகுப்பே) பாதுகாத்து வைத்துள்ளது. இந்தச் சாதியே அதைத்திருத்தியும் எழுதியது. இதனால் இயல்பாகவே தங்களுடைய முக்கியத்துவத்தை மிகைப்பட எழுதிக்கொண்டனர்’ எனக் கூறுகிறார் கோசாம்பி(8). மேலும், வசிட்டர், அகத்தியர் ஆகியோர் ஆரியர்களுக்கு முற்பட்ட தாய் தெய்வத்தை வணங்கிய மக்களின் மனிதவாரிசுகள் எனவும் அதனால்தான் அவர்களுக்குத் தந்தை கிடையாது எனவும் ஏழு பூர்வீக பிராமண கோத்திரங்களின் மூதாதையர்களான ஏழு பூர்வீக இரிசிகளின் பெயர்கள், பிராமணியப் புனித நூல்கள் தரும் பட்டியல்களுடன் ஒத்துப்போகவில்லை எனவும் இப்பல்வேறு கோத்திரத் தொகுதிகளில் எட்டாவதாக உள்ள விசுவாமித்திரர்தான் உண்மையான ஆரியர் எனவும் அவர் கூறுகிறார்(9).

கீழ் வகுப்பாகப் பிராமணர்கள்:

இந்த புரோகிதத் தொழில் என்பது ஒரு தனி வகுப்பாக உருவாகிய போது, அது ஒரு மதிப்புக்குரிய தொழிலாக, வகுப்பாக அன்று அது இருக்கவில்லை. இந்தப் புரோகிதத் தொழிலைச் செய்து வந்த பிராமண வகுப்பு குறித்து, “மன்னர்கள் முன்னிலையிலும் சான்றோர் அவையிலும் பிராமணர்களைச் சுட்டுவதற்கு தாழ்ந்த குலத்தோன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது…….. சாதி (வகுப்பு)யின் அடிப்படையிலும், புரோகிதன் என்ற அடிப்படையிலும், சான்றோர் அவையில் பிராமணர்கள் கைகட்டி நின்றதோடு, கீழ்ச்சாதி (வகுப்பு)யினராகவே நடத்தப்பட்டனர்” என இரைசு டேவிட்சு (Rhys Davids) கூறுவதாகக் குறிப்பிடுகிறார் பிரேம்நாத் பசாசு(10).

அன்று சாதி இருக்கவில்லை, தொழில் அடிப்படையிலான வகுப்புதான் இருந்தது. எனவே அன்று புரோகிதத் தொழிலைச் செய்து வந்த பிராமணர்கள் கீழ் வகுப்பாகவே கருதப்பட்டனர். வெண்டி டோனிகர், ‘பிற்கால இந்து இலக்கியத்தில் பிராமணர்களின் உயர்வு என்பது மிகவும் விவாதத்திற்குரிய விசயமாகியது. ஆகவே அது ஒரு அதீதக்கற்பனை தவிர வேறொன்றும் இல்லை என்றே கொள்ளலாம்……..  பௌத்த இலக்கியங்கள் அரசர்களை அதிஉயர் இடத்திலும், பிராமணர்களை இரண்டாம் இடத்திலும் வைக்கின்றன. இந்துப் பனுவல்களின் பல பாத்திரங்களும் இதை ஆமோதிக்கின்றன’ எனக் கூறுகிறார்(11). பிராமணர்கள் அரசர்களுக்கு மேல் இருந்தார்கள் என்பது ஒரு அதீதக் கற்பனை என்ற கூற்று கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்துக்கு மிகவும் பொருந்தும். அக்கால அரசர்கள் பிராமணர்களைவிட அதிஉயர்நிலையில் இருந்தனர் என்ற பௌத்த இலக்கியங்களின் கருத்து உண்மை நிலைக்கு நெருங்கியுள்ளது எனலாம். கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பிராமணர்கள் முதல் இடத்திற்கு உரியவர்கள் என்ற கருத்து வைதீகப் பிராமணர்களால் வேத இலக்கியங்களில் திட்டமிட்டு புகுத்தப்பட்டது என்பதுதான் உண்மை.

புத்தரும் அம்பத்தா என்ற பிராமணனும்:

புத்தர் – அம்பத்தா ஆகியவர் குறித்து அம்பேத்கர் கூறுபவை இவை. புத்தர்பிரான் ஒருமுறை தனது 500 சீடர்களுடன் கோசல நாட்டில் உள்ள இக்கனாங்கலா என்ற பிராமண கிராமத்தை அடைந்து இக்கனாங்கலா வனத்தில் தங்கினார். அதன் அருகில் போக்கர்சாதி என்ற பிராமணர் கோசல மன்னர் கொடுத்த உக்கத்தா என்ற ஊரில் சகல வசதிகளோடு வாழ்ந்து வந்தார். அவர் புத்தர்பிரான் குறித்துக் கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பி தனது பிராமணச் சீடன் அம்பத்தா என்பவனை புத்தர் குறித்து அறிந்துவர அனுப்பி வைத்தார். அம்பத்தா புத்தரை பார்த்தவுடன் அமராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு புத்தரிடம் பேசலானான். பேசும்பொழுது மூன்று முறைக்கு மேல் புத்தருடைய குலமான சாக்கிய குலத்தவர்கள் கீழ்நிலையில் உள்ளவர்கள் எனக் குறிப்பிட்டான். அதனால் புத்தர் அவனது குலவழியை அறிந்து அவனிடம் உனது தாய் வழியிலும், தந்தை வழியிலும் முன்சென்று பார்க்கும்பொழுது சாக்கியர்கள் உங்களுடைய எசமானர்களாக இருந்தார்கள் என்றும், நீ அவர்களுடைய அடிமைப்பெண்களில் ஒருத்தியின் வழியில் பிறந்தவன் என்றும், ஆனால் சாக்கியர்கள் ஒக்ககா மன்னர் வழியில் வந்தவர்கள் என்றும் கூறினார்.

அவர் மேலும், ஒக்ககா மன்னரிடம் திசா என்ற அடிமைப்பெண் இருந்தாள், அவளுக்கு கருப்பான ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் காலத்தில் பிசாசை கருப்பானவன்(கன்கே) என்று குறிப்பிடுவார்கள். குழந்தை கருப்பாக இருந்ததால் பிசாசு என்ற பொருளில் கன்கா என்ற பெயர் அக்குழந்தைக்கு வைக்கப்பட்டது. அந்தப் பெயரில் இருந்துதான் கன்காயனா என்ற அம்பத்தாவின் மூதாதையரின் பெயர் வந்தது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் அந்தக் குழந்தை வளர்ந்த பின் தக்காணத்திற்குச் (தமிழகத்துக்கு) சென்று மந்திரங்கள் கற்றுக்கொண்டு பெரிய முனிவராக ஆகி, திரும்பி வந்து ஒக்ககா மன்னரிடம் தனது திறமையைக் காட்டி மன்னரைப் பயத்தில் ஆழ்த்தி அவரது மகளை மணந்து கொண்டு மிகப்பெரிய கன்க முனிவராக ஆனார் என்ற அம்பத்தாவின் வம்ச வரலாற்றைச் சொல்லி அம்பத்தாவும் அதனை ஏற்குமாறு செய்தார். இக்கதையின் மூலம் அடிமைப் பெண்களுக்கு பிறந்தவர்கள் கூட தனது அறிவு, திறமை, ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் பெரிய முனிவராக, பிராமணராக அன்று ஆனார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே பிராமணர் ஆவது என்பது அன்று பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை என்பதை இக்கதை தெளிவுபடுத்துகிறது(12).

பிராமணர்களைவிட சத்திரியர்கள் அதி உயர்குலத்தவர்கள்:

அம்பத்தாவிடம் புத்தர், சத்திரியர்கள் பிராமணர்களைவிட உயர்குலத்தவர்கள் என்பதை கேள்வி பதில்கள் மூலம் உறுதி செய்தார்.

1.ஒரு சத்திரிய இளைஞனுக்கு ஒரு பிராமணப் பெண்ணுடன் உறவு ஏற்பட்டு, அவன் மூலம் அப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையை பிராமணர்கள் எல்லாவிதத்திலும் ஏற்றுக் கொண்டு மரியாதை செய்வார்கள். ஆனால் அக்குழந்தையை சத்திரியர்கள் தங்களுக்குரிய அபிடேகச் சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

2.ஒரு பிராமண இளைஞனுக்கு ஒரு சத்திரியப் பெண்ணுடன் உறவு ஏற்பட்டு, அவன் மூலம் அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை பிராமணர்கள் எல்லாவிதத்திலும் ஏற்றுக்கொண்டு மரியாதை செய்வார்கள். ஆனால் அக்குழந்தையை சத்திரியர்கள் தங்களுக்குரிய அபிடேகச் சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

3.பிராமணன் ஒருவன் குற்றம் செய்ததற்காக அவனுடைய தலையை மழித்து தலைமேல் சாம்பலைப்போட்டு நாட்டைவிட்டு வெளியேற்றினார்கள் எனில் அவனுக்கு பிராமணர்கள் எல்லா விதத்திலும் அங்கீகாரம் தர மாட்டார்கள்.

4.ஆனால், சத்திரியன் ஒருவன் குற்றம் செய்ததற்காக அவனுடைய தலையை மழித்து தலைமேல் சாம்பலைப்போட்டு சத்திரியர்கள் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார்கள் என்றாலும் அந்த சத்திரியனுக்கு பிராமணர்கள் எல்லா விதத்திலும் அங்கீகாரம் வழங்குவார்கள்.

ஆகவே சத்திரியன் ஒருவன் மிகவும் நிலை தாழ்த்தப்பட்டு, வெளியேற்றப்பட்டவன் என்ற போதிலும், அவனை பிராமணர்கள் உயர்ந்தவர்கள் எனக் கருதுவதால், மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள சத்திரியன் கூட பிராமணர்களைவிட உயர்ந்தவன் ஆகிறான் என புத்தர் கூறுவதை அம்பத்தா கேள்வி பதில் மூலம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறான். ஆகவே சத்திரியர்களைவிட மிக மிகத் தாழ்ந்த நிலையில் அன்று பிராமணர்கள் இருந்தார்கள் எனக் கூறுகிறார் புத்தர். அன்று வம்ச வழியில் அதிக நம்பிக்கை வைப்பவர்களாக சத்திரியர்கள் இருந்தார்கள் எனினும் ஞானத்திலும், அறநெறி ஒழுக்கத்திலும் குறையற்றவனே தேவர்களிலும், மனிதர்களிலும் மிகச் சிறந்தவன் என சனம்-குமார என்ற பிராமணக்கடவுள் கூறுவதுதான் சரியானது எனக் கூறுகிறார் புத்தர்(13).

அம்பத்தா என்ற பிராமணனுக்கும் புத்தருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கொண்டு பார்க்கும்பொழுது பிராமண வகுப்பு அன்று பிறப்பின் அடிப்படையில் இருக்கவில்லை என்பதோடு சத்திரிய வகுப்பைவிட மிக மிகக் கீழான நிலையில்தான் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. சத்திரியர்களால் கேவலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஒரு சத்திரியனைக் கூட பிராமணர்கள் ஒரு உயர் குலத்தோனாகக் கருதி அவனுக்கு மதிப்பளிப்பர் என அந்த உரையாடல் மூலம் அறிய முடிகிறது. அம்பத்தா ஒரு பிராமணன் என்றாலும் அவனுடைய முன்னோன் கன்கா என்பவன் சாக்கியர்களுடைய அடிமைப்பெண்ணின் மகன் ஆவான். அவன் தக்காணம் (தமிழகம்) சென்று மந்திரங்கள்(பல்வேறு அறிவியல் தரவுகளை) கற்றுக் கொண்டு ஒரு இரிசியாக உயர்வு நிலையை அடைகிறான், அவனது வழி வந்த அம்பத்தா தன்னை ஒரு பிராமணன் எனக் கூறிக்கொள்கிறான்.

எனவே புத்தர் காலத்தில் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) சத்திரியர்கள்தான் உயர் குலத்தோராக இருந்துள்ளனர் எனவும் கீழ் நிலையில் இருந்தவர்களும் பிராமண வகுப்பாக ஆகியுள்ளனர் எனவும் அறிவிலும் அறநெறி ஒழுக்கத்திலும் சிறந்தவன் ஞானியாகிறான் எனவும் அந்த நிலையில் பிறப்பு குறித்து பேசப்படுவதில்லை எனவும் அந்த உரையாடல் தெளிவு படுத்துகிறது. அம்பேத்கர் “சாதி (வகுப்பு) முறை இப்போதுள்ள வடிவில் அப்போது இல்லை. சாதிகள் (வகுப்புகள்) கலந்து உண்ணக்கூடாது, கலப்பு மணம் செய்யக்கூடாது என்ற தடைகள் அப்போது நடைமுறைக்கு வரவில்லை” எனக் கூறுகிறார்(14). புத்தர் காலத்தில் (கி.மு.6ஆம் நூற்றாண்டில்) வகுப்புகள் உருவாகி இருந்தன. ஆனால் அன்று சாதிகள் இருக்கவில்லை என்பதையும், அன்று சத்திரிய வகுப்பினர் மிக உயர்நிலையில் இருந்தனர் என்பதையும் பிராமணர்கள் மிகக்கீழ்நிலையில் இருந்தனர் என்பதையும், யார் வேண்டுமானாலும் அறிவு, திறமை, ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் பிராமணர்கள் ஆகும் நிலை இருந்து வந்தது என்பதையும் புத்தரின் கூற்றுகள் மூலம் அம்பேத்கர் உறுதி செய்கிறார்.

உபநிடத காலமும் புத்த சமண காலமும்:

இரிக் யசூர், சாம, அதர்வண ஆகிய நான்கு சம்கிதைகளும் (வேதங்களும்) முதல் வடிவம், இரண்டாவது பிராமணங்கள், மூன்றாவது ஆரண்யங்கள், நான்காவதும் இறுதியானதும் உபநிடதங்கள் எனச் சொல்லப்படுகின்றன. கி.மு. 1200 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் இரிக் வேதமும் அதன்பின் கி.மு. 1000 முதல் கி.மு. 800 வரையான காலகட்டத்தில் யசூர், சாம, அதர்வண வேதங்களும் தோன்றின. கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது பிராமணங்கள் ஆரண்யங்கள் தோன்றிய காலம். கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டு வரையான காலம் உபநிடதங்கள் தோன்றிய காலம். உபநிடதங்கள் வேதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும் அவை தனித் தன்மையானவை. மொத்தம் உள்ள 200க்கும் மேற்பட்ட உபநிடதங்களில் வேதங்களோடு இணைத்துப் பார்க்கப்படுபவை 108 உபநிடதங்கள் மட்டுமே. இவை அனைத்துமே வாய் மொழியாகவே மிக நீண்ட காலம் இருந்து வந்தன. கி.பி.க்கு பிந்தைய காலங்களில் தான் இவை எழுத்து வடிவம் பெற்றன. இங்கு தரப்பட்ட காலங்கள் ஒரு தோராயமான காலங்களேயாகும். 

இரிக் வேத காலத்திற்குப் பின்னரும், உபநிடதகாலத்திற்கு முன்னரும் ஆரிய இனக்குழு வாழ்க்கையில் சடங்குகள், மந்திரங்கள் முதலியன முக்கியத்துவம் பெற்றன. அதனால்தான் கி.மு. 1000க்குப்பின் யசூர், சாம, அதர்வண வேதங்களும், பிராமணங்களும் தோன்றின. இவை அனைத்தும் யாகம், சடங்கு, மந்திரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருபவையாக இருந்தன. இக்காலகட்டத்தில் புரோகிதத் தொழில் முக்கியத்துவம் பெற்ற, நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்து வந்தது. புரோகிதத்தொழிலைச் செய்யும் தனி வகுப்புகள் உருவாகத் தொடங்கி இருந்தன. ஆனால் அன்று அத்தொழிலைச் செய்தவர்கள் மதிப்புக்கு உரியவர்களாக இருக்கவில்லை. ஆளும் வர்க்கத்தைவிட செல்வந்தர்களை விட கீழானவர்களாகவே இருந்தார்கள். அன்று கண ஆட்சி அமைப்பு இருந்து வந்தது.

கணத் தலைவர்களும், ஆளும் வர்க்கமும்தான் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஞானத்திலும் அறிவிலும் கூட பூசாரிகளை விடச் சிறந்தவர்களாகவே இருந்து வந்தனர். அதன்பின் நீண்டகாலம் கழித்து புரோகிதர்கள் தனி வகுப்பாக உருவாகிய போதிலும் கீழான வகுப்பாகவே இருந்தார்கள். அவர்கள் ஆளும் வர்க்கத்தையும், செல்வந்தர்களையும் நம்பி, அவர்களின் ஆதரவில்தான் வாழ்ந்து வந்தார்கள். ஆகவே அவர்கள் அன்று உயர் வகுப்பாக இருந்ததாகக் கூறுவது எல்லாம் புனைவுதான். ஆனால் அன்று அவர்களுக்கு புரோகிதத்தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால் அதன்பின் வந்த உபநிடத காலத்தில் இந்தச் சடங்குகளும், மந்திரங்களும் கேள்விக்குள்ளாயின. உபநிடத காலத்திற்குப்பின் இந்தச் சடங்குகளையும் மந்திரங்களையும் நிராகரித்து சமண, புத்த மதங்கள் தோன்றின. மக்களும் அவற்றுக்கு ஆதரவு வழங்களாயினர்.

உபநிடத காலகட்டத்திலும் அதற்கு முன்பும் பிராமணப் பூசாரிகளைகளைவிட ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அறிவு, ஞானம் போன்றவற்றில் சிறந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு நிறையச்சான்றுகள் கிடைக்கின்றன.. கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டு வரையான உபநிடத காலகட்டத்தில் இருந்த சத்திரிய மன்னர்களான சனகன், பிரவாகன சைவாலி, அசுவபதி, சனத் குமாரன், சித்திரன், பிரகிருதன் அசாத் சத்ரு ஆகியவர்கள் பிராமணர்களுக்குக் குருவாக இருந்தார்கள். அதுபோன்றே செவ்வியல் அறிவுடன் திகழ்ந்த தாழ்த்தப்பட்ட தொழிலாக பிற்காலத்தில் கருதப்பட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தவர்கள் பெருமளவில் இருந்தனர். வேடனும் இறைச்சி விற்பவனுமாகிய தர்மவியாதன் பார்ப்பனனாகிய கவுசிகனுக்கும், தலைச்சுமை வியாபாரம் செய்து வந்த துலாதரன், சாசாலி என்ற பார்ப்பன முனிவருக்கும்  குருவாக இருந்தார்கள் எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(15).

சுவம்சவேதம் போன்ற ஒரு சில முக்கிய உபநிடதங்கள் மூடநம்பிக்கைக்கு எதிரானதாகவும், பகுத்தறிவு சிந்தனை கொண்டனவாகவும் இருந்தன எனவும் மறுபிறப்பு, மறுஉலகம், முழுமுதற்காரணம், கடவுள், ஆன்மா ஆகியவற்றை மறுக்கும் கருத்துகளைக் கொண்டனவாகவும் அவை இருந்தன எனவும் பசாசு கூறுகிறார்(16). ஆனால் அதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட உபநிடதங்கள் பல இல்லாது போயின. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்குரிய, பொருள்முதல்வாத மெய்யியலைக் கொண்ட தொல் கபிலரின் எண்ணியம் எனப்படும் சாங்கியக் கருத்துகள் அன்று வட இந்தியா முழுவதும் பரவின. அதனால் சாங்கியக் கருத்துக்களைக் கொண்ட உபநிடதங்களும் உருவாகி இருந்தன. இதுபோன்ற முற்போக்குக் கருத்துகள் உருவான காலகட்டத்தில் தான் புத்தரும் மகாவீரரும் தோன்றி, சமண பௌத்த மதங்களை உருவாக்கினர்.

புரோகித வகுப்பு:

இக்காலகட்டத்தில் வகுப்புகள் தொன்றி இருந்தன. ஆனால் சாதிகள் இருக்கவில்லை. புரோகிதம், சடங்கு முதலியனவற்றைச் செய்யும் பூசாரிகள் ஒரு வகுப்பாக உருவாகி இருந்தனர். ஆனால் அவர்கள் சாதியின் அடிப்படையில் உருவாகி இருக்கவில்லை. சிறந்த அறிவும் ஞானமும் உடையவர்களில் சிலர் பிராமணர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் ஒரு தனி வகுப்பாகவோ சாதியாகவோ இருக்கவில்லை. கீழ் வகுப்பினரும் பிராமணர்களாக ஆகும் நிலை இருந்து வந்தது. அறிவு, ஞானம் முதலியன பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையும் அன்று இருக்கவில்லை.

பிராமணர்களைவிட அறிவும் ஞானமும் கொண்ட பலர் பல நிலைகளில் இருந்தனர். அன்று ஆளும் வகுப்பாக இருந்து வந்த சத்திரிய வகுப்பினர்தான் அனைத்திலும் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டனர். பிராமணர்களும் சத்திரியர்களை மிக உயர்வாக மதித்தனர். புரோகிதத் தொழிலைச் செய்தவர்கள் அன்று மதிப்புக்கு உரியவர்களாக இருக்கவில்லை. அத்தொழிலைச் செய்த பிராமணர்களும் கீழ் வகுப்பாகவே, தாழ்ந்த வகுப்பாகவே கருதப்பட்டனர். கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் யாகம், சடங்கு போன்றனவற்றைக் கொண்ட புரோகிதத் தொழில் ஒரு நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்து வந்தது. ஆனால் அதன் பின் உபநிடத காலங்களில் புத்த சமண காலங்களில் அது தனது முக்கியத்துவத்தை இழந்து வந்தது. புரோகிதத் தொழில் செய்தவர்கள் அறிவு, ஞானம், திறமை, ஒழுக்கம் ஆகியனவற்றைக் கொண்டவர்களாக இருக்கவில்லை. யாகம், சடங்கு, மந்திரம் போன்ற மூட நம்பிக்கைகள் மக்களிடம் மதிப்பிழந்து வந்தன. அதனால் புரோகிதத்தொழில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வந்தது என்பதால் அவர்களின் வருமானமும் குறைந்து போனது. அதன் காரணமாக உபநிடத காலங்களிலும் புத்தம், சமணம் தோன்றிய காலங்களிலும் அதன் பின்னரும் புரோகிதர்களும், பிராமணர்களும் மிகமிகக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால் வைதீகச் சார்பு இலக்கியங்கள் அன்று பிராமணர்கள் மிக உயர்ந்த நிலையில் இருந்தது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. இரிக் வேதம் உட்பட 4 வேதங்களும், ஆரண்யங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் போன்றவைகளும் இன்ன பிறவும் வாய்மொழியாகவே காப்பாற்றி வைக்கப்பட்டிருந்தன. கி.பி.க்கு பிந்தைய காலங்களில்தான் இவை எழுத்து வடிவத்திற்கு மாறின. இதனைச் செய்தவர்கள் அன்றைய பிராமணர்கள். கி.பி.க்குப் பின், பிராமணியம் வலுவாக இருந்ததோடு பிராமணர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டு வலுப்படுத்தப் பட்டிருந்தது. அதன் காரணமாக பிராமணங்கள் எந்த அளவு மூடத்தனத்துடன், இறையியல் ஒழுக்கமின்றி இருந்தன என்பது குறித்து முன்பே குறிப்பிட்டிருந்தோம். ஆகவே இவை அனைத்தையும் பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்றவாறு பிராமணர்கள் மாற்றி அமைத்துக்கொண்டனர். இரிக் வேதம் தவிர பிற அனைத்தும் முழுமையாகத் திருத்தப்பட்டன. ஆகவே அவை அனைவருக்கும் மேலான நிலையில் பிராமணர்கள் இருந்தார்கள் என்ற தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். ஆனால் அது உண்மையல்ல.

கி.மு. 800 வரை கண ஆட்சிமுறை வலிமையானதாக இருந்தது. ஆகவே அன்று சமத்துவம், சுதந்திரம், மக்களாட்சி முதலியனவும் வலுவாக இருந்தன. பெண்களும் சம உரிமை கொண்டவர்களாக இருந்தனர். அதன்பின் சொத்துரிமை உருவான போது கண ஆட்சிமுறை உடைந்து புதிய கருத்துகளும் புதிய சிந்தனைகளும் உருவாகின. 16 சனபதங்கள் உருவாகி இருந்தன. அவை புதிய சிந்தனைகளுக்கு ஆதரவாக இருந்தன. சாங்கியம் போன்ற பொருள் முதல்வாத கருத்துகளும் சமணம், பௌத்தம் போன்ற முற்போக்கு மதக் கருத்துகளும் பரவின. இவை அனைத்துமே சமத்துவத்தை வலியுறுத்தும் தத்துவங்கள்தான். இக்காலகட்டத்தில் வகுப்புகளும் தொழில் பிரிவுகளும் தோன்றின எனினும் அவைகளுக்கிடையே சொத்துரிமை அடிப்படையில்தான் வேறுபாடுகள் உருவாகி இருந்தன. அன்று நடந்த ஒருதாரமணக் குடும்பத் திருமணங்களில் அகமணமுறை இருக்கவில்லை. அன்று ஆளும் வர்க்கமும், சொத்துள்ள செல்வந்தர்களும் மதிப்புக்கு உரியவர்களாக இருந்தனர். பிராமணர்களும் பூசாரிகளும் அவர்களுக்கு மிகவும் கீழ் நிலையில்தான் இருந்தனர்.

புரோகிதத்தொழில் செய்து வந்த பிராமணர்கள், அனைவருக்கும் மேலாக இருந்தார்கள் என்பது பிற்கால பிராமணர்களின் அதீதக் கற்பனை தானே ஒழிய வேறில்லை. பிராமணங்கள் மூடத்தனமான, மனம் போனபோக்கில் புனைவு செய்யப்பட்ட, வரையறையற்ற கற்பனைகளைக் கொண்ட, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்துகிற நூல்களாக இருந்தன என முன்பே பார்த்தோம். ஆகவே இதுபோன்ற வைதீக இலக்கியங்களைக் கொண்டு அக்காலகட்டத்தை முடிவு செய்ய இயலாது. பௌத்த இலக்கியங்களை ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். அதிலும் பிராமண இடைச்செருகல்கள் உள்ளன. எனினும் அவற்றில் ஆளும் வர்க்கங்கள் அதி உயர்நிலையில் இருந்தனர் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஆகவே அவைகள் ஓரளவு உண்மைக்கு நெருங்கியுள்ளன எனலாம்.

முற்போக்குச் சிந்தனைகள்:

கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் சனபதங்கள் தோன்றிய போது அவை முற்போக்கான கருத்துகளுக்கு ஆதரவு தந்து வந்தன. அப்பொழுது தமிழகத்திலிருந்து எண்ணியம் என்ற சாங்கியம், சிறப்பியம் என்ற வைசேடிகம், அளவியல் என்ற நியாயம், ஓகம் என்ற யோகம் ஆகிய பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் வட இந்தியாவில் பரவின. “இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்கு கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இரண்டு மாமனிதர்கள் தோன்றினார்கள். அவர்கள் இருவரும், அவர்களின் வழிவந்த திண்ணிய மனம் படைத்த சிந்தனையாளர்களும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் தரவில்லை. வேதக் கடவுளர்களை ஒட்டுமொத்தமாக நிகாகரித்தார்கள். பார்ப்பன வழிமுறைகள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், உபநிடதங்கள், செவிகிழியப் பேசப்பட்ட எல்லாம் வல்ல பிரும்மம் ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள்” என பசாசு சாங்கிய மூலவரான தொல்கபிலரையும், வைசேடிக மூலவரான கணாதரையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்(17).

கி.மு. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடோடிகள்(பரிவிராசகர்) என்ற சமயப்பணி அமைப்பு ஒன்று தோன்றியது. அவர்கள் மக்களிடையே சமயமறுப்பு வாதத்தைப் பரப்பினார்கள். இந்த இயக்கம் வட இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியது. ‘இந்த நாடோடிகளில் முக்கியமானவர்கள் யாரும் பிராமணர்கள் இல்லை, நாடோடிகளும் புரோகிதர் அல்லாத போதகர்களும் மக்களிடையே ஆற்றிய உரைக்கு பெருத்த வரவேற்பு இருந்தது’ எனக் கூறுகிறார் இரைசு டேவிட்சு(18). ‘மக்கள் தேடும் புதிய நம்பிக்கைகள் பற்றி உரை நிகழ்த்த வரும் அவர்களுக்காக அரங்கங்களும் மேடைகளும் கட்டப்பட்டன. சாவாதி நகர அரசி மல்லிகாவின் பூந்தோட்டத்தில் பெரியதோர் அரங்கம் கட்டப்பட்டது. லிச்சாவி குலத்து அரசன் தனது தலைநகரில் முகடு வேய்ந்த அரங்கம் கட்டினான். ஊர்களுக்கு அருகிலுள்ள தோப்புகளில் நாடோடிகளுக்கு தங்குமிடம் கட்டித்தரப்பட்டது. சாம்பா நகரில் காக்கிரா அரசி ஏரிக்கரையோரமாக அரங்கம் கட்டினாள். இராசகிருகத்தில் மோவாநிரப்பா என்ற தோப்பில் அரங்கம் கட்டப்பட்டது’(19). ஆக அன்று நாடோடிகள் என்பவர்கள் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள் குறித்த தகவல்கள் அதிகம் கிடைப்பதில்லை எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

தமிழரான பக்குடுக்கை நன்கணியார், இந்திய அளவில், ‘எண்ணியம்’ என்கிற சாங்கியக் கோட்பாட்டிற்கானச் சங்கத்தின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தார். இவரது சங்கமே இந்திய அளவில் அன்று ஒரு மிகப்பெரிய சங்கமாக இருந்தது. பாலி மொழியில் உள்ள பௌத்த இலக்கியமான சாமண்ண பால சூக்தம் இவர் வரலாற்றை அறிய உதவுகிறது. பௌத்த மரபில், பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் இவர் அழைக்கப்படுகிறார். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் இவரின் புறம் 194ஆம் பாடலே எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறது. புத்தரின் சமகாலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பு வாழ்ந்தவர்களில் புத்தரைப்போலவே மக்களால் அதிகளவு மதிக்கப்பட்ட 6 அமணர்களில் இவரும் ஒருவர்(20). இவரது சங்கத்தால் தொல்கபிலரின் பொருள்முதல்வாத எண்ணியச்சிந்தனை வட இந்தியா முழுவதும் பரவியது,

அதே காலகட்டத்தில் உலகாயதர், சார்வாகர் போன்றவர்களின் நாத்திக அமைப்புகளும் தோன்றியிருந்தன. மதத்தின் வடிவங்கள் அனைத்தையும் சார்வாகர்கள் இடித்துரைத்தார்கள், மறுத்துரைத்தார்கள். ஆக இக்கால கட்டத்தில் சமண, பௌத்த மதங்கள் போக பல்வேறு பொருள்முதல்வாத மெய்யியல் பள்ளிகளும் நாத்திக இயக்கங்களும் தோன்றி மக்களிடையே தங்கள் தங்கள் கருத்துகளைப் பரப்பி வந்தன. இவர்கள் அனைவருமே பிராமணியத்தின் கருத்துகளை, அதன் சடங்குகளை, யாகங்களைக் கடுமையாகச் சாடினார்கள். அரசர் முதல் சாதாரண பொதுமக்கள்வரை இவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு மிக அதிகமாகவே இருந்து வந்தது. ஆகவே அன்று பிராமணர்கள் அரசர்களைவிட உயர்நிலையில் இருந்தார்கள் என்பது கேலிக்கூத்தான விடயம். ஆகவே கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையான காலகட்டங்களில் ஆளும் வர்க்கத்தாரும் செல்வந்தர்களும்தான் உயர்நிலையில் இருந்தனர். பிராமணர்கள் அவர்களுக்குக் கீழ்நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் கி.மு. 800க்கு முன்பும் அதன் பின்பும் மக்களிடையே சடங்குகள், யாகங்கள், யோகம் மந்திரம் முதலியன செல்வாக்கு பெற்றதாக இருந்தது. அதனால் அதனைச்செய்து வந்த புரோகிதர்கள், பிராமணர்கள் ஆகியோர் நல்ல வருமானம் பெற்று வந்தனர். ஆனால் அவர்களிடம் அறிவு, ஞானம், ஒழுக்கம் முதலியன இருக்கவில்லை. புரோகிதர்களின் செல்வாக்கு, உபநிடத காலத்திலும் சமண பௌத்த மத காலங்களிலும் சிறிது சிறிதாக குறைந்து வந்ததால் அவர்களின் வருமானமும் குறைந்து போய் அதன் பிந்தைய காலங்களில் அவர்களின் நிலை மிகவும் தாழ்ந்து போனது.

கி.மு. 800 முதல் கி.மு. 500 வரை வருணங்கள்:

பலரும் வருணங்களைச் சாதிகளாகக் கருதிக்கொள்கின்றனர். வருணங்கள் வேறு, சாதிகள் வேறு. வருணங்கள் என்பன வகுப்புகள். வகுப்புகளில் அகமணமுறை இருக்காது. சொத்து வேறுபாடு தவிர வகுப்புகளிடையே சமத்துவம் நிலவும். அதனால் வகுப்புகளுக்கிடையே திருமணம் நடக்கும். ஆனால் சாதிகள் என்பன படிநிலை அமைப்பு என்பதாலும், சாதிகளில் அகமணமுறை இருக்கும் என்பதாலும், அவைகளிடையே சமத்துவம் இருக்காது என்பதாலும் அவைகளிடையே திருமணம் நடக்க இயலாது. கி.மு. 800க்குப்பின் சொத்துடமை உருவானதால் கண ஆட்சி அமைப்பில் உடைப்புகள் ஏற்படத் தொடங்கி, அகமணமுறை இல்லாதுபோய், இணைமணம் ஒருதாரமணக் குடும்பங்களாக ஆகி வகுப்புகளும் தொழில் பிரிவுகளும் உருவாகத் தொடங்கின. ஆனால் அகமணமுறைகளைக் கொண்ட சாதிகள் உருவாகவில்லை. அகமணமுறை அடிப்படையிலான இணைமணத் திருமணங்களை அழித்து அதன்மேல் நவீன ஒருதார மணக் குடும்பங்கள் உருவாவதால், அவற்றில் அகமணமுறை இருக்கமுடியாது.

புத்தர் காலங்களில் சாதிகள் இருக்கவில்லை, வகுப்புகள் தான் இருந்தன என அம்பேத்கர் கூறுகிறார். வகுப்புகளிடையே கலந்து உண்ணக்கூடாது, கலப்பு மணம் செய்யக்கூடாது என்ற தடைகள் அப்போது நடைமுறைக்கு வரவில்லை என அவர் கூறுகிறார். கலப்பு மணத்துக்கு தடைகள் இல்லை எனும்பொழுது அங்கு அகமணமுறை இல்லை என்று பொருள். ஆகவே அவை சாதிகள் அல்ல வகுப்புகள். வகுப்புகளில் அகமணமுறை இருக்காது என்பதால் அதுபோன்ற தடைகள் இருக்காது. கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின் பிராமணியம் வெற்றிபெற்ற பின், வருணத்தைச் சாதியாக மாற்றியது என அம்பேத்கர் கூறுகிறார்(21). மனு சுமிருதியின் சதுர்வருண சாதிமுறையைவிட வருணம் எனப்படும் வகுப்புகள் சிறந்தது என்பதைச் சொல்ல வந்த அம்பேத்கர், ‘முதலாவதாக வருணங்கள் தனிமைப்படுத்தி வைக்கவில்லை. ஒற்றுமையை ஏற்படுத்தும் வலுவான பந்தங்களான கலப்பு மணமும், கலந்து உண்ணுதலும் முழு அளவில் செயலில் இருந்தன. சமூகத்தின் அடிப்படையையே அழித்து விடும் சமூக விரோத உணர்வை வெவ்வேறு வருணங்களும் வளர்த்துக் கொள்வதற்கு இடம் இருக்கவில்லை’ என்கிறார்(22). ஆகவே புத்தர் காலத்தில் சாதிகள் இருக்க வில்லை, வருணங்கள் எனப்படும் வகுப்புகள்தான் இருந்தன.

தொடக்கம் முதல் கி.மு. 500 வரை ஆளும் வர்க்கம், செல்வந்தர் ஆகியோரைவிட பிராமணர்கள் தாழ்நிலையில்தான் இருந்தனர் என நாம் உறுதி செய்துள்ளோம். ஆகவே கி.மு. 500வரை வைதீகப்பிராமணியம் வட இந்தியாவில் உருவாகவில்லை என உறுதிபடக்கூறலாம். இக்காலகட்டத்தில் வேடனும் இறைச்சி விற்பவனுமாகிய தர்மவியாதன், தலைச்சுமை வியாபாரம் செய்து வந்த துலாதரன் போன்ற பிற்காலத்தில் கீழ் வகுப்பு எனக்கருதப்பட்ட தொழிலைச் செய்தவர்கள் பிராமணர்களுக்குக் குருவாக இருந்தார்கள். கீழ் நிலையில் இருந்தவர்களும் தனது அறிவு, ஞானம், திறமை, ஒழுக்கம் ஆகியவற்றால் பிராமணர்கள் ஆனார்கள். சான்றாக கன்கா என்ற அடிமைப்பெண்ணின் மகன் பிற்காலங்களில் சிறந்த முனிவனாக ஆகி அவனது வம்சத்தில் வந்த அம்பத்தா என்பவன் பிராமணன் ஆக முடிந்துள்ளது. அரசர்கள் மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்களுக்குத் தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ஆகவே இக்கால கட்டத்தில் வகுப்புகள் மட்டுமே இருந்தன. சாதிகள் இருக்கவில்லை. இக்காலகட்டத்தில் கீழ் நிலையில் உள்ளவன் மேல் நிலைக்கு வருவதும் மேல்நிலையில் உள்ளவன் கீழ் நிலைக்குப்போவதும் இருந்து வந்தது.

இக்காலகட்டத்தில் சாங்கியம், சிறப்பியம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளும், உலகாயதம், சார்வாகம் போன்ற நாத்திகவாதக் கருத்துகளும், சமண, புத்த மதக் கருத்துகளும் வட இந்தியா முழுவதும் பரவி வந்தன. அவை அனைத்துமே மனிதர்களுக்கிடையே இருந்த வகுப்பு முதலான அனைத்து ஏற்றத் தாழ்வுகளையுமே நிராகரிப்பவனாக இருந்தன. சான்றாக புத்தமதம் துப்புரவுத்தொழிலாளி, நாய் ஊன் உண்போன் போன்ற இழிதொழில் செய்தவர்களையும் (பரத்திமைப் பெண்களையும்) பிக்குகளாக ஆக்கி அவர்களையும் மேன்மையுடன் நடத்தியது(23). அந்த பௌத்த மதம் வணிகர்கள், செல்வந்தர்கள் ஆதரவோடு இந்தியா முழுவதும் பரவியது. அன்று சாதி இருந்திருந்தால் இவை சாத்தியமாகாது, வகுப்புகள் இருந்ததால் மட்டுமே இவை சாத்தியமாயின. ஆகவே அன்று வகுப்புகள் மட்டுமே இருந்தன, சாதிகள் இல்லை என்பதுதான் உண்மை.

இனக்குழுக்களும் சாதியும்:

இனக்குழுக்கள் வளர்ச்சியடைந்து நாகரிகச் சமூகமாக ஆகும்பொழுது அவை சாதிகளாக ஆகிவிடுகின்றன என்ற தவறான புரிதல் அல்லது குழப்பம் நிலவுகிறது. இனக்குழுக்கள் கண ஆட்சி அமைப்பை, அகமணமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அந்த அகமணமுறை உடைந்து அழிந்து அதன்மேல்தான் ஒருதார மணக்குடும்பங்கள் உருவாகின்றன. சொத்துடமை ஏற்பட்டு, தொழில்வளர்ச்சி ஏற்படும்பொழுது, பல்வேறு இனக்குழுக்களும் அதன் கணம், குலம் முதலியனவும் ஒன்றுடன் ஒன்று கலந்து கணம், குலம் முதலியன இல்லாது போய், நாகரிகச் சமூகம் உருவாகிறது. அதனை நவீன ஒருதார மணக்குடும்பங்கள்தான் சாத்தியமாக்குகின்றன. சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் உடன்போக்கு என்ற முறையில் நவீன ஒருதார மணக் குடும்பங்கள் உருவாகி பழந்தமிழக நாகரிகச் சமுதாயம் உருவாகியது. அது போன்றுதான் உலகம் முழுவதும் ஒருதார மணக்குடும்பங்கள் உருவாகி கணம், குலம் முதலியனவற்றை இல்லாததாக ஆக்குகின்றன(24).

கண அமைப்பு இருக்கும்வரை இரத்த உறவு அடிப்படையில்தான் மக்கள் பிரிக்கப்பட்டு வருவர். ஆனால் நாகரிகச் சமூகம் என்பது தேய(பிரதேச) அடிப்படையில் உருவாவது. அதில் கணம், குலம் முதலியனவும் அதன் பண்டைய ஆட்சி அமைப்புகளும் இல்லாது போய், தேயம் எனப்படும் நிலப்பிரிவுகள் அடிப்படையிலான பொதுமக்கள் உருவாகி இருப்பார்கள். அதற்கு அடிப்படையாக இருப்பது ஒருதார மணக்குடும்பங்கள். இந்த ஒருதார மணக் குடும்பங்கள்தான் இனக்குழுவின் கண அமைப்பை அதன் அகமண முறையை அழித்து கணம், குலம் முதலியனவற்றை ஒன்றோடு ஒன்று கலக்கச் செய்து நவீன நாகரிகச் சமூகத்தை உருவாக்குகின்றன. அதன் காரணமாக தேய அடிப்படையில் சமூகம் பிரிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது(25). இனக்குழுக்களிடையே சமத்துவம் இருக்கும். ஆனால் சாதிகளிடையே சமத்துவமற்ற படிநிலை இருக்கும். இனக்குழுக்கள் அகமணமுறையைக் கொண்டிருக்கும். ஆகவே அந்த அந்த அகமணமுறையை உடைக்காமல் கண அமைப்பு உடையாது. ஆகவே ஒருதார மணக்குடும்பங்கள் அந்த அகமண முறையை உடைத்துத்தான் நாகரிக சமூகத்தை உருவாக்குகின்றன. ஆகவே இக்காரணங்களால் இனக்குழுக்கள் வளர்ச்சியடைந்து நாகரிகச் சமூகமாக மாறும் பொழுது அவை அகமண முறையைக்கொண்ட சாதிகளாக மாறுவது என்பது இயலாது.

கி.பி.க்கு பின் வடஇந்தியாவில் சாதியச் சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின் ஒரு சில இனக்குழுச் சமூகங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்பே இனக்குழு நிலையிலேயே சாதியச் சமூகமாக ஆக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இனக்குழுச்சமூகத்தில் சொத்துடமை ஏற்பட்டு, அவை வளர்ச்சியடைந்தால் அந்த இனக்குழு சமூகம் இல்லாது போய் நாகரிகச் சமூகம் உருவாகிவிடும். அந்த நாகரிகச் சமூகத்தில், ஒருதார மணக்குடும்பங்கள்தான் இருக்கும். அகமணமுறையிலான சாதிகள் இருக்காது. ஆகவே இனக்குழுச்சமூகம் வளர்ச்சியடைந்து சாதியச் சமூகமாக மாறுவது என்பது இயலாது. சொத்துடமை உருவாகும்பொழுது சொத்தை வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல வரலாற்றில், ஒருதார மணக்குடும்பமும், கற்பு புனிதமாக்கப்படுவதும் நடக்கிறது. கணம், குலம், முதலியனவும், அகமணமுறையும், கண ஆட்சி அமைப்புகளும் அழிகின்றன. அகமணமுறையை அழித்து நாகரிகச் சமூகம் உருவாவதால், நாகரிகச் சமூகத்தில் அகமணமுறையோ, சாதியோ இருக்க இயலாது. எனவே சாதிகள் அதற்குப்பின் மிக நீண்ட காலம் கழித்து செயற்கையாக உருவாக்கப்பட்டவை.

பார்வை:

1. பண்டைய இந்தியா (The Culture And Civilisation of Ancient India in Historical Outline), டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 160.
2. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர் (Romila Thaper), NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 266.
3. பக்:224
4. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி (D.D. Kosambi), NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 166.
5. வியத்தகு இந்தியா (The Wonder That Was India), ஏ.எல். பாசம் (A.L.Basham), தமிழாக்கம்: செ.வேலாயுத பிள்ளை, மகேசுவரி பாலகிருட்டிணன், ஏப்ரல்-2015, விடியல் பதிப்பகம் பக்: 85.
6. கீழடி அறிக்கை (4ஆம் கட்டம்), தமிழ்நாடு அரசு வெளியீடு, பக்: 18.
7, 8, 9. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 148, 149.
10. இந்திய வரலாற்றில் பகவத் கீதை (The Role of Bhagavad Gita in Indian History), பிரேம்நாத் பசாசு (Premnath Bazaz), தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 77.
11. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு (The Hindus an alternative history), வெண்டி டோனிகர் (Wendy Doniger), தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, சூன் – 2016, பக்: 151.
12, 13.பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 74-84.
14. பக்: 74.
15. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 78, 79.
16. பக்: 88, 89.
17, 18, 19. பக்: 131, 132.
20. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 102,103.
21. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 172.
22. பக்: 249.
23. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 163.
24, 25. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 227, 228, 855, 856.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It