கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியாரின் கொள்கைகளில் எதை எதை வென்றெடுத்தோம்? நெஞ்சில் கைவைத்து நேர்மையாக விடை சொல்வோம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒரு விழா எடுத்துக் கொண்டாடுவதை அவருடைய தோழர்கள் சென்னையில் மயிலாப்பூர் குப்பத் தில் முதன்முதலாக 19-12-1938இல் நிகழ்த்தினர். எஸ். முத்தய்யா முதலியார் தலைமையில், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் உரையாற்றினார். அன்று ஈ.வெ.ரா. சிறையிலிருந்தார்.

அதன்பிறகு ஆண்டுதோறும் அவருக்குப் பிறந்த நாள் விழா எடுப்பதை 1956க்குப் பின்னர் திராவிடர் கழகம் மேற்கொண்டது.

அப்படி விழா எடுக்கும் நாளை அவருடைய கொள்கைகளை மக் களுக்கு எடுத்துச் சொல்லுவதற்குப் பயன்படுத்திக் கொண்டோம்.

அவருடைய கொள்கைகளுள் தலையானவை : 1. வருணசாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு. 2. மூடநம்பிக்கைகள் ஒழிப்பு. 3. பெண்ணடிமை ஒழிப்பு. 4. தனிச் சுதந்தரத் தமிழ்நாடு அமைப்பு என நாம் கொண்டோம்.

“தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசுக் கட்சி பாடுபடும்” என்ற உறுதிமொழி யை, அருப்புக்கோட்டை நாடார் வாலிபர் சங்கத்தினருக்கு 1922 அக்டோபர் 31 மாலையில் பாலையம்பட்டி என்கிற ஊரில் ஈ.வெ.ரா. அளித்தார். அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரசுச் செயலாளர்களுள் ஒருவர்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் தன்மையில், 1922 திசம்பர் 21 அன்று திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில், தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவு பற்றி ஈ.வெ.ரா. ஒரு தீர்மானத்தை முன்மொழிந் தார். ‘இது மதம் சம்பந்தப்பட்டது - இத்தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்ற முடியாது’ என்று கூறி மாநாட்டுத் தலைவர் வாசு தேவ அய்யரும் மற்றும் எல்லாப் பார்ப்பனர்களும் எதிர்த்தனர்; தள்ளுபடி செய்தனர்.

அது ஈ.வெ.ரா.வை சினம் கொள்ளச் செய்தது. அன்று மாலை திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக் கூட்டத்தில், “வருண சாதியையும் தீண்டாமை யையும் காப்பாற்றும் இராமாயணத்தையும், மனுநீதியையும் எரிக்க வேண்டும்” என்று முதன்முதலாகப் பேசினார், பெரியார்.

ஈ.வெ.ரா. வருந்தி முயன்று, 26-12-1926இல், மதுரையில் நிறுவிய “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதைச் சங்க”த்தின் முதலாவது கொள்கை இதுதான்.

“பார்ப்பனர் அல்லாத இந்துக்கள்” இந்தியா முழுவதிலும் உள்ளனர். இன்றைய கணக்குப்படி இவர்கள் இந்திய அளவில் 94.5 விழுக்காட்டினர். ஆனால் வட மாகாணங்களில் உள்ள இந்துக்களில் ‘பார்ப்பனர் அல்லாதார்’ - இந்துச் சட்டப்படியும் சாத்திரப்படியும் சத்திரியர், வைசியர், சூத்திரர் என மூன்று வருணத்தாராக இருக்கிறார்கள். இதற்கு இந்து தாயபாகச் சட்டப் பிரிவு அடிப்படை யாகும்.

ஆனால் தென்னாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் பார்ப் பனர் அல்லாத இந்துக்கள் 100க்கு 97 பேர். இவர்கள் அனைவரும் ‘சூத்திரர்’ என்ற ஒரே வருணத்தாராக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது, இந்து மிதாட்சரச் சட்டப் பிரிவுப்படி உள்ள ஏற்பாடு.

சூத்திரர் - நான்காம் வருணத்தார்; மேல் வருணத் தார் மூவருக்கும் உழைத்து, வயிறு வளர்க்க வேண்டி யவர்கள்; சாத்திரப்படி இவர்கள் பார்ப்பனரின் வைப் பாட்டி மக்கள். இது இவர்களுக்குப் பிறவி காரணமாகச் சுமத்தப்பட் இழிவு.

இதற்கு 2015ஆம் ஆண்டிலும் இந்துச் சட்டத் திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் கெட்டி யான பாதுகாப்பு இருக்கிறது.

இந்த இழிவை ஒழித்திட ஒரே வழி இந்துச் சட்டத் தையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அடியோடு மாற்றுவது மட்டுந்தான்.

இதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் நம் காலத் தில் வாழ்ந்த பெரியார் ஈ.வெ.ரா.வும், மேதை டாக்டர் அம்பேத்கரும் ஆவர்.

பெரியார் 21-12-1922இல் விரும்பியபடி - தீண்டாமை ஒழிப்பு, வருண ஒழிப்புக்காக - இவற்றைப் பாது காக்கும் மனுநீதியை மகத் மாநாட்டில், 25-12-1927 அன்று மேதை அம்பேத்கர் எரித்தார்.

அவர் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவுக்குத் தலைவராக வருவதற்கு முன்னரே, இந்துச் சட்டத் திருத்த மசோதாவை, 1947லேயே முன்மொழிந்தார். “வருணப் பாதுகாப்பு, தீண்டாமைப் பாதுகாப்பு, பழக்க வழக்கச் சட்டப் பாதுகாப்பு என்கிற மனுநீதி அடிப்படை யிலான இந்துச் சட்டம் இனி செல்லுபடியாகாது” என்கிற இந்துச் சட்டத் திருத்தத்தை, 11-4-1947லேயே அரசமைப்பு அவையில் முன்மொழிந்தார். இந்தியப் பார்ப்பன ஆதிக்க அரசினரால் அந்த ஒரு திருத்தம் மட்டும் 1951 இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த மேதை அம்பேத்கர் மனம் நொந்தார். 11-10-1951 அன்று அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அவர் அத்துடன் அடங்கிவிட்டாரா? இல்லை.

2-9-1953 முற்பகல் 11.30 மணிக்கு, இந்திய நாடாளு மன்ற மாநிலங்கள் அவையில், பின்வருமாறு பேசினார்.

“நான்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி னேன் என்று நண்பர்கள் இங்கே சொன்னார்கள். அந்தச் சட்டத்தை எரிக்க வேண்டும் என்று சொன் னால், அதற்கு நான் முதலாவது ஆளாக இருப்பேன். அந்தச் சட்டத்தை நான் விரும்பவில்லை; அந்தச் சட்டம் யாருக்கும் உதவாது” என்று துலாம்பரமாக முழங்கி னார், அம்பேத்கர்.

இந்த இரண்டு விவரங்களையும் பெரியார் கொள்கையினர் முழுமையாக அறிந்திருக்க வில்லை. பெரியார் இயக்கத்திலிருந்த மெத்தப் படித்த தலைவர்கள் இவற்றை அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. நிற்க.

நால்வருண ஒழிப்புக்காகப் பெரியார் 3-11-1957 இல் எடுத்த முடிவு - “வருணப் பாதுகாப்புக்கு, தீண்டா மைப் பாதுகாப்புக்கு, பழக்கவழக்கச் சட்டப் பாது காப்புக்கு அரண்களாக விளங்குகிற அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 25, 26, 372(1) இவற்றை அடியோடு நீக்குக!” என்று மட்டும் இந்திய அரசைக் கோரியது.

டாக்டர் அம்பேத்கர் 11-4-1947இல் முன்மொழிந்தது போல், இதற்கு மாற்றுக்கான ஒரு சட்ட வரைவைப் பெரியார் முன்மொழியவில்லை.

இந்தியா முழுவதிலும் - குறிப்பாக மகாராட்டிரா, தில்லி, உ.பி., பீகார் மாநிலங்களிலுமுள்ள அம்பேத்கர் குடிஅரசுக் கட்சியினரும், அம்பேத்கர் கொள்கையி னரும் இதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை.

1957இல் நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்ட அறிஞர் சி.என். அண்ணாதுரை, “அச்சச்சோ! என்ன இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்ததை எரிப்பதா!” என்று மட்டுமே 1957 நவம்பரில் கருத்து அறிவித்தார்.

தமிழ்நாட்டுக் காங்கிரசு அரசு, 3-11-1957க்குப் பிறகு விழித்துக் கொண்டு, “அரசமைப்புச் சட்டத்தை எரித் தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது மூவாயிரம் ரூபா தண்டம் - அல்லது இரண்டும் சேர்த் துத் தண்டனை” என்று, 11-11-1957இல் ஒரு சட்டம் இயற்றியது.

இவற்றையெல்லாம் விளக்கி, பெரியார், ஊரெங்கும் பரப்புரை செய்தார். மக்களிடையே எழுச்சியை உண் டாக்கினார்.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டுதான், 10,000 பெரியார் தொண்டர்கள் 26-11-1957இல் அரசமைப்புச் சட்டத்தை எரித்தனர். 2997 பேர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். நானும் 18 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றேன். தந்தை பெரியார் வேறொரு வழக்கில் தண்டிக்கப்பட்டார்.

அன்றைய நாள்களில் உலகத்தில் எந்த நாட்டுத் தலைவரும் தம் நாட்டு அரசமைப்பை எரித்த தில்லை.

1957-2015க்கும் இடைப்பட்ட கடந்த 58 ஆண்டு களில்-பெரியார் பெயரால் உள்ள அமைப்புகள், பெரி யார் பெயரைச் சொல்லும் நாடாளுமன்றக் கட்சிகள்; அம்பேத்கர் பெயரால் உள்ள இயக்கங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகள்; பொதுவுடைமை மலரப் போராடும் கட்சிகள் முதலானவை - இத்தகைய பிறவி வருண சாதி இழிவையும், தீண்டாமையையும் ஒழித் திட அரசமைப்பைத் திருத்துவதற்காக மேற் கொண்ட முயற்சிகள் என்னென்ன? எப்போது? அவை எவை யெவை? என்று ஆர அமர நெஞ்சில் கைவைத்து நேர்மையாகச் சிந்தித்திட அன்புடன் வேண்டுகிறோம்.

இத்திசையில் 1969இல் பார்ப்பனரின் பிறவி வருண சாதி உயர்வையும் மற்ற இந்துக்களின் பேரில் தீண்டாமையையும் காப்பாற்றுகிற இந்துமத வழிபாட்டு நிறுவனங்களில், பூசை செய்கிறவர்களாக எல்லா இந்துச் சாதியினரும் வர உரிமை வேண்டும் என்று கோரினார், பெரியார். அதனை ஒரு கடமையாக, தாமே முன்வந்து ஏற்றுக்கொண்ட அன்றைய முதல மைச்சர் கலைஞர், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை தரும்” சட்டத்தை நிறைவேற்றினார்; பின்னர் வந்த அ.இ.அ.தி.மு.க. அரசும் அச்சட்டத்தை அமல்படுத்தியது. அர்ச்சகர் பணிக்கான தகுதியளிக்கும் பயிற்சியையும் தமிழக அரசினர் அளித்தனர். இவை பாராட்டத்தக்கவை.

ஆனால், இன்று அச்சட்டம் செல்லுமா என்பது ஒரு கேள்விக்குறியாhகிவிட்டது. அச்சட்டம் செல்லாது என, மா.பெ.பொ.க. 1996லேயே தெளிவுபடக் கூறியது. அதைக் கருதிப் பார்க்க எவருக்கும் மனம் இல்லை. அது இரங்கத்தக்க ஒரு நிலை.

ஏன் இத்தனை இக்கட்டுகள் என்பதை, நாம் எல் லோரும் ஆர அமர - போதிய சட்ட வெளிச்சத்துடன் கலந்துபேசி ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவேண் டும்.

அதற்கு உறுதுணையாக, இந்துச் சட்டம் என்கிற இந்து உரிமை இயல் சட்டம் உருவாக்கப்பட்ட வர லாற்றை அறிவது நல்லது.

வெள்ளையன் காலத்தில் 1860-1864இல் உருவாக் கப்பட்ட “இந்து உரிமை இயல் சட்டம்” என்கிற ““Hindu Law”,”, கீழே சொல்லப்பட்ட வடநாட்டுப் பார்ப்பனப் பண்டிதர்கள் தொகுத்துக் கொடுத்த வேத-சுருதி-ஸ்மிருதி-ஆகம அடிப்படைகளை உள்ளடக்கியது.

அவர்கள்,  1.            ராம் கோபால் நியாயாலங்கார்

                2.            பீரீஷர் பஞ்சானன்

                3.            கிஷன் ஜுன் நியாயாலங்கார்

                4.            பாணீஷர் பீத்யாலங்கர்

                5.            கெற்ப ராம் தெர்க் சிந்தாந்த்

                6.            கிஷென் சந்த் சரப்பூம்

                7.            கோரீ குந்த தெர்க் சிந்தாந்த்

                8.            கிஷன் கீசப் தெர்க்காலங்கார்

                9.            சீதா ராம் பாட்

                10.          காளி சங்கர் பீத்யாபாஜீஸ்

                11.          ஷாம் சுந்தர் நியாய சிந்தாந்த்

என்கிற 11 பேர் கொண்ட குழுவினர்.

அவர்கள் தொகுத்து அளித்த தொகுப்புக்கு, “பண்டி தர்களின் கட்டளைகள்” - (Ordinations of the Pandits) என்று பெயர். அத்தொகுப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 1781இல் வெளியிடப்பட்டது.

அதேபோல், “இந்திய அரசமைப்புச் சட்ட முதலாவது வரைவு (First Draft)” என்பது, கீழே கண்ட பார்ப் பனர்களும், சில காங்கிரசுக்காரர்களும் 1946 முதல் 15-10-1947க்குள் எழுதி, அச்சிட்டு, 17-10-1947இல், அரசமைப்பு வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கரிடம் ஒப்படைக்கப்பட்ட - ஒரு மனுநீதியின் மறுபதிப்பே ஆகும். அந்த முதலாவது வரைவை எழுதிப் பதிப்பித்தவர்கள் : ஜவஹர்லால் நேரு, என். கோபாலசாமி அய்யங்கார், க. சந்தானம், அசஃப் அலி, கே.டி. ஷா, ஹுமாயூன் கபீர், டி.ஆர். காட்கில் ஆகியோர் ஆவர்.

அதன் பதிப்பாசிரியர் பெனிகல் நரசிங்க ராவ் (B.N.Rau) ஆவார்.

இந்த மாபெரும் உண்மையை, ஒளிவுமறைவு இன்றி, மேதை அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா.விடம், இரங்கூனில், 3-1-1955இல் விளக்கிச் சொன்னார்.

E.V.R. : Baba Saheb! How is it that you have let down the cause of Sudras?

(ஈ.வெ.ரா : பாபா சாகேப் அவர்களே! சூத்திரர்களின் நலனைக் காத்திடத் தவறிவிட்டீர்களே, அது ஏன்?)

Baba Saheb : It is true that I was holding the pen; but it was moved by Brahmins!

(அம்பேத்கர்: பேனாவைப் பிடித்துக் கொண்டிருந் தேன் என்பது உண்மை. ஆனால் அதை நகர்த்தி யவர்கள் பார்ப்பனர்கள்!)

இவ்வளவு கெட்டியான பாதுகாப்பை - கோவிலிலும் - மடங்களிலும் வருணசாதிக்கும், தீண்டாமைக்கும் கருவறை மதநிறுவனங்களான மடங்கள் மற்றும் மடாதிபதிகளாக வரும் உரிமை; அர்ச்சகர்களாக ஆகும் உரிமை; பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம், பிராந்தியச் சட்டம் முதலானவற்றைக் காப்பாற்றிட, அக்கால அரசர்களை அணுகி எல்லாம் செய்தவர் கி.பி.800-832இல் வாழ்ந்த காலடி ஆதி சங்கரர் ஆவார்.

அவரின் காலடியை ஒட்டி அப்படியே அவ்வளவை யும் காப்பாற்றிய பார்ப்பனர்கள், மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி மற்றும் அவரு டைய தூதுவர் அக்னி ஹோத்திரம் இராமாநுச தாத்தாச் சாரியார் ஆவர். இவர்கள் பண்டித நேருவையும் இராசேந்திர பிரசாதையும் மற்றவர்களையும் மடக்கிய மேதைகள்.

இவையெல்லாமே நம் பெரியார் தொண்டர் களுக்கும், நம் அம்பேத்கர் தொண்டர்களுக்கும், தமிழ்ப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெளிவாகவும் விரிவாகவும் புரிய வைக்கப்பட வேண்டும்.

இவ்வெளிச்சத்தில், நெஞ்சில் கைவைத்து, நேர்மை யாக நாம் விடை காண்போம், வாருங்கள்!

தந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாளான 17-9-2015 அன்று மேலே கண்ட கொள்கை விளக்கப் பணியை நன்கு திட்டமிட்டுச் செய்வோம் என உறுதி பூணுவோம், வாருங்கள்!

தந்தை பெரியாரின் தலையான கொள்கைகளை நம் காலத்தில் வென்றெடுப்போம், வாருங்கள்!