கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

முந்தைய பகுதி: பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பனர்கள் பதவிகளைக் கைப்பற்றிய வரலாறு

பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பனர்கள் ஆங்கிலக் கல்வியைக் கற்று, பெரிய பதவிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி, பார்ப்பனர்கள் எதிர்ப்பில் மிகவும் தயக்கம் காட்டியது. மதப் பிரச்சினைகளில் பிரிட்டிஷ் ஆட்சி தலையிடக் கூடாது என்ற உறுதிமொழியை பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து பார்ப்பனர்கள் பெற்றுக் கொண்டார்கள். ‘விக்டோரியா பிரகடனத்தில்’ அவ்வுறுதி மொழி சேர்க்கப்பட்டது.

அப்போதெல்லாம் நீதிமன்றங்களில் ‘இந்துக்களுக்கான’ வழக்குகளுக்கு அடிப்படை சட்டமாக ‘மனு சாஸ்திரம்’ உள்ளிட்ட சமஸ்கிருத சாஸ்திர நூல்களே இருந்தன. அய்ரோப்பிய நீதிபதிகள் ‘புரோகிதர்களை’ அருகில் வைத்துக் கொண்டு, அவர்கள் தரும் ஆலோசனைப்படி தீர்ப்புகளை வழங்கினார்கள். மனுசாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ்காரர். அவரே ‘புரோகிதர்கள் கூறும் சாஸ்திர விளக்கங்கள் குழப்பமாக இருக்கிறது; அவர்கள் நேர்மையானவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் கூறும் விளக்கங்களை நம்ப முடியவில்லை’ என்று கூறினார். புரோகிதர்கள் கூற்றுக்கும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதற்கும் வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்த அய்ரோப்பிய நீதிபதிகள், புரோகிதர்களை உடன் வைத்துக் கொள்ளும் முறையை 1864 முதல் நிறுத்தி விட்டார்கள். இதை புரோகிதர் கூட்டம் விரும்பவில்லை.

மற்றொன்று ‘உயில்’ எழுதுவது தொடர்பான பிரச்சினை; தனது இறுதி காலத்தில் செத்துக்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்தும், இறுதி விருப்பம் குறித்தும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்வதே ‘உயில்’, வேத சாஸ்திரங்களில் ‘உயில்’ எழுதுவது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இந்த உயில்களை சட்டப்படி ஏற்க முடியாது என்று புரோகித பார்ப்பனர்கள் வலியுறுத்தினார்கள். 1860இல் நீதிமன்றம் உயில் எழுதுவது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது.

புரோகிதர்களை ஆத்திரப்படுத்திய மற்றொரு முக்கிய பிரச்சினை, பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த ‘இந்திய சம்மத வயது வந்தோர் சட்டம் - 1875’. மனைவிக்கு 12 வயது ஆன பிறகு தான் கணவன், அவளோடு உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியது இந்தச் சட்டம். அதற்கு முன்பு 10 வயதிலேயே உறவு கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. சிறு வயதிலேயே பெண்களை திருமணம் செய்து வைக்கும் ‘பால்ய விவாகம்’ என்ற சமூகக் கொடுமையை பெண்கள் மீது சுமத்தியிருந்தது வேத புரோகிதப் பார்ப்பனர்கள் கூட்டம். சிறுமிகளை பாலுறவு வன்கொடுமையிலிருந்து விடுவிக்கும் இந்தச் சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பேஷ்வா பார்ப்பனரும், காங்கிரஸ் தலைவருமான பால கங்காதர திலகர். இந்தச் சட்டத்தை எதிர்த்து 1890இல் மக்களைத் திரட்டி பெரும் பொதுக் கூட்டங்களை நடத்தினார் திலகர்.

எந்தச் சீர்திருத்தமாக இருந்தாலும் மதத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், இந்த சீர்திருத்தச் சட்டங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவர் வாதிட்டார். நாடு முழுதும் பார்ப்பனப் புரோகிதர்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கூட்டங்களை நடத்தினார்கள். திலகர் தனது ‘கேசரி’ பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி எதிர்ப்பைத் தூண்டி விட்டார்.

சம்மத வயது சட்டத்தை ஆதரித்து 1891ஆம் ஆண்டு பிப். 25 அன்று புனே நகரில் ‘கிரீதா பவன்’ என்ற அரங்கில் சீர்திருத்தவாதிகள் நடத்திய ஒரு கூட்டத்தில் திலகர் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்து, நாற்காலி மேஜைகளை உடைத்து, கலவரம் செய்து கூட்டத்தை பாதியில் நிறுத்தினார் என்று திலகரின் வாழ்க்கை வரலாற்றைப் புகழ்ந்து பெருமையுடன் எழுதியுள்ள டக்டர் விஸ்வநாத் பிரசாத் வர்மா, அந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் பார்ப்பன புரோகிதர் பண்டிதர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 1891இல் மத்திய சட்டசபையில் பிரிட்டிஷ் ஆட்சி சட்டமாக்கியது. அப்போது வைஸ்ராயாக இருந்தவர் லேன்ஸ் டவுன். சட்டம் தான் வந்ததே தவிர, சமூகத்தில் ‘பால்ய விவாகங்களை’ தடுக்க முடியவில்லை.

பார்ப்பனியத்தின் சமூகச் செல்வாக்கு சமூகத்தை இறுக்கப் பிடித்திருந்ததோடு, பிரிட்டிஷ் ஆட்சியையும் அச்சுறுத்தியே வந்தது. பிறகு சுமார் 35 வருடங்கள் கழித்து, பெண்ணின் திருமண வயதை 14ஆக உயர்த்தும் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் சட்டமாக்க முடிவில்லை. இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு 15 வயதுக்கு முன்பே திருமணங்கள் முடிந்து விடுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல்களை பிரிட்டிஷ் ஆட்சி நியமித்த குழு வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 1929இல் ஹர்பிலாஸ் சாரதா என்பவர் பெண்ணின் திருமண வயதை 14 என்றும், ஆணின் வயதை 18 ஆகவும் நிர்ணயித்து, ஒரு மசோதா கொண்டு வந்தார். அது சட்டமானது இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம், ஒரு மாத சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சட்டம் இந்து, கிறித்தவர் மற்றும் முஸ்லிம் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது.

sati 720கணவன் இறந்தவுடன் அவனது உடலை எரிக்கும் நெருப்பிலேயே மனைவியையும் எரிக்கும் ‘உடன்கட்டை’ ஏறுதல் என்ற சமூகக் கொடுமையை பார்ப்பனர்கள் சமூகத்தில் திணித்தார்கள். இதற்காக வேதங்களின் வார்த்தைகளையே திருத்தியதை வரலாற்றாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘பால்ய விவாகம்’, ‘உடன்கட்டை ஏறுதல்’ எனும் இரண்டு சமூகக் கொடுமைகளுமே வர்ணங்களை மீறி, திருமணங்கள் நடந்து விடக் கூடாது; ‘பிராமணர்’ உள்ளிட்ட இரு பிறப்பாளர்கள் ‘உயர் வர்ணப் பெருமை’ கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு திணிக்கப்பட்ட சமூகக் கொடுமையாகும்.

‘சதி’ எனும் ‘உடன்கட்டை’ ஏறும் கொடுமை, வடநாட்டில் அதிக அளவில் நடந்தாலும் தென்னாட்டிலும் இருந்திருக்கிறது. 1802இல் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர் இறந்தபோது அவருடன் 375 பெண்கள் தாங்களாகவே உயிரைப் பலி கொடுத்தனர். 1829இல் வில்லியம் பெண்டிங் என்பவர் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது ‘சதி’க் கொடுமையை ஒழித்து சட்டம் இயற்றினார். இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் இதற்கு ஆதரவாக இருந்தனர்.

அதேபோல், பெண் குழந்தைகள் பிறந்தாலே கொன்று விடும் ‘பெண் சிசுக் கொலை’, 1870இல் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் தடை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் வழியாகத்தான் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயப்படுத்தப்பட்டது.

பெண்கள் மீது சுமத்தப்பட்ட மற்றொரு சமூகக் கொடுமை, கணவனை இழந்த பெண்கள், ‘விதவை’களாகவே வாழ்ந்து, சாக வேண்டும் என்பதாகும். இது, சாஸ்திரத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்பன பழமைவாதிகள் வாதிட்டனர். குறிப்பாக, ‘பிராமண’ சமூகத்தில்தான் இந்த ‘விதவை’க் கொடுமைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டன. 1855இல் கவர்னர் ஜெனரல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த கிரான்ட் என்பவர், இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில், ‘விதவைகள் மறுமணம்’ எனும் மசோதாவைக் கொண்டு வந்தார். புரோகிதர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பிரிட்டிஷான கிறிஸ்தவர்கள், ‘இந்து’ நம்பிக்கைகளில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார்கள். நாடு முழுதும் இந்தச் சட்டத்துக்கு பழமைவாதிகள் எதிர்ப்பும், சீர்திருத்தவாதிகள் ஆதரவும் எழுந்த நிலையில், 1856இல் இந்து விதவைகள் மறுமணம் சட்டமாக்கப்பட்டது.

சட்டம் வந்ததே தவிர, சமூகத்தில் நடைமுறைக்கு வர முடியவில்லை. சட்டம் வந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, 1889இல் ஜி. சுப்ரமணிய அய்யர் தன்னுடைய விதவை மகள் சிவப் பிரியாம்பாள் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக ஜாதி சமூகத்திலிருந்து அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். சட்டம் வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சென்னை மாகாணத்தில் 1851, டிசம்பர் 11இல் முதல் விதவைத் திருமணம் நடந்தது. (ஆதாரம்: ப.சு. சந்திரபாபு-இல. திலகவதி எழுதிய ‘பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும்’ ஆய்வு நூல், பாரதி புத்தகாலய வெளியீடு)

அடிமை முறை எனும் கொடுமை தமிழ்நாட்டிலேயே இருந்திருக்கிறது. அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் அனைவருமே ‘சூத்திரர்கள்’. ‘தீண்டப்படாத’ பிரிவைச் சார்ந்த மக்கள், ஊதியம் வாங்காமல் அவர்கள் வேலை செய்வது கட்டாயம். ‘சூத்திரர்கள்’, அடிமைகளாக நடத்தப்பட்டார்கள் என்றால், ‘தீண்டப்படாத’, ‘சண்டாளர்கள்’ என்று அழைக்கப்பட்ட மக்கள், இறந்துபோன சடலங்களுக்கு இணையாக நடத்தப்பட்டனர். முதலில் பிரிட்டிஷ் ஆட்சி இதை கண்டு கொள்ளவில்லை. ‘கொடுமை தாங்காமல் ஓடிப்போன அடிமைகளை’க் கண்டு பிடித்து, மீண்டும் அவர்களின் எஜமானர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வருவாய் வாரியத்துக்கு தஞ்சை ‘கலெக்டர்’ (ஆட்சித் தலைவர்) கடிதம் எழுதிய ஆவணங்கள் இருக்கின்றன. அடிமைகள் தங்களின் ‘எஜமானர்களிடம்’ அடிமைகளாக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1830இல் திருச்சி ‘கலெக்டர்’ என்.எஸ். கேமரோன், தனது மாவட்டத்தைச் சார்ந்த ஒரு ‘பிராமண’ நிலப் பிரபுவிடமிருந்து ஓடிப் போன பத்து ‘பள்ளர்’ சமூகத்தைச் சார்ந்தவர்களை திருப்பி அனுப்புமாறு சேலம் கலெக்டருக்கு கடிதம் எழுதியிருப்பதை வரலாற்றுப் பேராசிரியர் சி. பரமார்த்தலிங்கம் பதிவு செய்திருக்கிறார்.

1843ஆம் ஆண்டில் அடிமை ஒழிப்புச் சட்டம் வந்தது. 1861இல் தண்டனை வழங்கக்கூடிய ‘பீனல் கோடு’ சட்டம் வந்தது. ஆனாலும் சட்டங்களால் அடிமை முறையை ஒழித்துவிட முடியவில்லை. 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

“ஒரு சமூகம் என்ற அடிப்படையில் (தீண்டப் படாத) மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் விடுதலை செய்திருந்தாலும் சமூக அடுக்கு எனும் அமைப்பில் அவர்கள் படுபாதாளத்திலேயே இருந்தார்கள். பொதுப் பயணிகள் படகுகளில் ஒரு ‘பறையர்’ தனது முகத்தைக் காட்டிவிட முடியாது. அரசு மற்றும் பொதுப் பள்ளிகளில், அரசு நிதி உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளிலும் இதே நிலை தான்” என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை எழுத்து பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ‘இந்தியா’ வந்த பிரஞ்சுக்காரர் அபேதுபே 30 ஆண்டுகள் தென்னகத்தில் தங்கி மக்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, ‘இந்திய மக்கள்’ என்ற நூலை பிரெஞ்சு மொழியில் எழுதி (1806) வெளியிட்டார். பிறகு தமிழிலும் வெளிவந்தது. அதில், ஏராளமான ஜாதிக் கொடுமைகள், பெண்களைக் கட்டாயப்படுத்தி உயிருடன் எரிக்கப்பட்ட அவலங்களைப் பதிவு செய்துள்ளார். மக்களிடையே இந்தக் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்கியதில் அய்ரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ போதகர்களின் பங்கு மகத்தானது. அவர்களின் நோக்கம் மதம் மாறச் செய்வது தான் என்றாலும் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்கள். பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டங்களால் ‘சமூக மாற்றங்கள்’, ‘விழிப்புணர்வுகள்’ வந்து விடுமோ என்று பார்ப்பனர்கள் அஞ்சினார்கள்.

பிரிட்டிஷாருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள போட்டி போட்டுக் கொண்டு நின்ற பார்ப்பனர்கள், சமூக மாற்றச் சட்டங்களைக் கண்டு பதறினார்கள். முதலில் திலகர் தொடங்கிய ‘இந்து’ சுயராஜ்யத்தை ஆதரித்தார்கள். பிறகு காங்கிரசிலும் நுழைந்து தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர். மாறுபட்ட காந்தியை சுட்டுக் கொலை செய்தனர்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்