அன்புள்ள தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

இன்று, இங்கு சுயமரியாதை வாசகசாலை ஆண்டுவிழாவை உத்தேசித்து நடைபெறும் உபந்யாசங்களில் நான் “காங்கிரசும் சுயமரியாதையும்” என்பது பற்றி பேசவேண்டும் என்பதாய் குறிக்கப்பட்டிருக்கின்றது.

இது விஷயமாய் எனது அபிப்பிராயங்கள் அனேகமாக தமிழ்நாடு முழுவதும் அறிந்ததேயாகும். எப்படியெனில் “குடி அரசு” பத்திரிகை வாயிலாகவும் அனேக உபந்யாசங்கள் மூலமாகவும், சுமார் 5, 6 வருஷங்களாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றேன். அவற்றில் இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

periyar 408சமீபகாலத்தில், அதாவது இந்த ஒருவருஷ காலத்தில் காங்கிரசிற்கு செய்யப்பட்ட விளம்பரத்தின் காரணமாய் பொது ஜனங்களில் பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப் பற்றி பேசப்படுகின்றது என்பதை தவிர வேறில்லை. ஒரு நாட்டில் புதிதாக ஏதாவது விஷயம் தோன்றினால் அதைப் பற்றி எங்கும் பேச்சாய் இருப்பது சகஜமேயாகும். அதுபோல்தான் இப்போது காங்கிரசைப் பற்றியும் பேசப்படுகின்றது. ஆதலாலேயே தான் நீங்களும் என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 45 வருஷமானபோதிலும், அது எதை உத்தேசித்து, எப்படிப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் அனுபோகம் பெற்ற யாவரும் அறிந்ததேயாகும். அது இராஜ விசுவாசப் பல்லவியைப் பாடி உத்தியோகம் பெற ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமேயாகும். உதாரணம் வேண்டுமானால் நமது நாட்டில் இதுவரை யிலும், இப்போதும் பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வக்கீல்கள், பெரிய பட்டதாரிகள் முதலியவர்கள் எல்லாம் காங்கிரசினாலேயே பெரிய மனிதர்களானவர்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் விளங்கும். நானும் 10 15 வருஷங்களுக்கு முன்பு இரண்டொரு பழைய காங்கிரசுகளுக்கும் சென்றிருக்கிறேன்.

இராஜ விசுவாசம்

அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக 1914-ம் வருஷம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபொழுது கல்கத்தா திருவாளர் பூபேந்தரநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டி ருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரையவர்கள் காங்கிர சுக்கு விஜயமானார். அவர் விஜயமானதும் மற்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு திருவாளர் சுரேந்திரநாத் பானர்ஜீ அவர்கள் உடனே எழுந்து ஒரு இராஜவிசுவாசத் தீர்மானத்தை பிரேரேபித்து, வெகு அழகாக அதாவது “இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கடவுளால் அனுப்பப்பட்ட” தென் றும், “இந்திய மக்கள் தலைமுறை தலைமுறையாய் இராஜவிசுவாசிகளா யிருக்க வேண்டு”மென்றும் பேசி முடித்தார். பலர் ஆமோதித்துப் பேசிய பின், 5 நிமிஷ நேர கரகோஷத்துடன் அது (இராஜவிசுவாச தீர்மானம்) நிறைவே றிற்று. சென்னை “அமிதவாத தேசியவாதி ” களான அய்யங்கார் கூட்டத்தினர் கள் சமீபகாலம் வரை எட்வார்ட் மன்னரும், ஜார்ஜ் மன்னரும் விஷ்ணு அம்சமென்றே பேசி வேதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந் தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டி வந்தார்கள். (அதாவது அரசர்கள் விஷ்ணு அம்சமென்று வேதம் கூறுவதாக உரைத்துக்கொண்டு வந்தார்கள்.)

ஒத்துழையாமை

கடைசியாக சமீப காலந்தொட்டுதான் அதாவது காங்கிரசின் பலனை (உத்தியோகங்களை) ஒரே கூட்டத்தார் (பார்ப்பனர் மாத்திரம்) அனுபவிப்பதில் “பொறாமைப்” பட்ட சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் “காங்கிரசின் பலன் எல்லோருக்கும் கிரமமாய் பங்குகிடைக்க வேண்டு” மென்று கேட்க ஆரம்பித்தது முதல் அதுபோலவே காங்கிரசு பலனும் எல்லோருக்கும் பங்குபோக ஆரம்பித்த பிறகே இராஜவிசுவாசம் போய் ஒத்துழையாமையாகி இராஜவிசுவாசமாய் இருப்பவர்களை “தேசத் துரோகிகள்” என்றும், “சுயநலக்காரர்கள்” என்றும், “வகுப்பு வாதிகள்” என்றும் சொல்ல வேண்டியதாகி வழக்கமாய் அனுபவித்து வந்த பலனை அடைய முடியாமல் போனவுடன் காங்கிரஸ்வாதிகள் (பார்ப்பனர் தேசிய வாதிகளாக பரிணமிக்கத் துடங்கி விட்டார்கள்.

ஜஸ்டிஸ் கக்ஷி என்பதாகவும், முஸ்லீம்லீக் என்பதாகவும் மற்றும் வகுப்புச் சங்கங்கள் என்பதா கவும் சில ஸ்தாபனங்கள் தோன்றி காங்கிரஸ் பலனில் (உத்தியோகங்களில்) பங்கு கேட்காது இருந்திருக்குமானால் இன்றையதினம் இந்தியாவில் இராஜவிசுவாசம் என்பது காங்கிரசுக்கே சொந்தமான ரிஜிஸ்டர் செய்யப் பட்ட (டிரேட் மார்க்காய்) அதாவது உரிமை செய்த வியாபாரக்குறியாய் இருந்து வரும். சென்னபட்டணம் ஜார்ஜ் டவுன் ஆனதுபோல் பார்ப்பனர் மக்கள் பெயரும் ஜார்ஜ் அய்யர், ஜார்ஜ் சாஸ்திரிஆயிருக்கும். உதாரணமாக, ராஜா விஷ்ணு அம்சம் என்பது கூட பார்ப்பனர் சொல்லி இருக்கா விட்டால் இன்று மற்ற யாருக்குமே தெரிந்திருக்காது என்பதேயாகும். அவர் கள் அப்படிச் சொன்னதிலிருந்து இன்னும் பலர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிற்க,

காங்கிரஸ் யாருக்கு?

இன்றும் காங்கிரஸ் என்பதற்கும் ஆறரைக்கோடி தீண்டாதார் என்பவர்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. அவர்கள் இராஜவிசுவாசிகள். மேலும் 8 கோடி மகமதியர் என்பவர்களுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. இவர்களும் இராஜவிசுவாசிகள். வருணாச்சிரமம் பேசும் பார்ப்பனர்களும் தங்களை இராஜவிசுவாசிகள் என்றே சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்த இரண்டு மூன்று கூட்டத்திலும் 100-க்கு ஒருவர் இருவர்கூட காங்கிரஸ்காரர்களாய் இருக்கிறார்கள் என்று தைரியமாய்ச் சொல்ல முடியாது. ஒரு சமயம் மகமதியர்களில் ஒருவர், இருவர் என்கின்ற எண்ணிக்கை இருந்தாலும் கூட தீண்டப்படாதார் என்பவர்களில் சுத்தமாய் “தேசீயவாதிகள்” இல்லை யென்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவர்களிலும் மிகச் சிலரே இருக்கக்கூடும். அவர்களும் வயிற்றுப்பாட்டிற்கு சர்ச்சுகளில் இராஜ வாழ்த்துப் பாடிவிட்டு வெளியில் வந்து வேடிக்கை கூட்டத்தில் “ஜே! போடுபவர்களாகத்தான் இருக்க முடியுமேயொழிய “இராஜா வேண்டாம்” என்கின்றவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மற்றபடி சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் தவிர பார்ப்பனரல்லா தார்களில் வயிராரக் கஞ்சி குடிக்கும் 100 க்கு 95 பேருக்கு மேலாகவே காங்கிரசினிடம் கவலை யில்லாதவர்களும் அதை ஒப்புக்கொள்ளாதவர்களுமே இருப்பார்கள். வேண்டுமானால் தேர்தலில் ஓட்டுப் பெற வேண்டியவர்கள் இரண்டுக்கும் நல்ல பிள்ளைகள் போல காட்டிக் கொள்வார்கள். மற்றும் இதை ஒரு வியாபாரமாய் கருதுகிறவர்கள் அதுவும் லாபநஷ்டம் பார்த்து இதை பயன்படுத்திக் கொள்ளுபவர்களாகவே இருப்பார்கள்.

இவற்றைத் தவிர வகுப்பு மாநாடுகள் என்பவைகள் பெரிதும் இராஜ விசுவாசப் பல்லவி பாடிக் கொண்டுதான் வருகிறது என்றாலும் ஒரு சில வாலிபர்கள் பார்ப்பனரல்லாதாரிலும் காங்கிரசை பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் மறக்கவில்லை. அதுவும் அப்படிப்பட்ட வாலிபர்களும் ஒரே கொள்கையாய் தொடர்ந்து அதில் இருக்கின்ற வாலிபர்கள் என்பவர்கள் பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டியவர்களாகவே இருப்பார்கள். எந்த ஸ்தாபனமானாலும் அது ஒரு சம்பளம் கிடைக்கும் ஸ்தாபனமாகவும் வாழ்வுக்கு சௌகரியமான ஸ்தாபனமாகவும் விளம்பரத்துக்கு அனுகூலமானதாகவும் ஏற்பட்டு விட்டால் பிறகு அதில் கலந்து கொள்ளும் மக்கள் ஏராளமாகி விடுவார்கள் என்பதையும் அந்த ஸ்தாபனத்தைப் பற்றி புராணம் பாடுவார்கள் என்பதையும் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆதலால் அதைப் பற்றியே காங்கிரசின் யோக்கியதையை நிர்ணயித்து விடமாட்டீர்கள்.

காங்கிரஸ் கொள்கை

ஆகவே இவை ஒருபுறமிருக்க காங்கிரசின் கொள்கைகள்தான் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.

எந்தக் காரணங்களால் இந்த நாடு‘அன்னியநாட்டார்’ என்பவர்களின் ஆட்சிக்கு ஆளாக நேரிட்டதோ, அதிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை சிறக்க நேரிட்டதோ அந்தக் காரணங்களை இல்லாமல் செய்ய இந்தக்காங்கிர சில் ஏதாவது ஒரு கொள்கை இருக்கின்றது என்பதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். இந்தியாவின் பெருமையைப் பற்றி யார் என்ன பேசுவதாயிருந்தாலும் இந்தியாவில் பல மதம், பல ஜாதி, பலவித உயர்வு தாழ்வு என்பவைகள் இருந்து வருகின்றதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் தெருவில் நடக்காத, கண்களில் தென்படாத ‘இழிமக்கள்’ இருந்து வருவது இரகசியமல்ல. இந்தக் காரணங்களே இன்று அன்னிய ஆட்சி இந்த நாட்டில் இருந்து வருவதற்கும், பார்ப்பனன் பாடு படாமல் வாழ்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் காரணம் என்பதையும் ஒப்புக் கொள்ளாதவர்கள் இல்லை. இதைச் சரிப்படுத்த யார் என்ன செய்தார்கள்? எந்தக்கொள்கையை காங்கிரஸ் திட்டத்தில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்? அல்லது அன்னிய ஆட்சியை ஒழித்த பிறகாவது இதற்கு என்ன மார்க்கம் செய்வதாகக் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? என்பதை கவனித்துப் பாருங்கள்.

சுயராஜ்ய உரிமை

சுயராஜ்யத்தில் “மதங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது “மத ஆதிக்கங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது அல்லது அதுதான் இல்லாவிட்டாலும் “ஜாதிகள் ஒழிக்கப்படும்” என்றாவது “ஜாதிப் பாகுபாடுகள் ஓழிக்கப்படும்” என்றாவது எங்காவது தீர்மான ரூபமாகவாவது எழுதப்பட்டிருக்கின்றதா? எங்காவது யாருடைய வாயினாலாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றேன். மற்றும் மதங்களையும் ஜாதிப் பாகுபாடுகளையும் காப்பாற்றப்படும் என்று உறுதிகூறப்படுகிறதா? இல்லையா? என்றும் கேட்கின்றேன்.

அதாவது மதத்தில் நடுநிலைமை வகிப்பதாகவும், வருணாச் சிரமம் காப்பாற்றப்படும் என்பதாகவும், ஜாதியில் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பாருடைய உரிமைக்கும் பங்கம் விளைவிக்கப்பட மாட்டாது என்பதாகவும் எந்த மனிதனுடைய மாறுபட்ட அபிப்பிராயத்தையும் புண்படுத்தப்பட மாட்டாது என்பதாகவும் அல்லவா ஒவ்வொரு ஜாதி மத ஆதிக்கக்காரனுக்கும் உறுதி கூறப்பட்டு வருகின்றது. பிரஜா உரிமைத் திட்டத்தில் 14வதாக “மத விஷயங்களில் சர்க்காரார் தலையிட மாட்டார்கள்” அதாவது மதக் கொள்கைகளை மாற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்றும், 17வதாக “மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டோர் மனது புண்படும்படியாக எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்” என்றும், அதாவது “பிராமணர்கள்” மனம் புண்படும்படி எதுவும் செய்யப்பட மாட்டாது என்றும் ஸ்பஷ்டமாகக் குறிக்கப்பட்டிருக்கின்றதா?இல்லையா?

ஆதியிலும், இந்தக் கொள்கைகளையேதான் நமது பார்ப்பனர் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டையும் ஒப்புக் கொள்ளச் செய்து இதையே அரசியலிலும் அனுசரிக்கும்படி சட்டமாக்கி கட்டாயப்படுத்தியதன் பயனாகத்தான் இதுவரை இந்தக் கவர்ன்மெண்டில் சரியான சீர்திருத்தம் ஏற்படுத்த முடியாமலேயே இருந்து வருகின்றது. உதாரணமாக, சாரதா சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். விவசாரிகள் சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்காரால் சட்டமாக்கப்பட்டும் ஒரு சில ஜனங்கள் மனம் புண்படுகின்றதென்ற காரணம் கொண்டு அவர்களது முட்டுக்கட்டையாலேயே எதுவும் சரிவர அமுலுக்கு வரமுடியாமல் இருந்துகொண்டு வருகின்றது. பார்ப்பனீயத் தொல்லை இல்லாதிருக்குமானால் அவை தானாக அமுலில் இருக்கும். இவ்விஷயத்தில் இன்றும் சட்டத்தை மீறுகின்றவர்கள் ஜனங்களா? சர்க்காராரா என்று கேட்கின்றேன். இந்த நிலைமை புதிய அரசாங்கத்திலும் 14, 17 பிரிவுகளை வைத்துக் கொண்டு எப்படி மாற்றக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். பாமரமக்கள் - பகுத்தறிவற்ற மூடமக்கள் ஏமாறும்படி பேசிவிட்டால் போதுமா? உண்மையை பகுத்தறிவுடன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? என்று கேட்கின்றேன்.        

மனம் புண்படாது

மத நடு நிலைமை வகிக்கும் சர்க்காரால் - எந்த மனிதனுடைய மனதும் புண்பட சகியாத சர்க்காரால் அது தன்னை எவ்வளவுதான் பூரண சுயேச்சை உடையது என்று சொல்லிக் கொண்டாலும் அதனால் நமக்கு என்ன பலன் உண்டாகக் கூடும்? வேண்டுமானால் பார்ப்பான் இன்றைய வாழ்வைவிட இன்னம் பலமடங்கு மேலாகவே வாழக்கூடும். ஆனால் தெருவில் நடக்க உரிமையில்லாத “பறையன்” நிலைமையும் சரீரத்தில் பாடுபட்டாக வேண்டிய “சூத்திரன்” நிலைமையும் என்னவாகும்? என்றுதான் கேட்கின்றேன். இப்பொழுதும் பறையன் வீதியில் நடந்தாலே எத்தனை பார்ப்பனர் மனம் புண்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் மனமும் புண்பட சகிக்காத சுயராஜியம் யாருக்குப் பயன் படக்கூடும்?

கோவில் பறிமுதல்

மற்றும் ஒரு சமயம் திரு ஜவஹர்லால் அவர்கள் பார்ப்பனரிடையே பேசும்போது “யாவருடைய எந்த வகுப்பாருடைய உரிமையும் சுயராஜ்யத்தில் பரிக்கப்பட மாட்டாது” என்று சொன்னார். ஆனால் உடனேயே மற்றொரு கூட்டத்தில் பேசும்போது “தீண்டாதாரை அனுமதிக்காத கோவில் பறிமுதல் செய்யப்படும்” என்று சொன்னார். இவற்றை திரு காந்தியவர்களும் ஆமோதித்து வருகிறார்.

அப்படியானால் மக்களின் மத, சாஸ்திர பழக்க வழக்க சம்பந்தமான உரிமைகளை எல்லாம் என்ன செய்வது? அவற்றை ஒழிக்க ஆரம்பித்தால் யாருடைய மனதும் புண்படாதா? எந்த வகுப்பாருடைய உரிமையாவது இதனால் பாதிக்கப்படாதா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய நமது நாட்டு வாழ்க்கையே மேல்கண்ட மதம், சாஸ்திரம், புராணம், பழக்க வழக் கங்களை ஆதாரமாகக் கொண்டுதானே இருந்து வருகின்றது? எனவே, இதிலிருந்து ஒருவனுடைய உரிமை என்றால் என்ன என்பதைக் கவனித்து முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரசில் மனித உரிமை என்பது மதக் கொள்கைப்படி ஏற்பட்ட உரிமையா? சாஸ்திரத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது இதுவரை அனுபவத்தில் பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது தேச ஆதாரத்திற்கு ஏற்பட்ட உரிமையா? மனித இயற்கைக்கு ஏற்பட்ட உரிமையா? எதைக் குறிக்கின்றது என்று கேட்கின்றேன்.

மத உரிமை என்றால் இந்து மதத்தின்படி மேளமடிக்க வேண்டும். இஸ்லாம் மதத்திற்கு மேளம் கூடாது என்பது போன்ற உரிமைகளில் எதைக் காப்பாற்றுவது?

பார்ப்பனனுக்கும், பறையனுக்கும் உள்ள மதக்கொள்கை உரிமை, சாஸ்திர உரிமை, பழக்க வழக்க உரிமை ஆகியவைகள் என்ன ஆவது? மக்களுக்கு மக்கள், ஜாதிக்கு ஜாதி, ஊருக்கு ஊர் மாறுபட்ட தேசாச்சார உரிமை என்ன ஆவது? மனித இயற்கை உரிமை என்றால் பழக்க வழக்க மத உரிமை என்ன ஆவது? முதலாளி பாதுகாப்பும், ஜமீன்தாரன் பாது காப்பும், வருணாச்சிரம பாதுகாப்பும் என்ன ஆவது?

ஆகவே, இவர்கள் இருவரும் இதைக் கேட்கும் மக்களை முழு மூடர்கள் என்று கருதிக் கொண்டே இந்தப்படி அதாவது யாருடைய உரிமையும் காப்பாற்றப்படுமென்று ஒருபுறமும், பறிமுதல் செய்யப்படும் என்று மற்றொரு புறமும் பேசுகின்றார்கள் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில்,

ஜனநாயகமா? ஏக நாயகமா?

முதலாவது திரு. காந்தியும், திரு. ஜவஹர்லாலும் கேட்கும் சுயராஜியம் ஜனநாயக சுயராஜியமா? ஏகநாயக சுயராஜியமா என்பதை முதலில் விளக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகமானால் தீண்டாதவர்களை “கோவிலுக்குள் விடமாட்டேன், குளத்தில் விடமாட்டேன்” என்று சொல்லு கின்றவர்கள் யார்? பிறகு அந்தக் கோவிலையும், குளத்தையும் பரிமுதல் செய்கின்றவர்கள் யார்? என்று யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் விடமாட் டேன் என்று சொன்னால் அந்த ஜனப்பிரதிநிதி சர்க்கார், யார் மனதையும் புண்படுத்தாத சர்க்கார் கோவிலை எப்படி பறிமுதல் செய்ய முடியும்? கோவிலுக்குள் பறையனை விட இஷ்டப்படாத ஜனங்கள் இஷ்டப்படும் பிரதிநிதியை தெரிந்தெடுப்பார்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்கும் இராஜியபாரம் ஜனநாயக ராஜியபாரமாகுமா? மற்றும் இந்திய ஜனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி வித்தியாசத்தையும், தீண்டாமையையும் ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜியம் வேண்டுமென்றால் இது பித்தலாட்டமா? அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பதை யார் வேண்டாமென் கின்றார்கள்? இஸ்லாமானவர் ஆnக்ஷபிக்கின்றார்களா? கிறிஸ்துவர்கள் ஆnக்ஷபிக்கின்றனர்களா? அல்லது கிருஸ்துவ அரசாங்கம் ஆnக்ஷபிக் கின்றதா? ஆரம்பித்திலேயே புரட்டு பேசும் சுயராஜியம் அதிகாரம் வந்தால் கொடுமை செய்யுமா? நன்மை செய்யுமா? இன்று தீண்டாமை அனுசரிக்கும் ஜனங்களுக்கு சர்வ அதிகாரம் தந்தால் தீண்டாமையை பலப்படுத்துவார் களா? தளர்த்துவார்களா? எந்த அரசாங்கத்தில் தீண்டாமை இருந்தாலும் தீண்டாமையை அனுசரிக்கின்றவர்கள் இன்று சுயராஜியம் கேட்கும் இந்துக்களே யொழிய வேறல்ல.

ஆகவே இந்தமாதிரி வார்த்தைகள் மக்களை ஏய்க்கும் தந்திர வார்த்தை அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள்.

எனது அனுபவம்

சகோதரர்களே! காங்கிரசில் நான் இருக்கும்போது “காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது” என்று ஒரு தீர்மானம் காங்கிரஸ் கமிட்டியில் நானும் திரு. எஸ். இராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால் உடனே திருவாளர்கள் சி.இராஜகோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டி.வி.எஸ். சாஸ்திரி, என்.எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமாச் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே “எல்லோரையும் சமமாய் வைத்து சாப்பாடு போட வேண்டும்”என்று நாங்கள் சொன்னதற்கு மேற்கண்ட தலைவர் களேதான் “அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப் படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்தி யாருடைய உரிமையையும் பறிக்கக் கூடாது” என்று பதில் சொன்னதோடு அதற்காக அந்த குருகுலமே கலைக் கப்பட்டு இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன். இந்த விஷயத்தை திரு காந்தியும் ஒப்புக்கொண்டு அது அவரவர் தனி அபிப்பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப்பிரயாணத்தில் சமாதானம் சொல்ல வில்லையா? என்று கேட்கின்றேன்.

இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்ய திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற “தர்ம நீதி” எடுத்தெறியப் பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்ட தில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனு போகத்தை இங்கு எடுத்துச்சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ்.சீனிவாசய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக்காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட எச்சிலை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.

இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு. வெங்கிடுசாமி பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரிய குளத்திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும், காலை பலகாரம் சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊரிக் கொண்டி ருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தான் காங்கிரசில் உழைத்தேனானாலும் காங்கிரசில் ஜாதிவித்தியாசம் பாராட்டப்படுவதில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக்கொள்ளுகின்றேன்.

ஜாதி போய் விட்டதா?

இவ்வளவு தூரம் போவானேன்? இன்றும் காங்கிரசிலுள்ள காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் மற்றும் “காங்கிரசும் மகாத்மாவும் தான் இந்தியாவுக்கு விடுதலை, சமத்துவம் வாங்கிக் கொடுப்பவர்?” என்று சொல்லும் பார்ப்பனரில் 100க்கு 5 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? விடத் தயாராயிருக்கின்றவர்களா? என்று கேட்கின்றேன். பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு 10 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? என்று கேட்கின்றேன். மூடி வைப்பதில் பயனென்ன? ‘வாயிக்கு உருசியான சாப்பாடு எங்கு கிடைத்தாலும் சாப்பிடலாம்’ என்கின்ற ஒன்றிரண்டு “துறவி” களைப் பார்த்து முடிவு கட்டலாமா? என்று கேட்கின்றேன்.

சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்த மனிதர்கள் தானே இந்த நாட்டு மக்களாயிருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தானே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள். ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்?

பொருளாதாரம்

மற்றும் பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதானதானால் ஆகட்டும் . இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச் சேருவதற்கு மார்க்கமில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இன்றையதினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக்கொடுத்து விட்டால் இந்த ஏழை நாளைக்கு கயா சிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி அபிஷேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டேபணத்தைத் துலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும், தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும்தான் மறுபடியும் பணக்காரன் ஆய்விடுவான் என்பதும் எனக்குத்தெரியும். ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒரு பக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும் யாருக்கும் எந்தத்தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும் படிக்கவும் சௌகரி யமும், அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன்.

வருணாச்சிரம சுயராஜ்யத்தில் - யார் மனதையும் புண்படுத்தாத சுயராஜியத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மதமும் கோவிலும்

மற்றும் இன்றைய இந்தியா நாட்டின் அடிமைத்தனத்துக்கும், தரித்திரத்திற்கும் ஆதரவாயிருப்பது மதமும் கோவில்களும் என்பது நீங்கள் எல்லோருமே ஒப்புக்கொண்ட விஷயமாகும். ஆகவே காங்கிரசினால் இந்த மதமும் கோவில்களும் ஒழியுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்று நமது நாட்டில் காங்கிரசில் இருப்பவர்கள் பெரிதும் மதப்புரோகிதக் கூட்டத்தாரும் அவர்களது மக்களும், கோவில் பூசாரி மக்களும் அல்லவா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் இவற்றை ஆதரிக்கின்றவர்கள் அல்லவா? என்று கேட்கின்றேன். மதமும் கோவிலும் போய் விடுவது உண்மையானால் இந்த ஆட்கள் “காங்கிரசுக்கு ஜே!” “காந்திக்கு ஜே!!” என்று கத்துவார்களா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். ஏதோ பார்ப்பனருக்கு கையாளாய் இருப்பதின் மூலம் ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கை நடைபெறுகின்றது என்பது தவிர காங்கிரசின் யோக்கியதை அறியாத காங்கிரஸ் பக்தர்கள் யார் இருக் கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே சகோதரர்களே! காங்கிரசு பைத்தியம் என்கின்ற பார்ப்பன ஆட்சியில் இருந்து விலகி மக்களுக்கு உண்மை சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டாலொழிய இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை என்பது தான் எனது உறுதி.

(குறிப்பு : 04.07.1931 ஆம் நாள் நாகர்கோயிலில் நடைபெற்ற நாகர் கோயிலைச்சேர்ந்த கோட்டாறு சுயமரியாதை வாசக சாலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 12.07.1931)

Pin It