இந்து மத விரோதிகள், இந்து மதத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறவர்கள் என்று நம் மீது ஒரு விமர்சனம் உண்டு. அதனை நாம் மறுக்கவில்லை. உண்மைதான், நாம் இந்து மத விரோதிகளே, இந்து மதத்தைக் கூடுதலாகக் குறி வைத்துத் தாக்குகின்றவர்களே! எனினும் அதற்கு என்ன காரணம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவாளர்களாகிய நாம், எந்த மதத்தையும் ஏற்பதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை, பின்பற்றுவதுமில்லை! ஆனாலும் இந்து மதத்தின் மீது நமக்கு இருக்கும் கூடுதலான கோபத்திற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம். இந்து மதம் என்பது சாதிகளின் தொகுப்பாக இருக்கிறது என்பதும், பிறப்பின் அடிப்படையில் உருவான சாதியை வைத்து மனிதர்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படுகிறார்கள் என்பதும்தான் நம்முடைய குறிப்பான சினத்திற்குக் காரணம்!

sugi sivam 224“அதெல்லாம் அந்தக் காலம், இப்ப யாரு சார் சாதி எல்லாம் பார்க்கிறார்கள்?” என்று கேட்கும் அறிவாளிகள் நம்மிடமும் உண்டு! இன்று இந்த நிமிடம் வரையில்; இந்தியாவில், இந்து மதத்தை ஏற்றவர்களிடையே சாதி பார்த்துத்தான் அனைத்தும் நடக்கின்றன என்பதும், சாதிதான் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிறது என்பதும் அசைக்க முடியாத உண்மையாக இருக்கிறது!

தொடக்கத்தில் வருணமாக இருந்தவை, பிறகு சாதிகளாக, கிளைச்சாதிகளாக, உட்சாகிகளாகப் பெருகின என்பதே எதார்த்தம்!

சாதிகளுக்கு எல்லாம் மூலமாக இருந்த வருணப் பிரிவுகளை, இப்போதும் அவர்கள் உறுதியாக பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி பள்ளித் தேர்வில் கொடுக்கப்பட்ட ஒரு வினாத்தாளே சாட்சியாக நிற்கிறது!

ஆறாம் வகுப்பு, சமூக அறிவியல் தேர்வின் வினாத்தாள் இது!

ஒன்றை இன்னொன்றுடன் பொருத்துக (match the following ) என்னும் பகுதியில் இவ்வினா இடம்பெற்றுள்ளது. ஒரு பக்கம் வைசியர், சூத்திரர், பிராமணர், சத்திரியர் என்றும், மறுபக்கம் குருமார்கள், அரசர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என்றும் கொடுக்கப் பட்டிருக்கிறது. யார் குருமார், யார் வணிகர் என்று மாணவர்கள் பொருத்திக் காட்ட வேண்டும். ஆங்கிலத்தில் (labourers) என்று கொடுக்கப் பட்டிருந்தாலும் அதன் பொருள் என்ன என்று நாம் அறிவோம். அடிமைகள், கூலிகள், ஏவல் வேலை செய்வோர் என்பதுதான் அதன் பொருள்.

ஆறாம் வகுப்புப் பிள்ளைகளின் மூளைகளில் இந்த நஞ்சு விதைக்கப்படுகிறது என்றால், இவர்கள் இன்னும் திருந்தவே இல்லை என்பது தானே உண்மை! இப்படி மனிதர்களை பிறப்பினால் பிரித்தாளும் ஓர் அமைப்பு அல்லது ஒரு மதம் எப்படி எல்லோருக்குமான மதமாக இருக்க முடியும்? இந்துக்களை ஒடுக்குகிறவர்கள், இந்துக்கள் எனப்படுவோரின் இன்னொரு பகுதியாக இருக்கிறார்கள் என்றால், இது எப்படி இந்து மதமாகும்? பார்ப்பன மதம் தானே இது! அதை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கத்தானே செய்கிறது!

50 ஆண்டுகளாக ஆன்மீகப் பரப்புரைகளை, இந்து மதக் கருத்துகளைப் பரப்பி வரும் சுகி. சிவம் போன்றவர்களே, அண்மையில் மனம் நொந்து பேசி இருப்பதை வலையொளியில் நாம் பார்த்தோம். அவரைப் பார்த்து கல்யாணராமன் என்னும் ஒரு பார்ப்பனர், “சூத்திர உபன்யாசகர்” என்று குறிப்பிட்டுள்ளதைச் சுகிசிவம் எடுத்துக் காட்டுகிறார். எத்தனை ஆண்டுகள் மதக் கருத்துகளைப் பரப்பினாலும், எவ்வளவுதான் மத இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தாலும், நீ பிராமணனா சூத்திரனா என்பதுதான் அடிப்படை என்றால், இது எப்படி எல்லோருக்குமான மதமாக இருக்க முடியும்?

“நம் நாட்டிற்கு விடுதலை வந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் சமத்துவம் வரவே இல்லையா?” என்று சுகி.சிவம் கேட்கிறார். ஆம், அண்ணல் அம்பேத்கர் அன்றே இந்த வினாவிற்கு விடை சொல்லி இருக்கிறார். “நமக்கு அரசியல் ஜனநாயகம் (political democracy) வந்திருக்கிறதே தவிர, சமூக ஜனநாயகம் (social democracy ) இன்னும் வரவில்லை.”

அதற்குத் தடையாக இருக்கிற இந்து மதத்தைக் குறி வைத்துத் தாக்குவதில் என்ன பிழை?

-  சுப.வீரபாண்டியன்