நாகர் பழங்குடிகளின் அரசுதான் மகத அரசு:

கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து 16 சனபதங்கள் எனப்படும் பழங்குடி அரசுகள் வட இந்தியாவில் உருவாகியிருந்தன. ஆனால் ஆறாம் நூற்றாண்டின் முடிவில் நான்கு அரசுகள் மட்டுமே இருந்தன. அவற்றில் லிச்சாவி, மல்லம் ஆகிய இரண்டும் பழங்குடிச் சிறுகுழு ஆட்சிகளைக் கொண்டிருந்தன. கோசலம், மகதம் ஆகிய இரண்டும் வலிமையான முடியரசுகளாக இருந்தன(1). இறுதியில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பிற அனைத்தையும் வென்று மகதம் ஒரு பேரரசாக ஆகியது. கி.மு. 642இல் சிசுநாக் (Sisunag) என்பவர் மகத அரசை உருவாக்கியதாகவும் இதன் ஐந்தாவது மன்னன்தான் பிம்பிசாரன் (கி.மு.543-493) எனவும் அவன் கீழ் மகத அரசு ஒரு பேரரசாக ஆகியது எனவும் கி.மு. 413 வரை இந்த சிசுநாக வம்சம் ஆண்டதாகவும், சந்திரகுப்த மௌரியன் சிசுநாக வம்சத்தின் உறவினன் எனவும் ஆகவே அவன் உருவாக்கிய மௌரியப் பேரரசும் நாகப்பேரரசுதான் எனவும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்(2).

vincent a smith book on asokaபிம்பிசாரன் சிசுநாகர் வம்சத்திலிருந்து தோன்றியவன் என சமற்கிருத புராணங்கள் கூறுவதாக டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். அவர் மேலும், மகத அரசின் தலைநகரில் இருந்த இராஜ்கீர் கோயில் (மணியார் மத்) நாகர் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு, அதன் நற்பெயர் பல நூற்றாண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் நாகர் அரச குலம் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள சத்திரிய குலம் எனவும் நாகர்கள் வைதீக வழக்கங்களில் அதிகப் பற்றில்லாதவர்கள் எனவும் பிராமணர்களின் குறிப்புகள் வெறுப்புடன் நாகர்களின் மகத அரசு குறித்துப் பேசுவதாகவும் கோசாம்பி குறிப்பிடுகிறார்(3). இவை மகத அரசு ஆரிய பழங்குடிகளுக்கு முற்பட்ட, நாகர்கள் என்ற பூர்வீகப் பழங்குடிகளின் அரசு எனக் கருத வைக்கிறது. நாகர்கள் பண்டைய தமிழ்ப்பழங்குடிகள் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் பிம்பிசாரன் அரியங்கா வம்சம் எனவும் கி.மு. 461இல்தான் சிசுநாகர் வம்சம் மகத அரசைக் கைப்பற்றிக்கொண்டது எனவும் வரலாற்றில் சொல்லப் படுகிறது. அதேசமயம் மௌரியர்கள் தங்களை ஆரியர்கள் என்றுதான் சொல்லிக்கொண்டனர். இவை அனைத்தும் ஆய்வுக்குரியன.

வட மேற்கு இந்தியாவில் வகுப்புகள் இல்லை:

கி.மு. 8ம் நூற்றாண்டில் கங்கைப் பகுதியில் குடியேறி, அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குள் தொழில் வளர்ச்சி அடைந்த ஆரியமக்களிடையே வகுப்புகள் உருவாகியிருந்தன. ஆனால் வடமேற்கு இந்தியா போதிய அளவு வளர்ச்சி பெறாததால் அங்கு கி.மு. 6ஆம் 5ஆம் நூற்றாண்டில் கூட வகுப்பு வேறுபாடுகள் உருவாகி இருக்கவில்லை. வடமேற்கில் ஒரே குடும்பத்தில் ஒருவர் வேளாளராகவும், ஒருவர் படை வீரராகவும், ஒருவர் நாவிதராகவும் இருந்துகொண்டு, பிராமணத் தொழிலையும் செய்து வந்தனர் எனவும் இதனை கிழக்கில் உள்ளவர் பழித்துரைத்தனர் எனவும் கோசாம்பி கூறுகிறார்(4). வடமேற்கு எல்லைப்புறத்துப் பெண்கள் அடங்கி ஒடுங்கி நடக்கவில்லை. புதியவர்கள் முன்னிலையில் வெட்கமோ, முதியவர்கள் முன்னிலையில் பணிவோ காட்டுவதில்லை…..ஆண்பெண் இருபாலரும் இறைச்சி உண்டனர்; கடுமையான மதுபானங்கள் பருகினர்; பலர் பார்த்து மகிழும்படி ஆடையற்ற நிலையில் ஆடல் நிகழ்த்தினர். இவை கிழக்கத்திய பிராமணர்களுக்கு ஆபாசமாகத் தோன்றியது எனக் கூறுகிறார் கோசாம்பி(5). வடமேற்கு மக்கள் அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்த காலத்தில் கூட இனக்குழு நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். அவன் இனக்குழு அரசுகளோடுதான் போரிட வேண்டியிருந்தது. ஆகவே அவர்களிடத்தில் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் உருவாகி இருக்கவில்லை. ஆதலால் அவர்களிடத்தில் அன்று தொழில்வேறுபாடுகளோ, வகுப்பு வேறுபாடுகளோ உருவாகி இருக்கவில்லை.

வடமேற்கு இந்தியாவின் மிக முக்கிய மையம் எனக் கருதத்தக்கது தட்சசீலம். அதுதான் இந்தோ ஆரியர்களின் முதல் குடியிருப்பு. ஆனால் “கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது” எனக் கூறுகிறார் கோசாம்பி(6). மேலும் அவர் அலெக்சாண்டர் படையெடுத்து வந்த போது, ‘தட்சசீல நகரம் மாட்டுக் கொட்டில்களைத் திரட்டி வைத்தாற்போல ஏழ்மையான தோற்றத்தைத் தந்தது’ என்கிறார்(7). வடமேற்கு இந்தியா மௌரியர் காலத்திற்கு முன்புவரை தொழில் வளர்ச்சி அடையாத இனக்குழு மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது என்பதை தட்சசீலம் ஒரு சிறு கிராமமாக, மாட்டுக் கொட்டில்களைத் திரட்டி வைத்தாற்போல இருந்தது என்ற தரவுகள் உறுதி செய்கின்றன. ஆனால் ‘மேற்படிப்பிற்காக பிராமணர்களும் சத்திரியர்களும் கங்கைப் பிரதேசத்திலிருந்து உத்தரபாத வணிக வழியில் பயணம் செய்து தட்சசீலத்திற்கும் அதற்கு அப்பாலும் சென்று, யக்ஞம், பிராமணர்களின் வைதீக மந்திர சாத்திரங்கள், சரியான ஆரிய நடைமுறைகள், மருத்துவம், பிழையற்ற சம்சுகிருதம் ஆகியவற்றைக் கற்றுத் திரும்பினர்’ என கோசாம்பி குறிப்பிடுகிறார்(8).

வைதீகப் புனைவுகள்:

கோசாம்பி கூறுவது குழப்பத்தைத் தருகிறது. அன்று தட்சசீலத்தில் ஒரே குடும்பத்தில் ஒருவர் வேளாளராகவும், ஒருவர் படை வீரராகவும், ஒருவர் நாவிதராகவும் இருந்துகொண்டு, பிராமணத் தொழிலையும் செய்து வந்தனர். மேலும், வடமேற்கு எல்லைப் புறத்துப் பெண்கள் அடங்கி, ஒடுங்கி நடக்கவில்லை. புதியவர்கள் முன்னிலையில் வெட்கமோ, முதியவர்கள் முன்னிலையில் பணிவோ காட்டுவதில்லை…… ஆண் பெண் இருபாலரும் இறைச்சி உண்டனர்; கடுமையான மதுபானங்கள் பருகினர்; பலர் பார்த்து மகிழும்படி ஆடையற்ற நிலையில் ஆடல் நிகழ்த்தினர். இத்தகைய பழக்க வழக்கங்கள் எல்லாம் கிழக்கத்திய பிராமணர்களுக்கு ஆபாசமாகத் தோன்றின என டி.டி. கோசாம்பி கூறியுள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

ஆகவே அன்று தட்சசீலம் வளர்ச்சியடையாத இனக்குழு மக்கள் வாழும் பகுதியாக இருந்தது. அங்கு கண அமைப்பும், அகமணமுறையும், இணைமணமும் இருந்தது. அகழாய்வுத்தரவுகளும் தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகத்தான் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன. ஆனால் கங்கைப் பகுதி வளர்ச்சியடைந்த பகுதி. புதிய புதிய கருத்துகள் அங்கு உருவாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்படிப்பிற்காக பிராமணர்களும், சத்திரியர்களும் தட்சசீலம் சென்றனர் எனச்சொல்வது புரியாத புதிராக உள்ளது. தட்சசீலம் என்ன மேற்படிப்பைக் கற்றுத் தர முடியும் எனத் தெரியவில்லை.

அங்கு இனக்குழு கால மரபுகளை அறிந்த முதியோர்களும், பழம்பெரும்பூசாரிகளும், இயற்கை மருத்துவர்களும் அவர்கள் கற்றுத்தரும் சில விடயங்களும் இருந்திருக்கலாம். அவர்களில் சிலர் பண்டைய புரோகிதத் தொழிலையும் அதற்கான வேதகாலச் சடங்குகளையும் கற்றுத் தரக் கூடியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொள்ளும் ‘மேற்படிப்பு’ எனக் குறிப்பிடுவது தட்சசீலம் ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது. அன்று அங்கு கல்வியறிவோ, படிப்பறிவோ எதுவும் இல்லாத அநாகரிக மக்கள் வாழ்ந்த நிலையில் அங்கு பல்கலைக்கழகம் இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை என்னவென்று புரிந்து கொள்வது? வைதீக பிராமணியத்தின் புரட்டுகளை ஏரணக் கண்ணோட்டம் இல்லாது ஏற்றுக் கொள்வது என்றுதான் இதனைக் கருத வேண்டியதுள்ளது. இவை போன்ற வரலாற்று ஆசிரியர்களின் முரண்பாடான குழப்பமான கருத்துகள் ‘வேதகாலம் ஒரு பொற்காலம்’ என்று கூறுகிற பிராமணப் புரட்டுக்கு முட்டுக் கொடுப்பதாக ஆகிவிடுகிறது.

பழந்தமிழகம்:

வட இந்திய அறிஞர்கள் அன்று பல விடயங்களை தமிழகம் சென்றுதான் கற்று வந்தனர். கி.மு. 1000 முதலே வளர்ச்சி பெற்ற நகரங்களைக் கொண்டதாக தமிழகம் இருந்து வந்தது. மகதப் பேரரசை விடப் பல வகையிலும் முன்னேறிய பகுதியாகவும் பழந்தமிழகம் இருந்து வந்தது(9). ‘புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துகள் நிலவின. அதனைப் படிப்பதற்காக வட இந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர். சமற்கிருத நூற்சான்றுகளைக் கொண்டு உலகாயதம் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இருந்து வருவதாகத் தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி அவர்களும், பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறியுள்ளனர்’ எனக் கூறுகிறார் வானமாமலை(10). ஆனால் ‘பெரும்பாலான தீபகற்பப் பகுதிகள் அன்றளவிலும்(மௌரியர் காலத்திலும்) முழு வளர்ச்சி அடையாமல் இருந்தன……. ஆகவே தென்கோடிப் பகுதிகளை வெல்வதால் மௌரியர்களுக்கு ஒரு பயனும் இல்லை” எனக் கூறுகிறார் கோசாம்பி(11). கீழடி, முசிறி போன்றவைகளில் நடந்த அகழாய்வுகளுக்குப் பிறகுதான் வட இந்திய வரலாற்று அறிஞர்களின் பழந்தமிழகம் குறித்த கண்ணோட்டத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம்.

ஆகவே பீகார் போன்ற கிழக்குப்பகுதிகளில் வகுப்பு வேறுபாடுகள் உருவான காலத்தில் கூட வட மேற்கு இந்தியாவில் வகுப்பு வேறுபாடுகள் உருவாக வில்லை. ஆதலால் கிழக்கே இருந்த கீழ் வகுப்பு இளைஞர்கள் வட மேற்குப் பகுதிக்குச் சென்று அங்கு பிராமண மந்திர தந்திரங்களைப் பயின்று கிழக்கே வந்து ஏமாற்றி, புரோகிதத் தொழிலைச் செய்து வந்தனர் எனக் கூறுகிறார் கோசாம்பி. சாதிய வேறுபாடுகள் அன்று இல்லை என்பதால் வகுப்புகள் மட்டுமே இருந்ததால் இவை சாத்தியமாகின. கோசாம்பி அதனைச் சாதிய வேறுபாடாகக் கருதுகிறார். அது வருண, வகுப்பு வேறுபாடுகள்தானே ஒழியச் சாதிய வேறுபாடுகள் அல்ல. அன்று கிழக்கில் தொழில் அடிப்படையிலான வகுப்பு வேறுபாடுகள்தான் உருவாகி இருந்தன. வைதீகப் பிராமணியத்தின் நால்வருணச் சாதி பற்றிய கருத்தியல் உருவாகி இருக்கவில்லை. ஆனால் வட மேற்கில் தொழில் அடிப்படையிலான வகுப்பு வேறுபாடுகள் கூட அன்று உருவாகி இருக்கவில்லை. அதனால்தான் வடமேற்கில் ஒரே குடும்பத்தில் ஒருவர் வேளாளராகவும், ஒருவர் படை வீரராகவும், ஒருவர் நாவிதராகவும் இருந்து கொண்டு, பிராமணத் தொழிலையும் செய்து வந்த நிலை இருந்து வந்தது. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மாபெரும் சிந்தனைப் புரட்சி ஏற்பட்டது. தொழில்பிரிவுகளும் வகுப்புகளும் உருவாகியிருந்தன. உபநிடதக் கருத்துகள் தோன்றி இருந்தன. பொருள்முதல்வாதக் கருத்துகளும் பரவி வந்தன. புதிய சமண, பௌத்த மதங்கள் உருவாகின. புனிதமான வேதச் சடங்குகள் கேள்விக்குள்ளாயின. புரோகிதத் தொழில் மதிப்பிழக்கத் தொடங்கியது.

பேரரசு காலமும் அசோகர் காலமும்:

கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மகதம் ஒரு பேரரசாக ஆகியிருந்தது. அப்பொழுது சமண, பௌத்த மதங்கள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. பிராமணர், புரோகிதர் நிலையில் பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை எனினும் நாளுக்கு நாள் அவர்கள் கீழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சமண பௌத்த மதங்களின் வளர்ச்சி அவர்கள் வாழ்நிலையில் மிகப்பெரிய வீழ்ச்சியை உருவாக்கி இருந்தது. கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் புரோகிதத் தொழிலையும் சடங்கு, யாகம் முதலியனவற்றையும் செய்து நல்ல வருமானத்தோடு வாழ்ந்த பிராமணர்களும் புரோகிதர்களும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். முன்பு ஒரு சில பிராமணர்களும் புரோகிதர்களும் மிக நல்ல வருமானத்தோடு உயர்நிலையில் இருந்தனர். ஆனால் புத்த சமண செல்வாக்கால் அந்நிலை அடியோடு மாறிப் போயிருந்தது.

சடங்குகளும் யாகங்களும், உயிர்க்கொலையும், புரோகிதத் தொழிலும் மக்களிடையே செல்வாக்கு இழந்து அதனை யாரும் பின்பற்றாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அதன் மூலம் நல்ல வருமானம் பெற்று வந்த புரோகிதர்களும் பிராமணர்களும் வேறு தொழிலைச் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். அசோகர் காலத்தில் “பிராமணர்கள் உழவர்களாக, கைவினைஞர்களாக, குற்றேவலராக, மந்தை வளர்ப்போராக, கதாகாலட்சேபம் செய்வோராக வாழ்ந்து வந்தனர். ‘தாச பிராமண சாடகம்’ என்ற நூல், பிராமணர்கள் வண்டியோட்டுபவர்களாக, ஊர்க்காவலாளிகளாக, பால் விற்போராக, முயல் வேட்டையாடுவோராக, மீன் ஆமைகளை பிடித்து உண்போராக, பரட்டைத்தலையும், அழுக்கேறிய நகங்களோடும் மண்வெட்டும் வேலை செய்வோர்களாக வாழ்க்கை நடத்தினார்கள் எனக் கூறுகிறது என பிரேம்நாத் பசாசு குறிப்பிடுகிறார்(12). பசாசு அவர்கள் குறிப்பிடும் பிராமணர்கள் என்போர் சடங்குகளைச்செய்து வந்த புரோகிதர்களைக் குறிக்கும் எனலாம்.

அசோகனது கல்வெட்டுகள்:

அறிவு, ஒழுக்கம், ஞானம் ஆகியவற்றில் சிறந்த பிராமணர்களுக்கு அசோக கால அரசு நல்ல மதிப்பளித்து வந்துள்ளது என்பதை அவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அசோகன் தனது 9ஆவது முக்கியப் பெரிய கல்வெட்டில் (Major Rock Edicts - 9), மக்கள் நிறையச் சடங்குகளைச் செய்கிறார்கள். ஒரு சில சடங்குகள் செய்யப்பட வேண்டியது தான். ஆனல் பல சடங்குகள் பயனற்ற, அற்பமான சடங்குகளாக உள்ளன. இவை போன்ற உலகியல் சடங்குகளால் எந்தப்பயனும் இல்லை எனக் கூறியுள்ளார். ஆகவே அசோகர் குறிப்பிட்ட பிராமணர்கள் புரோகிதத்தொழிலைச்செய்து வந்த பிராமணர்கள் அல்ல. அவர்கள் ஞானம், ஒழுக்கம், அறிவு ஆகியவற்றில் சிறந்த பிராமணர்கள் ஆவர். அதனால்தான் அவர் தனது அதே கல்வெட்டுகளில், ‘அடிமைகள், வேலைக்காரர்கள் போன்றவர்களை எப்படி (நல்ல முறையில்) நடத்த வேண்டும், உயிருள்ள விலங்குகளிடம் அன்பாய் இருக்க வேண்டும், ஆசிரியர்கள், பிராமணகள், துறவியர்கள் போன்ற பெரியவர்களிடம் பரந்த மனப்பான்மையுடன் நடந்து, அவர்களுக்குப் போதிய உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்(13).

இங்கு பிராமணர்களை ஆசிரியர்கள், துறவிகள், பெரியவர்கள் ஆகியவர்களுக்குச் சமமாக அசோகன் கருதுவதை அறிய முடிகிறது. பிராமணர்களுக்கு எனத் தனித்துவமான முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. அதைவிட புரோகிதத்தொழில், சடங்கு முதலியனவற்றையும், அவற்றைச் செய்து வந்தவர்களையும் அவர் நிராகரித்துள்ளார் எனவும் அறிய முடிகிறது. “அதிசயப்படத் தக்க வகையில் அசோகனுடைய கல்வெட்டுகளில் வருணத்தைப் பற்றியோ, அல்லது சாதியைப் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. அவை முக்கியமான சமூக வகையாக ஆகவில்லை என்பதை அது காட்டுகிறது” என இரோமிலா தாபர் கூறுகிறார்(14). அசோகனின் கல்வெட்டுகளில் வகுப்புகள் குறித்தோ நால்வருணங்கள் குறித்தோ குறிப்புகள் இல்லை என்பது, அன்று வகுப்புகள் பெரிய அளவில் உருவாகவில்லை என்பதையும், வைதீக பிராமணியத்தின் நால் வருணங்கள் குறித்த கருத்து அன்று சமூக அளவில் இருக்கவில்லை என்பதையும் தெரிவிக்கிறது.

அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்த வந்த போது அவன் வடமேற்கு இந்தியாவிலும் சிந்துவெளிப் பகுதிகளிலும் நிறைய இனக்குழுக்களோடு போராடி வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது என்பதை அறிய முடிகிறது. இதனை அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்த போது, “ஒவ்வொரு சிறு சிறு சனபதத்திலும் நெருங்கிப் போரிட்டு, வெல்வதற்கரிய பழங்குடிகளை ஒன்றன்பின் ஒன்றாய் வென்று மேற்குப் பஞ்சாபை வழுவிழக்கச் செய்த ஒரு கடும் பணியை கிரேக்கர்கள் புரிந்து மகதப் படைக்கு உதவினார்கள்” எனவும் இந்தியாவைவிட்டு அவன் வெளியேறிய போது, “மறைந்தொழிந்த சிந்துப் பண்பாட்டின் பழங்கால வணிக வழியின் மூலம் கிரேக்கப் படை மாறிய திசையில் தனது பயணத்தைத் தொடங்கியது. கிரேக்கப் படைகள் ஒருங்கிணைந்து சென்ற இவ்வழி நெடுகிலும் ஓயாமல் பழங்குடிப் படைகளுடன் போர் நிகழ்த்த வேண்டியிருந்தது. ஏராளமான படுகொலைகளுக்குப் பிறகு பழங்குடிகளின் நகர அரண்கள் வழுவிழந்தன” என டி.டி. கோசாம்பி கூறுகிறார்(15).

வடமேற்கு இந்தியாவிலிருந்த பழங்குடிப் படைகளின் துணையோடுதான் சந்திரகுத மௌரியன் மகதப் பேரரசைக் கைப்பற்றினான். கி.மு. 30இல் மகதப் பேரரசு வீழ்ந்த போது இனக்குழு அரசுகள்தான அதனை கைப்பற்றிக்கொண்டன. அதாவது அன்று வட இந்தியாவின் பெரும்பகுதி வளர்ச்சியடையாத இனக்குழு நிலையில் வாழ்ந்த மக்களால் நிரம்பியிருந்தன என்பதுதான் இங்கு சொல்லப்பட வேண்டிய செய்தி. இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும் பீகார், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் தெற்கு பகுதிகளில் இருந்த அடர்ந்த காடுகளிலும் இனக்குழு நிலையில்தான் மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆகவே வட இந்தியாவின் பெரும் பகுதி அன்று வளர்ச்சியடையாத நிலையில் தான் இருந்து வந்தது. அதனால்தான் அதிக தொழில் வளர்ச்சி ஏற்படாமல் வகுப்புகள் பெரிய அளவில் உருவாகாமல் இருந்து வந்தது எனலாம். ஆங்காங்கு வளர்ச்சியடைந்த ஒரு சில நகரங்களில் மட்டுமே தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வகுப்புகளும் தொழில் பிரிவுகளும் உருவாகியிருந்தன. பெரும்பகுதியான வட இந்தியப் பகுதிகளில் அந்நிலை இல்லை. வைதீக பிராமணியத்தின் நால் வருணம் குறித்த கருத்துகளும் அப்பொழுது உருவாகி இருக்கவில்லை. அதனால்தான் அசோகன் கல்வெட்டுகளில் வகுப்பு குறித்தோ, நால் வருணம் குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை எனலாம்.

நமது கருத்தியல்படி இனக்குழுவிலிருந்து நேரடியாகச் சாதி உருவாக முடியாது. வகுப்புகள்தான் உருவாக முடியும். இனக்குழுச் சமூகத்தில் சொத்துடமை உருவாகி தொழில் வளர்ச்சி பெரிய அளவில் நடக்கும் பொழுது தொழில் பிரிவுகளும், வகுப்புகளும் உருவாகும். ஆனால் சாதி உருவாகாது. அசோகன் தனது கல்வெட்டுகளில் சடங்குகள் கூடாது எனவும் அதே சமயம் பிராமணர்களுக்கும், சிரமணர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறுகிறான். மேலும் அவன் புத்த, சமண, ஆசிவக மதங்களின் முற்போக்குக் கருத்துக்களை தனது கல்வெட்டில் பதித்துள்ளான். ஆனால் வகுப்புகள் குறித்தோ, நால்வருணங்கள் குறித்தோ எதுவும் கூறவில்லை. அவன் காலத்திய பிராமண, சிரமண மதங்களில் உள்ள சிறந்த பொது அறம் சார்ந்த கருத்துகளுக்கே ஆதரவு தந்துள்ளான். பிராமண மதங்களின் சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளான். அதற்கு ஏற்றவாறு அன்று சடங்குகளைச் செய்து வருமானம் பெற்று வந்த புரோகிதர்களும், பிராமணர்களும் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்துள்ளனர் என அவன் காலத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே அசோகனின் கல்வெட்டுத்தரவுகள் அன்று வைதீகப் பிராமணியமோ, சாதியோ இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

சமற்கிருதமும் பிராமணியமும்:

வட இந்திய வரலாற்றில் அசோகனின் கல்வெட்டுகள் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள். ஆனால் அவைகளின்படி பிராமணியமோ, சாதியோ அன்று இருக்கவில்லை. அசோகன் காலத்தில் மக்களின் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் பிராகிருதமும், மகதியும், பாலியும் இருந்துள்ளது. அன்று சமற்கிருதம் ஆட்சி மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. வைதீக பிராமணியம் வலிமைபெறும் பொழுது அது சமற்கிருதத்தையும், சாதியையும் கொண்டு வரும் என்பதை வரலாறு உறுதி செய்கிறது. இதனைப் பிற்கால குப்தர் ஆட்சியிலும் பிற இந்திய அரசுகளின் ஆட்சிகளிலும் பார்க்க முடிகிறது. சான்றாக குப்தர் ஆட்சியில் வைதீகப் பிராமணியம் வலிமையாக இருந்ததால் குப்த அரசின் ஆட்சி மொழியாகவும், அன்றையகால மேல் மக்களின் மொழியாகவும் சமற்கிருதம் இருந்தது, கூடவே சாதியும் இருந்தது. சாதாரண மக்களின் மொழியாக பிராகிருதம் இருந்தது. வரலாற்றில் குப்தர் காலத்தில்தான் சாதி அரசால் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு, அரசால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிப் போனது. சாதிமுறையை மீறுபவர்களுக்கு அரசு தண்டனை தரும் சூழ்நிலை உருவானது. ஆனால் மகத அரசின் தொடக்க காலத்திலிருந்து மௌரிய அரசவம்சம் முடியும் வரை மகதப் பேரரசின் ஆட்சி மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ சமற்கிருதம் இருக்கவில்லை. ஆகவே அக்கால கட்டங்களில் வைதீக பிராமணியமோ, சாதியோ இருக்கவில்லை எனலாம்.

வைதீக பிராமணியம் வலிமை பெறும்பொழுது நால் வருணச் சாதி இருக்கும் என்பதோடு, நால் வருணச் சாதியின் மேல் மட்டத்தில் பிராமணர்கள் இருப்பார்கள், இரண்டாம் நிலையில்தான் அரசரும் ஆளும் வர்க்கத்தாரும் இருப்பர். மகதப்பேரரசின் தொடக்கம் முதல் மௌரிய அரச வம்சம் முடியும் வரை அரசரும், ஆளும் வர்க்கத்தாரும்தான் மேல்நிலையில் இருந்தனர். புத்த சமண நூல்கள் அதனை உறுதிப் படுத்துகின்றன. அம்பத்தா குறித்த கதையில் புத்தர், சத்திரியர்கள் பிராமணர்களைவிட அதி உயர்நிலையில் இருந்தனர் என்று கூறுகிறார். அசோகர் காலத்தில் பிராமணர் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தனர் என்பதை முன்பே பார்த்தோம். ஆகவே அசோகர் காலத்தில் வைதீகப் பிராமணியமோ, நால்வருணக் கருத்துக்களோ, சாதியோ இருக்கவில்லை என உறுதிபடக் கூறலாம்.

மெகசுதனிசும் தொழில் பிரிவுகளும்:

மெகசுதனிசு, மௌரிய சமூகம் ஏழு பிரிவுகளைக் கொண்டது எனவும், அவை தத்துவவாதிகள், விவசாயிகள், வீரர்கள், மேய்ப்போர்கள், கைவினைஞர்கள், நீதிபதிகள் மற்றும் அவைக்குழாத்தார் ஆகியன எனவும் அவர் எவரும் தம் சொந்தப்பிரிவை விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தங்கள் தொழிலை இன்னொரு தொழிலுக்கு மாற்றிக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்(16). இவை பெரும் குழப்பத்தைத் தருகின்றன. அவர் நால் வருணம் குறித்துக் கூறவில்லை. அவர் இவற்றைத் தொழில் அடிப்படையிலான வகுப்புகளாகத்தான் கூறியுள்ளார். சொந்தப் பிரிவை விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது, தொழிலை இன்னொரு தொழிலுக்கு மாற்றிக் கொள்ள முடியாது என்பன இனக்குழு அல்லது சாதியின் பண்புகளாகத் தெரிகின்றன. ஏழு தொழில் பிரிவுகளையும் படிநிலை அடிப்படையிலும் அவர் கூறவில்லை. அவைக்குழாத்தார், நீதிபதிகள் போன்றவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள். ஆனால் அவர்களை மெகசுதனிசு இறுதியில் கூறியுள்ளார். விவசாயிகள், வீரர்கள், மேய்ப்போர்கள், கைவினைஞர்கள் போன்றவர்களை அவர்களுக்கு முன் கூறியுள்ளார். ஆகவே இப்பட்டியல் என்பது நால்வருண சாதி அமைப்புக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதது. இப்பட்டியல் அன்றைய சமூகத்தில் இருந்த தொழில் பிரிவுகளைத்தான் கூறுகிறது என்பதுதான் உண்மை.

அதே சமயம் சொந்தப் பிரிவை விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதும், தொழிலை மாற்ற முடியாது என்பதும் குழப்பத்தைத் தருகிறது. இவை மெகசுதனிசின் தவறான புரிதலால், அல்லது மெகசுதனிசுவின் நூலிலிருந்து எடுத்து எழுதியவரின் தவறான புரிதலால் ஏற்பட்டிருக்கலாம். அன்று நால் வருணங்கள் குறித்த கருத்து சமூகத்தில் இருக்கவில்லை என்பதை அசோகரின் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மெகசுதனிசின் ஏழு பிரிவுகளும் தொழில் அடிப்படையிலான வகுப்புகளாகத்தான் இருக்கின்றன. அதில் நால் வருணங்களுக்கான கருத்து எதுவும் இருக்கவில்லை. ஆனால் அன்று இந்தியாவில் மிக அதிக அளவில் இனக்குழு மக்கள் வாழ்ந்து வந்ததால் அவர்களின் பண்பை இத்தொழில் பிரிவுகளுக்கான பண்பாக அவர் கூறிவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு பிரிவுகளையும் அவர் தொழில் அடிப்படையில் தான் கூறியுள்ளார் என உறுதியாகச் சொல்லலாம். ஆகவே வைதீக பிராமணியத்தின் நால்வருணமோ, சாதியோ அன்று இருக்கவில்லை என்பதை அவரது கூற்றும் உறுதி செய்கிறது எனலாம். அன்று பெண்கள் அரசனுடைய மெய்க்காப்பாளர்களாக இருந்தனர் எனவும் அரசன் வேட்டைக்குச்சென்ற போது உடன் சென்றார்கள் எனவும் மெகசுதனிசின் குறிப்பு கூறுகிறது எனக் கூறுகிறார் இரோமிலா தாபர்(17). இது அன்று நால் வருணக் கருத்துக்களோ, வைதீகமோ இருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது எனலாம்.

அர்த்த சாத்திரமும் காமசூத்திரமும்:

சாணக்கியனுடைய அர்த்தசாத்திரம் என்ற நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் விசுணுகுப்தர் என்பவரால் இறுதியாக எழுதி பணி முடிக்கப்பட்டது எனக் கூறுகிறார் இரோமிலா தாபர்(18). ஆகவே அதில் உள்ள பகுதிகள் எந்த காலகட்டத்துக்கு உரியது எனக் கூற முடியாது. கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையான சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தும் அதன் கொள்கை சார்ந்த விளக்கங்கள் குறித்தும் அந்நூல் பேசுகிறது. ஆகவே அதில் நால்வருணம், சாதி முதலியன குறித்துக் கூறிய கருத்துக்கள் எந்தக் காலத்துக்குரியது எனச்சொல்ல முடியாது. வாத்சுயாயனர் எழுதிய காமசூத்திரம் கி.பி. 300இல் எழுதப்பட்டதாக ‘வெண்டி டோனிகர்’ கூறுகிறார்(19). ஆனால் இந்நூல் சாதவாகனர் காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுவதால் இதன் காலத்தை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். இந்நூல் தனக்கு முந்தைய நூல்கள் குறித்தும் பேசியுள்ளது. சிலர் இதன் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை எனக் கருதுகின்றனர். முன்பே எழுதப்பட்டு கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை திருத்தப்பட்டு வந்ததாகவும் கருதலாம்.

ஆனால் ‘மனுவிலிருந்து அடியோடு முரண்பட்டு காமசூத்திரமோ, அர்த்தசாத்திரமோ வருணங்களைப் பற்றியோ, சாதிகளைப் பற்றியோ மிகுதியாகப் பேசுவதே இல்லை. அர்த்தசாத்திரம் ஒழுங்கமைவில் நான்கு வருணங்களும், வாழ்க்கையில் நான்கு ஆசிரமங்களும் இருப்பதைஉடனடியாக ஆதரிக்கத் தொடங்குகிறது(1.3.5 – 12). ஆனால் அதற்குப் பிறகு வருணங்களைப் பற்றியோ சாதிகளைப்பற்றியோ பேசுவதே இல்லை. மாறாக, தொழில்களாலும் மதப்பார்வைகளாலும் வேறுபடுத்தப்பட்ட மக்கள் குழுக்களைப் பற்றிப் பேசுகிறது………. அதே சமயம் அவரவர் சுய தர்மத்தைச் செய்ய வேண்டுமென்றும் சொல்கிறது(1.3.13-15). ஒரே ஒரு செய்யுளில்தவிர, காமசூத்திரம், திருமணத்தைப் பற்றிப் பேசும்போதுகூட சாதியைப் புறக்கணிக்கிறது. சாதி மிக முக்கியமாகத் தேவைப்படும் இரண்டு இடங்களிலும் திருமணமும் ஒன்று(உணவு மற்றது). காமசூத்திரத்தின் நாயகன் எந்த வருணத்தினனாகவும் இருக்கலாம், பணம் மட்டும் இருந்தால் போதும்(3.2.1), பணமிருந்தால் நல்ல வாழ்க்கையையும், பெண்ணையும் பெற முடியும். பணம் உந்திச் செலுத்தும் இந்த வருண அமைப்பு, பிரிட்டிசு முன் மாதிரியைவிட அமெரிக்க முன் மாதிரிக்குப் பொருத்தமானது’ எனக் கூறுகிறார் வெண்டி டோனிகர்(20).

ஆகவே அர்த்தசாத்திரம், காமசூத்திரம் போன்றவைகளும் வகுப்பு எனப்படும் வருணங்களைப் பற்றித்தான் பேசுகிறதே ஒழிய சாதியைப் பற்றி பேசுவதில்லை. முக்கியமாக காமசூத்திரம் குறிப்பிடுவது வருணம் எனப்படும் வகுப்புகளை மட்டும்தான். சாதி குறித்த எந்த குறிப்பும் அதில் இல்லை என உறுதியாகத் தெரிகிறது. அர்த்தசாத்திரம் சாதி குறித்துக் குறிப்பிட்டதற்கு பிற்காலத் திருத்தங்கள் காரணமாகலாம். ஆகவே அன்று வருணம் எனப்படும் வகுப்பு மட்டுமே இருந்தது எனவும், சாதி அன்று உருவாகி இருக்கவில்லை எனவும் கருத வேண்டியதுள்ளது. குப்தர் காலத்தில் இருந்துதான் சாதி அமைப்பு அரச ஆதரவும், அதன்பின் சமூக அங்கீகாரமும் பெற்ற ஒன்றாக உருவாகியது எனலாம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டுப்படி அம்மன்னன் சமணர்களுக்கும், பிராமணர்களுக்கும் ஆதரவாக இருந்துள்ளான். அவன் இராசசூய வேள்வி நடத்தியுள்ளான், பிராமணர்களுக்கு வரியிலிருந்து விலக்களித்துள்ளான். இவை கல்வெட்டில் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் அவனது கல்வெட்டிலும் நால்வருணம் குறித்தோ, சாதி குறித்தோ குறிப்புகள் இருக்கவில்லை(21).

அசோகன் காலம் வரை வைதீகமோ, சாதியமோ இல்லை:

அசோகன் கல்வெட்டுகளும், காரவேலன் கல்வெட்டும், மெகசுதனிசுவின் குறிப்புகளும், காமசூத்திரமும் வைதீக பிராமணியத்தின் நால்வருண சாதி குறித்துப் பேசவில்லை. இந்தியாவின் பெரும்பகுதியில் மக்கள் இனக்குழு நிலையில்தான் வாழ்ந்து வந்தனர். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு தொழில்களைச் செய்யும் நிலை இருந்து வந்தது. அக்காலகட்டத்தில் சமற்கிருதம் மக்கள் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ இருக்கவில்லை. அரசன் அதி உயர்நிலை வகுப்பாகக் கருதப்பட்டான். பிராமணர்கள் மிகத்தாழ்ந்த நிலையில்தான் இருந்து வந்தனர். ஆகவே மௌரிய வம்சம் முடியும்வரை வைதீகப் பிராமணியமோ, அதன் சாதியமோ உருவாகி இருக்கவில்லை.

பெரும்பாலான பிராமணிய வைதீக இலக்கியங்கள் கி.மு. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில்தான் எழுதப்பட்டன. அதன் பண்டைய வேத சம்கிதைகள், பிராமணங்கள் போன்றவைகூட கி.மு. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தில்தான் எழுத்து வடிவம் பெற்றன. ஆனால் அவை வைதீக பிராமணியமும் சாதிய நால்வருணமும் மிக முந்தைய காலத்திலேயே, இருந்து வருவதைப்போன்ற தோற்றத்தைச் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளன. அதற்கேற்றவாறு பிராமணங்களும் இன்னபிறவும் இடைச்செருகல்களாலும், திருத்தங்களாலும் நிரப்பப்பட்டன. வைதீகப் பிராமணியம் வரலாற்றை மறைப்பதிலும், திருத்துவதிலும், மாற்றியமைப்பதிலும் புகழ் பெற்றது. தனது மேன்மைக்காக, தனது நலனுக்காக எதனையும் செய்யலாம் என்ற கருத்தைக் கொண்ட முழுமையான சுயநல உணர்வு கொண்ட ஒரு அறமற்ற சமூகக் குழுவாகவே அது இருந்து வந்துள்ளது. ஆகவே மகதப் பேரரசில் மௌரிய வம்சம் வரையான காலத்தில் வைதீகப் பிராமணியமோ அதன் சாதிய நால்வருணம் குறித்த கருத்தியலோ உருவாகி இருக்கவில்லை என்பது தான் வரலாற்று உண்மை. அப்படி இருந்தது போன்ற தோற்றம் என்பது பிற்காலத்தில் வைதீக பிராமணியம் செயற்கையாக உருவாக்கியதாகும்.

பார்வை:

1. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 265, 266.
2. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 7, பக்: 161.
3. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 277.
4, 5. பக்: 260.
6. பக்: 166
7. பக்: 289
8. பக்: 259
9. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: பகுதி-6 (தமிழக நகர அரசுகள்)
10. பேராசிரியர் நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளியீட்டகம், சூலை-2008, பக்: 136, 137.
11. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 295.
12. இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில்: கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 77.
13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரரசர் (Asoka and the Buddhist Emperor of India), விசென்ட் சுமித் (Vincent Arthur Smith), தமிழில் சிவ முருகேசன், சந்தியா பதிப்பகம், 2009, பக்: 133, 134.
14. முற்கால இந்தியா, இரோமிலா தாப்பர் (Romila Thaper), NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 356, 357..
15. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 292, 293.
16. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர் NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 351.
17. பக்: 355, 356.
18. பக்: 341.
19. இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, சூன் – 2016, பக்: 363.
20. பக்: 376.
21. முற்கால இந்தியா, இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 388-390.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It