பழந்தமிழகம்:

பழந்தமிழகம் கி.மு. 800 முதல் கி.பி. 200 வரையான 1000 வருடங்களில் பல்வேறு துறைகளிலும் ஒரு உயர்தரமான உன்னதமான வளர்ச்சியைக்கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற நாடாக இருந்து வந்தது. உலகளாவிய வணிகமும், மிகப்பெரும் கடற்படைகளும், மிகச்சிறந்த தொழில்நுட்ப மேன்மையும் கொண்ட, செல்வ வளமும், கல்வி வளமும், பேரளவான பொருள் உற்பத்தியும் மிக்க உலகின் ஒரு முன்னணி நாடாகப் பழந்தமிழகம் இருந்து வந்தது. இருந்த போதிலும் பழந்தமிழக வரலாறு என்பது அறிவியல் அடிப்படையில் முறைப்படுத்தி, ஒழுங்கமைக்கப்படாமல் இருந்து வந்தது. அக்குறையை நீக்கும்வகையில் எமது ஆய்வுகள் பழந்தமிழக வரலாற்றை முறைப்படுத்தி ஒழுங்கமைத்துக் கட்டமைத்துள்ளது எனலாம்.

kaniyan balan book on tamil historyபழந்தமிழக வரலாறு என்பது சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டமைக்கப் பட்டிருந்தது. ஆனால் எமது ஆய்வுகள் சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதை உறுதி செய்துள்ளது. இரண்டுக்குமிடையே சுமார் 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. அதுபோன்றே சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான 700 வருட காலம் எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான 300 வருட காலம் எனவும் அதன் பிந்தைய கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான 300 வருட காலம்தான் களப்பிரர்காலம் எனவும் எமது ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சங்ககாலத்தில் நகர அரசுகள்தான் இருந்தன எனவும் கி.மு. 50க்குப்பின்தான் தமிழகத்தில் பேரரசுகள் உருவாகின எனவும் தமிழக நகர அரசுகள் என்பன மகதப் பேரரசைவிட பலதுறைகளிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன எனவும் எமது ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

சங்க காலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளைத்தான் பாடியுள்ளனர் எனவும் சங்க காலம் என்பது வீரயுகக் காலம் அல்ல எனவும் அது நிலைபெற்ற நகர அரசுகளைக் கொண்ட காலம் எனவும் சங்ககாலத்தில் தந்தைக்குப்பின் மகன், மகனுக்குப்பின் மகனுடைய மகன் என்ற ஆட்சிமுறை இருக்கவில்லை எனவும் பழந்தமிழகத்தில் வகுப்புகள்தான் இருந்தன எனவும் சாதிகள் இருக்கவில்லை எனவும் தமிழரசுகளிடையே ஒரு ஐக்கியக் கூட்டணி கி.மு. 750க்கு முன்பிருந்தே இருந்து வருகிறது எனவும் எமது ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இந்த ஐக்கியக் கூட்டணியின் கடற்படைகொண்டுதான் இந்தியாவின் கிழக்கு மேற்குக் கடற்கரைகளையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தமிழரசுகள் தங்கள் வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன என்பதோடு தக்காணத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இக்கூட்டணி கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மகதப்பேரரசன் பிந்துசாரனின் மௌரியப் படையெடுப்பை முறியடித்து அவர்களைத் தமிழகத்தை விட்டு துரத்தியடித்தது. இந்நிகழ்வு கிரேக்க நகர அரசுகள் பாரசீகத்தை முறியடித்ததற்கு இணையானது.

பழந்தமிழகத்தில் சாங்கியம் எனப்படும் எண்ணியத்தைத் தோற்றுவித்த ‘தொல்கபிலர்’ தோன்றி தமிழகத்தின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தார். அதன் காரணமாக பழந்தமிழகம் மிக அதிக அளவிலான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும், கலை, இலக்கிய நூல்களையும் படைத்திருந்தது. ஆனால் களப்பிரர் படையெடுப்பின் போதும் அதன் பின்னரும் நடந்த பேரழிவாலும், சமற்கிருதமயமாக்கல் போன்ற நிகழ்வுகளாலும் அனைத்துத் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும் அழிந்துபோயின. கலை இலக்கிய நூல்களிலும் பெரும்பகுதி அழிந்து போயின. எஞ்சிய ஒரு சிறுபகுதிதான் சங்க இலக்கியம்.

சேரன் செங்குட்டுவன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு:

மகதப்பேரரசை ஆண்ட நந்தர்கள், மௌரியர்கள் குறித்துப்பாடிய மாமூலனார் (அகம்: 251, 265, 281) காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்பதால் அவருக்குப்பின் இரு தலைமுறைகள் கழித்து வந்த பரணர் காலமும், பரணர் பாடிய (5ஆம் பதிற்றுப்பத்து) சேரன் செங்குட்டுவனின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. பரணர் அதியமான் குறித்துப் பாடியுள்ளதாக ஔவையார் தனது புறம் 99ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதியமான் வெட்டிய சம்பைக் கல்வெட்டின் காலம் கி.மு. 270-230 என தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன் உறுதி செய்துள்ளார். அசோகன் வெட்டிய கல்வெட்டிலும், அதியமான் வெட்டிய கல்வெட்டிலும் ‘சதியபுதோ’ என்ற சொல் ஒரே வடிவமைப்பும், எழுத்தமைதியும் கொண்டிருப்பதால் இரண்டும் ஒரே காலத்தவை என்ற அடிப்படையிலும் சம்பை கல்வெட்டின் காலம் அசோகனின் காலமான கி.மு. 3ஆம் நூற்றாண்டாகிறது. ஆகவே அதியமானின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் அவனைப் பாடிய பரணரும், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவனும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு.

கொற்கையை ஆண்ட பாண்டியர்கள் வெட்டிய செழிய நாணயங்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என நாணயவியலாளர் இரா. கிருட்டிணமூர்த்தி உறுதி செய்துள்ளார். நமது இலக்கியக்கணிப்புப்படி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய பாண்டிய வேந்தர்கள் கொற்கையை ஆண்டபோது வெட்டிய நாணயங்கள் இவை. அவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் அவர்களின் சமகால வேந்தனான சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. சங்ககால இறுதிச்சேர வேந்தர்களான மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகியவர்களின் காலம் முறையே கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி, கி.மு. 1ஆம் நூற்றாண்டின் தொடக்கம். அவர்களுக்கு 7, 8 தலைமுறைகள் (சுமார் 150 ஆண்டுகள்) முந்தைய சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. ஆகவே சங்கப்பாடல்கள், பதிற்றுப்பத்துப்பதிகம், கல்வெட்டுகள், நாணயங்கள், இலக்கியக்கணிப்பு போன்ற பல்வேறுவகையான சான்றுகளைக்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்ககாலத்தின் தொடக்க காலம் கி.மு. 750:  

தொல்கபிலர் எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த ஒரு தமிழர். புறநானூறு (புறம்-166), தொல்கபிலரை முதுமுதல்வன் எனவும் அவர் எழுதிய நூலை 24 கூறுகளைக்கொண்ட மிகத்தொன்மையான நூல் எனவும், குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத் தொகுப்புகள் அவரது தொன்மையையும், சிறப்பையும் குறிக்கும் வகையில் அவரைத் தொல்கபிலர் என்கின்றன. அவர் இந்திய அளவில் மிகப் புகழ்பெற்ற ஒரு பேரறிஞராக இருந்துள்ளார். அவரது எண்ணிய மெய்யியல் தமிழகத்தில் முதலில் தோன்றிய ஒரு முழுமையான தத்துவார்த்த அறிவியல் கோட்பாடு என்பதாலும் தமிழகத்தின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு பொருள்முதல்வாத மெய்யியல் என்பதாலும் நாம் அவரை ‘தமிழ் அறிவு மரபின் தந்தை’ எனக்கருதலாம். மகாபாரதத்திலேயே சாங்கியம் மிகப் பழமையானது எனக் கூறப்பட்டுள்ளது எனவும், சாங்கியம் புத்தருக்கும் மகாவீரருக்கும் முந்தையது எனவும், உபநிடதங்களைவிட சாங்கியம் முந்தையது எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார். உபநிடதங்களின் காலம் கி.மு. 7ஆம்நூற்றாண்டு. ஆகவே மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த, உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக்கொண்டு தொல்கபிலரின் காலம் கி.மு. 750 எனக் கணிக்கப்பட்டது. தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதால் சங்ககாலத்தின் தொடக்க காலம் கி.மு. 750 என உறுதி செய்யப்பட்டது.   

சங்ககாலத்தின் இறுதிக்காலம் கி.மு. 50:

சங்ககால இறுதிச்சேர வேந்தனான குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், அவனுக்கு முன் ஆண்ட சேரமான் மாக்கோதையின் நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்ககாலத்தின் இறுதிக்காலகட்ட நூலான முத்தொள்ளாயிரம் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது. பாண்டியன் மாறன் வழுதிக்கு முன்பு ஆண்ட பெருவழுதிகளின் தலைவடிவப்பெருவழுதி நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே குட்டுவன் கோதையும், மாறன் வழுதியும் அவர்களது சமகால வேந்தனான சோழன் நலங்கிள்ளியும் கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்ககாலம் ஆகின்றனர். முத்தொள்ளாயிரம் சோழன் நலங்கிள்ளி ஈழத்தை வென்றதோடு உச்சயினிவரை படையெடுத்து அதனையும் வென்றான் எனக் கூறுகிறது. .வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார். ஆனால் அக்காலகட்டத்தில் (கி.மு.124 - கி.மு.30) சாதவாகனர்கள் வலிமையற்றவர்களாக இருந்தார்கள். ஆதலால் தெற்கேயிருந்து வந்த சோழன் நலங்கிள்ளிதான் உச்சயினியைத் தாக்கிச் சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன் (கி.மு.80-78) ஆவான். நலங்கிள்ளிக்குப் பின் அவன் மகன் ஆண்டான். அவனே இறுதிச் சங்ககாலச் சோழவேந்தன். அவனது ஆட்சிக்காலம் கி.மு. 50இல் முடிகிறது. சேரன் குட்டுவன் கோதையும், பாண்டியன் மாறன் வழுதியும் அவனுக்கும் மூத்தவர்கள். ஆகவே இறுதிக்காலச் சங்ககால வேந்தர்களான இவர்கள் மூவரின் ஆட்சிக்காலமும் கி.மு. 50க்குள்தான் இருந்தது என்பதால் சங்ககாலத்தின் இறுதிக்காலம் கி.மு. 50 என உறுதி செய்யப்பட்டது.

சங்ககால வரலாற்றுக்காலம்:

சங்க இலக்கியமான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் உள்ள 2371 பாடல்களை 473 புலவர்கள் பாடியுள்ளனர். இதில் கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியனவும் பத்துப்பாட்டில் முதலும், இறுதியும் பிற்காலத்தவை என்பதால் அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே சமயம் தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியன ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களில் 127 புலவர்கள் பாடிய பாடல்களில் (1647 பாடல்கள்) மட்டும் வரலாற்றுக் குறிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவ்வாய்வுகளின் முடிவில் சங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் எனினும், கி.மு. 350 க்குப்பின் பாடப்பட்ட பாடல்களில்தான் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன என்பதும், இக்கால கட்டங்களில்தான் அதிக அளவான பாடல்கள் பாடப்பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டது. கி.மு. 350க்கு முந்தைய பாடல்கள் மிகமிகக் குறைவு என்பதோடு அவற்றில் வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. ஆகவே கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை. கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலத்திற்கான வரலாறு மட்டுமே கட்டமைக்கப்பட்டது. ஆகவே கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலமே சங்ககால வரலாற்றுக் காலம் எனலாம்.

சங்ககாலப் புலவர்கள், ஆட்சியாளர்கள் – கோட்டியல் வரைபடமுறை:

கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான 300 வருட காலம் 10 கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த புலவர்கள், ஒவ்வொரு புலவரும் பாடிய ஆட்சியாளர்கள் (வேந்தர்கள், அரசர்கள், வேளிர்கள், சிறுகுறு மன்னர்கள் போன்றவர்கள்), ஒவ்வொரு ஆட்சியாளரையும் பாடிய புலவர்கள் பற்றிய தரவுகள் தொகுக்கப்பட்டன. இதற்குச் சங்ககாலப் பாடல்கள் தவிர கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுமுடிவுகள் போன்ற பல்வேறு தரவுகளும் பயன்படுத்தப்பட்டு இத்தரவுகள் பலமுறை ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு தொகுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. ஒவ்வொரு கால கட்டத்திலும் மிக அதிகமாகப் பாடியவரும் அதிக வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவரும் அக்காலகட்டத்தின் முதன்மைப்புலவராகக் கணிக்கப்பட்டார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த முக்கியப் புலவர்கள், அவர்கள் பாடிய முக்கிய ஆட்சியாளர்கள் ஆகியன கணிக்கப்பட்டு, அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கோட்டியல் வரைபடம் என்ற புதிய வரைபடமுறை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உருவாக்கப்பட்டது. இவ்வாய்வின் போதே வேந்தர்கள், முதன்மைப்புலவர்கள் ஆகியோரின் ஆண்டுகளும் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த ஆட்சியாளர்கள் குறித்தும் அவர்களுக்கிடையே நடந்த போர்கள் குறித்தும் அக்காலகட்டத்தில் நடந்த இன்னபிற முக்கிய நிகழ்வுகள் குறித்தும் சுருக்கமான தரவுகள் தரப்பட்டுள்ளன.

காலகட்டம் வாரியாக முதன்மைப்புலவர்களும் ஆண்டுகளும்:

காலகட்டங்கள் (கி.மு.)    முதன்மைப்புலவர்     காலம் (கி.மு.)     வயது

1.கி.மு. 350 – 270      குடவாயிற்கீரத்தனார்     385 - 305        80

2.கி.மு. 330 – 250       மாமூலனார்        360 – 270        90

3.கி.மு. 300 – 230      கழாத்தலையார்       335 – 260        75

4.கி.மு. 270 – 200        பரணர்          305 – 210        95

5.கி.மு. 250 – 170        கபிலர்          275 – 205        70

6.கி.மு. 230 – 150      ஔவையார்        255 – 160        95

7.கி.மு. 200 – 130       நக்கீரர்           240 – 160        80

8.கி.மு. 170 – 100     மருதன் இளநாகனார்      190 – 100        90

9.கி.மு. 150 – 70     ஆவூர் மூலங்கிழார்      180 – 105        75

10.கி.மு. 130 – 50      கோவூர்கிழார்        160 – 75         85

நமது ஆய்வின் முக்கிய விடயங்கள்:

1.திட்டவட்டமான சான்றுகளைக் கொண்ட உலக வரலாற்றுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை கணித்துக் கால வரையறை செய்தது; கிரேக்க வீரன் அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், மகத அரசில் ஏற்பட்ட நந்தர் - மௌரியர் ஆட்சி ஆண்டுகளைக் கொண்டும், அசோகனின் கல்வெட்டு ஆண்டுகளைக் கொண்டும், மாமூலனாரின் காலத்தையும், சேரன் செங்குட்டுவன் காலத்தையும் கணித்துக் காலவரையறை செய்தது.

2. சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகை நூல்களையும், பத்துப்பாட்டில் 2 முதல் 9 வரையுள்ள எட்டுப் பாடல்களையும் தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றையும் சான்றாதார இலக்கியங்களாகக் கொண்டு இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்கள் பிற்காலத்தவை என்பதால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

3.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனைச் சங்க காலத்துக்கான காலவரிசைப் படியான வரலாற்றைக் கணித்துக் கால வரையறை செய்யப் பயன்படுத்திக் கொண்டது.

4.இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவான காலகட்டம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்களின் நூல்களில் உள்ள சிவப்பிந்திய, இரிக் வேதகால இனக்குழுக்களின் வாழ்வியலையும், இனக்குழு நிலையில் இருந்து நகர அரசுகளாக உருவான கிரேக்க உரோம நகர அரசுகளின் வரலாற்றையும் ஆய்வு செய்து அதனைச் சங்ககாலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் ஒப்பிட்டு, சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலகட்டம் என்பதை நிறுவியது.

5.அசோகன் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு, புகளூர்க் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு போன்றவைகளின் ஆண்டுகளையும், முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், செழியன் நாணயங்கள், கொல்லிப்பொறை, மாக்கோதை, குட்டுவன்கோதை நாணயங்கள் போன்ற நாணயங்களின் ஆண்டுகளையும், இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டையும் நமது சங்ககால இலக்கியக் கணிப்பு ஆண்டுகளோடு இணைத்து ஆய்வு செய்து, பழந்தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி வரையறுத்து உறுதி செய்திருப்பது.

6.தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றனவற்றை வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளாது, அவைகளைத் தவிர்த்திருப்பது, பிற சான்றுகளுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் அவைகளைப் பயன்படுத்தியிருப்பது; பதிகம், பாயிரம், அடிக்குறிப்புகள் போன்றனவற்றைப் பிற சான்றுகளோடு இணைத்துப் பயன்படுத்தியிருப்பது. அதன்மூலம் வரலாற்றை அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்து வரையறை செய்திருப்பது.

சங்க இலக்கியம் - ஒரு பக்கமே:

சங்க இலக்கியங்களின் காலகட்டத்தையும், அவை தொகுக்கப்பட்டவைதான் என்பதையும், பெரும்பகுதி அழிந்ததுபோக எஞ்சிய ஒரு சிறு பகுதி மட்டுமே தற்பொழுது கிடைத்துள்ளது என்பதையும், அவை வரலாற்று ஆவணங்கள் அல்ல இலக்கியங்களே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலம் சங்க இலக்கியம் அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் துறைகள் குறித்தோ அல்லது அனைத்துத் தரவுகள் குறித்தோ பேசியிருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து கொள்ள இயலும். தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே சங்க இலக்கியங்கள் காட்ட வல்லன என்பதையும், அதுவும் தொகுத்தவரின் கண்ணோட்டத்திற்கு உட்பட்டதாகவே அவை அமையும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இவை பற்றிய தெளிவு இருக்குமானால், சங்க இலக்கியத்தில் சொல்லப்படாத ஒன்று என்பதால் சங்ககாலத் தமிழ் சமூகத்தில் அந்த ஒன்று இல்லை என முடிவு செய்ய முடியாது. சான்றாக, தமிழர்கள் தங்களது தொழில்நுட்ப மேன்மை போன்ற காரணங்களால் 500 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் தங்கள் சொந்தக் கப்பலில் பயணம் சென்று, அங்கேயே தங்கியிருந்து வணிகம் செய்துள்ளனர். ஆனால் அவை பற்றிய தரவுகள் எதுவும் சங்க இலக்கியத்தில் இருக்கல்லை. வெளிநாட்டினர் தமிழகத்திற்கு வந்து வணிகம் செய்த தகவல்களே உள்ளன. ஆகவே சங்ககால வாழ்க்கை குறித்த முழுமையான புரிதலை சங்க இலக்கியம் வழங்க இயலாது.

சங்ககால ஆட்சியாளர்கள்:

கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான 300 வருட காலத்தில் உதியன் சேரலாதன் முதல் சேரன் குட்டுவன் கோதை வரையான 14 சேர வேந்தர்களும், சோழன் பெரும்பூட் சென்னி முதல் சோழன் நலங்கிள்ளியின் மகன் வரையான 11 சோழ வேந்தர்களும், பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் பாண்டியன் மாறன்வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களும் ஆண்டனர். அத்தோடு இவர்களின் குடும்ப அரசர்களும், கிளை அரசர்களும், வேளிர்களும் ஆண்டனர். இவர்கள் போக நூற்றுக்கணக்கான சிறுகுறு மன்னர்களும் ஆண்டனர். இவர்கள் அனைவரின் காலகட்டங்களும், அனைத்து வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. கி.மு. 750க்கு முன்பே மூவேந்தர்கள் தங்களுக்குள் ஐக்கியக் கூட்டணியை அமைத்துக்கொண்டு தாங்கள் மட்டுமே முடிசூடும் உரிமை பெற்ற வேந்தர்களாக உருவாகியிருந்தனர். பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஒற்றுமைக்கும் இந்த ஐக்கியக்கூட்டணி ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்து வந்தது. சங்ககால வேந்தர்களின் (39 வேந்தர்கள்) ஆட்சியாண்டுகள் காலகட்டம் வாரியாக இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ளன. இத்துடன் புலவர்கள், ஆட்சியாளர்கள் குறித்த 3ஆம் காலகட்ட கோட்டியல் வரைபடம் மாதிரிக்காக இணைக்கப்பட்டுள்ளது.

வணிகம், தொழில்நுட்பம், ஐக்கியம்:

பழந்தமிழகத்தின் வரலாற்றை காலவரிசையுடன் தொகுத்ததோடு பழந்தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த அதன் தொழில்நுட்பம், வணிகம், வேளாண்மை, தமிழரசுகளின் ஐக்கியம், தத்துவம், இசை ஆகியன குறித்தும் தமிழ்மொழி, அதன் பழமை ஆகியன குறித்தும் எமது நூல்கள் பேசியுள்ளன. இங்கு முதலில் வணிகம், தொழில்நுட்பம், ஐக்கியம் ஆகியன குறித்து மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

வணிகம்:

மிகப்பழங்காலம் முதல் மிகப்பெரிய கடற் படையையும், உலகளாவிய வணிக மேலாண்மையையும் பழந்தமிழ் அரசுகள் கொண்டிருந்தன. பண்டைய உலகின் மிக ஆடம்பரமான பொருட்களாக இருந்த வாசனைத்திரவியங்கள், வாசனைப்பொருட்கள், முத்துக்கள், மணிக் கற்கள் போன்ற பலவற்றின் உற்பத்தியும் மூலவணிகமும் பழந்தமிழரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் காரணமாக சங்ககாலத்தில் தமிழர்கள் வணிகத்தில் உலகப் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். பழந்தமிழ் வணிகம் குறித்து நிறையத்தகவல்கள் இருந்த போதிலும் இங்கு மூன்று தகவல்களை மட்டும் பார்ப்போம். முதலாவது திரு.சுகாப் எழுதிய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு” என்கிற ஆங்கில நூல். இந்நூல் பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப் பொருட்கள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசுகிறது. இந்நூலை பழந்தமிழக வணிகம் பற்றிய மிகச்சிறந்த ஆவணம் எனலாம். அந்நூல் எகிப்திலிருந்து தமிழகம் வந்த கப்பல்களைவிட பெரிய அளவில் உள்ள கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் தமிழகத்திலிருந்து கிழக்கு நாடுகளுக்குச் நோக்கிச் சென்றன என்பன போன்ற பல தரவுகளைக் கூறுகிறது.

கி.பி. 78இல் எகிப்திலிருந்து தமிழகம் வழியாக கங்கைவரை பயணம் செய்த ஒரு கிரேக்க மாலுமியின் குறிப்புகளை அடிப்படையாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது “முசிறி - அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்”. இந்த ஒப்பந்தம் கி.பி.150ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒரு வணிக ஒப்பந்தம். அதன்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை உரோமுக்கு ஏற்றுமதி செய்த வணிகப் பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ.180 கோடி. வருடம் தோறும் நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் உரோமுக்கு ஏற்றுமதி செய்து வந்ததைக் கணக்கிட்டால் அது பல ஆயிரம் கோடி வரும். அதனால்தான் இந்தியாவில் கிடைக்கும் உரோம நாணயங்களில் 95 விழுக்காட்டுக்கு மேல் பழந்தமிழகத்தில் கிடைத்துள்ளன. இச்செய்திகள் பழந்தமிழக வணிகத்தின் பேரளவை நமக்குக் காட்டுகிறது.

மூன்றாவது கேரளாவில் பட்டணம் எனப்படும் முசிறியில் நடக்கும் அகழாய்வு. இது குறித்து, அதன் இயக்குநர் செரியன், முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் மத்தியதரைக்கடல்வரை உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்கிறார். மேலும், “கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெரும் துறைமுக நகரங்களுக்கு இணையான ஒரு பெரு நகராக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்” எனக் கூறுகிறார். ஆகவே முசிறி நகரானது அன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான ஒரு பெருநகராக இருந்துள்ளது. பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியை விடப்பெரிய நகரங்கள். இத்தரவுகள் அன்று தமிழகம் உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகவும், வணிக மையமாகவும் இருந்துள்ளது என்பதை உறுதி செய்கின்றன.

தொழில்நுட்பம்:

சங்ககாலத்தில் எஃகு, வார்ப்பு இரும்பு ஆகியவற்றைத் தயாரிக்கும் இரும்புத் தொழில்நுட்பத்திலும், ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும், நீர்ப் பாசனத்திலும், கப்பல் கட்டுவதிலும் பழந்தமிழர்கள் மிகச்சிறந்த தொழிநுட்பத்திறனைக் கொண்டிருந்தனர் என்பதை எண்ணற்றத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு, மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் தயாரிப்பதிலும் பழந்தமிழர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்பத்திறன் உடையவர்களாக இருந்துள்ளனர். ஆதிச்ச நல்லூர் அகழாய்வு பழந்தமிழர்களின் தொழிநுட்ப மேன்மையை வெளிப்படுத்துகிறது. அகழாய்வின் போது பழந்தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்தன. அவைகளில் பொன்நெற்றிப் பட்டங்கள், வெண்கலக் கிண்ணங்கள், வெண்கல ஏனங்கள், மூடிகள், குடுவைகள், பூச்சாடிகள், வெண்கலச் சல்லடைகள், வெண்கலச் சட்டிகள், வெண்கல அணிமணிகள், இரும்பு வாள்களும் குத்துவாள்களும், இரும்பு ஈட்டிகள், அம்புகள், இரும்புக் கோடாரிகளும், மண்வெட்டிகளும், பல்வேறுவிதமான மட்பாண்டங்கள் ஆகியன அங்கு கிடைத்தன. வெண்கலப் பொருட்களும் மட்பாண்டப் பொருட்களும் மிகச்சிறந்த கலையழகு மிக்கப் பொருட்களாக இருந்தன. ஆகவே பழந்தமிழர்களிடம் இருந்த உயர்தொழில்நுட்ப அறிவும், இன்ன பிற காரணிகளும் அவர்களை உலகக் கடல் வணிகத்தின் தலைசிறந்த நாடாகவும், பொருள்வளமும் செல்வ வளமும் மிக்க நாடாகவும், தெற்காசியாவின் கடல் வல்லரசாகவும் மாற்றியமைத்தது.

பழந்தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி:

வின்சென்ட் சுமித், தமிழ் அரசுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளை பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன எனக் கூறுகிறார். வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்த ஐக்கியக் கூட்டணியின் கடற்படைகொண்டுதான் அவர்கள் இன்றைய அரபிக்கடல், வங்காளக்கடல், இந்துமகாக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகிய அனைத்தையும் தங்களின் வணிகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களைவிட அவர்கள் பல மடங்கு வலிமை வாய்ந்த கடற்படைகளைக் கொண்டிருந்தனர். கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனக் கூறியிருப்பதும், மேற்கில் குஜராத் வரையிலும், கிழக்கில் கங்கை நதிவரை வரையிலும் இருந்த பண்டைய துறைமுக நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகள்.

மாமூலனார் தனது அகம் 31ஆம் பாடலில் ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த’ என்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர்கள் மூவரும் இணைந்து மொழிபெயர்தேயம் எனப்படும் தக்காணத்தின் இன்றைய கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் ஆகிய பகுதிகளைப் பாதுகாத்து வந்தனர் என்கிறார். அதன்மூலம் தமிழ் அரசுகளிடையே ஒரு ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். உலகமே பெயர்ந்து வருவது போன்ற மிகப்பெரும் கப்பல்கள் மூலம் உலகம் முழுவதும் சென்று வணிகம் செய்யும் வணிகத்தை உடையவர்களாகப் பழந்தமிழர்கள் இருந்தனர் என்பதை அகம்-255, புறம்-400 ஆகிய பாடல்கள் உறுதி செய்கின்றன. அன்று பண்டையத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும், வேளாண்மையிலும் உயர்தரமான, உன்னதமான வளர்ச்சியைப் பெற்றிருந்த நாடாக இருந்து வந்தது.

பழந்தமிழரசுகளின் வல்லமை:

சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கி.மு.333-275) நந்தர்களின் இறுதிக்காலத்தில (கி.மு. 325இல்) வடநாடு படையெடுத்து இமயத்தில் விற்சின்னம் பொறித்து கி.மு. 322இல் பெரு வெற்றியோடு திரும்பினான். அதுபோன்றே சேரன் செங்குட்டுவன் (கி.மு.275-220) அசோகன் இறந்த பிறகு கி.மு. 230இல் சாதவாகனர்களைத் தனி அரசாக அமரவைத்து, அவர்களின் உதவியோடும் சோழ பாண்டியர்களின் ஆதரவோடும் வடநாடு படையெடுத்து இமயத்தில் விற்சின்னம் பொறித்து கி.மு. 227இல் பெரு வெற்றியோடு மீண்டான். சோழன் நலங்கிள்ளி கி.மு. 80-78 வாக்கில் மகதப்பேரரசை ஆண்ட பிராமண சுங்க வம்சத்தின் இறுதிக்காலத்தில், வடநாடு படையெடுத்துச் சென்று சுங்கவம்ச ஆட்சியின் முக்கிய அடித்தளமாக இருந்த உச்சயனி நகரை வென்றான். மௌரியப்பேரரசு தனது பெரும்படைகளைக் கொண்டு கி.மு. 297 முதல் கி.மு. 288 வரை முதலில் தக்காணத்தின் மீதும் பின் தமிழ்நாட்டின் மீதும் 10 வருடங்கள் நடத்திய தாக்குதலை, சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி (கி.மு.305-285) தலைமையிலான தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி, கி.மு. 288இல் நன்னனின் பாழி நகரில் நடந்த இறுதிப்பெரும்போரில் முறியடித்து பெரும்வெற்றி பெற்றது. இவைபோக தமிழரசுகள் அவ்வப்போது வட திசையில் படையெடுத்துத் தக்காணப்பகுதிகளை வென்று அவற்றைத் தமிழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தமிழரசுகள் தங்களின் பெரும் கடற்படைகளைக்கொண்டு இந்தியாவின் கிழக்கு மேற்குக் கடற்கரை நகரங்களை வென்று அவற்றைத் தமிழகத்தின் வணிகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இத்தரவுகள் தமிழரசுகளின் வலிமையைப் பறைசாற்றுகின்றன.

தமிழ்ச் சமூகம் – வரலாற்றுக்கால உயர்நிலைச்சமூகம்:

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சி பெற்ற உன்னதமான சமூகமாக இருந்தது என்பதை வேறுபல காரணிகள் மூலமும் உறுதி செய்யலாம்.

1.சங்ககாலம் என்பது வளர்ச்சிபெற்ற நகர அரசுகளின் காலமாக இருந்தது.

2.பழந்தமிழகத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இரும்புக்காலம் தோன்றி இருந்தது.

3.சங்ககாலத்தின் தொடக்கத்திலேயே (கி.மு. 8ஆம் நூற்றாண்டு) எண்ணியம் (சாங்கியம்) எனப்படும் பொருள்முதல்வாத மெய்யியல் தோன்றி பழந்தமிழகத்தின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டிருந்தது.

4.சங்ககாலத்தில் சங்க இலக்கியம் எனப்படும் புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியம் உருவாகி இருந்தது.

5.சங்ககாலத் தமிழ் மக்கள் தங்களை தங்கள் மொழியின் அடிப்படையில் ‘தமிழர்கள்’ என அடையாளப்படுத்திக் கொண்டிருந்தனர்.

6.சங்ககாலத் தமிழகத்தில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்து வந்தது.

சங்க காலம் - நகர அரசுகளின் காலம்:

உலக நாகரிகங்கள் அனைத்திலும் முதலில் நகர அரசுகள் தான் தோன்றுகின்றன. ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளில் இந்த நகர அரசுகள், பிற நகர அரசுகளை வென்று பேரரசுகளாக ஆகிவிடுகின்றன. ஆனால் தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 50 வரை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நகர அரசுகள்தான் இருந்தன. அவை பேரரசுகளாக ஆகவில்லை. அதற்குத் தமிழக அரச குடும்பங்களில் இருந்த சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணம். இங்கு தந்தைக்குப்பின் மகன், மகனுக்குப் பின் அவனது மகன் என்ற அரசுரிமை முறை இருக்கவில்லை. அதற்குப் பதில் இங்கு தந்தை ஒரு நகரின் அரசனாக இருந்தான் என்றால், அவனது தம்பிகளும், அவனது மகன்களும், தம்பிகளின் மகன்களும் பிற நகர்களின் அரசர்களாக இருந்தார்கள். ஆக தமிழக அரசகுடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவரும் உரிய வயதாகும் பொழுது அரசர்களாக ஆக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களில் மூத்தவன் மட்டுமே வேந்தனாக இருந்தான். மற்றவர்கள் அனைவரும் அவனுக்குக் கட்டுப்பட்ட அரசர்களாக இருந்தனர். இம்முறைதான் பழந்தமிழ்நாட்டில் இருந்து வந்தது. அதனால் சேர, சோழ, பாண்டிய அரச குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் ஆறு அல்லது ஏழு பேர் அரசர்களாக இருந்தனர். மேலும் வேந்தர்களின் கிளை அரசர்களும், அவர்களின் அரசகுடியைச் சேர்ந்த வேளிர்களும் அரசர்களாக இருந்தனர். இவர்கள் போக குறிஞ்சி நிலக் குறுநில மன்னர்களும், முல்லை நிலச் சீறூர் மன்னர்களும், மருத நில மூதூர் மன்னர்களும் பல்வேறு சிறுகுறு நகர, நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். ஆகவே பழந்தமிழ்நாட்டில் அன்று நூற்றுக்கணக்கான நகர, நகர்மைய அரசுகள் இருந்தன எனலாம்.

பொதுவாக நகர அரசுகள் என்பன சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், சனநாயகக் கண்ணோட்டமும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், பொருள் முதல்வாத மெய்யியலும் கொண்டனவாக இருந்தன. அங்குதான் நிறையப் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. இவற்றை வரலாறு உறுதி செய்துள்ளது. ஆனால் அதன்பின் வந்த பேரரசுகள் பெரும்பாலும் புதிதாக எதனையும் கண்டுபிடிக்கவோ உருவாக்கவோ இல்லை. அவை பெரும்பாலும் இந்த நகர அரசுகளின் கொள்கைகளை கோட்பாடுகளை, சிந்தனைகளை அப்படியே பின்பற்றின. அவற்றின் கண்டுபிடிப்புகளையும் அவை பயன்படுத்திக் கொண்டன. அதேசமயம் பேரரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தவும் அடக்கி ஆளவும் மக்களிடையே மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பின. கார்டன் சில்டே (Gordon childe) என்ற தொல்லியலாளர் கி.மு. 4000 அளவில் மெசபடோமியாவில் தோன்றிய சுமேரிய நகர அரசுகளையும், அதன்பின் அங்கு உருவான அக்கேடியா, பாபிலோனியா, அசீரியா, மிட்டாணியா, பாரசீகம் போன்ற பேரரசுகளையும் விரிவாக ஆய்வு செய்து நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிடப் பலவகையிலும் மிகச்சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை உறுதி செய்துள்ளார். கிரேக்க நகர அரசுகளையும், உரோமப் பேரரசையும் ஒப்பிடும்பொழுதும் இதனை உறுதி செய்ய முடிகிறது. அதைப்போலவே பழந்தமிழ்நாட்டில் இருந்த நகர அரசுகளையும் அதேகாலகட்ட மகதப்பேரரசையும் ஒப்பிடும்பொழுது, பழந்தமிழக நகர அரசுகள் என்பன மகதப் பேரரசைவிட ஒரு உயர்தரமான உன்னதமான வளர்ச்சியைப் பெற்றிருந்தன என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆகவே சங்ககாலத்தில் இருந்த நகர அரசுகள்தான் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட உயர்தரமான உன்னதமான வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.

இரும்புக்காலமும் தொல்கபிலரும்:

மனித நாகரிகத்தின் வரலாறு என்பதே அதன் உற்பத்திப்பொருட்கள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றனவற்றின் அடிப்படையில்தான் பழையகற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், செம்புக்காலம் இரும்புக்காலம் என வரையறை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் இரும்புக்காலம் என்பதுதான் மனித இனத்துக்கு வேளாண்மையில் ஈடுபடும் சாத்தியக் கூறுகளைக்கொண்டு வந்து அவனை நாகரிக நிலைக்கு உயர்த்திய ஒரு மிக முக்கியக் காலகட்டம். பழந்தமிழ்நாட்டில் அந்த இரும்புக்காலம் இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்தது என்பதும் உலகில் முதல்முதலாக தமிழர்கள் தான் இரும்பை உருக்கிப் பயன்படுத்தியவர்களாக இருந்தனர் என்பதும் பழந்தமிழக நாகரிக வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக்காரணம். பழந்தமிழ்நாட்டில் மிக நீண்டகாலத்திற்கு முன்பே இரும்புக்காலம் தோன்றி, நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதால்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டு அளவில் தொல்கபிலர் போன்ற மாமேதை தோன்றி, எண்ணியம் (சாங்கியம்) என்ற காரண காரியத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்ட பொருள் முதல்வாத மெய்யியலைத் தோற்றுவிக்க முடிந்தது. அவருடைய எண்ணிய மெய்யியல்தான் பழந்தமிழ்நாட்டின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்கி இருந்தது. ஆகவே அவரைத் ‘தமிழ் அறிவு மரபின் தந்தை’ எனக் கருதலாம். தொல்கபிலர் போன்றவர்களால் பழந்தமிழ்ச்சமூகம் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக்கொண்ட சமூகமாக இருந்து வந்த போதிலும், அங்கு நிலதெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு போன்ற முன்னோர் வழிபாடுகள் இருந்து வந்தன. அத்துடன் பழந்தமிழ்ச்சமூகம் அறிவு சார்ந்த, அறம்சார்ந்த வாழ்வை அடிப்படையாகக்கொண்ட சமூகமாக இருந்து வந்தது.

பழந்தமிழ்ச் சமூகமும் செவ்வியல் இலக்கியமும்:

ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாக வேண்டுமானால் அம்மொழிச்சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கல்வி, அறிவியல், தத்துவம், மருத்துவம், இசை, ஓவியம், நடனம், கப்பல்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை, போர்க்கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய வரலாற்றுக்கால உயர்நிலைச்சமூகமாக இருந்தாக வேண்டும். இதற்கு வரலாற்றில் பல சான்றுகளைக் காணலாம். கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியம் என்பது கிரேக்க நகர அரசுகளின் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 5ஆம், 4ஆம் நுற்றாண்டுகளில் உருவாகியது. அது போன்றே இலத்தீன் சீனம், சமற்கிருதம் ஆகியவற்றின் செவ்வியல் இலக்கியங்கள் அந்தந்த வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்களின் காலகட்டங்களில் தான் படைக்கப்பட்டன என்பதை வரலாறு உறுதி செய்கிறது. இவ்வரலாற்றுப் படிப்பினையின்படி, கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலம் என்பது பல்வேறு துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாக இருந்துள்ளதன் காரணமாகவே அக்காலகட்டத்தில் சங்க இலக்கியம் என்ற ஒரு புகழ்பெற்ற செவ்வியல் இலக்கியம் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.

பழந்தமிழ்ச்சமூகம் - மொழியும் கல்வியும்:

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, உற்பத்தி அதிக அளவில் பெருகி, சந்தை விரிவடைந்து, வணிகம் உலகளாவிய அளவில் நடைபெறும் பொழுதுதான் வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் வளர்ச்சியடையும். இந்த நிலையில்தான் ஒரு சமூகம் தன்னை மொழியால் அடையாளப் படுத்திக்கொள்ளும். பண்டைய நாகரிகங்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, சீனம், கிரேக்கம், தமிழகம் ஆகிய மூன்று நாடுகளின் சமூகங்கள் மட்டுமே தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்டன. அன்று பிற பண்டைய நாகரிகச் சமூகங்கள் தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே பண்டைய காலத்தில் சீனம், தமிழகம், கிரேக்கம் ஆகிய சமூகங்களில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்று, வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் உருவாகியிருந்தன. அதன் காரணமாகவே அவை தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொண்டன. இன்றைய செர்மனி, இத்தாலி, பிரான்சு, சீனம், சப்பான், தென்கொரியா, இருசியா போன்ற வளர்ந்த நாடுகள் அனைத்துமே தங்களை மொழியால்தான் அடையாளப்படுத்திக்கொண்டுள்ளன. தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மொழி தேசிய இனங்கள் அனைத்துமே 400 ஆண்டுகளுக்குள்தான் தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கின. ஆகவே மொழியால் அடையாளப்படுத்திக்கொள்வது என்பது வளர்ச்சியின் அடையாளம். சாதி, மதம் போன்ற பிற அடையாளங்கள் வளர்ச்சியின்மையின் அடையாளம். ஒரு சமூகம் வளர்ச்சியடையும்பொழுது சாதி, மதம் போன்ற அடையாளங்களை விட்டுவிட்டு மொழி அடையாளத்தை எடுத்துக்கொள்ளும்.

கீழடி அகழாய்வு கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் அ. பாண்டுரங்கன் போன்றவர்கள் சங்ககாலத்தில் மிகப் பரந்த அளவில் மிகச் சாதாரண மனிதர்கள் கூட கல்வி அறிவு கொண்டவர்களாக இருந்தனர் என்பதை உறுதி செய்துள்ளனர். தமிழகம் பரவலான கல்வியறிவைப் பெற்றிருந்தது என்பதற்கு, சமண பௌத்த மதங்கள் காரணமல்ல. அம்மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இங்கு கல்வியறிவு பரவலாக இருந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்டகாலமாக இருந்து வந்த பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளும், தமிழகத்தின் நகர அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும்தான் கல்வி அறிவு சாதாரண மக்களிடமும் பரவலாக இருப்பதற்குக் காரணம். கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் பழந்தமிழ்நாட்டில் இருந்த தரமான, பரவலான கல்வியறிவு என்பது அன்றைய கிரேக்கம், எகிப்து, சீனம், பாரசீகம் போன்ற உலகின் வேறு எந்த நாகரிக நாடுகளிலும் இருக்கவில்லை. இதனை பழந்தமிழ்ச்சமூகத்தின் பெருமை எனலாம்.

தமிழ்ச்சிந்தனை மரபும், தமிழிசையும்:

தமிழகத்தில் தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூத்தலையார், கௌதமனார், பூரணர் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல் அறிஞர்கள் தோன்றினர். கி.மு. 750 வாக்கில் தொல்கபிலர் தோற்றுவித்த எண்ணியம் எனப்படும் சாங்கியம் குறித்து விவேகானந்தர் ‘இந்தியாவில் தோன்றிய அனைத்து மெய்யியல் கோட்பாடுகளும் தொல்கபிலருக்கு கடமைப்பட்டவை’ என்கிறார் இந்தியாவின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனையின் அடிப்படையாக மூலச் சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுதான் இருந்தது. ஊழி ஊழிக்காலமாய் இந்த உலகம் இருந்து கொண்டுள்ளது என்பதால் இதனை உருவாக்குவதற்கு என யாரும் தேவைப்படவில்லை எனவும் இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் உருவாக முடியாது எனவும் வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும் கூறுகிறார் தொல்கபிலர். பரிணாமம், இயக்கம் ஆகியன குறித்த நவீன சிந்தனைகளை அவர் கூறிச் சென்றுள்ளார். ஐன்சுடீன், சுடீவன் ஆக்கிங் போன்ற நவீன அறிஞர்களின் கூற்றுகள் பலவற்றை அன்றே அவர் கூறிச்சென்றுள்ளார் என்பது வியப்புக்குரியது. தொல்கபிலரின் எண்ணியம் கிரேக்கம் உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியது. கி.மு. 1000 முதல் கி.பி. முதல் நூற்றாண்டுவரை தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாகப் பொருள்முதல்வாத மெய்யியல்தான் இருந்து வந்தது. தமிழகத்தில் இருந்த தன்னாட்சி பெற்ற நகர அரசுகள்தான் இதற்குக்காரணம். ‘மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு’ என்ற எனது நூல் தமிழ்ச்சிந்தனை மரபு குறித்து விரிவாகப் பேசுகிறது.

இசையின் வளர்ந்த நிலையான சாத்திரிய இசை என்பது கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டுகளிலேயே பழந்தமிழகத்தில் மிகவும் வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தது. இசை இலக்கியம் எனப்படும் சாகித்தியங்களும், இசை இலக்கணங்களும் சார்ந்த நூல்கள் அன்றே தமிழகத்தில் நிறைய உருவாகியிருந்தன. அனைத்தும் அழிந்து போயின. சிலப்பதிகாரமும் பரிபாடலும் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. சிலப்பதிகாரம் ஒரு இயல் நூல் எனினும் இசைக்கடல் என்று சொல்லும் அளவு இசை குறித்தத்தரவுகள் அதில் பேரளவாக உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பாடுபவர் ஒருவர், அதற்கு இசை அமைப்பவர் ஒருவர் என்ற வளர்ந்த நிலை தமிழகத்தில் இருந்தது என்பதை பரிபாடல் உறுதி செய்கிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் தமிழ் மொழியில் மட்டுமே இசை சாகித்தியங்கள் எனப்படும் இசை இலக்கியங்கள் இருந்தன. பிற இந்திய மொழிகளில் அவை இருக்கவில்லை. இசை இலக்கணங்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பின் வடமொழியில் உருவான போதும் அவை தமிழ் இசை இலக்கியங்களைக் கொண்டு தான் உருவாகின. ஆகவே இந்தியாவின் ஆதி இசை என்பது தமிழிசைதான். கர்நாடக இசையும் தமிழிசைதான்.

சங்கம் மருவிய காலம்:

கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலம் நகர நகர்மைய அரசுகளைக்கொண்ட காலமாக இருந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலிருந்தே பேரரசுக் கொள்கையின் காரணமாக சிறுகுறு நகர அரசுகள் சேர, சோழ, பாண்டிய அரசுகளோடு இணைக்கப்படும் நிகழ்வு தொடங்கியது. நாளடைவில் மூவேந்தர்கள் தவிர பிற அரசுகள் இல்லாது போகத்தொடங்கின. கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் அரசர்களாக ஆவதும் தடுக்கப்பட்டது. ஆகவே கி.மு. 50 வாக்கில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளால் மட்டுமே ஆளப்படும் நிலைமை தோன்றியது. கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை இந்த பேரரசுகள் இருந்தன. இக்காலம்தான் பேரரசுக்காலம் அல்லது சங்கம் மருவிய காலம். இக்காலகட்டத்தில் கி.பி. 150வரை தமிழ்ச்சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்தது. உற்பத்தியும், வணிகமும், செல்வமும் பெருகி வந்தது. இக்காலகட்டத்தில்தான் சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களும், திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் எழுதப்பட்டன. ஆனால் அதன்பின் பேரரசுக் கொள்கைகளாலும், மதச்சிந்தனைகளாலும், இன்னபிற காரணங்களாலும் தமிழ்ச்சமூகம் சீரழிந்துபோன சமூகமாக மாறத் தொடங்கியது. ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும் வீண் ஆடம்பரங்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிப்போய், சுயசிந்தனையோ பகுத்தறிவோ இல்லாதவர்களாக மாறிப் போயிருந்தார்கள். சாதாரணமக்களும் மூட நம்பிக்கைகளிலும் பிற்போக்குச் சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்தனர். பொதுவாக சமூகம் சீர்கேடான நிலையில் இருந்தது. ஆனாலும் செல்வ வளத்திலும், பொருள் வளத்திலும் பெரிய மாறுதல் இருக்கவில்லை. இந்நிலையில் கி.பி. 235 வாக்கில் உரோமோடு நடந்த வணிகம் நின்று போனது. அரசுகளின் முறையற்ற நிர்வாகமும், வீண் செலவுகளும் மேலே சொல்லப்பட்ட காரணங்களும் சேர்ந்து தமிழகம் வலிமையற்றதாக மாறிப்போயிருந்தது. இச்சூழ்நிலையில்தான் கி.பி. 250 வாக்கில் களப்பிரர் படையெடுப்பு நடந்தது. அது தமிழகத்துக்கு பேரழிவைக்கொண்டு வந்தது. அதன்பிறகு தமிழகம் மீளவே இல்லை எனலாம்.

பழந்தமிழகத்தில் சாதியும், வகுப்புகளும்:

மனித சமூகத்தில் சொத்துடமை உருவானபின் உலகம் முழுவதும் வகுப்புகள் தோன்றின. சொத்துடமை இருக்கும்வரை வகுப்புகளும் இருக்கும். தொழில் அடிப்படையில், வர்க்க அடிப்படையில் இந்த வகுப்புகள் இருந்தன. பிறப்பு அடிப்படையில் வகுப்புகள் இருக்கவில்லை. பழந்தமிழகத்திலும் வகுப்புகள் இருந்தன. வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். இவர்கள் முதல் வகுப்பாவர். அந்தணர், தாபதர், அறிவர், கணியர் போன்ற பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் கொள்கைச்சான்றோர் இரண்டாம் வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். வணிகர்கள், தொழில் செய்பவர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள் போன்றவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள். இவர்களில் சிறு குறு வணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், சிறு குறு வேளாண்குடிகள் ஆகியோரும், இன்னபிறரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

புலையர், இழிசனர் போன்றவர்களும் இந்த நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். சங்ககாலத்தில் அவர்கள் மதிப்புக்குரியவர்களாகவே இருந்தனர். பழந்தமிழகத்தில் இந்த நான்கு வகுப்புகள் மட்டுமே இருந்தன. வகுப்புகளிடையே கலப்புமணம் இருந்து வந்தது. மேலும் மேல்வகுப்பினர் கீழ் வகுப்பாக ஆவதும் கீழ்வகுப்பினர் மேல் வகுப்பாக ஆவதும் இருந்து வந்தது. ஆகவே சங்ககாலத்தில் சாதிகள் இருக்கவில்லை. சாதி இல்லை என்பதற்கு அடையாளமாக இருப்பதுதான் ‘உடன்போக்கு’ திருமணமுறை. உடன்போக்கு என்பது தலைவி தான் விரும்பிய ஆண் மகனோடு சென்று திருமணம் செய்துகொள்வதாகும். இதனைச் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் ஏற்று அங்கீகரித்திருந்தது. இந்த உடன்போக்கில் சங்ககாலத்தலைவி குடி, வகுப்பு, தொழில் போன்ற வேறுபாடுகள் இன்றி அனைத்துத் தலைவனோடும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் சாதி இருக்கவில்லை. வகுப்புகள் மட்டுமே இருந்தன.

களப்பிரர் படையெடுப்பும் பழந்தமிழகத்தின் வீழ்ச்சியும்:

பழந்தமிழகம், கி.பி. 250 வாக்கில் ஏற்பட்ட களப்பிரர் படையெடுப்பால் பேரழிவுக்குள்ளாகி, பழந்தமிழக நகரங்கள் அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. 1000 வருடங்களுக்கும் மேலாக உலகின் தலைசிறந்த சமூகமாக இருந்த பழந்தமிழ்ச்சமூகம் முற்றிலுமாக அழிந்துபோய், ஒரு பிற்போக்கான, பின் தங்கிய, மதம் சார்ந்த, மூட நம்பிக்கைகள் கொண்ட ஒரு வளர்ச்சியற்ற கிராமச் சமூகமாக மாறிப் போனது. இந்த களப்பிரர்காலம் (கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை) என்பது தமிழர்கள் வீழ்ச்சிக்கும், பேரழிவுக்கும், கொடுமைக்கும் உள்ளான காலம். தமிழ் ஒரு கீழ்மக்களின் மொழியாக மாறிப்போன காலம். முதலில் பாலி, பிராகிருத மொழிகளும், பின் இறுதியாக சமற்கிருத மொழியும் ஏற்றம்பெற்ற காலம். பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கப்பட்ட காலம். தமிழ்ச் சமூகம் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தை இழந்துபோன காலம். சமற்கிருதமயமாக்கல் நடைபெறத் தொடங்கிய காலம். இக்காலகட்டத்தில் பழந்தமிழகத்தில் இருந்த தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் அழிந்து போயின. இது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஒரு பேரிழப்பாகும். சரகசம்கிதை, பரதநாட்டிய சாத்திரம் போன்ற ஒருசில வடமொழி நூல்கள் தமிழ்மொழியிலிருந்து சமற்கிருத மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. மேலும் பல பழந்தமிழ் கலை அறிவியல் நூல்கள் வடமொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு கிரந்த எழுத்துகளில் ஆகமங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்ச் சமூகம் அவற்றை இழந்து போனதால் கலை, அறிவியல் தொழில்நுட்ப விடயங்களில் பேரளவான இழப்புக்குத் தமிழ்ச்சமூகம் உள்ளானது. ஆகமங்களில் உள்ள பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்படவேண்டும் என்பது இன்றைய தேவையாகும். களப்பிரர் காலம் என்பது கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான காலம். கி.பி. 550க்குப்பின் பாண்டியர், பல்லவர் ஆட்சி ஏற்பட்டது.

மதிப்பீடு: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் என்ற எமது நூலுக்கு, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் தந்த மதிப்புரையில்,

“அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச் செய்திகள் ஆகிய பலவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில் சங்கப் பிரதிகளைக் கணியன் பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார்….. பண்டையத் தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக இந்நூல் தரும் கால அட்டவணை நம்பகத்தன்மை மிக்கதாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது…. ஆய்வாளர் கணியன் பாலன் அவர்கள் அடிப்படையில் பொறியாளர் என்பதால் கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்துச் சங்கப்பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு என்பது பிறரை மலைக்கச் செய்கிறது. அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தொடர் வாசிப்பு மற்றும் தேடல் ஆகிய அனைத்திற்கும் உரியவராக ஆய்வாளர் கணியன் பாலன் அவர்களைக் காணமுடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சான்று நூல்கள்:

1.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 1 - 896.

2.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி, சூலை-2018, பக்: 1 – 351

3.மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, தமிழினி, சூலை-2018, பக்: 1 – 254.

4.கீற்று இணைய இதழ் கட்டுரைகள் – கணியன்பாலன்.

அட்டவணை-1:

சங்ககால மூவேந்தர் ஆட்சி ஆண்டுகள் (கி.மு.வில்)

(காலகட்டம் வாரியாக)

முதல் காலகட்டம் (350-270)

சேரன்

சோழன்

பாண்டியன்

உதியஞ்சேரலாதன்

(347-327)

பெரும்பூட்சென்னி

(335-305)

கருங்கை ஒள்வாள் பெரும்

பெயர் வழுதி(350-320)

 

இரண்டாம் காலகட்டம் (330-250)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (327-275)

செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி (305-285)

முதுகுடுமிப் பெரு வழுதி

(320-290)

 

மூன்றாம் காலகட்டம் (300-230)

1)பல்யானைச் செல்குழு

குட்டுவன்(275-265)

முதல் கரிகாலன்

(285-250)

நம்பி நெடுஞ்செழியன்

(290-270)

2)களங்காய்கண்ணி நார்

முடிச்சேரல் (265-250)

-

ஆரியப்படை கடந்த

நெடுஞ்செழியன் (270-245)

 

நான்காம் காலகட்டம் (270-200)

சேரன் செங்குட்டுவன்

(250-220)

-

வெற்றிவேற்செழியன்

(245-235)

 

ஐந்தாம் காலகட்டம் (250-170)

1)ஆடுகோட்பாட்டு

சேரலாதன் (220-212)

உருவப்பஃறேர் இளஞ்

சேட்சென்னி (250-210)

பசும்பொன்பாண்டியன்

(235-210)

2)செல்வக் கடுங்கொ

வாழியாதன்(212-205)

-

-

ஆறாம் காலகட்டம்(230-150)

1)தகடூரெறிந்த பெருஞ்சேரல்

இரும்பொறை (205-195)

கிள்ளிவளவன்

(210-190)

1)அறிவுடை நம்பி

(210-200)

2)குடக்கோ இளஞ்சேரல்

இரும்பொறை (195-184)

-

2)பழையன் மாறன்

(200-185)

 

ஏழாம் காலகட்டம் (200-130)

யானைக்கட்சேய் மாந்தரந்

சேரல் இரும்பொறை

(184-163)

இரண்டாம்கரிகாலன்

(190-170)

தலையாலங்கானத்துச்செரு

வென்ற நெடுஞ்செழியன்

(185-165)

 

எட்டாம் காலகட்டம்(170-100)

1)கணைக்கால்

இரும்பொறை (163-150)

இராசசூயம்வேட்ட பெரு

நற்கிள்ளி (170-145)

1)இளவந்திகைப்பள்ளித்துஞ்சிய

நன்மாறான் (165-145)

2)கோதைமார்பன்

(150-135)

-

2)கானப்பேரெயில் கடந்த

உக்கிரப்பெருவழுதி (145-130)

 

ஒன்பதாம் காலகட்டம் (150-70)

கோட்டம்பலத்துத் துஞ்சிய

மாக்கோதை (135-100)

1)குளமுற்றத் துஞ்சிய

கிள்ளிவளவன் (145-120)

1)சித்திரமாடத்துஞ்சிய

நன்மாறன் (130-120)

-

2)குராப்பள்ளித் துஞ்சிய

பெருந்திருமாவளவன்

(120-100)

2)வெள்ளியம்பலத் துஞ்சிய

பெருவழுதி(120-105)

 

பத்தாம் காலகட்டம் (130-50)

சேரமான் குட்டுவன்

கோதை (100-70)

1)நலங்கிள்ளி (100-75)

கூடகாரத்துத் துஞ்சிய

மாறன்வழுதி (105-70)

-

2) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி (75-50)

 

அட்டவணை – 2.

       கோட்டியல் வரைபடம் – மூன்றாம் காலகட்டம் (கி.மு. 270-200)        tamil kings and poets

குறிப்பு: மூன்றாம் காலகட்டத்தில் உள்ள புலவர்கள், ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய இரண்டாம், நான்காம் காலகட்ட புலவர்களும் ஆட்சியாளர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இதுபோன்று 10 காலகட்டங்களுக்கும் கோட்டியல் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

- கணியன் பாலன்