கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

jallikattu 315

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது.

குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது இணையதளப் பக்கத்தில் சென்று பார்த்தால், ஏதோ இந்தச் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட  அநாதைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஊமை மற்றும் காது கேளாதவர்கள், புற்றுநோயளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என இந்த அமைப்பு களத்தில் இறங்கியுள்ளதைப் பார்த்தால், இது ஒரு அடையாள அரசியலை முன்னிறுத்தும் பன்னாட்டு நிதியுதவி பெறும் அமைப்பு என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

  இந்த அமைப்பின் நோக்கம் நிச்சயமாக சாதி சார்ந்த அடையாள அரசியலை முன்னிறுத்துவதுதான் என்பதற்கு அந்த அமைப்பின் நிர்வாகியும், ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பேரணியின் ஒருங்கிணைப்பாளருமான நாகேந்திர பிரபு கொடுத்த பேட்டியே சாட்சியாக உள்ளது. “பேரணியில் பங்கேற்குமாறு பேஸ்புக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். ராமு என்ற காளையும், 6 விவசாயிகளையும் முன்நிறுத்தியே பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்குமாறு அரசியல் கட்சியினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஒரு அமைப்பினர் பீட்டா அமைப்புக்குத் தடை விதிக்கக் கோரி கருப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அவர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் கருப்புச்சட்டை அணியவில்லை” என்றார் ( நன்றி தமிழ் இந்து).

 இதிலே முக்கியமாக பார்க்க வேண்டியது அவர்களுக்கும், கூட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று போராடியவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று நாகேந்திர பிரபு கூறுவது. அப்படி என்றால் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேர் அண்டு வெல்பேர் அமைப்புக்கு கிடையாது என்பதும், பீட்டா போலவே தாங்களும் பன்னாட்டு நிதியுதவியுடன் இயங்கும் அமைப்பு என்பதால் அப்படி ஒரு கோரிக்கையை வைப்பது அபத்தமானது என்பதுதான் இதில் பொதிந்துள்ள உண்மை. பீட்டாவிற்கு ஒரு வேலையை அதன் முதலாளிகள் கொடுத்திருப்பதைப் போன்றே இந்த கேர் அண்டு வெல்பேர் அமைப்புக்கும் ஒரு வேலையை அதற்கு நிதி உதவி செய்யும் முதலாளிகள் கொடுத்து இருக்கின்றார்கள். அது சாதி சார்ந்த பண்பாடுகளை முன்னிறுத்துவதன் மூலம் சாதியக் கட்டமைப்பை உடையாமல் பாதுகாப்பது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக் கோரி இந்த அமைப்பு நடத்திய பேரணி.

 தமிழகத்தில் முக்கியமான எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது. அதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த அமைப்பு ஒரு ஆதிக்க சாதிப் பண்பாட்டை முன்னிறுத்தி, தனது கொள்கைகளுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத இந்தப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் தனது அப்பட்டமான அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மாமா வேலையை அது வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு மதிப்பு கொடுத்து, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் வந்தார்கள் என்றால், தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்து இருக்கின்றார்கள். அப்போதெல்லாம் இவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. திட்டமிட்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. சில அரசியல் அற்ற, மனிதர்களின் உயிர்களை அற்பமாக நினைக்கும் சல்லிப்பயல்களின் வேண்டுகோளுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் கலந்து கொள்கின்றார்கள் என்பது வெட்கக்கேடானது.

 ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கும் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேவர் சாதி அமைப்புகளின் உண்மையான சுயரூபம் தெரியாமல் மாணவர்களும், இளைஞர்களும் பலியாகிக் கொண்டு இருக்கின்றார்கள்.  இன்று ஜல்லிக்கட்டு எங்கள் வீர விளையாட்டு என்பார்கள்; பிறகு உடுமலைப்பேட்டை சங்கரைக் கொல்வதும் எங்கள் வீரவிளையாட்டின் ஒரு பகுதிதான் என்பார்கள். ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதி அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய அமைப்புகள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு, தங்களுடைய  மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளைத் தவறாக வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன. ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் CPI  மற்றும் CPM கட்சிகளுக்கு சாதி ஆணவக் கொலைகளைப் பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. மாடுகள் முட்டி, சாமானிய மனிதன் உயிர் இழப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அதை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம். போலி கம்யூனிஸ்ட்கள் என்ற வார்த்தைக்குக் கூட இவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

jallikattu victims

 இன்னும் சில அறிவாளிகள் இதை ஜல்லிக்கட்டு என்று அழைக்காதீர்கள், ஏறுதழுவுதல் என்று சொல்லுங்கள் என அறிவாளித்தனமாக பேசுகின்றார்கள். அது என்ன ஏறுதழுவுதல்? ஜல்லிக்கட்டைவிட அது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா? இதைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் சங்க இலக்கியத்தைச் சேர்ந்த கலித்தொகையைத்தான் அதிகம் நம்ப வேண்டி இருக்கின்றது. கலித்தொகையில் முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாம் ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் என்பது ஒரு சாதி சார்ந்த பண்பாடு என்று சொன்னபோது, அதை மறுத்து அதை ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான பண்பாடாகக் காட்ட நினைத்தவர்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும். முல்லைக் கலி என்பது ஆயர் குலத்தினரின் வாழ்க்கையைப் பற்றி சொல்லும் பாடல்களைக் கொண்டது. ஆயர்களில் மூன்று இனத்தவர்கள் உள்ளனர். எருமையை வளர்ப்பவர் கோட்டினத்து ஆயர். ஆடுகளை வளர்ப்பவர் புல்லினத்து ஆயர். பசுக்களை வளர்ப்பவர் கோவினத்து ஆயர். ஏறு தழுவி வெற்றிபெற்றவனை மணப்பது என்பது இந்த ஆயர்குலத்தின் வழக்கமாக இருந்ததுள்ளது. ஜந்திணையில் முல்லைத் திணையில் மட்டுமே அதுவும் குறிப்பாக ஆயர்குலம் என்ற குலத்திடம் மட்டுமே இந்த பண்பாடு இருந்திருக்கின்றது. கொல்லுகின்ற ஆற்றல் உடைய ஏற்றினைத் தழுவுவதற்கு அஞ்சுகின்ற ஆண்மகனை இப்பிறவியில் மட்டுமல்ல, மறுபிறவியிலும் ஏற்றுத் தழுவ மாட்டாள் ஆயர் மகள் என்று வரும் முல்லைக் கலியின் மூன்றாவது பாடலில் உள்ள 63-64 வரிகள் உணர்த்தும்.

   “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

   புல்லாளே ஆயமகள்”

 ஆடு, மாடுகளை வைத்து மேய்த்துக்கொண்டு இருந்த ஆயர் குல மக்களிடம் இதுபோன்ற ஒரு பண்பாடு இருந்துள்ளது. மற்ற நில மக்களிடம் அப்படி ஒரு பண்பாடு இல்லை. காரணம் முல்லை நிலத்தில் மட்டுமே ஆடு,மாடுகளை வைத்து மேய்க்கத் தேவையான மேய்ச்சல் நிலம் பெரிய அளவில் இருந்தது. மற்ற திணைகளில் அந்தந்த நிலப்பகுதிக்கு ஏற்ற தொழில்கள் இருந்துள்ளன. மற்ற நிலத்தைச் சேர்ந்த எந்த குலப்பெண்களும் ஏறுதழுவினால்தான் மணப்பேன் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. காரணம் அவர்கள் கால்நடைகள் சார்ந்து தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. ஏறுதழுவுதல் அந்தக் காலத்திலேயே மனித உயிர்களுக்கு எவ்வளவு மோசமான ஆபத்துகளை ஏற்படுத்தியது என்பதற்கு முல்லைக் கலியில் பல ஆதாரங்கள் உள்ளன. முல்லைகலியின் ஐந்தாவது பாடலில் உள்ள 39 முதல் 42 வரை உள்ள வரிகள்

  “பாடேற் றவரைப் படக்குத்திச் செங்காரிக்

கோடெழுந்து ஆடும் கணமணி காணிகா

நகைசால் அவிழ்பதம் நோக்கி நறவின்

முகை சூழும் தும்பியும் போன்ம்”  என்கின்றது.  அதாவது சிவந்த ஏற்றினைத் தழுவியவர்களைச் சாகும்படி, குத்தித் தூக்கி எறிந்ததால், அதன் கழுத்து மணிகள் குருதியில் நனைந்து காணப்பட்டது. அவற்றை மலர்ந்த நறவம் பூவென நினைத்து வண்டினம் மொய்க்கின்றது. மேழும் முல்லைக்கலியில் ஆறாவது பாடலில் வரும் 25 முதல் 29 வரை வரிகள்  

  “ஏறுதம் கோலம்செய் மருப்பினால் தோண்டிய வரிக்குடர்

  ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய்வழீஇ

  ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட

  மாலைபோல் தூங்கும் சினை”

ஒரு ஏறு தன்னை எதிர்த்தவனைக் குத்தியதால் குடல் வெளியில் வந்து கொம்பில் சுற்றிக்கொண்டது. இதைக் கண்ட பருந்து, அக்குடலைக் கவ்வி மேலெழுந்து பறந்தது. அதன் வாயிலிருந்து நழுவி, அங்குள்ள ஆலமரத்தின் கிளையிலும், கடம்ப மரத்தின் கிளையிலும் விழுந்து தொங்கியது. இக்காட்சி அம்மரங்களின் அடியில் உறையும் தெய்வங்களுக்குச் சூடுவதற்காகத் தொங்கவிடப்பட்ட மாலைகள் போல் உள்ளன என்று கூறுகின்றது.  இது மட்டும் அல்ல, இன்னும் பல வரிகள் ஏறுதழுவுதலில் உள்ள கொடூரத்தன்மையைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. படிப்பதற்கே பயங்கரமாக உள்ளது. அப்போதே இப்படித்தான் பல பேர் குத்துப்பட்டு, குடல் சரிந்து, உயிர் துறந்து இருக்கின்றார்கள் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது.

 ஸ்டாலின், ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, திருமா, சீமான், விஜயகாந்த் - இன்னும் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கும் பல பேரின் மகன்கள் இப்படி மாடுமுட்டி, குடல்சரிந்து, சரிந்த அந்தக் குடலை பருந்துகள் வாயில் கவ்விக்கொண்டு போய் கடம்ப மரத்திலோ, இல்லை ஆலமரத்திலோ, இல்லை அதுவும் கிடைக்காமல் வேறு ஏதாவது ஒரு மரத்திலே கொண்டு போய் போட்டால், அதைப் பார்த்து கைதட்டி ஆராவாரித்து சிரிப்பார்களா? நேர்மையானவர்களாக இருந்தால் பதில் சொல்ல வேண்டும். அது மட்டும் அல்லாமல், இப்போது உள்ள பெண்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ள ஹேண்ட்சமான பையன்களைத் தான் விரும்புகின்றார்கள். ஜல்லிக்கட்டிலே போய் உயிரைப் பணயம் வைத்து அறிவில்லாத மாடுகளுடன் சண்டைபோடும் போக்கிரிப் பையன்களை விரும்புவது கிடையாது. அப்படி காளையை அடக்கி வந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று எந்தப் பெண்ணாவது சொன்னால் நிச்சயம் அந்தப் பெண்  மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க முடியும்.

காரணம் இல்லாமல் காரியம் கிடையாது என்பதுதான் நிதர்சனம். ஆயர்குலத்து பெண்கள் குல வழக்கப்படி அந்தக் காலத்தில் அப்படி விரும்பினார்கள். அதனால் அன்று ஆயர்குலத்து ஆண்கள் ஏறுதழுவினார்கள். ஆனால் இன்று ஆயர்குலப் பெண்கள் அப்படி விரும்பாதபோது, எதற்காக ஏறுதழுவதலை நடத்த வேண்டும்? அதுமட்டும் அல்லாமல் இன்று பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல், தன்னுடைய ஜாதி வீரத்தைக் காட்ட வேண்டும், காளையை அடக்கினால் சைக்கிள் கிடைக்கும், அண்டா கிடைக்கும், குண்டா கிடைக்கும்  போன்ற சல்லித்தனமான காரணங்களுக்காகவே அவை நடத்தப்படுகின்றன.

 எனவே ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவதல் என்று எப்படி அழைத்துக் கொண்டாலும், அதை நடத்த வேண்டிய எந்த அவசியமும் தற்போது இல்லை. நாட்டுமாடுகள் அழிந்துவிடும் விவசாயி பாதிக்கப்படுவான் போன்ற பொய்யான, மொக்கை காரணங்களைச் சொல்லி ஊரை ஏமாற்றிவரும் உதவாக்கரை கோஷ்டிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல், இன்று முக்குலத்தோரின் வீர விளையாட்டாக அடையாளம் காணப்படும் ஏறுதழுவுதல், சங்க இலக்கிய காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்களின் வீர விளையாட்டாக இருந்துள்ளது. காலப்போக்கில் இது அவர்களிடம் இருந்து தேவர் சாதிக்கரர்களின் வீர விளையாட்டாக மாறியுள்ளது. ஆனால் ஆயர்களிடம் திருமணம் சார்ந்த சடங்காக கருதப்பட்ட ஏறுதழுவதல் அதன் இயல்பான பொருளை இழந்து, சாதிய மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இன்று மாற்றப்பட்டுள்ளது. இதன் பொருட்டே  நேர்மையான பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றார்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் இந்த ஆதிக்க சாதிப் பண்பாட்டை கடுமையாக எதிர்க்க வேண்டும். அப்படி  இல்லாமல் பேஸ்புக்கில் அவன் அழைத்தான், வாட்ஸ் அப்பில் இவன் அழைத்தான் எனப் போனீர்கள் என்றால் வீணாகப் போகப் போவது உங்கள் நேரம் மட்டும் அல்ல, மானமும்தான்.

- செ.கார்கி