கீழடி அகழாய்வில் சுடுமண்ணாலான மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், பிற அணிகலன்கள் என பல பொருட்கள் கிடைத்தன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் இதுவரை அங்கு கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறியது. இதை வைத்துக் கொண்டு பல முற்போக்குவாதிகள் கீழடியில் வாழ்ந்த மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர்கள் நாத்திகர்களாய், பகுத்தறிவுவாதிகளாய் வாழ்ந்தார்கள் என்ற முடிவுக்கு வந்ததோடு, அதைப் பரப்புரை செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். மனித குல வரலாற்றில் கடவுளின் தோற்றமும், அதை மனிதர்கள் கையாண்ட விதமும் வரலாறு தோறும் மாற்றம் அடைந்தே வந்திருக்கின்றது என்ற அறிவியல் பூர்வமான பார்வையை அதன் மீது செலுத்தும்போது, நம்மால் எந்த வகையிலும் கீழடியில் வாழ்ந்த மக்களை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் பல்வேறு இடங்களுக்குப் பரவிய போதே, அவர்களிடம் மதம் சார்ந்த சடங்குகள் இருந்தன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அது இன்றிருக்கும் வழிபாட்டு முறை போன்று, அதாவது கடவுளை இறைஞ்சி, உடலை ஒரு அடிமையைப் போல கூனிக் குறுகி வணங்கும் முறையாக இல்லாது, இசை, நடனம், போலச் செய்தல், கட்டளை இடுதல் போன்ற வடிவங்களில் இருந்திருக்கலாம். அறிவியல் வளர்ச்சி அடையாத அந்தக் காலத்தில் கனவுகள், மரணங்கள், பிறப்புகள், செழிப்பு, வறட்சி போன்றவை உலகில் எல்லாப் பகுதி மக்களிடமும் அச்சத்தையும், அந்த அச்சம் தனக்கு மீறிய சக்திகள் தங்களை கட்டுப்படுத்துகின்றன என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும். பிறப்பும், இறப்பும், கனவுகளும், செழிப்பும், வறட்சியும் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இயல்பாகவே ‘மனிதனை மீறிய சக்தி’ என்ற கருத்தியலுக்கும், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற செயல்பாட்டுக்கும் மனிதர்களைத் தூண்டி இருக்க வேண்டும் என்றே மானுடவியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கீழடியில் எந்தவித வழிபாடு தொடர்பான பொருட்களும் கிடைக்கவில்லை என்பதை வைத்துக் கொண்டு தமிழர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகளாய் இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டிலோ, இல்லை கோயில்களிலோ கடவுள் சிலைகளையும், ஓவியங்களையும் வைத்து வணங்கும் முறை அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். தொல்காப்பியம் குறிப்பிடும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நான்கு நிலக் கடவுள்களுக்குக் கூட கோயில்கள் இருந்தன என்று சொல்லப்படவில்லை. கோயில் என்ற அமைப்பு பெரும்பாலும் நிறுவன சமயங்களின் தோற்றத்தை ஒட்டி எழுந்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.
நான்கு நிலப்பரப்புக்கும் நான்கு வகையான தெய்வங்கள் சொல்லப்பட்டதில் இருந்தே தொல்காப்பியர் காலத்தில் கூட முழுமுதல் கடவுள் என்ற சிந்தனை தமிழகத்தில் தோற்றம் கொள்ளவில்லை என்பதை அறிய முடிகின்றது. மேலும் திருமுருகாற்றுப்படையில் தெய்வம் உறையும் இடங்களாக ஆறு, குளம், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில் போன்றவையே குறிப்பிடப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் என்று கணிக்கப்படுவதில் இருந்து, தமிழகத்தில் 8 ஆம் நூற்றாண்டுவரை கூட கோயில் என்ற அமைப்பு தோன்றவில்லை என்றோ, இல்லை அப்படியே தோன்றி இருந்தாலும் அது மக்கள் மத்தியில் அறியப்படவோ, இல்லை புகழ் பெறவோ இல்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
கீழடியின் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு வரை செல்வதால் நிச்சயம் அங்கே கோயில் போன்ற அமைப்புகளோ, இல்லை நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் சார்ந்த குறியீடுகளோ நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஆனால் சங்க இலக்கியங்களின்படி தொல்காப்பியர் சொன்ன தினைக்குடி தெய்வங்கள் தவிர்த்து, பல வகையான வழிபாட்டு மரபுகள் தமிழகத்தில் நிலவியதை அறிய முடிகின்றது. நடுகல் வழிபாடு, கொல்லிப்பாவை வழிபாடு, கொற்றவை வழிபாடு, பூத வழிபாடு, பேய் வழிபாடு போன்றவை இருந்ததாகத் தெரிகின்றது. ஒருவேளை இந்த வழிபாடுகள் கீழடி காலத்திலும் நிலவி இருக்கலாம். ஆனால் தமிழர்கள் இதைச் சிலைகளாகவோ, இல்லை ஓவியங்களாகவோ வரைந்து இந்தத் தெய்வங்களுக்கு உருவம் கொடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
தொல்காப்பியர் தினைக்குடி தெய்வங்களாகக் குறிப்பிடும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் போன்ற தெய்வங்கள் கூட எந்த அடிப்படையில் திருமால், சுப்பிரமணி, இந்திரன் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டார்கள் என்பதே பெரும் கேள்வியாய் இருக்கின்றது. அப்படி அழைக்கப்பட வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை என்றால் கூட, திட்டமிட்டே பார்ப்பன மயப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு இந்த வேலைகளை செய்திருக்கின்றார்கள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பார்ப்பன நச்சுக் கிருமிகளின் சதி வேலையாகக் கூட இது இருக்கலாம். தொல்காப்பியத்தில் பார்ப்பனக் கருத்தியலின் தாக்கம் இருந்தாலும் தொல்காப்பியம் எழுதப்படுவதற்கு முன்பு இந்த மண்ணில் நிலவிய வழிபாட்டு முறைகளையே தொல்காப்பியர் தன் நூலில் குறிப்பிடுவதால் அவை நிச்சயமாக பார்ப்பனிய ஆபாசக் கருத்தியலின் தாக்கமற்ற, உருவமற்ற தெய்வங்களாகவே இருந்திருக்க வேண்டும்.
மேலும் சங்கப் பாடல்களில் கடவுள் என்னும் சொல் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் என்ற பொருளில் மட்டுமல்லாமல், சான்றோர், துறவிகள், நடுகல் வீரர்கள் போன்ற அர்த்தங்களிலும் வருவதால் கடவுள் என்ற சொல்லைப் பார்த்தவுடனே அதை வழிபடும் தெய்வம் என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. தற்போது கீழடியில் அகழாய்வு நடக்கும் இடம் மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்த நகரப் பகுதி என்பதால், அங்கு நடுகல் வழிபாடு போன்றவை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. இன்னும் இந்த ஆய்வு கீழடியில் மனிதர்கள் வாழ்ந்த, புதைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொழுது, நடுகல் வழிபாடு போன்றவை நடைபெற்றதற்கான தரவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
நடுகல் வழிபாடு என்பது இன்று வரையிலும் தவிர்க்க முடியாமல் தமிழர்கள் மத்தியில் நிலவி வருவதால் தமிழர்களின் ஆதி வழிபாட்டு மரபு என்பது நிச்சயம் போரிலோ, காவல் காக்கும் பணியிலோ, இல்லை தங்கள் குலத்தின் தலைவனாக இருந்தவனோ இறந்துவிட்டால், அவர்களைப் புதைத்த இடத்தில் நடுகல் நட்டு வழிபடும் மரபாகவே இருந்திருக்க வேண்டும்.
மதுரைவீரன், காத்தவராயன், முத்துப்பட்டன், போன்ற கொலையில் உதித்த தெய்வங்களை இன்றும் பெரும்பாலான தமிழ்மக்கள் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவை எல்லாம் பலி கேட்கும், பலி கொடுக்கப்படும் தெய்வங்கள். தமிழன் ஒருபோதும் மரக்கறி உணவை மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்டவன் கிடையாது என்பதும், அவன் ஆதியில் இருந்தே மாமிச உணவை உண்ணும் பழக்கம் கொண்டவன் என்பதற்கும் இந்த வழிபாட்டு முறைகளே சாட்சி.
தொல்காப்பியர் குறிப்பிடும் தினைக்குடி தெய்வங்கள் கூட இது போன்று நடுகல் வழிபாட்டில் இருந்து தோன்றிய தெய்வங்களாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். காரணம் முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவேல் ஓம்புமதி: வினவுவது உடையேன்; பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று, இவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ, பலியே? என்ற இந்தக் குறுந்தொகை பாடலில் முருகனுக்கு பலி கொடுக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
எனவே கீழடியில் வாழ்ந்த தமிழன் கடவுள் நம்பிக்கையற்று பகுத்தறிவுவாதியாய் வாழ்ந்தான் என்று வரலாற்று அறிவற்றுக் கூறுவதை விட, நமக்குக் கிடைக்கும் சான்றுகளின் வழி நின்று உண்மையை நோக்கி பயணிப்பதே சிறந்தது.
உண்மையில் தமிழனின் ஆதி பண்பாட்டை அடையாளப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருக்காலும் தமிழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்றோ, கடவுள் நம்பிக்கையற்று பகுத்தறிவுவாதிகளாய் வாழ்ந்தார்கள் என்றோ வாய்க்கு வந்ததை எல்லாம் எந்தவித தர்க்க அறிவுக்கும் உட்படாமல் பேச மாட்டார்கள்.
- செ.கார்கி