கடந்த 26 ஆம் தேதி கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழைப் பகுதிகளில் என்.எல்.சி., நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் போது பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
விவசாயிகள் பயிரிட்ட பயிர்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அழித்தது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்தது.என்.எல்.சி பிரச்சினையை இங்கே பல பேர் நிலங்கள் குறைவான இழப்பீடு கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றது, அதற்கு இன்னும் கூடுதலான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அங்கே தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பார்வையில் இருந்தும்தான் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த 2003ஆம் ஆண்டு முதலில் நிலம் எடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு 6 லட்சமும், அடுத்ததாக நிலம் எடுத்தவர்களுக்கு 15 லட்சமும், தற்போது 25 லட்சம் ரூபாயும் இழப்பீடாக என்.எல்.சி நிர்வாகம் வழங்கி இருக்கின்றது. இவை எல்லாம் அப்போதைய சந்தை மதிப்பை ஒப்பிட்டு வழங்கி இருக்கலாம்.
தற்போது சந்தை மதிப்பு அதிகம் என்பதால், இழப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொடுத்திருக்கின்றார்கள். அதே போல தற்போது கூடுதல் இழப்பீடு கோருபவர்களுக்கும் அதைக் கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டும் என்எல்சி, அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளின் நிலங்களுக்கு அவர்கள் கேட்ட தொகையைக் கொடுப்பதால் ஒன்றும் நட்டப்பட்டு விடாது.
அதே போல என்.எல்.சியில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதும் உண்மைதான். கடந்த ஆண்டு என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் ஒரு தமிழரைக்கூட தேர்ந்தெடுக்காமல், மொத்தமுள்ள 299 பணியிடங்களுக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர்களையே என்.எல்.சி நிறுவனம் தேர்ந்தெடுத்தது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொறியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1,500 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேர் மட்டுமே பங்கேற்க அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி கொடுத்தது. ஆனால் அந்த உறுதிமொழிக்கு மாறாக, மாற்று மாநிலத்தவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்தியும், தமிழர்களை தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியமர்த்துவதும் தொடந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் ஏற்கெனவே உள்ள சுரங்களில் போதுமான நிலக்கரி கிடைக்காத காரணத்தால், மீண்டும் மீண்டும் விரிவாக்க பணிகள் என்ற பெயரில் தொடர்ந்து நிலங்களைக் கையப்படுத்தும் போக்கும் நடைபெற்று வருகின்றது.
உலகில் பல்வேறு நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி, மின் உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டு இருக்கும் போது, நாம் இன்னும் மோசமான சூழலில் சீர்கேடுகளை உருவாக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதும், அதை ஊக்குவிப்பதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பருவ நிலை மாற்றம் குறித்த 2021 கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிலக்கரி பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைக்கும் என்று கூறிவிட்டு நிலக்கரி உற்பத்தியை 4 மில்லியன் டன்னிலிருந்து 20 மில்லியன் டன்களாக என்.எல்.சி. உயர்த்தும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் அறிவித்ததன் பின்னணியில் இவர்களிடம் சூற்றுச்சூழலை காப்பதற்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
உண்மையில் தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியையும், மின் தேவையையும் கணக்கிட்டால் எல்எல்சி ஒரு தேவையில்லாத சுமை என்பது விளங்கும்.
தமிழகத்தின் தினசரி மின் தேவை அதிகபட்சம் 15 ஆயிரம் மெகாவாட்டாகும். கோடை காலத்தில் இது 17 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழகத்தில் அனல் மற்றும் எரிவாயு ஆதாரங்கள் மூலம் 4 ஆயிரத்து 836 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அனல் மின் நிலையங்கள் மூலம் 4320 மெகாவாட் மின்சாரமும், எரிவாயு மின் நிலையங்கள் மூலம் 516 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 47 நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 2 ஆயிரத்து 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
காற்றாலை மூலம் 8684 மெகாவாட், சூரிய ஒளியில் இருந்து 6040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நெய்வேலி மற்றும் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் இருந்து 6558 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது தவிர, தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலமும் 5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நம்முடைய மொத்த மின் தேவையில் காற்றாலை, சூரிய ஒளி மற்றும் நீர் மூலமாகவே ஏறக்குறைய 17000 மெகாவாட் உற்பத்தி செய்யும் போது நாம் எதற்காக சுற்றுச்சூழலை அழிக்கும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் அனல் மின் நிலையங்களைத் தூக்கி சுமக்க வேண்டும்?.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?
இன்னும் 1.1 ட்ரில்லியன் டன் நிலக்கரி மட்டுமே பூமிக்கடியில் புதைந்து இருக்கிறது என்பதையும், இன்னும் 20 முதல் 30 ஆண்டுகள் வரை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் ஆற்றலை உலகம் பயன்படுத்த முடியும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நிலக்கரிச் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் காற்று மாசுபடுவதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களும் இவ்வாலைகளில் பணியாற்றுவோருக்கு சிலிகோசிஸ், நிமோகோனியோசிஸ் எனப்படும் கறுப்பு நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
மேலும் நிலக்கரியை எரிக்கும்போது வெளிப்படும் ஆர்சனிக், செலீனியம், ப்ளூரின், பாதரசம், நைட்ரஜன் ஆக்சைடுகள்(NOx) சல்பர் ஆக்சைடுகள்(SOx) ஆகிய கழிவுகளும் சுற்றுச்சூழலைக் அழிக்கக் கூடியவை.
பசுமை இல்ல விளைவினால் கடல் நீர் அமிலமயமாவது, கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை நாசப்படுத்துவது, வெப்பமயமான கடல் பகுதிகளில் புயல் ஏற்படுவது போன்றவை நடக்கும்.
கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் மூன்றில் ஒரு பகுதி நிலக்கரி பயன்பாட்டினால் வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் 2009 முதல் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தற்போது 50% வரை நிலக்கரியின் பயன்பாட்டை அமெரிக்கா குறைத்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள 20 நாடுகள் முற்றிலுமாக நிலக்கரி உற்பத்தியைக் குறைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் சுமார் 70% அனல் மின் நிலையங்களிலிருந்தே பெறப்படுகிறது. நம் நாட்டின் ஆலைகளில் பயன்படுத்தப்படும் எரிசக்தியில் கிட்டத்தட்ட 45% வரை நிலக்கரி சார்ந்தே அமைந்துள்ளது. இதனால், சீனாவுக்கு அடுத்தபடியாக நிலக்கரியை உற்பத்தி செய்தாலும், அதனை இறக்குமதி செய்வதையும் இந்தியா தொடர்கின்றது.
2016ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் வானிலை மாற்ற மாநாட்டில், 2010இல் இருந்த கார்பன் டை ஆக்சைடு அளவை 2030க்குள் 45% ஆகக் குறைக்கும் முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்து இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் தொடர்ச்சியாக மின் உற்பத்திக்காக நிலக்கரிப் பயன்பாட்டை இந்தியா அதிகரித்தே வந்திருக்கின்றது. இதனால் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு வழக்கத்தைவிட மிக அதிகமாகும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் 2022ம் ஆண்டின் கார்பன் உமிழ்வு வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பன்னாட்டு ஆற்றல் முகமையானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு பன்னாட்டு அளவில் 36.8 ஜிகா டன் அளவிற்கு கார்பன் உமிழப்பட்டுள்ளது. இது 2021ம் ஆண்டை விட 0.9% அல்லது 321 மெட்ரிக் டன்கள் அதிகமாகும்
கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் தற்போதைய அளவு தொடர்ந்தால், இன்னும் ஒன்பது ஆண்டுகளில் உலகம் புவி வெப்பமடைதல் வரம்பான 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டுவதற்கு 50% வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
நிலமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது நாம் போராட வேண்டியது கூடுதலான இழப்பீட்டுக்காகவோ வேலை வாய்ப்பு முன்னுரிமைக்காகவோ அல்ல, உண்மையில் நாம் போராட வேண்டியது ஒட்டுமொத்த அனல்மின் நிலையங்களுக்கும் எதிராக.
இந்த பூமியை தான் சாவதற்குள் சுரண்டி தன்னுடைய ஏழு தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து வைத்துவிட வேண்டும் என அலையும் முட்டாள் சுரண்டல்வாதிகளுக்கு, தனக்கு பின்னால் இந்த பூமியே உயிர்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிவிடும் என்பது புரிவதில்லை. புரிந்தாலும் பேராசை அவர்களை விடுவதில்லை.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என நம்பும் அயோக்கியர்கள்தான் இந்த பூமியைக் கூறு போட்டு அதன் வளங்கள் அனைத்தையும் ரத்தம் சொட்ட சொட்ட அறுத்தெடுத்து தனது அகோரப் பசியை தீர்த்துக் கொள்கின்றார்கள். அவர்களுக்கு எந்த மனித விழுமியங்களும் இல்லை; எந்த உயிர்ம நேயமும் இல்லை.
ஜிடிபி உயர்வதை மட்டுமே வளர்ச்சி என்றும் நம்பும் முட்டாள்கள் அந்த ஜிடிபி வளர்ச்சியின் பின்னால் அழிக்கப்பட்ட வளங்களையும் சூழலியல் சீர்கேடுகளையும் ஒரு போதும் பார்ப்பதில்லை.
- செ.கார்கி