கிரீன்லாந்தில் பனிப்பாறைகளின் (Ice Sheets) நகரும் வேக வளர்ச்சி (Acceleration) 1990 காலகட்டத்திற்குப் பிறகு மிகவும் அதிகரித்திருக்கிறது. 

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இதன் நகரும் வேக வளர்ச்சி அளவு இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறதாம். 1990 காலகட்டத்தில் கடலுக்குள் சென்ற பனிப் பாறைகளின் அளவு 33 பில்லியன் டன்கள் இருந்ததாகவும், அவை தற்போது 254 பில்லியன் டன்களாக அதிகரித்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதுவரை கிரீன்லாந்தில் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டன்கள் கணக்கில் பனிப் பாறைகள் உருகி கடலுக்குள் சென்றிருக்கிறது. இது தோராயமாக ஒரு சென்டி மீட்டர் அளவு புவியின் கடல் மட்டம் உயர்வுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

greenland iceஒரு சென்டி மீட்டர் அளவு என்பது குறைவாக இருக்கலாம், ஆனால் மெதுவாக உயர்கிறது என்பது தான் யதார்த்தம்.

நமது கிரகத்தைச் சுற்றி ஒரு சென்டி மீட்டர் கடல் மட்டம் உயர்வு என்பது, கடற்கரையை ஒட்டி வாழும் சுமார் 6 மில்லியன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஆன்ட்ரிவ் செப்பர்ட் (Andrew Shepherd). இவர் லீட்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் (Leeds University).

இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் Ice Sheet Mass Balance Inter Comparison Exercises IMBIE என்று அழைக்கின்றார்கள். இது Journal Nature-ல் வெளியாகி உள்ளது.

பூமியில் இரண்டாவது பெரிய அமைப்பைக் கொண்ட பனிப் பாறைகள் மாற்றத்திற்கு உள்ளாவது (pace of change) நமக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிப்பதாகவும், இதனால் அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுக்குள் தோராயமாக 20 அடி வரை கடல் மட்டம் உயரலாம் என்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைக் குழு கணித்ததை விட, கிரீன்லாந்தில் பனிப் பாறைகளின் உருகும் வேகம் அதிகமாக இருக்கிறது. அடுத்த 2100-க்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிப் பாறைகளால் கடல் மட்டம் உயர்வதின் அளவு 16 சென்டி மீட்டராக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு புறம் அண்டார்டிகா பனிப் பாறைகள் நகர்வதன் மூலமும் கடல் மட்டம் உயர்வது அதிகரிக்கும் என்றும், இதற்கு அடிப்படை புவியின் வெப்பம் அதிகரிப்பதே என்றும் கூறுகிறார்கள்.

உலகில் மிகப் பெரிய பனிப் பாறைகள் அடங்கிய தீவுப் பகுதி கிரீன்லாந்து ஆகும். இந்த பனிப் பாறைகள் ஓராயிரம் ஆண்டுகள் பொழிந்த பனியினால் ஆனது. இப் பனிப் பாறைகளின் அளவை அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியின் அளவோடு ஒப்பிடுகிறார்கள். மேலும் இதன் நடுப்பகுதி ஒரு மைல் தொலைவுக்கு தடிமனான கட்டமைப்பு உடையதாக இருக்கிறது.

வெளிப்புற வெப்பம் உயர்வால் இந்தப் பாறைகள் தன்னுள் வெடித்து வெளியேறுவதும் நடக்கிறது. 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடுகையில் கிரீன்லாந்தில் பெரும்பாலான பகுதிகளின் வெப்பநிலை 2℃ (3.6 Fahrenheit) அதிகரித்து இருக்கிறது. மேலும் உலகில் வேகமாக வெப்பநிலை அதிகரித்து வரும் பகுதியாக இதை சுட்டிக் காட்டி "வாசிங்டன் போஸ்ட்" ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

பனிப் பாறைகள் உருகுவதன் காரணமாக கிரீன்லாந்தின் ஒரு சில பகுதிகளை இழந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் பொழியும் பனியின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் மீதமிருக்கும் பனிப்பாறைகளும் வேகமாக நகர்ந்து கடலில் மூழ்கும் அல்லது இரண்டாக உடைந்து நகரும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்த தொடர் நிகழ்ச்சியால் பனிப்பாறைகளின் கன அளவும் எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைகிறது. மேலும் மேலும் கிரீன்லாந்தின் வடபகுதியில் உள்ள பனிப் பாறைகளின் (glaciers) பனிக்கட்டியை இழக்கிறோம்.

இந்த புதிய ஆய்வானது 26 வெவ்வேறு செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததாகவும் ஆராய்ச்சி நடத்திய 89 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- பாண்டி

(நன்றி: 'தி பாஸ்டன் குளோப்', 10.12.2019)

Pin It