முதலாண்மைப் பொருளாதாரத்தின் உபரி ஈட்டும் வெறியால் புவி தொடர்ந்து சூடேறிக் கொண்டுள்ளது. நிலம் – நீர் – காற்று - உயிரினங்கள் அனைத்தும் மாசடைந்து வருகின்றன. வெதண நிலை (தட்ப வெப்ப நிலை) மாற்றத்தின் விளைவாகக் கடும் வறட்சி, வெள்ளம், புயல் ஆகியன அதிகரித்து வருகின்றன.

இவற்றின் கடுமை தொடர்ந்து உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு தளங்களில் நாம் செயல்பட வேண்டும். இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தோன்றிய காலம் முதல் 21-ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை மொத்தம் 1.5 செல்சியசுக்கு மேல் சூடேறாமல் தடுப்பது மேற்படிச் செயற்பாடுகளில் முதன்மையான ஒன்று. அதற்குப் பசுங்குடில் வளிகளின் நிகர வெளியீட்டை 2050-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்துவது இன்றியமையாதது. சூழலியல் அறிஞர்களின் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆனால், நிலக்கரி, (கன்னெயம் - பெட்ரோல், டீசல் உள்ளிட்ட) கனிம எண்ணெய்கள், எரி வளி (natural gas) ஆகிய துறைகளுக்கு அரசுகள் தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் நிலையில் மேற்கண்ட குறிக்கோளை எட்ட இயலாது.

உலகளவில், கனிம எரிபொருள் ஆற்றல் பயன்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தரப்பட்ட நிதியுதவி 2015-ஆம் ஆண்டு 5,30,000 கோடி டாலராகவும், 2017-இல் 5,20,000 கோடி டாலராகவும் இருந்தது! இரண்டு ஆண்டுகளில் வெறும் பத்தாயிரங் கோடி டாலர் குறைந்தது. 2017-ஆம் ஆண்டு தரப்பட்ட நிதியுதவி அந்த ஆண்டின் மொத்த உற்பத்தியில் 6.4 விழுக்காடு ஆகும். (இவை IMF - The International Monetary Fund எனப்படும் நாட்டிடை நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள்.)

அந்தத் துறைகளிலுள்ள பெரு நிறுவனங்களின் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு எவ்வளவு வலிமையானது என்பதை இது காட்டுகிறது.

மேற்கண்ட நிதியுதவியை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

(1) எரிபொருள்களுக்கு நாம் தரும் விலையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கென நேரடியாகத் தரப்படும் நிதியுதவி.

கனிம எண்ணெய், எரி வளி, நிலக்கரி ஆகிய துறைகளுக்கு 2010-17 காலக்கட்டத்தில் 'நேரடி' நிதியுதவி எந்த அளவு இருந்தது என்பதைப் பின்வரும் படம் காட்டுகிறது (படம் 1). ஒரு பேரல் (சுமார் 161 லிட்டர்) தூய்மைப்படுத்தாத கனிம எண்ணெயின் இறக்குமதி விலை உலகச் சந்தையில் எந்த அளவு இருந்தது என்பதைக் கரும்புள்ளி காட்டுகிறது.Mineral fuel funding 1
(2) மேற்கண்ட எரிபொருள்களை அகழ்ந்தெடுத்தல், உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லுதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்து நிலைகளிலும் நிகழும் சூழல் கேடுகளால் உலகுக்கு நேரும் செலவினங்களின் பண மதிப்பு.

இந்தச் செலவுகளை மேற்படி நிறுவனங்கள் ஈடு செய்ய வேண்டும். ஆனால், அவற்றின் பண-அரசியல் வலு காரணமாக அவை இந்தக் கேடுகளைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை. பொது மக்களும் அரசாங்கங்களும் தத்தம் தேவை, வசதி ஆகியவற்றைப் பொருத்துச் சூழல் கேடுகளைக் கையாள்கின்றன. அதற்கு ஆகும் செலவுகள் நிலக்கரி - எண்ணெய்த் துறை நிறுவனங்களுக்கு நாம் தரும் மறைமுக நிதியுதவி ஆகின்றன.

புது எண்ணெய்க் கிணறுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைத் தேடிக் கண்டறிவதற்கு அந்தத் துறைகளிலுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் அரசுகள் 2.4 மடங்கு (240%) அதிகம் செலவிடுகின்றன! (http://priceofoil.org/fossil-fuel-subsidies/)

மேற்கண்ட நேரடி நிதியுதவி, மறைமுக நிதியுதவி இரண்டும் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பின்வரும் படம் காட்டுகிறது (படம் 2).

Mineral fuel funding 23) எண்ணெய், நிலக்கரி வளங்களைக் கைப்பற்றுதல், தொடர்ந்து தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு அரசுகள் - குறிப்பாக வல்லரசுகள் - தம் ராணுவங்களை மேன்மேலும் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தல், உலகெங்கும் பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளால் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கோடிக் கணக்கான மக்கள் தம்முடைய வாழ்வாதாரங்களை இழக்கின்றனர். இதுவும் நிறுவனங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவியே!

இவை மட்டுமின்றி, கடன் மற்றும் வரிச் சலுகைகள், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் எண்ணெய்க் கிணறு ஆராய்ச்சி - மேம்பாடு, நீராதாரம், போக்குவரத்து, மக்களுடைய உடல்நலம் - மருத்துவம் ஆகிய துறைகளில் அரசுகள் செய்யும் செலவுகள் உள்ளிட்டவையும் அத்துறைகளிலுள்ள நிறுவனங்களுக்கு நாம் தரும் மறைமுக நிதியுதவிகளே. இவை மேற்படிக் கணக்கில் வரவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

இந்த எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் விளைவாக நிகழும் உலகப் பசுங்குடில் வளி வெளியீட்டில் சுமார் 87 விழுக்காட்டுக்கு அவற்றை வெளியிடுவோர் எந்த வகை இழப்பீட்டையும் தருவதில்லை!

கனிம எரிபொருள் ஆற்றல்களைப் பயன்படுத்துவதால் நேரும் மொத்தச் செலவு எவ்வளவு, அந்த வணிகத்தில் உள்ள நிறுவனங்கள் எவ்வளவு உபரி ஈட்டுகின்றன என்பன குறித்து நுகர்வோருக்குத் தெரிவதில்லை. ஆகவே, உலகைக் கெடுக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்தோ மாற்று எரிபொருள் துறைகளைக் குறித்தோ மக்களும் அரசுகளும் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.

நெகிழிகள் கனிம எரிபொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டு உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட நெகிழிகளின் எடை ஏறக்குறைய முப்பத்தாறு கோடி டன்! (https://www.statista.com/statistics/282732/global-production-of-plastics-since-1950/)

இதற்கு அரசுகள் பெரிய அளவில் நல்கை ('மானியம்') தந்துவிட்டு, 'நுகர்வைக் குறை, மறு சுழற்சி செய்!' என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும், மறு சுழற்சி செய்வதற்கு ஆகும் செலவில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தொகை மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து பெறப்படுகிறது! (https://www.theguardian.com/environment/2018/feb/05/big-business-not-taxpayers-should-pay-to-clean-up-plastic-waste)

ஏழைகளுக்கு உதவும் நோக்கில் தான் எரிபொருள் துறை நல்கைகள் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால், வசதி அதிகமுள்ளவர்களே ஒப்பீட்டளவில் கனிம எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துகிறோம்; அதன் தீய விளைவுகள் ஒப்பீட்டளவில் ஏழைகளையே மிக அதிகம் பாதிக்கின்றன. ஆகவே, அரசுகளுக்கு உண்மையாகவே ஏழை எளியோர் மீது அக்கறை இருக்குமானால் அவர்களுக்குப் பிற வகைகளில் உதவுவது இன்றியமையாதது.

கனிம எரிபொருள்களின் கேடுகளுக்கு ஏற்ப அவற்றின் விலையை முடிவு செய்வதன் மூலம் சூழல் கேடுகளைப் பெருமளவு குறைக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2015-இல் அவ்வாறு செயல்பட்டிருந்தால் பசுங்குடில் வளி வெளியீட்டை 28 விழுக்காடு குறைத்திருக்கலாம்; வளி மண்டல மாசு காரணமான இறப்புகளை 46 விழுக்காடு குறைத்திருக்கலாம்; அதன் நிகரப் பொருளாதாரப் பலன் உலக மொத்த உற்பத்தியில் 1.7 விழுக்காடு அதிகரித்திருக்கும் என்று நாட்டிடை நாணய நிதியம் கணித்துள்ளது.

கல்வி, உடல்நலம் ஆகிய துறைகளில் தரமான, அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகளை உருவாக்குதல்; இயற்கைக் காப்பு, வேலை வழங்குதல் ஆகியவற்றை முழு அக்கறையுடன் செயல்படுத்துதல் ஆகியவை மட்டுமே ஏழை எளியோரைக் காக்கும். கனிம எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் நல்கைகளைப் பெருமளவு குறைப்பதன் மூலம் மேற்படிக் குமுக நலத் திட்டங்களுக்குப் போதுமான நிதியை அரசுகள் திரட்ட முடியும்.

அது மட்டுமின்றி, உலகப் பொருளாதார முறைமையில் ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இயற்கை வளப் பயன்பாட்டு உரிமை மற்றும் பயன்படுத்தும் விதம், நம் உணவு முறை, போக்குவரத்து, கேளிக்கை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் புரட்சிகர மாற்றங்கள் தேவை. இதுவே நாம் எதிர்கொண்டுள்ள அனைத்து வகைச் சிக்கல்களுக்கும் சரியான, முழுமையான தீர்வாக அமையும். இது மிகக் கடினமானது, நம் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் குறைத்து விடும் என்கிற தவறான, மாயையான கருத்துகள் நம் மனங்களில் மிக ஆழமாக விதைக்கப்ட்டு வேரூன்றியுள்ளன.

ஆனால், நாம் எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரழிவில் இருந்து மீள்வதற்கு இப்போதுள்ள பொருளாதார முறைமையில் தீர்வு இல்லை.

முதன்மை மேற்கோள்:  Umair Irfan, "Fossil fuels are underpriced by a whopping $5.2 trillion", 2019 May 17, 2019, https://www.vox.com/2019/5/17/18624740/fossil-fuel-subsidies-climate-imf

- பரிதி

Pin It