செயற்கையான முன்னங்கால் பொருத்தப்பட்ட ஒரு எகிப்திய மம்மி கெய்ரோ மியூசியத்தில் தற்போது உள்ளது. விஞ்ஞானிகள் இந்த மம்மியை ஆராய்ந்து வருகிறார்கள். தோலினாலும் மரத்தினாலும் செய்யப்பட்ட வலது முன்னங்காலை இந்த மம்மிக்கு உரியவர் வெறும் அழகுக்காக மட்டும் பொருத்திக்கொண்டிருக்கவில்லை. ஒரு எகிப்தியனுக்குரிய பெருமையோடு நிமிர்ந்து நடக்கவும் அந்த செயற்கை உறுப்பை பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி. கெய்ரோ மம்மியின் செயற்கைக்காலில் உள்ள தேய்மானத்தில் இருந்து நாம் இதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த செயற்கை முன்காலை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதைப்போன்றதொரு செயற்கைக்கால் பிரிட்டிஷ் மியூசியத்தில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1881ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயற்கை முன்காலுக்கு அதனை சேகரித்தவரின் பெயரை இணைத்து Greville Chester Great Toe என்று பெயரிட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள இந்த செயற்கை முன்கால் பேப்பர்கூழ், துணி, கோந்து மற்றும் களிமண் இவற்றால் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள செயற்கை முன்காலிலும் தேய்மானத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த செயற்கைக்கால் மடங்கும் தன்மை இல்லாமல் இருப்பதால் இதனைப்பயன்படுத்தியவர் வெறும் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று தெரிகிறது. இறந்தவர்களின் உடலை மம்மியாக பதப்படுத்தும்போது மதச்சடங்குகளின் நோக்கில் எந்தவொரு ஊனமும் மறைக்கப்படவேண்டும். ஊனத்தைமறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்கைக்கால் பொருத்தப்படவில்லை என்பதும் அழகிற்காக மட்டுமே பொருத்தப்பட்டது என்பதும் நமக்கு வெளிச்சமாகிறது.
இந்த இரண்டு செயற்கைக்கால்களின் காலமும் கி..மு.1000 க்கும் 600 க்கும் இடைப்பட்டு இருக்கவேண்டும்.
மான்செஸ்டர் விஞ்ஞானிகள் இப்போது வலது முன்னங்கால்களை இழந்தவர்களை தேடிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதற்கென்று கேட்கிறீர்களா? கெய்ரோ மம்மி அணிந்திருக்கும் செயற்கைக்காலின் நகலைக்கொண்டு அதன் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்தறியத்தான்!
இந்த இரண்டு முன்னங்கால்களில் ஏதோ ஒன்று மட்டும் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டிருக்கவேண்டும். எது எப்படியாயினும் இந்தக்கண்டுபிடிப்பு தற்கால மனிதர்களுக்கு சுவையானதுதானே!
- மு.குருமூர்த்தி