பட்டுபுடவை தந்த மெழுகை
கதர் வாங்கி விளக்கேற்ற
தத்தம் கழுத்தில் தொங்கிய
பல வண்ண சுருக்குக் கயிறுகளுடன்
மேல்தட்டு அதிராமல் கைதட்டியது;
கோடீஸ்வரர்கள் இன்னும்
சில கோடீகள் ஈட்ட
அரசின் புதிய திட்டம்
இனிதே துவங்க
மூன்றுமுறை மணியடித்த ஓசை!
முதல் மணி அடித்தபோது
யாரோ ஒரு உழவன்
சுருக்கை சரிபார்த்தான்
இரண்டாம் மணி அடிக்கையில்
நகரின் துப்புரவுத் தொழிலாளி
நாறும் பாதாளத்தில் பிரவேசித்தான்
மூன்றாம் மணி ஒலிக்கையில்
கல்லுடைப்பவளின்
மூன்று வயது பிஞ்சு
மூடப்படாத ஆழ்கிணறில் வீழ்ந்தது
உயர் தேநீர் பருகுகையில்
நுனிநாக்கில் மொழிவிளையாட,
அடிவயிற்று பிரளயங்களுடன்
எதிர்கொண்டது ஆராய்ச்சி மணிக்கும்
வழியில்லாத பாவியினம்

- அனுஜன்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It