கொச்சியில் பெடரல் வங்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் பணவீக்கம் அதிகரிக்கும் போது தோசை விலை அதிகரிக்கின்றது; ஆனால் பணவீக்கம் குறையும் போது ஏன் தோசை விலை குறையவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு “ "தோசை தயாரிப்பில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை; இன்றும் தோசை மாவை தோசை சட்டியில் ஊற்றியே வார்த்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் தோசை மாஸ்டருக்கு சம்பளம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இணையாத துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை வேகமாக அதிகரிக்கும். அதனால் தான் தோசை விலை எப்போதும் அதிகமாகவே உள்ளது” என கூறியுள்ளார்.

raghuram rajan 400 மேலோட்டமாக பார்க்கும்போது தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்துதான் விலைவாசி உயர்வதும், குறைவதும் நடைபெறுகின்றது என நமக்கு எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. தொழிநுட்பம் வளர்வதாலேயே ஒரு பொருளின் விலை குறைய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சொல்லப் போனால் தொழிநுட்ப வளர்ச்சிதான் விலைவாசி உயர்வுக்கும் ஒரு காரணமாக உள்ளது. எப்படி என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியும், வேலைவாய்ப்பு இழப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது. ஒரு தொழிற்சாலை மற்ற தொழிற்சாலையின் பொருட்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் அது மற்ற தொழிற்சாலை தரும் விலையைவிட தன்னுடைய பொருட்களைக் குறைவான விலையில் தரவேண்டும். அப்படி குறைவான விலையில் தன்னுடைய உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவர அவை உற்பத்தி செலவுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

   எப்படி உற்பத்தி செலவுகளைக் கட்டுப்படுத்துவது? மூலப்பொருட்களில் சிக்கனம் கடைபிடிக்கலாம்; அடுத்து, நூறுபேர் சேர்ந்து உற்பத்தி செய்யும் உற்பத்தியை விட ஒரு இயந்திரத்தை வைத்து  அதைவிட கூடுதலான உற்பத்தியைச் செய்யலாம்; கூலியை மிச்சப்படுத்த அந்த நூறுபேரையும் வேலையைவிட்டு அனுப்பலாம். இப்படி முதலாளி தன்னுடைய லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சந்தையில் போட்டியைச் சமாளிப்பதற்காகவும் என்ன வேண்டுமாலும் செய்வார். ஆனால் இவை எல்லாம் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.

 ஏனெனில் மூலப்பொருட்களைக் குறைத்தால் அந்த மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்புகள் ஏற்படும். அடுத்துத் தன்னுடைய தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியின் கூலியைக் குறைத்தாலும், வேலையை விட்டு நீக்கினாலும் அவர்களால் சந்தையில் வாங்கப்படும் பொருட்களின் அளவும் குறையும். இதனால் தவிர்க்க இயலாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இப்படி சந்தையில் குவியும் பொருட்கள் பெரும்பான்மை மக்களால் வாங்கப்படாமல் போகும் பட்சத்தில் அந்தப் பொருட்களின் விலை குறைவாகும் என நாம் நம்பலாம். ஆனால் முதலாளித்துவ சந்தை விதிகள் அதை அனுமதிப்பது கிடையாது. ஏனெனில் பொருட்களை அழித்தோ அல்லது அதைப் பதுக்கியோ விலையை உயர்த்த மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. உதாரணமாக மத்திய அரசு பருப்பு விலைகளைக் கட்டுப்படுத்த எவ்வளவு மெட்ரிக் டன் பருப்புகளை இறக்குமதி செய்தாலும் கடைகளில் அதன் விலை பெரிய அளவில் குறையாமல் அப்படியே நீடிப்பது.

 எனவே தொழில்நுட்பம் புகுத்தப்பட்டால் அதனால் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படுமே ஒழிய நிச்சயம் தோசை விலை குறையாது என்பது தான் உண்மை. மேலும் இந்தியா போன்ற வரிய நாடுகளில் பணவீக்கம் அளவிடப்படும் முறை மிக அபத்தமாகவே உள்ளது. இங்கே  7 சதவீத தொழிலாளர்களின் அகவிலைப்படி மட்டுமே விலைப்புள்ளிகளுடன் இணைந்துள்ளது. அதனால் அவர்கள் எந்த வகையிலும் இந்த பணவீக்க ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுவது கிடையாது.  ஆனால் பெரும்பான்மை தொழிலாளர்கள் நிரந்தரமில்லாத வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், அமைப்புசார தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்களின் நிலையை பணவீக்கம் கணக்கிடும் போது கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. எனவே இந்த பணவீக்கத்தை வைத்துக் கொண்டு விலைவாசி உயர்வை மதிப்பிடுவது கேலிக்குறியதாகும்.

   மேலும் மொத்தவிலை பணவீக்கத்திற்கும் சில்லரை விலை பணவீக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். பெரும்பான்மையான மக்கள் மளிகைக்கடைகளில் இருந்தே சில்லரை விலையில் தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்கின்றார்கள். இதனால் தோசை போடுவதற்கான மூலப்பொருட்களை மளிகைக்கடையில் இருந்து வாங்கும் ஒரு சாமானிய உணவகம் வைத்திருக்கும் முதலாளி சில்லரை விலையிலேயே பொருட்களை வாங்குகின்றார். அதனால் மொத்த விலையில் பணவீக்கம் குறைவாக இருந்தாலும் சில்லரை விலையில் அவை பெரும்பாலும் குறைவதில்லை. எனவே அவர் வழக்கம் போல ஒரே விலை கொடுத்தே தமக்கான மூலப் பொருட்களை வாங்குகின்றார். இதனால் அவர் தோசைவிலையை பெரும்பாலும் மாற்றுவது கிடையாது.

 அடுத்தாக தோசை மாஸ்டருக்கான சம்பளம் உயர்ந்துவிட்டதாக வேதனைப்படுகின்றார் ரகுராம் ராஜன். நமக்கு ஒன்றும் அப்படி தெரியவில்லை. எந்த தோசை மாஸ்டரும் பெருபாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களாகவோ தன்னுடைய குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பவர்களாகவோ அல்லது ஆடம்பர நுகர்வுப் பொருட்களை அதிக அளவு நுகர்பவர்களாகவோ இல்லை என்பதை நாம் உறுதியாக சொல்லலாம். தோசை மாஸ்டருக்கான சம்பளம்தான் தோசை விலையை தீர்மானிக்கின்றது என்று சொல்வது கடைந்தெடுத்த முதலாளித்துவ பார்வையாகும். லட்சக்கணக்கான கோடிகள் மானியமாக வாங்கும் இந்திய பெருமுதலாளிகளைப் பார்த்து வேதனைப்படாத மனது தோசை மாஸ்டருக்குச் சம்பளம் அதிகம் வழங்கப்படுவதாக நினைத்து வேதனைப்படுகின்றது.

 தோசை விலை அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் உணவு விடுதிக்குச் சென்று அவற்றை வாங்கித் தின்னும் நபர்கள் என்பவர்கள் பெரும்பாலும் மிகக் குறைவானவர்களே என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ரகுராம் ராஜன் சொல்வதுபோல தொழில்நுட்பத்தை மேம்படுத்தி  குறைந்த விலையில் அதிக தோசைகளை உற்பத்தி செய்தாலும் அதை வாங்கித் தின்னும் அளவிற்கான மக்களின் வாங்கும் சக்தி வளர்ந்து உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 ஆப்ரிக்காவில் உள்ள மிக ஏழ்மையான 26  நாடுகளை விட இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் கடுமையான வறுமை நிலவுவதாகவும், 42 கோடி பேர் மிக மோசமான வறுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகும் ஐ.நா தெரிவிக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு நாட்டின்  ரிசர்வ் வங்கி கவர்னர் தொழில்நுட்பம் இல்லாததும், தோசை மாஸ்டருக்கான அதிகப்படியான சம்பளமும் தான் தோசை விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்வது வக்கிரத்தின் உச்சம் ஆகும். இந்த லட்சத்தில் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கு மாற்றாக இந்தியாவிற்காக தயாரிப்போம் என்ற முழக்கத்தை வைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ரகுராம் ராஜன் பேசியிருந்தார். தோசை மாஸ்டருக்கான சம்பளம் அதிகமாகவில்லை என்றால் இந்தியாவிற்காக தயாரித்து  என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.  தோசை மாஸ்டருக்கான சம்பளம் உயரவில்லை என்றால் உற்பத்தி செய்த பொருட்களை யார் வாங்குவார்கள். ரகுராம் ராஜன் போன்று ஐந்திலக்க, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் ஆட்கள் மட்டும்தான் வாங்க முடியும். ரகுராம் ராஜன் போன்றவர்கள் அதைத்தானே எதிர்ப்பார்க்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It