இந்தியாவில் ஆங்கிலப் படைப்பிலக்கியத் துறையின் முன்னணி எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த்! ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்! பாசிச ஒடுக்குமுறைகளுக்கு ஆணி அடித்தவர்! தீண்டாமையைக் கிள்ளி எறிய இறுதி மூச்சு உள்ளவரை போராடியவர்!

முல்க்ராஜ் ஆனந்த், பஞ்சாபிலுள்ள பெஷாவரில் 1905-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை லால்சந்த் ஆனந்த். தாயார் மத்திய பஞ்சாபைச் சேர்ந்தவர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடிய காலக்கட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிட்டிஷாரால் இந்திய சுதந்திரப் போராளிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919), முல்க்ராஜ் ஆனந்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 அவர், அப்போது அமிர்தசரஸில் கால்சா கல்லூரியில் (Khalsa College) படித்துக் கொண்டிருந்தார். புரட்சிக்கவி இக்பாலுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இக்பாலின் தொடர்பு முல்க்ராஜ் ஆனந்தின் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முல்க்ராஜ் ஆனந்த் புலமைப்பரிசில் பெற்று 1925-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை படிப்பை முடித்தார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தாய்நாட்டிற்கு 1932-ஆம் ஆண்டு திரும்பிய அவர், மகாத்மா காந்தியைச் சந்தித்தார். இச்சந்திப்பின் உந்துதலால் ‘தீண்டாதான்’(Untochable) என்னும் நாவலைப் படைத்தார். பின்னர் அய்ரோப்பியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 1935-ஆம் ஆண்டு ‘கூலி (Coolie) என்னும் நாவலை எழுதி வெளியிட்டார்.

பிரபல இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்துடன் இணைந்து ‘இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை’ அமைத்தார்.

ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நோபல் பரிசு பெற்ற ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயைச் சந்தித்தார். ஸ்பெயினின் பாசிச எதிர்ப்பு இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டார் முல்க்ராஜ் ஆனந்த்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னர், இலங்கை ஸ்டேட் கவுன்சிலின் கண்டி உறுப்பினராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்த எச்.எல்.டி. சில்வாவின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச் சென்றார். அங்குள்ள கண்டி டிரிட்டினிக் கல்லூரி மண்டபத்தில் முல்க்ராஜ் ஆனந்திற்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு,‘இலங்கை எழுத்தாளர் சங்கம்’ ஏற்படுத்திட பாடு பட்டார். அந்தச் சங்கத்தின் முதல் தலைவராக சுவாமி விபுலாநந்தர் விளங்கினார். இச்சங்கம், ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ உருவாவதற்கு அடித் தளமாக விளங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது லண்டன் பி.பி.சி. (B.B.C.) யில் பணியாற்றினார்.

லண்டனுக்கு 1939-ஆம் ஆண்டு சென்று, இந்திய சுதந்திரத்திற்காக தீவிரமாகப் பரப்புரையில் ஈடு பட்டதுடன், கிருஷ்மேனனுடன் இணைந்து இந்திய விடுதலையின் அவசியத்தை பொதுமக்களிடம் கருத்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சோவியத் நாட்டிற்கு 1948-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற சமாதான மாநாடுகள், எழுத்தாளர் மாநாடுகள் முதலியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். சோவியத் யூனியனிலும், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் முல்க்ராஜ் ஆனந்தின் நாவல்கள் பிரபலமாகின.

நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், நாட்டார் இலக்கியம் முதலிய துறைகளில் முல்க்ராஜ் ஆனந்த், ஒரு தனித்துவமான தடத்தைப் பதித்துள்ளார். இந்திய இலக்கியத் துறையை விமர்சனவழி மூலம் செழுமைப் படுத்தும் நோக்குடன் ‘இந்தியன் லிட்ரேச்சர்’ ((Indian Literature)) என்னும் பருவகால இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். இந்த இதழ் இந்திய நவீன இலக்கியத் துறையின் செழுமைக்குப் பெரும் பங்கைச் செலுத்தியது. ‘மார்க்’ (Marg) என்னும் இலக்கிய இதழையும் நடத்தினார். இலக்கியம் குறித்து பல்கலைக்கழகங்கள் பலவற்றில் விமர்சன உரை நிகழ்த்தினார்.

மேலும், கலை இலக்கியத் துறையைச் செழுமைப்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தேசிய, சர்வதேசிய முற்போக்கு கலை இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கென ‘குப்தாப்’ (Kubtab) என்னும் பதிப்பகத்தை ஆரம்பித்தார். அப்பதிப்பகத்தின் மூலம் ஏகாதிபத்திய, பாசிச எதிர்ப்பு நூல்களையும், நாவல், சிறுகதை மற்றும் இலக்கிய விமர்சன நூல்களையும் வெளியிட்டார்.

‘இந்தியா பற்றி மார்க்ஸ், ஏங்கல்ஸ்’, ‘இந்தியா பற்றிய கடிதங்கள்’, என்னும் இரண்டு முக்கிய நூல்களையும், மாக்சிம் கார்க்கியின் சில நாவல்களையும், சிறுகதைகளையும் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

‘மாஸ்டர் ஆஃப் ஆட்ஸ்சின் மரணம் மீது விசனம்’, ‘தி ஹோப்’, ‘ஒரு வீரனின் மரணம்’, ‘விசால இதயம்’, ‘செவன் சம்மர்ஸ்’, ‘கிழவியும் பசுவும்’, ‘கிராமம்’ (The Village). ‘காலைநேர முகம் (Morning Face )’ ‘The sword and the sickle’, Across the black waters‘, ‘The private life of an Indian prince’, உள்பட 12 நாவல்களையும், ஏழு சிறுகதைத் தொகுதிகளையும் படைத்தளித்துள்ளார்.

மேலும், ‘இந்திய தேவதைக் கதைகள்’, ‘ஈசாப் கதைகள் மீளக் கூறல்’, ‘பஞ்சாப் நாட்டார் கதைகள்’ முதலிய கதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

நாவல் துறையில், முல்க்ராஜ் ஆனந்த், பிரபல ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கின்ஸ் (Charles Dickens)-சைப் போல ஆழத்தடம் பதித்தவர். இந்தி யாவின் சார்லஸ் டிக்கின்ஸ் எனப் போற்றப்பட்டார். மக்களின் வாழ்க்கை மாற்றப் புரட்சிக்காக தமது எழுத்தை அர்ப்பணித்தார். மேலும், அக்காலத்திய இந்திய சமூகத்தில் நிலவிய பஞ்சம், பட்டினி, சுரண்டல், சூறையாடல், வறுமை, இந்துத்துவ சாதிக் கொடுமை, பெண்களின் அவலநிலை, குழந்தைகளின் துயரம், இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய முதலாளித்துவச் சுரண்டல், சூறையாடல் முதலியவற்றைத் தமது நாவல்களில் கோபாவேசத்துடன் சித்திரித்துள்ளார். இந்தியாவின் கேடுகெட்ட, கொடூரமான சமூக அமைப்பை முழுவதுமாக மாற்றியமைப்பதற்காக தமது எழுத்தை ஆயுதமாகப் பிரயோகித்தார். புதிய இந்தியாவைப் படைப்பதற்காகப் போராடினார்.

இந்திய எதிர்ப்பிலக்கியத்தின் (Protest Literature) முன்னோடி முல்க்ராஜ் ஆனந்த். அவரது ‘தீண்டாதான்’, ‘கூலி’ ஆகிய இரண்டு நாவல்களும் இந்தியாவின் இந்துத் துவ சமூக சாதி அமைப்பிற்கெதிரான, புரட்சிகரமான வலுவான படைப்புகளாக விளங்குகின்றன. அவை, இந்துத்துவ சாதி அமைப்பை அடித்து நொறுக்குவதற்குப் போராடுகின்ற படைப்புகளாகும்.

‘எழுத்தாளனே! நீ யார் பக்கம்? சுரண்டப் படுகின்றவர் பக்கமா - அல்லது சுரண்டுகின்றவர் பக்கமா?’ என்று மாக்சிம் கார்க்கி எழுத்தாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். கார்க்கியைப் போல் முல்க்ராஜ் ஆனந்த் சுரண்டப்படுகின்றவர் பக்கம் உறுதியாக நின்று, தமது எழுத்தை வலுவான போராயுதமாகப் பயன்படுத்திய ‘அர்ப்பணிப்புக் கலைஞர்’ (Committed Artist). இந்திய சமூகத்தின் மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக சமூக கோபாவேசம் கொண்ட ஒரு படைப்பாளி அவர்.

மனிதநேயம், சுயமரியாதை, வாய்மை, மேன்மை முதலிய உயர்குணங்கள் அடித்தட்டு மக்களுக்கும் உரித்தானது என்று அறிவித்தார். மன்னனும் மனிதன் தான், தெருக் கூட்டுபவனும் மனிதன் தான், அவனுக்கும் சுயமரியாதை, சுயமதிப்பு, சுயகௌரவம் முதலிய உயர்ந்த பண்புகள் உண்டு என்று பறைசாற்றினார்.

முல்க்ராஜ் ஆனந்த் ஒரு பாட்டாளி வர்க்கப் படைப்பாளி (Proletarian writer). இந்திய சமூகத்தின் அடித்தட்டு மக்களின் போர்க்குரலாக அவரது படைப்புகள் விளங்குகின்றன.

யாருக்காக எழுதுகிறீர்கள் என்ற வினாவிற்கு, “இன்றைய யுக புருஷர்கள் யார்? அவர்கள் உழைப்பாளி மக்கள்; சாதாரண தொழிலாளர்கள்; இழப்பதற்கு ஒன்றுமேயில்லாத பாட்டாளிகள்; அவர்களை அடை வதற்கு இந்த உலகமே காத்திருக்கிறது. ஆகவே, இந்த யுகப் புருஷர்களான பாட்டாளிகளைப் பற்றி நான் எழுதுகிறேன்” என்று அறிவித்தார் முல்க்ராஜ் ஆனந்த்!.

இந்திய எழுத்தாளர்களில் வலுவான யதார்த்த வாதப் பண்பைப் பொறுத்தவரையில் முல்க்ராஜ் ஆனந்த் முதன்மையானவர்.

 ‘தீண்டாதான்’ என்ற நாவல் முதன்முதலாக ஒரு தொழிலாளியை, அதுவும் இந்திய சமூகத்தின் அடி மட்டத்திலுள்ள மலக்கூடங்களைச் சுத்தம் செய்கின்ற ஒரு நகரசுத்தித் தொழிலாளியை கதாநாயகனாக வைத்துப் படைக்கப்பட்டது. இது ஒரு பாட்டாளி வர்க்க நாவல் என்று போற்றப்படுகிறது. இதற்கு முன் எந்தவொரு இந்திய நாவலாசிரியரும் ஒரு தொழிலாளியை கதாநாயகனாகப் படைக்க முன்வரவில்லை. இந்த நாவல் யுனெஸ்கோ நிறுவனத்தினால் மொழிபெயர்க்கப் பட்டு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளி யிடப்பட்டுள்ளது.

‘இரு இலைகளும் ஒரு மொட்டும்’ என்னும் நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றியது.

‘கலை, பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்யும் ஒரு மகத்தான சாதனம்; அது மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பேராயுதம்’ என்ற கோட் பாட்டை அடிநாதமாகக் கொண்டு படைப்புலகில் ஈடுபட்டார் முல்க்ராஜ் ஆனந்த்.

முல்க்ராஜ் ஆனந்த் தமது 98-ஆவது வயதில் 2004- ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் காலமானார். அவர் மறைந்தாலும், அவர் இந்திய முற்போக்கு இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

Pin It