வெள்ளைப் பூனையின் மென்மயிரென
இலகுவாக உதிர்ந்துவிடுகிறதா என்ன
என் நிராசைக் கனவுகளின் நீட்சி?

ஒரு சவத்தைப் பின்பற்றுகின்றது
என் பாதங்களின் அடிச்சுவடு;
பின்னால் வருகின்றாயென்பதை
உணர்ந்து நடந்து மண்டியிட்டு
பிணத்துக்காகப் பிரார்த்திக்கையில்
சவப்பெட்டியில் படுத்திருப்பதுவும்
நீதானெனக் கண்டதிர்ந்து
துயில் கலைகிறேன்!

கனவுகளுக்குள்ளான போலிமுகத்தின்
புருவத் தீற்றலைக் கண்டறியும்
சாஸ்திரங்களைக் கற்றவனல்ல நான்;
எனவே சொல்...
பிணத்தின் முகம்தனை
எவ்வாறு சூடிக் கொண்டாய்?
உடலசையா உறக்கத்தினை
எங்கிருந்து கற்றறிந்தாய்?

உனது நினைவுகளைச் சேர்த்துக்
கொழுவி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு கண முகங்களிலும்
வித்தியாசமாகவே தெரிகிறாய்!

கண்ணாடி பிம்பம்தனில்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன்;
நிராதரவாகிப் போன
நந்தவனத்து மான்குட்டியொன்றின்
மருண்ட பார்வைகளைத் தாங்கிக்
கண்ணீர் மிதந்திருக்கும்
இரு விழிகளைக் காண்கிறேன்!

அந்த விழிகளை மூடித் துயிலுறுமிரவினில்
இன்றெந்த முகத்தைத் தாங்கிக்
கனவினில் வருவாயோ ?


- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It