விகி: காரு வாங்கப் போனேன் ஒரு தேரு வாங்கி வந்தேன்..
வீரன்: அதை ஓட்டிப்பார்த்து வாங்கினாயா இல்லை அழகைப் பார்த்து மயங்கி விட்டாயா? வரும்போதே குஷியாக பாட்டு பாடிக்கொண்டு… சந்தோஷமாக உள்ளீர். மகிழ்ச்சி. காரில் மிதந்து வந்தீரா? பறந்து வந்தீரா? விலை அதிகமோ? நவீன மாடல் வண்டியா? அல்லது ஏதும் பழைய வண்டியா?
விகி: இருப்பா பொறுப்பா. நீ பாட்டுக்கு கேள்விகளை அடுக்கிச் செல்கிறாய். குழந்தைக்கு கார் பொம்மை வாங்கச் சென்றேன். விலை அதிகம் கூறியதால் சிறிய தேர் பொம்மை வாங்கிவந்தேன். அதற்குள் நீங்கள்… பெரிய கற்பனை...
வீரன்: கார் பொம்மையே விலை அதிகம் என்று வாங்கவில்லை எனில் நீங்கள் பெரிய கார் எப்படி வாங்குவீர்?
விகி: ஏன் கார் வாங்க முடியாதா? அதற்கான நேரம் காலம் கூடிவரும்போது அதெல்லாம் தானாகத் தேடிவரும். காலம் கனியும் வரை காத்திரு.
வீரன்: கார் வாங்குவது தற்காலத்தில் ஒரு பெரிய விஷயம் இல்லை. சாதாரணம்.
விகி: கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அது சரி. ஏதோ மிதந்து பறந்து என்றாயே.. காரில் பறந்து கூடவா வர முடியும்?
வீரன்: இன்னும் சில நாட்களில் காரில் பறக்கவும் முடியும். ஸ்லோவாக்கியா நாட்டின் ஏரோமொபில் நிறுவனம் பறக்கும் கார்களை 2018-ல் அறிமுகப்படுத்த முயன்றது. ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலம் கொண்டு, இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது சாதாரண கார் போலக் காட்சியளிக்கும். ஒரு சுவிட்சை இயக்கினால் இறக்கைகள் கொண்டதாக மாறி வானில் பறக்க, எந்தவொரு சமதளப் பரப்பிலும் தரையிறக்க முடியும். அதே பரப்பிலிருந்து வானில் பறக்கச் செய்யவும் முடியும். ஒன்றரை கோடி ரூபாய் விலை நிர்ணயித்தது. உலகில் சாலைப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நெரிசலில் தடையின்றிப் பயணிக்க தரையிலும் விண்ணிலும் பறக்கும் விதமான கார்கள் உருவாகி வருகின்றன. ஜெர்மன் பொறியாளர்கள் ஒரு நவீன பறக்கும் காரை உருவாக்கி வருகின்றனர். கார்பிளேன் எனும் இந்தப் பறக்கும் காரின் இறக்கைகளும் வால்பகுதியும் நடுப்பகுதியில் அடங்கும் வகையில் வடிவமைப்பு உள்ளது. சாலையில் பயணிக்கும் போது தேவைப்பட்டால் இதிலிருக்கும் பட்டனை அழுத்தினால் 15 நொடிகளில் இறக்கைகள் விரிந்து வால்பகுதி வெளிவந்து ஒரு குட்டி விமானமாக மாறிவிடும். முன்னூறு அடி நீள சாலை இருந்தால் போதும். தரையிலிருந்து எழும்பி வானில் பறக்கலாம். இதில் 151 எச்பி பவர் அளிக்கும் இரண்டு சிலிண்டர் பிஸ்டன் எஞ்சின்கள் பின் சக்கரங்களுக்கும் பிரொபல்லர்களுக்கும் சக்தி வழங்குகின்றன.
தரையில் அதிகபட்சம் 175 கிலோமீட்டர் வேகத்திலும், விண்ணில் 222 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்க முடியும். ஐநூறு கிலோ எடை கொண்ட இந்தப் பறக்கும் காரில் இருவர் மட்டும் பயணிக்க முடியும். இருக்கைகள் நடுப்பகுதியில் மடங்கி அடங்கும். சாதாரண கார்களை பார்க்கிங் செய்யும் இடத்திலேயே நிறுத்த முடியும். எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியாது. சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ஹாலந்து நிறுவனம் பிஏஎல்–வி என்ற நிறுவனம் 2017-ல் பால் வி லிபர்டி என்ற பெயரில் ஒரு பறக்கும் காரை விற்பதற்கு முன்பதிவைத் தொடங்கியது. அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் அடக்கியதாகத் தயாரிக்கப்பட்டுப் பாதுகாப்புச் சோதனைகளில் வெற்றி பெற்றது. முதலில் சந்தைப்படுத்த முயன்றது. முதற்கட்டமாக 90 பறக்கும் கார்களைத் தயாரிக்கிறது எனப்பட்டது. மூன்று சக்கரங்களைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்ட இதில் இரண்டு பேர் பயணிக்கலாம். சாலையில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் சென்று ஒன்பது நொடிகளில் அதிகபட்ச வேகம் எட்டும். வானில் பறக்கும்போது வேகம் மணிக்கு 180 கிமீ ஆக இருக்கும். சாலையில் 1300 கிமீ தூரமும், வானில் 500 கிமீ தூரமும் முழுதாக நிரம்பிய பெட்ரோலில் செல்ல முடியும். சாலையில் இதன் இறக்கைகளை மடக்கி வைத்துச் செல்லும். பறக்க வேண்டும்போது பத்து நிமிடத்தில் மாற்ற முடியும். ஏர் பஸ் நிறுவனம் இதுபோன்ற பறக்கும் கார் தயாரிக்க முயற்சிக்கிறது.
விகி: கார் ஆரம்பத்தில் உருவாக்கியபோது இப்படி பறக்கும் கார் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார்கள் அல்லவா?
வீரன்: ஆரம்பகால கார்களில் ஸ்டியரிங் வீல் இல்லை. காரை ஓட்ட ஓட்டுநர்கள் நெம்புகோலையே பயன்படுத்தினர். உலகில் தற்போது கார்களின் எண்ணிக்கை நூறுகோடி. 1986-ல் ஐம்பது கோடி கார்களே ஓடிக்கொண்டிருந்தன. உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக 1,65,000 கார்கள் உற்பத்தி ஆகின்றன. புது காரில் வரும் வாசம் எல்லாருக்கும் பிடிக்கும். அதற்காக 50 நறுமணப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. கார் இல்லை என்றாலும் காரில் போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். காரில் உட்கார்ந்து காரின் கதவைத் திறந்து மூடிப் பார்க்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் ஆசைப்படுவர் என்பது ஒரு உளவியல் ஆய்வின் கருத்தாக்கம். மகிழுந்தியல். கார் உளவியல்.
விகி: இந்தியாவில் முதலில் மகிழுந்து எப்போது பயன்பாட்டுக்கு வந்தது?
வீரன்: இந்தியாவில் முதன்முதலில் மும்பை கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவன உரிமையாளர் ஃபாஸ்டர் 1897-ல் கார் வாங்கினார். அவர் வெளிநாட்டவர். பிறகு 1901-ல் ஜாம்ஷெட்ஜி டாட்டா முதன்முதலில் கார் வாங்கிய இந்தியர். அன்று அது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
விகி: கார்களில் சிறந்த கார் எது? அல்லது உயர்ந்த கார் எது?
வீரன்: குறிப்பிட்டு எதுவும் கூற முடியாது. ஆனால் 1965-ல் ஒரே ஆண்டில் பத்து லட்சம் கார்கள் செவர்லே இம்பாலா விற்றது சாதனை. இன்றுவரை அது முறியடிக்கப்படவில்லை. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்த கார்களில் 75 சதவீதம் இன்றும் நல்முறையில் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு காரில் 95 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் நிலவை ஆறு மாதங்களில் அடையலாம் என்று ஒரு கணக்கு உள்ளது. பிரான்சில் 1769-ல் உலகின் முதல் மோட்டார் வாகன கார் விபத்து நடந்ததாகப் பதிவு உள்ளது. விபத்தான அந்த கார் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தேசிய கலை கைவினை காப்பகத்தில் பாதுகாப்பாக அப்படியே வைக்கப்பட்டுள்ளது. காட்சிக்கார்.
விகி: மகிழ்வூட்டும் மகிழுந்தினால் சூழல் பாதிக்குமா? சுற்றுச்சூழலைப் பாதிக்காத கார்கள் கண்டுபிடிக்கவில்லையா?
வீரன்: சூழலுக்கு நன்மை தரும் வகையில் தற்போது உலகம் முழுதும் மின் சக்தியில் இயங்கும் கார்கள் உருவாக்கப்படுகின்றன. பின்லாந்தின் கார் நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த ஹைப்பர் எலக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. டொராய்டியன் என்ற அக்கார் முழுக்க மின்சாரத்தில் இயங்கும். கார் பந்தயத்துக்காக உருவாக்கப்பட்டாலும் சாலைகளில் ஓட்டுவதற்கான அம்சங்களுடன் வடிவமைப்பு உள்ளது. பேட்டரியை தனியாகக் கழற்றி எடுத்து வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும். சாதாரண வேகத்திலும் 200 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம். நவீன தொழில்நுட்பங்கள் இணைந்துள்ள கார் விற்பனைக்கு வரலாம். பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனம் அற்புதமான வடிவமைப்பில் கார் ஒன்றைத் தயாரித்துள்ளது. பேட்டரியில் இயங்கக்கூடிய இந்தக் கார் புதுதில்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். ட்விஸ்ஸி (TWIZY) என்று பெயர் வைக்கப்பட்ட இக்கார் 2012-ல் ஐரோப்பிய நாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மிக ஏற்றதாக இருக்கும். பெட்ரோல், டீசல் புகை மாசு எதுவும் இல்லாத சுற்றுச்சுச்சூழலுக்கு நட்பான கார் இது.
இரண்டரை மீட்டர் நீளமும், ஒன்றரை மீட்டர் அகலமும், மூன்றரை மீட்டர் உயரமும் உள்ள இச்சிறிய காரின் எடை ஐநூறு கிலோ. லித்தியம் அயன் பேட்டரி உள்ள இக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் நூறு கிலோமீட்டர் வரை ஓடும். ஒரு இருக்கை மட்டும் உள்ளதால் ஓட்டுநர் மட்டுமே பயணம் செய்ய முடியும். பேட்டரியில் இயங்கும் வாகனங்களில் அதிக செலவு விஷயம் அதிலுள்ள லித்தியம் அயான் பேட்டரி. இத்தகைய மின்கலங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரிக்கிறது. சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமும் இலக்கும் இருந்தாலும் ஆண்டுக்கு இருபதாயிரம் என்ற அளவில் உள்ள பேட்டரி கார் எழுபது லட்சம் என்ற அளவை எட்ட வேண்டும். அவற்றை சார்ஜ் செய்வதற்கான மின்னேற்ற நிலையங்களை நாடு முழுதும் அமைக்க வேண்டும். பேட்டரி வாகனங்களில் மிக முக்கியமானது அதில் உள்ள பேட்டரிதான். மின் சக்தியை விரைவாக உள்வாங்கி நீண்டநேரம் செயல்படுத்தக் கூடிய பேட்டரிகள்தான் அவற்றுக்கு பிரதானம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ நீண்டகால ஆராய்ச்சியின் முடிவில் லித்தியம் அயன் பேட்டரிகளைத் தயாரித்துள்ளது. தனது செயற்கைக் கோள்களில் இத்தகைய பேட்டரிகளைப் பயன்படுத்துகிறது. இவற்றை வாகனங்களில் பயன்படுத்துவதற்காக இந்திய ஆட்டோமோடிவ் ஆய்வு மையம் ஏஆர்ஏஐ இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளித்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பேட்டரி தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் துறையில் செயல்படுத்தப்பட்டால் அது சிறப்பானதாக இருக்கும். அந்த பேட்டரி பொருத்தப்படும் கார்கள் சாலைகளில் எவ்விதம் செயல்படும், பல்வேறு காலநிலைகளில் அதன் தன்மை, மின்னேற்ற நேரம், மின்சாரத்தை தக்கவைக்கும் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். 48 வோல்ட் 50 ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியை மின்னேற்றம் செய்ய இரண்டு மணிநேரமாகும். அது பொருத்திய கார் 90 கிலோமீட்டர் ஓடியது. ஒரு மணிநேரத்தில் மின்னேற்றம் ஆகும்படி மாற்றம் செய்தால் ஒரு மணி பயணத்துக்கு முப்பது காசு செலவு. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியுள்ளது.
விகி: மகிழ்வுந்தின் அறிவியல் அடிப்படை என்ன? அது எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? எப்படி இயங்குகிறது? அறிவியல் என்ன?
வீரன்: சராசரியாக ஒரு காரில் 30,000 உதிரிபாகங்கள் இருக்கின்றன. இதில் சின்னஞ்சிறிய பாகங்களும் அடக்கம். ஏறக்குறைய 15000 முக்கியமான பாகங்கள் கொண்டு உருவானாலும் சில பாகங்கள் தாம் காரை சீராக ஓடவைக்கச் செய்கின்றன. மையப்பகுதியும் மூலச் சட்டகம் (chassis) ஒன்றும்தான் காரின் அடிப்படை அமைப்பாகும். இக்னிஷனை இயக்கினால் காரின் பேட்டரி செயல்பட்டு எஞ்சினையும், விளக்குகளையும், ஊதுகுழல், வைப்பர்கள் மற்றும் பிற மின்சார சாதனங்களையும் உயிர்ப்பித்து இயக்கும். இஞ்சின் காருக்குத் தேவையான வெப்ப ஆற்றலைத் தயாரிக்கிறது. எரிபொருள் தொட்டியில் இருந்து எரிபொருள் பெறப்படுகிறது. கார்பரேட்டர் 2500 டிகிரி வெப்பநிலையில் எரிபொருளைக் காற்றில் எரிக்கிறது. இந்த வெப்பம் பிஸ்டன்களை இயக்கும். இப்படி உருவாகும் எந்திர ஆற்றல் இஞ்சினிலிருந்து இயங்குதண்டு, முன்சக்கர அச்சு போன்ற பாகங்கள் வழியாக முன்சக்கரங்களை அடைகிறது. சக்கரங்கள், டயர்கள், பிரேக்குகள், drive train எனும் இயக்குத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஸ்டியரிங் கால் கட்டுப்படுத்தப்படுகிறது. சுருள் வில்லைகள், அதிர்ச்சித் தாங்கிகள் போன்றவை சாலையின் மேடு பள்ளங்களின் அதிர்வுகளில் இருந்து பயணிகளை அதிகபட்சம் பாதுகாக்கிறது. 20 சதவீதம் வெப்பம் தான் கார் இயக்கத்தில் பயன்படுகிறது. மீதி வெப்பமெல்லாம் சூழலைப் பாதிக்கும் வாயுக்களாக சூழல் வெப்பத்தை அதிகரித்து மாசுபடுத்தும்.
கார் உற்பத்தி ஆலையில் பல கட்டங்களாக கன்வேயர் பெல்டில் பிரேமில் தொடங்கி ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து பலரது உழைப்பில் பகுதிபகுதியாக இயந்திரங்கள் சேர்க்கப்பட்டு அதிகபட்சம் 5 நிமிடத்துக்கு ஒரு கார் வெளியாகின்றன. எல்லாம் எந்திரமயம். அந்த கன்வேயர் பெல்ட், எந்திரன்கள் இல்லாமல் மனிதரின் உழைப்பில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிக்கப்படுகிறது. பிரான்சின் புகாட்டி கார் தயாரிப்பு நிறுவனம் சிரோன் மாடல் ஸ்போர்ட்ஸ் கார்களை முழுவதும் கைகளால் தயாரித்து 2017 இறுதியில் சோதனை செய்து விற்றது. ஆலையில் இருபது பேர் 1800 உதிரிபாகங்களை இணைத்து ஆறு மாதம் உழைத்துத் தயாரித்தனர். மிக உறுதியான கார்பனால் ஆன மேல்பகுதி. ஆறு முறை வண்ணம் பூசினர். பன்னிரண்டு அசெம்பிளி லைன்கள் உள்ளன. 630 கிலோ எடையுடன் உறுதியாகவும் இருக்கும். இன்ஜின் மற்றும் சேஸிஸ் இணைப்பில் 14 டைட்டானியம் போல்ட்கள் சேர்க்கப்பட்டன. நான்கு சக்கரங்கள் சேசிஸில் இணைக்கப்பட்டு, அடுத்த பகுதியில் இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில், கூலன்ட் ஆகியன நிரப்பி டைனோமீட்டர் பகுதிக்கு அனுப்புவர். இது 16 சிலிண்டர் கொண்ட இன்ஜின். டைனோமீட்டர் பொருத்துவதால் வெப்பம் குறைக்கவும் சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும். சக்கரங்கள் சரியாகச் சுழல்வதை சிமுலேட்டர் அடிப்படையில் 200 கிமீ வேகத்தில் பரிசோதிக்கப்படும். வாகனம் வெளியேற்றும் புகை, பிரேக் மற்றும் கிளட்ச் செயல்பாடு, ஏபிஎஸ் செயல்பாடு பற்றி ஆய்வு செய்யப்படும். பிறகு 30 நிமிடம் கனமழை போன்று தண்ணீர் செலுத்தி, உள்பகுதியில் கசிவு உள்ளதா என்று சோதித்த பிறகு உள்புறம் பிற கருவிகள் பொருத்தப்படும். ஓடுகளத்தில் மின்னணு பாகங்கள் மற்றும் சக்கரங்களில் நுட்பமான மாற்றமைவுகள் செய்யப்படும்.
விகி: கார் வடிவமைப்பில் நவீன முயற்சிகள் ஆய்வுகள் ஏதும் உள்ளனவா?
வீரன்: மனதின் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் இயங்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒரு காரை சீன விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இயக்குபவர் கைகளையும் கால்களையும் பயன்படுத்தாமல் மனதின் மூலம் இயக்க முடியும். இயக்குபவர் பதினாறு உணரிகள் (சென்சார்கள்) அடங்கிய தலைப்பட்டையை அணிந்துகொள்ள வேண்டும். அது அவரது மூளையின் அசைவுகளை எலக்ட்ரோ என்செபாலோகிராம் கொண்டு கட்டுப்படுத்தி மூளையின் சைகைகளைக் கட்டளைகளாக மாற்றி காரை இயங்கச் செய்யும். மனதில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று நினைத்தால் கார் முன்னோக்கி நகரும். இவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், இந்த இடத்தில் நிற்க வேண்டும் என நினைத்தால் அதன்படி காரின் செயல்பாடுகள் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றினால் அதன் மூலம் கட்டளைகள் நிறைவேறி விபத்துகள் நிகழலாம். அதைச் சரி செய்யும் தொழில்நுட்பம் உருவாகி முழுவடிவம் பெற்றபின்தான் இந்த கார் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். ஆய்வு நடக்கிறதாம்.
விகி: நம் நாட்டில் அப்படிப்பட்ட முயற்சிகள் ஏதும் நடந்தனவா?
வீரன்: டெல்லி அருகே குர்கானில் முஞ்சால் பல்கலையில் ஈக்கோ கார்ட் எனும் சூழலுக்கு உகந்த காருக்கான போட்டியில் 2017-ல் கவரப்பேட்டை பொறியியல் கல்லூரியின் எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் எலைட் என்ற காரை உருவாக்கி காட்சிப்படுத்தினார்கள். அது பேட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடியது. அதில் லித்தியம் பாலிமர் பேட்டரியைப் பயன்படுத்தியிருந்தனர். கார் ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்) அதை சிப் வடிவில் மாற்றி அதை நுழைத்தால்தான் அக்காரை இயக்க முடியும். சாலையில் செல்லும்போது குழிகள் இருந்தால் இயக்குபவருக்கு உணர்த்த 'டிக் ஹோல் சென்சார்' என்ற அல்ட்ராசோனிக் உணரியைப் காரில் பொருத்தியுள்ளனர். கார் செல்லும்போது பத்து மீட்டர் முன்னால் உள்ள பள்ளத்தை இந்த உணரி உணர்ந்து பீப் ஒலி மூலம் சைகைகளாக உணர்த்தி ஓட்டுநரை எச்சரிக்கும். பிரெய்ன் வேவ் சென்சார் என்ற உணரியும் உள்ளது. ஓட்டுநரின் மூளை இயக்கத்தை ஈசிஜி அலைகள் போல சிக்னல்களைக் காட்டும். வெளியில் இருந்தும் ஓட்டுநரின் மூளை மந்தநிலை அடைந்தால் கண்காணிக்க முடியும். கண் சிமிட்டலைக் கண்காணிக்கும் சென்சாரையும் இதுபோல அமைக்க முடியும். வசதிக்கு ஏற்ப ஸ்டீயரிங் வீலை மேலே, கீழே என்று தேவையான அளவு உயர்த்த, இறக்க வசதி உள்ளது. பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் காரிலிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் தரையில் லேசர் லைட் விழும்படி அமைத்துள்ளனர்.
காரின் உடல் பாகத்தை நெருப்பு, நீரால் பாதிக்காதபடி ஃபைபர் கொண்டு உருவாக்கியுள்ளனர். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒரு பட்டனை வைத்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டால் அந்தப் பட்டனைத் தட்டினால் தீயணைப்பான் திறந்து தீயை அணைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு உள்ளது. ஒரு சிறு பெட்டியில் கால்சியம் அயோடைடு என்ற வேதிப்பொருளை வைத்துள்ளனர். காரில் பயணிப்பவருக்கு நல்லவிதமான மனநிலையை ஏற்படுத்தும் பாசிட்டிவ் வைப்ரேஷன் உருவாக்கும் வேதிப்பொருள் அது. பொதுவாக, ஓடும் ஒரு காரின் வேகத்தை அதன் மீது வந்து மோதும் காற்று பெரிதும் குறைக்கும். இது இயற்பியல் உராய்வு விதி, காற்றின் அழுத்தவிதி. அந்த அழுத்தம் குறைந்தால் காரின் வேகம் கூடும். இது பற்றிய படிப்பு ஏரோடைனமிக்ஸ். இந்த காரில் ஏரோடைனமிக் முறையில் வடிவமைத்து அந்தக் காற்றின் அழுத்தத்தைக் குறைத்துள்ளனர். கார் மீது மோதும் காற்று எளிதாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு பின்னால் அனுப்பிவிடும். வேகம் பாதிக்காது. காரின் ஓட்டத்தில் தடை, பிரேக் போடும்போது உதவக்கூடிய வகையில் காரின் பின்புறம் டில்டிங் ஸ்பாய்லர் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். பிரேக் போடும்போது உராய்வை பெருமளவு குறைத்து சக்கரம் அதிகம் தேயாமல் காக்கும். காரை ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும் என்றனர். மணிக்கு 70 கிமீ அதிகபட்ச வேகம். மூன்று நொடிகளில் 60 கிமீ வேகம் எட்டக்கூடிய நல்ல பிக்கப் என்றனர். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு யூனிட் வரை மின்சாரம் ஆகும் என்றாலும் எரிபொருள் மிகவும் சிக்கனம்தான். ஒலி மாசு, காற்று மாசு இல்லை. சூழல் நண்பன். எண்பதாயிரம் ரூபாயில் காரை உருவாக்கி ஒன்றேகால் லட்சத்தில் நவீன லித்தியம் பாலிமர் பேட்டரி அமைத்துள்ளனர். சிறந்த பாதுகாப்பான கார் என்ற விருது பெற்றது அக்கார். பார்ப்பதற்கு சிறுவர் விளையாட்டுக் கார் போன்று தோன்றும் இக்காரில் ஒருவர் மட்டுமே அமர்ந்து இயக்க முடியும். யாரும் பயணிக்க முடியாது. சற்று முயன்றால் பின்புறம் இருக்கைகள் அமைத்து ஓரிருவர் பயணிக்கும்படி மாற்றி அமைக்க முடியும். அமைப்பார்கள்.
விகி: காரைப் பயன்படுத்துவதில் அறிவியல் நுட்பக் குறிப்புகள் உள்ளனவா?
வீரன்: உலகம் முழுதும் கார்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. நடுத்தர மக்களும் வாங்குவதற்கேற்ப விலைமலிவாக கார்கள் விற்கின்றன. வங்கிக் கடன் உதவியும் அதிகரித்துள்ளது. கார் ஓட்டும்போது பல அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கதவைத் திறந்து உள்ளே அமரும் முன்பு சில முக்கிய செய்திகளை அறிவியல் ரீதியாக கவனிக்க வேண்டும். காருக்குள் இருக்கும் இருக்கைகள், காற்றை நறுமணம் கமழச் செய்யும் வாசனைத் தைலக்குப்பி ஆகியவற்றில் இருந்து சில வாயுக்கள் வெளியேறும். கார் கதவுகளை மூடியே வைப்பதால் பல வாயுக்கள் உருவாகும். உட்புறத்தில் இருந்து பென்சீன் என்ற வேதிப்பொருள் கலந்த வாயுக்கள் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும். ரத்த அணுக்களைப் பாதித்து ரத்தசோகை ஏற்படுத்தலாம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து புற்றுநோய் உருவாகும் ஆபத்தும் உண்டு. பொதுவாக, கார்கள் கட்டிடத்தின் உட்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் போது ஐம்பது மில்லிகிராம் அளவு பென்சீன் வாயு உருவாகும் என்று கணக்கீடு உள்ளது. அந்த இடம் ஒரு சதுர அடி பரப்புக்குள். அதுதான் அனுமதிக்கப்பட்ட அளவும். நடைமுறையில் 400 முதல் 500 மில்லிகிராம் வரை உருவாகிறது.
வெளிப்புறங்களில் கார் நிறுத்தியிருந்தால் வெப்பநிலை அளவு 60 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டினால் 2000 முதல் 4000 மில்லிகிராம் வரையும் கூட அந்த வாயு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகம், கல்லீரல் உட்பட முக்கிய உள் உறுப்புகள் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். கார் கதவு வெகுநேரம் மூடி இருந்தால், கதவைத் திறந்து உள்சென்று அமர்ந்துவிடக் கூடாது. கதவு, சன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். சற்று பொறுத்து உள்ளே சென்று அமரலாம். உடனே குளிர்சாதனம் இயக்கக் கூடாது. காருக்குள் இருக்கும் தேவையற்ற காற்றும் வெப்பச்சூழலும் முதலில் வெளியேற வேண்டும். வெளியே உள்ள சுத்தமான காற்றை காருக்குள் வரவிட வேண்டும். காரின் கண்ணாடிகளைத் திறந்துவிட்டபடி சிறிது தூரம் இயக்கலாம். ஏசி எந்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களும் காரில் செல்வோருக்குப் பல நோய்களை ஏற்படுத்துகிறது. முழுநேரமும் ஏசி எந்திரம் பயன்படுத்த வேண்டாம். நல்ல காற்றுள்ள சூழலில் அதை நிறுத்திவிட வேண்டும். மாலை மற்றும் இரவு நேரத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது. நேரம், காலம், இடமறிந்து செயல்படலாம்.
விகி: காருக்கா? கார் ஆடம்பரம் தானே? சொகுசுப் பொருள் தானே?
வீரன்: கார்கள் இப்போது சொகுசு கார்கள் என்ற அடுத்த பரிமாணத்தை எட்டிவிட்டன. அது பயணத்தை ஒரு இனிய அனுபவமாக அமைக்கும் என்பதே நோக்கம். ஸ்காண்டிநேவியன் டிசைன், உயர்ந்த செயல்திறன், பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம். சொகுசான பயண உத்தரவாதம் இவை இருந்தால் அதுதான் சொகுசு கார். இவற்றை தயாரிப்பதில் முதலிடம் ஜெர்மனி. அடுத்து அமெரிக்கா, ஸ்வீடன் மற்ற நாடுகள். 2016-ல் வோல்வோ ஒரு சொகுசு காரை அழகிய வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தியது. துல்லியமான இசை தரும் ஸ்பீக்கர்கள், மூன்று வேறுபட்ட டிரைவிங் தேர்வுகள், பின்புற விசேஷ அதிர்வுக் காப்புகள், கப்பல் பயணம் போன்ற இனிய அனுபவம் தரும். வோல்வோ 2007-ல் இந்தியாவில் முதன்முதலில் டீசல் மாசுக்களை அகற்றும் வடிகட்டி பொருத்திய காரை அறிமுகப்படுத்தியது. அதே நுட்பத்தை இந்த சொகுசு காரிலும் பொருத்தி உள்ளது. உள்ளே பட்டன்கள் அதிகம் இல்லை. பதிலாக 9 அங்குல தொடுதிரை உள்ளது. ஓட்டுநர் சாலையில் அதிக கவனம் செலுத்த முடியும். பொழுதுபோக்கு செயலிகள் உள்ளன. நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே ஆகியன உள்ளன. கார் செல்லும் பாதை மாறும்போது அதை குறியீடுகளாகத் தெரிவிக்கும் நுட்பமான உணரி உள்ளது. டிஜிட்டல் கேமராக்கள் பாதை அடையாளங்களைக் கண்டுபிடித்து ஓட்டுநருக்குத் தகவல் தரும். அதன்படி ஸ்டீயரிங்கை சரிசெய்யலாம். அவசர கால பிரேக் பிடிக்கும் வசதி உள்ளது. பயணிகளுக்கு சீட்பெல்ட் வசதி, குழந்தைகளுக்கு கூடுதல் சொகுசு இருக்கை, முன் பின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வசதி உள்ளன. மேற்கூரை வசதி, பின்புற கேமரா, பின்னிருக்கை கால் தட ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன. லத்தீன் மொழியில் வோல்வோ என்றால் சுழல்கிறேன் என்று பொருள். சுழல்கிறது. அசத்தும்.
விகி: கார்களில் ஏதும் நவீன முன்னேற்றம், பரிசோதனை நடக்கின்றனவா?
வீரன்: 2009-ல் டிரைவர் தேவைப்படாத கார்களை உருவாக்கப் போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தபோது பலர் அது சாத்தியமில்லை என்றனர். பின்னர் அது பல நாடுகளில் சோதனை ஓட்டமாகவும் சில நாடுகளில் புழக்கத்துக்கும் வந்துவிட்டன. வரும் 2035-ல் உலகம் முழுதும் சாலைகளில் டிரைவர் இல்லாத 2 கோடி கார்கள் இயங்கும் என்று கணிப்பு உள்ளது. 2009-ல் கூகுள் டொயோடா காரில் சோதனை முயற்சி தொடங்கியது. 2012-ல் லெக்ஸஸ் காரில் சோதித்துப் பிறகு 2014-ல் முதல்முறை ஒரு காரை வடிவமைத்து வெள்ளோட்டம் விட்டது. அதில் சாலையில் நடப்பவர்கள், மிதிவண்டி ஓட்டுபவர்கள், பிற வாகனங்களை அறிந்து தெரிவிக்கும் உணரிகள் பயன்படுத்தப்பட்டன. மெர்சிடஸ் நிறுவனம் முதன்முதலில் 1980-ல் மியூனிச் ஆய்வாளர்களுடன் இணைந்து ரோபோ காரை அறிமுகப்படுத்தியது. 2015-ல் விஷன் டோக்கியோ என்ற பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தியது. அதில் மின்னேற்றம் செய்யப்பட்ட மின்கலம் மூலம் முதலில் 190 கிலோமீட்டர் தூரம் ஓடியது. பிறகு எரிபொருள் கலம் (Fuel cell) மூலம் 790 கிமீ தூரம் ஓடியது. இதன் எந்திரம் மிக நுட்பமான செயல்களுடன் உருவாக்கப்பட்டது. உலக அளவில் போக்குவரத்து துறைக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்து புகழ்பெற்றது டெல்பி நிறுவனம். அது 2015-ல் ஒரு ஆடி காரை பேட்டரியால் இயக்கிக் காட்டியது.
ரோட் ரன்னர் என பெயரிட்டு மின்னணு கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. ஆறு ரேடார்கள் இருந்தன. நான்கு ரேடார்கள் குறுகிய தூரத்தில் வரும் பொருள்களை உணரக்கூடியவை. சாலைப் பொருள்களை அறிய மூன்று கேமராக்கள் உள்ளன. ஆறு லிடார்கள் எனும் ஒளிஉணர் சென்சார்கள் பொருத்தப்பட்டன. சாலை அமைப்பைப் புரிந்துள்ள வழிகாட்டி (Map Guide) உள்ளது. இக்காரால் விபத்து ஏற்படாது என சவால் விட்டது. இதே காலகட்டத்தில் நிசான் நிறுவனம் தனது பேட்டரி காரில் டிரைவர் தேவைப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. லீப் என்ற அக்காரில் மி.மீ. அலை ரேடார், லேசர் ஸ்கேனர், கேமரா, ஹெச்.எம்.ஐ. என்ற மனித குறுக்கீடு இல்லாத நுட்பம் ஆகிய வற்றைப் பயன்படுத்தியது. ஐபோன் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது டிரைவர் தேவைப்படாத கார்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. அவை தாம் அடுத்த தலைமுறை கார்கள். இத்தகைய கார் உருவாக்கத்தில் கூகுள் நிறுவனம் முன்னோடி. தற்போது ஆப்பிள் நிறுவனம் தடம் பதிக்கிறது. டைட்டன் என்ற இத்திட்டத்தில் ஆறு கார்களை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்துகிறது.
கலிபோர்னியாவின் முக்கிய சாலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. டிரைவர் தேவைப்படாத பேட்டரி காரை விரைவில் களமிறக்கும். ஆடி நிறுவனம் 2004-ல் இருந்து டிரைவர் தேவைப்படாத காரை தயாரிக்க முயன்றது. கலிபோர்னியா பாலையில் ஒரு மாதிரியை சோதித்தது. பந்தய மைதானங்களில் அதை சோதித்தது. அமெரிக்காவில் சோதனை ஓட்டங்களை நிகழ்த்தியது. திடீர் கட்டுப்பாடு (Cruise control) பாதை மாறுவதை உணர்த்தும் உணரி ஆகியவற்றை அதில் அமைத்திருந்தது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐநெக்ஸ்ட் கார் டிரைவர் இல்லா காரின் முன்னோடி. கணினி மற்றும் கைப்பேசி நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் 2017-ல் டிரைவர் இல்லாத வோல்வோ கார்கள் ஸ்வீடன் சாலைகளில் இயங்கின. தானியங்கி வேகக் கட்டுப்பாடு கருவி இதன் சிறப்புக்கருவி என்பதால் இக்கார் விபத்தே ஏற்படுத்தாது எனப்படுகிறது. பேட்டரி கார்களுக்கு புகழ்பெற்ற நிறுவனம் டெஸ்லா. அதுவும் டிரைவரில்லா கார் தயாரிக்க முயல்கிறது. அக்காரில் மூன்று விநாடிக்குள் 90 கிமீ வேகம் எட்டக்கூடிய நுட்பம் உள்ளது. வேகம் அதிகம், விவேகமும் வேண்டும். ஆட்டோ பைலட் நுட்பம், பாதை மாற்றம், சாலைத் தடை, பேட்டரி நிலை போன்றவற்றை உணர்த்தும்.
வாகன நெரிசலை அறிந்து தெரிவிக்கும் உணரி உள்ளது. பார்க்கிங் செய்யும் இடம் பற்றி அறிவிக்கும் கருவி ஆட்டோபைலட் நுட்பத்தில் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது விஷன் நெக்ஸ்ட் 100 என்ற முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் காரை வடிவமைத்தது. பேட்டரியால் இயங்கும் கார்கள் சூழலுக்குப் பாதுகாப்பானது என்பது பொதுக்கருத்து. அதற்கேற்ப பிரத்யேகமாக சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் பற்றாக்குறை உள்ளது. சூழல் பிரச்சினைகளும் அதிகரிக்கிறது. வாகனங்களை இயக்கும் மனிதவளம் பற்றாக்குறை. இவற்றுக்குத் தீர்வு டிரைவர் தேவைப்படாத பேட்டரியில் இயங்கும் கார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இவை சாலைகளில் ஓடப்போகின்றன. 2016-ல் உபெர் வாடகைக்கார் நிறுவனம் வோல்வோ கார் ஒன்றை பிட்ஸ்பர்க் நகரில் வெள்ளோட்டம் விட்டு சோதித்துப் பார்த்தது. மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து உள்ள மோர்வுட் தெருவில் இந்த சோதனை நடந்தது. அதற்கு முன்பு ஃபோர்டு பியூஷன் காரை டிரைவர் இல்லாமல் செயல்படுத்திப் பார்த்தது. ஆட்டோமொபைல் துறையில் டிரைவர் இல்லாத கார்தான் அடுத்த கட்ட வளர்ச்சி, சாதனை, தேவை.
விகி: அந்த சாதனை நம் நாட்டிலும் நடைபெறுகிறதா?
வீரன்: கூகுள் தொடங்கி வைத்த தொழில்நுட்பப் புரட்சியை பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதித்துப் பார்க்கின்றன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகர் பெங்களூரில் டிரைவர் தேவைப்படாத காரை சோதிக்கப் போவதாக டாடா எலக்ஸி நிறுவனம் 2017 தொடக்கத்தில் அறிவித்தது. முன்பே சோதனை அடிப்படையில் டிரைவர் தேவைப்படாத காரைத் தயாரித்து அதை பெங்களூர் புறநகர் பகுதியில் சோதித்தனர். அதற்கான ஒரு சிமுலேட்டரை வடிவமைத்து சோதித்துப் பார்த்தது. டாடா செடான் காரில் உணர்கருவிகளான லிடார், ரேடார், ஸ்டீரியோஸ்கோபிக் கேமரா, அல்ட்ராசோனிக் சென்சார் ஆகியன இணைக்கப்பட்டு இயக்கிப் பார்க்கப்பட்டன. இதில் பொருத்திய கணினியில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு காரின் ஆக்சிலரேட்டர் செயல்பாடு, பிரேக் உள்ளிட்டவற்றை அது தீர்மானிக்கும். போக்குவரத்து துறையில் சிறந்த இடம் பெற்றவை அமெரிக்கா டெட்ராய்டும் ஜப்பானும். சொகுசு காருக்கு ஜெர்மனி. சூழல் பாதிக்காத கார் தயாரிப்பு என்றால் அது இஸ்ரேல். அங்கு நெதன்யா மையம் டிரைவர் தேவைப்படாத கார் தயாரிப்பு தொழில்நுட்ப ஆய்வில் 2017 முதல் ஈடுபட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் கார்களை இயக்க, பயணிக்க உகந்த நுட்பம் குறித்த ஆய்வும் உள்ளது. இந்தியாவும் அவற்றுடன் இணைந்து முயற்சிகள் செய்கிறது.
விகி: திறன்பேசி, திறன் தொலைக்காட்சி என்பது போல திறன் கார் என்று வருமா?
வீரன்: ஸ்மார்ட் கார் அதற்கான நிபந்தனைகள், குறியீடுகள் உள்ளன. ஒரு கார் ஸ்மார்ட் கார் எனில், அதில் சாலையில் ஏதும் குறுக்கீடு இருந்தால் அது குறித்து தக்கநேரத்தில் டிரைவருக்குத் தெரிவிக்கும் நுட்பம் இருக்க வேண்டும். இஸ்ரேலில் ஒரு ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கினர். அது வாகன ஓட்டிகளுக்கு மிகப் பயனுள்ளது. வாகன நெரிசல் மிகுந்த பகுதியை அடையாளம் காட்டும் வகையில் கிளவுட்சோர்ஸ் தகவல் அடிப்படையில் செயல்படுகிறது. மொபிலியே நிறுவனம் வாகன பாதுகாப்புக்கு ஒரு கருவி வடிவமைத்தது. அது விபத்து எச்சரிக்கை கருவி. மேலும் முப்பரிமாண வரைபடம் ஒன்றையும் தயாரித்தது. இவற்றை எல்லாம் இஸ்ரேல் தனது காரில் பயன்படுத்தும்.
விகி: அக்கால மிதிவண்டி போல காரில் டைனமோ அமைத்து விடலாமே?
வீரன்: அதையும் மாற்றி யோசித்துவிட்டார்கள். அமெரிக்காவின் கார் உற்பத்தி நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி மற்றும் கேசோலினில் இயங்கும் ஹைபிரிட் மாடல் கார்களை டைனமோ இணைத்து 2017-ல் அறிமுகப்படுத்தியது. அந்த பேட்டரி காரின் பின்சக்கரம் சுழல்வதன் மூலம் டைனமோ செயல்பட்டு மின்சாரம் உற்பத்தியாகும். அது பேட்டரியில் சேமிக்கப்பட்டு கார் இயங்கும். இதில் மிகுந்த செயல்திறன் மிக்க பேட்டரியில் செயல்படும் மோட்டார்கள் காரை இயக்க உதவுகின்றன. இரண்டு லிட்டர் ஸ்பார்க் இக்னிஷன் இருப்பதால் டர்போ சார்ஜ்டு இன்ஜினை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. ஐந்தாறு விநாடிகளில் கார் நூறு கிலோமீட்டர் வேகத்தைத் தொடும். பாதுகாப்பாகவும் செல்லும். 18 கிலோவாட் பேட்டரி உள்ள இந்த காரில் கிரையோஜெனிக் குளிர்விப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியின் திறனில் எண்பது கிலோமீட்டர் தூரம் ஓடும். கேசோலினில் சேர்த்து மொத்தம் தொள்ளாயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும்.
விகி: இதுபோன்ற நவீன முயற்சிகள் இந்தியாவுக்கு ஒத்துவருமா?
வீரன்: உலகளவில் பேட்டரி கார் என்றாலே அவை டெஸ்லா கார்கள் தாம். இதில் உள்ள ஆட்டோபைலட் முறை இந்திய சாலைகளுக்கு சரிவரவில்லை. இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் இன்டர்நெட் இணைப்பு இல்லை. இருந்தாலும் தொடர்ச்சியாக முழுமையாக இருப்பதில்லை. நேவிகேஷன் முறை சரியாகச் செயல்படாது. ஆட்டோபைலட் முறையும் சரிவரச் செயல்படாது. இந்தியாவில் டிரைவர் தேவைப்படாத கார்களுக்கு தற்போது அனுமதி இல்லை. பாதுகாப்பு அமைச்சக ஒப்புதல் இல்லை. இந்திய சாலைகள் அபாயமானவை. திடீர் வளைவுகள், பாதை மாற்றங்கள் உள்ளன. அளவுக்கு மீறிய அசுர வேகம் உள்ளது. அனுமதியற்ற சட்டத்திற்குப் புறம்பான பந்தயங்கள் சாலைகளில் நடக்கின்றன. கவனமின்றி வாகனங்களை ஓட்டுவதும் அதிகம். சிக்னலை மீறுவது சாதாரணம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்பதே பலர் அறிவதில்லை. அதனால் அப்படிப்பட்ட கார்கள் இங்கு சாத்தியமில்லை.
விகி: ஓட்டுநர் தேவைப்படாத கார்களில் அதற்கேற்ற சிறப்பு வசதிகள் என்னென்ன இருக்கும்? குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் என்ன?
வீரன்: ஓட்டுநர் இயக்கும் கார்களில் அதுபோன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் முயன்று கோனா என்ற புதிய ரக காரை 2017-ல் திட்டமிட்டது. நகர் பகுதிகளில் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் மூன்று விதமான வசதிகளுடன் அதிவேக திறன், கியர் மாற்றுவதில் எளிமை என்று பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டது. டிரைவர் கண்களுக்குத் தெரியாத சூழல் காரணமாக விபத்து உருவானால் அதை உடனே எச்சரிக்கும் பிசிடபிள்யூ எனும் ரேடார் சிஸ்டம் வசதி உள்ளது. வாகனத்தை பின்புறம் ரிவர்ஸ் இயக்கும்போது இடிப்பது போன்ற சூழல் உருவானால் எச்சரிக்கும் ஆர்சிசிடபிள்யூ அமைப்பும் உள்ளது. முன்புறத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் எஃப்.சி.ஏ. அமைப்பு உள்ளது. காரின் முன்பகுதியில் உள்ள கேமரா மற்றும் ரேடார் ஆகியன விபத்தைத் தடுக்கும், எச்சரிக்கை செய்யும். வேகத்தடை, பிரேக் தானியங்கி முறையில் செயல்பട്ട് காரை நிறுத்திவிடும். கார் செல்லும் பாதையைக் கணித்து அதிலிருந்து மாறாமல் செலுத்த உதவும் லேன் கீப்பிங் அசிஸ்ட் என்ற நுட்பம், உயர் ஒளி உமிழ் வசதி மற்றும் ஓட்டுநர் எச்சரிக்கும் கருவி ஆகிய சிறப்பம்சங்கள் கோனா காரில் உள்ளன. கார் ஓட்டுபவர், சக பயணிகள், சாலையைப் பயன்படுத்தும் பிற வாகன ஓட்டிகள் அனைவரின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சற்று தாழ்வான, அகலமான வடிவமைப்பு இயற்பியல் அடிப்படையில் அதிக வேகத்தில் செல்லும்போது சிறப்பான சீரான, குலுங்கலற்ற, உராய்வற்ற பயணத்தை உறுதிசெய்கிறது. நீளம் நான்கு மீட்டர்.
விகி: படகு கார் என்பது இதுதானோ? கூகுள் பறக்கும் கார் எப்படி இருக்கும்?
வீரன்: கூகுள் நிறுவனத்தின் பறக்கும் கார் திட்டம் 2016 முதல் உலகம் முழுதும் பலரால் பேசப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு 2010-ல் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் வித்திட்டார். அவரது ஜீ ஏரோ நிறுவனம் மூலம் பேட்டரியால் இயங்கும் பறக்கும் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்கு முன்பு டெரபியூகியா என்ற நிறுவனம் ஒரு பறக்கும் காரை தயாரித்தது. அதன் வடிவமைப்பு தோற்றம் முழுமையாக இல்லை. கூகுள் பறக்கும் கார் நான்கு பேர் பயணிக்கும் வகையில் கணினியின் கட்டுப்பாட்டில் செயல்படும். செல்ல வேண்டிய இடத்தை கணினி பதிவு செய்துவிட்டால் அந்த இடம் சென்று சேர்க்கும். இரண்டாக மடக்கும் வகையிலான இறக்கைகள் கொண்டு மின்சாரத்தால் இயங்கும் இதன் என்ஜின் 300 ஹெச்பி ஆற்றல் கொண்டது. தரையில் செல்லும்போது இறக்கைகள் மடங்கி சாதாரண கார் போல செயல்படும். மணிக்கு 200 மைல் வேகத்தில் அதிகபட்சம் 500 மைல் தூரம் வரை செல்லும். தரையிறங்கப் போதிய வானிலை சூழல் இல்லை எனில் தரையிறங்க வேண்டிய கட்டளையை நீக்கி வானில் சற்று நேரம் இயங்கலாம். வானில் பறக்கும்போது நிலவும் வான் போக்குவரத்துக்கு ஏற்ப பாதை அமைத்துக்கொள்ளும். மோசமான வானிலை, தடைசெய்யப்பட்ட வான்பரப்பு ஆகியவற்றில் இது பயணம் செய்யாது. அவசர காலத்தில் பயன்படுத்த பாரசூட் அமைப்பு உள்ளது. இவை பறக்கும் காரில் இருக்க வேண்டிய வசதிகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பேட்டரியால் இயங்கி மின்சாரத்தால் செயல்படுவதால் இதன் எடை குறைவு. மின்சார மோட்டார்கள் மிச்ச சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். சிக்கல்கள் குறைவு. தற்போது ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பேட்டரியால் செயல்பட்டு பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இதன் பின்புலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்பொறியாளர்கள் இந்த பறக்கும் காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அது முழுமைபெற பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆகலாம்.
விகி: இதுபோன்ற புதிய வடிவக் கார்களை நாம் எங்கு காண முடியும்?
வீரன்: உலக அளவில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் முக்கியமான டெட்ராய்ட் கண்காட்சி 2017-ல் நடந்தது. அதில் டிரைவர் தேவைப்படாத கார்கள் முதல் பிற நவீன தொழில்நுட்பம் பயன்படும் கார், பஸ் வாகனங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. பேட்டரி கார் உட்பட பல நவீன தொழில்நுட்ப வாகனங்கள் இடம்பெற்றன. சில பரிசோதனை முயற்சிகள் இங்கு நடைபெறும். ஆய்வுகள் நடக்கும். அதே ஆண்டில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த மின்னணு கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் ஸ்மார்ட் கார் ஒன்றை காட்சிப்படுத்தியது. சுங்க கட்டணம், சாலையோர உணவு விடுதியின் உணவுத் தொகை, கார் நிறுத்தும் கட்டணம் அனைத்தும் இந்த காரே செலுத்தி விடும். வாடிக்கையாளரின் வங்கிக் கடன் அட்டையிலிருந்து இந்தப் பணப்பரிவர்த்தனைகளை காரே தானாக மேற்கொள்ளும். ஸ்மார்ட். பெட்ரோல் நிரப்பிய பிறகு அதற்கான தொகையை செலுத்திவிடும். விசா போன்ற பண பரிவர்த்தனை நிறுவனங்களோடு இணைந்து ஸ்மார்ட்போன் மென்பொருளை காரில் இணைத்து ஸ்மார்ட் கருவி வடிவமைத்து காரில் பொருத்திவிட்டால் பணமில்லா வர்த்தக முறையில் அந்த கார் அக்கட்டணங்களைத் தானே செலுத்திவிடும்.
காரில் செயற்கைக்கோள் இணைப்பு வசதி, செல்போன் வைஃபை மற்றும் புளூடூத் இணைப்பு மூலம் இந்த நுட்பத்தை அளிக்க கார் நிறுவனங்கள் முயல்கின்றன. உலக அளவில் கார்களில் உள்ள செல்போன் மூலமான இணைப்பு ஆறுகோடிக்கும் மேல் உள்ளது. உலக அளவில் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெறும் கண்காட்சி முக்கியமானது. 2017 மார்ச்சில் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்சின் ஏர்பஸ் நிறுவனம் முதல்முறையாக தனது பாப் அப் என்ற மாடல் காரை காட்சிப்படுத்தியது. இந்த பாப் அப் கார் தரையிலும் ஓடும், வானத்திலும் பறக்கும். ஆளில்லா விமானம் எனும் ட்ரோன் மற்றும் கார் இரண்டின் ஒன்றிணைந்த கலவையாக இந்த பாப் அப் உள்ளது. காரை ஓட்டிச் சென்று வாகன நெரிசல் மிகுந்த பகுதி தொடங்குமிடத்தில் அதே காரில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பில் பெரிதும் கவனம் கொண்டு முற்றிலும் பேட்டரியில் இயங்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. காரில் இயங்கும், சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி மட்டும் தனியாகச் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் பயணம் முடிந்தவுடன் அடிப்பகுதி மட்டும் தனியாகக் கழற்றிவிடலாம். பிறகு பறப்பதற்கு ட்ரோன் போன்ற சக்கரங்களுடன் கூடிய மேல்பகுதி காரின் மேலே பொருத்தப்பட்டு கார் பறக்க உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முறையில் செயல்படுவதாக வடிவமைத்த இந்த காரில் பயணம் வசதியான, பாதுகாப்பான பயணமாக இருக்கும். இருந்த இடத்திலிருந்தே அப்படியே ஹெலிகாப்டர் போல மேல் எழும்பும். பேட்டரியில் இயங்குவதால் புகை இல்லை. கார் முழுவதும்கார்பன் ஃபைபரால் ஆனதால் எடை குறைவு, உறுதியானது. விண்ணில் பறக்க வசதியாக எட்டு இறக்கைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதுபோன்ற கார் சேவை முழுதாக நடைமுறையில் செயல்பட குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம். தற்போது ஆய்வு நிலையில் உள்ளது.
விக்கி: காரைப் பராமரிப்பது கடினமான வேலை. காரைக் கழுவிச் சுத்தம் செய்வது...
வீரன்: வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு காரைக் கழுவ குறைந்தபட்சம் நாற்பது லிட்டர் தண்ணீர் தேவை. பைப்பில் ரப்பர் டியூப் மூலம் காரைக் கழுவ 90 லிட்டர் வரை தண்ணீர் தேவை. காரைக் கழுவும் சர்வீஸ் நிலையங்களில் ஒரு காரைக் கழுவ 2000 லிட்டர் தண்ணீர் வரை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 23 கோடிக்கு மேல் கார்கள் உள்ளன. அவற்றைக் கழுவ ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தால்…. இதற்கு ஒரு மாற்றுவழி கண்டார் நிதின் சர்மா. 2019 அக்டோபரில் கோ வாட்டர்லெஸ் (Go Waterless) என்ற அமைப்பை மும்பையில் தொடங்கினார். வேதிப் பொறியியல் நிபுணர்களின் துணையுடன் நானோ தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தித் தாவரங்களில் இருந்து, காரின் அழுக்கு நீக்க பசை போன்ற திரவத்தை உருவாக்க முடியுமா என்று ஆராய்ந்தார். இயற்பியல் ஆஸ்மாஸிஸ், நவீன மாலிகுலர் வேதியியல் என்று பல துறைகளின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி கார் கழுவும் பசை போன்ற திரவம் கண்டார். இது சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாது. காரின் வெளிப்புறமோ உட்புறமோ லேசாகத் தடவி துடைத்தால் போதும், அழுக்குகள் நீங்கிவிடும் என்கிறார். காரில் கீறலை ஏற்படுத்தாமல் எல்லாப் பகுதியிலும், கண்ணாடியிலும், ஏன் வேகத்தடை பிரேக்கிலும் இந்தத் திரவத்தைப் பயன்படுத்தித் தூய்மையாக்கலாம் என்கிறார். ஒரு காருக்குச் சுத்தம் செய்யும் பசை ஸ்பிரே நூறு மில்லி அளவு போதும். தாவரங்களில் இருந்து இந்த பசை போன்ற திரவத்தைச் செய்யத் தேவையான மூலப்பொருள் இந்தியாவில் இல்லையாம். பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஸ்பிரேவைக் கைகளால் இயக்கித் தெளித்து துடைத்துவிடலாம். மின்சாரம் தேவையில்லை. இதைப் பயன்படுத்துவதால் காரில் துரு பிடிக்காது, பெயின்ட்டில் கீறல் விழாது என்கிறார்.
விக்கி: காரில் அமர்வது, ஓட்டுவது பற்றி வேறு ஏதும் பயனுள்ள குறிப்புகள்?
வீரன்: கார்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முன் இருக்கைகளில் அமர்வோர் பொதுவாக எப்போதுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கார் எதன் மீதாவது மோதினால் முன் இருக்கையில் இருப்பவருக்கே பாதிப்பு ஏற்படும். பத்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் காரின் முன் இருக்கையில் அமர வைக்கக் கூடாது. பல நாடுகளில் அதற்குத் தடை உள்ளது. சில நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. குடிநீர் பாட்டில், பொம்மை, புத்தகம் போன்றவற்றை பின் இருக்கைப் பகுதிக்கு பின்புறம் வைக்க வேண்டாம். திடீர் பிரேக்கில் அவை முன் இருக்கையில் விழக்கூடும். நீண்ட பயணங்களில், மலைப் பயணத்தில் குழந்தைகளுக்கென தனியாக விற்கப்படும் இருக்கைகளை வசதியாக அமர்வதற்கு ஏற்ப அமைத்துப் பயன்படுத்தலாம். ஓட்டுநர் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும்.
விக்கி: வேறு ஏதும் விசித்திரக் கார் முயற்சிகள்? முத்தாய்ப்பாக?
வீரன்: பிரமாண்டமான தோற்றத்தோடு சீறிப்பாயும் சொகுசு கார்கள் ரோல்ஸ் ராய்ஸ். அந்நிறுவனம் 2017-ல் விஞ்ஞான தொலைநோக்கோடு மிகச் சிறிய காரை உருவாக்கியது. இங்கிலாந்து செயின்ட் ரிச்சர்டு மருத்துவமனைக்கு இந்தச் சிறிய காரை அமைத்தது. அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் சிறுவர்கள் தம் வார்டில் இருந்து அறுவை அரங்குக்குச் செல்வதற்கு இந்த கார் உருவாக்கப்பட்டது. இந்த காரைச் சிறுவரும் ஓட்டிச் செல்ல முடியும், பெரியவர்களும் ஓட்டலாம். இந்த காரில் பயணித்துச் சென்று அறுவை அரங்கு செல்வதால் அவர்களது மனஅழுத்தம் குறைகிறது. அறுவை சிகிச்சை முடிந்து விரைந்து குணமடைகின்றனர். சொகுசுப் பயணக்கார் சிகிச்சைக்கும் பயன்படுவது விஞ்ஞானத்தின் மற்றொரு பரிமாணம். இந்த காரின் மாதிரி ஒன்றை இம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும், கார் ஓட்ட முடிந்த இரு சிறுவர்களிடம் கொடுத்து சோதித்தது. அவர்கள் இந்த சிறிய காரை மருத்துவமனைக்குள்ளேயே ஓட்டி மகிழ்ந்தனர். மணிக்கு 16 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இக்காரில் வி12 இன்ஜினுடன் 24 வோல்ட் பேட்டரியில் இயங்கும்படி வடிவமைத்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்குச் சவால் விடும் வகையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எச்சரிக்கை மணி அடிக்கிறது. கனரக வாகனம், சொகுசு மகிழுந்து, இருசக்கர வாகனம் என பெரிய நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. காற்று மாசுபாடு அதிகரித்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 2017-ல் காற்று மாசுபாடு அதிகரித்து பெரிய பிரச்சினையாகியுள்ளது. அங்கு ஒற்றை மற்றும் இரட்டை இலக்க பதிவெண் வாகனங்கள் புதிய விதிமுறைகள் அமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு, காற்று மாசு ஓரளவு குறைந்துள்ளது. மாசு குறைக்க எரிபொருளின் சிக்கனம் கடைப்பிடிக்க உலகின் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் கார் எனும் மின்சார மகிழுந்துகள், வாகனங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. சில நிறுவனங்கள் மின்சாரத்திலும், பெட்ரோல் மற்றும் டீசலிலும் இயங்கும் ஹைபிரிட் வகை வாகனங்கள் தயாரிக்க முயற்சிக்கின்றன. இதற்கான ஆய்வுகள் விஞ்ஞான முறையில் நடைபெறுகின்றன.
இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மின்சார மகிழுந்து சூழலை மாசுபடுத்தாத வகையில், பெட்ரோல் டீசல் வகை கார்களின் பராமரிப்புச் செலவை விட குறைவான செலவில் உள்ளதாகவும் அறிமுகம் செய்யப்போகிறது. உலக நிறுவனம் பிஎம்டபிள்யூ ஐ3 என்ற மின் மகிழுந்து தயாரிக்க உள்ளது. 25 கிலோவாட் மின்திறனில் இயங்கும் தன்மையுடன் உலோக மின்கலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டாடா நிறுவனம் தயாரித்த விஸ்டா மின்சார கார் முக்கியமானது, வித்தியாசமானது. சிறப்பான வசதிகளுடன் வாங்கக்கூடிய விலையில் சூப்பர் பாலிமர் மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மின்கலன்களைப் பொருத்தி இந்த காரின் எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.
நிஸான் லீஃப் என்ற மின் கார் இந்தியாவில் தயாரித்து வடிவமைக்கப்படும் சொகுசு மின்சார கார் சூழல் மாசுபாட்டைக் குறைக்கும். 48 அடுக்குகள் கொண்ட லித்தியம் அயன் மின்கலன்களுடன் தயாரிக்கப்படுவதால் அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும். எளிதாக இயங்கும் உயர்சக்தி கொண்ட இக்கார் 80 கிலோவாட் செயல்திறனில் இயங்கும். இந்திய சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. ஒருமுறை மின்கலனில் மின்னேற்றம் செய்துவிட்டால் 64 கிலோமீட்டர் வரை சொகுசுப் பயணம் தரும். செவர்லெட் வோல்ட் கார் முதலில் மின்கலத்தால் இயங்கும் எந்திரங்கள், மின்சாரம் தீர்ந்தாலும் தானாக எரிவாயு மின் உற்பத்தி மூலம் எந்திரத்திற்குத் தேவையான மின்சக்தி பெற்று இயங்கக்கூடியது.
விக்கி: தமிழகத்தில் ஏதேனும் புதிய முயற்சி நடக்கிறதா?
வீரன்: திருப்பூர் குப்புசாமிபுரம் ராஜ் சிவானந்தம் சீனாவில் கார் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். அங்கு இவ்டால் (eVTOL) பறக்கும் மின் கார் மாடல்களை அவரது புதிய ஆற்றல் வேகன் நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறார். அந்த கார் செங்குத்தாக மேல் எழுந்து பறக்கும், செங்குத்தாகத் தரையிறங்கும். ஹெலிகாப்டருக்கு மாற்றாக இவற்றைப்பயன்படுத்தலாம். வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள், மலை இடுக்கில் சிக்கியவர்கள், அடர்ந்த வனத்தில் சிக்கிய மீட்க இவை பயன்படும். இலகுவான எடையுள்ள டைட்டானியம் மின்கலம் இருக்கும். கார் உடலமைப்பு டைட்டானியத்தில் வடிவமைக்கப்படும். ஐந்து காற்றுப்பைகள் உள்ளன. அரை மணிநேரத்தில் 150 கிலோமீட்டர் வானில் பறக்கலாம். ஐந்தடிக்கு ஏழடி இடம் இருந்தாலே தரையிறக்க முடியும். காரை இயக்க ஒரு மணிநேரம் பயிற்சி செய்தால் போதும். இருவர் பயணிக்கும் பறக்கும் கார் விலை இரண்டு கோடிக்கு மேல் இருக்கும்.
விக்கி: தற்போது நாம் அந்த காரை வாங்கி அதில் பறப்பது போல் கற்பனை செய்யலாம். கனவு காணலாம் வாருங்கள். ஒருநாள் பலிக்கும்.
- புழல் தி.பாலகுமார்