அச்செழுத்துக்கள் உருவாகாத காலகட்டத்தில் வழக்கிலிருந்த அறிவியல் கருத்துக்களைத் தமிழர்கள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளனர்.  கால ஓட்டத்தில் வெகுவாக அழிந்துவரும் ஓலைச்

சுவடிகளில் மருத்துவம், கணிதம் பற்றிய அரிய கருத்துக்கள் பாடல் வடிவில் இடம் பெற்றுள்ளன.  ஆகவே, தமிழின் அறிவியல் எழுதுமுறை வரலாற்றை ஓலைச் சுவடிகளிலிருந்தே தொடங்க வேண்டும்.  டேனிஸ் மிஷனரியாக தமிழகம் வந்த சீகன் பால்கு (1700) குறிப்புகள் மூலம் தமிழகத்தில் நிலவிவந்த மருத்துவமுறையையும் தமிழர்களிடம் இருந்த மருத்துவத் தொழில் நுட்பத்தையும் ஓலைச்சுவடிகளில் நூலாக்கம் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடிகின்றது.

கிறித்தவ சமயத்தவர்கள் சென்னையில் அச்சகம் தொடங்கிய பிறகு இரேனியுசு பாதிரியார் 1818-இல் சென்னையில் துண்டறிக்கை சங்கத்தைத் தொடங்கினார். இரேனியுசின் முதல் துண்டறிக்கை காலராவைப் பற்றியது.  அந்த வெளியீடே பொது மக்களுக்கான அறிவியல் எழுதுமுறையின் முதல் வெளியீடாகக் கருதலாம்.  அறிவியல் தமிழ் ஆக்க முயற்சியில் தமிழில் எழுதப்பட்டமையும், அதன் இரண்டாவது கட்டமாக முறையான கலைச் சொல்லாக்கப் பணி.  நிறுவன ரீதியாக நூற்படைப்பு முயற்சியும் ஏறத்தாழ 150 ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் காணப்படுகின்றது.

விடுதலைப் போராட்டம் அரசியல் களத்தில் இந்தியாவினுடைய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள், தத்துவங்கள், கலை, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் வேர்களைத் தேடத் தொடங்கியது.  மேலைநாட்டு அறிவியல், கலை, தத்துவம். சமயம் பரப்புரை ஆகியவற்றின் பிடியி லிருந்து விடுபட வேண்டுமானால் மண்ணின் வேர் களைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அனைத்திந்திய நிலையில் இத்தகைய போக்கு நிலவும் போது, தமிழகத்தில் ஒரு வகையான மறுமலர்ச்சி எழுந்தது.  வைதீகப் பிறவியிலிருந்தும் பிராமணப் பிடியி லிருந்தும் தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற சிந்தனையும் உருவெடுத்தது.  அதன் முதல்கட்டம் தான் திராவிட மொழிகளைச் சமஸ்கிருதப் பிறவி யிலிருந்து மீட்பது.  இதற்கான செயலாக திராவிட மொழிகளுக்குள் தமிழுக்கு ஒரு இடத்தை கொடுத்துக் கால்டுவெல் திராவிட மொழியியலுக்கு வித்திட்டார்.  அவர் இட்ட வித்திலிருந்து திராவிட அரசியலும், தமிழின் தனித்துவமும் கிளைத்தெழுந்தன.  கால்டு வெல் அவர்களே தமிழின் வரலாற்றின் பின் நோக்கிச் செல்ல, செல்ல சமஸ்கிருத சொற்களின் எண்ணிக்கை தமிழ் சொற்களஞ்சியத்தில் வெகுவாகக் குறைந்துள்ளன என்று குறிப்பிடுகிறார்.

இடைக்காலத்தில் சமயம் தொடர்பாகவும் தத்துவம் தொடர்பாகவும் சமஸ்கிருத மொழியி லிருந்து தமிழ் நிறைய சொற்களைக் கடனாகப் பெற்றது.  புதிய சொற்களின் உதவியினால் தமிழில் ஸ,ஜ,ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.  சமஸ்கிருத மொழியின் தாக்கத் தால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் மொழியின் தூய்மையைப் பாதித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.  மொழி மாற்றங்கள் கட்டுப்படாமல் போனால் மொழி சிதைந்துவிடும் என்ற உணர்வு மொழிப்பாதுகாப்பு என்ற நடவடிக்கைக்குப் பொதுவாக நம்மை இட்டுச் செல்லும்.  இச்சூழல்தான் தூய தமிழ் இயக்கத்திற்கான தோற்றம்.  கால்டுவெல் விதைத்த விதை ஒரு இயக்கமாகப் பின்னர் வளர்ந்தது.  நாம் கால்டுவெல்லை நேரடியாகத் தொடர்புபடுத்த இயலாவிட்டாலும் அவருடைய சிந்தனையும், அவர் தமிழ்பால் கொண்டிருந்த நட்பும் தமிழ் மொழியின் தனிச் சிறப்புகள் குறித்து, அவர் வெளியிட்ட கருத்துக்களும் பின்னால் தோன்றிய தூய தமிழ் இயக்கத்திற்குக் கருவாக அமைந்தன என்று கூறலாம்.  இங்கு மொழி இயல் சிந்தனையும், அரசியல் சமுகச் சூழல்களும் மொழி சார்ந்த இயக்கத்திற்கு வித்திட்டன.  தமிழில் சொற்களை உருவாக்குகின்ற போக்கையும், தமிழ் மூலம் அனைத்து அறிவியல் செய்திகளையும் வெளியிட முடியும் என்ற தன்னம்பிக்கையும் மேலே சுட்டிக் காட்டிய சூழல்கள்தாம் உருவாக்கின என்று கூறுவது ஒரு மிகையான கூற்றல்ல.

இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல், வாழ்வியல் படிப்பு, பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.  1830-களில் அதற்கான தொடக்கம் தமிழகத்திலும். இலங்கை யிலும் ஏற்பட்டது.  இரேனியுசு பாதிரியார் பூமி சாஸ்திரம் என்கிற நூலைத் தமிழர்களுக்கு அறிவுண்டாகும்படி என்று இந்துமத புராணக்கருத்துக் களுக்கு மறுப்பாக எழுதி 1832-இல் வெளியிட்டார்.  1849-இல் இலங்கையில் பால கணிதம் என்ற நூல் வெளியாயிற்று.  1885-இல் ‘‘Algebra’’’ பற்றிய நூல் “இயற்கணிதம்” எனத் தமிழாக்கப்பட்டு வெளிவந்தது.  “வீசகணிதம்” என்ற இன்னொரு நூல் இதே ஆண்டில் வெளிவந்தது.  இதுவும் ‘Algebra’-வைப் பற்றியதுதான்.  இயற்கணிதம், வீச கணிதம் என்பதன் பின்புலத்தில் தமிழ், வடமொழிப் பார்வை இருப்பதை அறியலாம்.  இதன் பின்னர் 1850-இல் மிகப்பெரும் சாதனை இலங்கையில் அமெரிக்கப் பாதிரியாரான டாக்டர் ஃபிஷ்கிறீனால் நிகழ்ந்தது (1852-1884).  இம்மருத்துவர் மேலை மருத்துவ நூல்களுடன் இரண்டு கலைச்சொல் தொகுதியையும் வெளியிட்டார்.  இவர் முயற்சியில் இலங்கைத் தமிழர் களுடன் எழுதிய நூல்கள் “மனுஷ அங்காதிபாதம், இரண வைத்தியம்” போன்ற வடமொழிச் சொல் பெயருடைய நூல்கள்.  இதுபோல வடமொழிக் கலைச் சொற்களையே தம் நூல்களில் மிகையாகப் பயன்படுத்தினார்.  எ.கா. 1. ‘Adenitis’’ கிரந்திரம், ‘Anesthesia’ அசேதனி.  இருப்பினும் டாக்டர் ஃபிஷ்கிறீன் கலைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளுக்கு சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டார்.  இதனை அவர் கூறும் பொழுது

(1) தமிழில் உண்டே என்ற பின் (2) பூரணமான சொல் பெறாத பொழுது... சமக்கிருதத்தில் தேடவும், (3) தமிழிலாவது சமக்கிருதத்திலாவது காணாத போது... ஆங்கிலம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.

இக்கருத்துதான் பாரதியாராலும் வலியுறுத்தப் பட்டது.  ஆனால் கிறீனின் கலைச்சொல்லாக்க அடிப்படைகள் அக்கால மொழி நிலையையும் கல்விப்பயனையும் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டனவாக இருக்க பாரதியார் காட்டும் அடிப் படைகள் மொழிக் கொள்கை பற்றியதாகவும் கல்விப் பயன் பற்றியதாகவும் உள்ளன.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில கலாச்சார மற்றும் ஆங்கிலமொழி எதிர்ப்பு முதலானவை தோன்றின.  விடுதலை வேட்கை கொண்ட இந்தியர்களுக்கு ஆங்கிலேயர் மீது தோன்றிய வெறுப்புணர்ச்சி அவர்தம் மொழியைப் பயன்படுத்துவதில் வெளிப்பட்டது. 

இந்நிலையில் ஆங்கில மொழி எதிர்ப்பும் தமிழ் மற்றும் சமக்கிருத மொழிகளுக்கு ஆதரவும் பெருகின.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.  பாரதியார் “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாகக் காட்டாமல் பெரும் பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அதே தேசியம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக அமையுமென்பதில் ஐயமில்லை.  தேச பாஷையே பிரதானமென்பது, தேசீயக் கல்வியின் பிரதானக் கொள்கை.  இதனை மறந்துவிடக்கூடாது.  தேசபாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாட்டிலிருந்து பரிபூரண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்று தம்பட்டம் செய்து அறிவிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

கிறீனை ஒட்டி தமிழகத்தில் மேலை மருத்துவத்தை ஆயுள்வேதத்துடன் இணைத்து ஏழு நூற்கள் எழுதியவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் டிரசராக வேலைப் பார்த்த மா. ஜகந்நாத நாயுடு.  இவருடைய நூலிலும் வடமொழி கலைச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.  நூற்களின் பெயரும் டாக்டர் கிறீனை ஒத்தே வடமொழிச் சொல்லாக உள்ளது.  எ.கா: பைஷ ஜகல்பம், சாரீரவினாவிடை, பிரசவ வைத்தியம்.  இவர் நூலில் கலைச்சொல் பட்டியலில் நல்ல தமிழ்ச் சொல் இருந்தாலும், வடமொழிச் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அக்காலத்திய சொல்லாட்சியை அறிவுறுத்துகின்றது.  இதற்கான காரணங்களை ஆராயும்பொழுது இவர்களுக்கு மணிப்பிரவாள நடையிலே தமிழ் பயிற்றுவிக்கப் பட்டிருக்கலாம்.  அக்காலகட்டத்தில் வடமொழியே அறிவியல் மொழி என எழுதாத சட்டமாக இந்தியா முழுவதும் நிலவியது.  மேலும் மேலை நாட்டினருக்கு அடுத்ததாக - ஆங்கிலத்தில் தான் கற்ற அறிவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்திய மேல்மட்டத் தமிழர்களும் பெரிதும் வடமொழிச் சொற்களையே கலைச் சொற்களாகக் கையாண்டனர்.  அத்துடன் தொடக்ககாலத்தில் அறிவியல் நூல் களை எழுதியவர்களில் பெரும்பான்மையோர் வடமொழி கற்றவர்களாகவே இருந்தமையால் கலைச் சொல் உட்பட மொழி நடையில் வட மொழித் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது.  இந் நூலாசிரியர்களின் காலத்திற்கு முன்பே ஃபெப்ரி ஷியஸ் (1778), இராட்லர் (1830), வின்சுலோ (1845) ஆகியோரின் அகராதிகள் வெளிவந்துவிட்டன.

இது தவிர டாக்டர் கிறீன் அகராதி பட்டியலில் உவில்சன் என்பவர் இரண்டாம் முறை அச்சிற் பதிப்பித்த சமக்கிருத - இங்கிலீஷ் அகராதியில் இருந்து சில கலைச்சொற்கள் பெறப்பட்டன என்ற குறிப்பும் காணப்படுகின்றது.  அடுத்து இதேபோல் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக சுகாதார வாழ்விற்குப் பலவித இடையூறுகள் ஏற்பட்டுப் பல நோய்களும் சமூகப்பிரச்சனைகளும் பெருவாரியாகப் பரவின.  இங்குத் தோன்றிய தூய்மை குறித்த நூல்கள்.  எ.கா. : சுகாதார விளக்கம் (1869).  இது போல புதிய கண்டுபிடிப்பு நூற்கள், ஆயில் என்ஜின், மோட்டார் ரிப்பேர் ரகசியம் போன்ற நூற்கள்.  இந்நூற்களில் வட சொற்களும், ஆங்கிலச் சொற் களும் கலந்து எழுதப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 1916-இல் கலைச்சொல் உருவாக்கத்திற்கு தமிழ் சாஸ்திர பரிபாஷை சங்கத் தாரின் இதழ், ராஜாஜி மற்றும் வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஆங்கிலத்தில் வெளியிட்டனர்.  இதில் வெளிவந்த சொற்களும் பெரும் பான்மை வடமொழிச் சொற்களே ஆகும்.  (எ.கா. Chemistry = இரசாயன சாஸ்திரம்).

ஆங்கிலத்தில் வெளிவந்த இவ்விதழைப் பாரதி கடுமையாக விமர்சித்தார்.  “ஆரம்பத்தி லேயே தமிழ் எழுதாமல் தமிழுக்கு வேண்டிய இக் காரியத்தை இங்கிலீஸ் பாஷையிலே தொடங்கும் படி நேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாய மாகத் தோன்றவில்லை.”  இதே போல பொறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கரும் Tamil Scientific Term Society - இவர்களுக்கு “ தமிழ் செயன்டிபிக் டெர்ம்சுக்கு” தமிழ் சொற்கள் இயற்றுவதா அல்லது ஆரியத்தில் இயற்றுவதா என்ற கேள்வி எழுந்தது. தமிழ் மொழிக்கு அரபியில் இயற்று வதா ஹீப்ருவில் இயற்றுவதா என்பதாக ஏனோ இவர்கள் கருதவில்லை என்று கொதிப்படைந்து எழுதுகிறார்.  மேலும் இவர் தம் நூலில் வட மொழிக் கலப்பைக் கூடவே கூடாது என்று சொல்லு மிடத்து, “இளமை குன்றாது உயிரோடிருக்கும் செந்தமிழ் மொழியின் கண் உலக வழக்கொழிந்த வடமொழிச் சொற்களைப் புகுத்துவது தெரிந்த நீரோடைக் குட்டத்தில் எருமைகளை ஓட்டிச் செல்வது போலாகும்” என்று தனித்தமிழ் முக்கியத்தை எடுத்தியம்புகிறார்.

1905-ஆம் ஆண்டு மதுரையில் பாண்டித் துரையால் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கம் தமிழ் மலர்ச்சியின் தொடக்கம் எனலாம்.  இக்காலத்தில் தான் பழம் பெரும் நூல் பலவும் கண்டுபிடிக்கப் பட்டன.  இக்காலகட்டத்தில் எதிர் காலனிய இயக்கத்தில் 1900-களில் உள்ளீடாக அமைந்திருந்த ஆரிய ஆதிக்கம் தவிர்க்க முடியாதபடி திராவிடக் கோட்பாடு இயக்கத்திற்கு வழி வகுத்தது.  திராவிடக் கோட்பாடு தமிழ் மொழியின் தூய்மையையும் வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துக்காட்ட விரும்பியது.  இப் போக்குகளின் விளைவாகத் தமிழ்ப்பண்பாட்டின் ஆணிவேரான இலக்கிய மரபு தன் முனைப்புப் பெற்றது.  பொதுமை தமிழ் மறுமலர்ச்சியின் முக்கிய கூறாக அமைந்தது எனப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் சங்கநாதம் தமிழில் கல்வி என்ற மட்டில் நில்லாது தமிழிலே அறிவியல் என விரிந்து தமிழ்மொழி அறிவியல் மொழியாக வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே எழுந்தது.  1900-களில் வெளியிடப்பட்ட கல்விக் கொள்கையின் அடிப்படையில் இயற்கை அறிவியல் பாடம் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக நூலாசிரியர்கள் ஐரோப்பியர் களாகவோ மிசினெரிகளாகவோ அமைந்திருந்த நிலை மாறி இக்காலகட்டத்தில் பெரும்பாலான நூல்கள் தமிழ் மக்களால் எழுதப்பட்டன.  1920-களில் தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் மறை மலை அடிகளால் துவங்கப் பெற்றது.  அதன் காரண மாக வடமொழி எதிர்ப்பு தீவிரமடைந்து, இதன் பிறகே தனித்தமிழுக்கான மடை மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டது.

1932-இல் தமிழ் 8-ஆம் வகுப்பு வரை பாட மொழி ஆக்கப்பட்டதின் விளைவாக தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிக்கு உதவியாக சென்னை அரசு ஒரு கலைச்சொல் குழுவை அமைத்து சுமார் 7,400 கலைச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.  இதில் பெரும்பாலான கலைச் சொற்கள் வடமொழியாகவும், ஆங்கிலமாகவும் இருந்தன.  சில மிகவும் நீண்ட சொற்களாக இருந்தன.  சான்றாக Analytical Chemistry - விபேதன ரஸாயன நூல்.  Census Report - குலஸ்திரீ புருஷ பாலவிருத்த ஆயவ்யய பரிமாண பத்திரிகை. 

Sexual Reproduction - லிங்க விருத்தி Spinal Cord - சுசேருவதை.  Airway - வாயுபாதை, Rail - தூமச் சக்கரம்.  இதன் பயன்பாடு மிக குறைவாக உள்ளது என்பதை சென்னை மாதிரிப்பள்ளியின் தலைமை யாசிரியர் டி.கே. துரைசாமி சாஸ்திரி “அரசாங்கம் கலைச் சொற்பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  இதிலுள்ள சொற்கள் நீளமானதாகவும், சமஸ் கிருதமாகவும் உள்ளதால் எளிமையாகப் பயன் படுத்த முடியவில்லை.” (தினமணி 09.04.1935) என நாளிதழில் எழுதியது போல் பலரும் எடுத்துக் காட்டினர்.

இந்நிலையில் தனித்தமிழ் ஆதரவாளர்கள், அமைப்புகள் வாயிலாக கலைச் சொல்லாக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.  அரசு கலைச் சொல் பட்டியலுக்கு மாற்றாக பா.வே.  மாணிக்க நாயக்கர், காழி. சிவ. கண்ணுசாமி இருவரும் தமிழ் அறிவியல் சொற்கள் பலவற்றைச் செந்தமிழ் செல்வி வாயிலாக (தொகுதி - 10, 1932, 33) வெளியிடத் தொடங்கினர்.  தமிழ் அளவை நூற் சொற்களை மா. பாலசுப்பிரமணியம் செந்தமிழ் செல்வியில் (தொகுதி-13, 14-1935) வெளியிட்டார்.  1932-இல் வெளியான அரசுக் கலைச்சொல் பட்டியலில் காணப்படும் குறைகளை நீக்கி எளிதில் புரியும் வகையில் தமிழ்ச் சொற்களைக் கொண்ட கலைச் சொல் பட்டியல் ஒன்று தயாரிக்கும் பணிக்காகச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் (திருநெல்வேலி) ஒரு கலைச்சொல் குழுவை 01.10.1934-ல் அமைத்தது.  இதன் முதற் கூட்டம் 29.09.1935 அன்று திருநெல் வேலியில் நடைபெற்றது. அந்நிலையில் இக்கழகத் தலைவராக இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்கு மணப்பிள்ளை செயல்பட்டார்.

அறிவியல் துறைச் சொற்கள் ஒன்பது நாட்கள் ஆராயப்பட்டன.  இதன் பயனாக 20.09.1936-இல் கலைச் சொல்லாக்க மாநாடு சென்னையில் நடை பெற்றது.  இம்மாநாட்டை ஒட்டி பல துறை சார்ந்த 5,300 கலைச் சொற்கள் அடங்கிய பட்டியல் வெளி யிடப்பட்டது.  இதிலுள்ள கலைச் சொற்களைத் திருத்திச் செம்மைப்படுத்த உதவிய அறிஞர்கள்: விபுலாநந்தர், இராஜாஜி, கே.எஸ். இராமசாமி ஐயர், வைத்தியநாத சுவாமி, சீனிவாசராகவன், கி.மு. சுப்பிரமணியப்பிள்ளை, டி.எஸ். வேலாயுதம் பிள்ளை, எம்.எஸ். சபேச ஐயர், எஸ். மணவாள இராமானுசம், தேவநேயப் பாவாணர், டி.எஸ். நடராஜப் பிள்ளை, அ. முத்தையாப்பிள்ளை, டி. செங்கல்வ ராயப் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, அ.கி. பரந்தாமனார், என். சுப்பிர மணிய ஐயர், எஸ். சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் களாகும்.

தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டோர்களால் இக்காலத்தில் தனித்தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்பெற்றன.  ஏனெனில் பிறமொழிகளி னின்றும் கடன் வாங்கித் தமிழ் மொழியை உரு மாற்றி உயிரற்றதாக்கக் கூடாது.  பிறமொழி ஓசை தமிழ்மொழி ஓசைக்கு மாறுபட்டது.  தமிழ் இலக்கணத்திற்கும் தமிழ் இசைக்கும் பிற மொழி ஒத்து வராது என்பது இவர்கள் கருத்து.  எனவே தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்துதல், இலக்கியச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வருதல், சமக்கிருதம் மற்றும் ஆங்கிலச் சொற்களை, குறிப்பாகச் சமக்கிருத சொற்களைப் புறக் கணிப்பது ஆகியவை இவர்கள் நோக்கமாக இருந்தது.

இதன் பயனாக அக்கால நூலாசிரியர்களும் கட்டுரை ஆசிரியர்களும் பல தமிழ்ச் சொற்களைப் புதிதாக ஆக்கிக் கட்டுரை படைத்தனர்.  எ.கா. : Aluminium- சீனாயம், Calcium - நீறியம் இவை புதிதாகப் படைக்கப்பட்ட வேதியல் சொற்கள்.  இவ்வாறு உலகப்பொதுச் சொற்களுக்கும் கூடத் தமிழ்ச் சொற்களைத் தேடும் முயற்சியில் அக்கால ஆசிரியர்கள் பலரும் ஈடுபட்டனர்.

இதன் பயனாக:

சரீர சாஸ்திரம் ழூ உடலியல் ஆயிற்று

பிராணவாயு ழூ உயிர்வளி ஆயிற்று

1936இல் வெளிவந்த கலைச்சொல் பட்டியலின் மறுபதிப்பு 1938-இல் வெளிவந்தது.  இதில் கூடுதலாகச் சொற்கள் (சுமார் 10,000) வேளாண்மைச் சொற்களுடன் சேர்த்து வெளியிடப்பட்டது.  அப் போதைய சென்னை அரசு தமிழ்ச்சங்கம் தயாரித்த இக்கலைச்சொல் பட்டியலைப் பள்ளிகளில் பயன் படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.  இது தனித்தமிழ் இயக்கத்தினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றால் மிகையில்லை.  இம் மறுபதிப்பு பட்டியலுக்கு இராசாசி முன்னுரை வழங்கினார்.  இதில் அவர் “பழைய கலைச்சொற்களைத் தேடித் திரட்டுவதும் புதிய சொற்களை ஆக்குவதுமான இந்தப் பணியை, தனித்தமிழ் இயக்கத்துடன் கலந்து கலவரமுண்டாக்கிக் கொள்ளுதல் தவறாகும்.  தமிழில் கலந்து கொள்ளும் தன்மை கொண்ட சமஸ்கிருத மொழிகளைக் காரணமின்றி வெறுத்தல் கூடாது.  தனித்தமிழ் வெறியும், வடமொழி மோகமும் - இரண்டும் இந்தத் தமிழ்ப் பணிக்குத்  தடை களாகும்” என்று எழுதி இருந்தார்.

1937-இல் இராசாசி “ தமிழில் முடியுமா” என்ற நூலை வெளியிட்டார்.  இது ஆங்கிலத்தில் Dr. Kimballi எழுதிய College Text Book of Physics என்ற நூலைத் தழுவியதாகும்.  இந்நூலில் பயன்படுத்தி யுள்ள கலைச்சொற்கள் பெரும்பாலானவை தூய தமிழ்ச் சொற்களாகும்.  எ.கா. : Bi-cycle - மிதிவண்டி, Direction - செல்திசை, Density - செறிவு, Heat - கனல், Liquid - நீரி, Motion - இயக்கம், solar day - பரிதிநாள், solid - திண்மம்.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது: ஆரம்ப காலத்தில் கலைச் சொல்லிற்காக ஆங்கில இதழை ஆரம்பித்து, அதில் வடமொழிச் சொற்களுக்கு முதலிடம் கொடுத்த இராசாசி, பிறகு தனித்தமிழ் வெறி கூடாது என்று கூறியவர், தம் நூலில் மிகச் சிறப்பான தூய தமிழ்ச் சொற்களைப் படைத்திருப்பதும் தனித்தமிழியக்கத்தின் வெற்றி எனக் கொள்ளலாம்.

சென்னை அரசு 1940 ஜூன் மாதத்தில் சீனிவாச சாஸ்திரி தலைமையில் ஒரு கலைச்சொல்லாக்கக் குழுவை அமைத்தது.  இக்குழு செய்த பரிந்துரை களில் ஒன்று இந்தியா முழுவதுக்கும் பொதுவான கலைச் சொற்களை உருவாக்க முயல வேண்டும் என்பது ஆகும்.  (தமிழ்ப் பொழில் 1940--41 16:7, பக்.248).  இக்குழுவைக் கண்டித்துப் பல கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.  ஏற்கெனவே வெளியான சென்னை மாகாணத் தமிழ் சங்கத் தாரின் கலைச்சொல் பட்டியல் இருக்கும் போது இக்குழு தேவையற்றது என்றும், இக்குழுவில் தமிழறிஞர் யாரும் இடம் பெறாதது கண்டிக்கத் தக்கது என்றும், இக்கூட்டங்களில் வலியுறுத்தப் பட்டன.  இதன் பலனாக இரா. பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிரமணியப்பிள்ளை, அ. முத்தையா முதலிய தமிழன்பர்கள், பின்னர் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இக்கால கட்டத்தில் அறிவியல் நூல்களை எழுதியவர்கள் பெரும்பான்மையோர் பொது நலத்தில் அக்கறை கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர்.  ஆ.கே. விசுவநாதன், ஈத. ராஜேஸ்வரி ஆகியோர் இயற்பியல் துறையிலும், ஜி. ராஜ கோபால் நாயுடு, மு. அருணாசலம், ரங்காச்சாரி தாவரவியல் துறையிலும், ச.கு. கணபதி தாவர வியல், விலங்கியல் ஆகிய இரு துறைகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளனர்.

இது தவிர கிறித்தவ இலக்கிய சங்கம் 1967-லிருந்து 8 மருத்துவ நூல்களையும், உடைபடாத சோவியத் யூனியனிலிருந்து மிர் மற்றும் முன்னேற்றப் பதிப்பகத்தின் மூலம் மருத்துவ நூல்கள் நான்கும் 12 அறிவியல் நூல்களும் வெளிவந்துள்ளன.  இது போல என்.சி.பி.எச். புத்தக நிறுவனத்தின் மூலம் 1951-1985 வரை 22 அறிவியல் நூல்கள் வெளி வந்துள்ளன.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1959-இல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  1960-இல் அன்றைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் முயற்சி யால் கல்லூரிகளில் தமிழ் பாடமொழியாயிற்று.  இப்படிப்புகளுக்குத் தேவையான பாடநூல்களைத் தயாரிக்க தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த நூல்கள் ஏப்ரல் 1977 முடிய வெளியிட்டது.  இதில் 70 விழுக்காடு அறிவியல் சார்ந்தவையாகும்.

1981-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப் பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ்த் துறை என்ற புதிய துறை உருவாக்கப் பட்டது.  இதன் வழியாக 15 மருத்துவ நூல்களும் 14 பொறியியல் நூல்களும் எழுதி வாங்கப்பட்டன.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற் களுடன் கலந்து இருக்கும் பிற மொழிச் சொற் களுக்கு இணையான கலைச்சொற்களை அகர முதலித் துறையானது சொல்லாய்வறிஞர் ப. அருளியினால் அயற்சொல் அகராதி வெளி வந்துள்ளது.  இதில் பல மொழிச் சொற்களுக்குத் தமிழில் புதுச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன.  எ.கா. : அமிலம் (சமஸ்கிருதம்) - புளிகம், அரோரூட் (ஆங்கிலம்) - அம்புக்கிழங்கு, சவுக்கு (உருது) - குச்சிலை மரம், பேரிக்காய், (ஆங்கிலம் + தமிழ்) - நீரிக்காய், மகரந்தம் (சமஸ்கிருதம்) - பூந்தாது.

இதே காலகட்டத்தில் தினமணி நாளிதழின் சனிக்கிழமை இணைப்பு இதழான திணமணிச் சுடரில் சொல்லாக்க மேடை என்னும் பகுதியில் தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதிய ஆசிரியர்கள் பயன்படுத்திய கலைச் சொற்களுள் ஏற்புடைய கலைச்சொற்கள், ஏற்க இயலாத கலைச்சொற்கள், பொருத்தமான புதிய கலைச்சொற்கள் ஆகியவை குறித்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் விவாதம் இடம் பெற்றன. இதனைச் செம்மை செய்தவர் கரூர் முனைவர் அ. செல்வராசு.  இவரது முயற்சி யால் நல்ல சொற்கள் உருவாகின.  எ.கா. : ஆல்கா - பாசிகள்.

கலைச் சொற்களை உருவாக்குவதில் திருவேங்கடம் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணியாற்றிய முனைவர் ந. சுப்பு ரெட்டி யார், 15 அறிவியல் நூற்களை எழுதி அதில் வரும் கலைச் சொற்களையும் அறிமுகம் செய்த பெருமை அவருக்கு உண்டு.  எ.கா. : Sensor - உணர்வி, Genetic - கால்வழி இயல், Yolk - கருப்பொருள்.

களஞ்சியங்கள்:

1947-இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் சென்னையில் அறிவியல் மற்றும் வாழ்வியலை உள்ளடக்கிய கலைக்களஞ்சியம் தயாரித்தது.  இப்பணி 1968-இல் நிறைவுற்று 10 தொகுதிகள் வெளிவந்தன.  1972-இல் 10 தொகுதிகள் சிறுவர் களஞ்சியம் வெளியாயின.  இதற்குப் பெரிதும் துணை நின்றவர் இக்கழகத்தின் தலைவர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார்.  1990-இல் இக்கழகத்திற்கு வா.செ. குழந்தைசாமி தலைமைப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவக்களஞ்சியம் 12 தொகுதியும், 13-ஆம் தொகுதி, கலைச்சொல் அடைவாகவும் வெளிவந்தது.  பிறகு சித்த மருத்துவக் களஞ்சியத் தொகுதிகள் ஏழு வெளிவந்தன.  இது தவிர 4 அறிவியல் நூற்களையும் வெளியிட்டுள்ளது.

இது போலவே தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் 10 அறிவியல் களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன.  இத்தொகுதிகள் ஒவ்வொன்றிலும் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் கலைச் சொற் பட்டியல் உள்ளன. அறிவியல் தமிழாக்க முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பயன்படும் முறையில் இது அமைந்துள்ளது.

அகராதிகள்:

அறிவியல் நூற்கள் எழுதுவதற்கு அகராதி இல்லையே என்ற குறையை நிறைவு செய்யும் விதமாக டாக்டர் ஏ. சிதம்பரநாதன் செட்டியாரைக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் வெளி யிட்ட ஆங்கிலம் - தமிழ் அகராதியில் நூற்றுக் கணக்கான தூய தமிழ் அறிவியல் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.  இச்சொற்களே சிதம்பரநாதரின் தனித்தமிழ்க் கொள்கைக்குச் சான்றாவன.  இதற்கான காரணத்தை “தமிழ் நாடோறும் பிற மொழிக் கலப்பே பெற்றுவிட்டால் முடிவில் தமிழ்ச் சொற்கள் சுருங்கிச் சுருங்கிப் பிற சொற்கள் பல்கிப் பெருகிவிடும்.  அதனால் அடுத்த நூற்றாண்டில் தமிழைப் பார்க்கும் ஒருவன் தமிழ் என ஒரு தனி மொழி இல்லை, எனவே கூறத்தலைப்பட்டு விடுவான்.  தமிழ் உரைநடை வழக்கிலும். பேச்சு வழக்கிலும் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக

வடமொழிச் சொற்களை வழங்கி வந்தால் தமிழ் வடமொழியினின்றே பிறந்தது என்பார் கூற்று நாளடைவில் வலுத்துப்போம்” என்று தனித் தமிழின் தேவையை விளக்கி எழுதியுள்ளார்.  இதன் பிறகு 1994 இல் மருத்துவ அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி மணவை முஸ்தபாவினால் வெளிவந்துள்ளது.  1994-இல் அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி, 1996-இல் டாக்டர் சாமி சண்முகத்தின் மருத்துவ கால்நடை, சட்டச் சொற்கள் அடங்கிய அகராதி, 2000-இல் டாக்டர் சம்பத் குமாரின் ஆயுர்வேத, அலோபதி, ஹோமியோபதி கலைச்சொற்கள் அடங்கிய அகராதியும் பயன்பாட்டில் உள்ளன.  இத்துடன் முனைவர் நே. ஜோசப் தொகுத்த மருத்துவக் கலைச் சொற்கள் அகராதியும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளிவந்துள்ளது.  இவ்வகராதிகள் இன்று தமிழில் அறிவியல் கட்டுரை எழுதுபவர் களுக்கு மிகவும் உதவிக்கரம் நீட்டுகின்றன.

தனித்தமிழ் இயக்கத்தால் அடைந்த பயன்:

(1) தனித்தமிழ் இயக்கத்தின் செயல்பாட்டின் விளைவாக என்ன பயன் அடைந்தோம் என்று பார்க்கும் பொழுது ஏ. சிதம்பர நாதனார் கூற்றுப்படி “வடமொழிக் கலப்பு 50 விழுக்காட்டிலிருந்து 20-ஆகக் குறைந்துள்ளது.”

(2)வழக்கில் இருந்த மணிப்பிரவாள உரை நடை வழக்கு ஒழிந்துள்ளது.

(3)1987-இல் மலேசியாவில் உள்ள கோலா லம்பூரில் “அறிவியல் தமிழ்” கருப்பொருளோடு கூடிய அறிவியல் தமிழ் பன்னாட்டு மாநாடு நடைபெற்றுள்ளது.

(4) 1932-இல் தோன்றிய தனித்தமிழ் எழுச்சியின் காரணமாக 1936-க்குப்பின் தூய தமிழ்ச் சொற்கள் மிகையாயின.  1940-47-இல் மீண்டும் வடமொழிச் செல்வாக்கு ஓங்கினும், அதற்குக் கண்டனம் இவ் வியக்கத்தினர் தெரிவித்ததால், 1959-இல் கல்லூரித் தமிழ் குழு அமைக்கப்பட்டது.  இக்குழு கீழ்க்காணும் நெறிகளைப் பின் பற்றியது.

(அ)  இயன்றவரை உலகளாவிய கலைச்சொற் களைப் பயன்படுத்துதல் தேவையான அளவுக்கு இவற்றைத் தமிழாக்குதல்.

(ஆ) நன்கு அறியப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல்.

(இ) அவ்வாறு தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் போது ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் தருதல்.  இக்கல்லூரித் தமிழ்க்குழு உடனடியாக உலகளாவிய ஆங்கிலச் சொற்களை எடுத்தாண்டாலும், காலப்போக்கில் அச்சொற்கள் தமிழாக்கப் பட்டன என்பது வரலாறு.

(5) புதுச்சொற்கள் வரவு எ.கா. : Anatomy என்பது டாக்டர் கிறீன் நூற்படி “மனுஷ அங்காதிபாதம்” என்றும், இடையில் அனாடமி, சரீர இயல், சாரீரம், மெய்யியல் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற் பொழுது உடல் கூறு இயல், உடல் கூறியல் என்று பயன்பாட்டில் உள்ளது.

(6) பழஞ்சொல் மீட்பு - Chemistry என்பதற்கு இரசாயனம் எனக்கூறப்பட்டு வந்தது, இது வேதியல் ஆனது.  வள்ளலார் இறை வனுடன் வேதித்தேன் என்று கூறுவது இங்கு நினைத்துப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

(7) புதிய அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன.  சான்றாக சென்னை மாகாண தமிழ்ச்சங்க கலைச்சொல் அகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல்பொருள் ஆங்கிலத் தமிழ் அகரவரிசை, அப்பாஸ் மந்திரியின் பொறியியல் குறியீடு.  பழனிவேலனாரின் பிறமொழி தமிழ் அகர முதலி, பாவாணர் செந்தமிழ் சொற் பிறப்பியல் அகர முதலி.  ப. அருளியின் அயற்சொல் அகராதி.

இவைகள் அனைத்தும் அறிவியல் தமிழ், தனித் தியங்கும் ஆற்றலும், தூயமொழி இயல்பும் கொண்டது என்பதை நிரூபிக்கின்றது.  இது தனித் தமிழ் இயக்கத்தின் இடைவிடா போராட்டத்தின் காரணமாக நிகழ்வுற்று வருவதாக அறிய முடிகின்றது.

தனித்தமிழ் இயக்கம் செய்ய வேண்டியது:

(1)தமிழ்ப் பாட நூல் நிறுவனம் 1977-இல் தனது நூல் வெளியிடும் திட்டத்தை கை விட்டுவிட்டது.

(2) முதுமுனைவர் வ.ஐ. சுப்பிரமணியத்தின் தொலை நோக்கால் தமிழ்ப்பல்கலைக் கழக அறிவியல் தமிழ்த் துறையினரால் எழுதி வாங்கப்பட்ட 14 மருத்துவ 13 பொறியியல் நூற்களில் இன்று வரை (2017) பாதி அளவு கூட வெளிவரவில்லை.

(3)இதே பல்கலைக்கழகத்தில் அறிவியல் பண்ணை என்ற அமைப்பு மூலம் அறிவியல் தமிழ்த் துறையினர் அறிவியல் தொடர் பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அப்பொருட்கள் நூலாக வெளிவந்தது.  துணைவேந்தர் முதுமுனைவர் வி.ஐ. சுப்பிர மணியம் ஓய்வு பெற்ற பிறகு அப்பண்ணைக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்திக் கொண்டது.  இதனால் நூற்களும் வெளி வருவதில்லை.

(4) இதுபோல முந்தைய தமிழக அரசு மருத்துவ அறிவியல் கருத்தரங்குகளை நடத்தியது.  இது தொடரப்படவில்லை.  மேலும் முந்தைய அரசு வெளியிட்டு வந்த “அறிவியல் தமிழ்” மாத இதழைத் தொடர்ந்து வெளிக்கொணரவில்லை.  இவைகளினால் பல்கிப் பெருகி வெளிவர வேண்டிய அறிவியல் நூற்கள் வெளி வராது போய்விட்டன.

பரிந்துரை:

இதனைக் களையும் விதமாக மேலே கூறப் பட்ட நிறுவனங்கள் மீண்டும் தங்கள் நிர்வாகத்தின் மூலம் நூற்களை, இதழ்களை கருத்தரங்குகளை நடத்த தனித்தமிழ் இயக்கம் குரல் கொடுத்து மீண்டும் இச்செயல்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்ட ஆவன செய்ய வேண்டும்.

இது தவிர அறிவியல் நூல்கள் எழுதுவோர்க்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் கலைச்சொல் தீர்வகம், மொழிபெயர்ப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.  இத்துடன் மொழிக்கலப்பைத் தடுக்க தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதழ்களில் நல்ல தமிழ் எழுத்தாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.  மேலும் கண்காணிப்பு இயக்கமும் நடைபெற்று உதவ வேண்டும்.  இதை வெற்றி கரமாக சிங்கப்பூர் தொலைக்காட்சி நடைமுறைப் படுத்துவது இங்குக் கவனிக்கத்தக்கது ஆகும்.  இவைகளை எல்லாம் அரசு நடைமுறைப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அரசை வற்புறுத்த வேண்டும்.

இத்துடன் (1) பிறமொழி சொற்களுக்கான அகராதி, (2) மேற்கோள் அகராதி, (3) வட்டாரச் சொல் அகராதி ஆகியவைகளை உருவாக்க செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

உலகில் எந்த மூலையாயினும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு நடந்தவுடன் அதற்கான சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைத் தனித் தமிழில் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

அறிவியல் நூல்கள் தமிழில் வெளிவருவதற்கு முன் தமிழறிஞர், மொழி அறிஞர்கள் அந்நூலைத் தனித்தமிழில் வெளிவர உதவ வேண்டும்.  மேற் கூறப்பட்டவைகள் அனைத்தும் தனித்தமிழில் அறிவியல் நூல்களை எழுத பேருதவியாக இருக்கும்.  ஆனால் இத்தனையும் இருக்கும் பொழுது நூல்களுக்கான தேவை பெருக வேண்டும்.  வரலாற்றை உற்று நோக்கினால் கல்லூரியில் தமிழ் பாட மொழியாக்கப்பட்ட பிறகு அது தொடராது போன நிலையில் தமிழ்ப்பாட நூல் நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நூல்களை வெளியிடாது நிறுத்திவிட்டன.  இதனை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த் துறை முழு மூச்சோடு செயல்படுத்த தமிழியக்கங்கள் போராட வேண்டும்.

தமிழக அரசால் பொறியியலுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்ற பிறகும்கூட அகில இந்திய தொழில் நுட்பக்கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE)  தமிழ்வழி பயிற்றுவிக்க இசைவளிக்கவில்லை என்று கூறி மாணவர்களுக்கு தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்தப்பட்டது.  இவற்றின் ஒப்புதல் தேவையெனில் அதற்கான முயற்சியை அரசே முன்னின்று பெறுவதோ, அல்லது ஏதேனும் இது குறித்தான சிக்கல்களைக் களையச் சட்டத்திருத்தம் தேவையெனில் கல்வி யாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோ சனையின் அடிப்படையில் சட்டத் திருத்ததைத் தையும் கொண்டு வரலாம்.

இறுதியாக முதலமைச்சராக எம்.ஜி. ராமச் சந்திரன் பதவி வகித்த காலத்தில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் சட்டத்தின் மூலம் அமுல் படுத்தப்பட்டதால், எல்லா இதழ்களும், கணிப் பொறியும், தங்களை மாற்றிக்கொண்டு தற் பொழுது அச்சீர்திருத்தத்தின்படியே வெளிவரு கின்றன.  அதுபோல எல்லா நிலைகளிலும் தமிழைப் பாடமொழியாக்க வேண்டும்.  தேவை மிகையாகும்போது மொழி வளர்ச்சியும் மிகை யாகும்.  இதற்கு ஆட்சியின் ஒத்துழைப்பு தேவை.

இதைத்தான் பாரதிதாசன்;

“தமிழ்க்கல்வி தமிழ் நாட்டில் கட்டாயம் என்பதோடு சட்டம் செய்க” என்று கூறுகிறார்.

Pin It