பெரியமனுஷன்: பால்... தாய்ப்பால்… முதல்பால்… தமிழ்ப்பால்… அப்பால் முப்பால்…

விக்கிரமன்: என்னண்ணே குஷியாய் பால் பால் என்று பாடிக்கொண்டு வருகிறீர்கள், ஏதும் விசேஷம் உண்டா?

பெரியமனுஷன்: ஆமப்பா! பசியால் களைத்திருந்தேன். நண்பர் ஒருவர் பருத்திப் பால் என்று ஒரு பானம் தந்து பருகச் சொன்னார். என்னருசி! என்ன மணம்! உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வந்தது தம்பி. அதான் பாட்டும் வருகிறது.

விக்கிரமன்: பாதாம்பால், பனம்பால், தேங்காய்ப் பால் இப்படி ஏதும் தரவில்லையா உமக்கு?coconut milk 700மலர்விழி: என்ன பனம்பாலா? பருத்திப்பாலா? இவையெல்லாம் புதிதாக உள்ளதே, ஏதும் நகைச் சுவையோ? பசும்பால், ஆட்டுப்பால், எருமைப்பால் அறிவேன், தாய்ப்பால், தமிழ்ப் பால், முப்பால் எல்லாம் நம் உயிர்ப்பால், ஐம்பால் தெரியும், பால்மனம் புரியும், ஆயின்,,,

பெரியமனுஷன்: அன்பால், பண்பால் உயர்ந்த மனிதர்கள் பற்றியும் கேள்வி. வெறுப்பால் வீழ்ச்சி என்றும் தெளிவேன். மனக்கசப்பால் பிரிவு என்றும் அறிவேன். ஆனால்…

விக்கிரமன்: ஆலமரம், வேப்பமரம், அரசமரம், அத்திச்செடி, கள்ளிச்செடி, எருக்கு, ஊமத்தை போன்றவற்றிலிருந்து பட்டை, தண்டு, காய்களில் பால் வடியும். சிலது மருந்து. சிலது விஷம். இந்த பால்கள் பிசுபிசுப்பாக இருக்கும்.

வீரப்பிரதாபன்: பெருங்காயம் என்பதும் ஒருவித மரத்தில் இருந்து பட்டையைக் கீறி வடியும் பால் போன்ற பிசின்தானே. இரப்பர் மரத்திலிருந்து வடித்தெடுக்கும் லாடெக்ஸ் பால் தான் இரப்பர். பாதாம் மரத்திலிருந்து பெறும் பிசின் பாலல்ல. பாதாமை அரைத்துப் பெறுவது பாதாம்பால். முந்திரிக் கொட்டையிலிருந்து வடியும் பால் காரச் சுவை உடையது. பலனேதும் குறிப்பிடும் படி இல்லை. கோதுமையை அரைத்து பால் எடுத்து அல்வா செய்யலாம். முந்திரி அல்வாவும் அப்படியே.

மலர்விழி: வெளுத்ததெல்லாம் பால் அல்ல. பனைமரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்தான் என்று உலகம் கருதும். பாலென்றாலே வெண்மை நிறம் தானே?

பெரியமனுஷன்: நான் பருகித் தெம்பு பெற்ற பருத்திப்பாலை மறந்து விட்டீர்களே… அதைப்பற்றி ஏதும்…

வீரப்பிரதாபன்: தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் நவீன முப்பால்களில் ஒன்று பருத்திப் பால். கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து பெறும் கரும்புச்சாற்றை கரும்புப்பால் அல்லது ஆலைப்பால் என்பர். மாம்பழப்பிழிவை மாங்காய்ப் பால் என்பதுண்டு. பனம்பாளை வடிநீரை பனம்பால் என்பர்.

விக்கிரமன்: ‘மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்பவர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி‘ என்று ஒரு சித்தர் பாடல் கேட்டுள்ளேன். ஆப்பத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து நாலைந்து வெளுத்துக் கட்டுவார் பெரியமனுஷன்.

மலர்விழி: நானும்தான். ஏன் நீயும் இவரும் எல்லாரும்தான் வெளுத்துக் கட்டுவோம்.

வீரப்பிரதாபன்: மலர்விழி கூறிய விலங்கினப் பால் தவிர கரப்பான் பூச்சிப்பால் என்றும்…

பெரியமனுஷன்: உவ்வே! கரப்பான் பூச்சிப் பாலா? அதைப்பற்றி பேசவேண்டாமே…

வீரப்பிரதாபன்: அறிவியல் முறையில் அணுகலாம். வெறுப்பு வேண்டாம். பொதுவாக, கரப்பான் பூச்சிகள் தங்களின் குட்டிகளுக்குத் தேவையான உணவை சோதனை செய்து, ஆய்வு செய்தனர். அப்பால், அதிசக்தி கொண்டது எனவும், மனிதருக்கு அதை ஊட்டச்சத்துணவாக பயன்படுத்தலாமெனவும் கண்டனர். அப்பால், எருமைப்பாலைவிட மும் மடங்கு சக்தியும் ஊட்டச்சத்தும் நிறைந்தது என்கின்றனர். விரைவில் கரப்புப்பால் பாக்கெட் வரும் வாய்ப்பு உள்ளது.

பெரியமனுஷன்: குமட்டுகிறது. அதைவிடு தம்பி. தாவரங்களின் பால் பற்றி ஏதேனும் புதிய உருப்படியான தகவல்...

விக்கிரமன்: அபிதான சிந்தாமணி எனும் பழைய நூலில் வீட்டில் வளர்க்க வேண்டிய பயனுள்ள மரங்களைப் பாடலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பருத்தியகத்தி, பனையெட்டி, நாவல், எருக்கு, முருக்கிய்யவையெட்டும் பெருக்கமுடன் இல்லருகி நின்றக்கால் இந்திரனேயானாலும் செல்லப்போய் நிற்பான் திரு‘ என்று பருத்திச்செடியை வீட்டில் வளர்க்கப் பரிந்துரை செய்கிறது.

வீரப்பிரதாபன்: அறுபது ஆண்டுக்கு முன்பு கிராமங்களில் வீடுகளில் பருத்திச்செடியை வளர்த்தனர். வீட்டிலேயே பருத்திப்பால் காய்ச்சிக் குடித்தனர். சிறியவர், பெரியவர் எல்லோரும் பருத்திப்பால் சுவைக்கலாம். ஆறுமாதக் குழந்தைக்கும் ஏற்றது. காய்ச்சலில் இருந்து மீண்டவர் உடல்வலு மீட்த பருத்திப்பால் தரலாம். விரதம் முடித்த பின் குடிக்கலாம். ஆயின், பருத்திப்பால் குடிக்க சிறுவயதிலேயே பழகவேண்டும். உடல் ஏற்றுக்கொண்டால் பொலிவுடன் திண்மையாக, கட்டமைப்புடன் இருக்கும்.

விக்கிரமன்: அக்காலத்தில் தெருக்களில் விற்பார்கள். ஈயம் பூசிய செப்புக் குடத்தைப் புளி, மண் கொண்டு தேய்த்துத் திருநீற்றுப்பட்டை அடித்து, குங்குமப்பொட்டு வைத்து களையான குடத்தில், சுக்கு, வெல்லம், ஏலக்காய் மணக்கும் பருத்திப்பாலைச் சுமந்து தெருவில் விற்பார்கள். சுவையோ சுவை.

பெரியமனுஷன்: பருத்திப்பால் பருத்தியின் எந்தப் பகுதியில் இருந்து கிடைக்கிறது? பருத்திப் பூவிலிருந்தா?

வீரப்பிரதாபன்: பருத்திக்கொட்டை கால் கிலோ உடைத்துப் போட்டு எட்டுமணி நேரம் ஊறவிட்டு நீர் வடித்து, தேங்காய் துருவி போட்டு அரைத்து பால் எடுப்பர். வெல்லத்தை தூள் செய்து நீர் சேர்த்துப் பாகு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வடிகட்டிய பருத்திப்பாலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, இறக்கும்போது சுக்கு, ஏலக்காய் பொடி போடுவர். ஐந்துபேர் வரை அளவாக குடிக்கலாம்.

மலர்விழி: ஆனால் பருத்திக்கொட்டை இக்காலத்தில் எளிதில் கிடைக்குமா?

விக்கிரமன்: சந்தேகம்தான். பருத்திப் பாலுக்கு நிகரான மற்றொரு பால் பருப்புப்பால். மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கும். அனைத்து வித சத்துகளை அடக்கிய இயற்கைத்தாவரப்பால் அது.

பெரியமனுஷன்: செய்முறை எப்படி?

விக்கிரமன்: எளிமை. பாலூட்டும் தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்றது. தாய்ப்பால், பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருக்கும். அவர்களுக்கும் இந்த பருப்புப்பால் ஏற்றது. சிக்கல் இல்லை.

மலர்விழி: எப்படி தயாரிப்பது என்று சுருக்கமாக விளக்கலாமே.

விக்கிரமன்: ஏழெட்டு காய்ந்த வேர்க் கடலைப்பருப்புடன், நான்கு பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, இருபது கிராம் மக்காச்சோளம் இவற்றை இரவில் ஊறவைத்துவிட்டால், காலையில் எண்ணெய்த்தன்மை நீங்கி முளைவிடும் பக்குவம் வந்து முழு ஆற்றல் பெற்றுவிடும். பிறகு அந்த…

வீரப்பிரதாபன்: கொட்டைகளுடன் புதிய நீர் சேர்த்து, சிறிது தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து வடித்தால் நுரையுடன் கிடைக்கும் பாலை நேரடியாக குடிக்கலாம். அடுப்பில் சூடேற்றி பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம். முதலில் சிறிது பருகி உடலைப் பழக்கிய பின் வேண்டிய அளவு குடிக்கலாம். சுவையான ஆரோக்கியம், இயற்கை முறையில்.

மலர்விழி: அயல்நாடுகளில் இதுபோல் ஏதும் ஆரோக்கியமான இயற்கையான தாவரப்பால் உண்டா?

பெரியமனுஷன்: சுவையாகவும் சத்தாகவும் இருக்கவேண்டும். தயாரிக்க எளிதாகவும் இருக்கவேண்டும்.

வீரப்பிரதாபன்: எட்டுமணிநேரம் சோயா விதைகளை ஊறவைத்துப் பிழிந்து அரைத்து சோயாப்பால் எடுக்கின்றனர். சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் சோயாப்பால் பிரபலம். அதிகம் பயன்படுகிறது. சத்தும் ருசியும் மிகுந்த அடர்த்தியான சோயாப் பாலை குழந்தைகளும், நோயாளிகளும், முதியோர்களும் குடிக்கலாம். இரண்டு வயதுக் குழந்தைகளுக்கு, பசும்பாலுக்குப் பதிலாக ஒருவேளை சோயாப்பால் தருகின்றனர். சத்துணவு, சுவையுணவு.

மலர்விழி: அதாவது மாட்டுப்பாலுக்கு மாற்றுப்பால். சரி. தாய்ப்பால் தரும் தாய்மார்கள் குழந்தைக்கு…

விக்கிரமன்: குழந்தையைப் பொறுத்த வரை தாய்ப்பால்தான் சிறந்த உணவு. தாய்ப்பாலுக்குப் பிறகே மற்ற பால் எல்லாம். பாலூட்டும் தாய் குழந்தைக்கு சோயாப்பால் தரவேண்டாம். சரிதானே?

வீரப்பிரதாபன்: மிகச்சரி. பல நோய்களை விரட்டும் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்த சோயாபீன்ஸ் அமெரிக்கா, ஜப்பானில் பல நூறாண்டுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோயாவில் விலங்குப் புரதச் சத்துக்கு இணையான புரதம் உள்ளது. ‘ஏழைகளின் இறைச்சி ‘என்று அழைக்கப்படுகிறது. நூறுகிராமில் 45 கிராம் புரதம், 20 கிராம் எண்ணெய் உள்ளது. தாவரங்களில் சோயாவில் மட்டும்தான் அதிகப்புரதம் உள்ளதால் சைவ இறைச்சி எனப்படுகிறது. சோயா மொச்சை, சோயா துவரை எனும் சோயா பீன்ஸ் அவரை இனத்தைச் சேர்ந்தது.

விக்கிரமன்: கி.மு. 29 ஆம் நூற்றாண்டில் சீனப்பேரரசர் ஷேனுங், சோயாவை மிகச்சிறந்த உணவாக தமது “மடோரியா மெடிக்கா“ எனும் நூலில் குறித்துள்ளார். முதன்முதல் சீனாவில் பயிரிடப்பட்டு பிறகு கொரியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, இந்தோனேஷியா என்று பரவியது. உலகளவில் இந்தியா சோயா உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பெரியமனுஷன்: “சோயாவை பயிரிட்டால், பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றைப் பயிரிட்டதற்குச் சமம்“ என்று ஒரு ஜப்பான் பழமொழி உள்ளது.

விக்கிரமன்: 2000 ஆண்டுக்கு முன் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு புத்த துறவிகளால் கொண்டுவரப்பட்டது. சைவப்பிரியர்கள் அதிகம் சோயா பயிரிட்டு உண்கின்றனர்.

வீரப்பிரதாபன்: அறிவியலில், சோயாவில் உயிர்ச்சத்து ஏ, பி, டி, ஈ, கே, தையாமின், நியாசின், போலிக் அமிலம், ரிபோ பிளேவின் என உயிர்ச்சத்துகள் உள்ளன. நமது இதயம், நுரையீரலை சிறப்பாக இயங்க இச்சத்துக்கள் துணைபுரியும். உயிர்ச்சத்து பி குடும்பம், பெண்களுக்கு வரும் புற்றுநோய் தடுத்து, தோல் நோய்கள், ஒவ்வாமை, சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நோய்களைத் தீர்க்கும். சோயாவில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை தடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும். கால்சியம், பற்களை, எலும்புகளை பலப்படுத்தும். லினோலிக் அமிலம் தலைமுடி, சருமம் பாதுகாக்கும். நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவும். பாஸ்பரஸ் நரம்பு மண்டலத்துக்கு நலம்பயக்கும்.

விக்கிரமன்: கார்போஹைட்ரேட் உடலுக்கு சக்தியும், வைட்டமின் ஈ நோய் எதிர்ப்புச் சக்தியும் தரும். ஐசோபிளேவின்ஸ் உயிர்ப்பொருள் கொழுப்புடன் வினைபுரிந்து இன்சுலின்போல் செயல்படுவதால் சர்க்கரைச் சிக்கலைத் தடுத்து, இதயநோய், மாரடைப்பைத் தடுக்கும். ஐஸோபிளேவின்ஸ், நமது உடலின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சிறப்புகள் கொண்டது. மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வு போன்ற நோய்களைத் தடுக்கிறது. ஆணுக்கு வழுக்கையாவதைத் தடுத்து புராஸ்டேட் சுரப்பிப் புற்று வராமல் தடுக்கும். இப்படி பல விஷயங்கள் உள்ளன இந்த அதிசயத்துவரையில் (wonderbean). சோயாப்பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்துச்சத்துகளும், எட்டு வகை அமினோ அமிலங்களும் உள்ளன.

மலர்விழி: அதாவது இது ஜப்பான் பருத்திப்பால் எனலாம். சரிதானே?

பெரியಮனுஷன்: சோயாப்பால் தவிர வேறு ஏதும் பயன்கள் சோயாவுக்கு…

வீரப்பிரதாபன்: செயற்கை வெண்ணெய், செயற்கை நெய் சேர்ந்தவர்ணம், வார்னிஷ், தண்ணீர் பாதிக்கா பொருட்கள், குடை, அச்சுமை, செல்லுலாய்டு பொருட்கள், கிளிசரின் போன்றவை செய்ய சோயா எண்ணெய் பயன்படுகிறது. ரேயான், செயற்கைப்பட்டு, பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி போன்றவையும் சோயாவிலிருந்து தயாரிக்கின்றனர்.

விக்கிரமன்: அமினோ அமிலம் அதிக முள்ள சோயாப் பாலை மண்ணில் கிடைக்கும் மகத்தான உணவு என ஜப்பானியர் கருதுவர். ஆனால் சிறுவர் அதிகம் உண்டால் மன வளர்ச்சி பாதிக்கலாம். தைராய்டு பிரச்சினை உள்ளவர், சுவாசக்கோளாறு உள்ளவர், வயிற்றுப் பிரச்சினை உள்ளவர் சோயாப்பாலை தவிர்த்தல் நன்று.

பெரியமனுஷன்: சோயாப் புராணமே பாடிவிட்டீர். சோயாவை மட்டுமே சாப்பிடும் சோயாச் சாமியாராகவே எம்மை ஆக்கிவிடுவீர் போலிருக்கிறதே?

மலர்விழி: அப்படியெல்லாம் யாராவது வாழமுடியுமா என்ன? குறிப்பிட்ட ஒரு பொருளை மட்டுமே உண்டு நம்மால் தற்காலத்தில் வாழமுடியுமா?

விக்கிரமன்: நமது தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சிவசைலத்தில் தேங்காய்பழச் சாமியார் என்று ஒரு காலத்தில் இருந்தார். இயற்பெயர் இராமகிருஷ்ணன். நடுத்தர வயதில் தொடங்கி வாழ்நாள் முழுதும் தேங்காயையும், வாழைப் பழத்தையும் மட்டுமே உணவாக உண்டுவந்தார். தமிழகத்தில் இயற்கை உணவுமுறை, இயற்கை சிகிச்சை முறைகளை பரவலாக்கியவர் அவர்.

பெரியமனுஷன்: அவர் நமக்கு நான்கு தலைமுறைக்கு முந்தியவர். இயற்கைத் தத்துவத்தை மேம்பட்ட வாழ்க்கை நெறிமுறைக்காக பின்பற்றி வந்தார். இக்காலத்தில் அதெல்லாம் நமக்கு நடைமுறையில் சாத்தியமில்லை.

விக்கிரமன்: ஈரோடு பக்கம் சென்னிமலையைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி இப்போது கட்டிடத்தொழிலாளி, இவர் தினமும் ஒரு தேங்காய், சிறிது வேர்க்கடலை, வெல்லம், சில பழங்கள் மட்டும் உணவாக சில ஆண்டுகளாக உண்கிறார். நாள் முழுதும் சுறுசுறுப்பாக கடினமாக உழைக்க முடிகிறது. உடல் திண்மையாகவும் நலமாகவும் உள்ளது. இயல்பான சமூக வாழ்க்கை வாழ்கிறார் நம் காலத்திலேயே.

மலர்விழி: தேங்காயா? அது கொலஸ்ட்ரால் அல்லவா?

விக்கிரமன்: இல்லை, செரிமான மண்டலத்தில் கழிவுப் பொருள் தேங்காவிடில் தேங்காய் எளிதில் செரிமானம் ஆகிவிடும். கொழுப்பு இல்லை. புட்டு, தேங்காய்பூ, இடியாப்பம் தேங்காய்பால், ஆப்பம் தேங்காய்பால், தேங்காய்பால் திரட்டு என்று வெளுத்துக்கட்டலாம். வயிற்றில் புளிப்புத்தேக்கம் மிகுந்திருந்தால் தேங்காய் செரிமானம் ஆவது கடினம். நெல்லை, குமரி மாவட்டங்களில் தேங்காய் பயன்பாடு நீடிக்கிறது.

விக்கிரமன்: மலையாளிக்கு உணவில் தேங்காய் இல்லாத நாள் உணவற்ற நாள் என்பார். அவர்களிடையே மாரடைப்பு, நீரிழிவு நோய்களின் தாக்கம் குறைவு. நமது மண்ணில் விளைகிற, பாரம்பரியமாக பயன்படுகிற உணவுப்பொருள் நிச்சயம் தீங்கு தராது. உண்ணும் முறையில் தான்…

மலர்விழி: தேங்காய்ப்பால் எப்படி உண்ண வேண்டும் என்கிறாய்? ஏதும் சிறப்புக் குறிப்பு அறிவியல் முறையில் உளதா?

வீரப்பிரதாபன்: தேங்காய் சேர்த்தால் புளித்த ஏப்பம் வரும் என்பது பலரின் குறை. ஒருநாள் விரதம் இருந்து வயிற்றை சுத்தமாக்கி, செரிமான மண்டலத்தை வலுப்படுத்திவிட்டு, பிறகு தேங்காய்ப்பால் குடித்தால் எலும்புகளில் வலு கூடுவதை உணரலாம். அறிவியல் ரீதியாக, தேங்காய்ப்பால் கொழுப்பு எலும்புகளுக்கு கால்சியம் கொடுத்து பலமாக்கிடும். அதன் எண்ணெய்த்தன்மை பெருங்குடலின் வறட்சி நீக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.

மலர்விழி: எளிதாக எப்படி தயாரிப்பது?

விக்கிரமன்: அதிகம் முற்றாத புதிய தேங்காயை எடுத்து கீற்றுகளாக்கி, தேங்காய்த் தண்ணீர் சேர்த்து, பனை வெல்லம், ஏலக்காய் சேர்த்து நீர் விட்டு விழுதாக அரைத்து, தண்ணீர் சேர்த்து வடிகட்டிப் பால் எடுக்கலாம். விழுதுடன் நீர் சேர்த்து மீண்டும் அரைத்து வடிகட்டி என மொத்தம் மூன்றுமுறை பால் எடுக்கலாம். எடுத்த பாலில் நீர் சேர்த்து நூறு மில்லி அளவுக்கு பருகலாம். ஒவ்வொரு மடக்காக ருசித்து மெதுமெதுவாக விழுங்கவேண்டும்.

நிதானமாகச் சுவைத்தால் வயிறும் உடலும் ஏற்றுக் கொண்டு குளிரும்.

பெரியமனுஷன்: சமீபகாலமாக நீரா என்கிறார்களே… அது என்ன? அதிசயபானம் என்று பாராட்டுகிறார்களே…

வீரப்பிரதாபன்: தேங்காய்பாலின் பாலேடு அமைப்பும், லேசான இயற்கையான இனிப்பும், நோய் எதிர்ப்புச்சக்தி தரும் ஊட்டச்சத்துகளும் அது அதிசயபானம் என்ற பெயருக்குத் தகுந்தது தான். மோனோலாரின் என்பது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சத்துப்பொருள். அது தாய்ப்பாலிற்குப்பின் தேங்காய்ப்பாலில் தான் உள்ளது. முற்றிய தேங்காய் பருப்பினுள் இயற்கையாக தேக்கியுள்ள திரவமே தேங்காய்ப்பால். தேங்காய் தண்ணீரல்ல அது. தேங்காய்பால் கெட்டியான திரவமாகும்.

மலர்விழி: தேங்காய் இளசாக இருந்தால்…

விக்கிரமன்: இளம்தேங்காய் அதிகளவு இளநீர் தரும். இளநீரில் அதிகளவு சர்க்கரைச்சத்து, தாதுச் சத்துக்கள் உள்ளன. தேங்காய் முற்றும்போது இளநீர் அளவு குறைந்து பருப்பின் அடர்த்தி அதிகரிக்கும். அதுதான் தேங்காய்ப்பால். அதில் நலம்தரும் பூரித கொழுப்புச் சத்தும் கலோரி ஆற்றலும் உள்ளன. பூரிதகொழுப்பு இதயத்தைப் பாதிப்பதில்லை. உடல்கொழுப்பை அதிகரிப்பதில்லை. மாறாக, உடல்கொழுப்பை குறைத்து, இரத்தஅழுத்தம் சீராக்கி, மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

மலர்விழி: வேறு என்ன சத்துக்கள் உள்ளன?

வீரப்பிரதாபன்: அதில் லாக்டோஸ் இல்லை. விலங்குப்பால் கலப்பில்லை. வேறு தானியங்கள் கலப்பில்லை. ஒவ்வாமை உள்ளவர்கள், தாவர உணவு மட்டும் உண்பவர்கள் தேங்காய் பாலை நல்ல சைவ உணவாக பருகலாம். நடுத்தர சங்கிலி கொழுப்பு (medium chain fatty acids) லாரிக் அமிலமாக உள்ளது. உடலில் அது மோனோலாரியமாக மாறி நோய்க்கிருமிகளை அழிக்கிறது. உயிர் வளி எதிர்ப்பிகள் (ஆன்டிஆக்சிடன்ட்ஸ்) உடையது. தாதுச் சத்து மிக்க முழுமையான திரவ உணவாகும்.

பெரியமனுஷன்: தேங்காயை அரைத்துப் பெறும் பால்தான் நீராவா?

வீரப்பிரதாபன்: தென்னை மரத்தின் பாளைகள் எனப்படும் மலர்மொட்டுகளில் இருந்து சுரக்கும் பால் போன்ற திரவத்தைச் சேகரித்து அதற்கு நீரா பானம் என்று பெயரிட்டுள்ளனர். அதில் லாரிக் அமிலம் உள்ளதால் தாய்ப்பாலுக்கு இணையானது. நீராவில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. கொழுப்பும் ஆல்கஹாலும் இல்லை. கல்லீரல் நோயைக் குணப்படுத்தும் சக்தி உள்ளதாக பெங்களூர் அறிவியல்கழக ஆய்வுக்கூடப் பரிசோதனைகளில் அறியப்படுகிறது. நீரா பானம் பருகுவதால், காசநோய், சிறுநீரகப் பிரச்சினைகள், ஆஸ்துமா நோய் குணமாகும் என்று நிரூபித்துள்ளனர். வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு, பாஸ்பரஸ், அஸ்கார்பிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளும் பயமின்றி பருகலாம் என்கின்றனர்.

மலர்விழி: நீராவிலிருந்து வேறு ஏதேனும் தயாரிக்க முடியுமா? கூடுதல் பயன்கள்?

விக்கிரமன்: நீராவிலிருந்து கருப்பட்டி, தென்னைச்சர்க்கரை, தென்னந்தேன் போன்றவை தயாரிக்கலாம்.

மலர்விழி: தென்னைப்பதநீர் எனலாமா?

பெரியமனுஷன்: நம்மூரில் நீரா இல்லையா? புகழ்பெறவில்லையா?

விக்கிரமன்: கேரள அரசும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஒரிசா மாநிலங்களில் நீரா தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பாட்டிலில் அடைத்து ஒரு வருடம் வரை கெடாமல் பாதுகாக்கலாம். தமிழகத்தில் தென்னையில் இருந்து நீரா இறக்க அனுமதி இல்லை.

வீரப்பிரதாபன்: நீரா எடுத்து இரண்டு மணிக்கு மேல் அப்படியே வைத்தால் புளிப்புத்தன்மை பெற்று கள் என்ற நிலை பெற்றுவிடும். அப்படி புளிக்காமல் இருக்க கருவிகள் உள்ளன. தென்னை வளர்ச்சி வாரியம் நீராவை ஆல்கஹால் இல்லாத இயற்கை ஊட்டச்சத்து பானமாக இப்போது அறிவித்தது.

மலர்விழி: அதாவது தென்னைப்பால் தான் நீரா. தேங்காயை அரைத்துப்பெறுவது தேங்காய்ப் பால். சரிதானே?

வீரப்பிரதாபன்: இறக்கப்பட்ட சில மணிகளில் நொதித்துவிடுவதால், நொதிப்பதைத் தடுக்கும் நொதிப்பு எதிர்கரைசல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாளைகளில் இருந்து நீரா கலன்களில் இறங்கியபின் அவற்றை எடுத்து நீராவை பனிக்கட்டிப் பெட்டிகளுக்கு மாற்றிவிட்டு உடனே பதனிடும் ஆலைகளுக்கு அனுப்பிவிடுவர். அங்கு, அதிவேக மையவிலக்குமுறை, நுண்வடித்தல் முறை, பாஸ்டர் முறை ஆகிய இயற்பியல், உயிரியல் முறைகளில் சுகாதாரமான நீரா தயாரிக்கப்படுகிறது. பிறகே அதை ஆறு மாதம் வரை கெடாமல் சேமிக்கமுடியும்.

விக்கிரமன்: இளநீர் எலக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும். இரத்தஅழுத்தம் கட்டுப்படுத்தும். சருமத்தை பொலிவாக்கும், ரத்தசோகைக்கு நிவாரணம் அளித்து சீரண சக்தியை மேம்படுத்தும். மலமிளக்கி. இளநீரை விட தேங்காய்ப்பாலும், தென்னைப் பாலும் பல நன்மைகளைத் தருகிறது.

பெரியமனுஷன்: பருத்தி ஆடைகள் கோடையிலும் குளிரிலும் உடலைப் பாதுகாக்கிறது. உடலுக்கு குளிர்ச்சி தந்து சருமத்தை சுத்தமாக வைத்து கட்டி, பூஞ்சை பிரச்சினைகளைத் தடுக்கிறது. பருத்திப்பாலும் உடலுக்கு நன்மைகள் பயக்கிறது என்று அறிகிறோம்.

விக்கிரமன்: பருத்தி உண்மையில் விதைகளைச் சூழ்ந்திருக்கும் தூவிகளில் இருந்து கிடைக்கிறது. விதைகளில் இருந்து எரிபொருளாகப் பயன்படுத்தவும், சோப்பு தயாரிப்பதற்கும் ஏற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. கோஸிபியம் என்ற பேரினத்தைச் சேர்ந்த பல சிற்றினங்களில் இருந்து கிடைக்கும் பருத்தியில் ஹிர்சுடம், கட்டை இழைப் பருத்தி, மேல்நிலப்பருத்தி, பார்படென்ஸ் கடல்தீவுப் பருத்தி, எகிப்து பருத்தி, பெருலியானம் தென்னமெரிக்க பருத்தி, ஆர்போரியம் மரப்பருத்தி எனப் பல பருத்திகள் உள்ளன. ஹெர்பேசியம் கிழக்கிந்தியப் பருத்திதான் நமக்கு அதிக அளவில் பரிச்சயம். நாம் சமைத்து உண்ணும் ஹிபிஸ்கஸ் எஸ்குலன்டஸ் வெண்டையும், காலணிச்சாயம், கண்மை தயாரிக்க மலர்கள் தரும் ரோசாசினன்சிஸ் செம்பருத்தியும் ஒரே பருத்திக்குடும்பம்தான். மனித இனத்தின் மானம் காக்கும் பருத்தி பணப்பயிர்களில் சூப்பர் ஸ்டார், ’வெள்ளைத்தங்கம்’.

வீரப்பிரதாபன்: பஞ்சு பிரிக்கப்பட்ட பருத்தி விதைகளில் இருந்து பருத்திக் கொட்டை எண்ணெய் எடுக்கின்றனர். இதை சுத்திகரித்து சமையல் எண்ணெயாக பயன்படுத்துவது உண்டு. அதன் புண்ணாக்கு விலங்குத் தீவனமாகிறது.

மலர்விழி: வெளிநாட்டுப் பால் என்றாலும் சோயாப் பாலும் அறிவியல் முறையில் அணுகினால் ஆரோக்கியம் தரும் இயற்கை உணவுதான். தாவரப்பால் தான்.

பெரியமனுஷன்: தாவரப்பால்கள் நவீன முப்பால்கள். ஆரோக்கிய பால்கள். இலக்கணப்படி பால்கள் என்று பாலுக்கு பன்மை விகுதி வரக்கூடாதுதான். ஆனால் மூன்று விதமான பால்கள் பற்றி அறிந்ததால் பால்கள் என்று கூறுவது தவறல்ல எனக் கருதுகிறேன்.

மலர்விழி: வாழ்க முப்பாலும், முப்பால்களும். மனித வாழ்க்கைக்கு வளமும், நலமும், ஆரோக்கியமும் தரட்டும். தொடரட்டும் அவற்றின் சேவை.

- புழல் தி.பாலகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.