வியாழனின் கனிமீட் (Ganymede) நிலவின் மீது, பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனசோர்களை கொன்ற விண்கல்லைவிட மிகப்பெரிய விண்கல் விழுந்தது. இதனால் சூரிய குடும்பத்தில் பிரம்மாண்டமான வெளிறிய சாம்பல், வயலட் அல்லது பர்ப்பிள் நிறமுள்ள நிலவான இது தன் அச்சில் ஊசலாடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சடசடவென்று பூமியின் மீது மோதி விழுந்து அதுவரை பூமியை ஆண்ட டைனசோர்களை அழித்த விண்கல்லைவிட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டில் விழுந்த பழமையான இந்த விண்கல் இருபது மடங்கு பெரியது.

இப்பேரழிவால் வியாழனுக்கு உள்ளதாகக் கருதப்படும் நூறு விண்கற்களில் ஒன்றான கனிமீட் நிலவு வாயுக் கோளான வியாழனை விட்டு விலகிச் சென்று சுழல்கிறது. கணினி மாதிரிகளின்படி இந்த விண்கல் 185 மைல் குறுக்களவை உடையது. 60-90 டிகிரி கோணத்தில் கனிமீட்டின் மீது இது மோதியது. இதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தொடக்கத்தில் 1,000 மைல் அகலம் உள்ள பெரும் பள்ளம் அங்கு தோன்றியது. இந்தப் பள்ளம் பாறைகளாலும் தூசுக்களாலும் பகுதியளவு நிரப்பப்பட்டது.

“கனிமீட் நிலவில் காணப்படும் தனித்துவமான குழிகள் இந்த பிரம்மாண்ட விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பொதுமைய வளையங்களின் எச்சங்கள் (remnants of concentric rings) என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. என்றாலும் இந்த தாக்கம் எவ்வளவு பெரியது, வியாழனின் நிலவில் இதனால் ஏற்பட்ட விளைவு பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இங்கு குழிகள் நிறைந்த பகுதி வியாழனில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

விழுந்த இடத்தில் உண்டான தாக்கத்தால் ஏற்பட்ட கூடுதல் எடை கனிமீட்டை நிலைகுலையச் செய்தது. அதை அதன் அச்சை சுற்றி ஊசலாட வைத்தது" என்று ஜப்பான் கோப் (Kobe) பல்கலைக்கழகத்தின் கோள்கள் பிரிவு விஞ்ஞானி டாக்டர் நயாயூக்கி ஹராட்டா (Dr Naoyuki Hirata) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) என்ற இதழில் வெளிவந்துள்ளது.

நிலவின் சேய்மைப் பகுதியில் (far side) விண்கல் விழுந்ததை கணினி மாதிரிகள் உறுதி செய்கிறது. பூமியின் நிலவைப் போல கனிமீட் வியாழனின் ஈர்ப்பு அலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலவு நிரந்தரமாக தன் ஒரு பகுதியை மட்டுமே எப்போதும் வியாழனுக்கு காட்டுகிறது. புதன் கோளை விடப் பெரிய, 3,000 மைல்கள் அகலம் உடைய கனிமீட் நிலவில் இந்த விண்கல் விழுந்ததால் உண்டான தாக்கம் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் நிலவின் உண்மையான தரைப்பரப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தரைக்கடியில் இருந்ததாக கருதப்பட்ட உப்பு நீர்க் கடல் உள்ளிட்ட பல அமைப்புகளை இந்த விண்கல் மோதல் பாதித்தது. ஐரோப்பிய விண்வெளி முகமையால் 2023ல் வியாழன் மற்றும் அதன் நிலவுகளை ஆராய அனுப்பப்பட்ட ஜூஸ் (Juice) விண்கலன் இது பற்றி மேலும் ஆராய்வதுடன் இந்த ராட்சத வாயுக் கோளின் நிலவுகளில் உயிர்கள் வாழ அவசியமான நீர், ஆற்றல் மூலங்கள் பற்றியும் ஆராயவுள்ளது.

“மோதலால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டின் பழமையான தரைப்பரப்பில் உருவான துவாரங்களை இன்றும் காணமுடியும். இது பற்றி மாதிரிகளைக் கொண்டு ஆராய்வது கடினம். கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி கடிகாரத்தின் முட்களைத் திருப்புவது போல கனிமீட்டில் ஏற்பட்ட வடுக்களுக்கான விளக்கங்களைத் தேடுவது கடினமானது. ஜூஸ் கலன் இது பற்றி ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் துண்டுகளாக இருக்கும் தரைப்பரப்பின் படங்கள் விரைவில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்கல் விழுந்ததால் மீண்டும் நிலவின் வடிவம், அதன் ஈர்ப்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோள்கள் பிரிவு ஆய்வாளர் பேராசிரியர் லீஃப் லெச்செர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.

வியாழன் மற்றும் அதன் மகத்தான நிலவுகள் பற்றி குறிப்பாக கனிமீட் நிலவு பற்றி ஜூஸ் கலன் விரைவில் அனுப்பவுள்ள புதிய விவரங்களுக்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்