பழுதடைந்த செயற்கைக் கோள்களுக்காக நிலவில் இடம் ஒதுக்கப்படவுள்ளது. கடினத் தன்மை வாய்ந்த இந்த செயற்கைக் கோள்களின் பகுதிகள் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுவதற்கென்று இந்த இடங்கள் பயன்படுத்தப்படும். இந்த இடங்கள் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவில் குப்பை மேடுகள்
நிலவின் வளமற்ற தரைப்பரப்பில் தளங்கள், சுரங்கப் பணிகள், அறிவியல் ஆய்வுக் கருவிகளை நிறுவுதல் போன்றவற்றிற்காக விண்வெளி முகமைகள், தனியார் நிறுவனங்கள் அனுப்பவுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வரும் இருபது ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் பரப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளுக்காக சரியான இடங்களைக் கண்டறிதல், வழி அறிதல் மற்றும் தகவல் தொடர்புக்காக செயற்கைக்கோள் கட்டமைப்புகள் அனுப்பப்பட உள்ளன.
ஆனால் எரிபொருள் தீர்ந்து போகும்போது செயற்கைக்கோள்களை நிலவின் பரப்பில் மோதி விழச் செய்து தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. “இந்த செயற்கைக்கோள்கள் தரையில் மோதி உடைந்து துண்டுகளாக சிதறும்” என்று டரம் (Durham) பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானியும் சமீபத்தில் க்ளாஸ்கோ ஸ்பேஸ் காமின் இது குறித்த நிபுணர் குழு கூட்டத்தை நடத்தியவருமான டாக்டர் ஃபியோனாக் தாம்சன் (Dr Fionagh Thomson) கூறுகிறார்.
நிலவின் வெவ்வேறு இடங்களில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழுந்தால், கட்டிடங்கள், அறிவியல் உபகரணங்கள், நிலவிற்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் கால் பதித்த இடம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்குரிய தூய இடங்கள் போன்றவை சேதமாகும். விநாடிக்கு 1.2 மைல் வேகத்தில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழும்போது நிலவின் பரப்பில் அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.
நிலவில் விஞ்ஞானிகள் நிறுவத் திட்டமிட்டுள்ள உணர் திறன் மிகுந்த கருவிகளுக்கு இவை இடையூறை ஏற்படுத்தும். இந்த மோதல்களால் உருவாகும் பல மீட்டர்கள் தொலைவிற்கு பள்ளங்கள் இருக்கும். இதனால் உருவாகும் தூசு மேகங்கள் தொலைநோக்கிகள், உபகரணங்களை சேதமடையச் செய்யும்.
“நிலவின் பரப்புடன் ஒப்பிடும்போது இது உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை கலாச்சார, அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விழ வாய்ப்பு உண்டு. அதனால் இது பற்றிய திட்டமிடல் அவசியம்” என்று பர்க்பெக் (Birkbeck) இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் இயன் க்ராஃபெர்டு (Prof Ian Crawford) கூறுகிறார். விஞ்ஞானிகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை வளி மண்டலத்தைப் பயன்படுத்தி அகற்றுகின்றனர்.
ஆயிரக்கணக்கான இத்தகைய செயற்கைக்கோள்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் நிலவில் வளி மண்டலம் என்று எதுவும் இல்லை. அதனால் இதற்கு வேறு தீர்வுகளைக் காண வேண்டும். வரும் இருபது ஆண்டுகளில் நானூற்றிற்கும் அதிகமான நிலவு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஆர்ட்டிமிஸ் (Artemis) முகாம், நிலவைச் சுற்றிவரும் லூனார் கேட்வே (Lunar Gateway) நிலையம், சீனாவின் இரண்டாவது நிலவு முகாம் மற்றும் ரஷ்யாவின் நிலவு முகாம் இத்திட்டங்களில் அடங்கும். 2027ல் ஐரோப்பிய விண்வெளி முகமை லூனார் பாத் ஃபைண்டர் (Lunar Pathfinder) செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. இது 2030ல் இயங்கவுள்ள மூன் லைட் (Moonlight) செயற்கைக்கோள்களின் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமையும்.
நிலவில் செயற்கைக்கோள் கல்லறைகள்
விஞ்ஞானிகள் பழுதடைந்த செயற்கைக்கோள்களை அகற்ற மூன்று வழிகளை ஆலோசிக்கின்றனர். ஒரு உந்துதல் அலகுடன் எரிபொருள் உள்ள ஒரு செயற்கைக்கோளை சூரியனை நோக்கி அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழலும்படி செய்யலாம். ஆனால் இதற்கு செலவு அதிகமாகும். மாறாக அதை தொலைவில் உள்ள ஒரு நிலவு சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பலாம். ஆனால் நிலவிற்கு பலவீனமான ஈர்ப்பு விசையே உள்ளது. அதனால் இதை செயல்படுத்துவது கடினம்.
மாறாக எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயற்கைக் கோள்களை நிலவின் மீது மோதி விழுமாறு செய்யலாம். “நிலவுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான கலந்தாலோசனை அமைப்பு (Lunar Activities Consultation (Atlac)) மற்றும் விண்வெளிக் குப்பைகளை ஒருங்கிணைக்கும் பன்னாட்டு முகமைகளுக்கு இடையிலான கமிட்டி (Inter-Agency Space Debris Coordination Committee (IADC)) ஆகியவை இதற்குரிய சிறந்த தீர்வுகளை ஆராய்கிறது” என்று இங்கிலாந்து விண்வெளி முகமையின் ஒழுங்குபடுத்தல் அலுவலக தலைவர் சேரா போயல் (Sarah Boyall) கூறுகிறார்.
“பழுதடைந்த செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி நிலவில் விழச் செய்வதே நடைமுறைக்கு உகந்த தீர்வு. இதன் மூலம் நிலவில் விவேகமற்ற மனித செயல்பாடுகளைத் தடுக்கலாம்” என்று லூனார் பாத்ஃபைண்டர் தயாரிப்பாளர் சர்ரெ லிமிடெட் (SSTL the Surrey-based satellite manufacturer) நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் பென் ஹூப்பர் (Ben Hooper) கூறுகிறார்.
“இதனால் சரியான நேரம் வரும்போது குப்பையாகும் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விழும்படி செய்யலாம்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூன் லைட் திட்ட அலுவலகத் தலைவர் சார்ல்ஸ் க்ரான்ஸ் டவுன் (Charles Cranstoun) கூறுகிறார்.
“செயற்கைக் கோள்கள் மோதும்போது இதனால் பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் நிலவின் அமைப்பு பாதிக்கப்படும்.. முன் கூட்டியே தெரிந்த நிறை, ஜியோமெட்ரி மற்றும் வேகத்துடன் ஒரு பொருள் விழும்போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு உண்டாகும் என்பதை நாம் அறிய முடியும்” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியல் பிரிவு எமரிட்டஸ் (Emeritus) விஞ்ஞானி ஜான் சானெர்கி (John Zarnecki) கூறுகிறார்.
பழுதடையும் செயற்கைக் கோள்களுக்காக நிலவில் கல்லறைகளை ஏற்படுத்தும் இத்திட்டம் நிலவை பாதுகாக்க உதவும். இதனால் மனித விண்வெளி ஆய்வுகள் புதிய ஊக்கம் பெறும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்