ஹம்ப்பிரி டேவி இங்கிலாந்தில் உள்ள கடற்கரை நகரமான பென்ஸான்ஸ் என்னும் ஊரில் 1778-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் மரவேலை செய்யும்  தச்சுத் தொழிலாளியாவார்.

humphry davyஹம்ப்பிரி டேவி பென்ஸான்ஸிலும் அதன் அருகில் உள்ள டிருரோ நகரிலும் கல்வி பயின்றார். டேவி இளம்வயதில் மிகவும் நுட்பமான மதியும், சிறந்த சொல்லாற்றல் திறனும் கொண்டு விளங்கினார். டேவி நூல் நிலையத்திற்குச் சென்று நூல்கiளைப் படிக்கும் வழக்கத்தை சிறு வயது முதலே கொண்டிருந்தார் வில்லியம் நிக்கல்ஸன் என்பவர் எழுதிய அறிவியல் நூல் அவரைக் கவர்ந்தது. வில்லியம் நிக்கல்ஸன் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரை அதன் மூலப் பொருள்களான ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பகுக்க முடியும் என்று கண்டறிந்தவர். மேலும், டேவி பிரான்ஸ் நாட்டு அறிவியலாளரான ஆண்வான்லவ்வாஸ்யே என்பவர் எழுதிய அறிவியல் கட்டுரைகள் அடங்கிய நூலையும் படித்தார். இதுபோன்று அறிவியல் நூல்களைப் படிக்கப் படிக்க அவர் இரசாயனத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். டேவி தாமே பல அறிவியல் சோதனைகளிலும் ஈடுபட்டார்.

டேவி பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தையார் திடீரென்று இறந்துவிட்டார். தந்தையார் விட்டுச் சென்ற கடனை, வீட்டிலிருந்த பொருள்களை விற்று அடைத்தார். தமது தாயைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. டேவி ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணியாளராகச் சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் இரசாயனக் கலவை தயார் செய்வது பற்றி டேவிக்குக் கற்பித்தார். டேவி, தமது இரசாயன அறிவை வளர்த்துக் கொண்டார். அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த நூல் நிலையத்தில் இரசாயனம் சம்பந்தமான நூல்களை எடுத்துப் படித்தார். அதில் கூறப்பட்டிருந்த பரிசோதனைகளைச் செய்து பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார்.

ஜேம்ஸ்வாட் என்னும் புகழ்பெற்ற அறிவியலாளரின் மகனான ஜீனியர் ஜேம்ஸ்வாட்டுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அவர் டேவியை அரசர்பிரான் சங்கத்தின் தலைவரான கில்பெர்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். டேவியின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த கில்பெர்ட், அவரை ‘வாயு இயல் சங்கத்தின்’ நிறுவனருக்குப் பரிந்துரை செய்தார். அங்கு எந்தெந்த வாயுவுக்கு என்னென்ன மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதை ஆராய்ச்சி செய்தார். மேலும், அச்சங்கத்தின் தலைமை பொறுப்பு டேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளியில் சென்று இரசாயனம் பயிலாமல், தாமே அறிவியல் கற்று, நைட்ரேட் ஆக்ஸைடு என்ற வாயுவைக் கண்டுபிடித்து, அதன் மருத்துவக் குணங்களை ஆராய்ந்தார். வாயுக்களை ஆராய்ச்சி செய்வது ஆபத்தானதொரு செயல். அது சிலநேரங்களில் ஆராய்ச்சி செய்பவரின் உயிரையே பறித்துவிடும். ஆனாலும், டேவி நைட்ரேட் ஆக்ஸைடு வாயுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டார். அந்த வாயு நஞ்சுமிக்கது அல்ல என்பதைக் கண்டறிந்தார். பின்னர், அந்த வாயுவை அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தினார். நோயாளி மயக்க நிலை அடைவதை அறிந்தார். மேலும், அறுவை சிகிச்சையின்போது நோயாளி வலியை உணரமாட்டார் என்பதையும், அந்த வாயுவுக்கு வலியை மறக்கடிக்கச் செய்யும் சக்தி உண்டு என்பதையும் அறிந்தார். தாம் கண்டறிந்ததை மருத்துவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்கள் அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு குளோரோபார்ம் வாயுவைச் செலுத்தி வெற்றி கண்டனர்.

                டேவிக்கு ‘காப்ளே பதக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. உலகம் முழுவதும் டேவியைப் பாராட்டியது.

ஒருசமயம் அமெரிக்க பல் மருத்துவர் ஒருவர் தம்முடைய பல்லைப் பிடுங்க வேண்டியிருந்தது, அவர் தம்மீது குளோரோபார்ம் செலுத்தினார், அவருக்கு வலி தெரியவில்லை. அந்த வாயுவை டேவி அளவுக்கு அதிகமாக உறிஞ்சியபொழுது அவர் தன்னை மீறி விழுந்து விழுந்து சிரித்தார். அன்று முதல் அந்த வாயு ‘சிரிக்க வைக்கும் வாயு’ (Laughing Gas) என்று அழைக்கப்படுகிறது.

ராம்பர்ட்பிரபு என்ற அமெரிக்க நாட்டு அறிஞர் லண்டன் நகரில் ‘இராயல் நிறுவனம்’ (Royal Institution) என்னும் அமைப்பை நிறுவினார். அந்நிறுவனத்தில் இரசாயனப் பேராசிரியராக டேவியை நியமித்தார். தோல் பதனிடுதல் குறித்த டேவியின் உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இராயல் நிறுவனத்தின் விவசாயப் பிரிவினர், அவரை விவசாயத்துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். அவர் விவசாயத்தில் இரசாயனங்களின் பயன்பாடு குறித்து ஆராய்ந்தார். இரசாயன உரங்கள் தயாரிப்பதில் பல மாற்றங்களையும், புதிய முறைகளையும் கண்டறிந்தார்.

குழந்தைகளுக்கான அறிவியல் உரைகளை, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் வாரத்தில் நிகழ்த்தி எதிர்கால சமுதாயம் அறிவியல் அறிவு பெற பாடுபட்டார்.

நிக்கல்சன் போன்றவர்களுடன் இணைந்து ‘மின்சார – இரசாயனம்’ என்னும் துறையை டேவி நிறுவினார்.

பிளாட்டினம் என்ற உலோகத்தில் செய்யப்பட்ட கிண்ணம் ஒன்றில் டேவி சோடியம் ஹைடிராக்ஸைடை எடுத்து, பிளாட்டினக் கம்பியையும், ஒரு மின் கலத்தின் முனையையும் ஒரு மின் கம்பியினால் இணைத்தார். அப்போது சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசல் மேலும் இளகி அதிலிருந்து சோடியம் வெளிப்பட்டு உலோக உருண்டைகளாக மாறி குமிழ்களாக மேலே வந்தன. வெளிக்காற்று வந்ததும் தீப்பற்றி எரிந்து போயின. இப்படி சோடியம் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து , அதாவது ,சோடியம் ஹைட்ராக்ஸைடு சோடியம் குளோரைடு ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் டேவியே ஆவார். அதே ‘மின்சார – இராசயன’ முறையைப் பயன்படுத்தி பொட்டாசியம் உலோகத்தைப் பிரித்தெடுக்க டேவி வகை செய்தார். மக்னீஷியம், கால்சியம், குளோரின், பேரியம் முதலிய தனிமங்களைப் பிரித்தெடுக்க வழிகாட்டினார்.

பிற்காலத்தில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாகவும், வலி தெரியாமல் உணர்ச்சியடங்கச் செய்வதற்காகவும் இந்த வாயுவை ‘அனெஸ்தெடிக்காக’ மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். டேவியின் அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பிரான்ஸ் நாட்டு மன்னர் நெப்போலியன் ‘தங்கப் பதக்கம்’ வழங்கிச் சிறப்பித்தார்.

டேவி, ‘ஆர்க் லாம்ப்’ எனப்படும் மின் விளக்கை உருவாக்கினார். இதனை அவர் 1809-ஆம் ஆண்டு இராயல் நிறுவனத்தில் செயல்படுத்திக் காட்டினார்.

தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு வழிகோலிய இந்த விளக்கைக்   கண்டுபிடித்ததற்காக ஒரு பைசாக் கூட வாங்கவில்லை, ‘என் ஒரே குறிக்கோள் மனித சமுதாயத்துக்குப் பணியாற்றுவதுதான், நான் பயன்பெறுவதற்கல்ல’ என அறிவித்தார் டேவி. இவர் கண்டுவிடித்த ‘ஆர்க் லாம்ப்’ இராணுவம், திரைப்படத்துறை மற்றும் சுரங்கத்துறை முதலியவற்றில் இன்று மிகுந்த பயனடையுதாக விளங்கி வருகிறது.

நிலக்கரி சுரங்கத்தினுள் உருவாகும் எரிவாயுவினால் விபத்துகள் அடிக்கடி ஏற்படும், இந்த விபத்துக்களில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலியானார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ‘பயர் டாம்ப்’ எனப்படும் இத்தகைய எரி வாயுவினால் மடியும் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருந்தது. நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குச் சுரங்கம் அமைத்துக் கொண்டிருக்கும்போது, நிலக்கரி வாயு உண்டாகிறது. இந்த வாயு சுரங்கத்தில் நிறைய சூழ்ந்து கொள்ளும்போது சுரங்கத் தொழிலாளர்கள் வெளிச்சத்துக்காகப் பயன்படுத்தும் விளக்குகளின் சுடர், இந்த நிலக்கரி வாயுவில் தீப்பற்ற வெடி விபத்து ஏற்படுகிறது. விளக்குச் சுடர், வாயுவோடு தொடர்பு கொள்ளாமலிருக்க பாதுகாப்பு முறைகளில் அப்போது அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

விபத்துக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது, அதைத் தடுத்திட, ‘நிலக்கரிச் சுரங்க விபத்துக்களைத் தடுக்கும் கழகம்’ (Society for Preventing Accidents in Collieries) டேவியிடம் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அளிக்கும்படி கேட்டுக்கொண்டது. அவர் முயற்சி செய்து ‘டேவியின் காப்பு விளக்கு’ என்ற விளக்கைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார். 1815-ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு விளக்கு (Safety Lamp) டேவிக்கு புகழ் சேர்த்தது.

மைக்கேல் பாரடே 1812-ஆம் ஆண்டு ஹம்ப்பிரி டேவியைச் சந்தித்தார். அவரது அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, தமது சோதனைக் கூடத்திலேயே பணிக்கு அமர்த்திக் கொண்டார். அதன் விளைவாக எதிர்காலத்தில் மைக்கேல் பாரடே ஒரு புகழ் வாய்ந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தார். காற்றில்லாத பேழையில் பனிக்கட்டிகளை வைத்து டேவி ஆராய்ச்சி செய்தார் பனிக்கட்டிகள் இரண்டையும் உராயும்படி செய்தார். பனிக் கட்டிகள் உருகி நீராயின. இந்த ஆராய்ச்சியின் பயனாக ஒரு பொருளிலுள்ள அணுக்கள் மிக விரைவாக அசைவதால் வெப்பம் உண்டாகிறது என்கிற உண்மையை உலகுக்கு அறிவித்தார்.

இங்கிலாந்து மன்னர் ஹம்ப்பிரி டேவிக்கு ‘சர்’ பட்டம் வழங்கி அவரைக் கௌரவித்தார். டேவி இளம் விதவைப் பெண்ணை 1813-ஆம் ஆண்டு மணம்புரிந்தார். டேவி, அவரது மனைவி, மைக்கேல்ஃபாரடே ஆகிய மூவரும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது பாரிஸ் நகருக்குச் சென்றனர், அங்க ‘பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்’ நிறுவனத்தின் உறுப்பினர் பதவி என்னும் அந்தஸ்து டேவிக்கு வழங்கப்பட்டது.

இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் அவர் தமது ஆராய்ச்சியின் விளைவாக வந்த வில்வடிவத் தீப்பொறியைக் கொண்டு ஒரு வைரத்தை எரித்துக் காட்டி, ‘வைரம் சுத்தமான கரியே’ என்பதை நிரூபித்தார்.

ஸ்வீடன் நாட்டு இரசாயன விஞ்ஞானி பெர்ஸிலியஸ் என்பவருடன் டேவி வாதம் புரிந்து குளோரின் ஒரு தனிமமே என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார். டேவி நிலக்கரிச் சுரங்கத்தில் வெளிச்சம் ஏற்பட கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கின் உரிமையைப் பதிவு செய்யும்படி அவரது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அவர் பதிவு செய்ய மறுத்துவிட்டார். டேவி பொதுநலம் பேணும் பண்பாளர்.

“இதுபோன்ற சுயநல எண்ணம் என் இதயம் நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னுடைய பாதுகாப்பு விளக்கு சுரங்கத் தொழிலாளிகளுக்குப் பேருதவி செய்கிறது. என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அதுவே எனக்குப் போதும்”- என்று டேவி கூறிவிட்டார்.

இவரது அரிய கண்டுபிடிப்பைப் பாராட்டி சுரங்கத் தொழிலாளர்கள் அவருக்கு, வெள்ளியால் செய்த சாப்பாட்டுப் பாத்திரங்களைப் பரிசாக வழங்கினர். அவ்விளக்கை அமைத்ததற்காக டேவி யாதொரு கட்டணமும் பெற மறுத்துவிட்டார்.

தாம் மறைந்த பிறகு அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி விற்று அந்தத் தொகையைக் கொண்டு ‘டேவி பதக்கம்’ என்னும் பரிசு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அய்ரோப்பியாவிலோ, அமெரிக்காவிலோ ஒவ்வொரு ஆண்டிலும் மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த இராசாயனக் கண்டுபிடிப்புக்கு டேவி பதக்கம் பரிசாக அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது உயிலில் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.

‘இளங்கோமான்’ (Knight) என்னும் பட்டத்தை 1811-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் டேவிக்கு வழங்கிப் பாராட்டினார். ‘இராயல் நிறுவன’த்தின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார்.

ஹம்ப்பிரி டேவி 1829-ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி ஜெனிவாவில் காலமானார். இவரை இன்றும் அறிவியல் உலகம் ‘மின்சார – இரசாயனத்தின் தந்தை’ எனப் போற்றிப் பாராட்டுகிறது. 

 - பி.தயாளன்

Pin It