இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதல் நோபல் பரிசு பெற்ற பெண்மணி! இவர் வைட்டமின் B12 மூலக்கூறின் சிக்கலான வடிவத்தை எக்ஸ் கதிரைப் பயன்படுத்திக் கண்டுபிடித்ததற்கான வேதியியல் துறைக்கான 1964 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார்! தமது அறிவியல் வழிகாட்டி பெர்னால் என்பவருடன் அந்நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்!

             dorothy hodgkin  ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’ – எகிப்தில் உள்ள கெய்ரோவில் 1910 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள், ஜான் வின்டர் ரோதி - கிரேஸ்மேரி கிராபுட் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை எகிப்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தார். பின்னர் சூடான் நாட்டிற்குச் சென்று அங்கு கல்வித் துறை இயக்குநராகவும், பழங்கால வரலாற்று ஆய்வுத் துறையின் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

               ‘டூரோதி; தமது பள்ளிக்கல்வியை இங்கிலாந்துக்குச் சென்று பயின்றதால் கல்வி ஊக்கத் தொகை கிடைத்தது. இதைக் கொண்டு ஆக்ஸ்போர்டு சோமர்வில்லி கல்லூரியில் சேர்ந்து வேதியியல் பயின்றார். தமது ஆர்வம் முழுவதையும் எக்ஸ் – கதிர் படிகவியலில் செலுத்தினார். பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். மேல்படிப்பிற்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தனது மேல்படிப்பை, கேம்பிரிட்ஜ் சென்று ஜான் டெஸ்மாண்ட் பெர்னால் என்பவரின் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்து எக்ஸ் கதிர்களை, வேதியியல் மற்றும் உயிரியியலில் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றார்.

               பெர்னால் சிறந்த படிகவியல் அறிஞர்; கம்யூனிச சிந்தனையாளர்; அறிவியல் வளர்ச்சியை மனிதகுலத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்! பாசிசக் கொள்கைகளை எதிர்க்க வேண்டுமெனில் பல்கலைக் கழகங்களில் அறிவியலை வளர்க்க வேண்டும் என்றார். டூரோதி பெர்னாலுடன் இணைந்து அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் பன்னிரண்டை எழுதி வெளியிட்டார்.

               ஆக்ஸ்போர்டு சோமர்வில்லி கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்தை கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேலும், இன்சுலின் பற்றிய தமது ஆய்வைத் தொடர்ந்தார். இன்சுலினைத் தனியாகப் பகுத்து அதன் கட்டமைப்பையும் வடிவத்தையும் கண்டறிவதில் தனது ஆய்வுகளை பத்து ஆண்டுகள் மேற்கொண்டார். தமது இருபத்து அய்ந்தாவது வயதில், 1934 ஆம் ஆண்டு அதன் கட்டமைப்பு மற்றும் வடிவத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்.

               பென்சிலின் பற்றிய ஆய்வை 1942 ஆம் ஆண்டு மேற்கொண்டார். ராணுவ வீரர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திட அதை செயற்கை முறையில் தயாரிக்க முயற்சி எடுத்தார். நீண்டகால ஆய்வுக்குப் பின் டூரோதி பென்சிலின் மூலக்கூறின் வடிவத்தைக் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பின் மாதிரியைக் கொண்டு, புதிய மருந்து வடிவத்தைப் பின்னர் உருவாக்கினர்.

               ‘டூரோதி’ – வைட்டமின் B12 வடிவத்தைப் பனிரெண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துக் கண்டறிந்தார். வைட்டமின் B12 மருத்துவ ரீதியில் மிகவும் பயன் உள்ளது. இது கல்லீரலில் உற்பத்தியாகிறது.

               வைட்டமின் B12 மூலக்கூறின் சிக்கலான வடிவத்தை எக்ஸ் கதிரைப் பயன்படுத்திக் கண்டுபிடித்தார். வைட்டமின் B12 மூலக்கூறுகள், சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றன. மனித உடலுக்குக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் ரத்த சோகை நோயைத் தடுக்கின்றன. இந்த ஆய்வை செய்வதற்கு எக்ஸ் கதிர் கிரைஸ்டலோகிராபி (X –ray Gystallographie) முறையைப் பயன்படுத்தினார். சில மருந்து நிறுவனங்கள், இவரது கண்டுபிடிப்பைத் தமது உரிமையாக்கிக் கொள்ள முயன்றனர். “பணம் கொடுக்கிறோம்; கண்டுபிடிப்பை எங்களுக்கு கொடுத்து விடுங்கள்” என, சில மருந்து நிறுவன முதலாளிகள் மிரட்டினர். மிரட்டலுக்கு அடிபணியாமல், ‘தன்னுடைய கண்டுபிடிப்பு முழுவதும் மக்களுக்கானது’- என அறிவித்தார்.

இவர் உலக சமாதான இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டதால், அமெரிக்காவுக்குச் செல்ல 1953 ஆம் ஆண்டு தடை விதித்தனர்.

               இவர் பல்கலைக் கழகத்தில் படிகவியல் துறையின் தலைவராகவும், எக்ஸ் கதிர் படிகவியல் துறையின் விரிவுரையாளராகவும், ராயல் கழகத்தில் பேராசிரியராகவும் 1946 முதல் 1960 வரை சிறப்பாக பணிபுரிந்தார். ‘படிகவியல் துறைக்கு’- என ஒரு தனியான அமைப்பை ஏற்படுத்தினார். நெதர்லாந்து ராயல் அறிவியல் கழகத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதியாகவும், அமெரிக்காவின் கலை அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டார்.

               ‘டூரோதி’, -1937 ஆம் ஆண்டில் தாமஸ் ஹாட்கின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து பாடுபட்டு வந்தார்.

               கணவரும், மனைவியும் உலக சமாதானத்திற்காக உழைத்தனர். தன் கணவருடன் இரஸ்யா, சீனா, வியட்நாம், ஜப்பான் மற்றும் இந்தியா முதலிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கேரளாவிற்கு 1979 ஆம் ஆண்டு சென்று, கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டை நேரில் சந்தித்து உலக சமாதானம் குறித்துக் கலந்துரையாடினார்!

               வியட்நாம் மீது அமெரிக்கா போர் புரிந்ததைக் கண்டித்துக் குரல் கொடுத்தார். வியட்நாம் போரில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டு புரியவென்றே, தன் மகள் எலிசபெத்தை அனுப்பி வைத்தார்.

               ராயல் விருதை 1958 ஆம் ஆண்டில் பெற்றார். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 1970 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இவரது கணவர் ஹாட்கின், கல்வி உதவித் தொகை வழங்கும் அமைப்பை எற்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளின் மாணவர்கள் கல்வி கற்கப் பேருதவி செய்து வந்தார்!

               டூரோதி, 1987 ஆம் ஆண்டு லாம்னசோவ் தங்கப்பதக்கம் (Lomonsov Gold medal) பெற்றார். சோவியத் விஞ்ஞானக் கழகம் 1987 ஆம் லெனின் அமைதி பரிசை (Lenin Peace prize) இவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது!

               வாழ்நாள் முழுவதும் அறிவியல் வளர்ச்சிக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், உழைத்த ‘டுரோத்தி’ அம்மையார் 1994 ஆம் ஆண்டு தமது எண்பத்தி நான்காம் வயதில் இயற்கை எய்தினார்.          

- பி.தயாளன்

Pin It