போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் புதிய சதி

ellam4 450jpgஎதிர்வரும் மார்ச் மாதம் அய்.நா.வில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை விவாததக்கு வரவிருக்கிறது. இலங்கை அரங்கேற்றி வரும் சூழ்ச்சிகளையும், தமிழர்கள் நிகழ்த்த வேண்டிய எதிர்விளைவுகளையும் அலசுகிறது இந்த ஆய்வு. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது.

28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை கொல்வதற்காக முன்னாள் போராளிகள் போட்டசதித் திட்டம் அம்பலமாகியிருப்பதாககூறுகிறார்.

இதேநாளில் இதே செய்தி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் இதழிலிலும் கட்டுரையாக வெளிவருகிறது.

ஏற்கெனவே இது தொடர்பில் 4 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

திடீரென தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருவதும் அதற்காக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நால்வரை கைது செய்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஜோசப்பரராஜசிங்கத்தை அவர்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சர்ச்சுக்குள் வைத்தே அவரைக் கொன்ற சிங்களப் பேரினவாத அரசுதான் இன்று ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்காக பதறித் துடிப்பதோடு அதை சாக்காக வைத்து தமிழ்ப் போராளிகளை கைதும் செய்கிறது. அதிலும் சுமந்திரன் 2009-க்கு பிறகு முழுமையாக சிங்களப் பேரினவாத அரசிடம் சரணாகதி அடைந்தவர். சிங்கள அரசின் தூதுவராகவே செயல்பட்டவர். அதிலும் குறிப்பாக மைத்திரிபால சிறீசேனா அரசு பதவியேற்றப் பிறகு இலங்கையில் முழுமையான அமைதி திரும்பிவிட்டதாக உலகெங்கும் சென்று பிரச்சாரம் செய்து வருபவர். அப்படிப்பட்ட சுமந்திரனை சாக்காக வைத்துதான் இந்த கைது நடவடிக்கைகளை இலங்கை அரசுமேற்கொண்டு வருகிறது.

இதற்கான காரணம் மிக எளிமையானது. மிகக் கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீட்டிப்பதற்கான ஒரு காரணமாக போராளிகளால் இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாகஉலகைநம்பசெய்யவேண்டும்.இதுவே இலங்கை அரசின் நோக்கம். இது நாள் வரை உலகை பற்றிக் கவலைப்படாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீட்டித்து வந்த இலங்கை அரசு, தற்போது மட்டும் உலகின் கருத்துக்கு அஞ்சுவதுபோல் நடிப்பதன் காரணத்தைப் புரிந்துகொள்ள மேலும் பல செய்திகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்டரீதியாகவும் பிற வகை களிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம்உண்மை, நீதி, நிவாரணம் மற்றும்மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பது ஆகியவற்றை உறுதி செய்வது” என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியின் அடிப்படையில், தான் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அதன் விளைவுகளையும் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள அய். நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசு அறிக்கையாக அளிக்கவேண்டும்.இதற்கானகாலக்கெடுமுடிய இரண்டு மாதங்கள்கூட இல்லாத நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்மங்களசமரவீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின்போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அரசின் துணையுடள் இலங்கை அரசு கடந்த டிசம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள அய். நாடுகள் அவையின் தலைமையத்திற்குள்ளே அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தியுள்ளது. அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் இலங்கை அரசு கீழ் காணும் செய்திகளை முன் வைத்தது.

  • இதன் அடிப்படையில், பொறுப்புக் கூறலுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டிருப்பதால் அதற்கு தமக்கு வருகின்ற மார்ச் மாதத்திலிருந்து 18 மாதங்கள் தேவைப்படுவதாகவும் அதாவது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் அத்துடன் அதற்காக தமக்கு நிதியுதவிகள் வழங்கவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உலக நாடுகளிடம் தனது பிரச்சாரத்தை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய அரசும் பெருந்துணையாக இருந்து வருகிறது. எதிர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள அய். நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கையை இலங்கை அரசு முன் வைக்கும். அது, குழுக் கூட்டத்தில் ஏற்கப்படுமானால் ஈழத்தமிழர்கள் மிகவும் மோசமான சூழலுக்குள் தள்ளப்படுவார்கள். ஏனெனில், இலங்கை அரசு முன் வைத்துள்ளதை போன்ற சூழல் தற்போது இலங்கையில் நிலவவில்லை.

கடந்த2011ஆம்ஆண்டு,அய்.நா.வல்லுநர்குழு இலங்கையில் நடைபெற்ற போர் குறித்துஅளித்த அறிக்கையில், இலங்கை அரசுக்கு ஆதரவாக 2009 மே 18 அன்று இந்தியா முன்னின்று, சீனா, ரஷ்யா மற்றும் கியூபா போன்ற தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசைப் பாராட்டியும், அதற்கு உலக நாடுகள் உதவக் கோரியும் அய். நா. மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அய். நா. மனித உரிமைகள் குழு, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுளில் நடத்தப்பட்ட தனது கூட்டங்களில் விவாதம் நடத்தி தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று தீர்மானங்களுமே இலங்கை அரசுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகவே இருந்தன. 2014-இல் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் ஒருபகுதியாக, மனித உரிமைக் குழுவே இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஒரு விசாரணையை மேற்கொண்டு ஓர் ஆண்டிற்குள் அறிக்கை அளிக்கவேண்டும்என்றுபரிந்துரைக்கப்பட்டது. அதன்படி 2015 மார்ச் மாதத்தில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது.

இதற்கிடையே 2015 ஜனவரி மாதம் இலங்கையில் மகிந்த இராஜபக்சே அரசு மாறி மைத்திரிபால சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.அதன்பின்னர்“மகிந்த இராஜபக்சேவை பதவியிலிருந்து நீக்கியாகிவிட்டது. புதிய அரசு பொறுப்பேற்றுவிட்டது. இனி எல்லாம் சுகமே” என்ற செய்தி திட்டமிட்டுபரப்பப்பட்டது. இதை பரப்பியவர்கள் இலங்கை அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்ல. அய். நா. வின் பிரதிநிதிகளுடன் சில தமிழர் தலைவர்களும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கடந்த2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அய். நா. வின்மனிதஉரிமைக் குழுவில், இலங்கையில் தற்போதுஉள்ளமனிதஉரிமைச்சூழல்குறித்தும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலை குறித்தும் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த உரை ஊடகங்களில் பரவலாக வெளியானபின்னர்,சில புலம் பெயர்ந்ததமிழ்த் தலைவர்களும், இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் என்னிடம் தொலைபேசி ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் பேசினார்கள். தங்களுக்காக குரல் கொடுத்தமைக்காகநன்றிதெரிவித்துவிட்டு“புதிய அரசுக்கு நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ellam3 350jpgஅய். நா. மனித உரிமைக் குழுவில் நான் உரையாற்றிய அதே 2015 மார்ச் மாதத்தில்தான் மனித உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. ஆனால் அதை 2015 செப்டம்பர்மாதத்திற்குதள்ளிப்போடும்திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து எங்கள் கருத்து அறிய அய். நா. மனித உரிமைக் குழுவின் பிரதிநிதி ஒருவர் என்னையும் இலங்கை வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தொடர்ந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து துணிச்சலாக எதிர்ப்பு தெரிவித்து வருபவருமான ஆனந்திசசிதரன் அவர்களையும் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் என்னுடைய பங்கு பெரும்பாலும் மொழிப் பெயர்ப்பாளர் பணியாகவே இருந்தது.

அய்.நா.மனிதஉரிமைக்குழுவின்அறிக்கையை ஆறு மாதம் கழித்து வெளியிடுவதற்கு அந்தப் பிரதிநிதி சொன்ன காரணங்கள் “புதிய அரசுக்கு நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்கள் மீது நம்பிக்கைவைக்கவேண்டும்.6மாதங்கள்தானே.

பொறுத்திருங்கள் ”என்பது தான். ஆனால்அதற்கு உடனடியாகபதில்அளித்தஆனந்தி“உங்களுக்கு 6 மாதங்கள் என்பது ஒன்றுமில்லாததாகத் தோன்றலாம். நீங்கள் காலத்தை மாதங்களில் கணக்கிடுகிறீர்கள். ஆனால் நாங்கள் அதனை நொடிகளில் கணக்கிடுகிறோம். ஏனெனில் ஒவ்வொரு நொடியையும் நாங்கள் எங்கள் உயிரையும் மானத்தையும் கையில் பிடித்துக் கொண்டு கடக்கிறோம். அப்படியிருக்க 6 மாதங்கள் என்பது மலைப்பான காலமாக, நம்பிக்கையிழக்க வைக்கும் காலமாக, கண்ணுக்கெட்டாத தொலைவாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது” என்றார். அவரது சொற்களில் வெளிப்படும் ஆழமான வேதனைக்குப் பின்னால், ஈழத்தில் தற்போது நிலவும் கொடுமையான சூழலின் தன்மை புதைந்துள்ளது.

ஆனந்தி அவர்களின் இந்த பதிலை கேட்ட பின், அய். நா. மனித உரிமைக் குழுவின் பிரதிநிதி எதுவும் பேசாமல் இறுகி போன முகத்துடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர், விடை பெற்று கிளம்பினார். ஆனாலும் அந்த அறிக்கை 6 மாதம் கழித்தே வெளியிடப்பட்டது. 6 மாதம் கழித்து வெளியிடுவதற்கு அந்தப்பிரதிநிதிகூறிய மற்றொரு காரணம், “தற்போது வெளியிட்டால், புதிய அரசுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், உள்ளக விசாரணையைப் பரிந்துரைத்து விடுவார்கள். ஆனால் 6 மாதம் கழித்து என்றால் நாம் அனைத்துலக விசாரணைக் கோரலாம்” என்று கூறினார். ஆனால் 6 மாதம் கழித்தே அறிக்கை வெளியிடப்பட்ட போதும் அனைத்துலக விசாரணை பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக Hybrid Mechanism என்ற பெயரில், அனைத்துலக மேற்பார்வையோடு உள்ளக விசாரணை என்பதாக பரிந்துரைக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையைதான் வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதற்குத்தான் இலங்கை அரசு இன்னும் 18 மாத கால அவகாசம் கேட்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, 6 மாத கால அவகாசத்தை எத்தனைக் கொடியது என்று ஆனந்தி எடுத்துக் காட்டினார். இன்றைய நிலையில் 18 மாத கால அவகாசம் என்பது இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

மைத்திரிபால சிறிசேனா பதவியேற்ற இந்த இரண்டாண்டுகளில் மாற்றம் நடந்துள்ளதா என்றால் நிச்சயம் மாற்றம் நடந்துள்ளது. ஆனால் அந்த மாற்றங்கள் நல்லிணக்கத்திற்கான மாற்றங்களாகவோ, தமிழர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றங்களாகவோ நிகழவில்லை. மேலும் மோசமான நிலைக்கு தமிழர்களை தள்ளுவதான மாற்றங்களாகவே அவை நிகழ்ந்துள்ளன.

தமிழர் பகுதியில் இன்னமும் இராணுவ நிர்வாகமே நடந்து வருகிறது. உலக நாடுகளிடமிருந்து நிதி பெற்று இலங்கை அரசு செய்யும்வளர்ச்சிப்பணிகளையும் இராணுவமே மேற்கொள்கிறது.அந்தவளர்ச்சிப்பணிகளினால் பயன் பெறுபவர்கள் சிங்கள மக்களாகவே உள்ளனர்.தமிழர்தாயகம்என்றஅடையாளத்தை அழிக்கும் வண்ணம் சிங்களக் குடியேற்றங்களும், புத்த விகாரங்கள் அமைக்கப்படுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஊர்களுக்கு இருந்த தமிழ்ப் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற்று விட்டன. இவை அனைத்தும் மைத்திரிபால சிறிசேனா அரசு பதவி ஏற்றப் பிறகு இன்னும் அதிக வேகத்துடன் நடந்தனவே தவிர மாறவில்லை.

தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மீன்பிடிப்பும் விளை நிலங்களுமே இருந்து வருகின்றன. தமிழர் தாயகத்தின் ஆகப் பெரும் மீன் பிடிப்புப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டம் நெடுகிலும் தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மீன் பிடிப்புக்கு அனுமதி தர வேண்டிய இராணுவம், 20 தமிழர்களுக்கு அனுமதி அளித்தால் 80 சிங்களர்களுக்கு அனுமதிஅளிக்கிறது. இதனால் அப்பகுதியின் மீன் பிடிப்பு முழுவதும் ஏறத்தாழ சிங்களர்வசம்சென்றுவிட்டது.மற்றொருமுக்கிய மீன் பிடிப்புப் பகுதியான யாழ்ப்பாணத்தில் கடலோரப் பகுதி முழுவதும் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக மயிலிட்டிஎன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மீனவ கிராமம் இராணுவ பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு அங்கு இராணுவத்தினரின் குடும்பங்களின் கேளிக்கைக்கான பொழுது போக்குத் தலம் (Resort) அமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெயர்ந்த மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைஇராணுவம் கையகப்படுத்தியுள்ளது. அவற்றில் விளைநிலங்களும் அடக்கம். கடந்த அரசும் சரி, தற்போதைய அரசும் சரி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நிலங்களை பறிப்பதில் ஈடுபட்டனர்.

இருப்பதிலேயே அதிகமாக நிலங்கள் பறிக்கப் பட்ட வலிகாமம் பகுதியின் மீள் குடியேற்றக் குழுத் தலைவர் சஜீவன் அய். நா. வரையில் சென்று தனது மக்களின் துயரங்களை முன் வைத்தார். அய். நா. மனித உரிமைக் குழுவில் அவர் வாய் மொழி வாக்குமூலம் அளித்த போது அதற்கு மொழிப்பெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஏறத்தாழ 26 ஆண்டுகளாக வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்ப இயலாமல் அவதியுறுவதை அவர் விவரித்தார்.

கடந்த 2016 ஏப்ரல் மாத நிலவரப்படி 12,584 ஏக்கர் (51 சதுர கிலோ மீட்டர்) நிலம் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது வடக்கு மாகாண நிலவரம் மட்டுமே. அதாவதுயாழ்ப்பாணம் (6,474ஏக்கர்), முல்லைத் தீவு (1551 ஏக்கர்), கிளிநொச்சி (653 ஏக்கர்), மன்னார் (1747 ஏக்கர்) மற்றும் வவுனியா (2159 ஏக்கர்) மாவட்டங்கள் மட்டுமே. இதில் கடந்த அக்டோபர் மாதம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 454 ஏக்கர் நிலத்தை இராணுவம் திரும்ப மக்களிடம் ஒப்படைத்தது. ஏறத்தாழ 26 ஆண்டு காலப் போராடடத்திற்கு கிடைத்த சிறு வெற்றி இது. ஆனால் இதுவும் கூட அய். நா. வின் பார்வை தன் மீது விழுந்து விட்டதால், சுமூக நிலை திரும்பிவிட்டதாகவும் புதிய அரசு நல்லிணக்கத்திற்கான வேலைகளை செய்வ தாகவும்காட்டநடத்தப்பட்டபலநாடகங்களில் ஒன்றாகவே இருந்தது.

ஏனெனில் இந்த 454 ஏக்கர நிலத்தைத்திருப்பிகொடுக்கும்நிகழ்வின்போதே, யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மகேஷ் சேனநாயகே நாலில் ஒரு பங்கு நிலத்தை இராணுவம் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவித்தார். மறுபுறம் கிழக்கின் நிலவரம் முன் துல்லியமாக கணக்கிடப்படவில்லை. மட்டகளப்பு மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பித் தரக் கோரி போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அம்பாரை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன் அதாவது 2017 ஜனவரி 15 அன்று மீள் குடியேறும் தமிழர்களிடமிருந்து அவர்களின் நிலத்தை இராணுவம் மிரட்டிப் பறித்தது குறித்த புகார் எழுந்தது. அம்பாரை மாவட்டத்தின்பொத்துவில்பகுதியைச்சேர்ந்த30 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடல், நிலம் என எங்கும் இராணுவத்தின் நிர்வாகமே நடக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வார இதழான எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழ் ஏறத்தாழ 1,80,000 படையினர் வடக்கு மாகாணம் முழுவதும் பரவியுள்ளனர்; அதாவது 5.04 பொது மக்களுக்கு ஒரு பாதுகாப்பு படையினர் என்ற அளவில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இந்த நிலை இன்னமும் தொடர்கிறது. புதிய அரசு இராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து திரும்பப் பெறவில்லை.

இராணுவமயமாக்கப்பட்ட இந்தச் சூழலில், போர்க் குற்றங்கள் மீதான விசாரணை நடத்தப்படுவதும் அதற்கு தமிழ் மக்கள் வந்து தங்கள் பாதிப்புகளைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எத்தகைய அடிப்படை நியாயமுமற்ற கண் துடைப்பாகவே உள்ளது.

மேலும் 5 மக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்று இராணுவத்தினரின் நெரிசல் மிகுந்த சூழலில் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வு மிகுந்த அச்சுறுத்தலுடன் கழிகிறது. ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் உள்ளுர் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, உணவு விடுதிகளையும் பண்ணைகளையும் சிறார் பள்ளிகளையும் கூட இந்நிலங்களில் நடத்தி வருகின்றனர். இது மறைமுகமாக அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

தனி நபர்களின் நிலங்களை மட்டுமல்ல, மாவீரர் துயிலும் இல்லங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தமிழ் மக்கள் புனிதமாக கருதும் இந்த துயிலும் இல்லங்களை இடித்து, சிலவற்றை கால்பந்து மைதானமாகக் கூட மாற்றியுள்ளது இலங்கை இராணுவம்.

2009-க்குப் பிறகு, மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தின் அதீத இருப்பின் காரணமாகவும் ஒரு சில ஆண்டுகள் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே மாவீரர்களைநினைவுகூர்ந்தனர்.ஒருசிலபொது

நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால் அரசு அக்காலக்கட்டத்தில் கூடுதல் படையினரை அனுப்பி மக்களை அச்சுறுத்த முயன்றது. கடந்த ஆண்டு (2016) தமிழ்த் தலைவர்கள் மாவீரர் நாளை பொது வெளியில் கடைபிடிக்க அனுமதிக்க வேண்டும்எனஅரசிடம்கோரிக்கைவிடுத்தனர். ஆனால் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தனா, கடந்த நவம்பர் 22, 2016 அன்று மாவீரர் நாளை பொதுவில் நடத்த அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறு கடைபிடிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அதையும் மீறி 2016 மாவீரர் நாளில் பொது மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூடி தங்கள் பிள்ளைகளுக்குவீரவணக்கம்செலுத்தினார்கள். அரசின் அச்சுறுத்தலை மீறி கூடிய மக்களை தானேஅனுமதித்ததாகஉலகத்தின் முன்காட்ட நினைக்கிறது இலங்கை அரசு.

மறுபுறம் 2009 மே மாதத்தில் இராணுவத்தின் பிடியில் சிக்கிய போராளிகளின் நிலை என்ன என்பதை உலகிற்கு தெரிவிக்க மறுத்து வருகிறது இலங்கை அரசு. கடந்த பிப்ரவரி 1 2010-இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேர் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இலங்கை அரசும் 11,000 பேர் முன்னாள் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களை கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றப் பிறகும் இந்த நிலை மாறவில்லை.

வடக்கு மாகாண சபையின் பிரதிநிதியான ஆனந்தி சசிதரன், இவ்வாறு தங்கள் அன்புக் குரியவர்களைத் தொலைத்தவர்களின் அடையாளமாக நிற்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த அவரது கணவர்சசிதரன்என்றஎழிலன்,2009ஆம்ஆண்டு மே மாதத்தில் அவரது கண்முன் இலங்கை இராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இன்றுவரை அவரது நிலை என்ன என்பது குறித்துத் தெரியவில்லை. தனது 3 மகள்களுடன் அவர் இன்னமும் தனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போலவே 40 வயதிற்கு குறைவான பல ஆண்கள், போராளி என்றசந்தேகத்தில்இலங்கைஇராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டனர்.

ஏறத்தாழ 8 ஆண்டுகள் கடந்து விட்டன. குழந்தைகள் வளர்கின்றனர். இந்த குழந்தை களிடம் யாரோ ஒருவர். இயல்பாக அவர்களது தந்தையைப் பற்றி கேட்டால் தங்கள் தந்தை இறந்து விட்டார் என்றோ இல்லை அவர் உயிருடன் இன்ன இடத்தில் இருக்கிறார் என்றோ எதுவும் சொல்ல முடியாத நிலையில், மிக இயல்பான, சாதாரணமான இந்த ஒரு கேள்வியை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் அக்குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலையும், இது அக்குழந்தைகளின் வளர்ச்சியில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நினைத்து பார்க்கவே மனம் பதைக்கிறது.

இவ்வாறு இராணுவத்தினால் கொண்டு செல்லப்பட்டவர்கள் குறித்து ஒரு வெளிப் படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆனந்தி சசிதரன் மக்களை திரட்டி அரசை வற்புறுத்தி வருகிறார். ஆனால் இன்று வரையில் அப்படியான ஓர் அறிக்கை வெளியிடப் படவில்லை.இலங்கைஅரசின்உச்சநீதிமன்றமே உத்தரவிட்டப் பிறகும் கூட அப்படியான அறிக்கையை வெளியிட புதிய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இன்னொரு புறம் நீதிக்காக எழும்பும் குரல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் ஆயுதமாக பொய்யாக புனையப்பட்ட வழக்குகளும் அதை தொடர்ந்த கைதுகளும் பயன்படுத்தப்படுகின்றன. போர் முடிந்ததாகஅறிவிக்கப்பட்டப்பிறகானகடந்த8 ஆண்டுகளில்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நெடுகிலும், ஆண்களும் பெண்களுமாக பலரும் காரணமின்றி கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2014-இல் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயகுமாரி ஆகியோர் உண்மையின் குரலை ஒடுக்குவதில் இலங்கை அரசு காட்டும் தீவிரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஜெயக்குமாரியின் 15 வயது மகன் மே 2009-இல் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் அரசு அவர் தங்கள் பொறுப்பில் இருப்பதை மறுத்தது. ஆனால் அரசு நடத்திய முன்னாள் போராளிகளுக்கான மறு வாழ்வு மய்யம் ஒன்றின் புகைப்படத்தை அரசு வெளியிட்ட போது, அதில் தனது மகன் இருப்பதை கண்ட ஜெயக்குமாரியின் மகனுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அதிகாரிகள் மேலும் விவரங்களை அளிக்க மறுத்தநிலையில், ஜெயக்குமாரியும் விபூசிகாவும் காணாமல் போனவர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 13, 2014 அன்று பாலேந்திரன் ஜெயக்குமாரியும் அவரது 13 வயது பள்ளிச் சிறுமி விபூசிகாவும் பயங்கர வாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். பொய்க் குற்றம் சாட்டப் பட்ட ஜெயக்குமாரியையும் அவரது சிறிய மகளையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மாவட்ட நீதிபதி இட்ட உத்தரவின்படி தெற்கு இலங்கையில் உள்ள பூசா சிறைக்கு ஜெயக்குமாரியும் வடக்கு இலங்கையில் உள்ள சிறார் இல்லத்திற்கு விபூசிகாவும் அனுப்பப்பட்டனர். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர், உலகெங்கும் எழுந்த மனித உரிமைக் குரல்கள் காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார். இது ஒற்றை நிகழ்வல்ல. 13 வயது பெண் விபூசிகாவும் இதில் தொடர்புபட்டதால் ஜெயக்குமாரியின் கைது குறித்த செய்தி பரவலாக மனித உரிமை ஆர்வலர்களால் எடுத்து பேசப்பட்டது. ஆனால் அப்படி வெளியே வராத பல நிகழ்வுகள் உள்ளன.

இன்று வரை இப்படியான சட்ட விரோத கைதுகள் தொடர்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்னர், கடந்த 2017 ஜனவரி 15 அன்று, கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான முருகையா தவவேந்தன் மற்றும் குலேந்திரன் கராலசிங்கம் ஆகிய இருவரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரி-வினரால் கடத்திச்செல்லப்பட்டனர்.2009-இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப் பின் 2010-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் இணைந்த அவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக சாதாரண வாழ்வையே வாழ்ந்து வந்துள்ளனர். அன்று வழக்கம் போல வேலைக்குச் சென்ற இவர்கள் திரும்பி வராததால் இவர்களை காணாமல் குடும்பத்தினர் தவித்துத் தேடிய போதே அவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வவுனியாவில் தடுத்த வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் குடும்பத்தினருக்கு முறைப்படியான எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,“சிறைகளுக்குள்சிறை”எனதனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறைகளில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்தினர் அவர்களை சந்திப்பது கடினமாக உள்ளது. வழக்கு விசாரணைகள் உரிய காரணமின்றி தாமதிக்கப்படுகின்றன. இதனால் தங்கள் மீதான வழக்குகளுக்கான தண்டனைக்குரிய காலத்தைக் கடந்தும் விசாரணைக் கைதிகளாகவே பலரும் சிறையில் வாடுகின்றனர்.

சித்ரவதை, கேள்வியற்ற தடுப்புக் காவல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு மறுப்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக இலங்கையின் கொடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) உள்ளதாக உலகெங்கும் உள்ள சட்டஅறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.ஆனாலும் இலங்கை அரசு இச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீட்டிப்பதற்காகவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் கொலை முயற்சி எனும் நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றுகிறது.

மற்றொரு புறம் அரசின் புனர் வாழ்விற்கு பின்சில போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுவிக்கப்பட்டப் போராளிகள் பலரும்வெளிவந்துசிலமாதங்களிலேயேகொடிய ஆட்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து போயுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் பெண்கள் அரசியற் பிரிவு தலைவர் தமிழினியும் அடக்கம். அவர் வெளிவந்து சில மாதங்களில் புற்றுநோயால்பாதிக்கப்பட்டுஇறந்துபோனார். இதனைத்தொடர்ந்துபோராளிகளுக்குசிறையில் இரசாயன உணவு கொடுக்கப்பட்டதாகவும் விஷ ஊசி போடப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

கடந்தஆகஸ்டு7,2016அன்றுவடக்குமாகாண முதலமைச்சர் விக்னேசுவரன், “இலங்கை அரசின் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமுன்னாள் போராளிகளுக்கு இரசாயனஊசிபோடப்பட்டதாகவும்அதனால் பல போராளிகள் புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கு ஆளாகி இறந்ததாகவும்” தனக்கு புகார் வந்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பில் மேலதிக விவரங்களை தான் சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில்தமிழ் மக்கள் சமூகம் இது தொடர்பில் பன்னாட்டு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.

ellam military 450இலங்கை அரசு என்பது மாறி வரும் அரசாங்கங்களை பொறுத்தது அல்ல. கடந்த 60 ஆண்டுகளாக அரசாங்கங்கள் மாறிய போதும் இலங்கை அரசு ஒரு சிங்கள பேரினவாத அரசாகவே இருந்த வந்துள்ளது. அதே நிலையே இன்றைய மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கத்திலும் தொடர்கிறது.

எதிர்ப்புகளை, அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கொண்டே அடக்கிய முந்தைய அரசுகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல இந்த அரசு.

கடந்த அக்டோபர் 20, 2016 அன்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் எனும் இரு மாணவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே முன்னணியில் நிற்கின்றனர். எனவே இந்த இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதானது ஒட்டுமொத்த மாணவர்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே உள்ளது.

மேலும், தனது முந்தைய அரசுகளைப் போலவே இந்த அரசும் நடந்து விட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை மட்டுமல்லாது 60 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இனப்படுகொலையையும் மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமாயின் தமிழர் நிலையை மேலும் மோசமாக்கும் என்பதில் அய்யமில்லை. இதனை தடுக்க இன்னும் ஒருமாத காலமே நம்மிடம் உள்ளது. இலங்கை அரசோ மிகத் தீவிரமாக தனது பிரச்சாரப் பணியை முடுக்கி விட்டுள்ளது. உலக நாடுகளின் ஆதரவை பெற திட்டமிட்டு வேலை செய்கிறது. நாமும் நமது பங்கிற்கு உலக நாடுகளிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

உலகம் என்பது அரசுகள் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள குடிமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை நாம் அணுகி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களைக் கொண்டு இலங்கையில் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்கிறது என்பதை பேச வைக்க வேண்டும். வல்லாதிக்க நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விடாதுதான். ஆனால் இப்படியான கருத்துருவாக்கத்தின் மூலமாக நாம் ஏற்படுத்தும் அழுத்தமே, அந்நாட்டின் அரசுகள் தமிழருக்கு எதிராக செயல்படும் வேகத்தை கொஞ்சமேனும் மட்டுப்படுத்த உதவும்.

மேலும் உலக நாடுகள் என்பதுவல்லாதிக்கநாடுகளான அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் மட்டும் அல்ல. அய். நாடுகள் அவையைப் பொருத்த அளவில் அமெரிக்காவுக்கும் உலகின் சின்னஞ்சிறிய நாட்டுக்கும் வாக்கு மதிப்பு ஒன்றுதான். மனித உரிமைக் குழுவில் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர முடியுமானால் அதே போன்று பராகுவே போன்ற சிறிய நாடும் கொண்டு வர முடியும். அதற்கான வாக்கெடுப்பில் சின்னஞ் சிறிய நாடுகள் ஒவ்வொன்றின் வாக்கும் மதிப்பு பெறும். எனவே நமது பிரச்சார களத்தை நாம் விரிவுபடுத்த வேண்டும். இதற்கு, மூன்று முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து நாம் இயங்க வேண்டும்.

இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்ததும் இன்றும் தொடர்வதும் வெறுமனே போர்க்குற்றங்கள் அல்ல; இனப்படுகொலை.

தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றத்தை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.

இனப்படுகொலைக் குற்றித்தினால் பாதிக் கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரணத் தீர்வாகவும், நிரந்தர அரசியல் தீர்வாகவும், இலங்கையிலும், இந்தியா விலும் மற்றும் உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழ் மக்களிடையே தனித் தமிழ் ஈழ நாட்டிற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

இந்த மூன்று கோரிக்கைகளையும் அழுத்தமாக உலகம் அறிய செய்ய வேண்டும். இதனை தமிழ் நாட்டிற்குள் மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் என அனைத்து மட்டங்களிலும் இச்செய்தியை கொண்டு சேர்த்துஆதரவுதிரட்ட வேண்டியது நமது முதன்மை பணியாகும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.