இந்த மாதம் 27ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் 19ஆம் கூட்டத்தொடர் ஜெனீவாவில் கூட இருக்கிறது. இக்கூட்டத்தில் இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்னும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர இருக்கிறது. அப்போது இந்தியா என்ன செய்யப் போகிறது?
ஈழத்தில் வீரம்செறிந்த விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இனவெறி இராணுவத் திற்கும் இடையே நடைபெற்ற போரின்போது, இந்தியா இலங்கைக்குச் செய்த ஆயுத உதவி உட்பட பல உதவிகளால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செயயப்பட்டு அழிந்துபோனார்கள். இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்ததை அந்நாட்ட அமைச்சர்களே வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்.
அந்தப்போரின் போது தமிழ்நாடே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இதனை மனித நேயக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், தேசிய கண்ணோட்டத்தில் பார்ப்பதா கவும், இலங்கையின் இறையாண்மை யில் இந்தியா தலையிடாது என்றும் வியாக்கியானம் செய்துகொண்டி ருந்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
இப்போது ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை உலகமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை இந்தியாவின் அண்டை நாடு. அந்நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்பட்டால், அதன் நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சிறீலங்கா சேர்ந்து கொள்ளும். இது இந்தியா இறையாண் மைக்கு உகந்ததாக இருக்க முடியாது என்று ஒரு புதுமையான விளக்கத்தை, வழக்கம் போல் இந்தியா சொல்லக்கூடும்.
சிறிது பின்னோக்கி இந்திய வரலாற்றைப் பார்ப்போம். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பொறுப்பேற்ற சில நாட்களில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை ஒரு தளமாக உள்ளது. அது எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டாலோ, நடுநிலை வகித்தாலோ, இந்தியாவின் பாதுகாப் பிற்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார். பின் வந்த காலங்களில் இலங்கையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஒலிபரப்பு நிறுவனத்தை அமைக்க புத்தளம் பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னந்தோப்பு களை அமெரிக்காவிற்கு வழங்கினார் அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தனே. அதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது - அவ்வளவுதான்.
ஆனால் அதே காலகட்டத்தில் ஈழத்தமிழர் களுக்குஎதிராக ஏவிவிடப்பட்ட சிங்கள வன்முறை வெறியாட்டங்களை, 1983ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டில் கூடிய அணிசேரா நாடுகளின் தலைவர் கள் மாநாட்டில், இலங்கைத் தொழிற் சங்கத் தலைவர் எம்.எஸ். செல்லச்சாமி பேசிய பேச்சு, இந்திய பிரதமர் இந்திரா காந்தியை கொதிப் படையச் செய்தது. இதை அறிந்த அன்றைய பாது காப்புத்துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன், இலங்கைக்கு நாம் படை அனுப்பக் கூடாது. அனுப்பினால் நமக்கு எதிரான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து விடும் அதனால் பெரும்போர் மூளும் என்று இலங்கைக்கு ஆதரவு நிலை எடுத்து திருச்சியில் பேசினார்.
ஆனால் வெங்கட்ராமனின் பேச்சைப் பொருட்படுத்தாமல், இந்திரா காந்தி, இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர் செல்லச்சாமியே இப்படிப் பேசுகிறார் என்றால், என்ன பொருள்? தமிழ் மக்களுக்கு இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதானே! இந்தத் தமிழர்கள் யார்? இந்திய வம்சாவழியினர் அல்லவா. அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், உதவ வேண்டிய பெரிய பொறுப்பு நம் இந்தியா வுக்குத்தானே உண்டு. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கக் கூடாது என்று பேசினார்.
அத்துடன் நில்லாமல் இந்தச் செய்தியைத் தனித்தனித் தூதுவர்கள் மூலம் பல முக்கிய நாடுகளுக்கு அனுப்பி, இலங்கையின் உள்விவ காரங்களில் தலையிட எங்களுக்கு உரிமை உள்ளது. தேவை கருதி அவ்வாறு நாங்கள் தலை யிடும் போது, யாரும் குறுக்கிடாமல் இருந்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விளைவு? பணிந்தார் ஜெயவர்தனே. இந்தியா வல்லரசு. இதை நினைவில் நிறுத்தித்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக் கிறோம் என்று நியுயார்க் டைம்ஸ் ஏட்டிற்குக் கொடுத்த நேர்காணலில் கூறினார்.
இந்த வரலாற்றுச் செய்திகள் எல்லாம் மெளனகுருசாமி மன்மோகன்சிங்கிற்குத் தெரியாதா? யாரும் அவருக்கு இந்த நிகழ்வுகளைச் சொல்லித் தரவில்லையா? சீனாவுடனும், பாகிஸ் தானுடனும் இலங்கை சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு நெருக்கடி தரும் என்பதெல்லாம் வெறும் பூச்சாண்டிகளே.
தான் ஒரு நிரபராதி என்றும், ஈழத்தில் வெறும் எட்டாயிரம் பேர்கள்தான் கொல்லப் பட்டுள்ளனர் என்றும் இராஜபக்சே இப்போது கூறத்தொடங்கியுள்ளார். இதனை உலக நாடுகள் ஒன்றுகூட ஏற்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையில் கூட, 40 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொல்லப் பட்டுள்ளனர் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் சரியானதன்று. ஒரு இலட்சத் திற்கும் மேலானவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் என்னும் நிலையில் அனைத்துலக நாடுகள் இதனை மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா, பிரான்சு, நார்வே முதலான நாடுகள் உரிய சான்றுகளை எல்லாம் திரட்டிக் கொண்டுதான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றத் தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆதரவையும் அவை கோரியுள்ளன. இந்நிலையில் இலங்கையின் சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே, அமெரிக்கா கொண்டுவர இருக்கும தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியை ஏற்கனவே இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும், அதன்படி இந்தியா நடக்கும் என்பது 100 சதவீதம் உறுதி என்றும் கூறியுள்ளார்.
உலகத் தமிழ் மக்களின் அடிவயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும் இச்செய்தி குறித்து இன்று வரை இந்தியா மெளனம் சாதிக்கிறது. அப்படி ஏதும் நடந்தால், அதனை எதிர்த்து எழப்போகும் மக்கள் போராட்டம் இந்திய அரசை நிலைகுலையச் செய்யும் என்பதை அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் உணரவேண்டும்.
எக்காரணம் கொண்டும் இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று தி.மு.கழகத்தின் தலைவர் கலைஞர் 29.02.2012 அன்று அறிக்கை விடுத்திருக்கிறார். மனித நேயமும், நியாமும் அற்ற செயலை இந்திய அரசு ஒருநாளும் செய்யக் கூடாது என்னும் அவருடைய அறிக்கையை யாவது மத்திய காங்கிரஸ் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்பதைப் பார்க்க வேண்டும். எதையும் கணக்கில் கொள்ளாமல், தன் போக்கிலேயே முடிவெடுத்தால், இனிமேல் காங்கிரஸ் கட்சியை எவராலும் காப்பாற்ற முடியாது.