2021 செப்டம்பர் 13ஆம் நாள் ஐநா மனிதவுரிமை உயராணையர் மனிதவுரிமைப் பேரவையின் 48ஆம் அமர்வில் புதிய அறிக்கை அளித்தார். பேரவைக்கு அளித்த அறிக்கையில் மேதகு மிசேல் பசலே அவர்கள் பற்பல துறைகளில் கவலை தெரிவித்தார். அவற்றுள் பின்வருவனவும் அடங்கும்:
1. "இராணுவ மயமாக்கமும் பொறுப்புக் கூறலின்மையும் அடிப்படை உரிமைகள் மீது தாக்கங்கொண்டு அவற்றை அரித்துத் தின்னும் நிலை…"
2. சிறிலங்காவில் ஆகஸ்டு 30ஆம் நாள் பிரகடனம் செய்யப்பட்ட புதிய நெருக்கடிநிலையும் அதனால் அன்றாட வாழ்வின் மீது இராணுவக் கட்டுப்பாடு விரிவடைந்திருப்பதும்;
3. "மனிதவுரிமைக் காவலர்கள், செய்தியாளர்கள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஆகியோர் மீதான வேவு பார்த்தலையும் அச்சுறுத்தலையும் நீதித்துறை வழித் தொல்லைப்படுத்தலையும்" விரிவாக்கி, மாணவர்களையும், கல்வித் துறையினரையும், மருத்துவப் பணியாளர்களையும், சமயத் தலைவர்களையும் கூட இவற்றுக்கு இலக்காக்குதல்;
4. 2008, 2009 ஆண்டுகளில் 11 பேரைக் காணாமலாக்கிய செயல்களுக்காக வசந்த கரண்ணகொடாவுக்கு எதிரான குற்றசாட்டுகளைத் தொடர்வதில்லை என்று அரசுத் தல்கமைச் சட்டத்தரணி எடுத்த முடிவு;
5. அரசாங்கம் தன் “தீவிரங்களைதல்" திட்டத்தின் ஊடாகத் தற்போக்கான நிர்வாக முடிவுசார்ந்த சிறைவைப்புகளில் இறங்கும் முயற்சிகளும், 300க்கு மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குழுக்களையும் தனியாட்களையும் பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டிருப்பதும்:
46/1 தீர்மானத்தில் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான பகுதிகளைச் செயலாக்குவதில் தமது பணி தொடங்கி விட்டதாகவும், தமிழ்ச் சமூக உறுப்பினர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கான பொறுப்பை நிறுவத் தேவையான “கிட்டத்தட்ட 1,20.000 தனி உருப்படிகள்" ஐநாவிடம் இருப்பதைத் தமது அலுவலகம் இனங்கண்டிருப்பதாகவும் உயராணையர் அறியத் தந்தார்.
போர்க் காலத்தில் தமிழ்க்குடிமக்கள் காணாமலாக்கப்பட்டது தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் தொடர்பாகவும் இப்படிப் பெருந்தொகையான சான்றுகள் ஐநா வசம் இருந்த போதிலும் பொறுப்புக்கூறலுக்கு நம்பகமான பன்னாட்டுப் பொறிமுறை ஏதும் இதுவரை தோற்றுவிக்கப்படவில்லை என்பது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேரிட்டது என்பது தொடர்பாக அறிந்து கொள்ளும் உரிமையும் உண்மையறியும் உரிமையும் காணாமற் போனோரின் குடும்பத்தினருக்கு உண்டு. காணாமற்போன அவர்தம் குடும்ப உறவுகள் தொடர்பாகத் தன் வசமுள்ள ஆதாரப் பொருட்பாடுகளை இந்தக் குடும்பங்களுக்கு எட்டச் செய்ய ஐநாவுக்கு சுயேச்சையான கடப்பாடு உள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ’பாதிக்கப்பட்டோர் முனைப்பிலான பன்னாட்டு நீதி’ என்ற ஒரு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தகவல் கிடைக்கப் பெற அனுமதிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஐநாவின் கைவசமுள்ள தகவலை இந்தக் குடும்பங்கள் வேண்டிப் பெறும் படியான ஒரு பொறிமுறையைத் தோற்றுவிக்குமாறு உயராணையரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தந்திருத்தமாகக் கேட்டுக் கொள்கிறது. கையில் வைத்துள்ள பொருத்தப்பாடுள்ள தகவலை வெளியிட மறுப்பது சிறிலங்க அரசாங்கம் ஆனாலும் சரி, ஐநா ஆனாலும் சரி, இந்தக் குடும்பங்களின் துன்பம் தொடர்கிறது. பன்னாட்டுச் சட்டப்படி உண்மையறியும் உரிமை என்பது காணாமற்போன குடும்பத்தினர் தொடர்பாக ஐநா வசமுள்ள தகவலை அணுகிக் கொள்ளும் உரிமையை இந்தக் குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்த உரிமையைச் செலுத்தத் துணைசெய்யுங்கள் என உயரானையரைக் கோருகின்றோம்.
உயராணையர் தொடர்ந்து விழிப்புடன் செயல்படுவதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது. 46/1 தீர்மானத்தின் காரணத்தாலும் அத்தீர்மானத்தைத் தொடர்ந்தும் இந்த 46/1 தீர்மானம் 2022 செப்டம்பரில் காலாவதியாகும் போது பேரவை பொறுப்புக்கூறல் தொடர்பான புதிய செயல்வழி மேற்கொள்ள முடியும் என்ற உண்மையை நாகதஅ கருத்திற்கொண்டுள்ளது. அதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில் 46/1 தீர்மானம் நீதியைத் தாமதப்படுத்தியுள்ளது.
இது காரணமாகத்தான், 46/1 தீர்மானம் சிறிலங்காவுக்குத் தோல்வி என்றாலும் தமிழர்களுக்கு நீதியன்று என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அப்போது நிலையெடுத்தது. உயராணையர் உறுப்பரசுகளை மட்டுமல்லாமல், மற்ற அரசுகளையும் கூட இச்செய்தியை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்வதற்கும், இனவழிப்பு உடன்படிக்கையின் கீழ் மியான்மருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தவை போன்ற இடைக்கால வழிமுறைகளை நாடுவதற்கும் 46/1 தீர்மானம் தடை போடவில்லை என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வை.
உயராணையரின் புதிய அறிக்கை உள்நாட்டுச் சட்டகத்திற்குள் மட்டுமே முழுக் கவனத்தையும் குவிக்கின்ற நிலையில், “அரசாங்கம் பன்னாட்டுக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் நோக்கிப் பொருள்பொதிந்த வழியிற்செல்ல தன் இயலாமையையும் விருப்பமின்மையையும் காட்டியுள்ளது என்பதும், உறுப்பரசுகள் “ அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கருதுவதன் வாயிலாகக் குற்றப் பொறுப்பை முன்னெடுக்கவும், அனைத்துலக மேலுரிமையின் கீழ் புலனாய்வும் வழக்குத் தொடுத்தலும் நிறுவிடவும் வேண்டும்" (A/HRC/46/20, 9 பிப்ரவரி 2021) என்பதுமான தமது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து உயராணையர் பின்னடித்து விடுவாரோ என்று கவலை கொள்கிறோம்.
முடிவாகச் சொன்னால், சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் இல்லாத நிலையின் மீது உயராணையர் தொடர்ந்து கவனம் குவித்திருப்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது என்னும் போதே, பாதிப்புற்ற பத்தாயிரக்கணக்கான தமிழர்களுக்கு உள்ளபடியே பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையேதும் இந்தக் கவனக்குவிப்பின் விளைவாகக் கிடைத்து விடவில்லை என்ற ஏமாற்றம் தொடர்வதை நாகதஅ சொல்லத்தான் வேண்டும். பன்னாட்டுக் கடுங்குற்றங்களால் பாதிப்புற்று, தங்கள் அன்புக்குரியவர்கள் என்னவானார்கள் என்பதையறிய இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்த பிறகும் இந்த ஏமாற்றம் தொடர்கிறது.