குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது
அய்.நா.வின் மனித உரிமைக் குழு அறிக்கை ஈழத்தில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. சிங்கள நீதிபதிகள், சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கியதே கலப்பு நீதிமன்றம். இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையை மட்டுமே ஏற்க முடியும் என்று பிடிவாதமாக மறுக்கிறது. கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இப்போது அய்.நா.வில் முன்மொழிய உள்ள தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று கூறிவிட்டது. உண்மையில் இலங்கை வரலாற்றில் இதுவரை அங்கே நடத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன.
1963-லிருந்து 2013 வரை இலங்கையில் ஏறத்தாழ 18 விசாரணை ஆணையங்களை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பானவை, எந்த ஒரு ஆணையமும் முறையாக செயல்படவில்லை.
முதன்முதலாக 1963ஆம் ஆண்டு அன்றைய ‘சிலோன்’ ஆளுநராக இருந்த வில்லியம் கோபால்லவா, ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். 1959ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக இருந்த எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா, சிங்கள புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சர்வதேச சதி இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இந்த விசாரணை ‘கலப்பு நீதிமன்ற’ விசாரணை தான். அன்றைய “சிலோன்” உச்சநீதிமன்ற நீதிபதியோடு அய்க்கிய அரபு குடியரசு நாட்டைச் சார்ந்த நீதிபதி ஒருவரும், கானா நாட்டு நீதிபதி ஒருவரும் சேர்ந்து விசாரிப்பார்கள் என்று இலங்கை அரசு அறிவித்தது. விசாரணை தோல்வியிலேயே முடிந்தது.
இராஜபக்சே - ஒரு ஏமாற்று விசாரணையை அறிவித்தார். 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிய அந்த நாட்டில் நடந்த 16 கொடூரமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஆணையம் நியமிக்கப்பட்டது. திரிகோண மலையில் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப் பட்டது; மூதூரில் 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டது ஆகியவையும் இதில் அடங்கும். இந்த விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்ட “சர்வதேச சுயேச்சையான முக்கிய பிரமுகர்கள் குழு” அமைக்கப்பட்டது.
இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி - இந்தக் கண்காணிப்புக் குழு தலைவராக இருந்தார். அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் முன்னாள் தலைவர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார். இவர்களை நியமித்ததே இராஜபக்சே தான். ஆனால், இந்த சர்வதேச பிரமுகர்கள் குழு, விசாரணை காலத்திலேயே பாதியில் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டுவிட்டனர்.
“விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை; சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை; இலங்கை அரசுத் துறைகள் ஒத்துழைக்க மறுத்த தோடு, அரசும் ஆணையம் சுதந்திரமாக செயல்பட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை” என்று வெளிப் படையாகவே நீதிபதி எஸ்.என். பகவதி குழு அறிக்கை வெளியிட்டு, இலங்கையை விட்டு வெளியேறியது, விசாரணை எவ்வளவு மோசமாக நடந்தது என்பதற்கு ஒரு சான்று. திரிகோணமலை கடற்கரையில் அமர்ந்திருந்த 5 தமிழ் மாணவர்களை சிங்கள அதிரடிப் படை 2006 ஜனவரி 20ஆம் தேதி எந்தக் காரணமும் இன்றி சுட்டுக் கொன்றது. அதில் ஒரு மாணவர் ராஜிஹான். இவரின் தந்தை மனோகரன், அய்ரோப்பிய நாடு ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்தார். தனது மகனை அதிரடிப் படை எப்படி சுட்டது, எப்படி சித்திரவதை செய்தது என்பதை விசாரணை ஆணையத்தில் அய்ரோப்பிய நாட்டிலிருந்து ‘வீடியோ பதிவு’ வழியாக சாட்சிய மளித்தார். உடனே துணைக் கோள்கள் வழியாக சாட்சியமளிக்க அரசு செலவு செய்யாது என்று நிதி வழங்க அரசு மறுத்துவிட்டது. இப்போது இலங்கை யில் போர்க் குற்ற விசாரணை மன்றம் அமைக்கப் பட்டால், தனக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் சாட்சி சொல்ல வர இயலாது என்று மனோகரன் மறுக்கிறார்.
தில் குக்சன் என்ற தமிழர் கைது செய்யப்பட்டு, வவுனியா, அனுராதபுரம், மகரா சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு ஜூலை 2012இல் மகாரா மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது தந்தை பெயர் முத்துராசா. அண்மையில் வானொலி ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில், இலங்கை யில் நீதிமன்றம் அமைக்கப்பட்டால், தன்னால் சாட்சி சொல்ல வர இயலாது என்று கூறியிருக்கிறார்.
போர்க் குற்றங்கள் படுகொலைகளை நடத்திய அதிரடிப் படையினர், இராணுவத்தினர், சிங்கள அரசின் பாதுகாப்போடு இருக்கும் நாட்டில் விசாரணை எப்படி நேர்மையாக நடக்க முடியும்?
இப்போது அதிபராக உள்ள மைத்திரிபால சிறிசேனா தான் 2009ஆம் ஆண்டு போரின் இறுதி கட்டத்தில் இராணுவத் துறையின் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இப்போது சிறீலங்கா சுதந்திர கட்சி, அய்க்கிய தேசியக் கட்சி இரண்டும் இணைந்து ஆட்சி அமைத்திருந்தாலும் இதற்கான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதற்குப் பிறகு ஆட்சி நிலைத்து நீடிக்குமா என்பது கேள்விக் குறி. இத்தகைய சூழலில் போர்க் குற்ற விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? உள்நாட்டு விசாரணை என்பது ஏமாற்று நாடகமே!