பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டுள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன.
ஆதி திராவிடர் மகாநாடுகள், நாடார் சங்க மகாநாடுகளுக்குப் பிறகு பெரியார் அதிகமாகப் பங்கேற்றது செங்குந்தர் மகாநாடுகளில்தான். இந்தத் தொகுப்பில் உள்ள உரைகளில் காலத்தால் முந்தியது அவிநாசியில் 27, 28.12.1925 தேதிகளில் நடந்த கோவை மாவட்ட செங்குந்தர் மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய உரைதான். அந்த உரையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தச் சங்கத்தினர் செய்துவரும் பணியால், செங்குந்தர் குலமானது பெருமை யுடனும், செல்வாக்குடனும் இருந்து வருகிறது எனப் பாராட்டுகிறார். நெசவாள சமூகமான செங்குந்தர்கள் தொழில் அபிவிருத்தி கருதியும் சங்க நடவடிக்கைகளை கவனமாக நடத்தி வந்தது தெரிகிறது. பெரியார் பின்னர் கலந்து கொண்ட மகாநாடு ஒன்று தொழில் தொடர்பான கண்காட்சியாகவே நடந்த தகவல் காணக் கிடைக்கிறது. இந்த சமூகம் அடைந்திருக்கும் முன்னேற்றம் சில குலாபிமானி களின் நேர்மையான, அர்ப்பணிப்பான உழைப்பால் எனப் பாராட்டி விட்டு, தொடர்ந்து இதுமட்டும் போதாது என்று இரண்டு மிக முக்கியமான விடயங்கள் குறித்துப் பேசுகிறார். முதலாவது பிரச்சினை இந்தக் குலத்தவரில் ஒரு பகுதியினர் பெண்களை கோவிலின் பேரால் பொட்டுக்கட்டி வேசித் தொழில் செய்ய அனுமதிப்பதை கடுமையாக விமர்சிக்கிறார். ஒரு சமூகம் தனது அவலமான பகுதியாக எண்ணி ஒளித்துக் கொள்ள விரும்பும் ஒன்றை சாதி மாநாட்டின் பொது அரங்கில் பேசி விமர்சிக்கிறார்.
இரண்டாவதாக அவர் முன் வைக்கும் விடயமும் மிக முக்கியமானது. குறிப்பாக செங்குந்தர் சமூகம் போன்ற ஒரு தரப்பினர் வளமானவர்களாகவும் மற்றொரு தரப்பினர் கடுமையான உழைப்பிற்குப் பின்னும் வறுமை யில் வாடுபவர்களாக இருக்கும் சூழலில் அதன் மற்றொரு பிரிவினரின் ‘இழிநிலை’ பற்றிய பேச்சு எவ்வளவு வரவேற்பு பெற்றிருக்குமென தெரியவில்லை. நெசவாள சமூகத்தின் மற்றொரு பிரிவினர் பெண்களுக்கு ‘பொட்டுக்கட்டும்’ வழக்கம் கொண்டவராயும், ஆண்கள் நாதஸ்வரம் வாசிப்பவர்களாகவும் இருந்தனர் என்ற தகவலே இன்றும்கூட பெரிய அளவில் அறியப்படாத செய்திதான். அந்த சமூகம் மட்டுமில்லை இன்னும் பல சமூகங்களும் பெண் களுக்கு கோவிலின் பேரில் பொட்டுக்கட்டும் வழக்காறு கொண்டிருந்தனர் என்பது அறிய வேண்டிய ஒன்று. பெரியார் நாதஸ்வரம் வாசிப்பவர் தொடர்பாக வைக்கும் வாதம் அவை:
- நாதஸ்வரம் வாசிப்போர் தாம் செய்யும் தொழிலை மரியாதைக்குரியது அல்ல என்று கருதி சுயமரியாதை இன்றி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றனர். நாதஸ்வர வித்வான் சங்கீத ஞானமே இல்லாத தற்குறியைக்கூடக் கண்டு கூனிக் குறுகுவதை கண்டிக்கிறார். ஒடுங்குவதும் கும்பிடுவதும் தனது குலதர்மம் என எண்ணுகின்றனரா எனக் கண்டிக்கின்றார்.
- 350 ரூபாய் சம்பளம் பேசி, இரண்டாம் வகுப்பு இரயிலில் வந்திறங்கும் நாதஸ்வர வித்வான், வியர்வையைத் துடைக்கக்கூடத் தோளில் துண்டு போடக்கூடாதென தடை செய்யும் இதரசாதியினரின் ‘சாதி இழிவு’ நடவடிக்கையையும் கண்டனம் செய்கிறார். ஒரு பார்ப்பனன் ஒத்து ஊதினாலும், நட்டுவாங்கம் செய்தாலும் ஸ்வாமி என்று விளிப்போர் ஒரு நாகஸ்வர வித்வானுக்கு குறைந்தபட்ச மரியாதையை மறுப்பதை இடித்துரைக்கிறார்.
- செங்குந்தர் பொதுநலன் அபிவிருத்திக்கு உழைக்கும் ‘குல அபிமானிகள்’ இந்தத் தொகுதியினரினை தங்களது இனத்தின் பகுதி யாகக் கருதாததையும், அவர்களது நலனைக் கவனிக்கத் தவறுவதையும் விமர்சிக்கிறார்.
இந்தத் தொழிலும் சாதியும் வேறு வேறு வடிவங்களிலும் பரிமாணங்களிலும் செயல் படுவதை அறிவதற்கு பெரியார் சாதிசங்க உரைகள் உதவுகின்றன. செங்குந்தர்களில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் ‘எளியராகிப்’ போவதைக் கண்டோம். இன்னொரு தளத்தில் அவர்கள் மேட்டிமைவாதிகளாகி தங்களின் மற்றொரு நீட்சியாகிய ‘மருத்துவர்களை’ (நாவிதர்களை) இழிவாக நடத்துவது குறித்து ‘மருத்துவ குல மகாநாட்டு உரையில்’ பெரியார் குறிப்பிடுகிறார். அதாவது இங்கு நாதஸ்வரம் வாசிப்பவர்களும், மருத்துவர்களும் ஒரே சாதியக் குழுவாக இருந்தும், முதல் வகையினர் ‘நாவிதர்களை’ தங்களின் இனத்தவராகக் கருதாத சாதி வேற்றுமை / இழிவு குறித்த புகார் மருத்துவ குல மாநாட்டில் வைக்கப்படுகிறது. அதற்கு எதிர்வினையாற்றும் பெரியார் மருத்துவர்களுக்கு சார்பாகப் பேசி நாதஸ்வர வித்வான்களைக் கண்டிக்கிறார். இந்த ஆதரவு தொடர்பாக அவர் கரூர் சவரக் கடைகளில் “இங்கு நாதஸ்வர வித்வான்களுக்கு அனுமதி கிடையாது” என எழுதப்பட்டிருப்பதைத் தான் கண்டதாகவும், அதை ஆதரிப்பதாகவும், தமிழ்நாடு முழுதும் அதைக் கடைப்பிடித்து வித்வான்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டு மென்கிறார். சாதிக்குள், சாதிகளுக்குள் ‘இழிவு’ என்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அதை ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான நோக்கம் என்கிறார்.
இந்தப் புள்ளியில் சாதிகள் குறித்த அடிப்படை புரிதல்கள் சில. இந்தப் புரிதல்கள் சாதியைக் கடப்பதற்கும், அதன் பொருளற்ற தன்மையினை விளக்கவும் உதவலாம். மேற் சென்ற பத்திகளிலேயே சாதிகள் / தொழில்கள் கடந்து போவதைக் காண முடிகிறது. செங்குந்தர் சாதியினரில் ஒரு பிரிவினர் நாதஸ்வரம் வாசிப்பவர்களாய் இருப்பதையும், அதே வேளையில் மருத்துவர் குலத்தின் ஒரு பிரிவினர் அதே நாதஸ்வரம் வாசிப்பவர்களாக இருப்பதும் அறியக் கிடைக்கிறது. இஃதன்னியில் இசை வேளாளர் என்ற தொகுதியில் இவர்கள் இணைவதையும் காண முடிகிறது. இதேபோல வன்னியர் சாதியின் ஒரு பிரிவினரான பள்ளிகளும் பள்ளர்களும் ஒட்டியும் வெட்டியும் சாதிகளாக இயங்குவதை சென்சஸ் ஆவணங்களில் காண முடிகிறது. அதேபோல் வடமாவட்டத்து முதலிகளும் (அகமுடைய முதலிகள்) முக்குலத்து அகமுடையச் சேர்வை களும் இணைவதும் விலகுவதுமான தடயங்கள் காணக் கிடைக்கும். இது முடிவான பட்டிய லன்று. இது பெரும் ஆய்வுக்கான தொகுதி. அகழ்ந்து ஆய்வு செய்தால் இனக்குழு சமூகங்கள் சாதிகளான கதை எளிதில் வெளிப்படும். அனைத்து சாதிகளும் இனக்குழு சமூகங்கள் மட்டுமே என்பது தெளிவாகும். தமிழ்ச் சமூகம் ‘சாதிய’ சமூகமானது பார்ப்பனிய மநுவின் சதியால் என்பதும் இன்னும் தெளிவாகும். ஆய்வாளர் நொபொரு கராஷிமா அவர்களின் ‘சோழர் காலம் வரை சாதி போன்ற இனக் குழுக்கள்தான்’ இருந்தன என்னும் முக்கியமான ஆய்வு மேலுள்ள வாதத்தை வலுப்படுத்துகிறது.
வன்னியகுல ஷத்திரியர் மகாநாடு
சேலம் வன்னியகுல ஷத்திரியர் மாநாட்டு பெரியார் உரை மிக அபூர்வமானது............... பெரியார் நிகழ்த்திய உரையின் சாராம்சம் பின்வருவது:
வன்னிய சமூகம் தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக்கிறது. நாட்டிற்கு மிக முக்கியமான விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் சமூகம். எனவே உங்கள் சமூக நன்மைக்காக திட்டமிட மகாநாடுகள் அவசியம். இந்த மகாநாட்டை திறந்து வைக்கும் பெருமை பெற்ற நான் இந்த வேளையில் சில விடயங்களைச் சொல்ல நினைக்கிறேன். புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி உங்கள் சமூகத்தைப் புகழ்ந்து விட்டுப் போக நான் இங்கு வரவில்லை. நான் எந்தத் துறையில் எந்தக் கொள்கைகள் தொடர்பில் வேலை செய்து, சமூக முன்னேற்றம் பற்றிப் பேசி வருகிறேனோ அது தொடர்பில்தான் பேச உள்ளேன். நான் சொல்லும் விடயங்கள் உங்கள் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்த லாம். பல பிடிக்காமலும் இருக்கலாம். எப்படி இருந்த போதிலும் நான் சொல்லும் சொற்களை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென கூற வில்லை. நான் சொல்வனவற்றை ஆராய்ந்து உங்கள் புத்திக்கு எது சரி என்று பட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லை யேல் தள்ளி விடுங்கள். பொதுவாக இதுபோன்ற சாதி மாநாடுகள் கூட்டுவது தங்கள் சாதிப் பெருமைகளைப் பேசுவதற் கானதாகவும், அவரவர் சாதி மட்டும் தனியாகவே பிரிந்திருக்கும்படி சாதி உயர்வையே பேசிக் கொண்டிருப்பதற்காக இருக்கக் கூடாது.
இம் மகாநாட்டின் பயனாகவாவது உங்களுக்கு மேல் ஜாதி ஒன்று இருக் கின்றது என்று எண்ணிக் கொண்டிருப் பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலான வர்கள் என்று எண்ணிக் கொண்டிருப் பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும்.
ஏனெனில் நீங்கள் சில சாதிகளுக்கு மேலானவர்கள் என எண்ணும்போதே நீங்கள் சில சாதிகளுக்குக் கீழானவர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். உங்கள் சாதி உயர்வுக்கான கோரிக்கை இதனால் எதிர்விளைவாக உங்களை கீழ் சாதிப் பட்டத்தோடு நிலைக்கச் செய்து விடுகிறது. அதனால் நீங்கள் மேல் சாதி என்ற தத்துவம் சிக்கலாகிவிடுகிறது.
உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல ஷத்திரியரென்றும் சொல்லிக் கொள்கிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத் தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்ப்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாத மில்லாமல் ஒப்புக்கொண்டவர்களாகி விட்டீர்கள். ஆனால் உங்கள் ஷத்திரியத் தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை. நீங்கள் வன்னியகுல ஷத்திரியரென்றால் நாடார்கள் தங்களை அக்கினிகுல ஷத்திரியர்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்கள் ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழிவார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரைச் சொல்லி உங்களைக் கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை ஷத்திரியர் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பேரைச் சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். நாயுடு ஜாதி எனும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இருவரையும் ஷத்திரியர்கள் அல்ல என்று சொல்லி விட்டு தாங்கள்தான் ஷத்திரியர் என்கிறார்கள்.
ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக் காரர்கள் நீங்கள் மூன்று பேரும் ஷத்திரியர் அல்ல, நாங்கள்தான் ஷத்திரியர்கள் என்கிறார்கள். இதுபோல் இன்னமும் குடகு ஷத்திரியர்கள், எத்தனையோ பேர். ஷத்திரியப் பட்டத் திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டையும் போட்டுக் கொள்ளுகிறார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கிண்ணம் கழுவு பவனுக்கும், பிச்சை எடுத்து வாழு பவனுக்கும், தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்து விட்டது” என்று பேசியிருக்கிறார்.
இதுபோன்ற இழிவானதும் அர்த்தமற்ற துமான நாங்கள் உயர்ந்த ஜாதி அவர்கள் தாழ்ந்த ஜாதி என்ற சண்டைகள் போடுவதற்கும், பிற சாதியினரைச் சாடை பேசுவதற்குமாகவே அப்போது சாதி மாநாடுகள் கூடின. அந்த நோக்கங்களை முறியடித்து அவற்றைச் சமூக முன்னேற்றத்திற்கான போக்குகளாய் மாற்றிடவே பெரியார் சாதி சங்கங்களில் உரையாற்றினார். வன்னியர்கள் நாடார்களை ‘சாணார்கள்’ என்று கூறி இழிவு பேச அவர்கள் (நாடார்கள்) இவர்களை ‘பள்ளிகள்’ என்றழைப்பதுமாய் நிகழ்ந்து வந்ததைக் குறிப்பிடுகிறார் பெரியார். இந்தச் சண்டை மற்றும் இதர சாதிகளிடையே நடந்த சண்டைகள் தொடர்பாக 1850களிலிருந்து 1900 வரை பல நூறு நூல்கள் வெளியாகியதற்கான தரவுகள் இருக்கின்றன. உள்ளபடியே சாதிகள் தங்கள் பெருமையைப் போலவே பிற சாதிகள் குறித்து இழிவாகப் பேசுவதையும் சாதி நூல் எழுதுதலின் முதன்மை நோக்கமாகக் கொண் டிருந்தன. இதில் பெரும் வேடிக்கை, தங்களளவில் நூல் எழுதும் அளவிற்கு கல்வி பெற்றவரைப் பெறாதவர்களாகவே பெரும் பாலான இடை மற்றும் கடைச் சாதியினர் இருந்தனர். அவர்களுக்கான பல நூல்களை பார்ப்பன மற்றும் உயர் சாதி பண்டிதர்களே எழுதிக் கொடுத்தனர் என்பதுதான்.
பெரியாரின் அக்கறை மேற்படி பார்ப்பன நடவடிக்கை தொடர்பிலானதுதான். ஒரு புறம் பெரும் பணம் பெற்றுக் கொண்டு சாதி நூல்களில் ஷத்திரியர், வைசியர், சத்சூத்திரர் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, மறுபுறம் பிராமண சனாதன மாநாடுகள் கூட்டி அவற்றில் இவர்கள் யாரும் ஷத்திரியர், வைசியர் என்ற வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் ‘சூத்திரர்’ மட்டுமே என்று தீர்மானம் நிறைவேற்றினர் என்பதுதான். இவர்களின் சூது அறியாமல் பள்ளர்கள் தங்களைத் தேவேந்திர வேளாளர்கள் என்றும், சௌராஷ்டிரர்கள் தங்களை சௌராஷ்டிர பிராமணர் என்றும், தேவாங்கர்கள் தங்களைத் தேவாங்க பிராமணர்கள் என்றும், குயவர்கள் தங்களைக் குலால விஸ்வ பிராமணர்கள் என்றும், சாலியர்கள் தங்களைச் சாலிய பிராமணர்கள் என்றும் கோரிக்கை வைத்தனர். பெரியார் இவர்களைக் குறிப்பிட்டு உடல் உழைப்பு சார்ந்து நியானமான வாழ்க்கை வாழும் இவர்கள் தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக் கொள்வதை கடுமையாக விமர்சிக்கிறார்.
“சாதி சம்பிரதாயப்படி இல்லை என்று யாராவது உங்களிடம் சொன்னால் அவர்கள் மூடர்கள் அல்லது அயோக்கியர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதேபோல் சாதி தொழில் அடிப்படையில் உருவானது என்று சொல்பவர்களும், அது அப்படித் தானே இருந்தாக வேண்டும் என்பவர்கள் அறியாதவர்களும், ஏய்க்க வந்தவர்களு மாகும்.
ஆகவே பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் வந்தவர்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழி லினால் வந்தவர்கள் என்று சொல்லு கிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளிகளோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்று சொல்லுவேன்” என்கிறார்.
இறுதியாக, “இனி இம்மாதிரியான சமூக மாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வு பற்றிய பேச்சே இருக்கக் கூடாது” என்றும், “மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படிக் கலப்பது? நாம் எவருக்கும் கீழ்சாதி அல்ல என்கின்ற தன்மையை எப்படி அடைவது? நமக்குக் கீழும். நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று முடிக்கிறார். ஒரு வன்னியகுல ஷத்திரிய சங்க மாநாட்டில் இதனை விலாவாரியாக அவர்கள் குறித்த விமர்சனப் பார்வையையும், சாதிய சமூக இருப்பையும் தெளிவாக விவரித்து, இதற்கான காரணமான பார்ப்பனியத்தையும் அடையாளப் படுத்தி 1930ஆம் ஆண்டுகளில் பேசிட பெரியார் ஒருவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. இதுதான் ஆச்சர்யமான உண்மை.
சாதி சங்க மாநாடுகளும் சாதிகளும்
பெரியார் பங்கேற்ற சாதி சங்க மாநாடுகள் பெரும்பான்மையாக அடித்தட்டு ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும், சாதியத்தின் பிடியில் சிக்கி அநீதி இழைக்கப்பட்டவைதாம். அந்த சாதியினரின் சாதி இழிவு எதிர்ப்புப் போர் வெகுகாலமாக நிகழ்ந்து வருபவையாகவும் இருப்பதைக் காண முடிகிறது. அவற்றில் இடைச்சாதியினராகக் கருதப்பட்ட வன்னியர், செங்குந்தர் ஆகியோரும் அதன் பகுதியாக நிலவிய சாதி இழிவு அடையாளத்தை உதறிவிட்டு வெளியேறும் எத்தனம் கொண்டே இந்த நடவடிக்கைகளில் இறங்கினர். வன்னியர்களுக்கு ‘பள்ளி’ப் பிரிவு தொடர்பிலான சங்கடம்தான் ஷத்திரிய அடையாளம் கோர வைத்திருக்கும் வாய்ப்புள்ளது. செங்குந்தர்களின் சிக்கலான முகம் அதன் பொட்டுக்கட்டும் மற்றும் நாயனம் வாசிக்கும் சாதியினராய் இருப்பது. இது தவிர்த்து நாடார்கள் நீண்ட போராட்டம் மற்றும் வணிகப் பொருளாதார வல்லமையால் தொடர்ந்து சாதி இழிவிற்கெதிராய் களம் கண்டவர்கள். ஆனால் மேற்படி வன்னியர், நாடார், செங்குந்தர், கவுண்டர் போன்ற சாதியினரின் சாதி சங்க முன்னெடுப்பின் கவனத்திற்குரிய கூறு பார்ப்பனிய எதிர்ப்பையும் கொண்டது. வேடிக்கை, பார்ப்பனிய எதிர்ப்பின் இன்னொரு முனையில் அதே பார்ப்பனியத்தின் வர்ணச் சட்டகத்தில் இடம் கோருவதாகவும் இருந்தது. ஆக அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் சாதிய இழிவு களையவும், இடைச் சாதி சமூகங்கள் சாதிய மேன்மையாக்கமும் அதிகாரமும் நோக்கி, தங்கள் சாதி சங்க நடவடிக்கைகளை கட்டமைத்தனர்.
பெரியார் தனக்கேயான பாணியில் சாதியத்தின் காரணியை அடையாளம் காட்டி, எளிமையான சொற்களிலும் வாதங்களிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்துமதத்தையும், அதன் ஆணி வேரான பார்ப்பன வேத சாஸ்திரங்களையும், கடவுள் என்ற கருத்தாக்கத்தையும் ஒரு சேர ஒழித்து விடுவதே வழி எனச் சொன்னார். அதைவிட உனக்கும் மேலே ஒரு சாதியோ அல்லது கீழாக ஒரு சாதியோ இல்லை என ஏற்பதும், அதை நடைமுறைப்படுத்தலுமே வழி என்றார். தாழ்த்தப்பட்டவர் சாதி இழிவிலிருந்து விடுதலை பெற அவர்களுடைய சுயமான தீர்மானமான முயற்சியே உதவ இயலும். பிறரோ, நானோ பெரிய அளவில் அதைச் செய்ய முடியாது என்றார் பெரியார். உங்களை ஏமாற்றும் மதத்தை, கடவுளை மறுத்து, உங்களை அனுமதிக்காத கோவிலைத் தவிர்த்து, உன்னிடம் அதிகாரம் செலுத்த நினைப்ப வனிடம் இனி அது ஒரு போதும் நடக்காது என அறிவியுங்கள் என்றார் பெரியார். இடைச்சாதி சாதி மேலாதிக்க விருப்பம் கொண்டவர்களிடம் உங்களை நீங்களே ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறீர்கள் என விமர்சனம் செய்து, உங்களுக்குக் கீழ்சாதி என்று ஒன்றை நீங்கள் கருதும்போதே நீங்கள் இன்னொருவருக்கு கீழ்சாதி என்பதை ஒப்புக் கொண்டவராகிறீர்கள் என அறிவுறுத்தினார். பெரியார் இடைச்சாதி களின் ‘சூத்திர’ இழிவு குறித்து பேசாத கூட்டமில்லை எனச் சொல்ல வேண்டும்.