பெரியார் தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை.

சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும்.

periyar 341எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவு மாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழு திருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை யென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டு பிடிக்கமுடியவே இல்லை.

எனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அப்பள்ளிக் கூடம் ஈரோடு டவுனுக்குச் சற்று விலகிய தூரத்தில் இருந்தது. (இப்போது அது நடு ஊராய் விட்டது) அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார் களின் வீடுகள் உண்டு. எண்ணெய்ச் செக்கு சதா ஆடிக்கொண்டு இருக்கும். மூங்கிலில் பாய், முறம், கூடை பின்னுகின்றவர்கள், தெரு ஓரங்களில் குடிசை கட்டிக்கொண்டு தங்கள் வேலை செய்வார்கள். சில முஸ்லீம்கள் வீடும் குடிசை ரூபமாக அங்கே உண்டு.

ஆகவே அப்பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதக்காரர்கள் (கிறுத்தவர்கள்), சாயபுகள் ஆகியவர்கள். அந்த காலத்தில் இவர்கள் வீட்டில் மற்ற ஜாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்த மாட்டார் களல்லவா? ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் “அங்குள்ள ஜாதியார், “பொழங்கக்கூடாத” ஜாதிக் காரர்கள். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி”யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளர் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும்.

பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போகும். இதற்குள் எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல் மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய் இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்ப தில்லை. எழுந்து நின்று பெரு விரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் “போய்விட்டுச் சீக்கிரம் வா” என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலோ, அவனது வீடு சற்று தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிலோ குடித்து விட்டு ஓடிவருவான். ஒரு நாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாமென்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரல் நீட்டும் போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலை யாட்டினார். இருவரும் ஓடினோம், வாத்தியார் “ராமா நீ எங்கே ஓடரை?” என்றார். “தண்ணீருக்கு ஐயா!” என்றேன். “தண்ணீக்கு அவன் கூடப் போறாயே?” என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக்கிறார்) போய் தண்ணீர் குடித்து தண்ணீரை தேகமெல்லாம் சிந்திக் கொண்டு வேஷ்டியையும் நனைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன்.

அடுத்த நாள் தண்ணீர் தாகமெடுத்த போது ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தப் பையனிடம் பேசிவைத்து அவர் தண்ணீர்குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பே நான் ஒன்றுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாய் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்கு ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் “நீ நாய்க்கர் வீட்டுத் தம்பியா?” என்றார். நான் “ஆமாம்” என்றேன். “இங்கே தண்ணீர் குடிக்கிறயே! உங்க வூட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்றார். “சொல்லமாட்டாங்கோ” என்று சொல்லிவிட்டு ஓடினேன். அந்தப் பையனும் என்கூட ஓடிவந்தான். அதற்குள் அந்தம்மாள் அந்தப் பையனைக் கூப்பிட்டு “டே பழனியப்பா அந்தச் சொம்பைக் கழுவி உள்ளே வைத்துவிட்டுப் போடா” என்றார்.

அதேமாதிரி அந்தப் பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு வீதி வழியாக முன்புறம் பள்ளிக் கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின் புறமாக பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். பிறகு இப்படியே -இதே மாதிரியாக மற்றொரு சமயம் வேதக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டுப் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறி சாமான்களும் கூடச் சாப்பிடும்படியாகச் செய்து விட்டது. எங்கள் வீட்டுக்கு இந்தச் செய்தி எட்டியது. வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு பணம் பெருகி அப்பொழுதுதான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித்திருந்த காலம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி (நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப் பற்றி) அதிகமான கவலை கிடையாது. “சீச்சி இனி அப்படிச் செய்யாதே” என்று சொல்லி விடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும்.

என் தாயார் ஏதோ முழுகி விட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற் குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால் என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன் தான் அதிகம், அதனாலே நான் முரடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப் பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளை களுடன் கூடித் திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப் பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துக்கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.

கடைசியாக நான் அப்பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப் பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக் கூடத்துக்கு அதுவும் 2-ஆவதிலேயே, (10, 12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது. இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசி களுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர் களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும் அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து மறுத்துச் சொல்ல ஆரம்பித்து “விதண்டாவாத”க் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டது. நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்த தில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் – எங்கள் வீட்டில் இரு சமய “பக்தர்”களாலும் பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும்போது தர்மம்

செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? இவர்களைத்தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும். ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக “பக்தி சிரத்தை”யுடன் கேட்டுக் கொண்டேயிருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்மந்தமான – புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்கு பதில் தாறுமாறாக வும் ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்த தோடு என்னை ஒரு “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்” என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது. என் தகப்பனார், நான் இப்படி “விதண்டாவாதமான” கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு.

இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.

ஆனால் சுற்றுச்சார்புதான் ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத் தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.

உதாரணமாக எனது நல்ல வாலிபப் பருவத்தில் 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள் ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மதுவருந்துபவர் களாவார்கள். அது மாத்திரமா? என்னிடத்தில் அதிக காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள் ஜமீன், மிராசுதாரர்கள் ஆகியவர்களும் மதுவருந்துபவர்கள். மேல் கண்ட வயதில் அநேகமாக இரவெல்லாம் இந்த கூட்டத்தாருடனே கோலாகலமாய் இருந்து, காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து கொத்துச்சாவியை எடுத்துக் கொண்டு கடைதிறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டல் 5 பாட்டல் (பிராந்தி) உடைபடும். எனக்கும் மாதத்தில் இந்தச்செலவு சுமார் 40, 50 ரூபாய் ஆகும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றி சோடா கலந்து கொடுப்பேன். சிலர் குடித்து விட்டு போதையில் என்மீது துப்புவார்கள். ஒரு காலத் தில் ஒரு டிப்டி கலெக்டரும் சால்ட் அசிஸ்டெண்ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கீழே தள்ளி என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படியெல்லாம் இருந்தும் என்னை அந்த சகவாசமும் சுற்றுச்சார்பும் அது (மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்று யோசிக்கக்கூடத் தூண்டவில்லை. என் மனைவி யாருக்கு என் மீது அடிக்கடி சந்தேகம் தோன்றும். இம்மாதிரி கூட்டத்தில் இருந்து வீட்டுக்குப்போன உடன் என் வாயை ஊதிக்காட்டச் சொல்லுவார்கள். நான் கிராக்கி செய்வேன். கட்டாயத்தில் வாயை மோந்து பார்த்து திருப்தி அடைவார்கள்.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் சுற்றுச்சார்பு எதுவும் என்னை வசப்படுத்திக் கொள்ள வில்லை என்பதற்கு ஆகவேயாகும். இனியும் அம்மாதிரியான சம்பவங்களே அதிகப்படியாய்க் காணப்படு கின்றன. அது என்ன காரணம் என்பது எனக்கு விளங்கவில்லை.

இது இப்படியிருக்க, நான் இந்தக் கூட்டத்தில் இப்படிப்பட்ட கேளிக்கையில் இருந்து கொண்டே எனது வர்த்தகத் தொழிலில் நான் ஒரு அளவுக்கு வெற்றி பெற்றேன். எனது தகப்பனார் நம்பிக்கைக்குப் பாத்திரனானேன். என் தகப்பனார் இருக்கும்போது எங்கள் வியாபாரத்திற்கு தன் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கொடுக்கப்பட்டு விட்டது. ஊர்ப் பெருமை விஷயங்களிலும் என் தகப்பனார் ஒவ்வொன்றிலும் இருந்து விலகிக்கொண்டு என்னையே தள்ளிவிட்டார்.

எங்கள் ஊர்ப் பொதுக்கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான சம்மந்தமான காரியங்கள் பெரிதும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரியம் போலவே நடைபெறும். ஆதலால் அவற்றிற்கு என்னையே முதன்மை யாக்கிவிட்டார்கள். ஒரு சமயம் இதனால் எனக்கு கடவுள் பக்தி ஏற்படலாம் என்கின்ற எண்ணமோ என்னமோ தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவனாகவும் ஆக்கப்பட்டு விட்டேன்.

இப்படியெல்லாம் இருந்தும் ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியாய் – உண்மையாய்ச் செய்வதென்ப தல்லாமல் அநேக காரியங்களில் எனக்குப் பிடிவாதமான நம்பிக்கையென்பதே ஏற்பட்டது கிடையாது. எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும் அதிக கவலையாகவுமே செய்து வருவேன்.

நிற்க, ஜாதி மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான நம்பிக்கையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான் தான் செய்ய வேண்டுமென்றோ, அதற்காகத்தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை.

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து (செல்வம்) ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் - அதாவது சோம்பேறித்தனமும் களுப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை முடிவுகளை தனது வாழ்க்கைக் காக – வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத - சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்த விலை எதுவோ அதுவே மேல் கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லா மல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.

நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டு விட்டுப் போகிறேன் என்று அதிருப்திப் படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆகவேண்டும்? எதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன்.

இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்” கூட “மோட்சமும்” “முக்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோடசம் - முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீர வேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.

நிஷ்காமிய கர்மம் யாது?

இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப் படுவது முன்னுக்குப் பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில் நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர் பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே “ஒரு பலன் ஏற்பட வேண்டும்” என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப் பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யச் செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.

சுயமரியாதை தத்துவம்

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதே யாகும். என்னவென்றால் காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத் திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்த காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவு களுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.

சுயமரியாதையே சுதந்திரம்

இன்றைய சுதந்திரவாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லாதவர்களுக்கு சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த்தையாகும்.

சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் சுதந்திரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத் தக்கதாய் இருக்குமென்றும் சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொருத்ததாக மாத்திரம் இருக்கும்.

உதாரணமாக இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர், மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர். முந்தியவர் இந்தியாவில் உலக அனுபவமுள்ள சோம்பல் கூட்டத்தார், மத உணர்ச்சியாளர் (மூட நம்பிக்கைகாரர்கள்) பழமை விரும்பிகள் ஆகியவர்களது உலகில் மதிக்கப்படுகிறவர். அவரது சுதந்திரம் என்பதெல்லாம் பழமையை அனுபவிக்கச் சுதந்திரம் வேண்டுமென்பதே. பிந்தியவர் உலக அனுபவமற்ற உற்சாகக்கார புதுமை விரும்பிகள் உலகத்தில் மதிக்கப்படுகிறவர் என்பதோடு குறிப்பற்று ஏதாவதொரு மாறுதல் வேண்டுமென்பவர். இந்த இரண்டு பேருக்கும் தெளிவான ஞானம் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் சுதந்திரத்தின் யோக்கியதையே – சுதந்திரம் விரும்புகின்றவர்களின் தன்மையே அவ்வளவுதான். எப்படியெனில் இருவர் கோரும் சுதந்திரம் இன்று உலகில் எந்தப் பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் ஏறக்குறைய முழு மக்களும் சுயமரியாதை இல்லாமல் இருப்பதைக் காணலாம்.

காந்தியார் இந்து மதம் புனருத்தாரணம் ஆவதும் பழைய முறைகள் உயிர்ப்பிக்கப்படுவதும் சுதந்திரம் என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டும் வந்து விட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.

முழு சுயராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன்? ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தை துறக்க வேண்டியதாகிவிட்டது என்றால் - அதுவும் ஜனப்பிரதிநிதிகளால் – அதுவும் பொது ஜனங் களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்கு கடுகளவாவது சுயமரியாதை இருக்க இடமுண்டா என்று கேட்கின்றோம்.

சுயமரியாதையின் பெருமை

அப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுயமரியாதைக்குப் பிறந்த) சுதந்திரமாய் இருந்தால் “காதலுக்கு” பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது போல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பது என்போன்ற சாதாரண மனிதனால் கையாளப் பட்டதனால் அதன் பெருமை விளங்காமல் போய் விட்டது என்று சொல்லலாமே தவிர அதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பத்து வருஷகாலமாய் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக் கிடையில் நேரப் போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்தபோதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்து – ஏன்? சுயமரியாதைக் கூட்டத்தில் இருந்தவர் களுக்குள் இருந்து கூட – ஏற்பட்டு இருந்தாலும் ஒரு குடம் பாலுக்கு ஒரு சொட்டு விஷம் என்பதுபோல் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்குக்கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள் ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக்கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தி யாரையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது.

பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பி விட்டு விட்டது. கீழ் ஜாதி மேல் ஜாதி யென்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக் கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும் குர் ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். தோழர் காந்தியாரோ அல்லது காங்கிரஸ் தொல்லையோ இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு பார்ப்பனீயம் மாண்டு இருக்கும் என்றே சொல்லலாம்.

சுயமரியாதை இயக்கம் காந்தியாரை ஒரு அளவுக்கு மூலையில் உட்கார வைத்துவிட்டது என்றாலும் பார்ப்பனீயம் வேறு ஆட்களைப் பிடித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முன்வந்து விட்டது. ஆனபோதிலும் காந்தீயம் பட்டு மாய்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பெருமை சுயமரியாதை இயக்கத்துக்கே உண்டு.

இனி இரண்டு மாதம் சென்றவுடனே ஜவஹர்லாலை சுயமரியாதை இயக்கம் மூலையில் உட்கார வைக்க முழு மூச்சில் முனையப் போகின்றது. சுயமரியாதை இயக்கம் இதுவரை செய்து வந்த பிரசாரத்துக்கு மேலாக, கேரள ஆந்திர கர்நாடக தேசம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது. அது தனது பழைய வாலிபர்கள் பெரும் பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்து விட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் “குறை” ஏற்பட்டாலும் சுயமரியாதைக்கு குறை ஏற்படாது.

வாலிபர்களே தயாராய் இருங்கள்!

(இக்கட்டுரை “நவமணி” ஆண்டு மலருக்காக பெரியார் எழுதியது) (18.7.1937)

Pin It