construction 450தமிழர்களின் பெருமையே பழமையான தமிழ்மொழியும், நாகரிகமான வாழ்க்கை முறையும்தான். வெண்பாமாலை நூலில் வரும் "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி" என்று நாம் பெருமை பேசினாலும் அந்த பெருமைக்கான சான்றுகள் எல்லாமே சங்க நூல்களில் மட்டுமே உள்ளது.

தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள் பாகிசுதான் நாட்டில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள இரவி நதிக்கரையிலுள்ள அரப்பாவிலும், அங்கிருந்து 400கிமீ தொலைவில் சிந்து நதிக்கரையிலுள்ள மொகஞ்சதாரோ என்ற இடத்திலும், முப்பதாயிரம் மக்கள் வாழ்ந்ததற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கொண்ட ஊர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்த நிலையில் கடந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ளன.

அதற்கு வலுசேர்க்கும் விதமாக திரு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் சிந்துவெளியில் அமைந்துள்ள ஊர்கள், மலைகளின் பெயர்கள், சங்க தமிழ் இலக்கியங்களிலுள்ள பெயர்களை இன்றளவும் தாங்கி நிற்கிறது என்ற அவரின் ஆய்வும் வலுசேர்க்கிறது.

முதல் தீப்பொறி

1974-ஆம் ஆண்டு உழவிற்காக தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து கிடைத்த செங்கற்களை மாணவன் ஒருவன் கீழடி பள்ளியின் ஆசிரியரான திரு. பாலசுப்பிரமணி அவர்களிடம் காண்பிக்கின்றான். அந்த செங்கல்லை பார்த்த ஆசிரியர் அவை சங்ககாலத்தை சேர்ந்தது என அறிகிறார். இதுதான் கீழடி வரலாற்றின் முதல்பொறி.

இயல்பிலேயே வரலாறு சார்ந்த விடயங்களில் ஆர்வமுள்ளவரான அவர் சில மாணவர்களை அழைத்துக்கொண்டு செங்கல் கிடைத்த அந்த கிணற்றை பார்வையிடுகிறார். கழுத்துக்கு மேலே தலை மட்டுமுள்ள மண்பொம்மை, கருப்பு-சிவப்பு வண்ணம் கொண்ட மண் குவளை, மண்டை ஓடுகள், எலும்புகள், நாணயங்கள், தாழிகள் என கிடைக்கிறது. அவற்றையெல்லாம் பாதுகாக்க பள்ளியில் இடமில்லாத காரணத்தால் அவருடைய வீட்டிலேயே வைத்துவிட்டு, அப்போது ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்ட ஆட்சியருக்கு கீழடியில் கிடைத்த பொருட்களை பற்றி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதற்கு இன்றுவரை பதிலில்லை.

அடுத்த ஆண்டே பள்ளியிலேயே "இஸ்டரி கார்னர்" என்ற பகுதியை ஏற்படுத்தி கிடைத்த பொருட்கள் அங்கு வைக்கப்படுகிறது. 1976-ஆம் ஆண்டு அப்போதைய தொல்லியல் ஆய்வுத்துறையின் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களை சந்தித்து தகவலை தெரிவிக்க, அவர் ஆய்வாளர் வேதாசலம் அவர்களை அனுப்பி அப்பொருட்களை கொண்டுவந்து சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்தார். மேலும் வெளிநாடுகளுக்கும் ஆய்விற்கு அனுப்பிவைக்கிறார்.

காலச்சக்கரம் சுழல்கிறது

சரியாக 37 ஆண்டுகள் கடந்து 2013-இல் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு வேதாசலம், திரு அமர்நாத் மற்றும் திரு ராஜேஷ் ஆகியோர் பண்டைய பொருட்கள் கிடைத்த அந்த கிணற்றை நிலத்தின் உரிமையாளர் திரு திலீப்கான் துணையோடு ஆய்வு செய்கிறார்கள். மேலும் வைகை நதி படுகையில் நடைபெற்ற கள ஆய்வில் சுமார்

293 பல்வகை தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவற்றில் கீழடியை தேர்வு செய்து 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2015ஆம் ஆண்டு 43 குழிகளும், 2016ஆம் ஆண்டு 59 குழிகளும், அமைத்து ஆய்வை மேற்கொண்டனர்.

cons1 450நகர நாகரிகம்

தமிழகத்தில் நடந்த அகழ்வாய்வுகளில் கட்டிடங்கள் கிடைப்பது அரிதான விடயம். ஆனால் அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டிணம், உறையூர், காஞ்சிபுரம் மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் கிடைத்ததைவிட கீழடியில் 10-ற்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாக கால்வாய்கள், அதன் முகப்பிலேயே பெரிய தொட்டிகள், தொட்டிக்கு உள் செல்லவும் வெளிசெல்லவு மான அமைப்புகள், கால்வாய் தடத்தை ஒட்டி சிறிது பெரிதுமான ஆறு உலைகள், கால்வாயின் தொடக்கத்தில் வட்ட கிணறுகள், மூடிய வாய்க்கால்கள், திறந்த மற்றும் சுடுமண் குழாய்களால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் முதன்முறையாக கிடைத்துள்ளன. சங்ககாலத் தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றி அமைத்திருக்கிறது.

மேலும் எழுத்தாணிகள், அம்புகள், முத்திரைக்கட்டைகள், உறை கிணறுகள், சுடுமண் மற்றும் முத்து மணிகள், தந்தத்தினால் ஆன தாயக்கட்டைகள் மற்றும் காதணிகள், சுடுமண் பொம்மைகள், செம்பு இரும்பு மற்றும் எலும்பினாலான ஆயுதங்கள், வணிகர்களின் எடைக்கற்கள், வடஇந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்கள், பண்டைய தமிழ் எழுத்து பொறித்த சங்ககால பெயர்கள் (திசன், சந்தன், உதிரன், ஆதன், மடைசி, எரவாதன்), ஆப்கானிசுதான் பகுதியை சேர்ந்த சூது பவளத்தினாலான மணிகள், ரோமாபுரியை சேர்ந்த மட்பாண்டங்கள் என ஒரு செழுமையான சங்ககால வாழ்வியல் எச்சங்கள் கிடைத்துள்ளன.

அதேபோல் ஒரு தொழிலகமும், நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்ப கருவிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பலுசிஸ்தானில் கிடைக்கும் சால்சிடோனி, கார்னீலியன், அகேட் போன்ற அரிய வகை மணிகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. பண்டமாற்று முறையில் இந்த அணிகலன்கள் இங்கு வந்துள்ளன.

தமிழர்களுக்கு நகர்ப்புற நாகரிக சான்றுகள் ஏதுமில்லை என்று பரப்புரை செய்யப்பட்டு வந்த நிலையில், கீழடி அகழாய்வு தமிழர்களின் நகர்ப்புற நாகரிகத்தை பறைசாற்றுகிறது.

இந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூக மாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப்போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துகொள்ளமுடியாது. எனவே இலக்கியங்கள் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களின் கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால் கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்த கருத்தியலை தகர்த்திருக்கின்றன. சங்ககாலத்தில் தமிழகத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.

ஆய்வுக்குத் தடை

கீழடியில் இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. காரணம் இதுவரை நடைபெற்ற அகழாய்விற்கு அறிக்கை அளித்த பின்பே அனுமதி தர பரிசிலிக்கப்படுமாம்.

குசராத்திலுள்ள தொழவீரா-வில் 13 ஆண்டுகளும், லோத்தலில் 5 ஆண்டுகளும், ஆந்திராவிலுள்ள நாகார்ஜூனகொண்டாவில் 10 ஆண்டுகளும், அகிசித்ராவில் 6 ஆண்டுகளும் அகழாய்வு செய்தவர்கள், கீழடி ஆய்வை மட்டும் அறிக்கையை காரணம் காட்டி இரண்டே ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆதிச்சநல்லூரில் 2005-ல் மேற்கொண்ட அகழாய்வு நிறுத்தப்பெற்று இன்றுவரை ஆய்வறிக்கையும், ஆய்வு முடிவும் வெளிவரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கரிம பகுப்பாய்வு

மொத்தமுள்ள 110 ஏக்கரில் 50 சென்ட் மட்டுமே (ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக) ஆய்வு செய்துள்ளனர். கரிம மூலப்பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி "கார்பன்-14 பகுப்பாய்வு" எனும் முறையில் ஆய்வுசெய்து அப்பொருளின் காலத்தை கணக்கிடுகின்றனர். அமெரிக்கா வின் புளோரிடாவிலுள்ள பீட்டா அன லைசிஸ் ஆய்வு நிறுவனத்திற்கு இவை அனுப்பப்படுகின்றன. அகழாய்வில் கண்ட றியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 பகுப்பாய்விற்கு அனுப்பவேண்டும் என்பதை மத்திய தொல்லியல்துறை முடிவு செய்கிறது.

இராஜஸ்தானிலுள்ள காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருட்களும், தொழவீராவிலிருந்து 20 பொருட்களும், கிரிசராவிலிருந்து 15 பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் கீழடியில் கண்டறியப்பட்டுள்ள மூலப்பொருட்களின் மாதிரியில் 2 மட்டும்தான் கார்பன்-14 பகுப்பாய்விற்கு அனுப்ப மத்திய தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் 10 பொருட்களின் மாதிரியாவது ஆய்விற்கு அனுப்பவேண்டும் என்பது தொல்லியலாளர்களின் விருப்பம்.

இரும்புகாலம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைக்குமிடம் கீழடி. எனவே இந்த ஆதாரங்களை அறிவியல்பூர்வமாக நிறுவ இவ்வாய்வு மிக முக்கியமானது. கீழடி அகழாய்வை தொடர அனுமதி மறுப்பதும், அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை தேவையான எண்ணிக்கையில் ஆய்வுக்கு அனுப்ப மறுப்பதும் பாரபட்சமானது.

"கீழடி அகழாய்வு பற்றி அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் அகழாய்வை தொடர்வது பற்றி முடிவு செய்வோம்" என்கின்றனர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சரும், தொல்லியல் துறையின் தலைமை இயக்குனரும் ஒத்த குரலில்.

ஓரவஞ்சனை

கீழடியோடு அகழாய்வு துவக்கப்பட்ட இடங்கள் வாட்நகர் மற்றும் பிஞ்ஜோர். வாட்நகர் பிரதமர் மோடியின் சொந்த ஊராகும். பிஞ்ஜோர் ராஜஸ்தானில் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்து முடிந்துள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான துவக்க நிகழ்ச்சி வாட்நகரில் கடந்த நவம்பர் 7-ஆம் தேதியே கொண்டாடப்பட்டுவிட்டது. பிஞ்சோரில் சனவரி 1-ஆம் தேதி துவக்க விழா நடந்துள்ளது. இங்கெல்லாம் இவர்கள் அறிக்கையைப் பெற்றுத்தான் அடுத்த ஆண்டிற்கான அனுமதியை வழங்கினார்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

2005-ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவு மற்றும் அறிக்கை தற்போதுவரை வெளிவரவில்லை. அகழாய்வு முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகும் அறிக்கையை வெளியிட முயற்சி செய்யாத தொல்லியல்துறை, அகழாய்வு நடந்துகொண்டிருக்கும் இடத்தின் அறிக்கையை கேட்டு அகழாய்வை நிறுத்துகிறது. இவை இரண்டிற்கும் இருப்பது ஒற்றை நோக்கம்தான்.

Romila Thapar 450என்ன செய்யவேண்டும்

கீழடியின் முக்கியத்துவம் அனைத்து வகையிலும் உணரப்படவேண்டும். அடை யாளங்களை அழிப்பதையும், மறைப்பதையும் வெளிப்படையாக செய்யும் அதிகார, ஆதிக்கவர்க்க அரசியலின் பார்வையில் இப்போது தமிழர் வரலாறு அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு கிடைத்துள்ள 5000-க்கும் மேற்பட்ட பொருட்களில் மத அடையாளம் சார்ந்த பொருட்கள் என்று எதையும் சொல்லமுடியாது. பெருமதங்கள் உருவாவதற்கு முன்பே சிறந்து விளங்கிய தமிழர் நாகரிகத்தின் அடையாளம் கீழடி.

மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழ்மொழியின் சிறப்பை பற்றி கூறும்போது இது ஒரு சமயசார்பற்ற மொழி என்று மதிப்பீடு செய்தார். இந்த மதிப்பீட்டிற்கும், கீழடி நாகரிகத்திற்கும் இருக்கின்ற ஒற்றுமையை புரிந்துகொள்ள முடிகிறது.

தேசிய இனங்களின் தனித்துவமான பண்பாட்டின் மீதும், வரலாற்றின் மீதும் ஒரு பெருந்தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், கீழடியில் கிடைத்துள்ள நாகரிகத்தின் எச்சங்களை பாதுகாப்பதும், அங்கு அகழாய்வை தொடரச் செய்வதும், கிடைத்த பொருட்களை தென்னிந்திய தொல்லியல் தலைமையிடமான மைசூருக்கு கொண்டு செல்லாமல், கிடைத்த இடத்திலேயே கள அருங்காட்சியகம் அமைத்து பாதுகாப்பதும், தமிழ்ச்சமூகத்தின் அர்த்தமிக்க வாழ்வியல் வரலாற்று சாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

இல்லாத சரசுவதி நதியைக் கண்டறிய கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசு, அறிவியல்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட கீழடியில் ஆய்வைத் தொடர அனுமதி மறுக்கிறது. இராமாயண அருங்காட்சியகத்தை அயோத்தியில் அமைக்க ரூபாய் 151 கோடியும், கன்னியாகுமரியில் அமைக்க ரூபாய் 15 கோடியும் ஒதுக்கி கட்டி முடிக்கப்பெற்று திறப்புவிழாவும் கண்ட இந்த அரசுதான் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் 1 இலட்சத்தை ஒதுக்கியுள்ளது.

இந்த அப்பட்டமான வரலாற்றுத் துரோகத்திற்கு எதிராக, தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும்,படைப்பாளிகளும், எழுத்தாளர்களும், வரலாற்றாய்வாளர்களும், தமிழறிஞர்களும், கலைத்துறையினரும், மாணவர்களும், இளைஞர்களும், தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தொன்மையான தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும்.

""தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்"" - ரொமிலா தாப்பர்