கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்துள்ளது என்பதை கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. அதன் பல்வேறு வகைப்பட்ட கட்டுமான அமைப்புகளும், கைத்தொழில்களும், தொழிற்தளங்களும், அங்கு கிடைத்த மதிப்பு மிக்க அணிகலன்களும், பலவகையான விளையாட்டுப் பொருட்களும், அவைகளின் தொழில்நுட்பமும், செய்நேர்த்தியும் இன்ன பிற விடயங்களும் அன்றைய பழந்தமிழ்ச் சமூகம் ஒரு நன்கு வளர்ச்சி பெற்ற நகர நாகரிகச் சமூகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை பல அகழாய்வுகள் நடந்துள்ள போதிலும் அவை பழந்தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகளை வழங்கவில்லை. ஆனால் கீழடி அகழாய்வு நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகளை வழங்கியுள்ளது.
கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்ச் சமூகத்தில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்துள்ளது என்பதையும் கீழடி அகழாய்வு உறுதி செய்துள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் 72 தமிழி எழுத்துப் பொறிப்புகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட ஓடுகளும் கிடைத்தன. 4 ஆம் கட்ட அகழாய்வில் 50க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், 1000க்கும் மேலான குறியீடுகள் கொண்ட ஓடுகளும் கிடைத்தன. இவை சாதாரண மக்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களில் சாதாரண மக்களால் எழுதப்பட்ட எழுத்துப் பொறிப்புகள். ஓரிரு ஏக்கருக்கும் உட்பட்ட பரப்பில் இவ்வளவு எழுத்துப் பொறிப்புகள் கிடைப்பது மிகப் பெரிய விடயம். ஐராவதம் மகாதேவன் (The Hindu, 24.6.2010) முனைவர் அ.பாண்டுரங்கன் போன்றவர்கள் பழந்தமிழகத்தில் எழுத்தறிவும் கல்வியறிவும் மிகப் பரவலாக இருந்தது என்பதை முன்பே உறுதி செய்துள்ளனர் (கணியன்பாலன், 2016, பக்:105-109). மிகச் சாதாரண மனிதர்கள் முதல் அனைத்து மக்களும் எழுத்தறிவும், கல்வியறிவும் கொண்டிருந்தனர் என்பதைச் சங்கப் பாடல்களும் உறுதி செய்துள்ளன. அன்றைய நகர அரசுகளும், அன்றைய தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியலும்தான் இதற்கான பின்புலமாக, காரணமாக இருந்துள்ளன (கணியன்பாலன், 2016, பக்: 777-781).
கீழடி அகழாய்வில் கிடைத்த 15000க்கு மேற்பட்ட பொருட்களில் சமயம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் மட்டுமல்ல கேரளாவில் உள்ள பட்டணம் என்கிற இடத்தில் நடந்த பண்டைய முசிறி அகழாய்வில் கிடைத்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொருட்களில்கூட சமயச் சார்பான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை (தின மலர், 4.11. 2018). பெரும்பாலான சங்கப் பாடல்களும் சமயச் சார்பு இல்லாதவைகளாகவே உள்ளன.
கீழடி அகழாய்வு அதன் காலத்தை கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என உறுதி செய்துள்ளது. முதலில் இரண்டாம் கட்ட அகழாய்வில் 2 மீ ஆழத்தில் இருந்த பொருளின் காலம் கி.மு. 220 என காலக்கணிப்பு ஆய்வு முடிவு தெரிவித்தது. பின் தற்போது 4 ஆம் கட்ட அகழாய்வில் 3.53 மீ ஆழத்தில் உள்ள பொருளின் காலம் கி.மு. 580 என காலக்கணிப்பு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இரண்டு அகழாய்வுகளின் காலக்கணிப்புகளுக்கும் இடையே சுமார் 1.5 மீ ஆழ இடை வெளியும், 360 ஆண்டுகள் கால இடைவெளியும் உள்ளது. சராசரியாக ஒரு மீ ஆழத்திற்கு சுமார் 240 ஆண்டுகள் கால இடைவெளி ஏற்படுகிறது. கீழடியில் 6.5 மீ ஆழம் வரை அகழாய்வு செய்யப்பட வேண்டும். ஆகவே மேலும் 3மீ ஆழத்திற்கு கீழ் உள்ள பொருட்களின் காலக்கணிப்பு, இன்னும் 720 ஆண்டுகள் கீழடி நாகரிகத்தைப் பின்னோக்கிக் கொண்டு போகும். அதாவது கீழடியின் தொடக்க காலம் கி.மு. 1300 வரை (580+720=1300) இருக்க வாய்ப்புள்ளது. நாம் குறைந்தது கி.மு. 1000க்கு முன்பு வரை எனக் கணிக்கலாம். ஆகவே தமிழகத்தில் நகரமயமாதல் என்பது கி.மு. 1000க்கு முன்பே தொடங்கி விட்டது என உறுதிபடக் கூறலாம்.
நகர நாகரிகம்:
கீழடி அகழாய்வு அறிக்கை வட இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் நகர நாகரிகம் தோன்றிய அதே காலகட்டத்தில் தமிழகத்தில் நகர நாகரிகம் தோன்றி விட்டதாகக் குறிப்பிடுகிறது (பக்:17, 18). ஆனால் தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பே நகர நாகரிகம் தோன்றி விட்டது. சிந்து வெளி நாகரிகத்துக்குப் பின் 1000 வருடம் அநாகரிக காலமாக இருந்த வட இந்தியாவில் கி.மு. 750இல் 16 சனபதங்கள் எனப்படும் இனக்குழு அரசுகள் தோன்றுகின்றன (டி.டி. கோசாம்பி, பக்: 265, 266). ஆனால் அங்கு கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில்தான் நகர நாகரிகம் தோன்றுகிறது. ஆனால் தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்தே நகர அரசுகள் இருந்தன. கி.மு. 750க்கு முன்பே சேர, சோழ, பாண்டிய அரசுகள் நன்கு வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாகவும், அன்றே மூவேந்தர்களாகவும் உருவாகி விட்டனர். வரலாற்றில் முதலில் நகர அரசுகள்தான் தோன்றுகின்றன. ஆனால் பெரும்பாலான நாகரிகங்களில் ஒரு சில நூற்றாண்டுகளில் நகர அரசுகள் பேரரசுகளாக ஆகிவிடும். ஆனால் தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 50 வரை 1000 ஆண்டுகளுக்கு மேலாக நகர அரசுகள்தான் இருந்தன (கணியன்பாலன், தமிழக வரலாறு, பக்: 32-40). இதற்குத் தமிழக அரச குடும்பங்களில் இருந்த சிறப்பு அரசுரிமை முறைதான் காரணம்.
தந்தைக்கு பின் மகன், மகனுக்குப்பின் அவனது மகன் என்ற அரசுரிமை முறை இங்கு இருக்கல்லை. தந்தை வேந்தனாக இருந்தால் அதே காலத்தில் அவனது மகன்களும், அவனது தம்பிகளும், தம்பிகளின் மகன்களும் அரசர்களாக இருந்தனர். அரச குடும்பத்தில் உரிய வயதடைந்த அனைவரும் அரசராக இருந்தனர். ஆனால் அனைவருக்கும் மூத்தவன் எவனோ அவனே வேந்தனாகவும், முடிசூடும் உரிமை பெற்றவனாகவும் இருந்தான். தந்தைக்குப்பின் அவனது தம்பி வேந்தனாக ஆனான். இந்த முறையைத்தான் மூவேந்தர்களும் பின்பற்றினர். அதனால் ஒவ்வொரு அரச குடியிலும் 7 அல்லது 8 பேர் அரசர்களாக இருந்து பல நகர அரசுகளை ஆண்டு வந்தனர். இவர்கள் போக இக்குடிகளைச் சேர்ந்த வேளிர்கள் பலர் ஆண்டனர். இவைபோக குறிஞ்சி நில குறுநில மன்னர்களும், முல்லை நிலச் சீறூர் மன்னர்களும், மருத நில மூதூர் மன்னர்களும் ஆண்டனர். ஆகவே பழந்தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நகர, நகர் மைய அரசுகள் இருந்தன (கணியன்பாலன், பழந்தமிழக வரலாறு, பக்:32-40). அதில் ஒன்றுதான் கீழடி. அது மதுரை நகராகவோ, அதன் புற நகராகவோ இருக்கலாம்.
நகர அரசுகளும் பேரரசுகளும்:
பேரரசுகளை விட நகர அரசுகளில் தான், சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், சனநாயகக் கண்ணோட்டமும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், பொருள் முதல்வாத மெய்யியலும், நிறைய புதிய கண்டுபிடிப்புகளும் இருக்கும். நகர அரசுகளில் மக்கள் அரசைக் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் பேரரசுகளில் அரசு மக்களைக் கட்டுப்படுத்தும். சுமேரிய நகர அரசுகளில் ஏற்பட்ட சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும், புதிய கண்டு பிடிப்புகளும் அதன்பின் அங்கு உருவான பேரரசுகளில் ஏற்படவில்லை என்கிறார் புகழ்பெற்ற தொல்லியலாளர் கார்டன் சில்டே (V.Gordon Childe). நகர அரசுகளில் ஏற்படும் இந்த முற்போக்கான வளர்ச்சியை அவர் நகர்ப்புரட்சி என்றே குறிப்பிடுகிறார் (கிரிசு ஆர்மன், விடியல், பக்: 48, 73, 74). சுமேரிய நகர அரசுகளையும் அதன்பின் உருவான பேரரசுகளையும் விரிவாக ஆய்வு செய்தவர் அவர். பேரரசுகள் நகர அரசுகளின் தத்துவார்த்த அறிவியல் கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், ஆகியவற்றையும் அவைகளின் கண்டுபிடிப்புகளையும் அப்படியே பயன்படுத்திக் கொண்டன எனவும், அவை புதிதாக எதனையும் கண்டுபிடிக்கவோ, உருவாக்கவோ இல்லை எனவும் அவர் கூறுகிறார். அவர் கூற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய நாம் கிரேக்க நகர அரசுகளையும், உரோமப் பேரரசையும் ஒப்பிடலாம்.
கிரேக்க நகர அரசுகள் தத்துவார்த்த அறிவியல் சிந்தனைகள் பலவற்றை வளர்த்தெடுத்தன. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பலவற்றைச் செய்தன. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வணிகம், கப்பல் கட்டுதல், கட்டிடக்கலை, இசை, மருத்துவம், போன்ற பலவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தன. இன்றைய மேற்கத்திய சிந்தனைகள் அனைத்திற்கும் கிரேக்கமே மூலமாக இருந்தது. ஆகவே உலகத்திற்கு பேரளவான விடயங்களை கிரேக்கம் வழங்கியுள்ளது. ஆனால் உரோம் பேரரசு கிரேக்கத்திடமிருந்து அனைத்தையும் கடன் வாங்கிக் கொண்டது. அது எதனையும் புதிதாக உருவாக்கவோ, கண்டுபிடிக்கவோ இல்லை என்றே கூறலாம். அதனால் கிரேக்கத்துடன் ஒப்பிடும்பொழுது உரோம் பேரரசு உலகத்திற்கு வழங்கியது மிகமிகக் குறைவு (கிரிசு ஆர்மன், பக்: 128-133). ஆகவே கிரிசு ஆர்மனின் நகர்புரட்சி பற்றிய கருத்து வரலாற்று உண்மை.
மக்களைக் கட்டுப்படுத்தப் பேரரசுகள் மதம், சமயம் சார்ந்த சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளையும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு வருகின்றன, பரப்புகின்றன. அங்கு தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, அதற்கு எதிரான சிந்தனைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே பேரரசுகளை விட நகர அரசுகளில்தான் சுயமான சுதந்திரமான சிந்தனைகளும், சனநாயகக் கண்ணோட்டமும், பொருள் முதல்வாத மெய்யியலும், தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் இருந்துள்ளன. எனவே பேரரசுகளை விட நகர அரசுகள் உண்மையில் சிறந்தவைகளாக, மக்களுக்கானவைகளாக, வளர்ச்சிக்கானவைகளாக இருந்துள்ளன (கணியன்பாலன், 2016, பக்: 807 – 812.).
தமிழக நகர அரசுகளும் மகதப் பேரரசும்:
தமிழக நகர அரசுகளை மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்படுத்தினர் என மெகத்தனிசு கூறுவதாக நேரு கூறுகிறார் (சவகர்லால் நேரு, பக்: 153). சங்ககாலத்தில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடந்தன என அகம் 77ஆம் பாடல் கூறுகிறது. இப்பாடலும், மெகத்தனிசின் கூற்றும், தமிழக நகர அரசுகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் நகர அரசைக் கட்டுப்படுத்தினர் என்பதை உறுதி செய்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் அரசைக் கட்டுப்படுத்தினர் என்பதால் மக்களிடம் பரவலான கல்வியறிவு இருந்தது என்பதும், பரவலான கல்வியறிவு இருந்ததால் மக்கள் அரசைக் கட்டுப்படுத்தினர் என்பதும் தமிழக நகர அரசுகளில் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய வரலாற்றில், தமிழக நகர அரசுகளில் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட உயர்வளர்ச்சி மகதப் பேரரசிலோ அல்லது அதற்கு முன்னரோ அங்கு ஏற்படவில்லை.
தமிழக நகர அரசுகளில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்தது எனவும், மிகச் சாதாரண மக்கள் கூட சங்க இலக்கியத்தைப் படைக்கும் அளவு உயர்தரமான கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனவும் தொல்லியல், இலக்கியச் சான்றுகள் உறுதி செய்கின்றன. ஆனால் வட இந்தியாவில் பல 100 கோடி ரூபாய் செலவில் பல பத்தாண்டுகளாக அகழாய்வு நடந்து வருகிறது எனினும், அங்கு மட்பாண்டங்களில் எழுத்துபொறிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார் அமர்நாத் இராமகிருஷ்ணா (https://youtu.be/O1F0XAc_pi0). காரணம் அன்று அங்கு சாதாரண மக்களிடம் கல்வியறிவோ எழுத்தறிவோ இல்லை. அதனால்தான் மகதப் பேரரசின் 600 ஆண்டுகால வரலாற்றில் (கி.மு.600-30) சமயச் சார்பற்ற படைப்பிலக்கியம் எதுவும் உருவாகவில்லை எனக் கூறுகிறார் டி.டி.கோசாம்பி (பக்:410). வட இந்தியாவில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின. அதற்கு முன் அங்கு செவ்வியல் இலக்கியங்கள் எதுவும் உருவாகவில்லை (கணியன்பாலன், 2016, பக்:73-75)
கல்வி போக, தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப விடயங்களிலும், இசை, நாட்டியம், மருத்துவம், ஓவியம், கட்டிடக் கலை, போர்க் கலைகள் போன்றவைகளிலும் தமிழகத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. சங்க இலக்கியம் போன்ற உலகத்தரம் வாய்ந்த செவ்வியல் இலக்கியங்களை தமிழகம் படைத்திருந்தது. ஆனால் தமிழகத்தில் உருவானவற்றில் பெரும் பகுதி அழிந்து போயின. அதில் தப்பிப் பிழைத்த சிறு பகுதிதான் இந்த சங்க இலக்கியம். உலகத்திற்குப் பேரளவான விழுமியங்களை, மதிப்பீடுகளை இன்னபிற விடயங்களை தமிழகம் வழங்கி உள்ளது. ஆனால் அது குறித்தான தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனால் மகதப் பேரரசின் காலத்தில் அல்லது அதற்கு முன்னர் இதுபோன்ற வளர்ச்சி எதுவும் அங்கு இல்லை. சான்றாக இசையை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ந்த நிலையான சாத்திரிய இசை என்பது இந்தியா முழுவதும் வேறு எந்த மொழியிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை உருவாகவில்லை. அதனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வடமொழியில் உருவான இசை இலக்கணங்களும் கூட தமிழ் சாகித்தியங்களைக் (இசை இலக்கியங்கள்) கொண்டுதான் எழுதப்பட்டன வடமொழி நூல்களான, பரத நாட்டிய சாத்திரம் என்ற நாட்டிய - இசை நூலும், சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் தமிழ் வழி நூல்கள். அவை வடமொழியில் உருவாவதற்கான பின்புலம் அங்கு இருக்கவில்லை. அவை தமிழ் மொழியிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பின் மொழி பெயர்க்கப்பட்டவை (கணியன்பாலன், 2016, பக்: 805, 806, 838-843)
ஆகவே இந்திய நாகரிகம் உலகத்திற்கு வழங்கியதாகச் சொல்வதில் பெரும்பாலானவை தமிழகம் வழங்கியவை. கிரேக்க நகர அரசுகளையும் உரோமப் பேரரசையும் நமது தமிழக நகர அரசுகளோடும் மகதப்பேரரசோடும் ஒப்பிடும்பொழுதான் இந்த உண்மைகளை நாம் புரிந்துகொள்ள இயலும். எனவே கீழடி நகர நாகரிகம் என்பது நகர அரசுகளின் நாகரிகம் என்பதையும், அது ஒரு நன்கு வளர்ச்சி பெற்ற நகர அரசுகளின் நாகரிகம் என்பதையும், கிரேக்க நகர அரசுகளுக்கு இணையான சில விடயங்களில் அதைவிட மேம்பட்ட நகர அரசுகளின் நாகரிகம் என்பதையும் குறித்தப் புரிதல் நமக்கு வேண்டும். சேலத்தில் உள்ள மாங்காடு, தெலுங்கனூர் பகுதிகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளின் அறிவியல் காலக்கணிப்பு தமிழகத்தின் இரும்புக்காலம் கி.மு. 2000 என உறுதி செய்துள்ளது என கீழடி அறிக்கை (பக்:17, 18) கூறுகிறது. தமிழக இரும்புக்காலம் கி.மு. 2000 என அறிவியல் காலக் கணிப்பு உறுதி செய்துள்ளது என்பதும், ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகராக இருந்துள்ளது என்பதும் (அ. இராமசாமி, 2013, பக்: 63-64, 88-93) கி.மு. 1000க்கு முன்பே தமிழகத்தில் நகரமயமாதல் தொடங்கி விட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
பழந்தமிழர்களின் வணிகமும் ஐக்கியமும்:
மிகப்பழங்காலம் முதல், மிக நீண்டகாலமாக மிகப்பெரிய கடற் படையையும், உலகளாவிய வணிக மேலாண்மையையும் பழந்தமிழக அரசுகள் கொண்டிருந்தன. திரு.சுகாப் எழுதிய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளசு” என்கிற ஆங்கில நூல், பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப் பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்களில் (பக்:203-242) விரிவாகவும், விளக்கமாகவும் பேசுகிறது. இந்நூலை பழந்தமிழக வணிகம் பற்றிய மிகச் சிறந்த ஆவணம் எனலாம். அந்நூல் எகிப்திலிருந்து தமிழகம் வந்த கப்பல்களைவிட அதிக எண்ணிக்கையிலும் பெரிய அளவிலும் உள்ள கப்பல்கள் தமிழகத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சென்றன எனக் கூறுகிறது. கி.பி. 78இல் எகிப்திலிருந்து தமிழகம் வழியாக கங்கைவரை பயணம் செய்த பெரிப்ளசு என்பவரின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது (W.H.SCHOFF, Pa:203-242). அடுத்ததாக “முசிறி - அலெக்சாண்டிரியா ஒப்பந்தம்” என்பது, கி.பி.150ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட வணிக ஒப்பந்தம். அதன்படி, ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை உரோமுக்கு ஏற்றுமதி செய்த வணிகப் பொருட்களின் இன்றைய மதிப்பு ரூ.120 கோடி (கா. இராசன், 2010, பக்: 89, 90 & கணியன்பாலன், 2016, பக்:112) வருடம் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களில் பல நூறு வணிகர்கள் உரோமுக்கு ஏற்றுமதி செய்து வந்ததைக் கணக்கிட்டால் அது பல ஆயிரம் கோடி வரும். இச்செய்திகள் பழந்தமிழக வணிகத்தின் அளவை, அதன் உலகளாவிய தன்மையை நமக்குக் காட்டுகிறது.
முசிறி அகழாய்வு குறித்து, அதன் இயக்குநர் செரியன், முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை, மத்திய தரைக் கடல், செங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன என்கிறார். மேலும், “கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ் பெற்ற பெரும் துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்” எனக் கூறுகிறார் (https://www.sahapedia.org/interview-pj-cheriyan). உலகின் இன்றைய பெரும் துறைமுக நகரங்கள் இவை. அன்று முசிறி அன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான நகராக இருந்துள்ளது. பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியைவிடப் பெரிய நகரங்கள். இத்தரவுகள் அன்று தமிழகம் உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையமாக, வணிக மையமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கின்றன.
பழந்தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி:
தமிழ் அரசுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளை பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன என வரலாற்றறிஞர் வின்சென்ட் ஆர்தர் சுமித் தனது இந்திய வரலாறு, அசோகர் ஆகிய இரு நூல்களில் குறிப்பிடுகிறார் (கார்த்திகேசு சிவத்தம்பி, NCBH, முன்னுரை & அசோகர், 2009. பக்: 79). வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தைப் பாதுகாக்கவும், மொழிபெயர் தேயப்பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கே இருந்து வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்த ஐக்கியக் கூட்டணியின் கடற்படை கொண்டுதான் அவர்கள் இன்றைய அரபிக்கடல், வங்காளக்கடல், இந்துமகாக் கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகிய அனைத்தையும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களைவிட அவர்கள் பல மடங்கு வலிமை வாய்ந்த கடற்படைகளைக் கொண்டிருந்தனர். கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனக் கூறியிருப்பதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழரசுகளின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகள் (கணியன்பாலன், 2016, பக்:274-286).
வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனார் தனது அகம் 31 ஆம் பாடலில் ‘தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த’ என்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர்கள் மூவரும் இணைந்து மொழிபெயர்தேயம் எனப்படும் இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தின் சில பகுதிகள் ஆகிய தேயங்களைப் (பிரதேசங்களை) பாதுகாத்து வந்தனர் என்கிறார். அதன்மூலம் தமிழ் அரசுகளிடையே ஒரு ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை அவர் உறுதி செய்கிறார். மேலும் தக்காணப் பகுதியில் இருந்த வணிகப் பாதைகளை, அதன் கிழக்கு, மேற்குக் கடற்கரைத் துறைமுக நகரங்களை தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் என்பதையும் இப்பாடல் உறுதி செய்கிறது. ஆற்று நீர் கடலில் கலக்கும் உலகிலுள்ள கடற்கரை நகரங்கள் அனைத்திற்கும், கடலில் செல்லும் வங்கம் எனப்படும் உலகமே பெயர்ந்து வருவது போன்ற மிகப் பெரும் கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் வணிகத்தை உடையவர்களாகப் பழந்தமிழர்கள் இருந்தனர் என்பதை அகம்-255, புறம்-400 ஆகிய பாடல்கள் உறுதி செய்கின்றன.
இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரை வணிகத்தையும், தக்காணப் பகுதியையும், தென்கிழக்கு ஆசிய வணிகத்தையும் தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன. பண்டைய சங்க காலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழில்நுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும், வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாகவும், தமிழ் அரசுகளிடையே இருந்த ஐக்கியக் கூட்டணியின் காரணமாகவும் உலகளாவிய வணிகத்தில் 750 வருடங்களாக (கி.மு.600 - கி.பி.150) இடைவிடாது, உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது (கணியன்பாலன், 2016, பக்:110-114). பழந்தமிழக நகர அரசுகள் வட இந்திய மகதப் பேரரசை விட பலவகையிலும் பல்வேறு துறைகளிலும் உயர்வளர்ச்சியைப் பெற்றிருந்தன என்பதை இதுவரை தந்த தரவுகள் உறுதி செய்கின்றன.
இரண்டாவது விடயம் - பரவலான கல்வியறிவு:
சமண, பௌத்த மத நிறுவனங்களின் மூலமே தமிழ்ச் சமூகம் பரவலான எழுத்தறிவை, கல்வியறிவைப் பெற்றது என முன்பு கருதப்பட்டது. ஆனால் கி.மு. 580க்குப்பின் தான் அம்மதங்கள் தோன்றுகின்றன. ஆனால் அதற்கு முன்பே தமிழகம் பரவலான கல்வியறிவை எழுத்தறிவைப் பெற்றிருந்தது என்பதற்கு, தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களும், தமிழகத்தின் நகர அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும்தான் காரணம். தமிழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, உலகளாவிய வணிக வளர்ச்சி போன்றவைகளுக்கும் இவைகளே காரணம் (கணியன்பாலன், 2016, பக்: 101-109, 777-780). இவ்வளர்ச்சியை ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் உள்ள வெனிசு, ஜினோவா போன்ற சுதந்திரத் தனி நகர அரசுகளில் ஏற்பட்ட வளர்ச்சியோடு ஒப்பிடலாம் (சவகர்லால் நேரு, 2006, பக்: 339-342).
உலக நாகரிகங்களும், பரவலான கல்வியறிவும்:
உலக அளவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் பழந்தமிழகம் அளவு பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் உலகின் எந்தச் சமூகத்திலும் இருந்ததாகத் தெரியவில்லை. சுமேரியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் பாபிலோனிய பேரரசும், பாரசீகப் பேரரசும் இருந்தன. இரண்டும் அன்றைய உலகின் மிகப் பெரிய பேரரசுகளாக இருந்தன (USA, VOL-2, PAGE: 11-14 & VOL-15, PAGE: 297-301 & Peter Davidson, 11.2.2011). கார்டன் சில்டே கூற்றுப்படி சுமேரிய நகர அரசுகளைவிட இவை சிறந்தவையாக இருக்கவில்லை. மேலும் அவை பேரரசுகள் என்பதால் அங்கு பரவலான கல்வியறிவும், எழுத்தறிவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எகிப்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அசீரிய அரச வம்சத்தாலும் பின் பாரசீக அரச வம்சத்தாலும் ஆளப்பட்டது. அவை அனைத்தும் பேரரசுகள் தான் (USA, VOL-6, PAGE: 140-142 & Charles Gates 2nd edition, page: 78-117). மேலும் எகிப்திய மக்கள் அந்நியர்களால் ஆளப்பட்டனர். ஆகவே அங்கு பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருக்க வாய்ப்பில்லை. பொனிசியர்கள் மேற்கு உலகத்துக்கு எழுத்தை வழங்கியவர்கள். நகர அரசுகளைக் கொண்டவர்களாக இருந்தவர்கள். ஆனால் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பிருந்தும் (கி.மு. 842) அசிரியப் பேரரசாலும் அதன் பின் பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, உரோமப் பேரரசுகளாலும் ஆளப்பட்டவர்களாக இருந்தார்கள் (USA, VOL-15, PAGE: 390-393 & Charles Gates 2nd Edition, page: 189-202). பலநூறு ஆண்டுகளாக சுதந்திரமற்ற அரசுகளில் கல்வியறிவும் படிப்பறிவும் பரவலாக இருக்க வாய்ப்பில்லை.
கிரேக்கர்கள் அன்று நகர அரசுகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். மிகச்சிறந்த அறிஞர்கள் அங்கு அன்று வாழ்ந்து வந்தனர். பல துறைகளிலும் அவர்கள் உச்ச நிலையை உன்னத நிலையை அடைந்திருந்தார்கள். மேற்கத்திய சிந்தனையின் மூலமாக இருந்த பலவும் அக்காலத்தில்தான் அங்கு உருவாகின. ஆனால் அன்று கிரேக்க மக்களில் 65 விழுக்காட்டுக்கு மேல் அடிமைகள். சான்றாக ஏதென்சில் 90,000 அத்தீனியர்களும், 3,65,000 அடிமைகளும், 45,000 குடியேறியவர்களும் விடுதலை செய்யப்பட்டவர்களும் இருந்தனர் என ஏங்கெல்சு கூறியுள்ளார். மேலும் அவர் அன்று ஏதென்சின் குடும்பப் பெண்கள் படிப்பறிவு அற்றவர்களாகவே இருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் (ஏங்கெல்சு, 2008, பக்: 80, 81, 145-148). ஆகவே அங்கு அன்று சுதந்திரமான ஆண் மக்களே கல்வியறிவும் படிப்பறிவும் கொண்டவர்களாக இருந்தார்கள். அடிமைகளும், குடும்பப் பெண்களும் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆகவே பண்டைய தமிழகம் அளவு பரவலான கல்வியறிவும், எழுத்தறிவும் அங்கு இருக்க வாய்ப்பில்லை. (USA, VOL-8, PAGE: 390-402 & Joshua J. Mark dt. 13.11.2013) அன்றைய உரோம் எட்ரூசுகன்கள் கீழ் இருந்தது. ஆகவே அங்கு பரவலான கல்வியறிவு இருக்கவில்லை (USA, 1988, VOL-16, PAGE: 440-453 & Charles Gates 2nd edition, page: 200-202).
சீனச் சமூகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் சிறு சிறு அரசுகளாக பிரிந்து சுதந்திரத்தனி அரசுகளைக் கொண்டதாக இருந்தது. இக்காலம் சீனாவின் மிகச் சிறந்த காலம். இக்காலகட்டத்தில் கன்பூசியசு (CONFUCIUS), மென்சியசு (MENCIUS), லாவோசு (LAOZI) போன்ற தத்துவ அறிஞர்கள் தோன்றினர். புதிய கண்டு பிடிப்புகள் பல உருவாகின. இந்த அரசுகள் ஒரு சில நூற்றாண்டுகள்தான் இருந்தன. அக்காலகட்டத்திலும் தனி அரசுகளிடையே பேரரசு ஆவதற்கு இடைவிடாது போர்கள் நடந்தன. (கிரிசு ஆர்மன், பக்: 107-113 & Joshua J. Mark, 2.9.2009 & USA, VOL-3, PAGE: 500-503).
ஆனால் பழந்தமிழகத்தில் 1000 வருடங்களுக்கு மேல் நகர அரசுகள் இருந்தன. அவர்களிடையே போர்கள் நடந்து வந்தாலும் மிகப் பெரிய ஐக்கியம் இருந்து வந்தது. இங்கு இருந்தது போன்ற மக்கள் பிரதிநிதிகள் அங்கு தேர்ந்தெடுக்கப் படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் அரசைக் கட்டுப்படுத்தவில்லை. தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், கௌதமனார் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் அறிஞர்களோ, அவர்கள் உருவாக்கிய எண்ணியம், சிறப்பியம், அளவியல் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல்களோ அங்கு உருவாகவில்லை. ஆகவே சீனாவிலும் கல்வியறிவும், எழுத்தறிவும் பழந்தமிழகம் அளவு பரவலாக இருக்க வாய்ப்பில்லை. வட இந்தியாவில் பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இல்லை என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மெசபடோமியாவின் பாபிலோனிய பாரசீகப் பேரரசிலும், எகிப்திய அரசிலும், பொனிசியாவிலும், கிரேக்கத்திலும், உரோமிலும், சீனாவிலும், வட இந்தியாவிலும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் பழந்தமிழகம் அளவு பரவலான கல்வியறிவு இல்லை. கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்பது உலக அளவில் ஒரு மிகச்சிறந்த காலகட்டமாக கிரேக்கர்களுக்கும், சீனர்களுக்கும் இருந்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு கி.மு. 1000 முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை 1000 வருட காலம் மிகச் சிறந்த காலகட்டமாக இருந்துள்ளது. ஆனால் அக்காலகட்டத்தில் உருவான பலவேறு நூல்களும் தடயமே இல்லாமல் அழிந்து போயின. இசை, மெய்யியல், இலக்கியம் போன்றனவற்றில் கிடைத்த தடயங்கள் அன்று பழந்தமிழகம் அடைந்த உச்சகட்ட வளர்ச்சியைச் சுட்டி நிற்கின்றன.
எனவே சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டும் சங்ககால வரலாற்றைக் கண்டறிவது என்பது குருடர்கள் யானையைப் பற்றி அறிந்து கொண்டது போலாகிவிடும். சங்க காலத்தின் இறுதியில் வைதீக மதக் கருத்துகள், சமண பௌத்த மதக்கருத்துகள் போன்ற பல கருத்து முதல்வாத மெய்யியல்கள் இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளே அன்று இருந்தன (கணியன்பாலன், 2016, பக்: 778-781, 807-809). இன்றைய நவீனச் சமூகத்தில் பல கருத்து முதல்வாத மெய்யியல் கருத்துகள் இருந்த போதிலும், அதன் அடித்தளமாக இருப்பது பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துகளே. அதைப் போன்று தான் சங்க காலத்திலும் இருந்தது. இந்த மெய்யியல் கருத்துகளும், நகர அரசுகளும் தான் பழந்தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்குக் காரணம். அதனைச் சங்க இலக்கியம் கொண்டு மட்டும் கண்டறிவது இயலாது. அக்காலத் தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகள் மூலமே கண்டறிய இயலும்.
மூன்றாவது விடயம் – சமயச் சான்றுகள் இல்லை.
பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக பொருள்முதல்வாத மெய்யியல் இருந்ததால்தான் சமயம் சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லை. கி.மு. 750 அளவில் பழந்தமிழகத்தில் இருந்த தொல்கபிலர் தான் எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு தமிழர் என்பதை முனைவர் க. நெடுஞ்செழியன் விரிவான ஆய்வுகள் மூலம் நிறுவி உள்ளார் (தமிழர் இயங்கியல், 2009, பக்:20-23). தொல்கபிலர் வட இந்தியாவில் தோன்றுவதற்கான பின்புலம் வட இந்தியாவில் இல்லை. ஆனால் அவர் தமிழகத்தில் தோன்றியதற்கான பின்புலம் பழந்தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை ஆசிரியரின் நூல் நிறுவியுள்ளது (பழந்தமிழக வரலாறு, பக்:32-45).
எண்ணியம் என்பது பொருள்முதல்வாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பழந்தமிழ்ச் சமூகம் 1000 வருடங்களாக பொருள்முதல்வாத மெய்யியலைத்தான் தனது அடிப்படையாகக் கொண்டிருந்தது. அங்கு கருத்துமுதல்வாத சமயம் இருக்கவில்லை. தொல்கபிலரின் எண்ணியம் மட்டுமல்ல கணாதரின் சிறப்பியம் என்கிற வைசேடிகம், கௌதமனாரின் அளவியல் என்கிற நியாயவியல், பக்குடுக்கை நன்கணியாரின் அணுவியல், ஆசிவகம் போன்ற பல சிந்தனைப் பள்ளிகள் தமிழகத்தில் இருந்தன (மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, பக்:23, 24). இவை அனைத்தும் பொருள்முதல்வாத மெய்யியலைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன.
தொல்கபிலர்: தொல்கபிலரை புறம் 166 ஆம் பாடல் முதுமுதல்வன் எனவும் அவரது நூலை 24 கூறுகளைக் கொண்ட ஒரு தொன்மையான நூல் எனவும், 21 தர்க்கத் துறைகளைக் கொண்ட ஒரு தர்க்க நூல் எனவும் கூறுகிறது. சித்தர் பத்ரகிரியார் அவரை ஆதிகபிலர் என்கிறார். சங்க இலக்கியத் தொகுப்புகளோ அவரைத் தொல்கபிலர் என்கின்றன. வட மொழி நூல்கள் அவரை கபிலர், கபிலமுனி, அசுரர் எனப் பலவாறு கூறுகின்றன. ஒரு சில வடமொழி நூல்கள் அவரைக் கடவுளின் அவதாரம் என்கின்றன. ஆதி சங்கரர் அவரை மிகப்பெரிய அறிவாளி என்கிறார் (மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனைமரபு, 2018, பக்:13, 14, 76). ஆக தொல்கபிலர் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு பேரறிஞராக இருந்துள்ளார்.
தொல்கபிலர் குறித்து, “இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு சமய நிறுவனமும் கபிலர் என்ற மாமனிதருக்கு உளவியல் அடிப்படையிலும், மெய்யியல் அடிப்படையிலும் கடமைப்பட்டுள்ளது…. புகழ்மிக்க - வியப்புக்குரிய - ஒளி நிறைந்த கபிலர் இன்றும் வாழ்கிறார்” என விவேகானந்தர் கூறுகிறார் (மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, 2018, பக்:115). ஆகவே தமிழரான தொல்கபிலர் ‘தமிழ் அறிவு மரபின் தந்தை’ எனச் சொல்லத் தகுதியானவர். அவரது எண்ணியம் மகாபாரதத்திலேயே மிகப் பழமையானது எனப்படுகிறது. தொல்கபிலர் மகாவீரர், புத்தர் ஆகியவர்களுக்கு முந்தையவர் எனவும், உபநிடதங்களுக்கு முந்தையவர் எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். உபநிடதங்களின் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு என்பதால் தொல்கபிலரின் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு எனக் கொண்டு அவரின் காலமும், அவரின் 6 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இருப்பதால் சங்க இலக்கியத்தின் தொடக்க காலமும் கி.மு. 750 எனக் கணிக்கப்பட்டது (கணியன்பாலன், 2016, பக்:63, 64).
தொல்காப்பியர் தனது நூலில் நிலம் பொழுது ஆகிய இரண்டின் இயல்புதான் முதற்பொருள் என்கிறார். எண்ணியச் சிந்தனைப்படி, நிலம் என்பது வெளியையும், பொழுது என்பது காலத்தையும் குறிக்கும். இன்றைய நவீன அறிவியல் வெளி-காலம் (TIME-SPACE) எனக் குறிப்பிட்டதைத்தான் தொல் காப்பியர் எண்ணிய அடிப்படையில் நிலம் பொழுது என்கிறார். அவர் கருப்பொருளில்தான் தெய்வம், மனிதன், விலங்கு, செடிகொடிகள் முதலியனவற்றை வைத்தார். முதற்பொருள்தான் அனைத்திற்கும் அடிப்படை. அதில் இருந்து உருவானவைதான் கருப்பொருள்கள். இந்த தெய்வம் என்பது இன்றைய முழுமுதற்கடவுள் அல்ல. வள்ளுவன் தனது 50 ஆவது குறளில், இந்த உலகில் சிறந்த முறையில் வாழ்பவர் வானுரையும் தெய்வமாக ஆவர் என்கிறான். ஆகவே இந்த ‘தெய்வம்’ என்பது மனிதனாக இருந்து தெய்வமாக ஆகியவை. பண்டைய நிலதெய்வம், குலதேய்வம், நடுகல் ஆகியன அப்படி உருவானவைதான். அவை இன்றைய சமய வழிபாட்டுத் தெய்வங்கள் அல்ல. நிலதெய்வங்களும், குல தெய்வங்களும், நடுகல்லும் நமது முன்னோர்கள். ஆதலால் அன்று முழுமுதற் கடவுள்களைக் கொண்ட சமயம் இருக்கவில்லை (கணியன்பாலன், 2016, பக்: 724-725, 800-801). அதனால் சமயம் சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லை. கீழடியில் மட்டுமல்ல, கேரளாவில் பட்டணம் என்ற முசிறி அகழாய்வில் கிடைத்த ஒரு இலட்சம் பொருட்களிலும் சமயம் சார்ந்த பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
காலம்: கி.மு. 1000க்கு முன்பிருந்தே தமிழகத்தில் நகர அரசுகள் இருந்தன எனவும், சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் அன்று பரவலான கல்வியறிவும் எழுத்தறிவும் இருந்தது எனவும் அன்று பொருள்முதல்வாத மெய்யியல்தான் தமிழ்ச்சமூகத்தின் அடிப்படையாக இருந்தது எனவும் சமயங்கள் இல்லை எனவும் இக்கட்டுரையாளரின் நூல்கள் முன்பே நிறுவியுள்ளன. அதனைக் கீழடி, முசிறி அகழாய்வுகள் உறுதி செய்துள்ளன (பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், 2018, பக்: 15-20, 136).
பழந்தமிழக நாகரிகத்தின் தடயமற்ற பேரழிவு
1000 வருடங்களுக்கும் மேலாகப் பெரும்புகழ் பெற்று விளங்கிய நாகரிகம் தடயமே இல்லாது அழிந்து போக மூன்று காரணங்கள் முக்கியமானவை. பழந்தமிழகத்தில் கி.மு. 250க்கு பின்பு சிறு குறு நகர அரசுகளை மூவேந்தர்கள் இணைத்துக் கொள்வதும், குடும்ப உறுப்பினர்கள் அரசர் ஆகாமல் போவதும் நடந்து வந்தன. இறுதியில் கி.மு. 50 அளவில் சிறு குறு நகர அரசுகள் இல்லாது போய், அரச குடும்ப உறுப்பினர்கள் அரசராவதும் இல்லாது போய், பேரரசுகள் உருவாகியிருந்தன (பழந்தமிழக வரலாறு, 2018, பக்: 269, 653, 654). கடைச்சங்கத்திற்குப் (சங்ககாலம்) பின் எழுந்த நூல்களைச் சங்கம் மருவிய நூல்கள் என நமது முன்னோர் கூறுவர் எனவும் சங்கத்தோடு தொடர்புடைய சங்கக் கருத்தைத் தழுவிய நூல்களையே சங்கம் மருவிய நூல்கள் என பழைய மரபு கூறுகிறது எனவும் வித்வான் எசு.நடராசன் கூறுகிறார். பழைய வெண்பா ஒன்று சங்கம் மருவிய நூல்களைப் பட்டியலிடுகிறது எனவும் பின் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிரு பாட்டியல் தனது 133, 222ஆம் சூத்திரங்களில் பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகிறது எனவும் அவர் கூறுகிறார் (பதினெண் கீழ்க்கணக்கு, 2014, பக்: xxxiii-xxxviii). ஆகவே சங்க காலத்தை ஒட்டி, அக்கருத்துக்களோடு தொடர்புடைய நூல்கள் தோன்றிய காலமே சங்கம் மருவிய காலம். அதனைச் சங்ககாலத்தை ஒட்டியுள்ள கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலகட்டம் எனவும், பேரரசுக் காலம் எனவும் கூறலாம்.
பேரரசுக் காலத்தில், கி.மு.50 முதல் கி.பி.150வரை பழந்தமிழ்ச் சமூகம் ஓரளவு சங்ககால நற்பண்புகளையும், உயர்ந்த சமூக மதிப்பீடுகளையும் கொண்டதாக இருந்தது. சுயசிந்தனையும், புதுமை செய்யும் திறனும், புத்துணர்வும் ஓரளவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தன. படைவலிமையும், உலகளாவிய வணிகமும், செல்வமும் தொடர்ந்து வளர்ந்து வந்தன. ஆனால் வீழ்ச்சிக்கான அறிகுறிகளும் உருவாகி வளரத் தொடங்கியிருந்தன. சங்கம் மருவிய காலத்தில் வேந்தன் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டு வானளாவிய அதிகாரங்களைக் கொண்டவன் ஆனான். அதனை கி.மு.75 அளவில் தோன்றிய ‘முத்தொள்ளாயிரம்’ நூல் வெளிப்படுத்துகிறது (கணியன்பாலன், 2016, பக்: 657-659). பேரரசுக் கொள்கை, அரச குடும்பங்கள் இடையேயும் உயர் வர்க்கத்தாரிடமும் இருந்த வைதீக, சமண, பௌத்த மதச் சிந்தனைகள், இன்னபிற காரணிகள் ஆகியன கி.பி. 150க்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் ஒரு புரையோடிப் போன சமூகமாக மாறுவதற்குக் காரணமாகின. வேந்தனும் அவனைச் சார்ந்தோரும், வணிகர்களும், இன்ன பிற செல்வந்தர்களும் அதிகம் செல்வம் பெற்றவர்களாக ஆகி ஆடம்பரத்திலும், இசை, நடனம், ஆடல் பாடல் போன்ற கேளிக்கைகளிலும், மதச்சடங்குகளிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயிருந்தனர். சாதாரண மக்களின் நிலையில் மாற்றமில்லாத வாழ்க்கை இருந்ததோடு, அவர்களும் மூட நம்பிக்கைகளிலும், வெற்றுச் சடங்குகளிலும் ஆழ்ந்து போயிருந்தனர். வர்க்கவேறுபாடுகள் மிக அதிக அளவு அதிகரித்து, சகிக்க இயலாத நிலையை அடைந்ததோடு, கருத்து வேறுபாடுகள் மிகுந்து, நற்பண்புகளையும், உயர் மதிப்பீடுகளையும் இழந்து போன சமூகமாக, பழக்க வழக்கங்களும், சடங்குகளும், மரபுகளும் இறுகிப் போன சமூகமாக, சுயசிந்தனையோ, புத்துணர்வோ, புதுமை செய்யும் திறனோ இல்லாதுபோய், ஒரு புரையோடிப் போன சமூகமாக கி.பி. 150க்குப் பிந்தைய பழந்தமிழ்ச் சமூகம் ஆகிப் போயிருந்தது.
சூழ்நிலைக்கும், சந்தர்ப்பத்திற்கும், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருந்த பழந்தமிழ்ச் சமூகம் கி.பி. 150க்குப் பின் அத்திறனை இழந்து, இறுகிப் போய், ஒளியிழந்த, இருள்படர்ந்த சமூகமாக ஆகியிருந்தது. இந்த நிலையில் கி.மு. 235 – 284 வரை உரோம் அரசில் ஏற்பட்ட நெருக்கடிகளால் தமிழக ஏற்றுமதி கி.பி.235 முதல் நின்றுபோய் பொருளாதாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டது (மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, 2018, பக்: 42). இந்தப் பேரிழப்பு பழந்தமிழ்ச் சமூகத்தை நிலைகுலையச் செய்தது. இந்தச் சூழ்நிலையில்தான் கி.பி. 250இல் கர்நாடக ஆந்திரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த அநாகரிக இனக்குழு மக்களான களப்பிரர்களின் படையெடுப்பு நடந்தது (கணியன்பாலன், 2016, பக்: 854, 855). இவர்களது படையெடுப்பால் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் புகழோடு இருந்த பழம்பெரும் தமிழக நாகரிகம், மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் பேரழிவுக்கும் உள்ளானது. அதில் இருந்து தமிழகம் மீளவே இல்லை.
இது போன்ற புரையோடிப்போன சமூகங்களின் மேல் நடக்கும் அநாகரிக இனக்குழு மக்களின் படையெடுப்பு, மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறது. இது போன்ற படையெடுப்புகளால், அந்த புரையோடிப்போயிருந்த, நாகரிக நகரச்சமூகங்கள் ஒரு பின் தங்கிய கிராமச் சமூகமாக, மிகவும் பிற்போக்கான சிந்தனையைக் கொண்ட சமூகமாக மாற்றப்படுகின்றன. அநாகரிக டோரியர்களின் படையெடுப்பால் கிரேக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து, “ஆப்ரிக்காவில் பயிரிட்டு வாழ்ந்த மக்களுக்கும் கிரேக்க மக்களுக்கும் வேறுபாடு இல்லாதுபோனது…. மைசீனியாவின் கடந்த காலம் முற்றிலுமாக மறக்கப் பட்டிருந்தது…. கிராமங்கள் ஒன்றுக் கொன்று துண்டிக்கப் பட்டிருந்தன….. மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். கைவினைத் தேர்ச்சி முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை…. வாழ்க்கை கடுமையானதாகவும், பஞ்சங்கள் மிகுந்ததாகவும் இருந்தது” என்று அதன் பிற்போக்கான நிலையைக் கூறுகிறார் கிரிசு ஆர்மன் (விடியல், பக்: 119). டோரியர் படையெடுப்பால், மைசீனிய நகரம் உட்பட அநேக நகரங்கள் சாம்பற் குவியலாகின, கிரீசின் வாழ்க்கை ஸ்தம்பித்துப்போய்விட்டது, அந்நாகரிகத்தை இருள் சூழ்ந்துகொண்டது, மக்களின் வறுமை அதிகரித்தது, வாழ்க்கை நிலையற்றதாகியது, அதன் காரணமாக 300 வருடம் கிரேக்கம் இருளடர்ந்த காலமாக ஆகியது என்கிறார் சாமிநாத சர்மா (கிரீசு வாழ்ந்த வரலாறு, 2003, பக்:27-29). களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் இந்த நிலையில்தான் இருந்தது.
இது போன்ற நிலையிலிருந்து அச்சமூகம் மீண்டு வர ஒரு சில நூற்றாண்டுகள் முதல் பல நூற்றாண்டுகள் வரை ஆகின்றன. ஆனால் புதிதாக மீண்டு வரும் சமூகம் முற்றிலும் ஒரு புதிய, மாறுபட்ட சமூகமாக, பழைய நினைவுகள் இல்லாத, பிற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட சமூகமாக ஆகிவிடுகிறது. களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம் மிகப் பெரிய அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளான ஒரு சமூகமாக ஆகி, பின் 150 ஆண்டுகள் கழித்து மீண்டெழுந்த தமிழ்ச் சமூகம் மதம், சமயம் சார்ந்த சமூகமாக, பிற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட ஒரு கிராமப்புறச் சமூகமாக ஆகியிருந்தது. பழந்தமிழக நகர அரசுச் சமூகத்தில் இருந்த மிகவும் முற்போக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப சிந்தனைகளையும், அந்த நகர அரசுச் சமூகம் குறித்த வரலாற்றையும், பண்பாட்டையும் அது முற்றிலுமாக இழந்துபோய், முற்றிலுமாக மறந்தும் போயிருந்தது. இன்று வரைகூட அவைகளைப் பற்றிய எந்தவித நினைவும் இல்லாத சமூகமாகவே தமிழ்ச் சமூகம் இருக்கிறது. ஆனால் ஒரு சில கலை, இலக்கியம் சார்ந்த விடயங்கள் மட்டும் ஓரளவு பாதுகாக்கப்பட்டிருந்தன. இனக்குழு நிலையில் இருந்த அநாகரிக மக்களான களப்பிரர் படையெடுப்பு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான நகரங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுத் தரை மட்டமாக்கப்பட்டன. நாடு முழுவதும் படையெடுப்பின் தொடக்க ஆண்டுகளில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. பண்டைய நாகரிகம் அடியோடு இல்லாது போனதோடு, கடந்த கால நாகரிகம் குறித்தச் சிந்தனையே இல்லாத அளவு அங்கு பேரழிவும் வன்முறையும் பல ஆண்டுகள் தொடர்ந்து நட ந்தேறியது.
ஆரியர்களின் சிந்துவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல் குறித்து, “ஆரியர் தாக்குதல் நடத்திச் சென்ற பிறகு, அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாகவே சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் மனித சமூகமும் வரலாறும் அங்கு மீண்டும் தோன்றக் கூடுமானால் அவை முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் முடியும்” எனக் கூறுகிறார் டி.டி. கோசாம்பி (பண்டைய இந்தியா, பக்: 136, 137). இந்த நிலைதான் களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்தின் நிலையும் இருந்தது. இந்த களப்பிரர் படையெடுப்புக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட வைதீக சமண பௌத்த மதச் செல்வாக்குகளும், சமற்கிருதமயமாதலும் இணைந்து (கே.கே.பிள்ளை, பக்: 183, 189, 220) பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அனைத்தையும் இல்லாது செய்ததோடு அந்த நகர நாகரிக காலம் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அந்த நகர நாகரிக காலம் பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டிருந்ததால் பண்டைய தமிழ் நூல்கள் அனைத்தும் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருந்தன. சமண பௌத்த வைதீக மதங்கள் அதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவை. அதன் காரணமாக தொடக்கத்தில் இந்த மத ஆதிக்கங்களின் காரணமாகவும், கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவான சமற்கிருதமயமாக்களின் போதும் (க.ப. அறவாணன், 2009, பக்: 86-89) தமிழில் இருந்த பொருள் முதல்வாத மெய்யியல் நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டன. இதில் சமற்கிருதமயமாக்களின் பங்கு மிகமிக முக்கியமானது. பழந்தமிழ் நூல்களில் பலவற்றை மொழி பெயர்த்துக் கொண்ட சமற்கிருதம் பழந்தமிழர்களின் பண்டைய நூல்கள் அனைத்தையும் அது பற்றிய சிந்தனை அனைத்தையும் தடயமே இல்லாமல் அழித்து ஒழிப்பதில் பெருவெற்றி பெற்றது. பண்டைய ஓலைச்சுவடிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதையும், ஆற்றில் விடுவதையும் சடங்குகளாக, புனித விடயங்களாக ஆக்கி தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை இல்லாமலாக்கியது (உ.வெ. சாமிநாத ஐயர், பக்: 806, 812). ஆகவே 1.நகர அரசுகள் பேரரசுகளாகி சீர்கெட்டுப் புரையோடிப் போய், வலிமை இழந்ததும், 2.களப்பிரர்களின் படையெடுப்போடு கூடிய மிகப் பெரிய பேரழிவும், 3.சமண, பௌத்த, வைதீக மத ஆதிக்கமும், சமற்கிருதமயமாக்கலும் ஆகிய இவைதான் 1000 ஆண்டு கால பழந்தமிழக நகரநாகரிகம் தடயமே இல்லாமல் அழிந்து போகக் காரணம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - சங்கம் மருவிய காலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தைச் (கி.மு.50 - கி.பி.250) சேர்ந்தவை என்றுதான் பண்டைய மரபு கூறுகிறது என வித்வான் எசு.நடராசன் கூறியுள்ளார். ஆனால் சங்கம் மருவிய காலம் எந்தக்கால கட்டத்தைச் சேர்ந்தது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவை என்ற தவறான புரிதல் உருவாகக்காரணம். கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்குரிய (கணியன்பாலன், 2016, பக்: 317 – 329) சேரன் செங்குட்டுவனின் காலத்தை, கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனத் தவறாகக் கணித்ததன் காரணமாகவே சங்கம் மருவிய காலத்தோடு களப்பிரர் காலமும் சேர்க்கப்பட்டு, களப்பிரர் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்டன என்ற தவறான புரிதல் பரவியுள்ளது. சங்கம் மருவிய காலத்திற்குப் பின் வருகிற கி.பி. 250-550 வரையான காலம்தான் களப்பிரர் காலம். சங்கம் மருவிய காலத்தில்தான் திருக்குறள், சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் ஆகியன இயற்றப்பட்டன. இதே காலத்தில்தான் திருக்குறளுக்குப் பின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன.
களப்பிரர்களின் தொடக்க காலம் என்பது முன்பு கூறியவாறு மிகப்பெரிய பேரழிவு நடந்த ஒரு பிற்போக்கான காலம். அக்காலத்தில்தான் சமயம் சார்ந்த பிற்போக்குச் சிந்தனைகள் மேலோங்கி இருந்தன. நாளடைவில் சமயம் சார்ந்த சிந்தனைகள் வளர்ச்சியடைந்து, கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையாரின் பக்திப் பாடல்களும் தோன்றின (மு. அருணாசலம், கடவு பதிப்பகம், பக்:97-100). தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாதர், தருமபாலர், போதிதர்மர் போன்ற பௌத்த மதச் சிந்தனையாளர்கள் கி.பி. 5 முதல் 7 ஆம் நூற்றாண்டுவரை உருவாகினர் (நா. வானமாமலை, 2008, பக்: 96, 126-130). ஆக பொதுவாகக் களப்பிரர் காலம் என்பது மதச் சிந்தனைகள் ஆதிக்கம் வகித்த காலம் என்ற புரிதல் தேவை. ஆனால் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பெரும்பாலும் காரண காரியச் சிந்தனைகளையும், தர்க்க வாதத்தையும் கொண்டதாக, மதம் சமயம் சாராத நூல்களாகவும், ஐந்திணைப் பாகுபாடுகளைக் கொண்டதாகவும், அகம்புறம் சார்ந்த கருத்தியலை உடையதாகவும், திருக்குறள் போன்ற நீதி நூல்களாகவும் உள்ளன. களப்பிரர் காலத்தில் ஐந்திணைப் பாகுபாடுகளும், அகம்புறம் சார்ந்த கருத்தியலும் இல்லாது மறந்து போயிருந்தன. ஆகவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தைச்சேர்ந்தவை.
களப்பிரர் காலமும் வைதீகமும் (கி.பி.250-550):
களப்பிரர் காலம் குறித்து அறிய வேள்விக்குடி செப்பேடும், பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் உதவுகின்றன. முதலில் வேள்விக்குடி செப்பேடு குறித்துப் பார்ப்போம். தனக்கு யாகங்களைச் செய்து கொடுத்த கொற்கைக்கிழான் கொற்றன் என்கிற பார்ப்பனனுக்கு கி.மு. 4 ஆம், 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (பழந்தமிழக வரலாறு, 2018, பக்:160-164) பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக்குடி என்கிற ஊரைத் தானமாகக் கொடுத்தான் எனவும், இதனை கி.பி. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தைக் கைப்பற்றிய களப்பிரர்கள் எடுத்துக் கொண்டனர் எனவும், கி.பி. 7 ஆம், 8 ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையனிடம் கொற்கைக் கிழான் கொற்றனின் வழிவந்தவன் தனது முன்னோனுக்கு வழங்கப்பட்ட வேள்விக்குடி ஊரை மீட்டுக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டான் எனவும், அதனை ஏற்றுப் பராந்தகன் நெடுஞ்சடையன் வேள்விக்குடி ஊரை மீட்டுக் கொடுத்த செப்பேட்டுச் சாசனம்தான் இந்த வேள்விக்குடிச் செப்பேடு எனக் கருதப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நிலதானம் சுமார் 500 ஆண்டுகள் கழித்து பிடுங்கப்பட்டு பின் சுமார் 500 ஆண்டுகள் கழித்துத் திருப்பித் தரப்படுவதாக இந்தச் செப்பேடு கூறுகிறது.
இந்த வேள்விக்குடிச் செப்பேடு குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார் முனைவர் தி.சு. நடராசன் (NCBH, 2008, பக்: 128-132). முதுகுடுமி காலத்தில் (கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு) இது போன்ற செப்பேடுகள் இருக்கவில்லை, நில தானங்கள் வழங்கப் படுவதில்லை. வேள்விக்குடி என்ற ஊர் இல்லை. அதில் உள்ள பெயர்களும் பொருத்தமாக இல்லை. முதுகுடுமி கொடுத்த சாசனம் குறித்தத் தகவல் எதுவுமில்லை. சங்க காலத்திலேயே பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது என்ற பிரமையை உருவாக்குவது தான் இதன் நோக்கம் என்கிறார் அவர். தி.சு. நடராசன் அவர்களின் கருத்தில் உண்மையுள்ளது. கி.மு. 4 ஆம், 3 ஆம் நூற்றாண்டில் (நந்தர் - மௌரியர் காலம்) பார்ப்பனர்களுக்கு நிலதானம் வழங்குவது என்பது வட இந்தியாவில் கூட இருக்கவில்லை. எனவே இந்த வேள்விக்குடி செப்பேடு என்பது ஒரு வரலாற்றுப் புனைவு. கீழடி அகழாய்வுகளும் இன்ன பிறவும் அன்று சமயம் சார்ந்த எந்த விடயமும் இல்லை என்பதை உறுதி செய்த நிலையில் இந்த வேள்விக்குடி செப்பேடு கூறும் செய்திகளை ஏற்க முடியாது. தொல்காப்பியர் குறிப்பிடும் 140 புறத்திணைகளில் ஒன்று ‘வேள்வி நிலை’ என்ற புறத்திணை. அது அரசன் ஆநிரைகளைப் பரிசாக வழங்கும் நிகழ்வு. அதற்கும் வேதமுறையிலான வேள்விச் சடங்குக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை (பழந்தமிழக வரலாறு, 2018, பக்:311-315).
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள்: 1979க்கு முன்பாகக் களப்பிரர்களைப் பற்றி ஆய்வு செய்த பண்டாரத்தார், நீலகண்ட சாத்திரி, மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற பல வரலாற்று ஆய்வாளர்களின் காலத்திற்குப் பிறகே பூலாங்குறிச்சிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் கருத்துகளுக்கு வேள்விக்குடி செப்பேடு தான் அடிப்படையாக இருந்தது. ஆனால் வேள்விக்குடி செப்பேடு ஒரு வரலாற்றுப்புனைவு என்பதால், அவர்கள் களப்பிரர்கள் குறித்துக்கூறிய கூற்றுக்கள் பல ஏற்கத்தக்கன அல்ல. இனி நாம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு குறித்து முனைவர் மா.பவானி கூறுவதைப் பார்ப்போம். பூலாங்குறிச்சியில் உள்ள குளத்தின் மலைச்சரிவில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலில் ஒரு ஓலையில் எழுதப்பட்டு, பிறகு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு என்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சேந்தன் கூற்றன் என்னும் களப்பிர அரசன் காலக் கல்வெட்டு. இதில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இந்த அரசனது ஆட்சியில் வேல்மருகன் கடலகபெரும் படைத் தலைவன் எங்குமான் என்பவன் இரண்டு கோவில்களையும், ஒரு சமணப் பள்ளியையும் கட்டுவித்து கோவிலில் வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்தான் என முதல் கல்வெட்டும், வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் பிரம்மதேயம், வேறு ஒரு ஊர் ஆகிய மூன்று ஊர்களும் மலைமேல் எடுக்கப்பட்ட கோவில்களுக்கு தரப்பட்ட தானம் என்பதை இரண்டாவது கல்வெட்டும் கூறுகிறது. இக்கல்வெட்டுகளில் பிராமண நிலக்கிழார், பிரம்மதேயமுடையார், நாடு காப்பார், புறங்காப்பார் போன்ற பல பெயர்கள் வருகின்றன. இக்கல்வெட்டில் கூறப்படும் சில ஊர்கள் சோழநாட்டில் இருப்பதாலும், கல்வெட்டிலேயே பாண்டியநாடு கொங்கு நாடு போன்றன வருவதாலும் இந்த களப்பிர அரசன் சோழ, பாண்டிய, கொங்கு நாடுகளுக்கு அரசனாய் இருந்துள்ளான். பிரம்மதேயமுடையார், பிரம்மதேயம் ஆகிய சொற்கள் களப்பிரர் காலத்தில் பிரம்மதேயம் வழங்கப் பட்டதையும், அவை இருந்ததையும் உறுதி செய்கின்றன எனவும் இக்காலம் பிரம்மதேயங்கள் பெருகத் துவங்கிய காலம் எனவும் கூறுகிறார் (www.tamilvu.org › tdb › inscription › html › pulankuricci_inscriptions) முனைவர் மா. பவானி.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் களப்பிரர்கள் வைதீக நெறிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதோடு அவர்கள் பிராமணர்களுக்குப் பிரம்மதேயம் வழங்கியவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றன. ஆகவே தமிழகத்தில் பல்லவர்களோடு, களப்பிரர்களும் முதலில் பிரம்மதேயங்களை வழங்கியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது (ச.கிருஷ்ணமூர்த்தி, பக்:161, 162, 172, 173, 233-235). யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூலில் களப்பிரர்கள் மூவேந்தர்களையும் சிறையில் இட்டனர் என்ற செய்தி உள்ளது (நடன காசிநாதன், 1981, பக்: 7, 8. & பன்னீர் செல்வம், பக்: 42, 43). இந்நூலில் உள்ள பல பாடல்கள் மூலம் களப்பிரர்கள் மிகச் சிறந்த வைணவர்கள் என அறிய முடிகிறது (யாப்பருங்கலக் காரிகை, பக்: 324-326). சோழநாட்டைத் தன் பெரும்படையால் கைப்பற்றி ஆட்சி செய்த கூற்றுவன் என்கிற களப்பிர அரசன் ஒரு சிறந்த சிவபக்தன் என கூற்றுவநாயனார் புராணம் கூறுகிறது (நடன காசிநாதன், 1981, பக்: 16-19).
களப்பிரர்கள் பாலி மற்றும் பிராகிருத மொழியை ஆதரித்தார்கள் என்பதற்கும் அம்மொழிகளில் பல நூல்கள் அக்காலத்தில் படைக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் உண்டு (நடன காசிநாதன், 1981, பக்: 6, 7 & பன்னீர் செல்வம், பக்: 51). கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், சோழநாட்டைச் சேர்ந்த புத்ததத்த மகாதேரர் என்னும் பௌத்த அறிஞர் பாலி மொழியில் பல நூல்களைப் படைத்தார். களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில்தான் ‘வினய வினிச்சியம்’ என்னும் நூலை அவர் எழுதினார். தஞ்சை தருமபால ஆசாரியார் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர். இவரும் பாலி மொழியில் பல உரை நூல்களை எழுதியுள்ளார். கி.பி. 470இல் வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தின் பணிகள் குறித்துத் தெளிவான தரவுகள் இல்லை எனினும் சமணத்தை வளர்ப்பதற்காகவே இச்சங்கம் நிறுவப்பட்டது (தேவ.பேரின்பன், 2006, பக்:97). பொதுவாக கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் களப்பிரர் குறித்த தரவுகள் கிடைக்கின்றன. அதற்கு முந்தைய காலத் தரவுகள் இல்லை என்பது களப்பிரரின் தொடக்க காலத்தில் நடந்த பேரழிவையும், அதன் விளைவாக பழந்தமிழ்ச் சமூகத்தின் நகர நாகரிகம் தடயமே இல்லாது போனதையும் உறுதிப்படுத்துகிறது.
ஆகவே களப்பிரர் காலத்தில் சமண பௌத்த மதங்கள் மட்டுமல்ல வைதீகமும் ஆதரிக்கப்பட்டு பிராமணர்களுக்கு பிரம்மதேயமும் வழங்கப் பட்டன. தொடக்க காலத்தில் பாலி பிராகிருத மொழிகள் செல்வாக்கு பெற்றவைகளாக இருந்தன, இறுதியில் சமற்கிருதம் பெரும் செல்வாக்கு பெற்றதாக ஆகியிருந்தது. ஆனால் அறிவியல்மொழி, வணிகமொழி, இலக்கிய மொழி போன்ற தகுதிகளை தமிழ் மொழி முழுமையாக இழந்து கொண்டிருந்தது. 1000 ஆண்டு காலம் வளர்ச்சியடைந்த பழந்தமிழக நகர நாகரிகம், தடயமே இல்லாமல் அழிந்து போகும் அளவு மிகப்பெரிய பேரழிவு நடந்த காலம் களப்பிரர்களின் தொடக்ககாலம். பிந்தைய களப்பிரர்காலம் சமய ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலம். பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் அதன் அடிப்படைத் தரவுகளும் முழுமையாக அழிக்கப்பட்ட காலம். களப்பிரர் காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களும் முதலில் பாலி பிராகிருத மொழிகளை, பின் சமற்கிருத மொழியை வளர்த்தெடுத்தவர்களாகவும் பிரம்மதேயங்களை வழங்கியவர்கள் ஆகவும் இருந்துள்ளனர் (ச.கிருஷ்ணமூர்த்தி, பக்:161, 162, 172, 173, 233-235). கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.பி. 250 வரை 1000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அரசு மொழியாக, கல்வி மொழியாக, அறிவியல் மொழியாக, வணிக மொழியாக, வழிபாட்டு மொழியாக, வாழ்வியல் மொழியாக என அனைத்துமாகத் தமிழ் இருந்து வந்தது.
ஆனால் கி.பி.250க்குப்பின் முதலில் பாலி, பிராகிருதமும், பின் சமற்கிருதமும் தமிழகத்தில் செல்வாக்கு பெற்று, தமிழ்மொழி அழியத் தொடங்கியது. ஆக கி.பி. 250க்குப் பின் நடந்த அந்நியப் படையெடுப்புகளால், சமய ஆதிக்கம் மிகுந்து, சமற்கிருதமயமாக்கலுக்கு உள்ளாகி, 1000 ஆண்டுகால தமிழக நகர அரசுகளின் உயர்வளர்ச்சி பெற்ற, சமயச்சார்பற்ற அதன் நகர நாகரிகமும், பண்பாடும் கி.பி. 550க்குள் தடயமே இல்லாமல் அழிந்துபோனது. பின் உருவான இடைக்காலப் பிற்காலத் தமிழ் அரசுகளின் நாகரிகங்கள் கூட, சமய ஆதிக்கம் கொண்ட சமற்கிருதமயமாகப்பட்ட நாகரிகங்கள்தான். ஆனால் அவற்றில் தமிழ் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதனால்தான் கி.பி. 500க்குப் பின்னரும் தமிழ் வணிக மொழியாக, இலக்கிய மொழியாக கி.பி. 1400 வரை இருந்து வந்தது. அதன் பின் வந்த அந்நிய ஆட்சிகளால் தமிழ் அந்தத் தகுதிகளையும் இழந்து போனது (க.ப. அறவாணன், பக்: 243, 244, 258 & ஆழி செந்தில்நாதன், தமிழ் இந்து-5.7.2016). இன்று தமிழ் மொழியே அழிந்து போகும் நிலை உள்ளது. ஆனால் இன்று வரை பழந்தமிழக நகர அரசுகளின் நாகரிகம் குறித்தச் சிந்தனை தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. ஆனால் கீழடி அகழாய்வு அதனை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதே அதன் சிறப்பு. தமிழ்ச் சமூகம் தனது பழமை குறித்த, பண்டைய சிறப்பு குறித்த அறியாமையிலிருந்து மீண்டு வர கீழடி அகழாய்வு வழி வகுக்கட்டும்.
துணை நூற் பட்டியல்:
- உ.வெ. சாமிநாத ஐயர், என் சரித்திரம், மின்னூலாக்கம்.
- ஏங்கெல்சு, குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், பாரதி புத்தகாலயம், 2008.
- க.நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரகசம்கிதையும், பாலம், 2009.
- க.ப.அறவாணன், தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், தமிழ் கொட்டம், 2009.
- கணியன்பாலன், பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், எதிர் வெளியீடு, சூன்-2016.
- கணியன்பாலன், பழந்தமிழக வரலாறு, தமிழினிபதிப்பகம், சூலை - 2018.
- கணியன்பாலன், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, தமிழினி பதிப்பகம், சூலை - 2018.
- கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், NCBH, சூலை 2010
- ‘கீழடி’ – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறை, 2019 – Publication No: 302, Critically Edited By prof. K.Rajan (66pages).
- கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008.
- கிரிசு ஆர்மன், உலக மக்களின் வரலாறு, விடியல் பதிப்பகம், சூலை-2017, தமிழ் மொழிபெயர்ப்பு – நிழல்வண்ணன், வசந்தகுமார்.
- ச.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள், மெய்யப்பன் பதிப்பு, 2002.
- சவகர்லால் நேரு, ‘உலக சரித்திரம்’ தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், அலைகள் பதிப்பகம், 3ஆம் பதிப்பு, அக்டோபர் - 2006.
- டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன்.
- நடன காசிநாதன் களப்பிரர், தொல்பொருள் ஆய்வுத்துறை, 1981.
- நா. வானமாமலை, தமிழர் பண்பாடும் தத்துவமும், அலைகள் வெளியீட்டகம், சூலை - 2008.
- தி.சு. நடராசன், தமிழகத்தில் வைதீக சமயம், NCBH, 2008.
- தேவ.பேரின்பன், தமிழர் தத்துவம், NCBH, 2006.
- பதினெண் கீழ்க்கணக்கு, மாணவர் பதிப்பகம், 2014.
- பன்னீர் செல்வம், தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும், மாணிக்கம் கம்பெனி.
- மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கிய வரலாறு, கடவு பதிப்பகம், 2009.
- முனைவர் அ. இராமசாமி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர்-2013.
- முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010.
- யாப்பருங்கலக் காரிகை, அமிர்தசாகரர் பழையஉரை.
- வெ.சாமிநாத சர்மா, கிரீசு வாழ்ந்த வரலாறு, சந்தியா பதிப்பகம்-2003.
- வின்சென்ட் ஆர்தர் சுமித் அசோகர், தமிழில் சிவமுருகேசன், சந்தியா பதிப்பகம், 2009.
- An epigraphic perspective on the antiquity of Tamil - Iravatham Mahadevan, The Hindu. dt 24.6.2010.
- Ancient Cities - The Archaeologey of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome By Charles Gates 2nd Edition.
- Ancient History of Encyclopedia-Achaemenid Empire by Peter Davidson dt 11.2.2011.
- Ancient History of Encyclopedia - Ancient China By Joshua J. Mark dt. 2.9.2009.
- Ancient History of Encyclopedia – Ancient Greece by Joshua J. Mark dt. 13.11.2013.
- THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF.
- THE WORLD BOOK ENCYCLOPEDIA, USA, 1988, VOLUME: 2, 3, 6, 8, 15.
(குறிப்பு: UGC அங்கீகரித்த ஆய்வியல் ‘பெயல்’ இதழில் வந்த ஆய்வுக் கட்டுரை.)
- கணியன்பாலன், ஈரோடு