arivaayudham feb17

புரட்சிக் கவிஞரின் இந்த வரிகள் தமிழர் கடற்கரையாம், மெரினா கடற்கரையில் மெய்ப்பிக்கப்பட்டது. தமிழ், தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழகமெங்கும் கூடிய இலட்சக்கணக்கான மக்கள், அதுவரை தமிழர் மீது படிந்திருந்த அவமான சின்னங்களை துடைத்தெறிந்தனர். காலில்விழுதல், மன்டியிட்டுகிடத்தல், மண்சோறுதின்றல், வானூர்தியைவணங்குதல், ஊர்தியின் அடியினைதொட்டு வணங்குதல் என்று அடிமை விசுவாவம் அரங்கேறிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில், தங்களையாரென்றே காட்டிக் கொள்ளாமல், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாமல் மாணவர்கள் / இளைஞர்கள் நடத்திய எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் ‘தைபுரட்சி‘-யாக மாறியது.

போராட்டம் துவங்கிய நாள் முதல், அதை அரசு வன்முறையால் ஒடுக்க முனைந்த நாள் வரையிலும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் அந்தந்த இடங்களில் மக்கள் குடும்பத்தோடு திரண்டு ஆதரவு அளித்ததும், அரச வன்முறையால் போராட்டம் ஒடுக்கப்பட்டபோது, பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு நடத்திய போராட்டங்களும், சாலை மறியல்களும், தமிழ் மக்கள், மத்திய மாநில அரசுகளின் மீது கொண்டிருந்த கோபத்தினை வெளிக் கொணர்ந்தது.

 ‘சல்லிக்கட்டு’ என்ற ஒற்றை கருத்து முன்னிடப் படுத்தப்பட்ட போதும். காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாரு அணை பிரச்சனை, மீத்தேன் எரிவாயு, கேல் எரிவாயு குழாய், கூடங்குளம் அனுமின் நிலையம், நூட்ரினோ, 2009-ல் நடந்த ஈழத்தமிழர் படுகொலை, அரசியல்வாதிகளின் கயமை ஆகிய எல்லாமும் போராட்ட களங்களில் பேசப்பட்டது. கடந்த காலங்களில் தமிழர்களுக்கெதிராக நடைப்பெற்ற அநீதிகளுக்கெல்லாம், மக்கள் நியாயம் கேட்டனர்.

மெரினா கடற்கரையில் ஐநூறு பேரென துவங்கிய போராட்டம் பத்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் சங்கமிக்கும் போராட்டமாக மாறியது.போராட்டம் ஒரு வாரத்தையும் கடந்து செல்ல, குடியரசு நாள் விழாவும் முடங்க கூடும், மக்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் நியாயம் கேட்பார்கள், இனி இவ்வாறான போராட்டங்கள் அவ்வப்போது எழும் என்ற நிலை ஏற்படவே, அரச பயங்கரவாதம் போராடும் மாணவர்கள் / இளைஞர்கள், மற்றும் அவர்களுக்கு ஆதராவாக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள் மீது ஏவப்பட்டு, அறவழிப்போராட்டம், அடித்து நொறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர் என்பதற்காக மீனவர்கள் குடியிருப்புகளும் அவர்களின் மீனங்காடிகளும் காவல்துறை யினரால் கொழுத்தப்பட்டது. போராட்டத்தை ஒடுக்கிய அரசு அந்த இடத்தில் தேசிய கொடியினை ஏற்றி குடியரசு நாள் விழாவினை நடத்தி மகிழ்ந்தது. ஆனால், குடியரசு நாளன்று அதில் மக்கள் யாரும் பங்கெடுக்காமல், விழா பகுதியே வெறிச்சோடி கிடந்ததை அரசு கவணிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் மீண்டும் தங்களின் எதிர்ப்பினை அரசுக்கு உணர்த்தினர்.

போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், அது தனது இலக்கை அடைந்தது. மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்தாலும், வேறுவழியின்றி மாநில அரசு சல்லிக்கட்டிற்கு ஆதரவான சட்டத்தை, சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நிரைவேற்றியது. போராட்டம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் வெற்றியாக அமைந்தது என்பதை ஏற்க தயங்கிய மத்திய மாநில அரசுகள், அதைதேச விரோத போராட்டமாக சித்தரிக்க தவறவில்லை. சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் திரு. பன்னீர் செல்வம், இந்த போராட்டம் ‘தேச விரோத’ சக்திகள் கையில் சிக்கிக் கொண்டது என்று கூச்சப்படாமல் பொய்யுரைத்தார். ‘தேச விரோதம்’ என்ற சொல்லாடலை அவர் பயன்படுத்தியதிலிருந்தே, அந்த சொல்லின் சொந்தக்காரர்களுக்கும் அவருக்கும் இருக்கும் நெருக்கம் அம்பலமானது. பின்னாளில் அவர்களின் ஆசியோடு அவர் வெளியேறியதும், ‘புனிதராக’ அவர் புணையப்பட்டதும், திருமதி. சசிகலா அவர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும், தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி மறைந்தன.

அஇஅதிமுக-வை பிளவுப்படுத்துவதால் தனக்கான தளத்தை தமிழ் நாட்டில் ஏற்படுத்தலாமென்று நினைக்கும் பா.ஜ.க., அஇஅதிமுக-வின் வீழ்ச்சியை பயன்படுத்த தருணம் பார்த்து காத்திருக்கும் திமுக, தமிழக அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆளுநரை பயன்படுத்துகிறது பா.ஜ.க. என்று குற்றம் சாட்டும் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள், தமிழ்தேசியவாதிகள் என்று தமிழக அரசியல் களம், பல களமுனைகளை கண்டு வருகிறது. பெரும்பான்மையாருக்கு, ஆட்சியாருக்கு என்ற போட்டிகளுக்கிடையே, மார்ச்சு மாதம் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் முன் இலங்கை அரசை குற்றவாளியாக நிறுத்த வேண்டுமென்ற பேச்சும், முனைப்பும் தமிழகத்தில் கேட்கத் துவங்கியுள்ளது. ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், தான் புதிதாக இயற்றும் யாப்பை முன்னிலைப்படுத்தியும் இலங்கை அரசு உலக நாடுகளை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறது. தமிழகத்தில் நிலவும், உறுதியற்ற அரசியல் சூழலை பயன்படுத்தி.

மைய அரசு, இதை கண்டும் காணாததுமாய் இருந்து இலங்கைக்கு ஆதரவான போக்கினை எடுத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்திய அரசின் நிலைப்பாடு ஏனைய நாடுகளின் நிலைப் பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், இலங்கை அரசு தொடர்ந்து காப்பாற்றப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்ற ஒற்றை சொல்லை மையமாக கொண்டிருந்தாலும், அது அதையும் கடந்து ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளதால், மத்திய அரசின் உள்துறை அமைச்சு இதுப்பற்றி தமிழக அரசின் உள்துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது.

2009-ல் ஈழத்தில் ஏற்பட்ட பின்னடைவு, தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும், தமிழர் விரோத செயற்பாடுகள் ஆகிய அனைத்தும், தமிழ் மக்களை ஒரு புதிய விடியலை நோக்கி பயணிக்கச் செய்துள்ளது. மாற்றத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆயத்தமாகவுள்ளனர், ஆனால் மாற்றத்திற்கான தளங்கள் இன்னமும் ஆரோக்கியமானதாக இல்லை. கால தேவைக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப, இவர் நல்லவர், அவர் நல்லவர் என்று ஆட்களையும் கட்சிகளையும் அடையாளம்காட்டுபவர்களாகவே தமிழ் தேசிய சக்திகள் இருந்து வருகின்றன. இதை கடந்து, ஒர் நீண்ட கால அரசியல் திட்டத்தை உருவாக்கி அதை நோக்கி தமிழ் மக்களை ஆயத்தப் படுத்த வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது. ‘தைபுரட்சி’ எதிரிகளை வீழ்த்தியுள்ளது, ஆனால் நாம் எழவில்லை என்றால், 1965 தை மாதத்தில் எழுந்த மொழிப் போராட்டம் போல இந்த ‘தைபுரட்சி’-யும் வரலாற்றின் ஒருபக்கமென சுருங்கிப் போய்விடும்.

ஆசிரியர்

வழக்கறிஞர் ப.அமர்நாத்

Pin It

இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும்:

போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் அவகாசம் கொடுக்காமல் ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும்;.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் கொள்கையில் ஓரே மாதிரியானவை. ஓன்று இனவாதத்தை ஆரம்பித்து வைக்க, மற்றது அதனை நிறைவேற்றி வைக்கும். இரண்டு கட்சிகளும் மாறி மாறி பதவிக்கு வருவதும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புக் கொள்கையை முன்னெடுப்பதும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நெருக்கடிகள் ஏற்படும் இடத்து அதனை சமாளிப்பதற்காக அவ்வப்போது இவ்விரு கட்சிகளும் தமிழ்த் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்வதும் பின்பு நிலைமையை சமாளித்ததும் ஒப்புக்கொண்ட அவ்வொப்பந்தங்களுக்கு எதிராக செயற்படுவதும் கடந்த 90 ஆண்டுகளுக்குக் குறையாத நடைமுறையாகும்.

இவ்விருகட்சிகளும் செய்துவந்த தமிழின அழிப்பின் கூட்டுமொத்த உச்சமாக முள்ளிவாய்க்கால் படுகொலை அமைந்தது. இதற்கு முன் 1987ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது “ஆப்பரேஷன் லிபரேஷன்” என்றதன் பேரில் இலங்கை இராணுவம் பாரிய இனப்படுகொலையை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை கொன்றுகுவித்த போது அன்று இந்தியாவின் தலையீட்டால் அந்த இனப்படுகொலை தொடரப்பட முடியாது நிறுத்தப்பட்டது. அப்படுகொலை திட்டத்தை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டது. எனவே இனப்படுகொலை என்பது இருபெரும் சிங்களக் கட்சிகளினதும் கொள்கையாகும்.

தற்போது பிரச்சனை என்னவெனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் மூலம் சிங்கள அரசு சர்வதேச நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதுடன் சிங்களத் தலைவர் களும், சிங்கள இராணுவத் தளபதிகளும் என அனைவரும் சர்வதேச நீதி விசாரணைக்கு உட்பட வேண்டிய சர்வதேச நடைமுறை பனிப் போரின் பின் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இலங்கை அரசை இனப்படுகொலை களங்கத் திலிருந்தும், சிங்களத் தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் சர்வதேச விசாரணையிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இருபெரும் இனவாத சிங்களக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்போவதாக பாசாங்கு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுப்பதும், இலங்கை அரசை சர்வதேச அரங்கில் காப்பாற்றுவதுமே ரணில்- சிறிசேன-என்ற இருகட்சித் தலைவர்களினதும் கூட்டின் இரகசியமாகும்.

இந்நிலையில் “தமது நல்லாட்சி அரசாங்கமானது நீதியும், ஜனநாயகமும் கொண்டதென்றும் அது போர்க்குற்றத்திற்கு நீதியான தீர்வு காணும் என்றும் அதற்காக போர்க்குற்ற விசாரணையை மேலும் 18 மாதத்திற்கு பின்போடுமாறும், கூடவே தம் நல்லாட்சி அரசாங்கத்தால் உள்நாட்டு விசாரணையின் மூலம் நீதி காணமுடியும் என்றும், எனவே சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும், ஐநா தீர்மானத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர இந்த அரசாங்கம் முயல்கிறது.

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஈழத் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றுவதில் வெற்றிகண்ட சிங்களத் தலைவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியத் தலைவர்களை ஏமாற்றுவதில் வெற்றி கண்டுவரும் சிங்களத் தலைவர்கள் தற்போது சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதில் தம் கைவண்ணத்தை காட்ட முற்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசு விரும்புவது போல மேலும் போர்க்குற்ற விசாரணையை பின்போட அனுமதிக்கக் கூடாது என்பதுடன் ஐநா மனிதஉரிமைகள் ஆணையமானது இவ்விடயத்தை ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுமே இன்றைய அவசியமாகும்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் மொத்தம் 47 நாடுகளில் 37 நாடுகள் சர்வதேச கலப்பு விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதற்கான எந்தவித தொடக்க நிலை நடவடிக்கைகள்கூட இதுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

eelam protest 6001987ஆம் ஆண்டு இந்திய அரசுடன் இலங்கை அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் போது வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய பிரச்சனை பிரதான இடம் வகித்தது. அப்போது வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் தீர்விற்கு தமிழ்த் தரப்பில் இருந்து எந்தொரு கட்சியோ அல்லது ஆயுதம் தாங்கிய அமைப்புகளோ சம்மதிக்க மறுத்தன. இந்நிலையில் வடக்கு-கிழக்கு இணைப்பை தற்காலிக இணைப்பாக இலங்கை அரசு முன்வைத்தது.

அவ்வாறு முன்வைத்து அதை நிரந்தர இணைப்பாக மாற்றுவதாக அன்றைய இந்திய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் உறுதியும் அளித்து அவரை முதலில் நம்பவைத்தனர். இலங்கை விவகாரத்தில் அப்போது இந்தியா பலமாக இருந்த சூழலில் இவ்வாறு இணைப்பு என்று சட்டத்தில் புதியாத ஓர் ஓட்டை விட்டு ஏற்பாடும் செய்துவிட்டது வடக்கு-கிழக்கு இணைந்த ஆட்சிமுறையை பிரகடனம் செய்தனர். ஆனால் இந்தியா பலவீனம் அடைந்த நிலையில், இணைத்த முறையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தவறு செய்துவிட்டார் என்றும், இணைப்பு சட்டபூர்வமற்றது என்று இணைப்பை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதன் மூலம் இணைப்பை இல்லாமல் செய்தார்கள். ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவை எப்படி ஏமாற்றலாம் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதன் மூலம் செய்யப்பட வேண்டுமே தவிர அரசாங்க இதழில் வெளியிடுவதன் மூலம் இணைப்பைச் செய்யக்கூடாது என்பதே அந்த இணைப்பை ரத்து செய்வதற்கான வாதமாய் அமைந்தது. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா இணைப்பை ரத்து செய்தார்.

ஆனால் அந்த இணைப்பு பிரிக்கப்பட்ட பின்பு இதுவரை இந்தியா தலையிடுவதற்கான எந்தவித வாய்ப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. இது இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முரணானது.

இந்த தற்காலிக இணைப்பு விவகாரத்தில் இணைத்தமுறை தவறு என்று தொழில் நுட்பக்காரணம் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர சட்டம் தவறு என்று சொல்லப்படவில்லை. இதன்படி இப்போதைய ஜனாதிபதிகூட நாடாளுமன்றத்திற்கு வெறுமனே அறிவிப்பதன் மூலம் மட்டுமே முந்தைய ஜனாதிபதியால் தவறாக இணைக்கப்பட்ட இணைப்பை இவரால் ஒரு நொடியிற்கூட சரிசெய்திட முடியும். இந்த இணைப்பு விவகாரத்தில் தவறு ஆட்சியாளர்கள் பக்கமே தவிர தமிழர் பக்கம் கிடையாது. எப்படியோ ஒரு சிங்கள ஜனாதிபதி தவறு இழைத்ததாகக் கூறி அந்த தவறுக்காக பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள்தான். இதுவரை இந்தியாவால் கூட அதை சரிசெய்ய முடியாத நிலையே உள்ளது. இப்படி இந்தியாவை ஏமாற்றுவதில் அவர்கள் அடைந்த வெற்றி இதுமட்டுமல்ல அந்த பட்டியல் நீளும்.

மேலும் மேற்படி சர்வதேச கலப்பு நீதிவிசாரணை சம்பந்தமான தீர்மானத்தில் ஒரு சட்டத்திருத்தத்தை மங்கள சமரவீர ஐநா சபையில் முன்மொழிய இருப்பதாக ஜனவரி இறுதிவாரத்தில் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கூறியுள்ளார். இதன்படி அவர் மேற்கொள்ளயிருக்கும் திருத்தப் பேரணை எதுவாக இருக்க முடியுமென்றால் தற்போது இலங்கையில் உள்நாட்டில் ஜனநாயகம் மீட்கப்படுகிறது. பழைய அரசாங்கத்தின் ஜனநாயக வீரோத செயல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் நீதியான விசாரணையை நடத்த இன்றைய இலங்கை அரசால் முடியும். எனவே சர்வதேச கலப்பு விசாரணை என்பதற்குப் பதிலாக உள்நாட்டு பொறிமுறை கொண்ட விசாரணைதான் இலங்கையின் அமைதியைப் பேண வழிவகுக்கும் என்றும் சர்வதேச விசாரணை என்றால் சிங்களத் தீவிரவாதிகளை சமாளிக்க முடியாமல் போகும் அதுவே அரசியல் தீர்வை எட்டுவதற்கு தடையாக அமைந்துவிடும் எனவே சர்வதேச விசாரணையைத் தவிர்த்து உள்நாட்டுப் பொறிமுறை கொண்ட விசாரணை என்பதன் மூலமே இலங்கையில் நீதியையும், அமைதியையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் காண முடியுமெனக் கூறி சர்வதேச கலப்பு விசாரணையை இல்லாமல் செய்து உள்நாட்டு விசாரணைக்கும 18 மாத கால அவகாசம் கோரவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின் தமிழ் மக்கள் மத்தியில் முளைத்தெழுந்த திரு.எம்.எ.சுமந்திரன் என்பவர் ரணிலின் கையாளாக இருப்பவர். இவர் ஐதேக சார்பில் கொழும்பில் தேர்தலில் போட்டியிட முதலில் ஆலோசிக்கப்பட்டிருந்தவர். ஆனால் அவர் அவ்வாறு கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெறுவதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அவரை நுழைத்து அவரை தன் மூலம் எம்பி ஆக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கையாள வசதியாக இருக்கும் என்ற சதிகார சிந்தனையின் அடிப்படையில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எம்.பி. ஆக்கப்பட்டார்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய நபராக செயற்படுவது இவர்தான். வயது முதிர்ந்த சம்பந்தனை இலகுவாக கையாள இவரால் முடிகிறது. இதற்குப் பின்னால் ரணில் விக்கரமசிங்கவின் பெருந்திட்டம் உள்ளது. தற்போது கொழும்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுமந்திரன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியுள்ளவர். இவர் மேற்குலகின் செல்லப்பிள்ளையுங்கூட.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அநேகமான ஏனைய எம்பிக்களிடம் ஆங்கிலப் புலமையில்லை. ஆனால் அது சுமந்திரனிடம் உண்டு. ஆதலால் அவரால் ஏனைய எம்பிக்களை கட்சிக்குள் இலகுவாக பின்தள்ளமுடியும். அதையும் ஒரு முக்கிய பலமாக பயன்படுத்தி தள்ளாடும் வயதைக் கொண்டுள்ள சம்பந்தனை ஒரு காட்சிப் பொருளாக முன்னே நிறுத்தி சுமந்திரன் அனைத்துவகையான நாடகங்களையும் ஆடுகிறார். இவர் தமிழ் மக்களை அரைப்பணத்திற்கு எதிரியிடமும், அந்நியர்களிடமும் விற்பவராக காணப் படுகிறார்.

தற்போது தமிழ் மண்ணில் அமைதி நிலவுவதாக சொல்வது சுத்த அபத்தம். ஐந்து குடிமகனுக்கு ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் (5:1) என்ற விகிதத்தில் தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் உள்ளது. இதைவிட உளவுத்துறையினரதும், பொலீசாரினதும் தொகை வேறு. இவ்வாறு படையினரின் இரும்புப்பிடிக்குள் தமிழ் மக்கள் நசிந்துகிடக்கின்றனர் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் அமைதி என்கிறார்கள்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணில் விக்ரமசிங்கவும் இனவாதம் கொண்டவர்கள் அல்ல என்றும் எனவே இவர்களை நம்பினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் பொய்கூறி ஏமாற்றப்பார்க்கிறார்கள். அதாவது 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் “பயங்கரவாத தடைச் சட்டத்தை” (PTA) ஜே.ஆர். பிறப்பித்து தமிழ் மண்ணை இராணுவ ஆட்சி பிரதேசமாக பிரகடனப்படுத்திய போது அவரது அமைச்சரவையில் இளம் வயதைக் கொண்ட அமைச்சராக இருந்தவர் ரணில்.

1979ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. இச்சட்டத்தின் படி எந்தொரு தமிழ் மகனும் இராணுவத்தினராலோ, போலீசாராலோ கொல்லப்பட்டால் அதற்கு மரண விசாரணை தேவையில்லை. கொல்லப்பட்டதற்கான காரணம் யாருக்கும் சொல்லவேண்டியதும் இல்லை. கொல்லப்பட்டவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் படையினர் தாம் நினைத்தபடி என்னவும் செய்யலாம். அதற்கு மரணக்கிரிகைகளும் செய்யப்படுவதில்லை.

அத்துடன் எவரையும் காரணம் கூறாமல் கைது செய்யலாம். விசாரணையின்றி எவ்வளவு காலமும் சிறையில் அடைக்கலாம். சிறையில் உள்ளவர் உறவினருடனோ தொடர்பின்றி, வைத்திருக்கப்படும் இடம் சொல்லப்படாமல் “Incommunicado” நிலையில் அடைத்து வைத்திருக்கலாம். இச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் சித்ரவதை முகாமிற்குரிய பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்பட்டனர். இந்த சட்டம் தற்போது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் அமுலில் உள்ளது என்பது இந்த அரசாங்கத்தின் உண்மையான தோற்றத்தையும், தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவ ஆட்சியின் கீழ் உள்ளார்கள் என்பதையுமே உணர்த்துகிறது.

தற்போது இந்த அரசாங்கம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்திடம் 18 மாத கால அவகாசம் கோரயிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது செய்தியாகும். இது காலம் கடத்தி பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்துவிட்டு உரிய தருணத்தில் இனவாதிகள் குழப்புகிறார்கள் என்று ஒரு சிங்களத் தரப்பைக் கைகாட்டிவிட்டு எல்லாவற்றையும் முதலை முழுசாக விழுங்குவது போல் விழுங்கி கபளீகரம் செய்யப் போகிறார்கள்.

மார்ச் மாதம் கூடவுள்ள ஐநா மனிதஉரிமைகள் ஆணைத்தின் முன் கால அவகாசத்திற்கு வாய்ப்பு கொடுக்காதிருப்பதற்குரிய பணியை தமிழகமும், இந்திய அரசும்தான் முன்னின்று செய்ய வேண்டும். அதாவது ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் என்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கார தமிழ் நபரை உள்ளே அனுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஐதேகாவின் கிளையாக மாற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. நயத்தாலும், பயத்தாலும் மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பலரையும் இப்படி இலகுவாக ஐதேகாவின் கிளையாக மாற்ற முடிந்துவிட்டது. இது ஒரு பெருந்துயரம். இந்த நிலையில் ஈழத் தமிழரின் தொப்புள் கொடி உறவினரான தமிழக மக்களும், ஜனநாயத்தின் பேரில் இந்திய அரசும் தமிழருக்கான நீதி கோரி, சர்வதேச நீதிவிசாரணை கோரி குரலெழுப்பி செயற்படுத்த வேண்டும்.

ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் வழங்கிய ஓர் ஆண்டிற்குப்பின் இன்னொரு ஆண்டுகால அவகாசமும் முடிவடைந்துவிட்டது. இனி மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்ததைப் பற்றி முதலில் 2009ஆம் ஆண்டு கூறப்பட்டபோது, அங்கு இராணுவத்தால் ஒரு குடிமகன்கூட கொல்லப்படாத வகையில்“Zero Casualty” என்ற வரன்முறைக்கு ஏற்ப பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் வெற்றியில் முடிந்ததென அரசாங்கம் அறிவித்தது. சிங்கள ஊடகங்களும், அனைத்து சிங்கள கட்சிகளும், இராணுவமும், பௌத்த மத பீடங்களும், மற்றும் சிங்க்ள பௌத்த நிறுவனங்களும் கூறின.

ஆனால் தமிழ் மக்கள் விடாப்படியாக புலம்பெயர்ந்த நாடுகளில் இனப்படுகொலை பற்றி பலமாக குரலெழுப்பினர். இப்பின்னணியில் ஐநா பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார். அக்குழுவானது 40,000 பேருக்கு மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் உள்ளிட்ட தமிழ்க் குடிமக்கள் கொல்லப்பட்ட தகவலை முதல் முறையாக அறிவித்தது. இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதேவேளை லண்டனில் இருந்து வெளியாகும் சுயாதீன தொலைக் காட்சியான சேனல்-4 தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றென களத்தில் நிகழ்ந்த படுகொலைகள் பற்றிய நேரடி ஆவணப்படங்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டது. இது பரந்துபட்ட உலக மக்கள் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. இனப்படுகொலையின் கொடூரம் அப்பட்டமாகத் தெரியவந்தது.

UN report 450கனரக ஆயுதங்கள் கொண்டும், பீரங்கிக் குண்டுகள் கொண்டும், விமானக் குண்டுகள் வீசியும், குழந்தைகள், சிறுவர்கள். பெண்கள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் என பெருந்தொகையான தமிழ் மக்கள் அவலமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும், இளைஞர்களும், யுவதிகளும் சீருடை தரித்த இலங்கை இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகளையும், இராணுவத்தால் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் நேரடிக் காட்சிகளையும் சேனல்-4 ஆவணப் படங்கள் எடுத்துக் காட்டின. இவற்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் உயிருடன் இருக்கும் காட்சியையும், பின்பு அவர் ஒரு மீட்டர் தொலைவில் வைத்து துப்பாக்கியால் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கும் காட்சியையும் வெளிக்கொணர்ந்தது.

இதே போல ஊடகவியலாளரும், நடிகையும், கலைஞருமான இசைப்பிரியா என்னும் இளம் பெண் சிங்கள இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, அவர் உயிருடன் நிர்வாணம் ஆக்கப்பட்டு இராணுவத்தினரின் முன்னிலையில் தவிக்கும் காட்சியையும், இதன்பின்பு அவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் காட்சியையும் சேனல்-4 ஆவணப்படம் தெளிவாக காட்சிப்படுத்தியது. மேலும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் இளம் பெண்களின் மறைவிடங்களில் இராணுத்தினர் இரும்பு சப்பாத்து கால்களால் மிதிக்கும் காட்சிகளையும் சேனல்-4 ஆவணப்படத்தில் காணமுடிந்தது.

இதன் பின் உலகம் அதிகம் அதிர்ச்சியுற்றது. அவை பொய்யான ஆவணங்கள் என சிங்கள அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இதன் பின் இவ்வாவணப்படங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஐநா சபை ஒரு தொழில்நுட்ப வல்லுனர் குழுவை நியமித்தது. அந்தக் குழு இந்த ஆவணப்படங்கள் அனைத்தும் போலியானவைகள் அல்ல, பொய்யானவைகள் அல்ல, உண்மையானவைகள் என அத்தாட்சிப்படுத்தியது.

அதேவேளை ஐநா சபையால் நியமிக்கப்பட்ட ஓர் உள்ளக ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி (UN Internal Review Report) 70,000 மேற்பட்ட குடிமக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டுள்ளனர் என கூறியது. இவை அனைத்தும் உலகில் 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பலமான ஆதாரங்கள் கொண்ட இனப்படுகொலை என்பதை நிருபிப்பதற்கு முற்றிலும் போதுமான ஆதாரங்களாகும். இதைக்கண்டு இலங்கை அரசு அஞ்சுகிறது.

இனப்படுகொலை நிரூபிக்கப்படும் போது தமிழ் மக்கள் பிரிந்து தனியரசு அமைப்பது ஐநாவின் விதியின்படியும், நடைமுறைகளின்படியும் சட்டபூர்வமானதாகி விடும். ஒருபுறம் இனப்படுகொலை அரசுக்குப் பொறுப்பான அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது சகோதரன் கோத்தபாய ராஜபக்ஷ, இறுதிகட்ட யுத்தத்தின் இறுதி 4 நாட்களும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேக, மற்றும் தளபதிகள் அனைவரும் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச விதிகளின் படி ஆயுட்கால சிறைத்தண்டனைக்கு உரியவர்களாவர். இவர் அனைவரையும் பாதுகாப்பதில், தண்டனையில் இருந்து தப்ப வைப்பதில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் இடத்து நாடு பிரியும் என்ற அபாயத்தில் இருந்தும் சிங்கள அரசை இந்த நல்லாட்சி அரசாங்கம் காப்பாற்றி தமிழ் மக்களுக்கு முழுநீள அநீதியிழைத்து வருகிறது.

120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட 2வது பெரிய ஜனத்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் முதலாவது பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ள இந்தியாவில் இந்தோ-பாகிஸ்தான் யுத்தங்களில் வெற்றி பெற்றதன் பேரால் இதுவரை மூவருக்கு மட்டும் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆனால் எந்தொரு அந்நியநாட்டுடனும் போரிடாத ஒரு சிறிய இலங்கைத் தீவின் இராணுவ தளபதிக்கு, அதுவும்; தமது சொந்த நாட்டின் குடிமக்களான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தமைக்காக அவருக்கு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிஞர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதான் இந்த அரசாங்கத்தின் நீதி. அதாவது எந்த இராணுவத் தளபதி லட்சக்கணக்கில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார் என்று தமிழ் மக்கள் சுட்டிக்காட்டினார்களோ அந்த இராணுவத் தளபதிக்கு இந்த அரசாங்கம் அதுவும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை பல்வேறு சமூக வலைத்தளங்களும், மனித உரிமையாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி ஆதாரபூர்வமாக பார்க்கும் போது இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கு நம்பகமான ஆதாரபூர்வமான ஆவணங்களும், இவற்றிற்கு அப்பால் உயிருள்ள சாட்சிகளும் ஒருபுறம் இருக்க, ஐநா சபையின் இரண்டு அறிக்கைகளும் குறைந்தது 70,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டிருக்க பெரும் இடப்பெயர்வு அவலமும், மனித பேரவலமும் நடந்துள்ளமையை ஆதாரபூர்மாக பல்வேறு தொண்டர் ஸ்தாபனங்களும் கூறியிருக்க, சேனல்-4 ஆவணமானது உண்மையானது என ஐநா நிபுணர்குழு அத்தாட்சிப்படுத்தியிருக்கும் பின்னணியில் இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை முற்றிலும் ஆதாரபூர்வமாக இருக்கிறது. இது இன்று உலகில் காணப்படக்கூடிய எந்தொரு இனப்படுகொலை அல்லது மனிதஅவலம் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று சொல்லத்தக்க குற்றச்சாட்டுகளுக்கும் இல்லாதளவு ஆதாரம் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு உண்டு. எனவே இதனை விசாரணைக்கு உட்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று சிங்கள அரசுக்குத் தெரியும்.

சிங்கள அரசானது தந்திரத்தாலும், நயத்தாலும், பயத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைபோல ஆக்கி அதனை சர்வதேச அரங்கில் தமக்கான ஆதரவாக காட்சிப்படுத்தி நீதிக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் எதிரான தமது அநியாயத்தை அரங்கேற்றிவருகின்றனர். இந்நிலையில் தமிழகமும், அண்டையில் உள்ள இந்தியாவும்தான் தமிழ் மக்களின் நீதிக்காக பாடுபட வேண்டும்.

இதன்படி 2 ஆண்டு அவகாசத்திற்கு மேல் இனி கால அவகாசம் வழங்கக்கூடாது. ஐநா விதியின் படி பார்க்கையில் இவ்வருட மார்ச் மாதத்திற்குள் எவ்வித விசாரணையும் இல்லையென்ற நிலையில் ஆணைக்குழு இதனை ஐநா பொதுச்சபையிடம் ஒப்படைக்கலாம். ஐநா பொதுச்சபையானது ஆணைக்குழுவின் ஒப்படைத்தலை ஒரு பரிந்துரையாகவே கருதுவது வழமை. அந்த வழமையின்படி ஐநா பொதுச்சபையானது ஐநா பாதுகாப்பு சபைக்கு நேரடியாக அனுப்பி அதற்காக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை ஐநா பாதுகாப்பு பொதுச்சபையிடம் ஒப்படைக்கும். அப்போது ஐநா பொதுச்சபையானது சர்வதேச நீதிமன்றத்தின் முன்னோ, அன்றி அதற்கு நிகரான ஒரு சர்வதேச விசாரணையின் பொருட்டு ஏற்பாடு செய்வதற்காகவோ தீர்மானிக்க முடியும்.

சிலவேளை பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்று ரத்து அதிகாரத்தை பிரயோகித்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கைகள் தடைப்படலாம். வெளிப்படையான ஆதாரங்கள் கொண்ட இந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக ஏதாவது ஒரு நாடு “வீட்டோ” என்பது சர்வதேச அரங்கில் அந்ந நாட்டின் நன்மதிப்பை பெரிதும் பாதிக்கும். எனவே இன்றைய சூழலில் இதனை “வீட்டோ” பண்ணுவது எந்தொரு வல்லரசுக்கும் இலகுவான காரியமும் அல்ல.

அதேவேளை அப்படி வீட்டோ பண்ணப் பட்டாலுங்கூட பிரச்சினை முடிந்துவிட்ட ஒரு விவகாரமாக அன்றி சர்வதேச அரங்கிலும், உள்நாட்டு அரங்கிலும் தொடர்ந்தும் தீர்வு காணப்படாத ஒரு விவகாரமாகவே காணப்படும். அது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வேறு நல்ல வாய்ப்புக்களை கொடுக்கக்கூடியதாய் இருக்கும்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர், அதில் தொடர்புடையோர் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர். இராணும் விலக்கிக் கொள்ளப்படும், இராணுவம் பொதுமக்களிடம் அபகரித்த நிலங்கள் விடுவிக்கப்படும், வடக்கு-கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு காணப்படும், போர்க்குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதிகள் பெரிதும் நிறைவேற்றப்படவில்லை.

ஒரு தமிழ் அரசியல் கைதிகூட பொதுமன்னிப் பிற்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் சரத் பொன்சேகவிற்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பதவிகள், பட்டங்கள் எல்லாம் திருப்பி கையளிக்கப்பட்டு மேலதிகமாக பீல்டு மார்ஷல் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரிடம் சரணடைந்து மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 21,000 பேரில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் அறிவித்திருக்கிறாரே தவிர, அவர்கள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் அதற்கு யார் பொறுப்பு என்ற எதனையும் அவர் கூறவில்லை.

வடக்கு-கிழக்கு இணைந்த சமஷ்டி முறை யிலான தீர்வுத் திட்டம் என்று கூறப் பட்ட விடயம் ஒருபோதும் நடை முறைப் படப் போவதில்லை. இதனை நடைமுறைப்படுத்து வதில்லை என்பதில் அனைத்து சிங்களக் கட்சிகளும் உறுதியான ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன.

Pin It

புரட்சி! தமிழகத்தில் அரசியல் தலைவர்களின், சினிமா நடிகர்களின் பெயர்களோடு மட்டும் இணைக்கப்பட்டிருந்த அர்த்தமற்ற வார்த்தை இது. ஆனால் இன்று “ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி” என பாரதி மெய்சிலிர்த்து வர்ணித்த ருசியப் பிரளயத்தை நினைவூட்டும் உண்மைச் சமராக உருமாற்றம் பெற்றிருக்கிறது.. “பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால் புரட்சி அதுவாகும்” என்று விவரித்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அய்யா. தமிழகத்துக்கு ஒரு புதுவழியை தந்திருக்கின்றன(ர்) காளைகள்.

தமிழ் வசந்தம், தமிழர் புரட்சி, தைப் புரட்சி, ரத்தமில்லா யுத்தம் என்றெல்லாம் பலவாறாக வர்ணிக்கப்படுகிற “சல்லிக்கட்டுப் போராட்டம்” தமிழகத்தை ஓர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அடித்து எழுப்பியிருக்கிறது. தலைநகராம் சென்னை முதல் காலூராம் கன்னியாகுமரி வரை இந்தப் போராட்டம் நடைபெறாத இடமே இல்லை.

இனப்படுகொலை, கொலைப்பொருள் அணுஉலை, முல்லைப்பெரியார் நீரணை, நீரின்றி வறண்ட காவிரி என எதற்குமே அசையாதத் தமிழர் கூட்டம் ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே நடக்கும் ஏறு தழுவலுக்காக இறங்கி வருவானேன்? பற்பல பதில்களைப் பகர்கின்றனர் பண்டிதர்கள். சமூக ஊடகங்கள் சாதித்தனவாம்; தமிழர் பெருமை தறிகெட்டு எழுகிறதாம்; அக்கிரமங்கள் எழச்செய்த ஆத்திரங்கள் தடுப்பணை உடைத்து தகதகக் கின்றனவாம்.

தனித்தனியான இப்பதில்கள் தவறானவை. இவ்விடைகளின் கூட்டுக்கலவை உன்னதமானா லும், இன்னும்பல வினையூக்கிகள் கலந்த விளக்கமே உண்மையானது. இந்தி எதிர்ப்புப் போர் தந்த எழுச்சியின் ஆணிவேர் அசையாமல் இருந்தாலும், அரசியல் கொண்டை கோடம்பாக்கத்திற்குள் குப்புற விழுந்தது. தலைவர்கள் நடிகராயினர், நடிகர்கள் தலைவராயினர். பின்னர் ஈழப் பிரச்சினை எழுந்தபோது இங்குள்ளத் தமிழரின் சதையும் ஆடிற்று. தமிழக ஊசல் இந்தியம்--தமிழம் என ஊடாடி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தமிழம் முனையில் தட்டி நிற்கிறது. தமிழரெல்லாம் கொதிநிலை அடைந்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் ஆழ் கலாச்சாரம், அன்றாடப் பொருளாதாரம், அடிமைத்தளை அரசியல் என முப்பெரும் விடயங்களை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

புறநானூற்றுக் காலம் முதலே போற்றிவரப்படும் ஏறு தழுவல், மஞ்சு விரட்டு என பற்பல பெயர்களில் அழைக்கப்படும் சல்லிக்கட்டு ஓர் ஆழமான தாக்கத்தை தமிழர் வாழ்வில், கலாச்சாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. நம்மில் பலர் மாட்டையேப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம், வீர விளையாட்டுக்கு எதிராகக்கூடக் களமாடலாம். ஆனாலும் நம்மனைவருக்குள்ளும் ஊடாடிக் கொண்டிருக்கும் ஆழ் கலாச்சாரம் மிக முக்கியமான ஒன்று.

உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் தனிமனிதனின் மனப்பாங்கிற்குக் கீழே, ஆழமான மனப்பாங்கு ஒன்று இருப்பதாகச் சொல்கிறார். கார்ல் யங் என்பவர் குழுக்களின் மனப்பாங்கிற்குக் கீழே ஆழமான ஒன்றுபட்டக் குழு மனப்பாங்கு ஒன்று இருப்பதாகச் சொல்கிறார். இந்த ஆழ் மனப்பாங்குகளைத் தனிமனித ஆழ்மனம் என்றும், குழும ஆழ்மனம் என்றும் பார்க்கலாம். ஒரு குழுமத்தில் நிலவும் ஒரே மாதிரியான எண்ணப் பதிவுகள் அம்மனிதர்களை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உருவாக்குகின்றன. இந்தக் குழும ஆழ்மனத்தை ஆழ் கலாச்சாரம் என்றும் அழைக்கலாம். இந்த ஆழ் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கை பற்றிய மனப்பாங்குகளையும், செயல்பாடுகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்றாட வாழ்வின் இன்றியமையா அம்சங் களுள் ஒன்று கதை சொல்லல். இலைமறை காய்மறையாக வெளியாகும் கருத்துக்கள் (subtexts, undertexts), வெளிப்படையாகத் தோன்றும் கருத்துக்கள் (overtexts), சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்றவற்றின் உதவியோடுதான் இந்த கதைகளை நாம் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும். ஆழ்மனதில் உறைந்திருக்கும் ஆழ் கதைகளும் (deep texts) முக்கியமானவை. நமக்குள் புதைக்கப்பட்டு, நமது பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப்போன இந்த ஆழ்கதைகள்தான் நம்மை அறியாமலேயே நம்மை இயக்குகின்றன.

காளையடக்குதல் ஒரு கலாச்சாரக் கதையினை சொல்கிறது. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டைக்கும் தமிழக சல்லிக்கட்டுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. அங்கே ஒரே ஒரு முரட்டுக் காளையும், ஒரே ஒரு மாடுபிடி வீரரும் மட்டும் முட்டிமோதுவர். மிகப் பெரும்பாலான போட்டிகளில் வீரர் காளையைக் கொல்வார், காளை கசாப்புக்கடைக்குப் போகும். வெகுசில தருணங்களில் காளை வீரரைத் தாக்கும், வீரர் மருத்துவமனைக்குப் போவார்.

ஆனால் தமிழகத்தில் முரட்டுக் காளை களும், அடக்கும் வீரர்களும் கூட்டமாக மல்லுக்கட்டி நிற்கின்றனர் பொதுவெளியில். பார்வையாளர்களும் அந்த பரபரப்பில் தம்மை மறந்து குதூகலிக்கின்றனர். சில நேரங்களில் அவர்களும் காளையடக்குவதில் தற்செயலாகப் பங்கேற்பதுண்டு. நம் நாட்டில் நடப்பது ஸ்பெயின் நாட்டில் நடப்பது போல ஒரு கொலைவெறிச் செயலல்ல, இது ஒரு வெகுசனக் கொண்டாட்டம். உடல் பலம், உள நலம், அச்சமின்மை, ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் என பல அம்சங்கள் கொண்ட வீர விளையாட்டு இது. தமிழர் ஆழ் கலாச்சாரத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் புதைந்து கிடப்பது தெளிவு.

police students 600வாடிவாசல்களில் மாடுகளை உசுப்பிவிட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துன்புறுத்தல்கள் நடந்தாலும், சல்லிக்கட்டு மாடுகளுக்கு பெரும் சங்கடங்கள் தருவதில்லை. அப்படியே வீர விளையாட்டில் குறைகள் இருந்தாலும் அவற்றை தமிழ் மக்கள்தான் மேலாண்மை செய்து மாற்றியமைக்க வேண்டுமே தவிர, எங்கிருந்தோ வந்த ஓர் அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனம் இங்கே வந்து நம்மிடையே நாட்டாமை செய்ய முடியாது. ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய், காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி கடிதம் போட்டான் வெள்ளைக்காரன் என்கிற கதையாக இருக்கிறதே? அப்பட்டமான அரசியல் காலனியாதிக்கம் மருவி நேரடி பொருளாதார, கலாச்சார காலனியாதிக்கமாகி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும்போது, பீட்டாவையும் ஒரு பீடையாகத்தான் பார்த்தாக வேண்டும்.

சல்லிக்கட்டுக் காளைகள் வீட்டு செல்லப் பிராணிகளாகவே போற்றி வளர்க்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் போற்றுதலின் பின்னால் ஏழை விவசாயிகளின் அன்றாடப் பொருளாதாரம் புதைந்து கிடக்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவ சாயிகளிடம் விவசாயத்தை கைவிட்டு சேவைத் துறைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரைத்தார். அடுத்து வந்த பிரதமர் மோடியோ, இன்னும் ஒருபடி மேலே போய், விவசாயிகளுக்கு ரூபே கார்ட் கொடுத்து அவர்களை டிஜிட்டல் மய மாக்குவேன் என்கிறார். இவர்கள் இருவரின் பன்னாட்டு நிறுவன அடிமை அரசுகளும் மாபெரும் இந்திய உணவுச் சந்தையை தங்கள் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர், வார்க்கின்றனர். இதற்குத் தடையாக இருக்கும் நமது நாட்டு மாடுகளையும், நமது வேளாண் பாரம்பரியத்தையும் அழித்தொழிக்க கடிதில் முனைகின்றனர்.

நமது பாரம்பரிய காளை ரகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கலப்பின மாடுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல நாட்டு மாடு இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஏறத்தாழ அறுபது விழுக்காடு பாரம்பரியக் காளைகள் அழிந்துவிட்டனவாம். மதுரைப் பகுதியில் காணப்படும் புளிக்குளம் மாடுகள்

35,000 மட்டுமே இருப்பதாகவும், இவற்றுள் காளைகள் வெறும்

4,000 மட்டும்தான் என்றும் சொல்கிறார்கள். மரபை இழந்து, மாடுகளை இழந்து, மண்ணை இழந்து, இன்றைய விவசாயி மாண்பையும் இழந்து நிற்கிறார்.

எங்கே எதைக் கொள்ளையடிப்பது, அதை யாரிடம் எவ்வளவுக்கு கைமாற்றுவது என்று சிந்திக்கும், செயல் படும் மாநில அரசுக்கு பாரம் பரிய காளைகளைக் கணக் கெடுப்பதற்கும், அவற்றை வளர்ப்போரை ஊக்குவிப் பதற்கும், நம் வேளாண் பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் நேரம் இருப்பதில்லை. இதற்கிடையே லட்சக்கணக்கான தமிழ் இளை ஞர்களும், மாணவர்களும் மெரீனா கடற் கரையில் போராடும் போதே, டென் மார்க் நாட்டிலிருந்து நூறு காளைகள் சென்னைக்கு வந்துஇறங்குகின்றன.

சல்லிக்கட்டில் காளைகளை அடித்தார்கள், குத்தினார்கள் என்று ஆதங்கப்படும் பீட்டா அமைப்பு, குளிர்ப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டுக் காளைகளை சுட்டெரிக்கும் வெயிலடிக்கும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து திணிப்பதை ஏன் எதிர்க்கவில்லை? அவற்றின் விந்துக்களை சேகரித்து செயற்கை முறையில் பசுக்களைக் கருத்தரிக்க வைக்கும் அயோக்கியத்தனத்தை ஏன் கேள்விக்குள்ளாக்குவதில்லை?

உலகெங்குமுள்ள மனிதர்களை மேற்கத்திய தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் எனும் மும்மைக்கு அடிமைப் படுத்திவிட்டவர்கள், நாட்டு மாடுகளைக்கூட விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக் கிறார்கள். முதலாளித்துவ உலகமயத்தின் அம்சங்களான தாராளமயமாக்கப்பட்டச் சந்தை, ஒருங்கிணைக்கப்படாத தொழிலா ளர்கள், சுருங்கிப்போகும் அரசு, சிக்கனப் போக்கு, சனநாயகமின்மை, உள்கட்டமைப்புகளைச் சரி செய்தல், (பொருளாதார) நிலைநிறுத்தல் நடவடிக்கைகள் போன்றவை ஓர் அடிமைத் தளை பூட்டிய அரசியலையே எளிய மக்கள் மீது திணிக்கின்றன. பொருளாதார அமைப்புக்களான உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நிதிக் குழுமம் போன்றவை ஒரு பக்கம் ஏழை எளியோரை பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்த, சார்பு நிறுவனங்கள் அதே வேலையை கலாச்சார, அரசியல் தளங்களில் இன்னும் அழுத்தமாகச் செய்கின்றன.

எடுத்துக்காட்டாக, பீட்டா (PETA) எனும் விலங்குகள் பாதுகாப்பு நிறுவனம் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவேப் பாடுபடுகிறது. விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் இந்த நிறுவனம் விலங்குகளை உணவாக பாவிக்கக்கூடாது, அவற்றிலிருந்து பெறப்படும் தோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது; விலங்குகளை வைத்து மருத்துவ ஆய்வுகள் செய்யக் கூடாது என்று போராடுகிறது. பெரும் செல்வம் பெற்றிருக்கும் இந்த அமைப்பு அநாதை விலங்குகளுக்குப் புகலிடம் கொடுக்கும் சரணாலயமாகவும் இயங்குகிறது. அதே நேரம், தன்னால் நீண்ட நாட்களாகக் காப்பாற்ற முடியாத விலங்குகளை கருணைக் கொலை செய்வதாகவும் குற்றச் சாட்டு எழுகிறது.

தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை ஒரு வருடத்துக்கு ஏறத்தாழ மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் மாபெரும் வர்த்தகமாக இருக்கிறது.

இனவிருத்திக்கு பயன்படும் நாட்டுக் காளைகள் இந்த வர்த்தகத்தில் மிக முக்கிய மான அங்கங்கள். சல்லிக்கட்டை அழித்து விட்டால், நாட்டுக் காளைகள் இனம் அழியத் துவங்கும், அதன் மூலம் கலப்பினக் காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வரலாம். இன்னோரன்ன காரணங்களால்தான் பீட்டா சல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கிறது. மாட்டுத்தீவன நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் போன்றவையும், அவற்றின் லாபம் பெறும் நடவடிக்கைகளும் பீட்டாவின் எதிர்ப்புக்குப் பின்னால் இருக்கின்றன என்றும் சந்தேகிக்கின்றனர் பலர்.

இப்படியாக தமிழர்களின் ஆழ் கலாச்சாரம், அன்றாடப் பொருளாதாரம், அடிமைத்தளை அரசியல் எனும் மூன்று விடயங்களும் சல்லிக்கட்டு பிரச்சினையில் விரவிக் கிடப்பதை நாம் பார்க்கலாம்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் விலங்குகள் நலப் பிரிவு, சல்லிக்கட்டு விளையாட்டு பழக்கப்படுத்திய விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துகிறது, எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்றும், விலங்குகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் போன்ற விலங்குகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. காங்கிரசுக் கட்சி தலைமை வகித்த மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம் பெற்றிருந்தாலும், அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உரிய அறிவிப்பை உடனே வெளியிட்டனர். அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை போல, இதையும் இவ்விரண்டு பெரிய கட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டன.

கடந்த 2011 யூலை 7 அன்று மன்மோகன் சிங்கின் காங்கிரசு அரசு காளை மாடுகளை காட்சி விலங்குகளாக பயன்படுத்துவதை தடை செய்து அறிவிப்பாணை ஒன்றைக் கொண்டு வந்ததும் சல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் சட்ட விரோதமாயின. அதனையடுத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2014 மே 7 அன்று சல்லிக்கட்டுத் தடையை உறுதி செய்தது. பிரிவு 77-ல் இந்திய விலங்குகள் நல வாரியம் சொல்வதுபோல சல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் போட்டி போன்ற நிகழ்வுகள் 1960 மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் சில சரத்துக்களை மீறுகின்றன. கடந்த 2011 அறிவிப்பாணையை உயர்த்திப் பிடித்த உச்சநீதிமன்றம் காளைகளை காட்சி விலங்குகளாக பயன்படுத்துவது கூடாது என்று அறிவித்தது. தமிழ் நாடு சல்லிக்கட்டு மேலாண்மைச் சட்டம் இந்தியாவின் மிருக வதைத் தடுப்பு சட்டத்தோடு முரண்படுவதால், அது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேற்கண்ட சட்ட சிக்கல்களால் 2015, 2016-ஆம் ஆண்டுகளில் சல்லிக்கட்டு நடத்தப் படவில்லை. டிசம்பர் 22, 2015 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அது கொண்டுவரப்படவுமில்லை, சல்லிக்கட்டு நடத்தப்படவுமில்லை. மத்திய அரசு இந்த விவகாரத்திலும் நமக்கு சாதகமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2016-ஆம் ஆண்டு பொங்கலுக்கு முந்தைய வாரம் (சனவரி 8, 2016) மத்திய அரசு சல்லிக்கட்டு நடத்துவதற்கான ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்தது. தமிழக மாணவர்களும், இளைஞர்களும் லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் திரண்டு தொடர் போராட்டம் நடத்தத் துவங்கினர். போராட்டத்தின் அழுத்தத்தால், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தில்லிக்குச் சென்று பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று, தமிழக பொறுப்பு ஆளுனரால் பிரகடனப்படுத்தி, சட்டமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தார்கள்.

மத்திய, மாநில அரசுகளும், பெரிய அரசியல் கட்சிகளும் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக இயங்குவது போதாதென்று, பீட்டா போன்ற அமைப்புகளும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றன. இந்த அரசுகளும், மிருக உரிமை அமைப்புகளும், நீதிமன்றங்களும் அடுத்து என்னென்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

சல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடுதான். சிங்களப் பேரினவாதமும் இருபது நாடுகளும் சேர்ந்து ஈழத்தில் நடத்திய இனப்படுகொலை, அப்போது இங்கே ஆட்சியிலிருந்த தி.மு.க. அரங்கேற்றிய கபட நாடகங்கள் எல்லாமே தமிழகத் தமிழர்களை பெருங்கோபம் கொள்ளச் செய்தன. தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னோ டிகள் கொல்லப்பட்டதாக அறிவித்துக் கொண் டாடியது இன்னும் சீற்றத்தை உருவாக்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான நீண்ட நெடிய அறப்போராட்டம், முல்லைப்பெரியார் அணையைக் காத்திட நடந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டம், கெயில் குழாய் பதிப்புக்கு எதிரான கொங்கு மண்டல விவசாயிகளின் போராட்டம், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிரான காவிரி டெல்டா மக்கள் போராட்டம், காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிய மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு எதிரானப் போராட்டம், தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான போராட்டம், குளச்சல் / இனையம் துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் என தமிழ் இளைஞர்கள் நிறையப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக் கப்படுவதுபோல, தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆற்று மணலைத் திருட ஒருவர், கடல் மணலை அபகரிக்க இன்னொ ருவர், கிரானைட் கற்களை ஏப்பம் விட மற்றொருவர், காடுகளை அழிக்கப் பிறிதொருவர் என்று இலாகா ஒதுக்கி ஸ்வாகா பண்ணுகிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி மக்கள் வளங்கள் கூறுபோட்டுக் கொள்ளையடிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் குடிநீருக்கு அலைமோதும்போது, பெப்சி, கோக் கம்பெனிகள் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். மேற்படி நிகழ்வுகளோடு, நிலத்தடி நீரின் அளவு பெருமளவு குறைந்துபோய், மழை பொய்த்து, விவசாயம் அழிந்து, விவசாயிகள் தற்கொலை செய்யத் துவங்கியதையும் தமிழ் இளைஞர்கள் கவனித்திருக்கிறார்கள். தாங்கள் பெறும் தரமற்ற கல்வி, நீட் நுழைவுத் தேர்வுத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படை ஊதியமின்மை, வருங்காலம் குறித்த நம்பிக்கையின்மை போன்றவையும் அவர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன.

இன்னொரு புறம் மாஃபியா அரசியல், அடிமைத்தனம் போன்றவற்றில் ஊறித் திளைத்த மாநில அமைச்சர்கள் பல்லாயிரம் கோடிகளை அள்ளிச் சுருட்டுவதும், ஊழல் ஊரெங்கும் தலைவிரித்தாடுவதும் நடந்து கொண்டிருந்தது. மத்திய அரசு மக்களை முற்றிலுமாகக் கைவிட்டு, வெளிநாடுகளுக்கும், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்களுக்குமாக செயல்படத் துவங்கிற்று. பணமதிப்பு நீக்கம் இன்னும் கோபமூட்டியது. சல்லிக்கட்டு எனும் பாரம்பரிய பண்பாட்டு உரிமைகளிலும், உணர்வுகளிலும்கூட அரசு கைவைத்தபோது

“அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்”

என வள்ளுவம் எச்சரித்ததுபோல, தமிழ் மாணவர் களின், இளைஞர்களின் பொறுமைத் தேரின் அச்சு ஒடிந்தது. நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம், நம் தமிழர் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனும் வைராக்கியம் அவர்களின் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் பரிணமித்தது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம் நம்பிக்கை. ஆனால் தைப் புரட்சியே பிறக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

சனவரி 16 அன்று மாலையில் அடுத்த நாள் காலை “நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பாகக் கூடுவோம்” என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஏதாவது நடக்கிறதா, என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவேச் சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட இளைஞர்கள் போராட்டத்தில் பேசச் சொன்னார்கள். சல்லிக்கட்டுப் பற்றி மட்டுமே பேசுங்கள், அரசியல் பேசுவதைத் தவிர்த்திடுங்கள் என்று அறிவுரைத்தனர். தமிழக அரசியல் சூழல்; மத்திய மாநில அரசுகள் பற்றியெல்லாம் அவர்கள் பெற்றிருந்த அறிவு; சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகள் குறித்த ஆழமானப் புரிதல்; தெளிவான தீர்க்கமான நிலைப்பாடுகள்; சாதி, மதம், கட்சிகள், ஊர், தொழில் போன்றவைக் கடந்து அவர்களை ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்த பாங்கு; வெறுப்பு கோபமின்றி அதிகாரிகளைக் கையாண்ட சாதுரியம்; அறிவார்ந்த பேச்சுக்கள் எழுத்துக்கள் அனைத்துமே பெரிதும் மெச்சும்படியாக இருந்தன.

சல்லிக்கட்டுப் பிரச்சினையில் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுத்து களம்கண்ட மாணவர்கள், இளைஞர்களின் மேடைப் பேச்சுக்களில், முழக்கங்களில், தனிப்பட்ட அளவளாவல்களில் மேற்குறிப்பிட்ட பல்வேறு தமிழகப் பிரச்சினைகளும் நீக்கமற நிறைந்திருந்தன. சல்லிக்கட்டு ஒரு குறியீடுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளான

“தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” “தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு!”

அனைவராலும் முழங்கப்பட்டன. போராட்டம் தமிழகம் முழுவதும் பரந்து வியாபித்தது. சனவரி 19 அன்று பாம்பனில் நின்று கொண்டிருந்தேன். அப்பகுதி கல்லூரி மாணவர்கள் சாரை சாரையாக அறுபது கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள இராமநாதபுரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

“மீசையை முறுக்கு,

பீட்டாவை நொறுக்கு!”

“சின்னம்மா, சின்னம்மா,

ஓ.பி.எஸ். எங்கம்மா?”

“முட்டைன்னா ஒயிட்டு,

தமிழன்னா வெயிட்டு!”

“தடை அதை உடை!”

“தமிழன்டா!”

என்பன போன்ற முழக்கங்களை உரத்தக் குரலில் எழுப்பிச் சென்றார்கள். நாமக்கல்லார் கவிதை வரிகளும் நீக்கமற நிறைந்திருந்தன.

அடுத்து இராமநாதபுரத்துக்குச் சென்றேன். மாணவர்களும், மாணவியரும் அடுத்தடுத்து தனித்தனி கூட்டமாகக் கூடியிருந்து முழக்கங் கள் எழுப்பினர். பிரதமர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என முதல்வரிடம் கையை விரித்திருந்த தருணம் அது. அடுத்து என்ன நடக்குமோ என்று யாரும் அறியாதிருந்த நேரம். ஒரு போராளியாகப் பேசுவதா, அல்லது ஒரு தந்தையாகப் பேசுவதா என என்னுள் ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டி ருந்தது. இறுதியில் ஒரு தந்தையாக அந்த மாணவ, மாணவியரை எச்சரிக்கையுடன் போராடும்படி அறிவுரைத்தேன். அங்கிருந்து பரமக்குடி போனோம். சாலையோரத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள், இளைஞர்கள் பேசச் சொன்னார்கள். சிக்கலான ஊர் என் றாலும், சிறப்பாக நடந்து கொண்டிருந்தது போராட்டம்.

திருப்புவனம், மானாமதுரை என போகும் வழி தோறும் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக மாண வர்கள், இளைஞர்கள் பதாகைகளுடன் அமர்ந் திருந்தனர், முழக்கங்களுடன் ஆர்ப்பரித் தனர். கனவுலகின் பரந்த தெருக்களில் கோலா கலமும் கொண்டாட்டமுமாக, உவகையும் உற் சாகமுமாக மக்கள் கூடி நின்று ஏதோ ஒரு பிரமாண்டத்தை வரவேற்றுக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும், உணர்வும் என்னுள் எழுந்தது. அது எல்லோருக்குள்ளும் எழுகிறது என்பதையும் ஒவ்வொருவராலும் உணர முடிந்தது.

முன்னிருட்டுக் குவிகின்ற மாலை வேளை யில் மதுரை மாநகருக்குள் நுழைந்தோம். பரபரப்பும், விறுவிறுப்புமாக மதுரை குதிரை போன்று எழுந்து நின்றது. கொட்ட வந்தக் கொடுந்தேளை ஒரு கூட்டம் கட்டெறும்புகள் கடித்துப் பிடித்து வைத்திருப்பதைப் போல, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஏதோ ஓர் ரயிலை மடக்கிப் பிடித்து வைகை ஆற்றின் குறுக்கே நிறுத்தி விட்டிருந்தனர். ரயிலின் மீது, பாலத்தின் மீது, ஆற்றின் மீது, கரைகளின் மீது, காணும் இடமெல்லாம் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொது மக்கள். ஒட்டு மொத்த மதுரையே ஊருக்குப் போகிறதா, அல்லது உலகமே ஓடிவந்து மதுரையில் இறங்கியதா என்று வியக்கும் வண்ணம் மக்கள், மக்கள், மக்கள் வெள்ளம்! அவர்கள் மூச்சினிலே வெளிவந்த வீரமோ என்னவோ, அப்படி ஓர் அபார சக்தி காணுமிடமெல்லாம் கரைபுரண்டு ஓடியது. “எங்கெங்கு காணினும் சக்தியடா, எழுகடல் அவள் வண்ணமடா!” என பாரதிதாசன் பாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை பிடித்தாட்டியது. குதூகலம், நம்பிக்கை, புத்துணர்ச்சி -- அதுதான் புரட்சி என்பதை வாழ்நாளில் முதன்முறையாக நான் உணர்ந்தேன்.

அலங்காநல்லூருக்குப் போவோம் என்றனர் நண்பர்கள். அது ஓர் இடிந்தகரையாக சிலிர்த்து நின்றது. ஏராளமான மக்கள் கூட்டம் -- பெரும்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்கள்! இயற்கை உபாதைகளுக்காகக்கூட எவரும் எழாத கட்டுப்பாடு, அதீத கவனம், அபரிமித எழுச்சி! எனது கால்கள் தரையில் பட முடியாதவாறே இழுத்தும், தள்ளியும் கூட்டத்துக்கு நடுவே கொண்டு சென்றனர் தோழர்கள். மக்களின் நடுவே நிற்பது மந்திரம் போன்றது என்றறிவேன். ஆனால் மந்திரவாத மாமகத்தின் நடுவே நிற்பது? இரவு பாலமேடு சென்றபோது, அந்த ஊர்ப் பெரியவர்கள் வரவேற்றனர். அங்கே மட்டும்தான் நான் என் வயதொத்தவர்களைப் பார்த்தேன் இந்தப் புரட்சியில்.

“மதுரைப் போர்க்களம் தமுக்கம் பகுதியில் அமைந்திருக்கிறது, அங்கேயும் போங்கள்” என்றார்கள் உள்ளூர் தோழர்கள். எண்ணிலடங்கா மக்கள் கண்மூடாதிருந்து ஆடியும், பாடியும், ஆகாவென முழங்கியும் புரட்சி போற்றிக் கொண்டிருந்தனர். புரட்சியின் எழுச்சி அதன் வெளிச்சத்தைவிட வீரியமிக்கதாய் இருந்தது.

“புரட்சி என்பது ஓர் இரவு விருந்தல்ல...அது ஒரு கிளர்ச்சி, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்பைத் தூக்கி எறியும் வன்முறைச் செயல்”

என்றார் மாவோ. ஆனால் தமிழகத்தின் குறுக்கும், நெடுக்கும் நான் கண்டது சாதி, மதம், கட்சி, ஊர், தொழில், பாலினம், பாலியல் பேதங்களற்ற அறவழி அரசியல் பொங்கல். எனது வாழ்நாளில் நான் மகிழ்ந்து நெகிழ்ந்து கொண்டாடிய மாபெரும் பொங்கல் இந்தப் பொங்கல்தான். புரட்சிப் பொங்கல்!

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர் களும், இளைஞர்களும் ஆறு நாட்கள் அற்புதமான ஓர் அறவழிப் போராட்டத்தை எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி அருமையாக நடத்தினார்கள். ஆனால் சனவரி 23, 24 ஆகிய நாட்களில் தமிழகக் காவல்துறையினர் ஒரு மாபெரும் வன்முறை வெறியாட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள், மீனவ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.

சனவரி 27, 2017 அன்று பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்கள் சுப. உதயகுமாரன், ஆண்டனி கெபிஸ்டன், கதிரவன் ராயன், அருள் தாஸ், சி. பிரான்சிஸ், அ. ரே. அபினேஷ், அஜு அரவிந்த், வழ. வி. நடராஜன், இளவரசன் அப்பு உள்ளிட்டோர் நொச்சிக்குப்பம், மாட்டான்குப்பம், நடுக்குப்பம், வெங்கடரங்கன் பிள்ளைத் தெரு உள்ளிட்டப் பகுதிகளுக்குச சென்று அங்குள்ள மக்களை சந்தித்தோம்.

நொச்சிக்குப்பம் பகுதியில் வாழும் மீனவப் பெண்கள் கடந்த 23 அன்று காவல்துறையினர் மாணவர்களை, பெண்களை அடித்து நொறுக்கியதாகவும், பலரும் இருசக்கர வாகனங்களை அப்படியேப் போட்டுவிட்டு ஓடியதாகவும் சொன்னார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒரு சில காவல்துறையினர் வயிற்றில் உதைத்ததால் அவருக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டு அவதியுற்றதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் மாட்டான்குப்பம் கெனால் தெரு பகுதிக்குச் சென்றோம். அங்கே வசிக்கும் பல பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் தாங்களும், தங்கள் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். முரளி என்கிற இளைஞர் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்ட தனது முதுகையும், தலையையும், கால்களையும் காட்டினார். வினோத் என்கிற இன்னொரு இளைஞர் தனது முகத்தில் காவல்துறையினர் அடித்து மூன்று பற்களை உடைத்ததைக் காட்டினார். அஸ்வினி என்கிற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தை காவலர்கள் அடித்து உடைத்தபோது, தட்டிக்கேட்டதால் அவரையும் மூர்க்கத்தனத்துடன் அடித்து உதைத்ததாகத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியின் பெண்கள் தாங்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டதையும், தங்கள் வீடுகளிலுள்ள டி.வி., பாத்திரங்கள், நாற்காலிகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டதையும் காண்பித்தனர். பல வீடுகளில் காவல் துறையினர் ஓட்டுக் கூரைகளை உடைத்து நொறுக்கியதையும் காண்பித்தனர். சில காவலர்கள் தங்கள் கால்சட்டைகளின் சிப்களைத் திறந்து, உடலுறுப்பை எடுத்துக்காட்டி, தகாத உறவுக்கு அழைத்ததாகவும் சொன்னார்கள். வாயால் பேச முடியாத ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லி தங்களைத் திட்டியதாகவும் முறையிட்டார்கள். பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

பின்னர் நடுக்குப்பம் கிராமத்துக்குச் சென் றோம். அங்குள்ள ஆண்களும், பெண் களும் தங்கள் பகுதியில் பெண்களால் நடத்தப் பட்ட பல மீன் கடைகள், வாகனங்கள், குடிசைகள் காவல் துறையினரால் எரித்து அழிக்கப் பட்டதையும், ஒருவிதப் பொடியைத் தூவி தீ மூட்டியதையும், பெண் காவலர்கள் தீ வைத்தத்தையும் சொன்னார்கள். வீடு வீடாக காவலர்கள் நுழைந்து அராஜகம் செய்ததாகவும், மக்களை பயங்கரமாகத் தாக்கியதாகவும் சொன்னார்கள். வெங்கடரங்கன் பிள்ளைத் தெருவில் வசிக்கும் மக்களும் தாங்கள் தாக்கப்பட்டதையும் ஏறத்தாழ பதினைந்து பேர் காவலர்களால் தாக்கப்பட்டு கைகள், விரல்கள் உடைக்கப்பட்டதையும் சொன்னார்கள். காவல்துறையினர் அவ்வப்போது வந்து பெரும் உளவியல் தாக்குதல் நடத்துவதையும் குறிப்பிட்டார்கள். சிவராஜபுரம், ரூதர்புரம் போன்ற பகுதி மக்களின் அனுபவங்களும் இதே மாதிரியானவைதான் என்று தோழர்கள் சொன்னார்கள்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் அலுவலகம் போன்றவற்றின் மிக அருகில் இருக்கும் இந்தப் பகுதியில் முதல்வரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்து மக்களை சந்திக்கவுமில்லை, என்ன நடந்தது என்று விசாரிக்கவுமில்லை. மாறாக, மத்திய அரசை மகிழ்விக்கும் விதத்தில் தீவிரவாதிகள் புகுந்தார்கள், தேசவிரோதிகள் நுழைந்தார்கள் என்றெல்லாம் கதைகள் சொல்வதும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சொல்லும் புனைகதைகளைத் திரும்பச் சொல்வதுமாக இருந்தார்கள்.

இம்மாதிரியான தேசவிரோத குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உளவுத் துறைகள், புலனாய்வுத் துறைகள் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஏன் இவர்களைப் பற்றி அரசுக்கு முன்னரே சொல்லவில்லை. மெரீனா போராட்டத்தின் முதல் ஆறு நாட்களில்கூட எதுவும் தெரிவிக்கவில்லையே ஏன்? சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்தேறிய தமிழகக் காவல்துறையின் அராஜகங்கள் பற்றி நீதி விசாரணை ஒன்று நடத்த வேண்டுமென்றும், குற்றம் செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு வேண்டி போராடிய மாணவர்கள், இளைஞர்கள், அவர்களுக்கு ஆதரவு கொடுத்த மீனவர்கள், பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழகத்திற்கு ஒரு புது வழி தந்த நமது மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து நொறுக்கி, அவர்களின் ஒப்பற்ற போராட்டத்தை வன்முறைக் காடாக்கி, அவர்கள் காட்டும் வழியை அடைக்க முயல்கின்றனர் பல ஆதிக்க சக்திகள். தில்லியில் எழுதி தயாரிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை உடனடியாக போராட்டக்காரர்களோடும், பொதுமக்களோடும் பகிர்ந்துகொண்டு, அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டுப் பெற்று, சனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். புதிய அவசரச் சட்டம் மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் பிரிவு 22-ஐ நீக்குவதாலும், சல்லிக்கட்டு என்பதை மறு விவரணம் செய்வதாலும் மாணவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அதை குடியரசுத் தலைவரும், ஆளுநரும் அங்கீகரித்ததும், போராட்டம் வெற்றிக் களிப்போடு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் இந்தச் சட்ட வரைவை யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்தது ஏன்? மறைத்தது யார்? வன்முறை வெறியாட்டம் துவங்கிய பிறகே அது வாட்ஸ் அப்பில் வெளிவந்ததன் மர்மம் என்ன?

போராட்டத்தை வெற்றியோடு, கொண்டாட்டத்தோடு முடிக்கவிடக் கூடாது என்று முன்னரே தீர்மானித்திருந்தனர் ஆதிக்க சக்திகள் என்கிற சந்தேகம் எழுகிறது. அனைவருக்கும் பொது சிவில் சட்டம் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேசிக்கொண்டிருந்த வேளையில், நம் மாணவர்களின் போராட்டம் பி.சி.ஏ. சட்டத்தில் தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது, அவர்களின் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைத்தது. இது சங்கப் பரிவாரத்தை சங்கடப்படுத்தியது. காங்கிரசில் இருக்கும் பார்ப்பனர்களாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கீழடிப் பெருமைகளை மறைத்து நம்மை கீழே தள்ளப் பார்க்கிறவர்கள் நாம் மேலே எழுந்து வருவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

தில்லி நிலைமை இதுவென்றால், சென்னை நிலைமை இன்னும் மோசம். தமிழரின் பாரம்பரிய உரிமைகளையும், பெருமைகளையும் மீட்டெடுக்கும் பொருட்டு தமிழக மாணவர்களும், இளைஞர்களும் அற்புதமான போராட்டமொன்றைக் கையிலெடுத்து, எள்ளளவும் வன்முறையின்றி அழகுற நடத்தி, மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பது திராவிடஸ்தான் பிரகஸ்பதிகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியது. ஊழலும், ஊதாரித்தனமும், வளக்கொள்ளையும், பணக்கொள்ளையுமாக ஐம்பது ஆண்டுகள் ஆண்டு அனுபவித்தவர்களுக்கு இது நிச்சயமாக ஏற்புடையதாய் இருக்கவில்லை. கடிதம் எழுதிப் போடுவதும், கதைகள் சொல்வதும், ஒருவரையொருவர் குறை சொல்வதுமாக நம்மை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு, மாணவர் காட்டும் புதுவழி கிலி பிடிக்கச் செய்தது. போராட்டத்தை திசை திருப்புவதிலும், வன்முறையை நிகழ்த்துவதிலும் பிரகஸ்பதிகள் பலர் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அதேபோல, ஆளும் கட்சியில் அதிகாரத்துக்கு வர விரும்பும் தரப்பு ஆண்டுகொண்டிருக்கும் தரப்பை வீழ்த்த வன்முறையைத் தூண்டியதாகவும் சொன்னார்கள். தில்லிக் காரர்களும் வன்முறையையே காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து கொல்லைப்புறமாக உள்ளே நுழையவும் ஆசைப்பட்டதாகவும் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், ஆதிக்க சக்திகள் அனைத்தும் அம்பலப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை. மாணவர் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாணவர்கள் காட்டும் இந்தப் புதுவழியில் தொடர்ந்து பயணம் செய்து தமிழர் எல்லோரும் நம் வளங்களை, வாழ்வாதாரங்களை, வாழ்க்கையை, வருங் காலத்தை செழுமைப்படுத்த சபதமேற்போம்.

நம் மாணவர்களால், இளைஞர்களால் நாம் இன்று ஒருபடி உயர்ந்து நிற்கிறோம். தமிழரை கிள்ளுக்கீரை என்று நினைத்தவர்கள் எல்லாம் இன்று அண்ணாந்து ஆச்சரியத்தோடும், மரியாதையோடும் பார்க்கிறார்கள். தில்லி எசமானர்களும், சென்னை அடிமைகளும் அவர்களைக் கண்டுகொள்ளாதது போல நடித்தாலும், உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மாபெரும் வெற்றி!

போராட்டம் தோல்வி என்றோ, முடிந்து விட்டது என்றோ சொல்பவர்களை அருகே வரவிடாமல் துரத்தி விடுவோம். போராட்டக் களத்தில் தோல்வியே கிடையாது. அண்மை வெற்றி, தாமதமான வெற்றி என இரண்டு வெற்றிகள் மட்டுமே அங்கேக் கிடைக்கின்றன. அதே போல, தமிழ் மக்கள் போராட்டம் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. இந்தத் தண்டமிழ் நாட்டை தூய்மைப்படுத்தும் பணி, நமது குழந்தைகளுக்கும், அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் நம் நாட்டை வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றும் பணி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது தொடர்ந்தாக வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான இடிந்தகரைப் போராட்டம் தோல்வியில் முடிந்தது என்று முடிவுரை எழுதிய மூடர்கள் முழி பிதுங்கி நிற்கிறார்கள். தமிழகமெங்கும் நம் பிள்ளைகள் நடத்திய அசம்பாவிதம் ஏதுமில்லா அறவழிப் போராட்டம், பெண்களை முன்னிலைப்படுத்தி மகிமைப்படுத்திய விதம், சாதி மதம் பாரா சன்மார்க்க நெறிமுறை, சமரசமில்லா உறுதிப்பாடு, கடலுக்குள்ளே இறங்கி உயிரையேத் துச்சமென மதித்து நின்ற துணிச்சல் போன்றவையெல்லாம் இடிந்தகரை முடிந்தகரையல்ல, அது தமிழினத்தின் விடிந்தகரை என்பதை கோடிட்டுக் காட்டுகின்றன.

போராட்டத்தைத் தொடரும் விதமாக தமிழ் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் அனைவரும் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தை உடனே கையிலெடுப்போம்:

[1]        சினிமாக்காரர்களை பொழுது போக்குக்காக மட்டுமே பயன்படுத்து வோம். சினிமாவை விட்டு விலகி குறிப்பிட்ட காலம் மக்கள் தொண்டு ஆற்றாத வரை, இவர்கள் பொதுவாழ்க் கையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

[2]        பணமில்லாப் பரிவர்த்தனைகளில் இயன்றவரை ஈடுபட மாட்டோம். சிறு குறு வியாபாரிகள், உள்ளூர் கடைகளையே ஆதரிப்போம். பன் னாட்டு நிறுவனங்களை, அவர்கள் ஊக்குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்.

[3]        கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களைத் தொடவே மாட் டோம்.

[4]       தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்களை அன்றாட வாழ்வில் அதிகம் சேர்த்துக் கொள்வோம். உள்ளூர் விவசாயத்தை பேணிக் காப்போம்.

[5]        தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்கரையில் அமைக்கப்படும் அழிவுத் திட்டங்களை ஏற்க மறுப்போம்.

[6]        தமிழர்களுக்கு எதிராக எழுதும், பேசும் பத்திரிகைகள், இதழ்கள், டி.வி. ஊடகங்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

[7]        பெயருக்குப் பின்னால் 'ஜி' போட்டு யாரையும் அழைக்க மாட்டோம், அந்த அடைமொழியை சேர்த்துப் பேச மாட்டோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமது மாணவர்களில், இளைஞர்களில் உண்மை, உறுதி, ஒழுக்கம் கொண்ட ஒவ்வொருவரும் தலைவர்களாக முகிழ்த்தாக வேண்டும். நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போட்டியிட வேண்டும்.

மெரீனா, அலங்காநல்லூர், கோவை போன்ற பகுதிகளில் நடத்திய துரோகங்களுக்கு, துயரங்களுக்கு பதிலளிக்கும் அடுத்தக்கட்டப் போராட்டமாக அது அமையட்டும். தொடரட்டும் மக்கள் புரட்சி!

Pin It

'புலிகளை முற்றாக அழித்துவிட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்' என்று தமிழர்களின் பிணங்களின் மேல் நின்று இன அழிப்பு அரசு 2009 மே 19 அன்று அறிவித்தபோது சக தமிழர்களில் ஒருவனாக நான் பேதலித்து விறைத்துப்போய் நின்ற போது Peace and war conflicts கற்கும் ஜப்பான் தோழி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறீலங்கா அரசின் வெற்றுக் கூச்சல் அது. எந்த ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் போராடும் இனத்திற்கும் இல்லாத பலம் உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் ஒரு சிறிய நீர்ப்பரப்பு பிரித்து வைத்திருக்கும் கூப்பிடு தூரத்தில் ஒரு தனித்த மாநிலமாக 7 கோடி தமிழர்களை கொண்ட ஒரு நிலப்பரப்பு இருக்கும்வரை உங்கள் போராட்டத்தை யாரும் தோற்கடிக்க முடியாது. இந்த புவியியல் அமைவு பிராந்திய பூகோள நலன்களை உங்களுக்கு என்றாவது ஒரு நாள் சார்பாக திருப்பும் வல்லமை கொண்டது. சனத்தொகையில் ஈழம் தமிழகம் சேர்ந்த நிலப்பரப்பை ஒப்பிடும்பொழுது சிங்களவர்கள் எந்த பெறுமதியும் அற்றவர்கள் ஆவார்கள். இது பிராந்திய அரசியலில் பலம் சார்ந்த முக்கியமான கூறு. என்றாவது ஒரு நாள் தமிழகம் உங்களது விடுதலையை சாத்தியப்படுத்தும் அரசியலை எழுதும். அதனால் கவலை கொள்ளாதீர்கள் என்றார்

ஈழத் தமிழர்ளாகிய நாம் நம்பிக்கை கொள்ளும் ஒரு அம்சம் இது. 2013 மாணவர் எழுச்சி இந்த நம்பிக்கையை மேலும் விதைத்தது. விளைவாக தமிழக சட்டசபையில் தனித்தமிழீழ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்து தமிழகம் தனது சக்தியை உணர்ந்து செயற்பட்டதா என்ற கேள்விக்கு நம்பிக்கை தரும் பதில் இல்லை. இந்த பழியை முழுமையாக தமிழககத்தின் மீது திணித்து விட முடியாது. ஈழத்தமிழர்களாகிய நாம் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் - இராஜதந்திர அம்சம்.

மே 18க்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது மட்டுமல்ல, மீண்டும் எமது விடுதலைப் பேராட்டத்தின் பின்தளமாகவும் தமிழகம் மாறியிருக்கிறது.

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இன அழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக பிராந்திய - பூகோள அரசியலை தமிழகத்தை மையமாக வைத்து நாம் ஒரு வரைபடத்தை வரைய தவறிவிட்டோம்.

குறிப்பாக ஐநா தொடர்பான விடயங்கள் அல்லது அதை கையாளல் என்பதில் நாம் ஒரு மோசமான தேக்கத்தைச் சந்தித்துவிட்டோம் என்பது இன்றளவும் மறுக்க முடியாத உண்மை.

2009 நடந்து முடிந்த இனஅழிப்பிற்கு பிறகான நமது தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடான ஒரு தெளிவற்ற - குழப்பகரமான - எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த எமது மதிப்பீடுகளின் விளைவு இது.

ஆனாலும் 2013 இல் மாணவர்கள் ஒரு புரட்சியினூடாக அந்த மதிப்பீட்டை கேள்விக்குள்ளாக்கி ஒரு பாதையை திறந்து வைத்தார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளும், அமைப்புகளும் அதை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தத் தவறிவிட்டார்கள்.

எனவே இது சரி செய்யப்பட வேண்டும்.

'ஐநாவை கையாளல்' என்பதன் கன பரிமாணத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நாம் சரியாகப் புரிந்து கொள்வதனூடாகவே நாம் இந்த தேக்கத்தை சரி செய்ய முடியும்.

எனவே கொஞ்சம் பின்னோக்கிப் போய் இதை புரிந்து கொள்ள முற்படுவோம்.

கடந்த ஏழு வருடங்களாக தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்றவும் முயன்றும் வரும் ஒரு தரப்பின் பிரதிநிதியாக எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டது.

எனவே ஐநா வை குற்றவாளியாக நாம் அடையாளப்படுத்துவது மட்டுமல்ல ஐநாவிற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்த வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம்.

ஏனென்றால் பொறுப்பற்ற விதத்தில் மனித விழுமியங்களுக்கு முரணாக மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஒரு அமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விக்குள் சிக்கி அழிவுற்ற ஒரு இனமாக மேற்படி பொறிமுறையை உருவாக்குவதுதான் சரியானதும் நீதியை நோக்கி நகர்வதுமாகும்.

ஐநா தமிழின அழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தும் தமிழ் அமைப்புகளோ தமிழ் அரசியல் தலைவர்களோ அதை கண்டிக்கவோ அதை அனைத்துலக மட்டத்தில் ஒரு விவாதமாகவோ கூட மாற்ற முன்வரவில்லை. இதன் விளைவுதான் ஏழு வருடங்களைக் கடந்தும் எமக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்றதென்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஐநா விற்கு எதிரான சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் ஐநாவிற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் விரிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல், கரன் பாக்கர், ரம்சி கிளார்க் என்று பல உலகறிந்த சட்ட அறிஞர்கள் தமிழ் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலேயே இருக்கிறார்கள். எனவே அமைப்புகள் இந்த பலத்தையும் அறிவையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் குழு கும்பல் மோதல்களுக்குள் நமது அமைப்புகள் சுருங்கிப்போன அவலம்தான் நடந்து முடிந்திருக்கிறது.

நடந்து முடிந்த விடயங்களை பேசுவதோ - பரஸ்பரம் குற்றங்களை வீசுவதோ ஆரோக்கியமான போக்கு இல்லை. ஆனாலும் நாம் ஏன் தேங்கிப் போய் இருக்கிறோம் என்பதை கண்டறியவும் - அதிலிருந்து மீளும் ஒரு பொறிமுறையை உருவாக்கவும் சிலவற்றை இங்கு பேச வேண்டியுள்ளது.

ஐ.நா.வை கையாளல்

இங்கு இரண்டு விடயங்களை நாம் முதன்மையாக பார்க்க வேண்டும்.

01.        ஐநா எங்களை எப்படி அணுகியது?

02.       ஐநா வை நாம் எப்படி  அணுகினோம்?

இதை 2009க்கு முன்பும் பின்பும் என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை. அதீத நம்பிக்கைகளை வளர்த்து விட்டோம் அல்லது அதை விட வேறு தெரிவில்லாத நிலை என்று கூட இதை வரையறுத்துக் கொள்ளலாம்.

பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009க்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி ஐநா வை அணுகினோம் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

ஐநாவை ஒரு குற்ற தரப்பாக நாம் அணுகத் தவறிவிட்டோம். ஐநாவை குற்றவாளியாக்குவ தனூடாகத்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்ற கள யதார்த்தத்தை - நிலவரத்தை நாம் மறந்து விட்டோம் அல்லது அதன் சாத்தியம் குறித்த அச்சத்தால் அதை விரும்பியே மறக்க முயன்றோம் என்று கூட இந்த நிலையை வர்ணிக்கலாம்.

eelam 600ஐநா உண்மையிலேயே குற்றவாளிதானா?

இந்தக் குற்றச்சாட்டை முதன் முறையாக நாங்கள் முன்வைக்கவில்லை. இக் குற்றச்சாட்டு 2009 இனஅழிப்பு நேரத்தில் உலெகெங்கிலுமுள்ள பல மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல மேற்குலக ஊடகங்களினாலும் பரவலாக முன்வைக்கபட்டது.

அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் அதன் செயலாளர் நாயகத்தின் மீதும் தமது கண்டனத்தை இன்றுவரை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக “இன்னர்சிற்றிபிரஸ்' இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வன்னிப்படுகொலைகள் திடீரென்று நடந்த நிகழ்வுகள் அல்ல. சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என்பவற்றை முற்றாக வெளியேற்றிவிட்டு வெளி உலகத்துடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துவிட்டு பொருளாதார மருத்துவ தடைகளை போட்டுவிட்டு குறிப்பான ஆறு மாத காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட ஓன்றரை இலட்சம் உயிர்களை காவு கொண்டு ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது சிறீலங்கா பேரினவாத அரசு.

இங்கு குறிப்பான விடயம் என்னவெனில் சிறீலங்கா அரசின் படிப்படியான மேற்படி நடவடிக்கைகளை அவதானித்து ஒரு இனப்படுகொலை நிகழப்போகிறது என்பது பல தரப்பாலும் உணரப்பட்டு உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கு சிறீலங்கா அரசை இணங்கச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஐக்கிய நாடுகள் சபையிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது.

நாம் வீதியில் மாதக்கணக்காகக் கிடந்ததே அதற்கு சாட்சி. ஆனால் காத்திரமான எந்த நடவடிக்கையையும் ஐநா மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல இன்றுவரை இவ் இனப்படுகொலை தொடர்பாக ஒரு மௌனத்தையே கடைப்பிடித்து வருகிறது. இது ஐநாவின் சாசனத்திற்கும் தோற்றத்திற்குமே ஒருமுரணான விடயம்.

உலகப் போர்களின் விளைவாக நிகழ்ந்த அனர்த்தங்களினாலும் மனிதப் பேரழிவுகளினாலும் அதிர்ச்சியுற்ற அரசுகள் - அமைப்புகள் ஒன்று சேர்ந்து இனி இப்படியான மனிதப்பேரழிவுகள் நடைபெறக்கூடாது என்ற கொள்கையுடன் முன்னெச்சரிக்கையாக தோற்றுவித்த ஒரு உலக பொது அமைப்பு. இந்த நவீன யுகத்தில் ஒரு இனம் தனது சொந்த நிலத்தில் வைத்து அழித்தொழிக்கப்பட்டதை அனுமதித்ததும் அதனைத் தடுக்காததும் அந்த அமைப்பின் தோற்றத்தையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஐ.நா சாசனத்தின்படி நாடுகள் என்ற உள் வெளி எல்லைகளுக்கு அப்பால் ஒரு இனத்தின் மொழி, அடையாளம், பண்பாடு, இறைமை என்பவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்களின் மீதான அழித்தொழிப்பே மனித உயிர்களாகக் காவு கொள்ளப்பட்டது. இது இந்த பூமிப்பந்தில் வாழும் ஒரு இனம் தொடர்பான ஐநாவின் சாசனத்திற்கு முரணானது.

இந்த அடிப்படையிலேயே “இன்னர்சிற்றிபிரஸ்” உட்பட பல ஊடகங்கள், மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் பான்கிமூன் மீது குற்றத்தை சுமத்துகிறார்கள்.

சர்வதேச கூட்டு அரச பயங்கரவாதத்தால்- சிறீலங்கா மட்டுமல்ல அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இரத்த சாட்சியங்கள் நாங்கள். ஐநாவின் சாசனத்திற்கெதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறோம். இதை நாம் உலகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையாக இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது. எனவே எமக்கு பதில் சொல்லவேண்டியவர் பான்கிமூன்தான். அவர் தற்போது தனது பதவி காலத்தை முடித்துவிட்டார். ஆனாலும்; அவர் குற்றவாளி என்பதில் எனக்கு தெளிவு வேண்டும்.

நாம் பான்கிமூனை குற்றவாளியாக்கி போராடுவதனூடாக எமது போராட்டம் பன்மைப்படுத்தபடும். உலக கவனம் அதில் குவியும். விளைவாக இனப்படுகொலை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரிடையான சூத்திரதாரிகளான சிங்கள இராணுவ, அரச தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நாம் அந்த வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்.

பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடக்கிறது?

நாம் ஐநாவிற்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்தோம். ஐநா மீது வழக்கு தொடர முடியாது என்பதும் அதற்கு சட்ட விலக்கு இருக்கிறது என்பதும் எமக்கு தெரியாத தல்ல. ஆனாலும்; இந்த முயற்சி எமக்கு சில இராஜதந்திர வெற்றிகளை பெற்று தரும் என்ற கோணத்தில் சிந்திக்க நாம் வலியுறுத்தினோம்.

அதாவது ஒரு இனம் ஏன் ஐநா வை குற்றவாளி என்கிறது? அதன் மீது வழக்கு தொடுக்க முனைகிறது? என்ற கோணத்தில் ஓர் விவாதத்தை உலக அளவில் எழுப்பி தமிழின அழிப்பிற்கான நீதியை நோக்கி நகரும் ஒரு முயற்சியே தவிர இந்த வழக்கு ஏற்றுக்கொள்ள பட மாட்டாது என்பது மட்டமல்ல அது நின்று பிடிக்காது என்பதும் எமக்கு தெரியும்.

நாம் ஐநா எமக்கு அநீதி இழைத்து விட்டது என்பதை கண்டடைந்த உடனேயே 2009 யூன் மாதமளவிலேயே ஐநா மீது - குறிப்பாக பான்கிமூன் மீது ஒரு வழக்கை பதிவு செய்ய முனைந்திருக்க வேண்டும். குழு கும்பல் மோதல்களும், தோல்வி தந்த உளவியல் பாதிப்புகளும், அரசியல் இராஜதந்திர விவேகமற்ற செயற்பாடுகளும் இதைத் தடுத்து மடைமாற்றி விட்டன.

அப்போதே ஒரு வழக்கை பதிவு செய்திருந்தால் எமது நீதிக்கான படிமுறைகள் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கும். இப்படி தேங்கிப்போயிருக்க மாட்டோம்.

இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகள் கட்டமைப்பு ரீதியாகத் தோல்வியுற்றன என்ற வெளிப்படையான அறிவிப்புடன் இறுதி அறிக்கையும் ஐநாவிற்கான பரிந்துரைகளும் எப்போதோ வெளிவந்து விட்டன. அதற்கு முன்பாக ஐநா செயலர் பான்கிமூன் ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டி ருந்தார்கள்.

இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வைத்து நாம் என்னதான் செய்வது?

வரலாற்றில் முதல் தடவையாக கெயிட்டி மக்கள் ஐநா மீது 2 வருடங்களுக்கு முன்பு நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி இருப்பதாக ஐநா கூறுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது உண்மையில் தமிழர்கள் செய்திருக்க வேண்டிய சாதனையை கெயிட்டி மக்கள் தட்டி சென்று விட்டார்கள்.

எமது வழக்கும் இத்தகையதுதான். வழக்கு முடிவு முக்கியமல்ல. எமது இன அழிப்பில் ஐநா உடந்தையாக இருந்தது என்ற அனைத்துலக மட்டத்திலான எமது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. வழக்கில் தோல்வியுற்றாலும் இந்த வரலாற்று குற்றச்சாட்டு ஐநாவையும் மேற்குலகையும் எமக்கான நீதியை வழங்க உந்தும். தொடர்ந்து எம்மை இம்சிக்கும் அல்லது நீதியை மடைமாற்றும் வேலைகளை நாம் தடுக்க உதவும்.

ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல ஐநாவிற்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எம்மிடையே குவிந்துள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இன அழிப்புக்கு உடந்தையாக ஐநா இருந்தது என்பதை நிறுவி ஐநா செயலாளர் நாயகத்தை பதவிநீக்கம் செய்து தமது நீதியை பெற்றார்கள் என்ற வரலாற்றை எம்மால் படைத்திருக்க முடியும். ஆனால் இன்று ஏதோவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. வெறும் பார்வையாளர்கள் போல் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

2009 இல்தான் ஏமாற்றப்பட்டோம். ஆனால் தொடர்ந்தும் நமது அணுகுமுறைத் தவறினால் உள்ளக அளவில் ஐநாவிற்குள்: பல சதிகள் அரங்கேற நாமே வழி கோலிவிட்டோம்.

அதாவது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும். 2002இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக வேறுபட்ட காரணங்களுக்காகப் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வை அடைய முயன்று கொண்டிருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது.

இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றே பல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அனைத்து உள்ளக அமைப்புகளும் தோல்வி கண்டுள்ளதாக கூறியுள்ளார். இதுவே போதும் நாம் ஐநாவை குற்றவாளி என்று அறிவிக்க..

ஆனால் பிற்பாடு இதையும் தாண்டி பான்கிமூன் சில உள்ளக சதிகளில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. நம்பியார் தொடக்கம் சார்ள்ஸ் பெற்றி வரை பான்கிமூன் ஐநா விதிகளை மீறியிருக்கிறார். இதை நாம் சொல்லவில்லை இன்னர்சிற்றி பிரெஸ் விரிவாகவே பதிவு செய்திருக்கிறது.

முதலில் நம்பியார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடக்கம் பல சதிகள் செய்தவர் இவர்தான்.

அடுத்து தமிழின அழிப்பை நடத்தி முடிக்க ஏதுவாக பான் கீ மூன் இந்திய கைக்கூலி நம்பியாரை களம் இறக்கியது போல் நடந்து முடிந்த இன அழிப்பை மறைக்க நோர்வே கைக்கூலி சார்ள்ஸ் பெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற அதிகாரி நியமனத்திற்கு பதிலாக நியமித்தவர் பான் கீ மூன்.

இவர் 4 மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை 9 மாதங்கள் கடந்தும் சமர்ப்பிக்காமல் மௌனம் சாதித்து வருவதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம் சுமத்திய பிற்பாடுதான் பல இழுத்தடிப்புகளின் பின் அது வெளிவந்தது. இந்த சார்ள்ஸ் பெற்றிதான் விதிகளுக்கு முரணாக ஐநா நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டவர்.

அடுத்து இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் ஒரு பக்கம் தெரிவித்த பின்பும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைக்கும் பான் கீ மூன் உத்தரவிடவில்லை.

மாறாக இன அழிப்பு அரசின் இராணுவ அதிகாரிகள் ஐநா பதவிகளையும் தூதரக பதவிகளையும் அலங்கரித்தார்கள். வெள்ளைக்கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாலித கோகன்ன தொடக்கம் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவேந்திர சில்வா வரை இந்த பட்டியல் நீளமானது.

அடுத்து வன்னிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஐநா நிபுணர் குழு அறிக்கையின்படி 40,000

அந்த அறிக்கையை தயார் செய்த மூவர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா அண்மையில் ஊடகவியலாளர் பிரான்சேஸ் கரிசனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய எண்ணிக்கை 75,000

ஆனால் அவர் ஏன் அதை நிபுணர் குழு அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்பதற்கு இன்று வரை பதிலில்லை. பாருங்கள் 35000 பேரை ஐநா தெரிந்தே விழுங்கிவிட்டது. ஆனால் வண பிதா ராஜப்பு ஜோசப்பு அடிகளார் போன்றவர்கள் சொல்லும் உண்மையான எண்ணிக்கை 1,46,679

இப்படி எண்ணற்ற திருகுதாளங்கள் தமிழினத்திற்கு எதிராக ஐநாவிற்குள்ளேயே நடந்தது - இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இதன் பின்பும் ஐநா வின் நிகழ்ச்சி நிரலின் பின் எப்படி நாம் இழுபட முடியும்? ஐநா வை இக்கட்டில்தள்ளி அதை நாம் வளைப்பதனூடாகவே நாம் ஒரு நீதிக்கான பாதையை தெரிவு செய்யலாமே ஒழிய எந்த நிபந்தனையுமின்றி ஐநாவின் பின் இழுபடுவதனூடாக எதையும் சாதிக்க முடியாது.

இவ்வளவு விமர்சனம் இருந்த போதிலும் ஐநாவுடன் உடன்படும் புள்ளிகளையும் நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தமிழின அழிப்பில் ஐ.நா ஒரு பங்காளி என்ற பொழுதும் தமிழ்த்தேச விடுதலைக்கான அங்கீகாரத்தில் ஐ.நா வின் இடம் மறுக்க முடியாத ஒரு பாத்திரமாகிறது. புலிகளின் மே 18 செய்தி என்பதே ஐ.நா வை சுற்றி வைக்கப்பட்ட - வரையப்பட்ட பொறி(முறை)கள்தான். எனவே நாம் வளைத்தும், சுற்றியும் ஊடறுத்தும் ஓட வேண்டிய பாதை ஐ.நாவை மையமாகக் கொண்டது தான் என்பது வெளிப்படை.

ஐ.நா வுடன் உடன்பட்டும், உடன்படாமலும் அதாவது ஐ.நா வின் இனஅழிப்பு பங்களிப்பை அம்பலப்படுத்துவது தொடக்கம், இனஅழிப்பில் ஐ.நா வை குற்றவாளியாக்குவது வரை எதிர்த்தும் ஐ.நா வின் தலையீட்டை மிக தந்திரமாக எதிர்கொண்டு, அதனோடு ஒத்தோடுவது வரை இதன் உள்ளடக்கத்தை பலவாறாக விபரிக்கலாம்.

ஆனால் மே 18 க்கு பிறகு அரசியல் செய்ய புகுந்த யாருமே இதைக் கவனத்தில் கொள்ளவில்லை அல்லது இந்த உண்மையின் ஒரு பகுதியை மட்டும் நம்ப விரும்பினார்கள். அல்லது தாம் தெரிந்தே உருவாக்கிய - தம்மை இயக்கும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் ஊடாக இந்த உண்மையை மழுங்கடிக்க முனைந்தார்கள்.

இத்தகைய புரிதல் உள்ள நாம் தான் ஐ.நா வுடன் ஒத்தோட வேண்டிய புள்ளிகளையும் அடையாளம் கண்டு அதனோடு இசைந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நமது அமைப்புக்கள் அதைக்கூட பயன்படுத்திக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை.

இனஅழிப்புக்கு துணைநின்ற மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தெளிவான அரசியல் புரிதல் உள்ள யாராலுமே ஏற்க முடியாது. இனஅழிப்பை படிப்படியாக போர்க்குற்றமாகச் சுருக்கி அதையும் காலப் போக்கில் மனித உரிமை மீறல் பிரச்சினையாக்கி முன்மொழியப்படும் தீர்மானத்தை இனஅழிப்பை எதிர்கொண்ட - தொடர்ந்து எதிர்கொண்டுள்ள ஒரு இனம் எப்படி ஏற்க முடியும்?

மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்தான் 'போர்க்கால நெறி பிறழ்வுகள்'

என்று இனப்படுகொலையை சுருக்கியிருந்தார்கள். ஆனால் நடந்தது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான - அமைதிக்கெதிரான குற்றம். இதன் விளைவாக நடந்தது இன அழிப்பு. இங்கு எல்லோருமே குற்றவாளிகள்தான

எனவே தான் பல தளங்களில் இந்த தீர்மானத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும் நமக்கு இதை விடுத்தால் வேறு தெரிவில்லை என்ற தெளிவான புரிதலுடன் தான் தீர்மானத்தை முடிந்தவரை வலிமையானதாக மாற்ற எம்மைப்போன்ற பலர் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.

ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சில கட்சிகள், அமைப்புகள் இதை எதிர்ப்பதிலே குறியாக இருந்தார்களே ஒழிய இதன் அடுத்த பக்கத்தை பார்க்கவில்லை.

ஏனென்றால் ஐநா தீர்மானமோ அதன் விளைவான விசாரணைக் குழுவோ எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பது பகுதியளவு உண்மைதான். ஆனால் இந்த தொடர் பிரச்சாரங்களின் விளைவாக மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தமது இனஅழிப்பு சாட்சியங்களை வழங்காமல் பின் வாங்கியது தான் பெரும் வரலாற்றுத் தவறாக மாறியிருக்கிறது.

இந்த சாட்சியங்களை பதிவு செய்வதென்பது ஐ.நா எமக்கு நீதியை தூக்கித் தந்து விடும் என்பதற்காக அல்ல. தமிழின அழிப்பில் ஐ.நா வும் ஒரு தரப்பு என்ற புரிதல் எமக்கு நிறையவே உண்டு என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஆனாலும் எமது வாக்கு மூலங்களை நாம் அனுப்ப வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. நடந்த இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அதை ஒருங்கிணைத்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் ஆவணப்படுத்தவும் என்பது தொடக்கம். எமது நீதிக்கான ஒரு சிறிய புள்ளியாவது இதன் மூலம் உருவாக்கப்படலாம் என்பது வரை ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

குறிப்பாக புலிகளை குற்றவாளிகளாக்கி எமக்கான நீதியை குழி தோண்டி புதைக்க இருக்கும் அனைத்துலக - பிராந்திய சதியை முறியடிக்க வேண்டியாவது நாம் இதை அனுப்பியிருக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்கு மூலங்களை பதிவு செய்வதினூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐ.நா நகர்வுகளுக்கு எதிராகவும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

இதன் வழி தமிழர் தரப்பு ஒரு பேரம் பேசும் வல்லமையாக உருவெடுக்கலாம். ஆனால் நடந்தது என்ன? ஐ.நா வை எதிர்க்க வேண்டிய தெளிவை பெற்ற தமிழக போராட்ட குழுக்கள் சில ஐ.நா வோடு ஒத்தோட வேண்டிய புரிதலை வளர்க்காததால் வந்த சிக்கலா? அல்லது திட்டமிட்டு நடைமுறை படுத்தப்பட்ட சதியின் ஒரு பகுதியா ? என்பதை காலம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனென்றால் தமிழின அழிப்புக்கு துணை நின்ற இந்தியா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போதும் அதை நீர்த்துபோக செய்து வருகிறது. எனவே நாம் நீதியை வென்றெடுக்க இந்தியாவிற்கு கடிவாளம் இட வேண்டியது முக்கியமானது. ஆனால் இன்றளவும் அது எமக்கு சர்தியப்படவேயில்லை.

2013 மாணவர் பேராட்டத்தின் போதே நாம் ஒரு பொறிமுறையை வரையறுத்து தமிழக மாணவர்களிடம் கொண்டுசேர்த்தோம்.

தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக்கொண்டிருந்த நேரம் அது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி. ஆனால் இனி என்ன செய்வது என்ற குழப்ப்த்தால் நாம் அந்த வெற்றியை தக்க வைக்க தவறிவிட்டோம். இனியாவது சுதாரித்து கொண்டு மீண்டும் ஒரு மாணவர் பேராட்ட குழுவை அமைத்து அதை முழு இந்தியாவிற்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அதாவது இந்திய மட்டத்தில் அனைத்து மாநில மாணவர்களிடமும் போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு இந்திய மக்கள் முதல் அதை உணர வேண்டும்.

ஒரு தலைமை குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் என குழுவை பிரித்து அவர்கள் அந்தந்த மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரி களுக்கு சென்று நடந்த - நடந்து கொண்டிருக்கிற இன அழிப்பு குறித்து விளக்கி 'ஐநாவின் பாரகட்சம் தொடக்கம் இந்திய தலையீடு வரை' புரிய வைக்க வேண்டும்.

சனல் 4 இன் ஆவணப்படங்களுடன் டப்ளின் தீர்ப்பாயத்தின் நகல், மற்றும் ஐநா நிபுணர்கள் குழு அறிக்கை தொடங்கி இன்று வரையான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு ஆவணங்கள் வரை காண்பித்து வேற்று மாநில மாணவர்களின் ஆதரவை பெற வேண்டும்.

அவர்களை பிற்பாடு அந்தந்த மாநில மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் விளக்குமாறு கோர வேண்டும்.

நாம் ஒன்றை கவனமாக விளங்கி கொள்ள வேண்டும். இந்திய அரசோ, இந்திய மக்களோ நமக்கு எதிரி அல்ல . எமது எதிரி இந்திய வெளியுறவுக் கொள்கைதான். அது தனிப்பட்ட சிலரின் கைகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும். இந்திய அளவில் மக்களினதும் மாணவர்களினதும் மாற்றம் இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றமாக வெளிப்படும். இதுவே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

இன மொழி வேறுபாடுகளுக்கப்பால் அழிவையும் துயரத்தையும் கண்டு கலங்குவதும் தோழமை கொள்வதும்தான் மனித மனம். இந்திய மக்களுக்கு தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட கதையை சொல்ல வேண்டும். அதில் இந்திய அரசின் பங்கிருந்ததை தெளிவு படுத்த வேண்டும். எனவே தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனதும் கடமை என்று வலியுறுத்துவதனூடாகவே தமிழகம் சார்ந்த எமது அடுத்த கட்ட போராட்டத்தின் வடிவம் ஒழுங்கமைக்கப்படும்.

அவர்கள் நிச்சயம் நம்மோடு இணைந்து கொள்வார்கள்.

போர்க்குற்றங்களை இனஅழிப்பை விளக்குவதுடன் இந்திய நலனுடன் ஒத்துப்போகும் தமிழீழம் எனும் தேசத்தின் பிராந்திய முக்கியத்துவத்தை, இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு தமிழீழக் கடல் அரண் தரும் பிராந்திய பாதுகாப்பை, இன்ன பிற முக்கியத்துவங்களை விளக்க வேண்டும்..

இந்திய மக்களை மாற்றுவதனூடாகவே இந்திய வெளியுறவுக்கொள்கையை மாற்றலாம் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

இந்திய அளவிலான மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய அளவிலுள்ள ஒவ்வொரு கல்விக்கூடங்களுக்கும் செல்லுங்கள் - பேசுங்கள் -விவாதியுங்கள்.

இதுவே ஒரு கட்டத்தில் ஐநா வை கையாளும் நமது தந்திரத்தில் சமகாலத்தில் இந்தியாவையும் கையாளும் ஒரு தந்திரமாக வடிவமாற்றம் பெறும்.

அடுத்து ஐநா மனித உரிமை பேரவையின் நகர்வுகளில் நான் முக்கியமாக கருதும் ஒரு விடயம் இது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளில் எமக்கு பெரும்பாலும் உடன்பாடில்லாத போதிலும் அது எமது நீதிக்கான பாதைகள் சிலவற்றை திறந்துவிடப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

அவரது பரிந்துரைகளை பயங்கரவாத அரசுகள் சேர்ந்து ஒரு தீர்மானமாகக் கொண்டுவந்து 'உள்ளக விசாரணை' யில் முடித்துள்ளபோதும் அவரது அறிக்கை எம்மளவில் முக்கியமானது என்பதை நாம் எமக்கேயான முரண்பாடுகளையும் சேர்த்து ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தமிழர் தரப்பு இதைக் கையாள்வதைப் பொருத்தே அதன் பெறுமதியை உறுதிப்படுத்துவதுடன் எமது நீதிக்கான பாதையும் வகுக்கப்படும்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பாக நின்றுகொண்டு இனஅழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் குறித்து எத்தகைய ஆதாரங்களை முன்வைத்தாலும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு ஒன்றினூடாக அதை ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கப்படுவதனூடாகவே அது உலக கவனத்தை குவிக்கும், - நம்பத்தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில் இறுதிப்போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் நடந்ததாக ஐநா மனித உரிமை பேரவை சுட்டிக்காட்டியிருப்பது ஒரு தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று உலக அளவில் ஒரு உரையாடல் தொடங்கிவிட்டது.

forever victims 450தமிழர் தரப்பு அதன் மீதான கவனத்தை குவிக்காததும் அதை ஒரு திறந்த உரையாடலாக மாற்றாததும் கவலையளிக்கிறது.

குறிப்பாக தமிழக அளவில் ஒரு பெரும் விவாதமாக இது மாறியிருக்க வேண்டும்.

குறிப்பாக இறுதிப்போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறுவு குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை பல மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அனைத்துலக ஊடகங்கள் ஆய்வுக்குட்படுத்த தொடங்கிவிட்டன.

இது ஐநா மனித உரிமை பேரவை அறிக்கையினூடாக கிடைத்த பெரு வெற்றியென்றே கருத வேண்டும்.

இந்த பாலியல் வல்லுறுவுக்குற்றங்கள் இனஅழிப்பு நோக்கில் நடத்தப்பட்டவை என்பதை நாம் நிருப்பிப்போமாயின் சிங்கள அரசு இனஅழிப்பு குற்றவாளியாக அம்பலப்படும்.

அதை நாம் மேற்படி அறிவுசார் சமூகத்துடன் இணைந்து நிறுவ உழைக்க வேண்டும்.

அண்மையில் " Washington Post" இல் பேராசிரியர்கள் Nimmi Gowrinathan மற்றும் Kate Cronin-Furman சேர்ந்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார்கள்.

இவர்கள் இதற்கு முன்பாக

" The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka" என்ற ஒரு ஆய்வையையம் செய்து வெளியிட்டுள்ளார்கள். இதுவும் மிக முக்கியமானது.

ஐநா நிபுணர்குழுவில் பங்களிப்பு செய்த யஸ்மின் சுக்கா தொடக்கம் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வரை பலர் தற்போது அனைத்துலகப் பரப்பில் இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக எழுத பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அமெரிக்கா எப்படி திட்டமிட்டு தமிழின அழிப்பை மறைக்க முற்படுகிறதோ அதற்கு எதிர்வினையாக இன்று அமெரிக்க அறிவுப் பின்புலத்திலும் -அமெரிக்க ஊடகங்களிலும் தமிழின அழிப்பு ஒரு பேசுபொருளாக மாற ஐநா மனித உரிமை பேரவை அறிக்கை வழி சமைத்திருக்கிறது.

இதெல்லாம் நாம் ஐநா வை அதை தாங்கும் - மேற்குலக பிராந்திய அரசுகளை எப்படி அணுக வேண்டும் என்ற மைய கருத்துக்களே ஒழிய.. தீர்வல்ல - முடிவுமல்ல.

இவயெல்லாவற்றையும் விட ஐநாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டம்தான் எமது போராட்டத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தும்.

எமக்கு தாயகம் மட்டுமல்ல புலம் முழுக்க பரந்துள்ள தமிழர்களும் குறிப்பாக தமிழகமும் மிகப்பெரிய பலம். ஐநாவை குறிவைத்து இந்த 3 தளங்களிலும் போராட்டத்தை விரிவுபடுத்தினால் ஐநா வை நாம் வளைக்க முடியும்..

இதன் வழி நீதிக்கான பாதையை கண்டடைய முடியும்.

இதன் முதல் அடியாக வரும் மார்ச் ஐநா மனித உரிமை அவையின் அமர்வை நாம் எமக்கானதாக மாற்றி இனஅழிப்பு அரசிற்கான காலக்கெடு வழங்குவதை முறியடித்து ஒரு அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்றிற்கான நகர்வுகளை தொடக்கி வைப்போம்.

Pin It

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் ஜனவரி 21 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. 23 ஆம்தேதி சட்டமன்றத்தால் நிரந்தரச் சட்டமானது. இடைப்பட்ட நாட்களில் அது ரகசிய சட்டமாக வைக்கப்பட்டிருந்தது ஏன்? போராடுபவர்களை முழுமுற்றாக களத்தில் இருந்து அகற்றும் வரை, அரசின் இணையதளத்திலோ, ஊடகங்களுக்கோ, பொதுவெளிக்கோ அவசரச் சட்டத்தின் பிரதிகள் கசிந்துவிடாமல் மறைத்துவைத்தது எதனால்? இந்தக் கேள்விக்கான விடையில் தான் தமிழகம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள் புதைந்திருக்கின்றன.

ஜனவரி 17 ஆம் தேதி காலை ஆறுமணிக்கு அலங்காநல்லூரில் 135 பேர் கைது செய்யப்பட்டதோடு துவங்கியது இந்தப்போராட்டம். அடுத்தநாள் மாலை மெரினாவில் நிற்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத்தொட்டது. அதற்கு அடுத்தநாள் அதன் பெருக்கல் தொகையை தமிழகம் பார்த்தது. 135 பேர் சுமார் பத்து லட்சம் பேராக மாறியதற்கு இடையில் இருந்தது வெறும் ஐம்பது மணி நேரமே. இப்படி ஒரு பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது?

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது; எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான்.

தனி நபர்களோ, குழுக்களோ, இயக்கங் களோ இதனை கட்டி எழுப்பவில்லை. இது பின்னப்பட்ட வலைத்தொடர்புகளால் மட்டும் உருவானதல்ல. உணர்வுகளின் ஒருங்கிணைப்பால் மேலெழுந்த பேரலை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து கொடுத்துவந்த அடியின் அழுத்தம் தாங்காமல் ஏற்பட்ட வெடிப்பு. காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என நீளும் புறக்கணிப்பின் வலிதாங்காமல் வெளிவந்த குமுறல்.

அப்பல்லோ முதல் போயஸ் கார்டன் வரை, சேகர் ரெட்டி முதல் ராமமோகன ராவ் வரை முகம் சுழித்து, கூனிக்குறுக வைக்கும் தமிழக அரசியலின் அசூசையால் ஏற்பட்ட எழுச்சி. அதனால் தான் மக்கள் இவ்வளவு தூய்மையாக இதனை நடத்திக்காட்டினார்கள். நீங்கள் யார்? நாங்கள் யார்? என்பதை உலகுக்குச் சொல்ல ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்பட்டான். அந்த ஆசை எல்லோருக்கும் இருந்ததால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் கைஉயர்த்தி கோஷம் போடுவதை இத்தனை லட்சம் குடும்பங்கள் முதன் முறையாக அனுமதித்தன. அந்த ஆசைதான் இசைஞானியை போர்ப்பரணி பாடவைத்தது. அந்த ஆசை தான் காவலரை சீருடையோடு போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்தது. அந்த ஆசைதான் மீனவக் குப்பத்திலிருந்தும், மசூதியிலிருந்தும், உணவுப் பொருட்களை அள்ளிவழங்க வைத்தது. அந்த ஆசை தான் உணவும் உறைவிடமும் பார்க்காமல் ஊர்கள் தோறும் இளைஞர் கூட்டத்தைச் சுழல வைத்தது.

இன்னும் சொல்லப்போனால் உங்களை பயமுறுத்தியதும் அந்த ஆசைதான். ஏழு நாட்களாக தமிழகம் முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் ஒற்றைக்கல்கூட வீசப்படவில்லை, பேருந்தின் சிறு கண்ணாடி கூட உடையவில்லை. இத்தனை லட்சம்பேர் பொதுவெளியில் இத்தனைநாட்கள் கூடியும் டாஸ்மாக்கின் வருமானம் துளிகூட உயரவில்லை. நீங்கள் எதிர்பார்த்த எந்த பலகீனமும் இல்லாமல் ஒரு கூட்டம் கண்ணுக்கு முன்னால் உருத்திரண்டு நின்றது. அதனால்தான் நீங்கள் பதற்றத்தின் உச்சிக்குப் போனீர்கள். இப்போராட்டத்துக்குள் இருந்த அறம் உங்களை நடுங்கச்செய்தது. அதனால்தான் அதற்கு நேரெதிரான சொற்களான, தீவிரவாதம், அல்கொய்தா, சமூகவிரோதிகள் எனப் பேச ஆரம்பித்தீர்கள். தேசியக்கொடியை போர்த்திக் கொண்டால் போலீஸ் அடிக்காது என்று நம்பி நீங்கள் ஓங்கிய லத்திக்கு முன் உடல்குறுகி உட்கார்ந்தான் மாணவன். கடற்கரைச் சாலையில் தேசியக்கொடிக்கு அவன் செய்த மரியாதையின் தூசிக்கு ஈடல்ல, அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் செய்தது.

பத்து மணிக்கு மேல் எங்கும் கூட்டம் நடத்தக்கூடாது, அப்படியே கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் மக்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒதுக்குப் புறத்தில் தான் கூட வேண்டும். அதற்கு அனுமதி வாங்க பலமுறை அலையவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் எத்தனையோ விதிகளை உருவாக்கி ஒன்று கூடும் மனிதச்செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்களின் அத்தனை உத்தரவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் தமிழகத்து இளைஞர்கள். அதுவும் உங்களின் தலைமையகத்து வாசலில். ஒரு நாள் இருநாள் அல்ல, ஏழுநாட்கள். எப்படிச் சகிக்க முடியும் உங்களால்?

காவல்துறையின் கணக்கும் ஆளுங்கட்சியின் கணக்கும் ஒன்றாயின. 17ஆம் தேதி போராட்டம் துவங்கியது. முதல்வரின் அறையில் இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில்தான் அது நடந்தது. ஆனால், அந்த சில நூறடியை கடப்பது எளிதல்ல, பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தில்லிபோவது எளிது. கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற பொய்களைச் சொல்லி ஏமாற்றிய மத்திய, மாநில அரசின் தலைமைகள் இருவரும் சந்தித்த பொழுது புதிதாய்ச் சொல்ல பொய்களற்று முழித்தீர்கள். ஏனென்றால் உண்மையின் ஆவேசம் தமிழகத்தின் வீதிகள் தோறும் எழுந்துநின்றது. வேறு வழியே இல்லாமல் 20ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்தீர்கள். ஒரே நாளில் அவசரச்சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதே நாளில் மத்தியஅரசின் அனைத்து துறைகளும் ஒப்புதல் கொடுத்தன. அன்றே ஆளுநரின் கையொப்பமும் பெற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் அமலானது. உங்கள் அதிகாரத்தின் ஆணவம் நொறுங்கிவிழ ஒற்றை நாள்தான் ஆனது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களால் எதுவும் முடியாது என்று கதையடித்துவந்த நீங்கள் முழுமுற்றாக அம்பலப்பட்டு நின்றது அன்று தான். அந்தத் தோல்வியில் இருந்துதான் உங்களது வஞ்சகமும், பழிவாங்கலும் துவங்கியது.

mariana students protest 600ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி என்ற அறிவிப்பு, உங்களின் அரசியல் தோல்வியோடு நேரடியாக சம்பந்தப்பட்டது. திறந்துவிடப்படும் காளை முதலில் யாருடைய குரல்வளையை குத்தும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த உண்மைதான் உங்கள் இருவரையும் ஆத்திரங் கொள்ளச்செய்தது. உங்கள் தோல்வியை மறைக்க கைவசம் இருந்த ஒரேவழி வெற்றியை சீர்குலைப்பது மட்டுந்தான். இந்த மாபெரும் எழுச்சியோடு உங்களின் பூர்வபயமும் இணைந்து கொண்டது. ஜல்லிக்கட்டுக்கான கோபம், செத்து மடியும் விவசாயின் கோபமாக மாறிவிடக்கூடாது. ஏடிஎம் வாசல் மெரினா சாலையோடு இணைந்துவிடக்கூடாது. வாடிவாசலில் இருந்து காளைகள் துள்ளிக்குதிக்க வேண்டும்; ஆனால் திமிறும் அதன் திமில் ஒடுக்கப்பட வேண்டும். அதற்குத்தான் நீங்கள் திட்டம் வகுத்தீர்கள். நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டம் என்னவென்றே சொல்லாமல் வித்தை காட்டினீர்கள். சட்டத்தை கண்ணில் காட்டாமல் நம்பிக்கையைக் கோரினீர்கள். உங்கள் மீதான கடந்த கால அவநம்பிக்கையையே உங்களுக்கு சாதகமான கருவியாக மாற்றினீர்கள்.

நாங்கள் சட்டம் கொண்டுவந்துவிட்டோம்; அவர்கள் கலையாமல் இருக்கிறார்கள் என்றீர்கள். போராட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக போராட்டக்காரர்களை நிறுத்த சாமர்த்தியமாய் செயல்பட்டீர்கள். ஒரே நாளில் ஜல்லிக்கட்டுக்கானவர்களாக நீங்கள் மாறி போராடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து யாரெனக் கேட்டீர்கள். போராட்டக்களத்தில் வேறு முழக்கம் கேட்கிறது என்று சொன்னீர்கள். தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்; அரசியல் பக்குவமற்றவர்கள் என்று, அழைத்துவரப்பட்டவர்களை வைத்து பேசவைத்தீர்கள். தலைமையற்ற போராட்டம் இப்படித்தான் ஆகும் என அக்கறையோடு முத்துக்கள் உதிர்த்தீர்கள். தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றீர்கள் கடைசியாக ஒசாமா பின்லேடனிடம் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். அலங்காநல்லூரின் பெயர்ப் பலகையில் ஆப்கானிஸ்தான் என்று எழுதி கதையை முடித்தீர்கள்.

நீங்கள் விரும்பும் நாளும் வந்தது. உங்களின் பூட்ஸ் கால்கள் உற்சாகமாக களம் இறங்கின. உங்களின் லத்திகள் தமிழகம் எங்கும் சுழன்றன. தடிகளையும், கற்களையும் கொண்டு பொதுவெளியில் ஒரு பேச்சுவார்த்தையை துவக்கினீர்கள். நீங்கள் விரும்பியதைப் போலவே எதிர்கற்கள் வீசப்பட்டவுடன் உற்சாகமடைந்து உலகத்தைப்பார்த்து நீதிசொல்ல ஆரம்பித்தீர்கள். சட்டம் - ஒழுங்கை காக்கும் வீரபுருஷர்களாக மாறினீர்கள்.இறுதியாக உங்களைப்பாராட்டி 27ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அறிக்கையும் வாசித்தார். அதில் அவர் குறிப்பிடுகிறார்: ‘ஜல்லிக்கட்டு தடை நீங்கிய மகிழ்ச்சியை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனுபவிக்க முடியாதபடி சமூகவிரோதிகள் செய்துவிட்டனர்’

எவ்வளவு உண்மையான வாசகம் இது. நீண்ட காலத்துக்குப்பின் முதலமைச்சரின் அறிக்கைக்கு எழுந்து நின்று மரியாதை செய்யத் தோன்றியது. முதல்வர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளின் நோக்கம் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்ல, போராட்டம் என்ற எண்ணத்தையே முறிப்பது. அதற்கான திட்டத்தைத்தான் அவர்கள் செயல்படுத்தினர். ஆனால் இயற்கையின் விதி வேறொன்று; முறிபடும் கிளையே நாற்புறமும் தழைக்கும்.

Pin It