கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Ennour 450இந்நிலையில் தற்போதைய விபத்தால், எண்ணூர் கடற்கரை தொடங்கி அமித் பல்கலைக்கழகம் வரை சுமார் 52 கிலோ மீட்டருக்கு எண்ணெய்கசிவு நடந்துள்ளதாக இந்திய கடல்சார் தகவல்தொடர்பு துறை அறிவித்துள்ளது.சுமார் 300டன் அளவிற்கு கச்சா எண்ணெய்- மண் கழிவுகள் கடலில்இருந்து அப்புறப்படுத்தப் படுத்தப் பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முழுவதும் எண்ணெய் படலம் அப்புறப்படுத்து விட்டதாகவும், கடற்கரை பாறைகளில் படிந்த கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அகற்றும் என்றும் கூறி வருகின்றனர்.

முதலில் கடலில் எண்ணெய் கசிவே நடக்கவில்லை என்றவர்கள், பின்பு கொஞ்சம் கலந்தது என்றவர்கள், ஒரு கட்டத்தில் தப்பிக்க இயலாமல் உண்மையை குறைத்துக் கூறி மோசடி செய்து வருகின்றனர். இந்த எண்ணெய் கசிவு பாதிப்பு பெருமளவில் வடசென்னை நெய்தல்திணையின் சூழலியலையும் பொருளாதாரத்தையும் நாசம் செய்தது. வர்தாப் புயலில் இருந்து மீளாத மீனவ மக்கள் மீண்டும் இந்த மோசடிகாரர்களால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றனர்.

சூழலியல் தாக்கமும் பொருளாதார தாக்கமும்:

கச்சா எண்ணெய் படலமானது பல மைல் தூரத்திற்கு கடற்பரப்பிலும் கரையிலும் படர்ந்துள்ளதால் கடல் வாழ் உயிரினங்களும் கடல்சார் சூழலியல் மண்டலும் கடும் அழிவை எதிர்கொண்டுவருகிறது.ஆயிரக்ககணக்கில் மீன்கள் செத்து மிதக்கிறது, ஆமைகள் கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்குகிறது.பாறைகளில் எண்ணெய் கசிவு படிந்துள்ளது.கரையில் எண்ணெய் படிந்துள்ளது. கடற்கரை மீன்கள், முகத்துவாரத்திற்கு நீந்தி வந்து முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்து கடல் சேரும். இந்த நிலையில் முகத்துவாரத்தில் கலந்து எண்ணெயால் முகத்துவாரத்தில் மீனின் இனப்பெருக்கம் மோசமான வகையில் பாதிப்படைந்துள்ளது.

இந்த விபத்தால், மீன் வியாபாரம் முற்றாக சரிந்துள்ளது.காசிமேடு, நீலாங்கரை மீன் சந்தைகளில் மீன் வியாபாரம் முற்றாக சரிந்துள்ளது. பங்குனி ஆமைகளும் இந்த எண்ணெய் கசிவு பாதிப்பால் அதிக எண்ணிக்கையில் செத்து கரை ஒதுங்கி வருகிறது. எண்ணெய் வித்துகளின் நச்சுத் தன்மை, ஆமைகளின் சுவாசத்தையும் இதயத்தையும் பாதிப்படையச் செய்து இறக்கச் செய்கிறது.இதுவரை சுமார் 200 பங்குனி ஆமைகள் செத்து கரை ஒதுங்கியதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஒரு நீண்ட கால சூழல் கேட்டிற்கு வழி செய்யும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

நிர்வாகக் கோளாறுகள்:

கடலில் எண்ணெய் கசிவு பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் போர்க்கால வகையில் நிலைமையை சரிசெய்வதிலும் போதிய நிர்வாக ஒருங்கிணைப்பும் தொழில்நுட்ப வசதிகளின் போதாமைகளும் அப்பட்டமாக வெளிப்பட்டன. எண்ணைக் கசிவு பேரிடர் ஆணையம் இல்லாத காரணத்தாலும், இவ்வாறு ஒரு விபத்து நடந்தால் என்ன செய்வது என்ற முன்னெச்செரிக்கை நடவடிக்கையில் காமராஜர் துறைமுக நிர்வாகம் அசட்டையாக இருந்தது போன்ற காரணங்களால், வாளிகளை கொண்டு நச்சு எண்ணெய் கசிவை தன்னார்வாளர்கள் அள்ளுகிற பேரவலம் நடந்தது. ஆபத்தான இந்த நச்சுக் கசிவை அகற்றுகிற உபகரணம் அற்ற, தொழில்நுட்பம் அற்ற, நிர்வாக ஏற்பாடற்ற அரசு இயந்திரம்தான் வல்லரசு கனவில் மிதக்கிறது! ஏழு நாளில் கழிவை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதாக சொன்ன அரசு, பதினைத்து நாட்கள் ஆகப் போகிற நிலையிலும் நிலையை சீராக்க இயலாமல் தடுமாறுகிறது.

பொறுப்பில் இருந்து நழுவிச் செல்லுதல்:

விபத்து நடைபெற்ற உடனே, உள்ளூர் நிர்வாகமானது காமராஜர் துறைமுகம், விபத்தை ஏற்படுத்திய கப்பல்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், கடல்சார் ஆய்வு நிறுவனங்கள் போன்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நிலையை சீராக்காமல், விபத்தின் தன்மையை குறைப்பதிலும், யார்மீதும் பழியில்லாமல், விபத்திற்கு யாரும் பொறுப்பேற்காமல் நழுவிவிடுவதிலும்தான் தீவிரம் காட்டின.

சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம், மெத்தென அரசு இந்த விபத்துக்கும் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

(1974 சட்டப்படி)சூழலை சீரமைத்து தரவேண்டும்.மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.