ban peta 450உலகம் எழுச்சியின் வாசலில் நின்று கொண்டிருக்கிறது.பனிப்போர் முடிவுக்கு பின்னர் உலக மக்கள் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக திரளுகிறார்கள். ஆனால் அது குறைந்த நலன்களோடு முடிந்து போகிறது. வால்ஸ் ட்ரீட், தாஹிர் சதுக்கம், என நாம் கண்ட பல போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.ரஷ்ய ஒன்றியத்தின் சிதைவின் பின்னர் முதலாளித்துவம் குடிமக்கள் மீது நடத்திய தாக்குதலின் பின் விளைவுகளையே நாம் அவலங்களாக பார்த்து வருகிறோம். மேற்குலக பொருளாதார நெருக்கடி மக்களை வீதிக்கு துரத்தி அது உலகின் கவனத்தை ஈர்த்தது போல ஒரு எழுச்சி நம்மூரில் சாத்தியமா என்ற கனவெல்லாம் அப்போது பகிரப்பட்டன. அது இந்தியாவில் சாத்தியமானது மெரினாவில்.

மெரினா எப்போதுமே வியப்பானதுதான். அது ஒரு செயற்கை கடற்கரை. உலகின் நீண்ட கடற்கரைகளுள் ஒன்று எனப்படும் மெரினா, சென்னை துறைமுகம் துவங்கப்படுவதற்கு முன் இல்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முன்னால் சாலையும் அதனையொட்டி அலையும் அடிக்கும், அடிக்கும் அலைக்கும் நிலத்திற்கும் இடையே பரந்த இந்த மெரினா பீச் கிடையாது.

செயற்கையாக மணலை கடலுக்குள் கொட்டி சென்னை துறைமுகம் உருவாக்கப்பட்ட போது அந்த அழுத்தம் காரணமாக கடல் மணலை கரையில் கொட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதுதான் மெரினா கடற்கரை. அப்படி உருவான செயற்கை கடற்கரையின் பின் விளைவு திருவொற்றியூர், எண்ணூர் கரையோரங்களை மிகக் கடுமையாக பாதித்து பல கிராமங்களை மூழ்கடித்து விட்டது.இப்படி மெரினாவின் உருவாக்கத்தின் பின்னர் ரத்தம் தோய்ந்த மீனவர்களின் துயர வரலாறு மூழ்கிக் கிடக்கிறது. நிற்க, தமிழகம் கண்டிராத வகையில் மெரினா போராட்டம் அமைந்தது.

பொதுவாகவே புரட்சி என்ற சொல்லால் இப்போராட்டம் அடையாளப்படுத்தப்பட்டது. காரணம் சுமார் 40 லட்சம் பேர் வரை வந்து சென்ற போராட்டம் வழங்கிய அனுபவமும், அதனூடாக உருவான மன எழுச்சியாலும் புரட்சி என்ற சொல்லில் அதை அர்த்தப்படுத்த முயல்கிறார்கள். ஆனால் புரட்சியின் உள்ளார்ந்த அரசியல் பொருளோடு இதை அணுகினால் அதில் மிச்சம் மீதி எதுவும் இருக்காது என்பதால் நான் இதை பெருந்திரள் எழுச்சி என்கிறேன்.

போராட்டங்களின் மூலம் தமிழகத்தைக் கைப்பற்றிய திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் ஆள்வதற்காக போராட்டங்களை தமிழர்களின் வாழ்வில் இருந்து நீக்கினார்கள். கூலி உரிமைக்காகவும், மொழிக்காகவும் போராடிய தமிழர்களை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாக்குப் பிண்டங்களாக மாற்றியதில் தேர்தல் அரசியலில் பங்கேற்கும் கழகங்களின் பெரிய சாதனை எனலாம்.

அரசியல் அழிப்பின் முதல் அடையாளமான சென்னை மெரினாவில் இருந்த சீரணி அரங்கம் அகற்றப்பட்டது, சேப்பாக்கம், உள்ளிட்ட வழக்கமாக போராட்டம் நடக்கும் இடங்கள் மூடப்பட்டன. சென்னை அண்ணாசாலை எத்திராஜ் கல்லூரியில் எதிரே செல்லும் அரவமற்ற கூவக்கரையோர சாலை போராட்டங்களுக்கு வழங்கப்பட்டது. மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராட வேண்டும் என்று கழகங்கள் மூச்சுக்கு முந்நூறு தடவை போதித்தது. இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்தது. இடைஞ்சலாக சென்னையில் அழகிற்கு அச்சுறுத்தலாக இருந்த சென்னையில் பல்லாயிரம் பூர்வ குடிகள் சென்னைக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்கள். இன்னொரு பக்கம் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துச் சென்றது. விலைவாசி உயர்வு, உரிமைகள் பறிப்பு, மானியங்கள் வெட்டு, வர்தா, வறட்சி, இறுதியாக ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு என மக்கள் திண்டாடிப் போனார்கள். சில நாட்களுக்கு முன்னர் வரை தங்கள் பணத்தை தாங்களே எடுக்க முடியாமல் நின்ற மக்களை ஈர்த்தது மெரினா திரட்சி. இரண்டாவதுதான் ஜல்லிக்கட்டு கோஷம்.

துவக்கத்தில் இந்த போராட்டத்தை கடுமையாக எதிர்த்த நான் மெரினா சென்று திரும்பிய போது வியப்போடும் ஆச்சரியத்தோடும் நம்பிக்கையோடும் திரும்பினேன். அதற்கு காரணம் அங்கு நிலவிய மோடி எதிர்ப்போ, அரசியல் கோஷங்களோ அல்ல. அங்கு ஒரு பண்பாடு நிலவியது. சமீப காலமாக கலாச்சார அமைப்புகள் மேலெழுந்து ஒழுக்க வாதங்களை மக்களுக்கு போதித்து வரும் நிலையில் சுதந்திர உணர்ச்சியோடு மக்கள் கூடி ஆடிப்பாடினார்கள், நடனமாடினார்கள். கோஷமிட்டார்கள், கரவொலி எழுப்பினார்கள். தங்கள் மொபைல் போனில் வெளிச்சம் ஏற்படுத்தினார்கள். மீம்ஸ் போட்டார்கள். வாட்ஸ் அப், முகநூல் மூலம் கூட்டம் சேர்த்தார்கள். ஜல்லிக்கட்டு நடந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்த போராட்டம் முடியவில்லை என்பதுதான் இந்த போராட்டத்தின் பன்மைத்தன்மையை உணர்த்தியது.

இப்போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் லாரன்ஸ், பாடகர் ஆதி, நாட்டு மாடுகள் வணிகரும், அது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறவர் என்று சொல்லிக்கொள்கிறவருமான சேனாதிபதி போன்றோர் இந்த போராட்டத்தில் வெவ்வேறு கோஷங்களை எழுப்பியதாக குற்றம் சுமத்தினார்கள். குறிப்பாக, மோடியை திட்டினார்கள். தனிநாடு கோரினார்கள் என்று சொல்வது அவர்கள் பெருந்திரள் எழுச்சியின் மீது அவர்கள் கொண்டிருந்த சுய விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.இவர்கள் அனைவருமே இன்றைய அரசுகளால் இப்போராட்டத்தினுள் நுழைக்கப்பட்டிருக்கலாம்.

இப்போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டு போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனால் இவர்கள் ஒவ்வொருவரின் தேவைகளும் இப்போராடத்தின் மூலம் ஆதாயமாக மாறும். ஆனால் இப்போராட்டம் யாருடைய தனிப்பட்ட தேவைகளின்பால் பட்டதல்ல, அது மக்கள் அடைந்த அவதியில் இருந்து எழுந்த உந்துதல். அதனால்தான் போராட்டம் முடிய மறுத்தது. போலீசார் மாணவர்களைச் சூழந்து தாக்கியபோது சென்னை உட்பட தமிழகம் முழுக்க மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து தமிழகத்தை முடக்கியதுதான் இந்த போராட்டம் உருவாக்கிய பண்பாடு. இங்கு செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சிகள் நடத்தும் அடையாளப் போரட்டங்களை இடது கையால் துடைத்துப் போட்டு விட்டு கம்பீரமாக நின்றது இதன் வெற்றி.

ஆனால், இந்த போராட்டத்தின் பின்னால் மிக முக்கியமாக நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. இந்த போராட்டம் உருவாக்கிய பண்பாட்டை வளர்த்தெடுப்பது எவ்விதம் அது சாத்தியமா என்பதுதான்.

இந்த போராட்டம் மக்களின் ஆன்மாவைத் தொட்ட போராட்டம்.சாதி, மொழி, இனம், கடந்த ஒரு ஐக்கியத்தை உருவாக்கி அதை மெரினாவில் வெளிப்படுத்திய நிலையில் அரசும் காவல்துறையும் இதை நீண்டகால அச்சுறுத்தலாகப் பார்த்தது. காரணம் இந்த ஐக்கியம் நீடித்தால் அது வளர்த்தெடுக்கப்பட்டால் அரசுக்கு சிக்கல் வரும் என்பதால் அதை சிதைக்க எண்ணி திட்டமிட்டு கலவரத்தை தூண்டினார்கள். மக்கள் மத்தியில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியாக வேண்டிய தேவையும் உருவானது. அந்த அச்சுறுத்தலின் திட்டமிட்ட வெளிப்பாடுதான் போலீஸ் நரவேட்டை.

அரங்கில் இருக்கும் கட்சிகளை அங்கு திரண்டவர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கும் இந்த போராட்டம் அச்சுறுத்தலாக இருந்தது.அதனால் அரசின் அடக்குமுறையை திமுக உள்ளிட்ட கட்சிகள் மவுனமாக வேடிக்கை பார்த்தது. ஒப்புக்கு சில அறிக்கைகளை திமுக விட்டாலும் அது எப்படி ஜல்லிக்கட்டு போராட்டம் மீது முதல்வர் பன்னீர் செல்வம் அரசு ஏவிய அடக்குமுறையை ஆதரித்தது என்பதை புரிந்து கொள்வதன் மூலமே இந்த போராட்டப் பண்பாட்டின் வீரியம் புரியும்.

save jalikattu 450மாணவர்களை போலீசார் தாக்கி துரத்திய போது மீனவர்கள் படகுகளில் வெளியேற்றப்பட்டவர்களை ஏற்றி கடல் வழியே கொண்டு போய் மீண்டும் மெரினாவில் இறக்கினார்கள். உணவு தண்ணீர் கொடுத்தார்கள். அதனால்தான் மெரீனாவை அண்டியிருக்கும் மீனவர் குடியிறுப்புகளில் போலீசார் நரவேட்டையை நடத்தினார்கள்.

மீன் மார்க்கெட், வீடுகள், என ஒன்று விடாமல் சேதமாக்கி அடித்து நொறுக்கியதோடு, ஆட்களையும் அள்ளிச் சென்று சித்ரவதை செய்து சிறையில் அடைத்தார்கள். தீவைத்தார்கள், பெண்களை நிந்தனை செய்தார்கள். மெரினா போராட்டத்தின் மொத்த எதிர்வினையையும் அனுபவித்தவர்கள் கடற்கரையோர பட்டினவர்களான மீனவர்களும், கடற்கரைக்கு வெளியில் வாழ்ந்த தலித் மக்களும்.

ஆனால் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கவலை கொண்ட பொதுச் சமூகம் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொண்ட இவர்கள் பற்றி கவலை கொள்ளவில்லை. அதை பயன்படுத்திக் கொண்ட முதல்வர் பன்னீர் போராட்டத்தில் கைதான மாணவர்களை விடுதலை செய்தார். மீனவர்களை சிறையில் தள்ளி ஏராளமான வழக்குகளை அவர்கள் மீது போட்டார்.

மாணவர்கள் உருவாக்கிய பொது பண்பாடு போலீசாலும், அரசாலும் சிதைக்கப்பட்டது. அதன் முதிர்ந்த வடிவம்தான் ஆங்காங்கே நடந்த ஜல்லிக்கட்டும் கொண்டாட்டங்களும். இந்த துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் பிறகு போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமையை அந்த நினைவுகள் எதுவுமற்ற சாதிகளின் விளையாட்டு போல நடத்தி விட்டார்கள். நாளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வரும் போது இன்னொரு போராட்டத்தை எவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதுதான் இந்த போராட்டம் கொடுத்த படிப்பினை.

போராட்டத்தின் நோக்கம் வெற்றி என்றாலும் அதற்கான துன்பங்களை அனுபவித்த மக்களை சிறையில் தள்ளி விட்டு, அதற்காக வருந்திய மக்களை புறந்தள்ளி விட்டு அரசும், காவல்துறையும், பொதுப்புத்தியின் துணையோடு மெரினா போராட்டம் உருவாக்கிய பொதுப் பண்பாட்டை சிதைத்து விட்டது.

இந்த போராட்டம் தோல்வி என்று சொல்ல முடியாது சிதைக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் திட்டமிட்டு மத்திய பாஜக அரசால் குழப்பட்டு விட்ட நிலையில் மெரினா அராஜகத்தின் கை நனைத்தவர்கள் தங்கள் பாவங்களை கழுவ பிராயச்சித்தம் தேடுகிறார்கள். மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கையில் மூழ்கிவிட்ட பொது மக்களுக்கு அது பற்றிய எண்ணம் ஒரு நினைவாக மட்டுமே இனி இருக்கும்.

Pin It