புதிய தடம் சிற்றிதழ் வெளிவந்து வாசித்து வந்த காலம் தொட்டு, மேகவண்ணனை ஒரு தேர்ந்த வாசிப்பாளராகவும், வலதுசாரி அரசியலுக்கு எதிரான குறிப்பாக திராவிட அரசியலுக்கு ஆதரவான சிந்தனையாளராகவும், கடைசியாக அவ்வப்போது கவிதை எழுதுபவர் என்றுமே அறிந்திருந்தேன். சுகனும் (பிரான்ஸ்), ஷோபாசக்தியும் எதிர்க்கதையாடல்களாகத் தொகுத்து 'கருப்பு' என்ற பெயரில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த தொகுப்பில், கவிதைப் பகுதியில் ம. மதிவண்ணன், சுகுணா திவாகர் உள்ளிட்டோரின் கவிதைகளுடன் மேகவண்ணனின் கவிதையும் வெளிவந்திருந்து கவனத்தை ஈர்த்தது. அவரது காத்திரமான கவிதையின் அரசியல் வெளிப்பாட்டை ('குஜராத்' என்ற சிறு கவிதை) அதில் காண முடிந்தது. அப்புறம் அவ்வப்போது ஆங்காங்கே காணக்கிடைத்தன; அவ்வளவே. ஒருமுறை மேகவண்ணனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து கூறும்போது, அவரது கவிதை ஒன்றையும் ('பின்மதிய மதுவிடுதி' என்று நினைவு) இணைத்துப் பதிவிட்டிருந்தேன். அப்பதிவின் பின்னூட்டத்தில் ஒரு தோழி, "இது யாருடையது? மேகவண்ணன் எழுதியதா?" என்று ஆச்சரியத்துடன் வினவியது நினைவிலிருந்திருக்கிறது - இந்தத் தொகுப்பில் உள்ள 'சிறுநகரின் பிரபலமாகாத கவிஞன்' கவிதையை வாசிக்கையில் அந்நினைவு மேலெழும்புவது ஒரு கவிதைத் தருணம்தான். இப்போது அவரது கவிதைகளை ஒரு தொகுப்பாக முழுமையாக வாசிக்கிறேன்.
'எங்கு தனிமை முடிவடைகிறதோ, அங்கே சந்தை தொடங்குகிறது. எங்கே சந்தை தொடங்குகிறதோ, அங்கே மகத்தான நடிகர்களின் பேரோசையும் விஷப்பூச்சிகளின் ரீங்காரமும் தொடங்குகிறது' என்கிறான் நீட்சே. அந்தச் சந்தையும், நடிகர்களின் பேரோசையும், விஷப்பூச்சிகளின் ரீங்காரமும்தான் - அவற்றின் மீதான தனது எரிச்சலும் கோபமும் ஆனால் செய்வதற்கேதுமற்ற நிலையுமே மேகவண்ணனின் கவிதைகளாக உருக்கொள்கின்றன. அதனால்தான்,
'....கையில் கடனட்டையும்
உடலெங்கும் பார்கோடுகளுமாக
பிறந்திருக்கும் புதிய இந்தியாவின்
கள்ளத் தகப்பனுக்கு
மார்பு விரிந்த நிலையில் 56 இன்ச்
பழைய இந்தியாவை
அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து
முட்டுச்சந்தில் வன்புணர்ச்சி செய்த நள்ளிரவில்
நாம் நாகினி பார்த்துக்கொண்டிருந்தோம்..' (லேபர் வார்டு)
என்று ஆத்திரம் கொள்கிறார். மேலும் ஆயுதத்தையும் செருப்பையும் எறிய முடியாதவர்கள் மேல் தனது கவிதைகளை எறிந்து செல்கிறார். துணைக்கண்டத்தின் நிலவிய/நிலவும் இருண்ட காலமும், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைச் சக்திகளின் எழுச்சியும், ஜனநாயகக் குரல்களின் நெரிக்கப்படும் ஓசையும் மேகவண்ணனை இம்சிக்கின்றன. கூடவே மத்திம வயதின் பதற்றமும் பாதுகாப்பின்மையும் கூடிய நவீன வாழ்வின் நெருக்கடிகளும் அந்த இம்சையுடன் இயைந்து, நடக்கையில் குறுக்கே கால்விடுகின்றன. அவற்றுக்கான அவரின் எதிர்வினைகளும் கவிதைகளாகியுள்ளன.
'..ஊழிக் காலத்தைக் கடப்பது எளிதல்ல
வேலியோரத்தில்
கனத்த பாம்பின் தடங்களைப் பார்த்ததாக
வீட்டுக்குள் நுழைகையில்
மனைவி சொன்னாள்..' (பயில்வான் ரங்கநாதன்)
என்று இருண்ட காலத்தின் பாடலை நடுங்கும் குரலால் பாடும்போதே,
'..கைவிடப்பட்ட கட்டடங்களைத் தரைமட்டமாக்க
வெடிகுண்டுகளைப் பயன்படுத்தலாமெனக் கண்டறிந்தவன்தான்
நமக்கு இன்னொரு பூமிப்பந்தைக்
காட்டித் தர வேண்டும்.'
என்று நம்பிக்கையும் சூல்கொள்கிறது.
இவரின் கவிதைகளில் நினைவேக்கம் இருக்கிறதே ஒழிய இருண்மை இல்லை. அவ்வகைக் கவிதைகளின் நியதியாகக் கொண்டுள்ள புரியாமையும் திருகுமொழியும் இவர் கைக்கொள்வதில்லை. சொல்ல வேண்டியதையும் உணர்த்த வேண்டியதையும் நேரடியாகவும் சொற்சிக்கனத்துடனும் எழுதிச் செல்கிறார். தத்துவத்தின் முடிச்சுகளை மிக எளிதாகக் 'Quote' போன்ற கவிதைகளில் அவிழ்த்துவிட்டோ இறுக்கிவிட்டோ போகிறார். சிந்தனையின் தர்க்க இறுக்கத்தைத் தளர்க்கும் ஆசுவாசம் தருகின்றன சில கவிதைகள்.
'..ஒழுகும் நீர்க்குழாயில் / சரியாக / விநாடிக்கு ஒரு சொட்டு / விழுகிறது / கடிகாரத்தை நிறுத்திய / 3600-வது விநாடியில் / முட்கள் / வாளி நீரில் / மிதக்கத் துவங்கின..'
'கவிதையின் நோக்கம், பிரமிக்கத்தக்க சிந்தனையால் நம்மை மயக்க முயல்வதல்ல. மாறாக, இருப்பில் ஒரு கணத்தை மறக்க முடியாததாகவும் தாங்க முடியாத ஏக்கத்திற்குத் தகுதியானதாகவும் மாற்றுவதேயாகும்' என்று மிலன் குந்தேரா சொன்னது போல, நிகழும் ஒரு கணத்தையும் நிகழ்வையும் தாங்க முடியாததாகவும் மறக்க முடியாததாகவும் சில கவிதைகளில் மாற்றிவிடுகிறார் மேகவண்ணன்.
'..காடழித்து உருவான பூங்காவில் / எஞ்சியிருக்கும் பனையொன்றில் / ஒரு பனம்பழம் பாதியில் உதிர்கிறது / நடப்பவன் உதைத்து மூலையில் / விழுகிறது / பெரிய குடும்பத்தின் மிச்சமிருக்கும் / ஒற்றைச் சிசுவான அது / இவர்கள் ஏன் நடந்த பாதையிலேயே / மீண்டும் மீண்டும் நடக்கிறார்கள் என்று / தன் நுங்குக் கண்களால் விழித்துக் கொண்டிருந்தது..'
தான் ஏன் எழுதுகிறோம், தன்னை எது கவிதையை நோக்கி உந்தித் தள்ளுகிறது என்பதையுமேகூட தனது கவிதையின் வழியே பதிலாகத் தருகிறார் கவிஞர். ரோலர் கோஸ்டர் ரயில் பயணத்தைத் தவிர்த்து விட்டவன் ஒருவனின் மனநிலையை எழுதுகிறார்...
'..பயமும் குதூகலமும் / சந்திக்கும் புள்ளியொன்றை வாழ்வில் தவறவிடுவான் / ஒரு ரயில் பயணத்தைப் போல / பின்னாட்களில் நினைவிருந்தால் / அதைக் / கவிதையென்று எழுதுவான்..' என்கிறார். மேலும் '..நிலத்தின் எல்லாப் பிணிகளுக்கும் / மாட்டுக் கோமியத்தில் மருந்திருக்கிறதென / நம்புகிற ஊரில்..' என்று தொடங்கும் கவிதையில் இவ்வாறு பிரகடனம் செய்கிறார் கவிஞனைப் பற்றியே... '..கையாலாகாதவொரு அரசியல் பொறுக்கி / இவ்வாறாக எழுதி வைத்தான்..' என்று.
அழத் தெரியாத சமந்தாக்களையும், விபத்தின்றி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் லதாக்களையும் எங்கெங்கும் காண்பவர், பணி முடித்து அலைபேசியபடி சாலையில் நடந்து செல்லும் இளம் யுவதியின் விழிகளில் வாகன விளக்குகள் மின்னுவதையும் காண்கிறார். ஒரு சிறு முத்தத்திற்குக்கூட வழிவகுக்காத சிறு நகரத்தின் விதிகளை நொந்துகொள்வதோடு, அவற்றைக் காண நேரும்போது கண்டுகொள்ளாதீர்கள் என்று வேண்டுகோளும் வைக்கிறார்.
படைப்பாளியின், குறிப்பாகக் கவிஞர்களின் படைப்பெழுச்சி அல்லது மனவெழுச்சி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மேலோங்கி இருக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன் அல்லது சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு இதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். 2016, 2017, 2018 ஆகிய காலகட்டத்தில் மேகவண்ணனின் கவிமனம் எழுச்சி கொண்டு படைப்பில் மிளிர்ந்துள்ளதைத் தொகுப்பில் அவதானிக்க முடிகிறது.
இதை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணம் வீட்டு வாசலில் செத்து ஊதிக்கிடக்கும் தெரு நாய்க்குட்டியைச் சிறார்கள் தூக்கிச் சென்று குப்பைக்கிடங்கில் போடும் ஆரவாரத்தைப் பார்க்கிறேன். ஏனோ திடீரென அது ஒரு படிமமாக எஞ்சிவிடுகிறது. 'இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவனோடு' சேர்ந்து இறந்த தெரு நாய்க்குட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறேன். நம்மை அந்தச் செத்த தெரு நாய்க்குட்டியாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த அச்சமூட்டும் காலத்தைப் பற்றியதே மேகவண்ணனின் பெரும்பான்மைக் கவிதைகள்.
இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் (கவிதைகள்) - மேகவண்ணன் - கருப்புப் பிரதிகள் -
- அன்புச்செல்வன்