ஒரு படைப்பாளரது கவிதை, சிறுகதை போன்ற புனைவு வடிவங்களை முழுத் தொகுப்பாக வாசிக்கும்போது - அப்படைப்பாளியின் மொழி ஆளுமை, நுண்ணுணர்வு, படைப்பூக்க அடிப்படை போன்ற பல படைப்பாக்க அலகுகளைக் கண்டுணர முடிவதோடு, அப்படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்பின் அடிநாதம் எதுவென்றும் அறிந்து கொள்ள முடியும்.
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட பூமணியின் 53 சிறுகதைகள் அடங்கிய 'பூமணியின் சிறுகதைகள்' என்ற தொகுப்பினை வாசித்து முடித்ததும் தோன்றியது - 'எப்பேர்ப்பட்ட ஒரு படைப்பாளியைத் தமிழுகம் இழந்து நிற்கிறது?'. அதுகாறும் எழுத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் வாழ்க்கையை - பேச வாய்ப்பிழந்த மானுடர்களின் குரலாகத் தொடர்ந்து தனது கதைகளில் பேசி வந்தவர் பூமணி என்று..!
53 கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வைப் பேசுகிறது. ஏட்டையாவும் போலீஸ்காரர் ஆத்தியப்பனும் தொடர் பாத்திரங்களாக வரும் ஒரு சில கதைகளைத் ('அடி', 'ஆத்திரம்', 'குடை' போன்று) தவிர்த்து, ஒத்த சாயலோ கூறியது கூறலோ தொகுப்பு முழுக்கக் காணக் கிடைக்கவில்லை. அவற்றிலும் கூட 'தகனம்' என்ற கதையில் சாதிக் கலவரத்தில் பாதிக்கப்படும் தெரிந்த முகங்கள், 'நாதி' என்ற கதையின் 'கரீம்பாய்' இன்ஸ்பெக்டர் பாத்திர வார்ப்பு, 'மட்டம்' என்ற கதையில் ஆதிக்க சாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்குமான கோயில் கட்டும் பிரச்சினை என்று ஒரே பாத்திரங்களை வைத்துக்கொண்டும் பல்வகை பிரச்சினைப்பாடுகளைப் பேச முடிந்திருக்கிறது அவருக்கு.
கோவில்பட்டியைச் சார்ந்த கரிசல் பூமியையும், அதில் தவசத்துக்காக வதங்கி வெம்பும் சம்சாரிகளையும், அவர்களின் குணபேதங்களையும், பாடுகளையும் ஒரு பெரும் கலைக்களஞ்சியமாக உருவாக்கித் தந்துவிட்ட முன்னத்தி ஏர் கி.ரா. அவர்கள் பொலிந்து தந்த எழுப்புழவு தடத்தின் வழியே பூமணி போட்டதோ ரெண்டாம் உழவு. ஆனாலும் கூட பூமணி கரிசல் காட்டு கரம்பைத் தரிசிலேயே கதையாடித் திரியவில்லை.
நகர்மயமாதலால்—குறிப்பாகத் தீப்பெட்டி தொழிற்சாலை தோற்றம் - முதலியவற்றால் ஏற்படும் சமூக வாழ்வியல் மாற்றம், சம்சாரிகளைச் சார்ந்து உண்டான தொழில்களைச் செய்வோர் (கூடை முடைவோர் ('தேவை', 'ஓட்டை'), துணி வெளுப்போர் ('பெட்டை'), காவல் காப்போர் ('கசிவு'), கிராம முன்சீப், தலையாரி ('விளைச்சல்'), சைக்கிள் வியாபாரிகள் ('அடமானம்') போன்றவை), நகர்மயமாதலால் உருவான புதிய தொழில்புரிவோர் (தார் ரோடு போடும் தொழிலாளர் ('வலி'), சித்தாள் ('ஏலம்'), பேருந்து நிலையக் கழிப்பறைத் துப்பரவாளர் ('ஒதுக்கம்'), அலுவலகக் கடைநிலை ஊழியர் ('மந்தம்') போன்றவை), இன்னும் பள்ளிக்கூட வாத்தியார் கதைகள் என அவரது கதையின் புழங்கு வெளிகள் பன்முகப்பட்டவையாக உள்ளன.
இத்தொகுப்பில் - குறிப்பாக பூமணி எழுத்துகளில் சிறுவர்களின் உலகமும் உணர்வும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை அவரது தனித்துவமாகக் குறிப்பிட வேண்டும். 'வெக்கை' நாவலின் அடிநாதமாக நான் புரிந்துகொண்டது என்னவென்றால், 'வன்முறையால் குழந்தைகள் இழக்க நேரிடும் குழந்தைமை' பற்றிப் பேசியதாகவே! அதுபோலவே, இத்தொகுப்பெங்கும் பல்தரப்பட்ட சிறுவர்களின் உணர்வுகளை - திடீர் மரணங்கள் ஒரே நாளில் அவர்களைப் பெரிய மனிதர்களாக்கி மாட்டுக்குப் பருத்திவிதை அரைக்க அதிகாலையில் உரலோடு மல்லுக்கட்ட வைப்பதை, சின்னம்மா வீட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துச் செல்ல வைப்பதோடு பிள்ளையெடுக்க வைப்பதையும் - சேக்காளிகளோடு சேர்த்து ஆடு மேய்க்கும்போதான பொழுதுகள் - எப்போதும் விளையாடினாலும் சும்மா கத்திக் கூப்பாடு போடும் கீழ் வீட்டுக்காரியின் கன்றை ஒரே அடியில் அடித்துப் போட்டு அவளது கூச்சலை எதிர்பார்த்து மாடிவீட்டில் காத்திருக்கும் சிறுவனின் அவனளவிலான வன்ம எதிர்பார்ப்பு - பலாப்பழம் விற்கும் அப்பாவுக்குத் தெரியாமல் அதன் மணத்தால் ஈர்க்கப்பட்டு எடுத்துத் தின்று அடிவாங்கித் திகைத்து நிற்பது - நடக்க இயலாமல் போன பெருசை எப்போதும் எகடாசி பேசும் கும்மாளம் - கும்பலாய்ச் சென்று பாதையில் மலம் கழித்து வைப்பது - நகர்ப்புற பள்ளி, தொழில் சூழலில் கோலிக்காய் விளையாட ஆசைப்பட்டு லாரியில் அடிபட்டுச் செத்துப் போவது என அவர் காட்டும் சிறுவர்களின் உலகம் அலாதியானது; எந்தளவுக்கு விலாவாரியானதோ அதே அளவு நுண்மையானதும் கூட..!
குழந்தைமையை—அதன் அப்பாவித்தனத்தையும் குறும்பையும் கொண்டாட்டத்தையும் - வெடிப்புடன் வெளிப்படுத்தும் பூமணியின் கதைகளில்தான் நாம் எதிர்கொள்ள இயலாத வன்மமும் மூர்க்கமும் உருக்கொள்கிறது - அதுவும் நாம் அதிர்வுறும் அளவுக்கு..!
பூமணியின் சிறுகதை என்பது 'சிறு'கதைதான். அத்தனை சொற்சிக்கனம்; ஆனால் அதில் ஊடாடும் வாழ்வின் વિவரிப்பு பல உள்மடிப்புகளாக விரிந்தபடியே இருக்கிறது. மதகணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் தன்மையைக் கொண்டிருக்கிறது அவரின் எழுத்து. மேல்பார்வைக்கு சலனமற்றிருப்பதாகத் தோன்றினாலும், அடியில் அதன் இழுவையும் வேகமும் நாம் எதிர்பாராதது - எதிர்கொள்ள முடியாதது..!
கதைவெளியெங்கும் பூமணி என்ற கவிஞனையும் நம்மால் காண முடிகிறது. வெளிச்சம் வந்தும் வராமலும் நிற்கும் விடிகாலையை ஒரு கதையில் 'பிஞ்சுக்காலை' என்கிறார். ஒரு கதையில் அவசரமாகச் செல்லும் ஒருவரை மறித்துக் குரல் கொடுப்பதை இப்படி விவரிக்கிறார்: "கோயில் பாதையில் செருப்புரசலை மறித்துக் கிழட்டுக்குரலுக்குக் கண்ணைக் கொடுத்தார் கொண்டல்சாமி". இன்னொன்றில் பெருங்கிழவர் ஒருவரின் நெற்றியை, "சகதிக்காட்டில் வண்டித் தடங்களாக நெற்றி ரேகைகள் தெரிந்தன" என்கிறார். "அடித்து இருத்தி வைத்திருந்த குழந்தைகளைப் போல கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன", "அவனது வயிற்றிலும் மூளையிலும் கால் மிதித்துக் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன" - இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம், கதைகளின் நடுவில் வந்து விழும் கவித் தெறிப்புகளை..!
பூமணி கதைகளை மொத்தமாக வாசிக்கையில் - சம்சாரித்தனத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதன் நேர்மறை அம்சங்களும், நகர்ப்புற உதிரித் தொழில்களைக் கைவிட்டு மீள கிராமத்தின் சம்சாரித்தனத்திற்கே செல்ல வேண்டும் என்ற முனைப்பும் சில இடங்களில் மேலெழும்பாமல் இல்லை. அது அவரின் அடிமனவோட்டமாகக் கூட இருந்திருக்கலாம்.
பூமணி சிறுகதைகள் தொகுப்பை ஒருவர் வாசித்து முடிக்கையில், இந்த உலகத்தையே படித்து முடித்துவிட்டதாக ஓர் உணர்வும், அவ்வுணர்வு உண்டாக்கிய பல கேள்விகளும் மனதெங்கும் நிறைந்து வழியும். நம் காலத்தின் கொண்டாடப்பட வேண்டியவரும் சகலரிடையே கொண்டு செல்லப்பட வேண்டியவருமான கதைசொல்லி - பூமணி!
நூல் விவரங்கள்:
- நூல்: பூமணி சிறுகதைகள்
- வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
- வலைதளம்: www.discoverybookpalace.com
- மின்னஞ்சல்:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - தொடர்புக்கு: 87545 07070
- விலை: ₹550/-
- அன்புச்செல்வன்