'...சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்/வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்' - அரிசில்கிழார் (திருவள்ளுவர் மாலை)
திருக்குறளைத் தெரியாத தமிழ்க்குடி யாரேனும் இருப்பாரா என்பது ஐயமே. நம் வாழ்வின் ஏதாவது ஒரு காலகட்டத்தில், ஒரு தருணத்தில் வள்ளுவரின் குறள் ஏதாகிலும் நமக்கு அணுக்கமாகத் தோன்றுவது எல்லோருக்கும் வாய்த்திருக்கும் என்றே நம்புகிறேன் - இளையராஜாவின் திரைப்பாடல்களைப் போல..! திருக்குறளும் இளையராஜாவுமா என்று ஒப்புநோக்கிற்கு உடனே எதிர்க்குரல் கொடுக்கத் தயாராக வேண்டாம் ஐயன்மீர்... அத்தனை வெகுஜன ஈர்ப்பும் அவர்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட தன்மையும் திருக்குறளுக்கும் உண்டு என்பதைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்க முயற்சித்தேன். திராவிடக் கட்சி ஆட்சிகளின் வழி திருவள்ளுவர் பேருந்துகள், சாலைகள் என்று நீக்கமற நிறைந்து குமரிக்கடல் எல்லையிலும் ஒரு குறியீடாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.
திருக்குறளைப் பொதுமையாக ஏற்றுக் கொண்டோம், சரி. யார் அந்தத் திருவள்ளுவர் என்பதில் எத்தனை எத்தனை கருத்து வேறுபாடுகளும் பாடபேதங்களும்? திருக்குறளுக்குச் சனாதன முகத்திரையும் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமும் பூணநூலும் பூசவும் தயாராகவுள்ள அடிப்படைவாதிகள் நிறைந்த அபாய காலம் இது. ஏற்கனவே வள்ளுவரை ஏறக்குறைய சைவ சமயச் சார்பாகவே பார்க்கும் ஒரு பெரும்பான்மைப் பார்வை வாய்த்திருக்கிறது - திட்டமிட்டு வார்க்கப்பட்டுள்ளது. அதற்கு முதன்மைக் காரணம் என்னவென்றால், பெரும்பாலான தமிழறிஞர்கள் சைவ சமயத்தினராகவே இருந்து தங்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு கிடைத்த பிரதிகள் அனைத்தையும் இட்டுக்கட்டியும் கதைகள் பல சொல்லியும் சைவ சமயத்துடன் இணைத்துவிடும் வேலையைச் செவ்வனே செய்து வந்துள்ளனர். வள்ளுவர்-வாசுகி கதைகள் அவற்றின் வழி வந்த தொடர்ச்சிதாம்.
திருக்குறளின் சமணச் சார்பு குறித்தும், அதன் ஆசிரியர் திருவள்ளுவர் சமண மரபில் 'ஆச்சார்ய ஸ்ரீ குந்த குந்தர்' என்ற பெயரில் ஓர் ஆச்சாரியராக வணங்கப்படும் மாற்று வரலாற்றைப் பேசுவதோடு, அதற்கு ஆதாரமாக 'கவிராஜ பண்டித உரை', 'திருக்குறள் - ஜைன உரை' போன்றவற்றையும் பேராசிரியர் அ. மார்க்ஸ் போன்றோர் முன்வைக்கின்றனர். மேலும் திருக்குறளை மொழிபெயர்த்த F.W. எல்லீஸ் என்ற பிரிட்டிஷ் அலுவலர், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட சிறப்புத் தங்க நாணயங்களில் முக்குடையுடன் தீர்த்தங்கரர் உருவத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததையும்; திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' போன்று வரும் சொற்றொடர்களை வைத்தும் வள்ளுவர் சமண சமயத்தினர் என்று கொள்வதற்குச் சான்றுகள் ஆகும் என்று ஐராவதம் மகாதேவன் போன்றோர் (திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு - தமிழியல் / ஜூன் 2008) குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், தோழர் கௌதம சன்னாவின் இந்நூலானது, திருவள்ளுவர் பௌத்த நெறிவழி வந்தவர் என்றும், திருக்குறளில் வெளிப்படுவது திருவள்ளுவரின் தம்மம் என்றும் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனை ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் கருத்துகள் வழிநின்று நிறுவ முயல்கிறது. அதற்கான பெருமுயற்சியும் ஆராய்ச்சியும் ஆசிரியர் மேற்கொண்டுள்ளார் என்பதை நூலை வாசிக்கையில் உணர முடிகிறது.
முதல் பகுதியில் காத்தவராயன் என்ற அயோத்திதாச பண்டிதரின் வாழ்க்கைச் சரிதம் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பகுதியில் அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் மருத்துவர் பட்லர் கந்தப்பனார், அவர் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரி ஜார்ஜ் ஹாரிங்டன் வழி மெட்ராஸ் கல்விக் கழகம் தொடங்கிய பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் திருக்குறள், திருவள்ளுவமாலை, நாலடி நானூறு ஆகியவற்றின் சுவடிகளை அச்சில் கொண்டுவரும் பொருட்டுத் கொடுத்த வரலாறும்; திருக்குறளை முதன்முதலில் தமிழில் அச்சிட்ட முதற்பதிப்பு குறித்த தகவல்களும்; முதற்பதிப்பு வெளிவந்தது 1812-ஆ அல்லது 1831-ஆ என்பதையும்; எல்லீஸ் போலவே 1812-இல் அம்பலவாண கவிராயர் என்பவரைக் கொண்டு தஞ்சை ஞானப்பிரகாசரால் பதிக்கப்பட்ட பதிப்பின் பின்னணி, அவற்றிடையிலான பாடபேதங்கள் ஆகியவற்றை உரிய ஆதார ஆவணங்களுடன் விரிவாக எடுத்தாண்டுள்ளனர்.
3-ஆம் பகுதியானது 'திருக்குறளா, திரிகுறளா?' என்ற ஆய்வை மேற்கொள்கிறது. அப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள குறளி வித்தைக் கதையையும், பின்னிணைப்பு 1 முதல் 4 வரையிலான 'திருவள்ளுவரின் பிறப்பு' மற்றும் 'திருவள்ளுவ நாயனார் சரிதம்' என்ற தலைப்புகளில் பதிப்பித்துள்ள கட்டுக்கதைகளையும் வாசிக்கையில் சிரிப்பை வரவழைத்தாலும், 'என்னென்ன கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்லியிருக்காங்க பாரு' என்ற எண்ணம் எழாமலும் இல்லை. எவ்வாறு ஒரு சமூகத்தில், அறிவார்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் ஆயுதமான எழுத்தின் வழி சிறிது சிறிதாகத் தாம் நினைத்த/தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளக் கட்டுக்கதைகளையும் புராணக்கதைகளையும் கூறி, அவற்றை வெகுமக்கள் கருத்தியலாக மாற்றியுள்ளனர் என்பதையும் இக்கட்டுக்கதைகள் வழி அறிய முடிகிறது. அறிவார்ந்த செயல்பாடானது பார்ப்பனிய வம்சாவளியைக் கொண்டிருப்போருக்கு மட்டுமே உரித்தானது என்ற உள்ளார்ந்த சனாதன வைதீக அடிப்படைவாத அரசியல் செயல்பாடும் தெரியவருகிறது. பௌத்தத்தின் திரிபீடம் என்ற கருத்துகள் வழி விநயபீடகம், சூத்திரபீடகம், தம்மபீடகம் ஆகிய மாகதி மொழி முந்நூலுக்கு ஒத்தது திராவிட மொழிவழி காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் 'திரிகுறளே' என்பதை ஒப்புமை நோக்கி, அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வழி திருக்குறளும் திரிகுறளும் ஒன்றே என நிறுவுகிறார்.
நான்காம் பகுதியில் திருவள்ளுவர் குறித்த கட்டுக்கதைகள் எவ்வாறு பதிப்பிக்கப்பட்டன என்பதையும், அடுத்தடுத்த பதிப்புகளில் முதல் கட்டுக்கதை எவ்வாறு இலக்கிய ரீதியாக மேம்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பதையும் அயோத்திதாசர் துணைகொண்டு விரிவாக எடுத்துவைக்கிறார். 5 முதல் 12 முடிய உள்ள பகுதிகளில் திருவள்ளுவர் திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, திண்ணனூர் என்ற திருநின்றவூர், கச்சம் என்ற கச்சூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை ஆளும் குறுநில மன்னனுக்குப் பிறந்தவர் என்றும்; இளவரசாக இருந்தபோதிலும் அதிகாரத்தின் மீது அவருக்கு நாட்டமின்றித் துறவறம் மேற்கொண்டு திருக்குறளை இயற்றுகிறார் என்பதையும் ஒவ்வொரு பகுதியாகக் கூறிச் செல்கிறார் கௌதம சன்னா. நல்கூர் வேள்வியார் எழுதிய திரிகுறள் சாற்றுக்கவியையும், சிலாசாசனங்களையும் (கல்வெட்டுகள்), தமிழ் இலக்கியங்களையும் துணையாகக் கொண்டு அயோத்திதாச பண்டிதர் விளக்கும் திருவள்ளுவர் சரிதத்தைக் கௌதம சன்னாவும் களப்பணி மேற்கொண்டும், பண்டிதர் குறிப்பிடும் ஆவணங்கள் மற்றும் ஐயம் தீர்க்கும் துணை ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து ஒப்புநோக்கி அதன் மெய்த்தன்மை கண்டு நமக்கு எடுத்துரைக்கிறார். திருவள்ளுவர் தமது தம்மத்தை அல்லது மதத்தினை அல்லது பார்வையினைத் தானே வடிவமைத்துள்ளார் என்றும்; மதத்தில் கடவுள் தேவையில்லை, மனிதனே தேவை என்றும்; மனிதனுக்கு எது தேவையோ அதை அறத்தின் அடிப்படையில் நிர்மாணித்ததுதான் திருவள்ளுவ தம்மம் என்றும் புதிய கோணத்தில் கருத்துரைக்கிறார்.
திருவள்ளுவர் தொடர்பாகப் பழம்பதிப்புகளில் பதிப்பிக்கப்பட்டுள்ள கட்டுக்கதைகளை நோக்குங்கால், கௌதம சன்னா அயோத்திதாச பண்டிதர் துணைக்கொண்டு நிறுவும் இத்திருவள்ளுவ தம்மமும் அவரது வரலாறும் ஏற்கக்கூடியதாகவே உள்ளது என்பதை மறுக்கவியலாது. காரணம், அவர் எடுத்துரைக்கும் வாதத்திற்குத் துணையாகக் கல்வெட்டுகள், தமிழ் இலக்கியங்கள், அரசு ஆவணங்கள் முதலியவற்றை வைத்து ஆராய்ந்து ஒப்புநோக்கி சீர்தூக்கி அளவிட்டுக் கண்டடையும் அறிவியல் முறையிலான எடுத்துரைப்பேயாகும். அதுவே இந்நூலின் நம்பகத்தன்மையைப் பன்மடங்கு பெருக்குகிறது.
இருப்பினும் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இல்லறம் குறித்த விரிவான அலசலும் தீர்க்கமான பார்வைகளும் திருக்குறளில் இருப்பது, அதிகாரத்தை விடுத்துத் துறவறம் மேற்கொண்ட ஒருவரால் எழுதப்பட்டிருக்க வழியுண்டா? மேலும் ஓர் அதிகாரத்தில் தவறென்பது மற்றோர் அதிகாரத்தில் சரியாக இருப்பதையும் திருக்குறளில் காண முடியும். அதனடிப்படையில், ஒரே ஆள் 1330 குறள்களையும் எழுதியிருக்க முடியுமா என்ற கேள்வி எழுவதையும் மறுக்கவியலாது. கேள்விகள் எழுந்தபடி இருப்பதும் நல்லதற்குத்தான். ஆய்வுகள் மேற்கொண்டு நடந்தபடி இருக்க அவையே தூண்டுகோல்கள். ஆனால் ஒன்று நிச்சயம், இனி திருவள்ளுவர் குறித்த ஆய்வு ஏதொன்றிற்கும் கௌதம சன்னாவின் இந்நூல் தெரிவிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலையே இந்நூலின் முக்கியத்துவத்தை விளக்கும்.
மற்றபடி...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை - குறள் 423)
நூல் விவரம்: திருவள்ளுவர் யார்? - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர் - கௌதம சன்னா - தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு (Tamil Heritage Foundation International THFi) - மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்