தமிழ் அறிவுப் புலத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்குவது எஸ். வி. ஆர். எனும் மூன்று எழுத்து மந்திரம். இந்த எழுத்துக்குச் சொந்தக்காரரான மனோகரன் எனும் எஸ். வி. ராஜதுரை, ஒரு சமூகச் செயல்பாட்டாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி, அரசியல் அறிஞர், மார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் குறித்த ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
இவரது வாழ்க்கைப் பயணம் என்பது கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூக வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. எஸ். வி. ஆர். அவர்களை அரசியல், தத்துவம் என்ற துறைகளோடு மட்டும் சுருக்கிவிடுவது அறிவு நாணயமாகாது. அவரது இலக்கியப் பங்களிப்பு என்பது அதிகம் பேசப்படாத பகுதியாக உள்ளது. அவரது காத்திரமான இலக்கிய அணுகுமுறை குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஓரளவு பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவரது இலக்கிய முகம், எதிர்பார்த்த அளவு பேசாப் பொருளாகவே உள்ளது. அதை நிறைவு செய்ய அவரது புகழ் மகுடத்தில் மற்றுமோர் முத்தாகப் பதிவாகியுள்ளது அண்மையில் வெளியாகியுள்ள "மத்தாயும் மாக்ரபோலும்" எனும் சிறுகதைத் தொகுப்பு. 1967 முதல் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட 10 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்துப் பேசுமுன், எஸ்.வி.ஆர். அவர்களது இலக்கிய வேட்கை குறித்து நினைவூட்டுவது முக்கியமானது. தனது 13-ஆவது வயதிலிருந்தே இலக்கியத்தின் மீதும் அரசியல் மீதும் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். குறிப்ப்பாக நிகோலாய் ஓஸ்த்ரோவ்ஸ்கி எழுதிய "வீரம் விளைந்தது" எனும் ரஷிய நாவல்தான் அவரை மார்க்சியத்தை நோக்கி இழுத்துள்ளது. தொடர்ந்து 1966-ஆம் ஆண்டில் அவர் சந்தித்த ஆர். கே. கண்ணன் எனும் மார்க்சியச் சிந்தனையாளர், அவருக்கு அடிப்படை மார்க்சியம் குறித்துக் கற்பித்து வளர்த்தெடுத்துள்ளார். அவர் மூலமாக மேற்கத்திய இசை மற்றும் இலக்கியப் படைப்பாளிகள் குறித்த புதிய கதவுகள் திறந்தன. ஆங்கில எழுத்து 'C' தொடர்பான மூன்று ஆளுமைகளை என்றும் மறக்கக் கூடாது என்ற பாலபாடத்தை ஆர். கே. கண்ணன் இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சார்லஸ் டிக்கன்ஸ், சார்லஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ் ஆகியோர்தான் அந்த மூவர். (கார்ல் மார்க்ஸ் என்பதிலுள்ள 'சார்லஸ்' எனும் முன்னொட்டுப் பின்னாளில் 'காரல் மார்க்ஸ்' என ஆங்கிலத்தில் உருமாறியது).
பிறகு 1965-ஆம் ஆண்டிலிருந்து 1967-ஆம் ஆண்டு வரை கோவையில் செயல்பட்ட "சிந்தனை மன்றம்" எனும் அமைப்பின் வழியாக நடைபெற்ற தத்துவம் - அரசியல் - இலக்கியம் குறித்த விவாதங்கள் அவரது பார்வையைக் கூர்மையாக்கின. சிந்தனை மன்றத்தின் நீட்சியாக "புதிய தலைமுறை" எனும் பத்திரிகை கோவையிலிருந்து வெளிவந்தது. அதில் எஸ்.வி.ஆர். அவர்களோடு, கோவை ஞானி, சத்தியமங்கலம் எஸ். என். நாகராசன், புலவர் ஆதி போன்ற இடதுசாரி ஆளுமைகளும் எழுதி வந்தனர். கோவை ஞானி மூலம் இலக்கியம் குறித்தும், எஸ். என். நாகராசன் மூலம் ஜே. டி. பெர்னால், ஜோசப் நீடாம் போன்ற அறிவியலாளர்கள் குறித்தும் எஸ்.வி.ஆர். அதிகம் கற்றுக் கொண்டார். கோவை ஞானியைத் தனது "ஆசான்" என எஸ்.வி.ஆர். அடக்கத்துடன் குறிப்பிடுவார். ஆனால் கோவை ஞானி அதை மறுத்து "எஸ்.வி.ஆர். தான் எனது ஆசான்" எனப் பலமுறை கோவை நண்பர்களான எங்களிடம் வலியுறுத்திக் கூறிவந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களைச் சந்தித்ததன் மூலம் எஸ்.வி.ஆர்.-இன் இலக்கியத் தாகம் மென்மேலும் அதிகரித்துள்ளது. தகழி சிவசங்கரன் பிள்ளை, பால்ராஜ் சஹானி ஆகியோரது சந்திப்பு இதில் முக்கியமானது. தவிரவும் புரட்சிகர அரசியலில் அவர் பயணித்த பொழுது புரட்சிக்கவிஞர் வரவரராவ், புரட்சிப் பாடகர் கடர், மக்கள் கவிஞர் கோரக் பாண்டே, பாடகர் வனகமந்து பிரசாத் ராவ் ஆகியோரது தொடர்பு, மக்கள் கலை இலக்கியம் குறித்த இவரது புரிதலை விரிவாக்கியது.
எஸ்.வி.ஆர். சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு, இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பொறியாளர் எஸ். எஸ். கண்ணன் அவர்களோடு இணைந்து 'கார்ல் மார்க்ஸ் நூலகத்தை' உருவாக்கினார். அனைவராலும் போற்றப்படும் அறிவாளர் வ. கீதா அவர்களோடு இணைந்தும், தனித்தும் இலக்கியப் படைப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
'ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்', 'தீவுச்சிறையில் விடுதலை இலக்கியம்', 'சொல்லில் நனையும் காலம்', 'ஸரமாகோ: நாவல்களின் பயணம்', 'அன்னா அகமதோவா கவிதைகள்', 'மண்ணும் சொல்லும்: மூன்றாம் உலகக் கவிதைகள்' போன்ற பல குறிப்பிடத்தக்க படைப்புகள் அவரது இலக்கியத் திறனை அடையாளங்காட்டின. தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், குந்தர் கிராஸ், நெருதா, எட்வர்ட் சைத், மாயகோவ்ஸ்கி போன்ற உலக இலக்கிய ஆளுமைகள் குறித்து எஸ்.வி.ஆர். எழுதிக் குவித்தார். ஆசிய, ரஷிய, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். சோசலிச யதார்த்தவாதம் தவிர, பியூச்சரிசம், சிம்பலிசம் போன்றவை குறித்தும் எழுதினார்.
இவரது மொழிபெயர்ப்புகள் என்பவை வெறும் இறக்குமதிச் சரக்குகள் அல்ல; அவை தமிழுக்குப் புதிய திறப்புகளை உருவாக்கிய அசலான படைப்புகளாக வழிகாட்டின. இலக்கியம் என்பது வசதியான நாற்காலியில் சாய்ந்துகொண்டு வெளித்தள்ளும் பண்டமல்ல என்பது எஸ்.வி.ஆரின் பார்வை. மாறாக இலக்கியம் என்பது ஓர் அறிவுச் செயல்பாடு என அவர் கற்பித்தார். இலக்கியத்தையும் அரசியலையும் இணைக்கும் ரசவாதத்தை நிகழ்த்திக் காட்டினார். சாதி, வர்க்கம், அதிகாரம், சூழலியல், சமூக மாற்றம் ஆகியவை குறித்த மாற்றுப் பார்வை இலக்கியத்தின் செல்நெறியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, அதற்கான வாசிப்பு முறையையும், மனத் தயாரிப்பையும் வாசகர்களிடையே ஊக்குவித்தார். வெறுமனே புதுப்புது பெயர்களைக் குவித்து மிரட்டாமல், இலக்கியத்தின் இலக்கு என்பது அதிகார எதிர்ப்பாகவும், மனிதகுல விடுதலையாகவும் இருக்க வேண்டும் எனக் கற்பித்தார். தவிரவும், இலக்கியம் எவ்வாறு சமூகச் சிக்கல்களை அணுக வேண்டும் என்பதையும் பயிற்றுவித்தார்.
இலக்கியம் மட்டுமல்லாமல், நாட்டுப்புற இசை, ராக், ஜாஸ் போன்றவை குறித்தும் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தியாவின் செவ்வியல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உலகத் திரைப்படங்கள் குறித்த அவரது ஞானமும் குறிப்பிடத்தக்கது.
தன்னைப் புதுப்பித்துக் கொள்வதில் எப்பொழுதும் கவனங்கொண்டிருந்தார். எனவேதான் சாத்தர் (Sartre) முதல் பெருஞ்சித்திரனார் வரை ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்வதில் சலிப்படையாத மனக்கட்டமைப்பு அவருக்கு வாய்த்துள்ளது. விளைவாக, புதிது புதிதாகத் தகவல்களை அவர் தமிழுக்கு வழங்கியவண்ணம் இருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் எஸ்.வி.ஆரின் இலக்கிய உலகை அணுக வேண்டும்.
"நான் கருத்தியல் சார்ந்து இயங்குபவன் என்றாலும் கூடப் படைப்பிலக்கியங்களின் மீதுதான் எனக்கு ஈடுபாடு அதிகம். உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றிப் படைப்பிலக்கியங்கள்தான் நுட்பமாக நமக்குச் சொல்கின்றன" என ஒரு நேர்காணலில் எஸ்.வி.ஆர். குறிப்பிட்டார். அந்த ஈடுபாட்டின் நீட்சியாகத்தான் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.
"மத்தாயும் மாக்ரபோலும்" எனும் தலைப்பிலான அவரது சிறுகதைத் தொகுப்பில் 10 சிறுகதைகள் உள்ளன. இதில் 1967-ஆம் ஆண்டில் இரண்டும், 1968-இல் ஒன்றும், 1976-இல் இரண்டும் என ஐந்து சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. மீதியுள்ள ஐந்து சிறுகதைகள் எழுதப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை. மொத்தமாக உள்ள பத்துச் சிறுகதைகள் 86 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுஜாதா, சிறுகதையின் நீளம் பற்றிக் குறிப்பிடுகையில், 'அது தோராயமாக 1,000 முதல் 10,000 சொற்களைக் கொண்டதாக இருக்கலாம்' எனக் குறிப்பிட்டார். ஆனால் இது கறாரான மதிப்பீடு அல்ல! சிறுகதையின் நீளத்தைக் காட்டிலும், அதன் செறிவுதான் முக்கியம் என்பது படைப்பாளிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை. அவ்வகையில் எஸ்.வி.ஆரின் முதல் கதை மட்டுமே 14 பக்கங்கள். எஞ்சியுள்ள மற்ற கதைகள் 10 பக்கங்களைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் "மத்தாயும் மாக்ரபோலும்" என்பதுதான் எஸ். வி. ஆரின் முதல் கதை. இத்தொகுப்பிலேயே 14 பக்கங்கள் கொண்ட நீளமான கதை இது. இக்கதை 1967-இல் 'புதிய தலைமுறை' இதழில் வெளிவந்தது. இது வெளிவந்த பொழுதே பரவலான பாராட்டைப் பெற்றதை நான் அறிவேன்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஹேம்லெட், மேக்பெத், ஒத்தெல்லோ, கிங் லியர் ஆகிய நான்கு துன்பியல் நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவற்றை ஆய்வு செய்த ஷேக்ஸ்பியரின் விமர்சகராகிய ஏ. சி. பிராட்லே (A. C. Bradley) ஒரு கருத்தை முன்வைக்கின்றார். புகழ்பெற்ற இந்த நான்கு துன்பியல் நாடகங்களின் தொடக்கக் காட்சி (Opening Scene) மிகவும் முக்கியமானது எனவும், நாடகத்தின் இறுதியில் நேரும் துன்பங்களுக்குப் பார்வையாளர்களை ஆயத்தப்படுத்துவதாக அது அமைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதை அடியொற்றி 'மத்தாயும் மாக்ரபோலும்' சிறுகதையின் தொடக்கமும் அமைந்திருப்பதை ஒப்பிட்டுக் காணலாம்.
"இன்னும் சரியாக மூன்றே நிமிஷம்... மைசூர் - ஊட்டி பஸ் புறப்பட்டேவிடும். போய்ச் சேர முடியுமா?" என்ற கதையின் தொடக்கம், கதையின் இறுதி குறித்த எதிர்பார்ப்பை வாசகர்களிடம் உருவாக்கிவிடுகிறது. மேலும் அதைத் தொடர்ந்து வரும் சித்தரிப்பும் நமது ஆவலைத் தூண்டிவிடுகிறது. இறுதியில் எதிர்பாராத திருப்பத்தோடு கதை முடிவடைகிறது. அத்தோடு சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாட்டையும் ஆரவாரமின்றிக் கதையின் ஊடாகச் சுட்டிக்காட்டுகிறார் கதாசிரியர்.
மார்க்சியத்தின் மிக முக்கியமானதோர் பங்களிப்பாகிய 'அந்நியமாதல்' குறித்து எஸ். வி. ஆர். தனது எழுத்துக்களில் மிக விரிவாக விளக்கப்படுத்தியுள்ளார். ஒருவர் தன்னுடைய உழைப்பு, படைப்பு, சமூகம், இயற்கை மற்றும் இறுதியில் தன்னிடமிருந்தே அந்நியமாகிவிடும் நிலையே அந்நியமாதல் (Alienation) என்பது பலரும் அறிந்த செய்திதான். இந்தப் பின்னணியில், கதையில் வரும் பாத்திரம் மத்தாயும் அப்படிப்பட்ட அந்நியமாதலுக்கு உள்ளாகிறான்.
"உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்" போல் மத்தாயும் பணக்காரனாக விரும்புகிறான். ஆனால் அப்படி ஆக முடிந்ததா? "மாடு போல் நாம் உழைத்ததற்குச் சர்ச் கோபுரத்தை விட உயரமாக நாம் உயர்ந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியதுண்டு" எனக் கதாசிரியர் எழுதும்போது, தனது உழைப்பிலிருந்து மத்தாய் எந்த அளவுக்கு அந்நியமாகிவிட்டான் என்பது எவ்வித பிரச்சாரத் தொனியுமின்றி கலை நுட்பத்தோடு, மிக இயல்பாக வெளிப்படுத்தப்படுகிறது.
ஆனால் இத்தகைய செய்நேர்த்தி "காலம் கெட்டுப் போச்சு" எனும் (1967) அடுத்த கதையில் பிறழ்ந்துவிடுகிறது. காளிங்கராய சேர்வராயர் எனும் நிலப்பிரபு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தன் வாழ்வில் ஏற்பட்ட சொகுசான மாற்றங்களை வசதியாக மறந்துவிடுகிறார். அதேபோல் அந்த ஊரில் நடுத்தரப் படித்தவர்கள் குடியிருக்க அழகான வீடுகள், உயர்நிலைப் பள்ளி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், மின்சாரம், மின்விளக்குகள், வானொலிப் பெட்டிகள் எனப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதையும் கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
"ஆனால், ஒரே ஒரு இடம் மட்டும், இந்த மாற்றங்களுக்கெல்லாம் தலைவணங்காது, ஆடாது அசையாது அப்படியே இருக்கிறது. புகை மூட்டங்களால் எப்போதும் மறைக்கப்பட்டு, வெற்றிலைக் காவியேறிய பற்களைப் போல், மேலே பூசப்பட்ட சுண்ணாம்பு கரைந்தும் இடிந்தும் காணப்படும் சுவர்கள், அதைத் தாங்கும் ஓலைக் கூரைகள் இவைகளைக் கொண்ட சக்கிலியவளவு -- தாழ்த்தப்பட்ட, சபிக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் குடியமைப்பு --- அந்தச் 'சேரி' அப்படியே இருக்கிறது!" எனும் அவலநிலை கதையில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், நிலப்பிரபு சொல்கிறார்: "ஜனங்க ரொம்பக் கெட்டுப்போயிட்டாங்க. பாருங்க, முந்தியெல்லாம் ஏதோ இருக்கிறதைக் குடிச்சுட்டுக் கம்முனு சோலியைப் பாப்பானுக; இப்பப் பாருங்க, சினிமாங்கறாங்க, பீடி சிகரெட் கேக்கறானுங்க, மீட்டிங் போட்டு பொழப்பத்த பசங்க பேசினா அங்க போய் நிக்கறானுங்க; சங்கஞ்சேக்கரானுங்க. எல்லாம் ஒதச்சாத்தான் புத்தி வரும். என்ன சொல்றீங்க?" என்பார். துரைசாமி என்ன சொல்வார்? "ஆமாங்க, காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு" என்பதோடு கதை முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் --- இந்தத் துரைசாமியென்ன, எத்தனையோ துரைசாமிகள், வாயில்லாப் பூச்சிகளாக, ஆமாஞ்சாமிகளாக, "காலம் கெட்டுப்போச்சு" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது வாயும் கையும் வேலை செய்யும்போதுதான் காலம் நல்லாப்போகும் -- எனும் பிரச்சாரத்தோடு கதை முடிகிறது. இதனால் பிரச்சாரம் தலைதூக்கி, கலை நுட்பத்தில் சற்றே சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது.
"கலியுகம் பாருங்கோ" (1968) சிறுகதையும் முதலாளிகளுக்கும், "பெரியவர்" (பெரியவா) எனும் சமயத் தலைவருக்கும் இடையேயுள்ள கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
அதேபோல், "குளம்" சிறுகதை நர்சிசிஸ்டிக் (NARCISSISTIC) மனப்பான்மையின் உளவியல் கூறுகளை வெளிப்படுத்துகிறது. தன்னைத்தானே மோகிக்கும் போக்குடையவர்கள், முற்றிலும் தன்னலம் மிக்கவர்களாகவும், மற்றவர்களின் உணர்வுகள் குறித்த அக்கறையற்றவர்களாகவும், பாராட்டுக்கு ஏங்குபவர்களாகவும், தன்னைப் பற்றிய பிம்பத்திற்கே முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும், தங்களது அந்தஸ்து மற்றும் இருத்தல் குறித்தே சதாசர்வ காலமும் எண்ணிக் கிடப்பவர்களாகவும், 'நானே உயர்ந்தவன், நானே சகலமும்' எனும் மனநோய் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இந்த உளவியல் போக்கை மெல்லிய எள்ளலுடன் இக்கதை வெளிப்படுத்துவதோடு, இத்தகைய போக்கு அவர்களது வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணமாக அமையும் என்பதையும் அரவமின்றிச் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தின் பல துறைகளிலும் இத்தகைய 'நார்சிஸ்டுகள்' உள்ளனர் என்பதையும் இக்கதையின் வழியே நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
அதேசமயம் 'சாலைகள்', 'கடற்கரை', 'முகமூடி' போன்ற சிறுகதைகளில் மாய யதார்த்தம் (Magical Realism) எனும் கூறு பின்னிப் பிணைந்து வருகிறது. யதார்த்த மொழியின் போதாமையை ஈடுகட்ட இத்தகைய உத்தி பயன்படுத்தப்படுவதை உணர முடிகிறது. கதையிலுள்ள அக முரண்பாட்டை, தார்மீகச் சிக்கலைக் கதாசிரியர் புறவயமாக வெளிப்படுத்த இத்தகைய அணுகுமுறை உதவிகரமாக இருக்கிறது. இந்தக் கதைகள் 1976-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. மாய யதார்த்தம் 1940 - 1950-களிலேயே லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஒரு கோட்பாடாகவும், படைப்பு முறையாகவும் வந்துவிட்டதை இத்தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மாய யதார்த்தம் எனும் உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய 'நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solitude) ஆங்கிலத்தில் 1970-இல் வெளிவந்துவிட்டது. எனவே இத்தகைய படைப்பு அணுகுமுறை குறித்த புரிதல் எஸ். வி. ஆர். அவர்களுக்கு வெகு இயல்பாக வந்திருக்கும் சாத்தியக்கூறைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளில் மேலே குறிப்பிட்ட இரண்டு கதைகள் (சாலைகள் / கடற்கரை) கதை மாந்தரே கதை சொல்லும் 'நனவோடை' (Stream of Consciousness) முறையில் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கலை உத்திகளை "அகலாது அணுகாது தீக்காய்வார்போல" தனது கட்டுக்குள் கதாசிரியர் வைத்திருப்பதோடு, கதையின் மையத்திற்கு மேலும் செறிவூட்டும் வகையிலும் கையாள்கிறார்.
குறிப்பாக "சாலைகள்" சிறுகதை, "நமது மக்களின் மந்தைத்தனத்தை, அறியாமையை, அதைச் சாதகமாக்கிக்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் போக்கினைச் சூசகமாகச் சித்தரித்துக் காட்டும் கதை" என்ற முகமனுடன் மீண்டும் வெளியானதை எஸ். வி. ஆரின் முன்னுரை சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல் "கடற்கரை" சிறுகதை சாரத்தில் 'நெருக்கடி நிலையை' உள்ளீடாகக் கொண்டுள்ளதை எளிதில் உணர முடியும். இக்கதை நெருக்கடி நிலைக் காலகட்டமான 1976-இல் எழுதப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.
"வழுக்குமரம்" சிறுகதை, ஒரு கழைக்கூத்தாடியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கு வரக்கூடிய சில சொற்றொடர்கள் குறியீடாகச் சமகாலத் தமிழக அரசியலைப் பேசுவதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
"சொல்லப்போனால் ஒரு கழைக்கூத்தாடிக்கு இவ்வளவு வசதியும் முக்கியத்துவமும் தரப்படுவது ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அவன் சாதாரணக் கழைக்கூத்தாடி அல்ல... அவனை 'மாமா' என்று குழந்தைகளும், 'அண்ணே' என்று இளம் வயதினரும், 'மகனே' என்று வயதில் மூத்தவர்களும் அவன் நெஞ்சம் நிறையும்படி கத்துவார்கள்... ஒரு நாள் நாட்டின் தலைவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. 'நீ இந்தப் போட்டியில் (வழுக்கு மரம்) வெற்றி பெற்றால் எனக்கும் என் ஆள்களுக்கும் உதவியாக இருக்கும். அது எப்படி, எந்த வகையில் என்பதைப் பிறகு சொல்கிறேன். நீ கட்டாயம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்'... எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது அவனுக்குத் தெரியாது... அவன் மீது (அவன் காசு மீது) நம்பிக்கை வைத்திருந்த ஊடகங்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் நாட்டுத் தலைவர் பதவியைக் கூட அவனால் வகிக்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு ஊடகங்கள் சென்றன..." பிறகு அவன் அந்தப் போட்டியில் எதிர்பாராத வகையில் மரணமடைகிறான்.
இச்செய்தி நாட்டுத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. "அப்போது அவர் ஆப்பிரிக்காவில் உள்ள ஜூலு இனத்தவரின் ஆடைகளை அணிந்துகொண்டு நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அந்தச் செய்தி அவரைச் சற்றுத் திடுக்கிட வைத்தாலும், அந்த உயரமான வழுக்கு மரத்தில் ஏறக்கூடிய இன்னொருவனைத் தயார்படுத்துவது அவ்வளவு கடினமா என்று தன் பிம்பத்திடம் கூறிக்கொண்டிருக்கும்போது வழுக்கைத் தலையர் ஒருவர் அவரது அறையில் நுழைவதைக் அந்தக் கண்ணாடி காட்டியது" எனக் கதை முடிகிறது. வழுக்குமரம் எனும் தலைப்பே அரசியல் பற்றிய குறியீடு என்பதை எவர் ஒருவரும் புரிந்துகொள்ள முடியும். ஊடகங்களையும், பிம்ப அரசியலையும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் இதன் குரல் ஈர்க்கத்தக்க வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
"கைமுறுக்கு" மற்றும் "ஆட்டுநர்" கதைகளும் முழுக்க முழுக்க அரசியல் உள்ளடக்கம் கொண்ட கதைகள்தான். அதில் உள்ளுறையாக இருப்பது புது தில்லி அரசியலே!
"அவர்கள் இரட்டையர்கள். எனவே அவர்களில் ஒருவரிடம் பேசினாலே போதும்; மற்றவரின் ஆமோதிப்புக் கிடைப்பது உறுதி... நாங்கள் எங்கள் சுய பலத்தோடு அரசு கட்டிலிலே ஏறுவோம். அதுவரை எவரையும் ஆதரிப்போம் அல்லது எதிர்ப்போம். அதுதான் எங்கள் கொள்கை" (கைமுறுக்கு கதை).
அடுத்து "ஆட்டுநர்" சிறுகதை. யார் அந்த ஆட்டுநர்? அவர் "கி.பி. 963-இல் இருந்த ஏதோ ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றதாகக் கூறுவார்கள்... (ஆட்டுநர் என்பதற்கு) தன் அசுர பலத்தைக் கொண்டு எவரை வேண்டுமானாலும் ஆட்டி வைக்க முடியும் என்பது இன்னோர் அர்த்தம்... முதலில் நீயும் உன் ஆடுகளும் கத்த வேண்டியது இதுதான்: 'ஒரே ஆட்டு மந்தை, ஒரே மேய்ச்சல் நிலம், ஒரே ஆட்டுநர்.' தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த வித்தைக்காரனிடம், 'இனி நீ போகலாம். என்ன செய்யப் போகிறாய் என்பதை என் முட்டைக்கண்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கும்' என்று கூறி அவனை அறையிலிருந்து வெளியேற்றினார் ஆட்டுநர்." எனக் கதை முடியும் பொழுது, சமகாலப் புது தில்லி அரசியலை வாசகர்களுக்கு உறுதியாக நினைவுறுத்தும்.
எஸ்.வி.ஆரின் சிறுகதைகளில், உரையாடல் மொழி என்பது அசல் கொங்கு மண்டலத்தின் மொழியாக உள்ளது. கதாசிரியர் மேற்கு மண்டலத்தின் மைந்தராக இருப்பதால், உரையாடல்கள் சிறிதளவும் செயற்கைப் பூச்சின்றி மண்ணின் மணத்தோடு வெகு இயல்பாக வெளிப்படுகின்றன. தவிரவும் அந்த மொழி, உரையாடல்களுக்குக் கூடுதல் கனத்தையும் நெருக்கத்தையும் தருகிறது.
இச்சிறுகதைத் தொகுப்பில் பெண் பாத்திரங்களே இல்லை என்பது ஒரு வியப்பான செய்தி.
"சிறுகதை என்பது ஒரே அமர்வில் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்" என எட்கர் ஆலன் போ குறிப்பிட்டார். ஆனால் எஸ்.வி.ஆரின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள 10 கதைகளும் ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் வாசிப்புத் திறன் (Readability) மிக்கதாக அமைந்திருப்பது வெகு சிறப்பு.
மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளராக மட்டும் பொதுவாக அறியப்படும் எஸ்.வி.ஆரின் படைப்பு முகத்தை இக்கதைத் தொகுப்புத் தெளிவாக இனங்காட்டுகிறது. இலக்கியம் என்பது வெறும் அழகியல் மட்டுமல்ல; அது அரசியல், விடுதலை, அதிகார எதிர்ப்பு, மானுட அறம் போன்றவற்றோடு தொடர்புடையது என்பதை இச்சிறுகதைகளில் உறைந்திருக்கும் மௌனம் நமக்கு உணர்த்துகிறது. கதை முடிவுற்றாலும் அந்தப் படைப்புகள், தொடர்ந்து நம்மோடு உரையாடுகின்றன. அதனால் "தேவதூதர்கள் நுழையத் துணியாத இடங்களில்" பிரமீதியஸ் போல எஸ்.வி.ஆர். நுழையலாம்; இலக்கிய நெருப்பைத் தமிழில் பற்ற வைக்கலாம்.
- கண.குறிஞ்சி