அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் மூலமாக வந்திருக்கும் ”குடம்பி” என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் நிழலி. பெண்ணின் மன உணர்வுகளை இருபத்தி நான்கு கதைகளுடன் திரட்டி தந்திருக்கும் படைப்பு. தனிமை, காமம், காதல், ஆண் பென் உறவுகள், விரக்த்தி, முதுமையின் வாதை, வெள்ளந்தி மனிதர்களின் ஆழ்மன உணர்வுகள், மூன்றாம் பாலினத்தவரின் மனவெழுச்சிகள், நம்பிக்கை மோசடி, நிலம் சார்ந்து வாழ்பவர்களின் நகர வாழ்க்கை, சமூக ஏற்றத்தாழ்வு படிநிலைகள் போன்றவற்றினை தனது கதைகளில் பேசுவதோடு, தன்னளவில் நிழலி தன் எழுத்துக்களால் ஒரு படைப்பாளியின் பரிசோதனை முயற்சியாக அவற்றினை கேள்விகளுக்குள் உட்படுத்திப் பார்த்திருக்கிறார்.

nizhali book kudambiஆண்களின் பார்வையில் கவர்ச்சியாக பெண்களால் பாவிக்கப்படும் மார்பகங்கள் பெண்களுக்கு எப்படியாக இருக்கும் என்பதை இவரின் கதைகளின் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தை ஈன்று கொடுத்த பெண்ணின் மார்பில் பால் சுரக்காத மார்பகங்கள் அவளுக்கு வாதைதான் என்பதை பெண்மையினை எவரொருவராலும் சுமந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை இவரின் நிழலி பேசியிருக்கிறார். நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை சேகரித்து வைத்திருக்கும் குதிர்களைப்போல பெண்ணின் மார்பகங்கள் அவளது சந்ததிகளுக்கான உயிர்பசையினை திரட்டு என்பதை பெண்மையினை சுமந்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களும் புரிந்து கொள்ள முடியும். ”மார்பகம் பேசட்டும், நாங்கேலி, வலியின் பேரின்பம்” போன்ற கதைகள் மகாஸ்வேதா தேவி எழுதிய முலைக் கதைகளை நமது கண்களுக்கு முன்னால் வைக்கின்றன. தமிழ் பரப்பில் இதைப் போன்ற படைப்புகளை அதிகம் முன்வைக்க வேண்டிய அவசியமும் தேவையும் இன்றைக்கு இருப்பதை நிழலி செய்து கொண்டிருப்பது காலத்தின் தேவையேயாகும்.

மூன்றாம் பாலினத்தவரின் வாதைகளைப்பற்றி பேசும் கதைகள் இந்த தொகுப்பில் அதிகம் காண கிடைக்கின்றன. அவற்றில் வரும் புவனிகா, பிறை, குடம்பி, மித்ரன் என யாவரும் உடலரசியலை முன்வைத்து பேசும் எழுத்துக்களாக இருக்கின்றன. பெண்மையினை உணரும் தருணத்திலேயே ஒரு பெண் ஆண்களால் பிரயோகிக்கப்படும் வக்கிரங்களையும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வண்புணர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதை ஒரு பெண்ணாக நேர் நின்று பேசவதாக நிழலியின் படைப்புகள் இருக்கின்றன. நிறுவனமயமாக்கப்பட்ட குடும்பம் என்ற கட்டமைப்பிலிருந்து பலம்பெற்ற உயிரினம் பலகீனமான இரண்டாம் பாலினத்தவரை பாலியல் சுரண்டலை நிகழ்த்திக் கொண்டிருப்பதை கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கிறது குடம்பி என்ற சிறுகதை தொகுப்பு. பசியாற தின்னுவதற்கோ அல்லது மிடறுகளாக விழுங்குவதற்கோ குணம் கொண்டவர்கள் கொடுத்தால் போதும் என்ற நிலையில் இல்லாமல், பாலூற்று எடுக்காத மார்பகங்களை வைத்து பசியாற்ற நினைக்கும் பெண்ணின் பாத்திரம் மகதியில் பார்க்க முடிகிறது. அழுகின்ற குழந்தைகள் இவரின் வரிகளில் வழிந்தோடுகையில் வாசித்து செல்லும் எந்த பாலினத்தவரின் மாரிலும் பாலூற்று எடுக்கும் என்பது தின்னமே.

”தொலைந்து போனவள்” என்பதாக வரும் கதையில் நிதமும் கணவனிடம் உதைபட்டுக் கிடக்கும் பெண், பிள்ளைகளுக்காக அதனை பொறுத்துக் கிடக்கிறாள். பின்னாலில் பிள்ளைகள் அவளை கையறு நிலையில் தன்னை கைவிட்ட பொழுதில்தான் தனது வலியினை உணருகிறாள் என்பதை எளிதாக கடந்து போய்விட முடியவில்லை. தெம்மாங்கு பாடித் திரியும் சீரங்காயி கிழவி, திண்ணையில் மரணித்துக் கிடக்கும் திலகா, கர்பத்தரிசியாக வரும் மேகா, அடுத்தவர்களின் பொருளாகி போவதைப் பற்றி பேசும் இன்னாருடையவள், பூர்வி போன்ற கதைகள் ஏமாற்றம், விரக்த்தி, தனிமை போன்றவற்றைப் பற்றி பேசுகின்றன.

அடுப்பங்கறையின் வெப்பம் தன்மீது படாமல் விடியும் ஒருநாளுக்காக ஏங்கும் நிழலியின் கனவு மெய்பித்துதரும் என்ற நம்பிக்கையில் இந்த தொகுப்பினை கொண்டு வந்திருக்கிறார். குடம்பி கூடுடைத்து வெளியேறும் ஒரு மெல்லிய உயிரினைப்போலவே இவரின் படைப்பும் தமிழ் வாசகப்பரப்பில் ஒரு ஆண் பெண் மனத்தளங்களில் ஒரு மெல்லிய சமத்துவ பாரலை சுழற்றியடிக்கும் என்றே நம்புகிறேன்.

- க.மூர்த்தி

Pin It