கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்:
“செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்”.
யார் இந்தச் சேதுப்பிள்ளை?
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேதுப்பிள்ளை. சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளையை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.
1896ஆம் அண்டு திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் மார்ச் 2ஆம் தேதி பிறந்தார் இரா.பி.சேதுப்பிள்ளை.
இவரின் அன்னையார் பெயர் சொர்ணம்மாள். தந்தையார் பிறவிப்பெருமாள் பிள்ளை.
ஐந்து வயதுக்குமேல், அக்கால வழக்கப்படி இவரின் கல்வி திண்ணைப் பள்ளியில் இருந்தே தொடங்கியது.
அதைச் தொடர்ந்து இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத்தின் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.
அதன்பின் பானையங்கோட்டை தூயசேவியர் உயர் நிலைப்பள்ளியில் இவரின் தொடக்கக் கல்வி அமைந்தது.
நெல்லை இந்து கல்லூரியில் இவர் இடைநிலைத் (இன்டர்மீடியட்) தேர்வில் தேறினார்.
இளங்கலைப் பட்டத்தைச் சென்னை பச்சயைப்பன் கல்லூரியில் பயின்று பெற்றார்.
அன்று இவர் படித்த தூயசேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் சுப்பிரமணியமும், இந்து கல்லூரி பேராசிரியர் சிவராமனும் இவரின் தமிழார்வம் வளரத் தூண்டுகோலாக இருந்தனர்.
தொடர்ந்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் தேர்வில் தேறினார்.
1923ம் ஆண்டு நெல்லையில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது இவர் நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அதிலும் பணியாற்றியுள்ளார்.
ஆயினும் வழக்கறிஞர் தொழிலில் நாட்டமில்லா இவர் தமிழை ஆய்வு செய்யவும், அதுகுறிந்து இலக்கிய மேடைகளில் பேசவும் தொடங்கினார்.
இவர் படித்த பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த இவரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக அமர்த்தியது.
அப்பல்கலைக் கழகத்தில் அறிஞர் பெருமக்களான விபுலாநந்த அடிகளார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் ஆறு ஆண்டுகள் பணி புரிந்து தன் தமிழ் அறிவை, புலமையை வளர்த்தெடுத்தார்.
1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பொறுப்பேற்ற சேதுப்பிள்ளை அங்கு ஆய்வுத்துறைத் தலைவராக இருந்து போராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கீழ் பணியாற்றினார்.
வையாபுரியார் தலைமையில் தொகுக்கப்பட்டுவந்த தமிழ்ப் பேரகராதிப் பணியில் பெரிதும் பங்காற்றினார் இவர். வையாபுரியாரின் ஓய்வுக்குப்பின்னர், அப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயலாற்றியவர் சேதுப்பிள்ளை.
இவரின் முயற்சியினால் ‘திராவிடப் பொதுச் சொற்கள்’ - ‘திராவிடப் பொதுப் பழமொழிகள்’ ஆகிய இரு நூல்களை அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இவர் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் இவர் தன் தமிழ்ப் பேச்சு நடையால் மாணவர்களை ஈர்த்தார். இளங்கலை மாணவர்களிடம், தமிழ் மொழி நூலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆற்றலுடன், மாணவர்களின் அறிவாற்றலைத் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் வளர்த்தெடுத்தார்.
குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி குறித்த கல்வியைச் செழுமைப்படுத்தச் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம்’. தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’.
இவரால் எழுதப் பெற்ற நூல்கள் ஏறத்தாழ 34 இதில் வாழ்க்கை வரலாற்று நூல்கள் 3.
இவரால் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் 4.
வானொலியில் ஆற்றிய சொற் பொழிவுகளின் பல, இவரின் நூல் தொகுப்புகளாயின.
பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஆற்றிய இவரின் உரைகளின் தொகுப்புகளும் நூல் வடிவங்கள் பெற்றுள்ளன.
சிலப்பதிகார நூல்நயம், தமிழின்பம், தமிழ் வீரம், தமிழ் விருந்து, வேலின் வெற்றி, வேலும் வில்லும், வழி வழி வள்ளுவர், தமிழ்க் கவிதைக் களஞ்சியம், செஞ்சொற்கவிக்கோவை, ஆற்றங்கரையினிலே ஆகிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இதில் ‘தமிழின்பம்’ என்ற நூல், மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பெற்றுள்ளன.
அடுக்குமொழி, எதுகை - மேனை, உவமைநயம், இலக்கியத் தொடருடன் அமையும் இவரின் பேச்சால் சொக்கிப்போனவர்கள் ஏராளம்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் கம்பராமாயணம் குறித்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற சொற்பொழிவுகளில் சேதுப்பிள்ளையில் சில சொற்பொழிவுகள் குறித்து அப்போது தமிழறிஞர்கள் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
அதன் தாக்கம்தான் சென்னையில் கம்பன் கழகம் உருவானது.
சென்னை கோகலே மன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து ஆற்றிய உரையின் மாட்சியை, இவரின் சிலப்பதிகார நூல்நயம் என்ற நூலில் காணலாம்.
சென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிக்கத்தக்க செய்தி.
இவரின் பேச்சாற்றல் சொல்லாற்றலைக் கண்ட தருமபுர ஆதினம் இவருக்குச் ‘செல்லின் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கியது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றிய சேதுப்பிள்ளைக்கு ‘முனைவர்’ பட்டம் வழங்கியதோடு, வெள்ளி விழாவும் எடுத்து, கூடுதலாக ‘இலக்கியப் பேரறிஞர்’ என்ற பட்டத்தையும் அப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
‘‘இரா.பி.சேதுப்பிள்ளையின் மொழிநடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடைபோன்றது’’ என்று வியந்து கூறுகிறார் சோமலே.
இப்படிப்பட்ட அறிஞர் பெருந்தகை, சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் 1961 ஏப்ரல் 25ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அப்போது அவருக்கு வயது 65தான்.