“ஆண் வழி சமுதாயம், அதில் தொக்கி நிற்கும் மதிப்பீடுகள் இவைதான் பெண்களுக்குக் கொடுமை இழைத்திருப்பதாக நான் நம்புகிறேன். பெண்ணின் உடலும் அதை ஒட்டிய தேர்வுகளும் பெண்ணின் வசமில்லாமல் இருப்பதுதான் ஆண்வழிச் சமுதாயம் இழைத்திருக்கும் குரூரம் என்று நினைக்கிறேன்.” - அம்பை
பதின்ம வயதில் அரும்பும் ஆண் பெண் நேசம், பாசமா காதலா என்பதான வளர்ச்சிப் படிநிலைகளைக் கூறும் சிறுகதை கவிதா சொர்ணவல்லி எழுதிய “நான் அவன் அது...” தூரத்து உறவு என்ற பாசப் பிணைப்பில் மீனாவும் ரவியும் நெல்லையில் சேரன்மகாதேவி ஊரில் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. பாச உறவு தாண்டிய பிரியம் மீனாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வைக்கிறது. ரவியின் நிராகரிப்பு மீனாவிற்குப் பழசை மறக்கும் இன்னொரு காதலுக்கு நாளடைவில் இட்டுச் செல்லும் நிலையில், மீனா கேட்ட கேள்வியின் தாக்கத்திலேயே ரவி நிலைகொண்டு நிற்கிறான். உளச் சிக்கல்கள், பண்பாட்டுச் செய்திகள் விரவி நிற்கும் பெண்ணியக் கதை.
இளம் வயது நினைவுகளை அசைபோடுவது எல்லோருக்கும் இனிமையான தருணங்கள்தான். அதிலும் அன்பு, காதல் இவற்றிற்கு இடையே தோன்றும் ரெண்டுங்கெட்டான் உணர்வுகள் பதின்மப் பருவ ஏக்கங்களையும் தாண்டிய இனம் புரியாத ஒன்றாகவேநிலைபெற்றுநிற்கிறது. உறவில்லாவிடினும் உறவுமுறைப்பெயர்களுடன் அழைப்பதில் ஊரே ஒன்று கூடி நிற்கும் தமிழ்ப் பண்பாடு தமிழ்நாட்டில் நிலவுகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இத்தகைய பந்தம் இன்றளவும் நீடித்து நிற்கிறது. சாதி வேறுபாடுகளையும் தாண்டிய ஒன்றாக அமைந்த காலமாகவும் சென்ற நூற்றாண்டு வரை இருந்தது. தூரத்துச் சொந்தமான அண்ணன் தங்கை முறை உறவும்கூட, சூழல் காரணமாக பொறாமை, அன்பு, காதல், திருமணம் உள்ளிட்ட கூறுகளுடன் இணைந்து பண்பாட்டுக் களத்தில் ‘கலாச்சார அதிர்ச்சி’ (culture shock) எழுப்புகிறது. சமூக உளவியல் காரணங்களுக்காக தனது பதின்ம பருவப் பிரியம் நிறைவேறாத நிலையில் நாயகி தெளிவாக முடிவெடுத்து வேறு காதலில் ஈடுபாடு கொண்டு கல்யாணத்தை நோக்கிச்செல்கிறாள். ஆனால் நாயகன் அவளைப் போன்ற இன்னொரு பெண்ணை எதிர்நோக்கி குழப்பத்தில் கருத்துமுதல் வாதியாகவே நிற்கிறான். இதுதான் கவிதா சொர்ணவல்லி, 2014 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் எழுதிய “நான் அவன் அது...” சிறுகதையின் கரு ஆகும்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கவிதா சொர்ணவல்லி; தற்போது வசிப்பது சென்னையில். பத்தாண்டு களுக்கும் மேலாக பெண்கள் அகமனவுலகு குறித்த இலக்கியப் படைப்புகளுடன் அறியப்படும் எழுத்தாளர் ஆவார்; செய்தி ஊடகத் துறையிலும் பங்களிப்பைச் செய்து வருகிறார். தலித்திய இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.
கதையில் பாச உறவு
தொலைக்காட்சியில் சேனல்களைத் திருப்பிக் கொண்டிருந்த மீனா குறிப்பிட்ட பாடல் இடம் பெற்ற நிலையில் அதுகுறித்து அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அசை போட்டபடியே, இளம் பருவ வாழ்க்கைக்குள் நுழைகிறாள். அந்தப் பாட்டு அவளுக்குப் பிரியமான ரவி அண்ணன் ரசிப்பது.
“அண்ணன் தான் அடிக்கடி சொல்வான் என்னிடம். ‘உன் ஞாபகம் வந்தா நான் இந்தப் பாட்ட பாத்துப்பேன் மீனா. அச்சு அசப்பில ரேவதி உன்ன மாதிரியே இருப்பா!’ என்று.
“ஆமால. ஒரு கேசட் முழுக்க இந்த பாட்டா தான் பதிஞ்சு வெச்சுருக்கான். அடிக்கடி வீடியோல போட்டுப் பாத்துக்குவான்!” என்று பெரியம்மாவும் சேர்ந்து சொல்லும் போது ஒரு மாதிரி வெட்கம் முகம் முழுவதும் பரவி ஓடும்.” (பக். 616, ‘நான் அவன் அது...’, மீதமிருக்கும் சொற்கள்) என்பதில் குடும்பத்திலும் ரவி மீனா நட்பிற்கான அங்கீகாரம் வெளிப்படுகிறது. ‘வயதுக்கு வந்த பின் என் ஆளுகைக்குள் பல்வேறு சட்டத்திட்டங்களுடன் என் குடும்பத்தாரால் நுழையவிடப்பட்ட ஒரே ஒரு ஆண் மகன்’ என்ற வரிகளில் குடும்பத்தாரின் நன்மதிப்புக்கு உகந்தவன் என்ற தெளிவு கிடைக்கிறது.
பெண்ணியவாதி சித்தி
மீனாவின் ஆச்சி அவளது சித்தியுடன் அதிகம் பேசிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கக் காரணம், கல்லூரி செல்லும் சித்தியின் ஜீன்ஸ் டிரஸ்... ‘கல்லூரி ஆண் தோழர்களை வீட்டிற்கு அழைத்து வந்து தொழுவத்திலிருந்த பசுமாட்டிடமிருந்து சூடாகப் பால் கறந்து டீ போட்டுக் கொடுத்து பார்ப்பவர்களுக்கு மாரடைப்பை வரவழைப்பாள்.’
‘போராட்டக் குணம் மிக்க சித்தியின் ஃபெமினிச’ ஈடுபாடு மீனாவிற்குப் பிடிக்கிறது. அம்மாவிற்கும் சித்தி பிரியமானவள். உளுந்துச்சோறு, பூண்டுக் கஞ்சி செய்து மீனாவிற்கு ஊட்டுபவள்; மீனா அழ அழ, பச்சை முட்டையை அவள் வாயில் ஊற்றிக் ‘கொடுமைப்படுத்துபவள்.’ -இது மீனாவின் பார்வை வெளிப்பாடு.
குடும்ப உறவுக்குள் வெளியார் வரக் கட்டுப்பாடு
ஆண்கள் வெகு எளிதில் பெண்களுடன் பழக அனுமதிக்காத இறுக்கமான சமூகமாக கிராமப்புறக் குடும்பமுறை அமைந்துள்ளது. சித்தியைப் பார்க்க வந்த ரவிஅண்ணனை ‘தார்சா’விலே (வீட்டின் நுழைவு அறை) நிறுத்துகிறாள் அம்மாச்சி.
அம்மாவிடம் சித்தி ரவியை இன்னார் என்று அறிமுகப்படுத்தியவுடன், “அட, வேலு மச்சாவி மவனா இது! இத்தன வளந்துட்டானா?” என்பதான கேள்விகள், நெகிழ்தல், குலாவல்களுடன் அம்மா ரவியை உள்ளே கூப்பிடுகிறாள். பட்டாசாலை தார்சாவிற்கும் சமையலறைக்கும் இடையிலான வீட்டார் புழங்கும் இடம் (Living Room).
பதின்மப் பருவப் பிரியம்
‘வளத்தியாக லேசான அழகாக பெண்மை யுடனும் சிரித்தால் தெரியும் தெத்துப் பல்லுடனும் தோன்றும்’ ரவி, தனது சித்திக்கு எழுதும் கடிதங்களில் இறுதியாக ‘மீனாவைக் கேட்டதாகச் சொல்லு சித்தி’ என்று எழுதுவான். இந்தக் கடைசி வரிக்காகவே காத்திருக்கும் மீனா இந்த “எட்டாம் வகுப்புப் பிரியத்துக்கு எல்லாம் காதல் என்றோ, அன்பு என்றோ, அண்ணன் தங்கை பாசம் என்றோ பேர் வைக்க விரும்பவில்லை நான்... அது ஒரு பிரியம். பெயரில்லா, பெயரற்ற பிரியம்” என்று கூறுகிறாள்.
அரிசி பருப்பு திருடி, தேங்காய் சிரட்டையில் கூட்டாஞ்சோறு செய்யக் கற்றுக் கொடுத்தவன், ‘பூவரசம் பீப்பீ’ ஊதக் கற்றுக் கொடுத்தவன்; போட்டியில் தான் ஜெயித்த வண்ணவண்ணக் கோலிக்காய்களை டப்பாவில் அடைத்து வழங்கியவன், ஆயிரம் வருடப் பாம்பைக் காட்டுவதாக பயமுறுத்தி அழவைத்தவன் ரவி. அவன் மீதான பாசம் பிரிவின் போது அதிகரிக்கிறது. வீட்டுக்கு அவன் வரத்து குறைந்து தன் வயதொத்த சுபிதாவிடம் அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டபோது அவளது அளவற்ற கோபம் ‘பொசசிவ்னெஸ்’ ஆக மாறி, அவன் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்துத் துயரம் கொள்ள வைக்கிறது. பதினொன்றாம் வகுப்பு விடுமுறையில் சேரன்மகாதேவி வந்தபோது ‘பிளஸ் டூ’ முடித்து இன்ஜினியரிங் படிப்பிற்காக சென்னை செல்லவிருந்தவனிடம், “அண்ணா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உன்னோடவே வெச்சுக்கிறியா என்னைய?” என்று கேட்கிறாள். இதைக் கேட்டு அதிர்ந்து நின்றவன் அமைதியாக கிளம்பிச் சென்று விடுகிறான்.
சென்னையில் இருவரும் வெவ்வேறு இடங்களில் வசித்தாலும் ‘ரவியைப் பார்க்கத் தோன்றியது இல்லை’ என்று எண்ணும் மீனா எழும்பூர் ரயிலடியில் எதிர்பாராத விதமாக அவனைச் சந்தித்தபோது பரவசம், பயம், அழுகை, சந்தோஷம்... வார்த்தைகள் கிடைக்காமல் பட்ட நவரச உணர்வுகளில் தவிக்கிறாள்.
“எப்பலே கல்யாணம்?” என்று மீனாவிடம் ரவி கேட்கிறான். தனக்கு நடக்கவிருக்கும் காதல் கல்யாணத்திற்கு பெற்றோர் சம்மதித்துவிட்டதைக் கூறும் மீனா, “நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கலியா?” என்று கேட்டபோது “உன்னை மாதிரியே ஒரு பொண்ணை தேடிட்டு இருக்கேன்!” என்கிறான். ‘எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும் அதற்குப் பிறகு!’ என்று முடிகிறது கதை.
பெண்ணிய அணுகுமுறையின் பொருத்தப்பாடு
“பெண் -பெண்ணியம் -பெண் நிலை” என்ற தமது நூலில், பேராசிரியர் த.விஜயலட்சுமி பெண்ணாக்கல், புழங்குவெளிக் கட்டுப்பாடு, குணநலன்கள், அதிகாரப் பராமரிப்பு, சமூகநிலை/ உணர்வு நிலை, மதநிலை, ஆசிரிய அதிகாரம், பாத்திர வளர்ச்சிப்போக்கு, பெண் மொழி, பாலியல் வெளிப்பாடு, பெண் வெறுப்பு, கோயில் சடங்குகள் உடல் புனிதம் உள்ளிட்ட பெண்ணியக் கூறுகளை விவரித்துச் செல்கிறார். அந்த அடிப்படையில் இந்தச் சிறுகதையை, பெண்ணியப் பார்வையில் பொருத்திப் பார்க்க இயலும்:
பதின்மக் காதல் மட்டுமல்ல, இக்கதையின் கரு. ஆண் பெண் உளச்சிக்கல்கள் மாறுபாடானவை; சூழல் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சுற்றி வளைத்து தூரத்து உறவில் வரும் அண்ணன் தங்கை உறவு திருமண உறவாக வளர்ச்சியடைவது குறித்து சமூகத்தில் நிலவும் கருத்தின் மீது கேள்வி எழுப்புகிறார்
கவிதா சொர்ணவல்லி! இஸ்லாத்தில் இதற்குத் தடையில்லை. ரவி குடும்ப உறவு கெட்டு விடும்; அதைப் பாதுகாப்பதே முக்கியமானது என்று தீர்மானிக்கிறான். உணர்ச்சிப்பெருக்கில் சலனத்தை ஏற்படுத்தி மீனா பேசுவதை உளறல் என்று நினைத்து முதலில் திகைத்து நிற்கிறான். ஆனால் இறுதியில், மீனா போல் பெண் கிடைப்பதற்காகத் தவம் கிடக்கிறான். இது நிறைவேறும் என்ற உறுதியில்லை. ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் மீனா தல்
திருமணம் செய்து கொள்ளப் போவதை, தானே தீர்மானிக்கிறாள்.
தொகுப்புரை
- கிராமப்புற குடும்ப சமூக உறவுகளில் காணப்படும் பாசப் பிணைப்புகளின் காத்திரமான இடம் குறிப்பிடப் படுகிறது.
- குடும்பத்திற்குள் ஒருத்தி ஆனாலும் நடையுடை காரணமாகவும் ஆண் நண்பர்ர்களை வீட்டிற்கு அழைத்து வருவதாலும் சித்தி மீது மூத்த ஆச்சியின் சந்தேகக் கண்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன. மீனாவையும் மான் சித்தி மாற்றி விடுவாளோ என்ற அச்சவுணர்வு ஆச்சிக்கு ஏற்படுகிறது. உண்மையிலேயே சித்தியின் நட்பு மீனாவின் காதல் திருமணத்திற்கு இது பிற்காலத்தில் அடிகோலுவதாகக் கொள்ளலாம்.
- இளமைக் காலப் பாசத்தை பெயரில்லாப் பிரியம் ஆக மீனா கருதுகிறாள்.
- சுபிதாவிடம் ரவி பழகுவதால் மீனாவிற்கு ரவியை உடைமையாக்கிக் கொள்ளும் பொறாமை உணர்ச்சியான ‘பொசசிவ்னெஸ்’ ஏற்படுகிறது.
- தகுந்த துணை இல்லாமல் தனிமைப்படுத்தப் படுவதாக உணரும் மீனா, ரவியைப் பிரிய மனமில்லாமல் தன்னைக் கல்யாணம் பண்ணி, கூடவே வைத்துக் கொள்ளுமாறு உணர்ச்சி பெருக விளிக்கிறாள்.
- அதிர்ச்சியுற்ற ரவி இன்ஜினியரிங் மேல்படிப்புக்காக, மீனா வசிக்கும் சென்னை செல்கிறான். ஒரே ஊரில் வசித்தாலும் அவனைப் பார்க்க வேண்டும் என்பதே தோன்றவில்லை மீனாவிற்கு!
- எதிர்பாராத இருவர் சந்திப்பில் மீனா பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் பண்ணவிருப்பதை ரவி அறிகிறான்; அவனோ மீனாவைப் போல பெண் கிடைத்தால் திருமணம் பண்ணுவதாகக் கூறுகிறான். ஒன்றும் பேசாமல் பிரியும் அவர்கள் பின்னர் சந்திக்கவேயில்லை என்பதாக முடிகிறது.
- மலரலங்காரம், தாழம்பூச் சூடல், பருவப்பெண் தீட்டு, வழிபாடு ஆகியன பண்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் இடையிடையே உணர்த்தப் படுகின்றன.
துணைநூற்பட்டியல்
- விஜயலட்சுமி. த, பெண் பெண்ணியம் பெண் நிலை, காலசகம் வெளியீடு காலசகம் பதிப்பகம் 6/125-29 பாரத் நகர், வடிவீஸ்வரம், கோட்டார் அஞ்சல், நாகர்கோவில் -629002, முதல் பதிப்பு: நவம்பர் 2020.
- வெண்ணிலா அ. (தொ.ஆ.), மீதமிருக்கும் சொற்கள்: பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (1930-2014), அகநி வெளியீடு, 3 பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408, முதல் பதிப்பு: அக்டோபர் 2014.
- ஊடறு றஞ்சி (சுவிட்சர்லாந்து) & புதிய மாதவி (இந்தியா), சங்கமி: பெண்ணிய உரையாடல்கள், காவ்யா வெளியீடு 16 இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, முதல் பதிப்பு:2019.
- இரா.குமரகுருபரன், முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15.