முரண்களை முன்வைத்து கதைக் கூற்றை நகர்த்தி கதையின் உயிர் முடிச்சை கூட்டுதல், அனாசயமாக அள்ளித் தூவிய பகடி முதலியன சாம்ராஜுக்குக் கைவரப் பெற்றுவிட்டன. ஒரு சிறு நிகழ்வு மானுட வாழ்வின் வியத்தகு மாற்றங்களைச் செய்துவிடும் எனக் காட்டுவதிலும் வயலுக்கு வெளியே முளைக்கும் பயிரென வாழும் மனிதர்களை எழுதுவதிலும் பெருவிருப்பு கொண்டவரால் தான் இக்கதைகளை எழுத முடியும் என எண்ணும் படியான பத்துக் கதைகளைக் கொண்டது சாம்ராஜின் ‘பட்டாளத்து வீடு’

samraj bookஅண்ணாவின் ‘செவ்வாழை’ கதையை நினைவூட்டும் தொனியில் அமைந்துள்ள ‘நாயீஸ்வரன்’ கதை வர்க்க முரணையும் உழைப்புச் சுரண்டலையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது. வாழ்வதற்கு படிப்பு மட்டும் போதுமானதாக இருப்பதில்லை என்பதை நாயீஸ்வரன் உணர்த்தியிருக்கிறார். அதிகாரத்திற்கு அபகரிக்கும் குணம் இயல்பானது என்பதை பேசும் இக்கதை, மனிதனின் அற்பத் தனத்தையும் அதற்கு அவன் கற்பிக்கும் சந்தர்ப்பவாத நியாயத்தையும் சித்திரித்த விதத்தில் ‘நாயீஸ்வரன்’ தொகுப்பில் உள்ள மற்ற கதைகளிலிருந்து வேறுபட்டிருக்கிறது.

‘கைலாசபுரம்’ கதை எந்த வகையிலும் சேராமல் சிதறிக்கிடக்கும் வாழ்வை வாழ்ந்து பார்க்கும் மக்களைப் பாத்திரங்களாகக் கொண்டது. புரட்சிகர அமைப்புகளின் வேலைத்திட்டம் என்ன என்பதிலும் அவ்வமைப்பினர் யாருக்கான குரலின் பிரதிநிதிகள் என்பதையும் சித்திரித்த விதத்தில் இந்தக் கதையில் புலப்பாடு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. தன் இயல்பான போக்கில் வாழும் ‘மாயன்’ பாத்திரம் சிறப்பு.

இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதை ‘பார்வதிக்குட்டி’. வறுமையால் கேரள சினிமாவில் நடிகையாக முயன்று கொண்டிருக்கும் துணை நடிகை பார்வதிக்குட்டி. அவளுக்குள் திடீரென உருவான ஒரு வெறுப்புணர்வு முதன்மை நடிகையைப் பழிவாங்கத் துடித்து இறுதியில் தானே பலியாகும் துயரத்தைப் பேசுகிறது. இந்தக் கதை இந்திய ஒன்றியத்தின் சமூக அமைப்பில் ஒரு பெண் எடுக்கும் முடிவு துயரமாகும் பொழுது, அது அவளைக் கொண்டுபோய் சேர்க்கும் இடம் எதுவாக இருக்கும் என்பதைச் சித்திரித்த விதம் கதையின் கட்டமைப்பை வலுவாக்கியிருக்கிறது.

கிச்சன் இல்லாத வாழ்க்கை முறையை எழுதிப் பார்த்த கதை ‘இயற்கை’. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது இருக்கும் பிடிப்பைப் பற்றிக்கொண்டு வாழ்வதற்கான உலகைச் சித்தரிக்கும் இக்கதை, காமத்தையும் வரையறைக்குள் வைத்து வாழ்வதற்கான எத்தனிப்பைச் சொல்லியிருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதப் பசியின் பொருட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கிய விதம் அருமை.

‘அனந்தசயனபுரி’ கேரளச் சந்துகளையும் வீதிகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனிதர்களின் வாழ்வெளிகள் சுதந்திரத்தை விரும்புவதாகவும் அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்பதையும் பேசும் இக்கதை, இந்திய ஒன்றியத்தின் சமூகத்தில் ‘குடும்பம்’ என்கிற அமைப்பு பல நூற்றாண்டுகளையும் விதவிதமான நெருக்கடிகளையும் கடந்த பின்னும் இன்று வரை கட்டுக் குலையாமல் இருப்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

‘பட்டாளத்து வீடு’ கதை ஒரே உலகத்திற்குள் இருக்கும் வெவ்வேறு உலகங்களைச் சித்திரித்திருக்கிறது. ‘பட்டாளம்’ என்பதை பெருமையின் அடையாளமாகக் கருதி வாழ்கிற மக்களின் மனநிலை, அவர்களின் உளவியலை கட்டமைக்கும் விதம், சுபாஷ் சந்திரபோஸ் யார் என்றே தெரியாமல் வாழும் மனிதன் எனக் காட்சிப்படுத்திய விதம் இக்கதைக்கு இலக்கியத் தன்மையைக் கூட்டியிருக்கிறது.

‘தாமஸ்’ கதை சிறுவர் உலகத்தின் நட்புறவைப் பேசுகிறது. இதில் வரும் தாமஸ், ராஜன் இருவருமே உடல் குறைபாடு உடையவர்கள். அதுபற்றி பெரிதும் அக்கறை கொள்ளாதவர்கள். அவர்கள் அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை அவர்களுக்கே தெரியாமல் வாழ்கிறவர்கள். அதனாலேயே வீட்டிற்குள்ளும் பள்ளியிலும் ஓரங்கட்டப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் செத்துப்போவது பற்றி விளையாட்டாக உரையாடுகிறார்கள். அதன் தீவிரம் தாமஸை இல்லாமல் செய்துவிடுகிறது. குழந்தைகளின் உளவியலைப் பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை மிக நுட்பமாகப் பேசுகிறது.

‘களி’ கதையில் வரும் பாண்டி கம்யூனிஸத்திற்கு ஆட்பட்டவன். ஏதாவது செய்ய வேண்டுமென்ற விருப்பில் அலைகிற ஊரோடி, நாடோடி. நிலம் சாதி இந்துக்களுக்கும் பட்டியலினத்தவர்களும் இடையே முரணுக்கான காரணமாக இருந்து வருவதைச் சித்தரிக்கும் இதில், பாண்டிக்கு ‘களி’ கழிச்சலை ஏற்படுத்தும் உணவாக இருந்த போதிலும் ஏதோ ஒரு சகிப்பில் அதை உண்டு, அதை தருகிற தோழர் வீட்டில் தற்காலிகமாக வசிக்கிறார். அவரிடம் ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காகக் காதலைக் கூட தியாகம் செய்கிறார். இது வழக்கமான தமிழ் சினிமா போல இருந்தாலும் பட்டியல் இனத்தாரிடம் இருக்கும் மிகச்சிறிய நிலமும் சாதி இந்துக்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கும் என்பதை வெளிப்படுத்திய விதம் சிறப்பு. ‘பாண்டி’ பாத்திரத்தின் வழி பட்டியலினத்தாரின் உரிமை மீட்டெடுப்பு வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் வகிபாகத்தைப் பதிவு செய்திருக்கிறது.

‘பொன்வண்டு’ கதை இயல்பான உணர்வுகளுக்கு எதிராக்க் கிளர்ந்து எழும் வன்மத்தின் கோரத்தைச் சித்திரித்திருக்கிறது. கதையில் வரும் கோமதி கமல் ரசிகராக இருக்கிறாள். ஆதலால் பதினாறு வயதினிலே படத்தின் வசனங்கள் மீது பிடிப்புள்ளவாக இருக்கிறாள். அவள் வீட்டிற்குச் சிறுசிறு வேலைகளுக்காக வந்து செல்கின்றனர் முனியப்பன், அவன் மனைவி கந்தாயி அவர்கள் மகன் சுதர்சன் ஆகியோர். இவர்களை ஒடுக்கப்பட்டவர்களாகச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். இவர்கள் கோமதியின் அப்பா நடத்தும் உணவகத்தில் பாத்திரம் கழுவி மீந்ததைத் தின்று பிழைப்பு நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் வீட்டில் கோமதி காணாமல் ஆக்கப்படுகிறார். உணவகத்தில் வேலை செய்யும் முனியப்பனும் கந்தாயியும் தாக்கப்படுகின்றனர். சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையை பேசும் இதில், ‘பொன்வண்டு’ ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது. தீப்பெட்டியில் அடைக்கப்பட்டு இறந்துபோன பொன்வண்டின் வழி, கோமதியைக் காணாமல் ஆக்கிய சாதிய வன்மத்தின் கோரமுகத்தை சொல்லாமல் சொல்லி விடுகிறார் ஆசிரியர்.

‘13’ என்னும் கதை இத்தாலியர் ஒருவர் கேரளாவின் அழகில் மயங்கி அடிக்கடி கேரளா வருகிற வாடிக்கையாளர் ஆகிப் போனதைப் பற்றியது. ‘கேரள அழகு’ என்பதற்குப் பல அர்த்தங்கள் தொனிக்கும் மூளையின் உரிமையாளர் அவர். சுயசுத்தத்தை எவ்வளவு விலை கொடுத்தேனும் பராமரிக்கிறவர். உலகப் பெருங்காட்டில் தன் மனப்பறவையை இஷ்டத்திற்குப் பறக்கவிட்டு லெளகீக லயிப்பில் ஆழ்ந்து போகிறவர். ‘பதிமூன்று வயதுப் பெண் கிடைக்கும். மூன்று மணிநேரத்திற்கு ஒருலட்சம்’ என அவருக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் மிக நிதானமாகப் பரபரப்படைகிறார். சுற்றுப்புறச் சுத்தத்தையும் தன் சுத்தத்தையும் விரும்புகிறவரின் மனம் படுஅசுத்தமாக இருப்பதைச் சொல்லிய விதம் அழகு.

கதைத்தொகுதி முழுக்க மதுரையும் கேரளமும் கதைத்தளமாக அமைந்திருக்கின்றன. ரயிலும் ரயில் பாதையும் செரிவாக அமைந்த பாத்திரத்தின் தன்மையைப் பெற்றிருக்கின்றன. வேறுபட்ட கதைத்தளத்தில் எழுதப்படாத மனிதர்களை எழுதி வாசிப்பதில் ஒரு சுகானுபவம் இருக்கும். அது ‘பட்டாளத்து வீடு’ கதைத் தொகுதியில் இருக்கிறது.

வெளியீடு

சந்தியா பதிப்பகம்,

அசோக் நகர்,

சென்னை

விலை ரூ. 100/-

- ஞா.குருசாமி

Pin It