திடீர் அறிவிப்புகளால் திகிலும் பீதியும் நிறைந்திருக்கக் கூடிய சமூக, அரசியல் வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்தக் கணத்தில் எம்மாதிரியான குண்டுகள் எங்கிருந்து எங்கு விழுமோ என்ற போர்ச்சூழலின் பதற்றத்தினை ஒத்த அடுத்தடுத்த சட்டத் திருத்தங்களின் / அறிவிப்புகளின் பக்க விளைவுகளையும் நேரடித் தாக்குதல்களையும் தினந்தோறும் எதிர்பார்த்தும் எதிர்கொண்டும் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். அட்டைகளால் நிரம்பிய அடையாள அரசியலின் கோரப்பிடியே இன்னும் தளர்ந்திடாதபோது அறிவிப்புகளின் நுண்ணரசியலைச் சாமானியன் புரிந்து கொள்வதே சவாலாகி விடுகிறது. இடம்பெயர்தலும் புலம்பெயர்தலும் ஒற்றை மையத் தளத்தில் அரசியல்மயப்பட்டு சுரண்டலை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அறிவார்ந்தவர்களின் கூடுகை உரையாடல்களில் மட்டுமே பன்மைத்தன்மையின் முகம் மலர்கிறது. நம்பிக்கை தரும் ஜனநாயகச் செயல்பாடுகள் முதலாளியத்தின் எச்சில் எலும்புகளாக இருக்குமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சாதிய அதிகாரமும் முதலாளியத் தொழில்நுட்ப அதிகாரமும் கைகோர்த்து ஓரதிகாரமாக மேலோங்கி, முதலாளியம் ஜனநாயகமாக மடைமாற்றம் பெற்றுவரும் இன்றைய சமூகத்தில் நாம் கடந்து வந்த பாதையைப் பின்நோக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. இன்றைய பின்னைக் காலனியச் சமூக இயங்குவெளியில் உருவாகியுள்ள அச்சங்களில் ஒன்றாக காலனியத்திற்கு முந்தைய நிலைமைகளை உன்னதப் புனைவாக்குவதைக் குறிப்பிடலாம். இந்தியச் சமூகத்தில் காலனியத்திற்கு முந்தைய புனைவென்பது, நிலவுடைமைச் சமூக நிலைமையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. நிலவுடைமைச் சமூக மதிப்பீடுகளும் வாழ்முறைகளும் உன்னதப் புனைவாவதென்பது அதனியல்பிலேயே சாதியப் புனிதத்தைக் காப்பதாகிறது.
ஆக, கிராமம் X நகரம் என்ற இணை முரணாக்கத்தில் இழந்ததையும் பெற்றதையும் மீள்வாசிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கச் செய்கிற பனுவலாக கலியமூர்த்தியின் ‘நாம் இன்னும் சந்திக்கவே இல்லை’ என்னும் கவிதைப் பிரதி இருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தின் அதிகார மையங்ளை அம்பலப்படுத்தும் இப்பிரதி அங்கிருந்த சூழலியல் தளத்தில் நாம் இழந்து போனவைகளைக் குறித்தும் பேசுவதாக இருக்கிறது. அதற்கான அடிப்படைக் காரணமாக முதலாளியத் தொழில்நுட்பச் சமூக உருவாக்கத்தைச் சுழியமிடும் இப்பிரதி அதன் அனுகூலங்களால் உண்டான சமூக மாற்றத்தின் போக்குகளையும் அடையாளப்படுத்துவதாக உள்ளது. திரைத்துறையின் பின்னரசியல், கட்சி அரசியல், சூழலியல் மாற்றங்கள், சாதிக் காலனிய அரசியல், தொழில்நுட்ப அதிகாரம், நகர்மயமாதலின் கோரமுகம் என இப்பிரதியின் பேசுபொருள் பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கிறது.
சூழலியல் மாற்றங்கள்
காலமாற்றமும் இட மாற்றமும் சூழலியல் மாற்றங்களாக உருப்பெற்று, தனிமனித வாழ்வியல் மீது நிகழ்த்தும் அலைக்கழிப்பை, மனோவியக்கத்தைக் கவிதைகள் தனக்கான பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. ‘உலகம் மாறிவிட்டது’ என்ற கவிதை இயக்கம் கொள்கிறது.
“பால் பாக்கெட்
நியூஸ் பேப்பர்
எதுவும் வராத
.........................................
காகிதத்தைக் கறையாக்கும் எனக்கோ
கண்ணீர்தான் வருகிறது
கவிதை வருவதில்லை” (பக்.80-81)
தொழிற்புரட்சி ஏற்படாத, தொழிற்புரட்சிக்குப் பிந்தைய அறிவுப் பரவலாக்கம் நிகழாத ஒரு கிராமத்தின் அவற்றின் தாக்கம் உண்டான பிறகு எப்படியாக மாற்றம் கொள்கிறது என்பதைப் பேசுவதாக இக்கவிதை இருப்பதை அறிய முடியும். கிராமம் நகரத்தோடு இணைக்கப்பட்டதும் தோப்புகள், குளங்கள், ஆறுகள் என்று காணாமல் போனவற்றின் பட்டியல் பெரியதாகிறது. கிராம தெய்வங்களும் அதனை ஒட்டிய அம்மக்களின் பண்பாட்டு அடையாளங்களும் நசிவுக்குள்ளாகிறது; வேதங்களும் ஆகமங்களும் உட்செறித்துக் கொள்கிறது. “தாழ்வாரம் இல்லை / தங்கக் கூடாரம் இல்லை / தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்” என்ற குதம்பைச் சித்தன் வாக்கு, சிவன் வாக்காகிறது. பழங்கதையாடல்களும் கூட்டு உரையாடல்களும் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களுக்குள், அம்மாவையும் அப்பாவையும் புதைத்துவைத்த ஆற்றங்கரையை ஒட்டிய மயானத்தில் ஆறு புதையுண்டதுபோல புதையுண்டு விட்டது.
படைப்பாளரின் கலக மொழியும் அரசியல் நையாண்டியும்
இப்பனுவல், இழத்தலின் வலியை மட்டும் பேசுவதாகத் தோன்றவில்லை. மாறாக, ஒவ்வொரு கவிதையின் அகக் கட்டுமானமும் சமூக அரசியல்களின் பின்னியங்கும் நுண்ணரசியல் தளங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. உதாரணமாக, ‘யூடியூப்பில் உரையாற்றும் கழுதைப் புலி’ என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.
“மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் வசிக்கும்
கழுதைப்புலிகள்
லேசாகத் தொண்டையைச் செருமுகின்றன.
........................................
பின் நவீன காலத்தின் புலி
தானே என்று முழங்குகின்றது” (ப.82)
இக்கவிதையை மேலோட்டமாக வாசிக்கும்போது சொல்லோவியமாகவும் வார்த்தைகளால் மெருகூட்டப்பட்ட உள்ளீடற்ற குப்பிபோலவும் தோன்றலாம். ஆனால் கவிதையின் பின்னியங்கும் அரசியலோ தமிழ்ச் சமூகத்தின் கட்சி அரசியல் தலைவர்களில் ஒருவரை நையாண்டி செய்வதாக இருக்கிறது.
இன்றைய பின்னைக் காலனியச் சமூகத்தின் இயங்குவெளி இந்த நையாண்டித் தன்மையில்தான் நிலைபெற்றுள்ளது. விளிம்பின் கலக மொழியாடல் வெளிப்படுகிற புள்ளி இந்த நையாண்டி மொழி.
நகர்மயமாதலும் பண்பாட்டு மாற்றமும்
அன்று இழந்ததை / கடந்து வந்தவைகளை எண்ணிக் குமுறும் ஆற்றொண்ணாத் துயர மனதின் வலியை எந்தவொரு வாசக மனமும் எளிதில் பற்றிக்கொள்ளும். நவீனத்துவமும் நுகர்வுக் கலாச்சாரமும் உண்டாக்கிய பாதிப்புகளை நேர்ந்த அவலங்களைப் பேசுகிற கவிதைகளை வாசிக்கிற வாசகன் தனக்குள் அசைபோடாது நகர முடியாது. படைப்பாளனின் நினைவடுக்கும் வாசகனின் நினைவடுக்கும் ஒன்றிப்போகும் இந்த இணைப்புப் புள்ளியில் இருவருக்குமான அனுபவங்கள் வேண்டுமானால் வேறுவேறாய் இருக்கலாம். கவிதைகளின் பலமே, இந்த அனுபவங்கள் உண்டாக்குகின்ற அதிர்வுகளும் வலிகளும் மொழி வழியாக எளிதில் வாசக மனதை ஊடுருவுகிற திறன்தான். இந்த நினைவடுக்கு விளையாட்டை ‘கிணறு’ என்ற கவிதையில் படைப்பாளர் நிகழ்த்திக் காட்டுகிறார்.
“எங்கள் கொல்லையின் மூலையில்
ஒரு கிணறு இருந்தது
..........................................
மணற்கேணியில் அளையும் விரல்கள்
மனக்கேணியின் நினைவுப்பரல்கள்” (ப.17)
கிராமங்களும் அதன் சூழலியல்சார் வாழ்வியலும் மெல்ல மெல்ல அழிந்தும் நகர்ந்தும் மாறியும் நகர்மயச் சூழலுக்குள் விக்கித்து நிற்பதன் தகிப்பை இக்கவிதையில் பேசுகிறார். ‘நமது காலத்தின் இருட்டு’ (ப.53) என்ற கவிதையில் சூழலியல் மாற்றங்களைப் பேசுபொருளாக்கியிருப்பதும் இங்கு எண்ணத்தக்கது. ஆறுகளும் குளங்களும் வெய்யிலுக்கு இரையாகிப் போனதைக் குறிப்பிட்டுக் காட்டும் படைப்பாளர் அதற்கான காரணங்கள் குறித்த சிந்தனையை வாசக மனங்களில் முடுக்கி விடுகிறார்.
தொழில் நுட்பப் பிசாசு
தொழிற்புரட்சியும் இயந்திரமயமாதலும் உருவாக்கிய மாபெரும் புரட்சி தொழில் நுட்பக் கருவிகள். மனித சமூகத்தின் வாழ்வியலை எளிமைப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கம் செய்யப்பட்ட இந்த தொழில்நுட்ப வசதிகள் இன்று மனித சமூக வாழ்வியலை ஒருபுறம் எளிமைப்படுத்தியும் மறுபுறம் சுருக்கி அழித்தும் வருவதைப் பார்க்க முடிகிறது. மனித சிந்தனை அடுக்கையும் நினைவாற்றல் தன்மையையும் இல்லாமல் செய்திருக்கிறது. மனிதனை மனிதன் சார்ந்திருப்பது என்ற நிலைக்கு மாற்றாக தொழில்நுட்ப வசதிகளைச் சார்ந்திருப்பதான கட்டாய நிலைக்கு மனித சமூகத்தை நகர்த்தியிருக்கிறது. இவை மனித வாழ்வியலை வீட்டுச் சுவர்களுக்கு உள்ளாகவே முடக்கி விட்டிருக்கிறது. இந்தப் போக்கு பண்பாட்டு, அரசியல், சூழலியல் தளங்களிலும் ஏராளமான மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. இந்த மாற்றங்களை / அதிர்வுகளை சமூகத்தின்மீது அக்கறை கொண்ட படைப்பாளர் ‘பிரபஞ்சம் ஒரு செயலி’ எனும் கவிதையில் இப்படிப் பதிவு செய்கிறார்.
“செயலிகளின் காலமிது
பிரபஞ்சம் என்பதே மாயத்தோற்றம்
அத்வைதம் அல்ல இது
தத்துவம் தொலைத்த காலத்தின் அவலம்
யாவும் இழந்தோம் யாவும் மறந்தோம்
மெய்நிகர் யாவும்
மெய்யொரு கற்பிதம்
.............
ஒளிர்திரைகள் பெருக்குகிற
இருளுக்குள்
ஆந்தைகள் இரவெல்லாம் விழித்திருக்கும்
உலகத்தில்
நிழழுமில்லை நிஜமுமில்லை
எதுவுமில்லை எதுவாகவும்..” (ப.56)
மனித செயல்பாடுகள் அனைத்தும் செயலிகளுக்குள் முடக்கப்பட்டுவிட்டன. செயலிகள் இயங்காமல் போகுமானால் மனிதன் இயக்கமற்ற ஜடமாகிவிடுவான். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்திற்கான நுகர்வு உடல்களாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ள மனித உடல்கள் யாவற்றையும் நுகர்வுப் பண்டங்களாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த அவலத்தை ‘யாருக்கும் இப்போது காதுகளே இல்லை’ என்னும் கவிதையில்,
“.............
எல்லாமே இப்போது பயன்பாட்டுப் பொருள்கள்
எல்லாமே இப்போது டிஸ்போசபிள்
டிஸ்போசபிள் கப்புகள் டிஸ்போசபிள் பைகள்
டிஸ்போசபில் மனிதர்கள்
.........
நாம்
எவரோ பதிவேற்றிய சமன்பாட்டில்
சின்னஞ்சிறிய குறியீடுகள்
எவருடையவோ எதனுடையவோ
சின்னஞ்சிறிய பிம்பங்கள்
நிழல்கள் அதுவும்
நிஜமற்ற நிழல்கள்” (ப.61)
எனப் புரிதலுக்கு நகர்த்துகிறார். சமூக அக்கறையோ சூழலியல் குறித்த புரிதல்களோ ஏதுமற்ற இந்த மனித சமூகத்தின் வாழ்வியல் ஒளித்திரைகள் பெருக்குகிற இருளுக்குள் பிம்பங்களாகக் கட்டுண்டு ஆந்தைகளாக விழித்திருக்கின்றன.
‘தீ மிதிக்கும் அம்மன்கள்’ எனும் கவிதையில் கோவில்கள் எல்லாம் சந்தைக் கூடாரங்களாகவும் பக்தர்கள் எல்லோரும் நுகர்வாளர்களாகவும் மாறிவிட்ட சூழலை
“எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கும் கடைகளில்
அநியாய விலைக்கே அத்தனையும் விற்கிறார்கள்” (ப.59)
எனப் பதிவு செய்கிறார். ‘குடிக்கலாச்சாரம்’ இந்திய, தமிழகப் பண்பாட்டுத் தளத்தில் உருவாக்கியுள்ள அதிர்வுகளை,
“தீ மிதிக்கவும் அஞ்சாத அம்மன்களைக்
கோவில் கோவிலாக அலையவிடுகிறார்கள்
டாஸ்மாக்கில் வசிக்கப்பழகிய ஆண்கள்” (ப.59)
எனக் கூறி தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இவ்வாறாக, குடிக் கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடக்கிற ஆண்களையும் அவர்களின் நலன்களை உள்ளடக்கிய ஆணாதிக்கச் சமூகத்தின் வளர்ச்சிக்காக / பாதுகாப்புக்காக கோவில் கோவில்களாகச் சுற்றித் தீ மிதிக்கவும் அஞ்சாத அம்மன்களாகப் பெண்களை உருவகப்படுத்துவது படைப்பாளனின் சமூக அக்கறை கொண்ட படைப்பாளுமைக்குச் சான்றாய் உள்ளது.
அடித்தள வாசிப்பை அடிக்கட்டுமானமாகக் கொண்ட இந்த வாசிப்பு முறை படைப்பாளனால் ‘கைப்பிடி நிலம்’ என்ற கவிதையில் தலைகீழாக்கம் செய்யப்படுகிறது.
“இனி
ஒருபோதும் திரும்பி வராத
நிலம் அது
ஒரு கைப்பிடி
மண்ணெடுத்து
மஞ்சள் துண்டில் முடிந்துகொள்
பஞ்சம் பிழைக்கப் போகும் ஊரில்
சொந்தமாய் ஒரு பிடி
மண்ணாவது இருக்கட்டும்.” (ப.19)
இங்கு நிலமும் மண்ணும் அரசியல் மயப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அடையாள அரசியல் தளத்திற்கு நகர்த்தப்படுகிறது. இடம்பெயர்தலின் வலி முதன்மைப்படுத்தப்படுகிறது. இடம்பெயர்ந்தவனின்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல் அம்பலப்படுத்தப்படுகிறது. நிலத்தின் மீதான / மண்ணின் மீதான இந்தப் பெருங்காதல் கிராமங்களில் நிலவுடைமையாளர்களுக்கானதாக இருக்கிறது. தனது அதிகாரத்தை பிரேயோகிப்பதற்கான முழுமையான சாத்தியப்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலவுடைமைச் சமூகத்தின் அடுக்கதிகார வெளியில் நிலவுடைமையாளர்களாக இருந்த சாதி இந்துக்களின் அதிகாரம் பறிபோவதைத் தாங்கவெண்ணாத துயரமாக்கிக் கொள்கிறது படைப்பாளர் மனம். அதனால்தான் ஒரு கைப்பிடி மண் எடுத்து மஞ்சள் பைக்குள் முடிந்து வைத்துக் கொள்ளச் சொல்கிறது.
‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்னும் கவிதையில் இப்பார்வைக் கோணத்தை மேலும் செழுமைப்படுத்துகிறார்.
“அப்போது மழைக்காலம் அச்சமூட்டக்கூடியது
பால்யத்தில் எங்கள்
எளிய குடிசைகளில்
........
ஒரு கோப்பைத் தேநீரை உடனழைத்து
காதல் கவிதைகளைப்
பொழிகிறார்கள் கவிஞர்கள்
மழை ஒரு அற்புதம் என்கிறார்கள் அவர்கள்
இப்போதெல்லாம்
மழை ஒரு அதிசயம்
திணைதிரிந்த எம்நிலத்தில்” (ப.70)
இப்படியாக மழை பெய்தல் என்பதே காட்சிப் பொருளாகிவிட்ட சூழலியல் சீர்கேடு நிறைந்த சமூகத்தை, மனித வாழ்வு என்பதே நுகர்விய வாழ்வுதான் என்பதாக மடைமாற்றம் பெற்றுவிட்ட தற்காலச் சூழலில் நின்று வருத்தமும் வேதனையும் வலியும் நிறைந்த மொழியாடல்களுக்குள் செறிவாக இழைத்துள்ளார் படைப்பாளர்.
படைப்பாளரின் படைப்புமொழி பெருமளவில் இழத்தலின் வலியையும் ஏக்கத்தையும் தனக்கான பேசுபொருளாகக் கொண்டுள்ளது. அதிகாரத்திற்கு எதிரான தனது கலகத்தை நையாண்டித்தன மொழியாடல் வழி கவிழ்த்துப் போட்டுள்ளது. இந்த வலியும் கலகமும் ஏக்கமுமே சமூக விழிப்புணர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுப்பதாக இருக்கும்.
நிறைவாக,
பால்யத்தின் நினைவடுக்கினை
மொழிகொண்டு சிறிது மொண்டு
கூட்டு நனவிலிச் சேகரம் போல
கூட்டாய்ச் சேந்துண்ண
நம் எல்லோருக்காகவும் காத்திருக்கிறது
‘நாம் இன்னும் சந்திக்கவே இல்லை’
எனும் சாமானியனின் நினைவுக் குறிப்புகள்.
பார்வை நூல்கள்
1. கலியமூர்த்தி.க., (2023). நாம் இன்னும் சந்திக்கவே இல்லை.
3. சோலைமாயவன் (2023). வெயில் மேயும் நீர்ப்புலி, பொள்ளாச்சி : பெள்ளச்சி இலக்கிய வட்டம்.
6. மார்க்ஸ்.அ. (2004). அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம். (முதற்பதிப்பு). சென்னை-5. கருப்புப் பிரதிகள் வெளியீடு.
- முனைவர் ஜோ.செ.கார்த்திகேயன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, பூ.சா.கோ.கலை அறிவியில் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014