கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி - இந்த தலைப்பு விசித்திரமாக உள்ளது. இது ஒரு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு. இந்த சிறுகதைப் புத்தகத்தில் பல சுவாரசியமான சிறுகதைகள் புதைந்து கிடக்கின்றன.

sarathi bookஎழுத்தாளர் 'சாரதி', தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர். இயற்பியல் படித்தவர். களப் போராட்டங்களிலும், உழைக்கும் மக்களின் சங்கங்களின் உரிமைப் போராட்டங்களிலும் தோளோடு தோள் நிற்பவர். புத்தக வெளியீடு உள்ளிட்ட அனைத்து செயல்பாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர். அனைவரோடும் சமகால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குறிக்கோளான, உலகமெங்கும் எழுகின்ற உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்குத் துணை நிற்றல், உழைப்பை உன்னதப்படுத்தும் படைப்புகளை படைத்தல் மற்றும் அத்தகைய படைப்புகள் எங்கிருந்தாலும் உயர்த்திப் பிடித்தல் என்ற கொள்கையோடு செயல்படும் எழுத்தாளர் ‘சாரதி'.

சாரதி - யின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி”. 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ‘நூல்வனம்' வெளியீடாக வெளிவந்துள்ள புத்தகம் இது.

எழுத்தாளர் சாரதி நாடக இயக்கங்களிலும் பங்கெடுத்துள்ளார். கோவில்பட்டி மணல்மகுடி நாடகக்குழுவினர் நடத்தும் நாடகங்களை கண்டுணர்வதோடு மட்டுமல்லாது நாடகத்தின் உணர்வுகளை தனக்கு தெரிந்தவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் அனைவரையும் காண வரச் செய்பவர் சாரதி. மொத்தத்தில் தானறிந்த நல் விஷயங்களை அனைத்து சக மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்பவர் சாரதி.

15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் ‘உருமாறும் பிம்பங்களில் கரையும் அப்பா' என்ற சிறுகதை பற்றி பேச நிறைய உள்ளது. இது வெறும் கதையா என்று கேட்டால், ஒவ்வொரு குடும்பத்திலும் தன் அப்பாவின் நினைவுகளைத் தேடும் மகன்களையும், மகள்களையும் நம் கண்முன்னே கொண்டு வருகிறது.

அப்பா-வை ஒரு சிறுகதையாக சுருக்கிவிட முடியுமா? அவர் ஒவ்வொரு குழந்தையின் வாழ்வின் பெருங்கதை அல்லவா? என்ற கேள்விகளுக்கு அசுரபலத்தோடு அப்பாவின் நினைவுகளை நோக்கி நடைபோட்டு கதை சொல்கிறார் சாரதி.

அப்பாவை தேடும் மனதை பலநேரம் பல இடங்களில் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரவைக்கும் சிறுகதை இது. எழுதப்படாத அப்பாக்களின் வரலாற்றை சிறுகதையாக வார்த்தெடுக்கிறார் சாரதி.

அப்பாதான் சிறுவயதில் தோளில் தூக்கி கொண்டு ஊரை சுற்றி காட்டினார். மிட்டாய் வாங்கி கொடுத்தார். குளிப்பாட்டிவிட்டார். பள்ளிக்கு கூட்டிசென்றார். கல்லூாயில் ஆண்டுவிழாவில் தன் வாரிசின் திறன் கண்டு பெருமை கொண்டார்.

படிக்கும் காலங்களில் காலையில் எழுந்திருக்காவிட்டால் சத்தம்போடும் அப்பாதான், படித்த களைப்பில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகன் குளிரால் வாடாமல் இருக்க போர்வையைப் போர்த்தி விடுவார். போற்றுவார் போற்றினாலும், தூற்றுவார் தூற்றினாலும் தன் சந்ததியைக் கொண்டாடும் அப்பாக்கள் நிறைந்த உலகமிது. தன் சந்ததியின் எதிர்கால வாழ்வுக்காக இன்றைய காலத்தின் போராட்டக்களங்களில் உயர்ந்து நிற்கும் கரங்கள் அப்பாவினுடையது.

பலருக்கும் அப்பாவைப் பற்றிய பல்வேறு மன உணர்வுகள் ஓங்கியிருந்தாலும் சாரதியின் எழுத்துக்கள் ஒவ்வொரு மனிதரையும் தன் அப்பாவை நினைத்து அவரின் நினைவுகளைத் தேடி இந்த சிறுகதையின் வாயிலாக ஓட வைக்கிறது.

வைரம்போல் ஜொலிக்கும் இந்த வரிகளை யாராலும் மறக்க முடியாது - ‘எப்படியானாலும் அப்பா வேணும், எல்லோருக்கும் அப்பாவைத் தேடுது” என ஏங்க வைக்கிறார் சாரதி.

அடுத்ததாக மற்றொரு சிறுகதை. அதன் தலைப்பு - ‘A10 +E3 இவைகளுடன் ஒரு வெள்ளைவால் குருவி'. இயந்திர கதியில் இன்றைய உலகத்தில் அலுவலக இயந்திரமாகவே மாறிவிட்ட மனிதனைப் பற்றிய அல்லது அலுவலகமே எல்லாம் என உறைந்து கிடக்கும் பணியாளர்களைப் பற்றியது.

அலுவலகப் பணியாளர்களோடு உரையாடும் வெள்ளைவால் குருவி கதாபாத்திரம் மிகவும் விசித்திரமானது. அலுவலக அறைகளைப் பற்றி சிறுகதையில் வரும் வரிகள் யதார்த்த உலகின் இருட்டையும் வெளிச்சத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

அலுவலகங்களில் ஓராண்டு, மூன்றாண்டு, பத்தாண்டு, நிலையான முடிவு என கோப்புகள் பராமரிக்கப்படுவதை விளக்கியுள்ள விதம் சிந்திக்க வைக்கிறது. கோப்புகளுக்கு உயிருண்டா? என கேள்வி எழுப்பி அந்த கோப்பு சம்பந்தப்பட்ட மனிதர்களை அதாவது மனுதாரர்களை சார்ந்து கோப்புகளும் உயிர்பெறும் என உவமையாக சொல்கிறது இக்கதை.

அலுவலகத்தின் ஜெராக்ஸ் காப்பியாக மாறிவிட்ட ஒரு தட்டச்சரின் மனவோட்டங்களை பிரதிபலிக்கவும் தவறவில்லை சாரதி. வேலையே கதியென்று அலுவலகத்தில் அடைந்து கிடக்கும் சில அரசு பணியாளர்களை வெளியே வந்து உலகத்தைப் பாருங்கள் என அழைக்கிறது இந்த வெள்ளைவால் குருவி.

மேலும், துர்சினியின் பிரவேசம் என்ற ஆன்ட்ராய்டு டிஜிட்டல் உலகத்தின் கதை, அவனின் கழிவறை போன்ற சிறுகதைகளை வாசிக்கத் தயாராகுங்கள்.

சரி. ஸ்தெப்பிவெளி என்றால் என்ன தெரியுமா? புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

“கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி”
நூல்வனம் வெளியீடு,
விலை -ரூ.200 -
தொடர்புக்கு - 9176549991, 9500500476.

- பவித்ரா பாலகணேஷ்

Pin It